Home Anti Heroineஅ.. ஆ.. – எபிலாக் (பார்ட் – 01)

அ.. ஆ.. – எபிலாக் (பார்ட் – 01)

by Vathani S

அ.. ஆ.. – எபிலாக் (பார்ட் – 01) 

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு…..

அந்த பெரிய வீட்டின் முன்னே போடப்பட்டிருந்த சிவப்பு நிற ஷாமியானாவின் கீழ் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அகானா.

அவளின் இருப்பக்கமும் கையைப் பிடித்தபடி காயத்ரியும், மாலினியும் நிற்க, அந்த வீட்டின்  உள்ளிருந்து தன் மகளைத் தூக்கியபடி வந்து கொண்டிருந்தான் ஆகன்.

“அம்மு.. நீ உள்ள போய் இருடா.. வெயில் வேற இந்தப்பக்கம் தான் அடிக்குது..” என அவளின் முகத்தில் விழுந்த முடியை பின் பக்கம் தள்ளிவிட்டபடி கூற,

“ம்ம்..” என்றாளே தவிர பதில் சொல்லவில்லை.

அவள் முகம் இறுக்கத்தில் சிவந்து போய் கிடக்க, மனைவியின் மனநிலை உணர்ந்து, இந்த இரண்டு நாட்களாக மகள் ஆத்யாவை தன்னோடே வைத்துக்கொண்டான் ஆகன்.

“அண்ணா..” என அவனிடம் வேகமாக ஏதோ சொல்ல வந்த ராகினியை ‘சொல்லாதே’ என அதைவிட வேகமாக தலையசைத்து தடுத்து நிறுத்தினான் ஆகன்.

“அண்ணி.. நீங்க போய் அத்தையை வர சொல்லுங்க, அவங்க சொன்னாதான் கொஞ்சம் கேட்பா..” என காயத்ரியிடம் கூற, அவளோ அழுகையை அடக்கியபடி ‘சரி’ என்பது போல் தலையசைத்து நகர,

‘நானு..நானு’ என காயத்ரியிடம் தாவிய மகளை, அவளிடம் கொடுத்துவிட்டு மனைவியின் கையைப் பிடித்தபடி அவளுக்கு அருகில் அமர்ந்துவிட்டான்.

ஆகன் அமர்ந்ததுமே, மாலினியும் ராகினியும் நகர்ந்துவிட “அம்மு..” என்றவனின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அகானா.

ஆனால் அவன் பிடித்திருந்த கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தவள் “ப்ளீஸ் சீனியர்.. எதுவும் சொல்ல வேண்டாம்..” என்றாள் அழுத்தமான குரலில்.. 

“நான் எதுவுமே சொல்லலப்பா.. ஆனா இப்படியே எவ்ளோ நேரம் இருக்க முடியும். நாளைக்கு நாம அட்மிட் ஆகனும். இப்போ உன்னோட செக்கப் இருக்கு, நீ ரெடியான போய்ட்டு வந்துடலாம் அம்மு..” என்றான் தவிப்பான குரலில்.

“ம்ம்..” என்றவள் அவனின் கைமேல தன் தலையை சாய்த்துக் கொள்ள, மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அவளால் நடந்து போன சம்பவத்தை கடந்து விட முடியவில்லை.

‘நிச்சயம் அவர் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை.. ஏன்.. ஏன் இப்படி? என்று அவள் உள்ளம் துடிக்கும் துடிப்பை அவளைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

அதோடு ஆகன், அவனுக்கும் இது எத்தனை பெரிய இழப்பு. அதை விடுத்து, தன் வேதனையை மறைத்து, தனக்காக இங்கிருப்பவனை வலியை எப்படி போக்க?

“அம்மு.. வா… உள்ள வந்து கொஞ்சம் படு.. பார் வயிறு இடிக்குது..” ஒன்பது மாத மகனை கருவில் சுமந்து கொண்டிருந்த மனைவியை மெதுவாக அதட்டி எழுப்பினான்.

அவளுக்குமே இப்படி படுத்திருப்பது உடலை ஏதோ செய்ய, மெதுவாக கணவனின் கைப்பிடித்து நிற்க, நவீனும் குமரனும் அருகே வந்துவிட்டார்கள்.

“என்ன… என்ன பாப்பா..?  என்ன செய்யுது?” என இருவரும் பதட்டமாக கேட்க,

“கொஞ்ச நேரம் படுக்க போறேன் ண்ணா.. ஈவ்னிங்க் ஹாஸ்பிடல் போகனும்..” என்று மட்டும் சொல்ல, இருவரும் வழிவிட்டு நிற்க, ‘இவனுங்களோட முடிலடி’ என எப்போதும் போல வாய்க்குள்ளே முனங்கியபடி, மனைவியின் கையைப் பிடித்து கவிதாவின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

அங்கு, காயத்ரியிடமிருந்த மகள் இப்போது மஞ்சரியின் மடியில் இருக்க, அவருக்கு அருகே கவிதாவும் விஜயாவும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். 

அவர்கள் முகமும் இறுகிப் போயிருக்க, மஞ்சரியின் முகமோ நிர்மலமாக இருந்தது.

தாயைப் பார்த்ததுமே அகானாவின் மனம் அத்தனை கடவுளையும் சபித்தது.

விழிகள் கலங்க அவரைப் பார்த்தவளை “அம்மு கொஞ்ச நேரம் படு டா… ஈவ்னிங்க் கண்ணா கூட செக்கப் போயிட்டு வந்துடு..” என்றார் அதுதான் முக்கியம் போல.

பதில் சொல்ல முடியவில்லை, அவருக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவள், தன்னறைக்கு செல்ல, ஆத்யா மஞ்சரியின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“மஞ்சு.. நீ இப்படி இருக்காத. உன்னை பார்த்து தான் அம்மு பயந்துக்கிறா? இப்போ அவளுக்கு இவ்ளோ டென்ஷன் கொடுக்கக்கூடாது, BP அதிகமாகிடும். யார் என்ன நினைப்பாங்களோன்னு எல்லாம் யோசிக்காத? உனக்கு என்ன தோணுதோ செய்.. சத்தமா கத்தி அழனுமா, அழு.. ஆனா இப்படி இருக்காத..” என விஜயா இறைஞ்சுதலாக கூற, புடவை முந்தானையில் வாயை மூடிக்கொண்ட கவிதா, தன் கேவலை அடக்க அத்தனை பாடுபட்டார்.

“எனக்கு ஒன்னும் இல்ல க்கா.. இங்க பார் பாப்பா பயப்படுறா?” என கவிதாவை சமாதானம் செய்த மஞ்சரி, ஆத்யாவை விஜயாவிடம் விட்டுவிட்டு தன் அறைக்கு வேகமாக சென்று கதவை அடைத்தார்.

அவரின் வேகம் பார்த்து, வெளியில் இருந்தவர்கள் மிகவும் பயந்துதான் போயினர்.

‘படுக்கிறேன்’ என்று சென்ற அகானாவும், கதவடைக்கும் சத்தத்தின் பயத்தில் எழுந்து வந்து வாசலில் நின்றுவிட்டாள்.

“அய்யோ கடவுளே.!” என்ற மஞ்சரியின் கதறல் சத்தம் அந்த வீட்டையும் தாண்டி வெளியில் கேட்க, ஷாமியானாவிற்கு முன் அமர்ந்திருந்தவர்கள் கூட பதறி ஓடி வந்திருந்தனர் வீட்டுக்குள்.

ஆற்றுவார் தேற்றுவாரின்றி அப்படியொரு அழுகை மஞ்சரியிடம். இப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

சற்று முன் ‘கல்நெஞ்சக்காரி’ என்று வசைபாடிய ஒரு வயதான பாட்டி கூட மஞ்சரியின் அழுகையில், தானும் அழ ஆரம்பித்துவிட்டார்.

“ம்மா.. அத்த.. சித்தி..” என வெளியில் இருந்து அத்தனை பேரும் பதறி அவரை அழைக்க, ஆனால் எதுவும் அவர் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

மஞ்சரியின் அழுகை சத்தம் மட்டுமே அந்த வீட்டை நிறைத்தது. தங்கையின் அழுகையில் கவிதாவும் ஒருபக்கம் அமர்ந்து ஒப்பாரி வைக்க, விஜயாவிற்குமே கண்கள் கலங்கியது.

அந்த நேரம் சங்கரிடமிருந்து ஆகனுக்கு அழைப்பு வர, நவீனிடம் கண்ணைக் காட்டிவிட்டு அழைப்பை ஏற்றபடியே வெளியில் சென்றான் ஆகன்.

“என்னாச்சு ப்பா.?” என்று குரல் கம்ம கேட்க,

“கண்ணா..?” என்றவருக்கும் பேச்சே வரவில்லை. 

ஏற்கனவே அங்கு செல்ல முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சியில் இருந்தவனுக்கு, சங்கரின் பதட்டம், அவனின் தவிப்பைக் கூட்டியது.

“என்னனு சொல்லுங்க ப்பா..?” என்றவனுக்கு பதட்டமும், பயமும் கூடிப்போனது.

“ரஞ்சி.. ரஞ்சிக்கு..” என்றதும் ஆகனின் இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.

“அப்பா.. என்னப்பா? அம்மாவுக்கு என்னாச்சு? அவங்க நல்லா இருக்காங்கல்ல..” என்றவனின் குரலே அவன் பயத்தைக் கூறியது.

“ரஞ்சிக்கு ஆக்சிஜன் சப்ளை ஆகலன்னு சொல்றாங்க கண்ணா… மாப்பிள்ளை ஏதேதோ சொல்றார். எனக்கு பயமா இருக்கு கண்ணா..” என்றார் உடைந்து போன குரலில்..

“ப்பா.. பயப்படாதீங்க. அவங்களையும் பயம் காட்டாதீங்க. அங்க இப்போ நீங்க தைரியமா இருக்கனும். ஆரி அங்க ஓடுவானா? உங்களைப் பார்ப்பானா? நீங்கதான் மகிக்கு தைரியம் சொல்லனும்.. ஆரி என்ன சொல்றானோ, அதை மட்டும் கேளுங்க.. நீங்க மகியை கவனமா பாருங்கப்பா..” என்றவன், உடனே ஆரியனுக்கு அழைத்துவிட்டான்.

“சீனியர்.. அத்தை கிரிடிகல் ஸ்டேஜ்லதான் இருக்காங்க. பட் ஹோப் இருக்கு.. சரியாகிடுவாங்க. நானும் வினோத் அங்கிளும் ஃபார்மாலிடிஸ் முடிச்சிட்டோம். அத்தையை உடனே ஷிஃப்ட் பண்ண முடியாது. அதனால மகியையும், மாமாவையும் இங்க விட்டுட்டு தான் நாங்க வர மாதிரி இருக்கும்..” என்று படபடப்பாக கூற, விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டான் ஆகன்.

“ஓக்கே ஆரி.. டேக் கேர்..” என்றவன், அங்கிருந்த தன் நண்பர்களுக்கு அழைத்து, சங்கருக்கு உதவும்படி பார்த்துக்கொண்டான்.

துரோகம், பொறாமை, வெறுப்பு, கோபம் இவையனைத்தும் மனிதரை கொல்லும் நோய் என்பது தான் மைதிலி, ரஞ்சனி விசயத்தில் நடந்தது.

மஞ்சரியின் பேச்சைக் கேட்டு அகானா அவர்களை அப்படியே விட்டு விட்டாலும், செய்த பாவத்திற்கான தண்டனையை கடவுள் இந்த ஜென்மத்தில் மறக்காமல், கொடுக்காமல் இருப்பாரா?

கொடுத்தார்.. யாரும் எதிர்பார்க்காத ஒரு சூழலில் கொடுத்தே விட்டார்.

***

ஆரியனின் பூர்வீகமும் மதுரைக்கு அருகில்  சோழவந்தான் என்ற ஒரு கிராமம் என்பதால், அவன் இப்போது குடும்பமாக மதுரையில் குடி பெயர்ந்துவிட்டான்.

அவனுக்கு ஆணொன்று, பெண்ணொன்று என இரண்டு பிள்ளைகள். மகிழினி அவனின் மருத்துவமனையை நிர்வகிக்க, ஆரியன் மருத்துவத்தை மட்டுமே பார்க்கிறான்.

வாரம் ஒரு முறை தேனியில் உள்ள மருத்துவமனைக்கும் சென்று வருகிறான்.

அகானா இப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சியர்.  மஞ்சரி மகளுடன் இருக்க, ஆரியன் வாரம் ஒருமுறை சென்று மனைவி மகளை பார்த்து வருகிறான்.

ரவி இப்போது மருத்துவமனையிலிருந்து முழு ஓய்வில் இருக்க, கடந்த ஆண்டுதான் ரவி-மைதிலி, சங்கர்-ரஞ்சனி என நால்வரையும் வேர்ல்ட் டூர் அனுப்பி வைத்திருந்தான்.

அகானா இதில் எதிலும் தலையிடுவதில்லை. அவளுக்கும் ரஞ்சனிக்குமான உறவு அப்படியேதான் இருந்தது. அதில் துளியும் மாற்றமில்லை.

ஆனால் பேத்தியை எங்கும் விட்டு விடுவதில்லை ரஞ்சனி, ஆகன் செல்லும்போது அவரும் கூடவே சென்று பேத்தியுடன் இரண்டு நாட்கள் இருந்து விட்டு தான் வருவார்.

இந்த ஆறாண்டுகளில், ஆகனின் வீட்டிற்கோ, அந்த பெரிய வீட்டிற்கோ அவள் சென்றதே இல்லை. மனைவியின் மனம் புரிந்து ஆகனும் வற்புறுத்துவதில்லை.

ரவி என்ற மனிதர் தன் வாழ்க்கையில் எங்குமே இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறாள் அகானா.

இரண்டாவது குழந்தைக்கு சீமந்தம் வைத்தே ஆகவேண்டும் என்று ஆகன் உறுதியாக நிற்க, மஞ்சயும் விருப்பப்பட அகானாவால் அதை தவிர்க்கவே முடியவில்லை.

அவளுக்கு வேலையில் அழுத்தம் கூடிக்கொண்டே போனது. அவளின் நேர்மைக்கு பரிசாக ஆறு மாதத்திற்கு ஒரு ட்ரான்ஃபர் கிடைக்க, அதில் ஆகனுக்கும் அகானாவுக்கு சிறு உரசல் கூட வந்துவிட்டது.

‘அவள் பெட்டியைக் கட்டும் போதெல்லாம் சலிக்காமல், அவளுக்கு பின்னே வருவான் ஆகன். மகனின் அலைச்சல் ரஞ்சனிக்கு கோபத்தைக் கொடுக்க, பேத்தியைப் பார்க்க வரும் போது ஜாடையாக இது பற்றி பேச, கொதித்துவிட்டாள் பெண்..

“உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சினை? உன் மேல அக்கறைன்னா அதை உன்னோட நிறுத்திக்க சொல்லு, என்கிட்ட அவங்க மாமியார்தனத்தைக் காட்டக்கூடாது..”  என்று  ஆத்திரமாக கூற, ஆகனுக்குமே தன் தாய் பேசியதில் கோபம் தான். ஆனால் அதற்காக அகானா பேசியதும் தவறென்று பட, 

“அவங்க பையனைத்தான் நீ கல்யாணம் செஞ்சிருக்க, அப்போ அவங்க வேற யார்கிட்ட மாமியார்தனத்தைக் காட்டுவாங்க..” என எரிச்சலாக பேசிவிட்டு சென்றவன், ஒரு மாதம் வரை அவளைச் சென்று பார்க்கவே இல்லை.

அவனுக்காக உடலும், மனமும் ஏங்கிக் கிடந்தாலும், தன் ஏக்கத்தையும் தவிப்பையும் வெளியில் காட்டிவிட்டால் அவள் அகானா இல்லையே!

‘நீயே எப்போ வரியோ, வா..’ என அவனைக் கண்டுகொள்ளாமல் விட, பிறகு அவனேதான் இறங்கி வரும்படி ஆகிவிட்டது. 

“திமிர்.. திமிர்டீ உனகுக்கு உடம்பு பூரா திமிர்..” என ஆதங்கப்பட்டாலும், வயிற்றில் பிள்ளையோடு இருப்பவளிடம் கோபத்தைக் காட்டவில்லை.

மஞ்சரியின் தொனதொனப்பு வேறு அவளுக்கு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், ரவி மகளைப் பார்க்க அலுவலகத்திற்கே வந்திருந்தார்.

பலமுறை இப்படி வந்திருக்கிறார்தான், அப்போதெல்லாம் ஆகனும், ரஞ்சனியும் உடன் வருவார்கள். அகானா பேருக்கென்று அங்கு நிற்பாள். மஞ்சரி வெளியில் சென்று விடுவார்.

ஆனால் இன்று தனியாக வர, அகானாவிற்கு அவரைப் பார்க்கவே விருப்பமில்லை. ஆனாலும் மனதில் இருந்த அழுத்தமும் கோபமும் அவரை இன்று ஒரு வழி செய்துவிடு என கூவிக்கொண்டே இருக்க, தனக்கு முன்னால் அமர வைத்திருந்தாள்.

“சொல்லுங்க..” என்ற குரலின் இறுக்கமே அவருக்கு மகளின் மனநிலையை கூறிவிட, அவஸ்தையாக அவளைப் பார்த்தார்.

“என்ன விசயம் சொல்லுங்க..?” என்று மேலும் அழுத்திக் கேட்க,

“அது.. அது.. அம்மு.. உன்னோட வளைகாப்பு..” என இழுக்க, 

“எனக்கு விருப்பமில்ல..” என்றாள் பட்டென..

“ஏன்.. ஏன் அம்மு?” என பெற்றவர் தவிக்க,

“ம்ச்..” என எரிச்சலாக சலித்தவள், “உங்க யாரையும் பார்க்கவேக்கூடாதுனு நினைக்கிறேன், ஆனா நானும் பாவம் செய்துருக்கேனே, அந்த பாவத்தோட பலன்தான் நீங்க என் கண் முன்னாடி எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம வர்ரதும், நான் அதை சகிச்சிட்டு போறதும்..” என ஆங்காரமாகக் கூற, விக்கித்துப்போய் மகளைப் பார்த்தார் ரவீந்திரன்.

You may also like

1 comment

M.Sarathi Rio August 3, 2026 - 10:43 pm

அட ராமா..! இதான் விஷயமா?
செத்த பாம்பைப் போய் திரும்ப திரும்ப அடிச்சால் யாருக்கு என்ன லாபம்..?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured