ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, குளிர்காலத்திலிருந்து தலைதூக்கி வசந்த காலத்திற்குள் தவழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் புது காலநிலையை இரசிக்கும் எண்ணத்தில், அப்பகுதியின் நண்பர்கள் குழாம் இரம்மியமான ஓர் இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஒற்றுமை என்னவெனில், அங்குக் குழுமியிருந்த அனைவருமே இந்தியர்கள். அவரவர் வீட்டிலேயே உணவு சமைத்து சுடச் சுட எடுத்து வந்து, அங்கிருந்த மேசை மீது காட்சிப் படுத்தியிருந்தனர். ஒவ்வொரு வகை உணவிலும் குறிப்பிட்ட அளவு அள்ளி, ஆளுக்கொரு தட்டில் அவர்கள் பரிமாறிக் கொண்டனர். மெல்லிய இரவு இசையோடு அந்தப் பூங்காவினில் இனிதே நிகழ்ச்சி அரங்கேறியது, சுகன் வாயைத் திறக்கும் வரையில்.
“என்னடா கிரேவி இது? கொழகொழ வழவழன்னு. உப்பும் இல்ல. ஒரு காரமும் இல்ல. நம்ம கூட்டத்துல வெள்ளை ஆடு எதுவும் புகுந்துருச்சா?” என்று இந்தியில் நையாண்டி பேசி அவன் சிரிக்க, அவனைச் சுற்றியிருந்த யாவரும் கலகலத்தனர். அதைச் சமைத்த சமையல் இராணி அருகாமையில் இருப்பதை அறியாமலே வாயை விட்டிருந்தான் அவன்.
“எக்ஸ்க்யூஸ் மீ! வாட் டிட் யூ ஜஸ்ட் ஸே?” அவள் அரை நொடிக்குள் கொதிநிலையை அடைய, அவனிற்கு ஒரு கணம் தொண்டைக் குழி ஏறி இறங்கியது. கண் கண்ணாடி வழியே உருட்டி மிரட்டிய விழிகள் அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தன.
சுகனின் தோழனோ அவசரமாக அவனது தட்டில் இருந்த கத்திரிக்காயை ருசி பார்த்துவிட்டு “யக்! சுத்த மோசம்” என்றான்.
அவ்வளவு தான். ஆங்காங்கே சிதறிக் கிடந்த மாந்தர்கள், படையல் சோற்றுக்குக் கூடும் காக்கை மாதிரி சுகனை வட்டம் கட்டினர்.
“ஹே! ரூபி, இது பெங்காலி டிஷ் தோய் பெகுன் தான? உண்மையாவே நல்லாருக்குப்பா. அத்தென்டிக் டேஸ்ட்!” என்று பாராட்டினாள் வங்காளத் தோழி ஒருத்தி.
“எக்ஸாக்ட்லி! அதை இவங்களுக்கும் கொஞ்சம் எடுத்துச் சொல்லு” என்றாள் அந்த தேவரூபினி. நீல நிற டீசர்ட்டும் சிவப்பு வர்ணப் பாவாடைக்கும் இடையே, தோலிலாலான பெரிய இடைக்கச்சை உடுத்தியிருந்தவளின் இடை தாண்டி கூந்தலருவி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சிறிய நீள்வட்ட முகத்தில் அமைந்த ஒற்றைப் பொட்டு அவளைப் பார்வைக்குச் சாந்தமாகக் காட்டிற்று. மாறாக, அவளது பேச்சில் சாந்தி இல்லை. பூந்தி போல பொரிந்து தள்ளினாள் பாவை.
“எனக்குப் பிடிக்கலன்னு தான் சொன்னேன். மத்தபடி…” சமாளிக்க முயன்று தோற்றான் இந்த சுகன். தாராளமாய் உண்டு வளர்ந்த சரீரமும் உச்சியில் முடியப்பட்டு தோள்வரை சரிந்தாடும் சிகையுமாய்க் காணப்பட்டவன், அந்த இரவு நேரத்திலும் கண்களுக்கு இதமாகக் கூலர்ஸ் அணிந்திருந்தான். கழுத்தில் சிறு சிறு உருளைகள் கோர்த்த மெல்லிய வெள்ளிச் சங்கிலியும் இடக் கரத்தில் இரு மோதிரங்களும் மின்னின. கண் கண்ணாடியும் தாடியும் மறைத்தது போக மீதம் தெரிந்த முகத்தில், ஒருவித குறும்புப் புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அது அவளை மென்மேலும் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது.
“உனக்குப் பிடிக்காதது பிரச்சனை இல்ல. நீ அப்பட்டமா என்னைக் கலாய்ச்ச. இப்படித் தான் மத்தவங்க ஃபீலிங்க்ஸ ஹர்ட் பண்ணுவீங்களா?” அவளோ பதிலுக்குப் பொங்கினாள்.
“ஓகே. இதைப் பெருசு பண்ணாதீங்க. இதோட விட்ருலாம்” என்ற அவனின் சமாதானக் கோரிக்கை அவளின் நீதிமன்றத்தில் ஏற்கப்படவில்லை.
“ஒரு ஸாரி கூட கேக்க முடியாதா?”
“ஸாரிலாம் அதுவா வரணும்ங்க. நீங்களா கேட்டு வாங்கக் கூடாது” என்றான் அவன் விதண்டாவாதமாக.
“இவனுக்குத் திமிரைப் பாத்தியாடி” தேவரூபினியின் காதில் தமிழ் மொழியில் கடித்துத் துப்பினாள் தோழி கீர்த்தனா.
“திமிரா? யாரு எனக்கா?” இவ்வளவு நேரமாகச் சரளமான இந்தியில் உரையாடியவன் சடாரென்று தாய் மொழியாம் தமிழிற்குத் தவ்வ, எதிரே இருந்தவர்களின் இதயத் துடிப்பு தடுமாறியது. “பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு தான் சொல்ல முடியும்” அவன் தமிழிலேயே கனலைக் கக்க, சுற்றி இருந்த மற்றைய மாநிலத்தவர்க்கு ஒன்றும் விளங்கவில்லை.
“நான் மறுபடியும் சொல்றேன். உனக்குப் பிடிக்கலைங்குறது இங்க விஷயமே இல்ல. அதை நீ சொன்ன விதம் தான் சரியில்ல” என்று அவள் பதிலுக்குச் சீறினாள்.
“ரெண்டு பேரும் நிறுத்துங்க. சுகன், நீ சமைச்ச டிஷ்ஷ எடுத்துட்டு வா. யார் டிஷ் பெஸ்ட்டுனு போட்டி வச்சு முடிவு பண்ணிக்கலாம்” என்றாள் ஒரு மராத்திய யுவதி.
மற்றவர்களுக்கும் அது ஏற்புடையதாக இருக்கவே, அவ்விருந்து நிகழ்வு அப்பொழுதினில் போட்டியாக உருவெடுத்தது. ஒரு மேசையில் தேவரூபினியின் தோய் பெகுனும் மறுபுற மேசையில் சுகனின் வெண்டைக்காய் பால்கறியும் இடம்பெற்றன. பெரும்பாலான வட இந்தியர்கள் ரூபினியின் பக்கம் சாய, சந்தேகத்திற்கு இடமின்றி தென்னிந்தியர்கள் சுகனின் பக்கம் கூடினர். இரு சண்டைக் கோழிகளும் சமமான வாக்கினைப் பெற்றிருக்க, மீண்டும் மராத்திய யுவதி பஞ்சாயத்திற்குத் தலைமை தாங்கினாள்.
“இந்த மேட்ச் டை ஆக நாங்க விட மாட்டோம். உன்னோடதைச் சாப்பிட்டுப் பாத்துட்டு சுகன் பிடிக்கலைன்னு சொல்லிட்டான்ல. ரூபி, இப்போ உன் டர்ன். நீ பக்கா நியாயவாதினு எங்க எல்லாருக்குமே தெரியும். சுகனோட இந்த டிஷ்ஷ சாப்டுட்டு, நீ உன்னோட தீர்ப்பைச் சொல்லு”
ஒரு மேசைக் கரண்டியின் உதவியுடன் பால்கறியை எடுத்துச் சுவைத்தவள் சில விநாடிகளுக்குப் பிறகு வாய் திறந்தாள் “இதுல உப்பு, காரம் எல்லாமே இருக்கு”
“ஹை!” என அவனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பரிக்க,
“வெய்ட், வெய்ட். இதுல நீங்க சேத்துருக்குற நல்லெண்ணெய் ஓவர்டோஸாகி எல்லா ருசியையும் அமத்திடுச்சு. ஸோ, இட்’ஸ் எ நோ ஃப்ரம் மீ” என்றவள் கட்டை விரலைத் தரை நோக்கிச் சரித்தாள்.
அதற்குள் “கைய்ஸ்! சுகனோட கைப்பக்குவத்துல சுவையான, சூடான வடை. யார் யாருக்கெல்லாம் வேணும்?” என்று ஒரு குரல் உயர, அவர்களின் களேபரம் திசைமாறி வடைச் சட்டியில் மையம் கொண்டது.
“கேர்ள்ஸ், நமக்கு இருக்கவே இருக்கு கீரும் இரசகுல்லாவும். லேட் கம்மர்ஸுக்குக் காலி அண்டா தான் கிடைக்கும்” என்றவாறு மேசைக் கரண்டியால் இனிப்படங்கிய கிண்ணத்தைத் தட்டலானாள் கீர்த்தனா.
இங்ஙனமே தீர்ப்பே கிடைக்கப் பெறாத யுத்தத்தின் நிறைவுரையுடன், வடையும் கீருமாக அந்தக் கும்பல் வெவ்வேறு திசைகளில் களைந்தது.
“அவனோட பால்கறி நல்லா தான் இருந்துச்சு. வேணும்னே தான அவனுக்கு நீ வோட் பண்ணல?” என்றாள் தோழி.
“இல்லடி. நான் உண்மையைத் தான் சொன்னேன். ஆனா…” என்றவளின் பற்கள் எதையோ உள்ளுக்குள் அரைத்துக் கொண்டிருந்தன.
“ஆனா என்ன, செல்லம்?”
“அவன் சுட்ட முருங்கைக் கீரை வடை மாதிரி என் லைஃப்ல நான் சாப்பிட்டதே இல்லடி” என்றவள் கடிபட்ட அரை வடையை இவளின் முன்னிறுத்த,
“அடி பாவி! இதை எங்கருந்துடி ஆட்டையப் போட்ட? எனக்கொரு வாய் தாடி” என்று கெஞ்சினாள் கீர்த்தனா.
“வாழ்க்கைல இந்த மாதிரி வாய்ப்புலாம் ஒரே ஒரு தடவை தான்டி அமையும். அதை நான் மிஸ் பண்ண விரும்பல” என்ற ரூபினியோ மிச்சத்தையும் வாயிலிட்டு அதக்கியபடி ஓட்டம் பிடிக்க,
“பச்சைத் துரோகி!” என்று கூவியபடி துரத்தத் துவங்கினாள் உயிர்த் தோழி.
அதே நேரம் மற்றொரு சாலைச் சந்திப்பினில் “இந்த அரை கப் கீர் தான்டா நமக்கு மிச்சம். கஷ்டப்பட்டு களவாடிட்டு வந்திருக்கேன். சாப்டணும்னு ஆசைப்பட்றவங்க சாப்பிடலாம். கொஞ்சம் விட்டுருந்தா, இதையும் வழிச்சு நக்கிட்டுப் போயிருப்பாளுங்க” என்றான் கூட்டத்தில் ஒருவன்.
போதிய கரண்டிகள் இல்லாமையால் அனைவரும் விரல் விட்டே அதைச் சுவைக்க, சுகன் மட்டும் விலக்கம் காட்டினான். நண்பன் ஒருவன் ஒரு தேக்கரண்டி கீரை எடுத்து அவனது வாயில் திணிக்க, “ம்ம்ம்ம்…” என்று சப்பு கொட்டி இமை மூடினான் அவன்.
அவனது ருசிகரத்தில் நண்பர்கள் அனைவரும் சம்பித்து நின்றுவிட “சின்ன வயசுல எங்க பக்கத்து வீட்டுல ஒரு நார்த் இந்தியன் ஆன்ட்டி குடியிருந்தாங்க. தேவையில்லாம இந்தக் கீர் அவங்களை ஞாபகப்படுத்துது. அவங்கள்ட்ட பேசி ரொம்ப வருஷம் ஆச்சு. ரூம்க்குப் போனதும் அவங்களுக்குக் கால் பண்ணணும்” என்றான் அவன் மலரும் நினைவுகளோடு.
“ஊ! சாதாரண கீர்க்கே உனக்கு ஆன்ட்டி ஞாபகம் வந்துருச்சு. அவ செஞ்ச இரசகுல்லாவ சாப்டுருந்தீனா, எக்ஸ் கேர்ள்ஃபிரென்ட்ஸ்லாம் ஞாபகம் வந்துருவாங்க போலவே” என்று ஒருவன் சொல்லவும் அந்தக் கூட்டம் கொள்ளென்றது.
“எக்ஸா? அப்டீனா?” என்று கேட்டு அவன் கண் சிமிட்ட, அவனுடைய முதுகில் இடி இடியென மத்தளம் வாசித்தனர் சகாக்கள்.
மறுநாள் காலையில் தேவரூபினியும் கீர்த்தனாவும் தயாராகி நேர்காணல் ஒன்றிற்குச் சென்றிருந்தனர். அங்கே பல வகை மேனி நிறங்களில் பல்மொழி பேசும் மக்கள் நேர்காணலுக்காகக் கூடியிருந்தனர்.
“என்னடி, இந்தியன் ரெஸ்டாரன்ட்ல அசிஸ்டன்ட் செஃப் வேலைன்னு சொன்ன. இங்க வந்து பாத்தா எல்லாரும் கலந்துகட்டி நிக்கிறாங்க”
“அட்வெர்டைஸ்மென்ட்ல எந்த நேஷனாலிட்டியா இருந்தாலும் பரவால்லனு போட்ருந்துச்சுடி. அதான் இவ்ளோ பேர் வந்துருக்காங்க போல”
“இவ்வளவு கூட்டத்துல நமக்கு வேலை கிடைக்குமா? இதை நம்பி பழைய வேலையை வேற விட்டுட்டு வந்திருக்கோம்”
“அந்த ஓனர் சரியான நசையா இருக்கான். வேலையை விட்றதைத் தவிர வேற வழி! நமக்கு இங்கயாவது விடியல் பொறக்குதான்னு பொறுத்திருந்து பாப்போம். ஆனா ஒன்னுடி. கிடைச்சா ரெண்டு பேருக்குமே வேலை கிடைக்கணும். இல்லையா, ரெண்டு பேரும் சேந்தே அடுத்த இன்டெர்வியூக்கு நடையைக் கட்டணும்”
“எடுத்ததும் வாயை வைக்காதடி. செத்த நேரம் சாத்திட்டு இரு” என்று அவளை அதட்டினாள் கீர்த்து.
“வொய் டென்ஷன், டார்லிங்? எதுவும் பிரச்சனையா?”
“ஆமாடி. கையில நயா பைசா இல்ல. காசு, காசு தான் பிரச்சனை”
“நான் வேணா…”
அவளைப் பேச விடாமல் கரமுயர்த்தினாள் இவள் “நிறுத்து. இன்டெர்வியூல செலெக்ட் ஆகுற வழியைப் பாப்போம்”
“உன் வருத்தம் புரியுது. பட் நல்ல மூடை ஸ்பாயில் பண்ணிட்ட, மச்சி” என்றாள் அவள் அடங்கிய குரலில்.
“ஐ டோன்’ட் கேர்” என்ற இவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
இரு மணித் தியாலங்கள் கடந்த நிலையில், கீர்த்தனா இரண்டாம் கட்டத் தேர்விற்கு வடிகட்டப்பட்டிருந்தாள். ரூபினி முதல் கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேற ஆயத்தமானாள்.
“கங்ராட்ஸ், டி! ஐ’ம் ஸோ ஹேப்பி ஃபார் யூ” என்றபடி கீர்த்துவின் தோளில் தட்டிக் கொடுத்தவள், ஆழ்ந்த பெருமூச்சோடு கதவைத் திறந்து வெளியேறினாள்.
அருகிலிருந்த பேருந்து நிலையத்திற்குச் சென்று அவள் பேருந்திற்காகக் காத்திருக்க, பின்னாலேயே வந்து சேர்ந்தாள் கீர்த்து.
“ஏன், மச்சி? என்னாச்சு?” இவளைக் கண்டுவிட்டு அவள் உண்மையிலேயே திகைத்தாள்.
“கங்ராட்ஸ்! ஐ’ம் ஸோ ஹேப்பி ஃபார் யூ!” அவளைப் போலவே பேசிக் காண்பித்தவள், தொடர்ந்து அவளை வசைபாடவும் செய்தாள் “ஃப்ரென்ட்கிட்ட யாராவது இப்படிப் பேசுவாங்களா? என்ன, வெறுப்பேத்துறியா? நீ நல்லா தான சமைப்ப. எப்படி செலெக்ட் ஆகாமப் போன? வேணும்னே சொதப்புனியா?”
“அப்படிலாம் இல்ல. உள்ள அவன் இருந்தான்டி”
“எவன்?”
“அதான்டி அந்த வெண்டைக்காய்”
“அதையே அவனுக்குப் பேரா வச்சுட்டியா? அதனால தான் உனக்கு வேலை கிடைக்கலையோ! இப்போ எல்லாம் தெளிவா புரியுது. நானும் அங்கத் தான இருந்தேன். என் கண்ணுல அவன் படவே இல்லையே”
“எனக்கு மட்டும் அவனைப் பாக்கணும்னு வாய்ச்சுருக்கு போல. மோர்ஓவர், அவன் தான் இந்த ரெஸ்டாரன்ட்க்கே ஓனராமா”
“வாட்! நல்லவேளை தப்பிச்சுட்டோம். கிரேட் எஸ்கேப்டி”
அந்நேரம் பேருந்து வரவும் இருவரும் ஏறி இருக்கையில் அமர்ந்தனர். சில நிமிடங்களிலேயே முன்னிருக்கையில் இருந்து தமிழ்க் காற்று சுகந்த மணம் வீச, இவர்கள் ஆச்சரியத்தோடு முன்னே ஏறிட்டனர். அடுத்த விநாடியே இவர்களின் முகம் விழுந்துவிட்டது. அங்கே அலைபேசியைச் செவிக்குக் கொடுத்தவாறு, தனது முழுக்கைச் சட்டையை மடித்துவிட்டுக் கொண்டிருந்தான் சுகன். அவனும் அதே பேருந்தில் பயணிப்பதை இவர்கள் அப்போது தான் கவனித்தனர்.
“சொன்னா நம்ப மாட்ட. அந்த சண்டைக்காரி இன்னைக்கு ரெஸ்டாரன்ட்டுக்கே வந்துட்டா”
“…”
“அவளுக்கு உண்மையிலயே சமைக்கத் தெரியல. பேசுறது மட்டும் தமிழ். சமைக்குறது பூரா நார்த் இந்தியன் டிஷ்ஷு. இன்னைக்கு சட்னின்னு ஒன்னு பண்ணா பாரு. கடவுளே! அதைத் தாளிக்கக் கூட இல்ல. வெங்காயத்தைப் பச்சையா அரைச்சு வச்சிருக்கா. பாக்கவே சகிக்கல”
“…”
“என்னது? நார்த் இந்தியால சட்னி அப்படித் தான் செய்வாங்களா. போடீ…” என்ற வண்ணம் அவன் அளவிற்கதிமாகவே அங்கலாய்த்தான்.
“ஹ்ர்க்கும்…” என்கிற கணைப்பொலி கேட்டு அவன் திரும்ப, பின்புறம் இருந்த இரு தமிழ்க் கிளிகளும் அவனை வெறியோடு முறைத்தன.
“ஹலோ… ஹலோ… பஸ்ஸுல டவர் கிடைக்கல போல. நான் தள்ளிப் போய்ப் பேசுறேன்” என்றவனோ அடுத்த நிறுத்தத்தில் தப்பித்தோம், பிழைத்தோம் என இறங்கிக் கொண்டான்.
“ஐ’ம் கோயிங் டு கில் ஹிம்” நேரம் கடந்து ரூபினி வெடிக்க,
“ஹே, கம்முனு வாடி” என அவளை இழுத்துப் பிடித்தாள் தோழி.
“ஓவரா தான் பண்ணிட்டு இருக்கான். அவனை நான் சும்மாவே விடப் போறதில்ல, கீர்த்”
“அவன் ஒன்னும் நமக்குக் கீழ வேலை பாக்கல. ஹி இஸ் எ ரெஸ்டாரன்ட் ஓனர். உன்னால என்ன பண்ணிட முடியும்?”
“காட்றேன். நான் யாருன்னு அவனுக்குக் காட்றேன்” அந்நொடியில் அவளுள் ரூபினி சபதமொன்று உருக்கொண்டது.
அடுத்த இரு மாதங்கள் அவளும் தோழியும் ஏறாத அலுவலகங்கள் இல்லை; இறங்காத படிக்கட்டுகள் இல்லை. இவர்களின் புத்தியில் ஒரேயொரு குறிக்கோள் தான். சுகனிற்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும். அவனிடம் தங்களின் சமையல் நிபுணத்துவத்தை நிரூபித்துக் காட்டிட வேண்டும். அதற்காகவே இராப்பகலாகத் திட்டம் தீட்டி, முறையாக அனுமதி வாங்கி, சில முதலீட்டாளர்களைப் பிடித்து, பற்பல தோழமைகளின் உதவியோடு ஒரு நன்னாளில் அவனது உணவகத்திற்கு எதிரிலேயே புதிதாய் ஓர் இந்திய உணவகத்தைத் திறந்திருந்தார்கள் இவர்கள்.
***