Home Love - Family - Romanceஇசையிரவு 1

இசையிரவு 1

by Ezhilmathi GS

அது இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்று; தற்சமயம் மின் விளக்குகளின் தயவால் இருளை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தது. தடதடக்கும் வேகத்துடன் விரைந்து கொண்டிருந்த அவ்விரைவுத் தொடரூர்தியில் திவ்யா அமர்ந்திருந்தாள். திவ்யா முப்பதுகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண். அவளிற்கு உயரம் குறைந்த, சற்றே பருமனான உடல்வாகு‌. காலையிலிருந்து நிற்க நேரமில்லாமல் உழைத்தும் அவளின் சருமம் துளி வியர்வையோ, எண்ணெய்ச் சுரப்போ இன்றி பளபளத்தது. நான்கில் மூன்று பங்கு கை வைத்த சுடிதார் அவளின் பால் வண்ணச் சருமத்தை வெளிக்காட்டாமல் மறைத்திருந்தது. ஒற்றைப் பக்கமாக இடப்பட்ட துப்பட்டா அவளின் கால் மூட்டைத் தாண்டி தரைப் பகுதியைத் தொடவா, வேண்டாமா என்றது. அவளுடைய கேசம் சுருள் சுருளாய் அடர்ந்து காட்சியளித்தது. அவள் தன் முதுகை வளைத்து அமர்ந்திருக்க, வயிற்றுப் பகுதியில் சில பல மடிப்புகள் தென்பட்டன. அதற்குக் காரணமான அவளின் மைந்தன், சமத்தாகத் தனது ஸ்க்ராட்ச் புத்தகத்தினை எழுதுகோலால் தீட்டிக் கொண்டிருந்தான். தொழில் தொடர்பான ஒரு மாத இதழைப் பிரட்டியபடியே அவள் நிமிர்ந்து பார்க்க, நேரெதிரே ஓர் ஆடவன் தென்பட்டான்.

அலுவலக உடுப்பில் கால் மேல் காலிட்டபடி அமர்ந்திருந்த அவன், செவிகளில் பொருத்தப்பட்ட ஒலிப்பான்கள் சகிதமாக அலைபேசியே கவனமாக ஆழ்ந்திருந்தான். இருக்கையில் நன்றாகச் சாய்ந்தபடி இருந்தவனின் ஒரு கரம் அலைபேசியை ஏந்தியிருக்க, மற்றொரு கரம் கழுத்துப் பட்டையைத் தளர்த்தலானது. அவ்வேளை அவனுடைய ஒருபுற ஒலிப்பான் செவி தவறி கீழே விழ, அதை எடுக்க முனைந்தவனோ கீழிருந்து மேலாக எதிரே நோக்கினான். அங்ஙனமே அவன் அவளைக் கண்டிட, அவனை ஓரிரு நொடிகள் உறுத்துவிட்டு அவள் தன் பார்வையை மாத இதழிற்குத் திருப்பினாள். உடனே தனது உடல் பாவத்தை மாற்றியவன் நேராக, நிமிர்வாக அமர்ந்தான்.‌ இருக்கையில் கிடந்த தனது மேலங்கியின் மீது அலைபேசியை வைத்துவிட்டு கழுத்துப் பட்டையை முழுவதுமாக அவிழ்த்தான். சூழ்நிலையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தவனின் இமைகள் மேலும் கீழும் அலையடித்தன. ஆன போதிலும், எதிரில் இருப்பவளை எதிர்நோக்கும் துணிவு அவனிடத்தில் துளியும் இல்லை‌. அவனின் சந்தேகத்திற்குத் தக்கபடி, கையில் ஏந்தியிருந்த மாத இதழைச் சற்றே மடக்கி அவனைப் பார்வையால் அளந்து கொண்டிருந்தாள் திவ்யா. 

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அடுத்ததாக, அவள் இறங்குமிடம் வர மகனைக் கரம் பற்றி நிதானமாகக் கதவருகே சென்றாள். அவள் மறைவதற்கு ஒரு கணம் முன்னர் அவன் அவளைப் பார்த்துவிட்டு, தொடரூர்தி பயணிக்கும் திசையில் விழிப் பாவைகளைக் குவித்தான். மகனை அழைத்துக் கொண்டு வீட்டினைச் சென்றடைந்த திவ்யாவின் மூளைக்குள் வேறெதுவும் ஓடவில்லை. தொடரூர்தியில் கண்ட அந்த ஒருவனின் நிழற்படம் நெஞ்சின் அடி ஆழத்தில் பூதாகரமெடுத்தது‌. மகனுக்கு இரவு உணவைச் செய்வித்து ஊட்டியவள், தானும் உணவுண்டு எழுந்தாள்.

“அம்மா, பெட் டைம் ஸ்டோரீஸ் படிக்கலாமா?” மைந்தன் நிதின் கண்களில் ஆர்வத்துடன் வினவினான்.

“அம்மாக்கு ரொம்ப டயர்டா இருக்குடா, கண்ணா‌. நாளைக்குப் படிப்போம்” என்றவள் அவனின் தாடையை உயர்த்தி, தலையை வருடிவிட்டு தனது அறைக்குள் புகுந்தாள். 

இரவு உடை மாற்றி வந்தவள் கண்ணாடி முன்னின்று தன்னுருவத்தைக் கண்டாள். கீழேயிருந்த இழுப்பறையைத் திறக்கப் போனவள், தன்னைத் தானே கட்டுப்படுத்தி கட்டிலில் போய் விழுந்தாள். ஏதேதோ நினைவுகளால் அவள் உருண்டு புரள, நேரம் வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இமைகளை அழுந்த மூடியும் உறக்கம் அவளைத் தழுவிய பாடில்லை. பெரிய முள் ஒன்றை நெருங்கிட, நித்திரையை வரவழைக்க அவளுக்கு வித்தியாசமான ஓர் அணுகுமுறை தேவைப்பட்டது‌. மெல்லிய குற்றவுணர்வுடனே இழுப்பறையை நெருங்கியவள், தனக்குத் தேவையான உபகரணத்தை எடுத்துக் கொண்டு கழிப்பறைக்குள் புகுந்தாள். அடுத்த நாற்பதாவது நிமிடம் அவளின் அறை விளக்குகள் முற்றிலுமாக அணைக்கப்பட்டிருந்தன. அவளும் நிம்மதியாக நித்திரையில் மூழ்கியிருந்தாள்‌. அவள் உபயோகப்படுத்திய உபகரணம் அது உழைத்த உழைப்பினால் ஊக்கமிழந்து, மின்னூட்டம் பெற்றுக் கொண்டிருந்தது.

அடுத்த இரு நாட்களுக்கு அவள் தொடரூர்தியின் வேறு பெட்டியில் தஞ்சம் புகுந்தாள். காரணம், அவனே தான்‌. அவனைக் காண்பதால் அவளுக்குள் வேண்டாத எண்ணங்கள். சொல்லப் போனால், அவளின் ஆழ்மன ஆசைகள் ஏக்கங்களாக வெளிப்படத் துவங்கின. அவள் எவ்வளவு தான் விலகி ஓடினாலும் மூன்றாவது இரவில் அவன் அவளிருந்த அதே பெட்டிக்கு விதி வசத்தால் வந்து சேர்ந்தான். காதொலிப்பானும் அலைபேசியுமாக ஒரு கம்பியின் அருகே நிலையாய் நின்றிருந்தவனைப் பார்த்த மாத்திரத்தில் அவளின் படபடப்பு கூடிற்று. மக்கள் கூட்டம் குறைந்ததும் அவளிருந்த அதே இருக்கையில் அவனும் வந்தமர, அவளின் மெய் ஒரு விநாடி விறைத்துத் தளர்ந்தது. வண்ணம் தீட்டும் புத்தகத்தில் தன் கற்பனைச் சிறகுகளை விரித்தபடி, நம் நிதின் வாய்க்கு வந்ததைப் பாடிக் கொண்டிருந்தான். அப்பாடலைக் கேட்டு அந்த மத்திம வயது ஆண் விழிகளில் வியப்போடும் பெருத்த இதழ் விரிப்போடும் இவர்களின் புறமாகத் திரும்பினான். அதில் அதீத அதிர்ச்சிக்கு ஆளானவளோ பிள்ளையை இழுத்துக் கொண்டு கதவுப்புறம் நகர்ந்தாள். அடுத்ததாக இவர்களின் நிறுத்தம் வரவும் மின்னல் வேகத்தில் இருவரும் இறங்கிக் கொண்டனர்.

மறுநாள் அவளும் அவனும் முதன் முதலாய்ப் பார்வையைப் பரிமாறிக் கொண்ட அதே பெட்டியில் சங்கமித்தனர். அன்று பார்த்தது போலவே தான் இப்போதும் அவன் காட்சியளித்தான். அலை அலையான அடர்ந்த கருங்கேசம், கூரான தேடல் மிகுந்த விழிகள், சீவியெடுத்த நாசி, அழுந்தப் பொருந்திய அதரங்கள், ஓரிரு நரை முடிகள் எட்டிப் பார்க்கும் மீசை, வெட்ட வெட்ட மீண்டும் தலை தூக்கும் தாடி, அளவெடுத்து வடிவமைக்கப்பட்ட தாடை வரிசை. இன்றும் அவனின் செவிகளைக் காதொலிப்பான்கள் அரவணைத்திருந்தன. ஒரேயொரு வித்தியாசம் யாதெனில், இம்முறை அவன் அலைபேசியைக் கண்ணுறவில்லை‌. இவர்களை ஒருமுறை ஏறிட்டுவிட்டு கண்ணாடிச் சாளரத்தின் பக்கமாகத் தலையைத் திருப்பினான். இன்றும் நிதினின் உதடுகள் அதே பாடலை முணுமுணுக்கலாயின. இயல்பாக… எதார்த்தமாக… எதேச்சையாக…

கனி கனி பொன்னாங்கண்ணி

கறி கறி காய்கறி

பாலு முட்டை பாதாம் பிஸ்தா

என்ன வேணும் அள்ளிக்கோ

எங்க வேணும் சொல்லிக்கோ

வந்துச்சே வீடு தேடி

தேவையெல்லாம் பத்து நொடி

அம்மாவுக்குச் சந்தேகம் பிடி

நம்ம அப்பா செம்ம கேடி

இதைச் செவியுற்ற மற்றவனுக்குத் தானாய் இதழ்கள் விரிய, மிளிரும் அந்தப் புன்சிரிப்பை திவ்யாவுமே கவனித்துவிட்டாள். நேற்றைய நினைவு மூளையில் உதித்து அவளிற்குச் சங்கடத்தைத் தருவிக்க, என்ன செய்வதென அறியாமல் விழித்தாள். அதற்குள் நிதின் இரண்டாம் முறையாக அதையே பாட, அவன் தயக்கம் விடுத்து இவர்களை நோக்கித் திரும்பி அமர்ந்தான். 

“இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்குமோ?” என்ற அவனின் குரலில் தாயை விட மகன் அதிகமாகத் திகைப்புற்றான். 

இவன் அவசர கதியில் பாய்ந்தோடி அன்னையை ஒட்டிக் கொள்ள, “பயப்பட வேணாம். கூல்!” என்றான் அவன் சிரித்த முகமாக; சில நொடிகள் நீடித்த நிசப்தத்திற்குப் பிறகு “பை த பை, நான் தான் இந்தப் பாட்டை எழுதுனது” என்று செவி மடலைத் தேய்த்தபடி உரைத்தான்.

அதில் எதிரேயிருந்த இருவரும் மருட்சியாக விழித்தனர். சுற்றி முற்றி இவர்கள் பார்வையை ஓட்ட, ஆங்காங்கே ஒரு சிலர் அமர்ந்து அவரவர் திரையுலகில் அமிழ்ந்திருந்தனர்.

அவனிற்கு இவர்களின் தவிப்பு புரிந்தது‌ போலும். “ஓகே. ஓகே. பேனிக் ஆகாதீங்க. நான் எதுவும் பேசல” என்றான் கரங்களை உயர்த்தி சமாதானமாய்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“நி… நிஜமாவே நீங்க தான் எழுதுனீங்களா?” நிதின் தயங்கித் தயங்கி வினா வீசினான்.

“யெஸ்” அவன் இதழ் முறுவலோடு ஆமோதித்தான்.

“எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும்”

“தெரியுது”

“நீங்களும் தமிழா?”

“இவ்வளவு நேரம் அரபிக்ல எதுவும் பேசிட்டு இருந்தனா?” அவனின் இத்தகைய மொக்கைகளுக்குக் கூட இவன் உள்நாக்கு தெரியுமளவு வாயைப் பிளந்தான்.

“பை த வே, ஐ’ம் நிதின்” உற்சாகத்தோடு கரம் நீட்டினான் இளையவன்.

“ஓ… ஹாய்! ஐ’ம் கார்த்திக்” அவன் அழுத்தந்திருத்தமான உச்சரிப்போடு பதிலுக்குக் கரம் குலுக்கினான்.

“கார்த்திக்… நைஸ் நேம்!”

ஆண்டாண்டு காலமாகத் திரையிலும் தரையிலும் அடித்துத் துவைக்கப்பட்ட பெயர் கார்த்திக். அது இந்தச் சுட்டிப் பையனுக்கு இனிமையாக, புதுமையாக இருக்கிறதாமாம்‌ என யோசித்தவனின் உதடுகள் மென்னகையுடன் “இஸ் இட்?” என்றன.

“பாட்டு எழுதுறது தான் உங்க வேலையா?”

“இல்ல, இல்ல. நான் ஒரு ஆட் ஏஜென்ஸில வொர்க் பண்றேன். ஆட்னா என்னனு உங்களுக்குத் தெரியுமா?” அவன் மோவாயில் விரல் தாங்கியபடி வினவினான்.

“ஆன். விளம்பரம் தான?” இளையவன் ஒரு குதி குதித்து கரங்களைக் கட்டியபடி மொழிந்தான்.

“யா, ரைட். எங்க ஏஜென்ஸில தான் இந்த ஆட் ப்ரொடியூஸ் பண்ணோம். மொத்தம் அஞ்சு மொழில டெலிகாஸ்ட் பண்ண வேண்டி இருந்தது. நாங்க வேலைக்கு எடுத்த ட்ரான்ஸ்லேட்டருக்கு தமிழ் சரியா தெரியல. ஸோ நான் அவசர அவசரமா கிறுக்குனது தான் இந்த லிரிக்ஸ். அதை நீ பாடிக் கேட்டதும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” அவன் பாவனையோடு சொல்லிக் காண்பிக்க, இவன் அழகாகச் சிரித்தான். “அட் த சேம் டைம் சந்தோஷமாவும் இருக்கு” என்றான் அவன் தொடர்ந்து.

“எனக்கு டிவில பாத்துப் பாத்து இந்தப் பாட்டு மனசுல பதிஞ்சுடுச்சு”

“தட்’ஸ் த பவர் ஆஃப் அன் குட் ஆட்!”

“இது என் அம்மா” இவன் அருகிலிருந்தவளை வம்படியாய் அறிமுகப்படுத்தினான்.

அவன் வசீகரத்துடன் “ஹாய்!” என்றிட

“ஹாய்!” என்ற அவளின் குரல் அதளபாதாளத்தில் ஒலித்தது.

“நீங்க…” இளையவன் அவனிடம் ஏதோ கேட்க முனைய

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஸ்டாப் வந்துருச்சு” என்றவாறு இடைப்புகுந்தாள் நம் திவ்யா.

“அதுக்குள்ளவா?” என்றவாறு திருதிருத்த இவன், கையசைப்புடன் கார்த்திக்கிடம் இருந்து விடைபெற்றான்.

“பை! பை!” என்றவாறு அவன் தன் இருக்கையில் தளர்ந்து சாய்ந்தான்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனைத் திரும்பி நோக்கிய திவ்யா, சிறு கட்டாயப் புன்னகையை உதிர்த்துக் கீழிறங்கினாள். 

அன்றிரவு தாயவள் தனயனை உறக்கத்தில் வீழ்த்த எண்ண, அவனோ “அம்மா, அவரைப் பத்தி என்ன நினைக்கிற?” என்றான் நித்திரையை விரட்டி.

“எவரு?” அவள் ஒன்றும் தெரியாதவள் போல கேட்டாள்.

“அதான்மா, மெட்ரோல பாத்தோமே. கார்த்திக்”

“அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்கு?” அவள் அநியாயத்திற்குப் பொய்யுரைத்தாள். “பட்… தெரியாதவங்ககிட்ட உன்னைப் பத்தி நிறைய ஷேர் பண்ணாத. அவரு நல்லவரா, கெட்டவரான்னு கூட நமக்குத் தெரியாது. ஹாய் சொன்னா ஹாயோட நிறுத்திக்கணும்” என்றதும் இவன் மறுவார்த்தை பேசாமல் இமைகள் பூட்டி உறங்கிப் போனான்.

அடுத்து வந்த தொடரூர்திப் பயணத்தில் கார்த்திக் தானாய் முன்வந்து பேச்சு கொடுத்தான் “ஹே!”

“ஹாய்!” அன்னையின் கண்டிப்பின் பலனாக, நிதின் அடக்கமாகப் புத்தகத்தில் தலையை விட்டுக் கொண்டான்.

“இன்னைக்கு ஸ்டடிஸ்ல ஆர்வம் அதிகமாயிடுச்சு போல” அவன் இயல்பாகவே உரையாடினான்.

“ம்ம்ம்” இவனோ அமைதியாகத் தலையாட்டினான்.

“என்ன படிக்குற? கிராமரா? ஐ நோவ் திஸ். எங்க அப்பா சிம்பிளா எனக்கு சொல்லித் தந்திருக்காரு. வா, உனக்கு ஷார்ட்கட் கத்துத் தரேன்” என்றவன் முன்பின் யோசியாமல் நிதினின் புத்தகத்தைத் தன்வசப்படுத்தினான். 

அவன் கற்றுத் தருவதை மைந்தனோடு சேர்ந்து தாயவளும் செவியுற, இருவருமே பாட இறுதியில் அவன் வசமாயிருந்தனர்.

“அவ்ளோ தான் ஈஸி பீஸி!” என்ற வகையில் அவன் தோள்களைக் குலுக்க,

“தேங்க் யூ, அங்கிள்.‌‌..” என்று சொல்ல வாயெடுத்தான் நிதின்.

அவனோ அக்கணமே அலறினான் “நோ, நோ, நோ, நோ! அங்கிள்னு கூப்டா எனக்கு அலெர்ஜி ஆகிடும். நீ என்னைப் பேர் சொல்லியே கூப்பிடலாம்”

“ஆனா, அது மரியாதையா இருக்காதே” இவன் நிதானித்தான்.

“மரியாதை தரலைன்னாலும் பரவால்ல. அங்கிள்னு மட்டும் கூப்பிடாதடா. வயசான மாதிரி ஃபீல் ஆகுது”

“ஓகே, கார்த்திக்” என்று இவன் புன்னகை மழை பொழிய, கதைப் புத்தகத்தில் கண்ணும் இவர்களிடம் காதுமாக இருந்த திவ்யா நெற்றியைத் தேய்த்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“தென்… டெல் மீ அபௌட் யுவர்செல்ஃப். உங்க அப்பா என்ன பண்றாரு?”

“அப்பா… அப்பா…” இவன் தடுமாறி, பின் மௌனியானான்.

அடுத்த நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிக் கொள்ள, நிதினின் வழமையான புன்னகையைக் காணாமல் கார்த்திக் திணறித் தான் போனான். ஒரு நாள் விடுப்புக்குப் பின்னரே அவன் மீண்டும் இவர்களின் கண்களில் சிக்கினான். அவனைக் கண்டதும் தோழமை உணர்வு பொங்கிப் பெருக, நிதின் அவனருகே சென்றமர்ந்து கொண்டான். திவ்யா தனது கைப்பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் அதைப் பெற்று பக்கங்களைப் பிரட்ட, நடுப்பக்கத்தில் முளைவிட்டிருந்த ஒரு துண்டு காகிதத்தில் அவனுக்கான செய்தி காத்திருந்தது. ‘நிதினோட அப்பா சாமிகிட்ட போயிட்டாரு’ எனத் தமிங்கலத்தில் இருந்த தகவல் அவனை ஓர் உலுக்கு உலுக்கிற்று. அவன் ஈர் இரவுகளுக்கு முன்னரே ஊகித்தது தான் எனினும் சோக இழை மீட்டியது அவனுடைய இதயம்.

“ஸாரி, டியர்” அவன் இளையவனின் சிகையைக் கலைத்துக் கோதியபடி வருத்தமுற்றான்.

“இந்த ஸாரி நேத்து என்னை மீட் பண்ணாததுக்கா?” என்று இவன் கேட்டு வைக்க, 

சிறுபிள்ளைகளின் மறதி எனும் வரத்தை அவன் சீர்குலைக்க முயலவில்லை “ஆமா. நேத்து என் ஃபிரென்டோட கார்லயே வீட்டுக்குப் போயிட்டேன். அதனால தான் பாக்க முடியாமப் போச்சு. சொல்லப் போனா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்”

“நானும் தான், கார்த்திக். நீங்க வரலைனதும் உங்களுக்கு உடம்பு சரியில்லையோனு நினைச்சுட்டேன். அன்னைக்கு எனக்கு சளி பிடிச்சிருந்துச்சா. அதோடவே நான் உங்க கூட கைக்குலுக்கிட்டேன். அதனால, உங்களுக்கும் சளி பிடிச்சிருக்கும்னு நினைச்சிட்டேன்”

“அதிகமா யோசிக்குற நீ”

“ஆமா, ஓவர் திங்கிங். அம்மா மாதிரியே” என்றான் இவன் மீள் சிரிப்போடு.

அந்நொடி அவனும் அவளும் பரஸ்பரம் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

“ஸோ நிதின், எந்த ஸ்கூல் படிக்கிறீங்க?”

“ஹோம் ஸ்கூலிங்”

“த வாட்?” என அவன் அதிர்ந்த விதத்தில் ‘அடுத்த பஞ்சாயத்தா?’ என்கிற சிந்தனை உதயமாகி, உள்ளுக்குள் கலவரமானது திவ்யாவிற்கு. இன்றும் அவள் புத்தகத்தில் கண்ணும் அவர்களிடம் காதுமாகத் தான் இருந்தாள்.

“ஆக்சுவலா அதை ஆஃபிஸ் ஸ்கூலிங்னு தான் சொல்லணும். நானும் அம்மாவும் காலையிலயே அம்மாவோட ஆஃபிஸுக்குப் போயிடுவோம். அங்கத் தான் படிப்பு, விளையாட்டு, சோஸியலைஸிங் எல்லாமே. தூங்குறதுக்கு மட்டும் தான் வீடு” என்று வஞ்சப் புகழ் விளம்பினான் மகன்.

“அப்போ நீ ஸ்கூலே போனதில்லையா? அப்பறம் ஃப்ரென்ட்ஸ் எப்படிக் கிடைப்பாங்க?”

“ஃப்ரென்ட்ஸ் இருக்காங்களே. ஜெய ஸ்ரீ ஆன்டி, அனிதா ஆன்டி, ஜிதின் அங்கிள், நவ்யா ஆன்ட்டி, இன்னும் நிறைய பேரு இருக்காங்க. இப்போ நீங்க” என்று இவன் கூறவும் இவர்களின் நிறுத்தம் வரவும் சரியாக இருந்தது. 

அத்தருணத்தில் அவனுள்ளத்தில் பல்வகை வினாக்கள் போட்டி போட்டு மேலெழ, அதற்கு வாய்ப்பு தராமல் திவ்யாவும் நிதினும் நடைமேடையில் இறங்கி மறைந்திருந்தனர். அடுத்த சந்திப்பின் போது நிதினைத் தோளில் சுமந்தபடி வந்து சேர்ந்தாள் அவள்.  அவன் அவர்களுக்காகவே காத்திருந்தாற்போல் பேச்சை ஆரம்பித்தான்.

“என்ன, ஹீரோ அதுக்குள்ள தூங்கிட்டாரா?”

“கோல்ட் ஸிரப் குடிச்சதும் தூக்கம் வந்துருச்சு போல” அவள் முதன்முறையாக வார்த்தைகளைக் குரல் வளைக்குள் விழுங்காமல் வாயுரைத்தாள்.

“ஏன் நிதின் ஸ்கூலுக்குப் போறதில்ல?” அவன் ஒளிவு மறைவின்றி அவளிடம் வினா தொடுத்தான். நேற்றிலிருந்து அவனைத் தூங்க விடாமல் செய்த கேள்வி இது.

“அவனைப் பாத்துக்கறதுக்கு இங்க யாரும் இல்ல. நானும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். அப்பறம் கொஞ்சம் பயமும் காரணம்”

“உங்களோட அப்பா, அம்மா, மாமி?”

“இருக்காங்க. எல்லாரும்  தமிழ்நாட்டுல இருக்காங்க”

“சென்னையா?”

அவனிடம் அவளுக்கு இப்போது வரை நம்பிக்கை தோன்றவில்லை “இல்ல. இல்ல. இன்னும் உள்ள போகணும்” என மூடி மறைத்தே பேசினாள்.

“ம்ம். நிதின்க்கு அவன் வயசுல ஃப்ரென்ட்ஸ் இருந்தா பெட்டரா இருக்கும்ல”

“எனக்கும் அந்த ஆசை இருக்கு… அவனோட அப்பா ஒரு நாள் வேலைக்குப் போனவரு  போனவர் தான். திரும்பி சடலமா தான் எங்ககிட்ட வந்தாரு. அந்தச் சம்பவம் என்னை ரொம்ப.. ரொம்ப பாதிச்சுருச்சு. செய்தில ஸ்கூல் பசங்களுக்கு அப்படி ஆச்சு, இப்படி ஆச்சுன்னு சொல்லிக் கேள்விப்படும்போது மனசே ஆற மாட்டேங்குது. இவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியும்னு தோனல. இப்போ கூட ஒரு வேன் ஆக்ஸிடென்ட்ல மூனு குழந்தைங்க இறந்துட்டாங்களே”

“யா, யா, நானும் பாத்தேன்”

“ஸாரி‌. வேண்டாத எமோஷன்ஸ். உங்க மூடையும் சேத்து ஸ்பாயில் பண்றேன்”

“இட்’ஸ் அல்ரைட். நான் கேட்டதுக்குத் தான நீங்க பதில் சொன்னீங்க. என்னால உங்க மனநிலையைப் புரிஞ்சுக்க முடியுது. உங்க முடிவைத் தான் ஏத்துக்க முடியல. ஸ்டில், ஐ அன்டர்ஸ்டான்ட்” அவன் தீர்க்கமாக நவின்றான்.

“தேங்க்ஸ்!”

“உங்க ஸ்டாப் வந்துருச்சு”

“ஓஹ்… தேங்க்ஸ் அகய்ன்” என்றபடி பிள்ளையை அள்ளிக் கொண்டு எழுந்தவள் முன்னும் பின்னும் தடுமாறினாள்.

“கேர்ஃபுல் நௌ” என்றவன் தாமதியாமல் அவளின் கரம் பற்றி அவளை நிலைப்படுத்தினான்.

அவள் நடைமேடையில் பாதுகாப்பாகத் தரையிறங்குவதை உறதிப்படுத்த, நிழல் போல பின்தொடர்ந்த அவனது வாசம் அவளை என்னவோ செய்தது. 

***

You may also like

Leave a Comment

About Me

Featured