என் பிரியன் நீ…
பகுதி – 1.
தஞ்சையின் பெரிய கோவில் இருக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் இருந்தது அந்த இஞ்சினியரிங் கல்லூரி. அரசு உதவி பெறும், மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை அடங்கி இருந்தது அந்த கேம்பஸ்.
அங்கே பார்க்கிங்கில் தன் காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான் புகழேந்தி. அந்த கல்லூரியில் இஞ்சினியரிங் மாணவர்களுக்கு கணித பாடம் நடத்துபவன். முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதமும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு த்ரிபிள் ஈ பிரிவில் ஒரு பாடத்தையும் எடுத்துக் கொண்டு இருந்தான்.
அரசாங்க தேர்வெழுதி, அந்த கல்லூரிக்கு அவன் தேர்வாகி இருந்தான். கணிதப்பிரிவில் டாக்டரேட் முடித்தவன். அதுவும் தன் லட்சியம் இதுதான் என முடிவெடுத்து, அதன்படி படித்து ஒரு நல்ல இடத்துக்கு வந்து இருந்தான்.
அந்த இஞ்சினியரிங் கல்லூரித் தாளாளரின் மகன் குணசேகரன் அவனது மிகவும் நெருங்கிய நண்பன். அது அங்கே அனைவருக்கும் தெரியும் என்றாலும், அந்த தன் நெருக்கத்தை வெளியில் யாரிடமும் அவன் காட்டிக் கொள்வது இல்லை.
குணசேகரின் தகப்பனுக்கு திடுமென பக்கவாதம் வந்துவிட, இப்பொழுது கல்லூரியின் மொத்த பொறுப்பும் குணசேகரிடம் தான். அந்த கல்லூரியில் எந்த மாற்றங்கள் செய்வதாக இருந்தாலும் அவன் புகழேந்தியிடம் ஒரு வார்த்தை கேட்காமல் இருக்க மாட்டான்.
அதேபோல் கல்லூரியில் மாணவர்களிடமும் புகழேந்திக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. மாணவர்களுக்கு இடையில் எந்த விதமான பிரச்சனைகள் என்றாலும் அதைத் தீர்த்துவைக்க உடனே மேனேஜ்மென்ட் அழைப்பது புகழேந்தியைத்தான்.
மாணவர்கள் எல்லாம் பிரச்சனையின் தாக்கத்தில் கொதித்துக் கொண்டு இருந்தாலும், புகழேந்தி அந்த இடத்துக்கு வந்துவிட்டால் அப்படியே அடங்கிப் போவார்கள். அந்த அளவுக்கு அந்த கல்லூரியில் கொஞ்சம் செல்வாக்கானவன்.
சராசரி இந்திய ஆண்மகன்களின் உயரம். கல்லூரிப் பேராசிரியருக்கே உரிய மிடுக்கும், ஆடை உடுத்தும் பாங்கும் கொண்டவன். இருபத்தொன்பது வயது இளைஞன் என்றாலும் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அளவுக்கு தன்னைப் பேணிக் காப்பவன்.
கச்சிதமான சிகை அலங்காரமும், ட்ரிம் செய்த மீசையும் தாடியுமாக, திராவிட நிறத்தில் கம்பீரமாகவே இருந்தான். அவனிடம் இருக்கும் ஒரே குறை என்றால் அவனது கண்கள். மாறுகண் எனப் பார்த்த உடனேயே அனைவரதும் கண்டு கொள்வார்கள்.
சின்ன வயதில் பள்ளிகளில் எல்லாம் அந்த கண்களைக் கொண்டு எத்தனையோ விதமான கேலி கிண்டல்களுக்கு ஆளாகி இருந்தான்.
‘எங்கே எங்களை நேராப் பாருடா பார்ப்போம்’.
‘எங்களைப் பார்க்கச் சொன்னால், வேற எங்கேடா பார்க்கற?’.
‘இந்த நொள்ளைக்கண் உனக்குத் தெரியுமாடா?’ என எத்தனையோ விதமாக கேலிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறான். மாறுகண் என்பதால் கண்கள் கொஞ்சமே கொஞ்சம் துருத்திக்கொண்டு இருப்பதுபோல் கொஞ்சம் முட்டைக் கண்களாக வேறு இருக்கும்.
பள்ளியில் அவன் படிக்கையில் அவனது பட்டப் பெயரே ‘முட்டைக் கண்ணா’ தான். ‘எனக்கு இந்த கண் வேண்டாம்’, ‘எனக்கு வேற கண் வைங்க’ என சின்ன வயதில் பெற்றவர்களிடம் அத்தனை போராடி இருக்கிறான்.
அதெல்லாம் அவன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் வரைக்கும்தான் அந்த போராட்டம் எல்லாம் இருந்தது. எப்பொழுது கல்லூரியில் அடியெடுத்து வைத்தானோ, அப்பொழுதே தன் குறையை எப்படி நிறையாக மாற்றிக் கொள்ளலாம் என சிந்திக்கத் துவங்கி விட்டான்.
அவனது கல்லூரிப் பேராசியர்களுக்கு கல்லூரியில் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் கண்டு அந்த இடத்தில் தான் இருக்க ஆசை கொண்டான். அவர்களுக்கு வெளி இடங்களிலும், சொந்தங்களுக்கு மத்தியிலும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் கண்டு அப்படி ஆக ஆசைப்பட்டான்.
கல்லூரியில் முதல் வருடம் அடியெடுத்து வைக்கையிலே பேராசிரியர் ஆவது எப்படி எனக் கேட்டு தனக்குள் லட்சியத்தை வளர்த்துக் கொண்டான். அப்படியே ஒரு நல்ல இடத்துக்கு வந்து சேர்ந்தும் விட்டான்.
இப்பொழுது கூட அவனுக்குள் சில நேரம் தன் கண்ணைக் குறித்த சிறு தாழ்வு மனப்பான்மை எட்டிப் பார்க்கும். அதுவும் குறிப்பாக கடந்த இரு வருடங்களாக அது அவனுக்கு வலுக்கட்டாயமாக உணர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.
கல்லூரியில் சேர்ந்து, அங்கே ஒரு மதிப்பு மிக்க இடத்தில் இருப்பது கண்டு அவனுக்குள் ஒரு நிறைவு இருந்தது. ஆனால் எப்பொழுது அவனுக்கு அவனைப் பெற்றவர்கள் பெண் பார்க்கத் துவங்கினார்களோ, அப்பொழுது முதல் மனம் கொஞ்சம் ஆட்டம் காணத் துவங்கியது.
கல்லூரிப் பேராசிரியர், அதுவும் அரசாங்க வேலை, லட்சத்தில் சம்பளம், ஆளும் பார்க்க நன்றாகவே இருக்க நிறைய வரன்கள் வந்தது. தன் மகனுக்கு உடனடியாக திருமணம் முடிந்துவிடும் என அவனது தாய் சாந்தா எதிர்பார்க்க, அது நடக்கவே இல்லை.
பெண்ணின் பெற்றவர்களுக்கு சம்மதம் என்றாலும் அவனைக் கட்டிக்கொள்ள பெண் சம்மதிக்க வேண்டுமே. இந்த மாறு கண்ணன் தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என பெண்கள் அனைவருமே ஒன்றுபோல் மறுத்தார்கள்.
அதிலும் சில, ஆப்பரேஷன் செய்து இந்தக் கண்ணை சரி செய்துவிட்டு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்கள். அதையெல்லாம் கேட்டு நிஜத்தில் ஒரு மாதிரி வெறுத்துப் போய்விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிலும் முத்தாய்ப்பாக சில பெண்கள், ‘உங்களுக்கு கண்ணு தெரியுமா?’ என வேறு கேட்டு வைக்க, நொந்தே போனார்கள். ஒரு மாறுகண் இத்தனை பெரிய விவாதங்களை கொண்டு வரும் என அவனைப் பெற்றவர்கள் எதிர்பார்த்ததே இல்லை.
புகழேந்தியே கூட தனது மாறுகண்ணைக் குறித்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு கவலை கொள்வோம் என நினைத்து கூடப் பார்த்தது இல்லை. இரண்டு வருடங்களாக விடாமல் மணப்பெண் வேட்டையில் இறங்கியும் எதுவும் சரியாக ஒத்துவரவில்லை.
அதை நினைக்கையில் மனதுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், வாழ்க்கையில் போராடியே பழக்கப்பட்டவன் என்பதால் அதையும் ஒரு போராட்டமாகவே எடுத்துக் கொண்டான். நிச்சயம் அந்த போராட்டத்தில் தனக்கு வெற்றி கிடைக்கும் என நம்பினான்.
அந்த போராட்டத்தை அவன் கைவிடவும் தயாராக இருக்கவில்லை. அவனுக்கும் உள்ளுக்குள் நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருந்தது. ஒரு அழகான அன்பான மனைவி, ஒரு அருமையான குழந்தை என அவனுக்கு ஆசை இருந்தது.
ஒரு பெண்ணோடான நிறைவான வாழ்க்கை… ஒரு பெண்ணைத் தெரிந்துகொள்ளும், அறிந்துகொள்ளும் வேட்கை என அவனுக்கும் பெரும் எதிர்பார்ப்பும், ஏக்கமும் இருந்தது. பெண்ணின் மீதான ஆசையை, மோகத்தை கடந்த ஒரு வாழ்க்கையை வாழ அவன் என்ன முற்றிலும் துறந்த முனிவனா என்ன?
அவனுக்கும் தன் வாழ்வில், தனக்காக ஒரு பெண் வேண்டும் என மனம் தவித்தது. அது இத்தனை நாட்களாக நடக்காமல் போனதில் கொஞ்சம் சோர்ந்து போனான். ஆனால் இன்று ஒரு மாதிரி உற்சாக மனநிலையில் இருந்தான். அதற்கு காரணமும் இருந்தது.
இன்று அவன் தன் சொந்த ஊரான திருச்சிக்கு பெண் பார்க்கப் போவதாக இருந்தான். அவனது உற்சாகத்துக்கு காரணம் அது இல்லை, அந்த பெண்ணுக்கு அவனைப் பிடித்து இருப்பதாக அவளே அவனிடம் அலைபேசியில் சொல்லி இருந்தாள்.
இந்த பெண் பார்க்கும் படலம் எல்லாம் ஒரு கண் துடைப்புக்காகத்தான். மற்றபடி இந்த திருமணம் முடிவான நிலையில்தான் இருந்தது. இவன் நேரில் சென்று பெண் பார்த்துவிட்டால் போதும். வரும் முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்துவிட தயாராக இருந்தார்கள்.
அந்த நல்ல நாள் கூட சாந்தா குறித்துவிட்டார். எனவே இந்த திருமணம் உறுதியாக நடந்துவிடும் எனத் தோன்ற, அந்த ‘ரதி’யின் மேல் ஒரு சின்ன நேசம் முளைவிடத் துவங்கி இருந்தது.
அவனுக்குள் உருவான நேசம் அவனுக்குள் சுகந்த மணத்தைப் பரப்பவே கால்களுக்கு ரெக்கை முளைக்காத குறைதான். அவன் தங்களது டிப்பார்ட்மென்ட் அறையை நோக்கிச் செல்ல, வழியில் எதிர்பட்ட மாணவ, மாணவியர் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள்.
“குட் மார்னிங் மாஸ்டர்…”
“வெரி குட் மார்னிங்…”.
“குட் மார்னிங் மாஸ்டர்…”
“வெரி குட் மார்னிங்…” அவன் சொல்லிக்கொண்டே செல்ல, மாணவர்கள் அனைவரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
வழக்கமாக “குட் மார்னிங்…” சொன்னால், ‘மார்னிங்…’ என ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் கொடுத்தவாறு சென்றுகொண்டே இருப்பான். இப்படி நீளமாக “வெரி குட் மார்னிங்…” என்று எல்லாம் பதில் கொடுக்கவே மாட்டான்.
அப்படி இருக்கையில் இன்று இப்படி நீட்டி முழக்கி வாழ்த்தினால் மாணவர்கள் எல்லாம் சந்தேகப்பட மாட்டார்களா என்ன?
மாணவர்களின் வாழ்த்துக்களை எல்லாம் பெற்றுக் கொண்ட புகழேந்தி தன் டிப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான். மனதுக்குள் அத்தனை பரபரப்பாக இருந்தது.
இத்தனை வருடங்களாக, ஜாதகம் சேர்ந்து, பெண் பார்க்கப் போய்… அங்கே இருந்து வந்த பலவிதமான பதில்களை மட்டுமே கேட்டு இருந்தான். ஆனால் முதல் முறையாக, பெண்ணின் சம்மதம் கிடைத்த பிறகு எல்லாம் நடக்க, மனதுக்குள் அப்படி ஒரு நிறைவு.
தன் அலைபேசியை எடுத்து, தன் ரதியின் புகைப்படத்தைப் பார்க்கச் சொல்லி மனம் உந்தித் தள்ளியது. ஆனால் அப்படிச் செய்தால், வந்த உடனேயே அலைபேசியில் என்ன செய்கிறான் என மற்றவர்களின் கவனம் தன்மீது திரும்பும் எனத் தோன்றியது.
வழக்கமாக அவன் அலைபேசியை பார்ப்பவனாக இருந்தால் அவர்கள் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். ஆனால் புதிதாக ஒன்றைச் செய்தால் நிச்சயம் கண்டு கொள்வார்கள் என்பதால் தன் வேலைகளைப் பார்க்கத் துவங்கினான்.
அதே நேரம் வெளியிலோ மாணவர்களுக்கு இடையில் சின்ன சலசலப்பு எழுந்தது. அங்கே, “சக்தி… என்னடி? இன்னைக்கு மாஸ்டர் செம குஷி மூட்ல இருக்கார் போல? என்ன விஷயம்?” சக்தியின் தோழி லேகா அவளிடம் கேட்டாள்.
“அதுவா…” என்றவள் சுற்றி முற்றி பார்த்தாள். சக்தி அப்படிப் பார்ப்பதைப் பார்த்தவளோ, ‘என்னடா இது? பில்ட்டப் எல்லாம் பலமா இருக்கு’ என்றவாறு தோழியையே பார்த்திருந்தாள்.
“என்னடி சக்தி, நான் என்ன இந்திய இராணுவ ரகசியத்தை பாகிஸ்த்தானுக்கு விக்கறதுக்கா கேட்டேன். இந்த பில்ட்டப் கொடுக்கற?” தோழியை கேலி செய்தாள்.
“நீ அப்படி எதையாச்சும் என்கிட்டே கேட்டால் எனக்கு எதுவும் தெரியாதே, அதனால் அதைப்பத்தி கவலையே பட மாட்டேன். நீ கேட்டது நம்ம புகழேந்தி மாஸ்ட்டரைப் பற்றி ஆச்சே. விஷயம் கொஞ்சமா வெளியே கசிந்தாலும் போதும், நம்ம மொத்த டிப்பார்ட்மெண்ட்க்கும் தெரிஞ்சுடும்.
“அப்படி மட்டும் விஷயம் அவங்களுக்குத் தெரிய வந்ததோ… முதல் வேலையா என்னைத்தான் வந்து சத்தம் போடுவாங்க. உனக்கென்ன நீ கதை கேட்டுட்டு தப்பிச்சு போய்டுவ. மாட்டறது நான்தானே?” சக்தி நொடித்துக் கொள்ள, லேகா தன் வாயில் கை வைத்துக் கொண்டாள்.
“நான் அப்படி என்னடி கேட்டேன்? சார் என்ன இன்னைக்கு குஷி மூடில் இருக்காங்கன்னு தானே கேட்டேன். அதுக்கு ஏன் இம்புட்டு நீளமா பேசற?” சிறு கோபத்தோடு அவளைப் பார்த்தாள்.
“இப்போ இராணுவ ரகசியத்தைப் பத்தி எல்லாம் கேட்டது யாராம்?” அவளை சிறு முறைப்போடு ஏறிட்டாள்.
“நான்தான்… நான்தான்… தெரியாமல் கேட்டுட்டேன். நீ விஷயத்தைச் சொல்லு, இல்லன்னா என் மண்டையே வெடிச்சுடும். தயவு செய்து இப்படி சஸ்பென்ஸ் வச்சு கொல்லாத தாயே” லேகா சொன்ன விதத்தில், அதுவும் அவள் தன் மார்பில் மெல்லமாக அடித்துக் கொள்ள, சக்திக்கு சிரிப்பு வந்தது.
“ஹையோ… என்னடி பண்ற குரங்கே… இப்படி வா…” என்றவள் தங்கள் வகுப்பறைக்குள் அவளை இழுத்துச் சென்றாள்.
“இவ குடுக்கற பில்ட்டப்பில் எனக்கு நெஞ்சு வலியே வந்துடும் போல” புலம்பியவாறே அவள் பின்னால் சென்றாள்.
“இப்போ நீ கம்முன்னு வரலைன்னா, உன் மண்டை வெடிச்சு சிதறட்டும்னு நான் என்பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன். எப்படி வசதி?” சக்தி மிரட்ட கப்பென வாயை மூடிக் கொண்டாள்.
“தவ்ளோண்டு விஷயத்தை வாங்க, இவகிட்டே எம்புட்டு தொங்க வேண்டி இருக்கு? ரொம்ப சிரமம்டா…” வடிவேலு குரலில் லேகா சொல்ல, மற்றவள் முறைக்கவே “ஹி…ஹி… சும்மா…” என அவள் சொல்ல, சக்தி தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
இருவரும் தங்கள் இடத்துக்கு வந்து அமர, அப்பொழுதும் சக்தி தங்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்க்கவே, இப்பொழுது லேகா அவளை முறைத்தாள்.
“போதும்டி… இத்தோட நிறுத்திக்க… பிறகு நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் பாத்துக்க?” விரல் நீட்டி எச்சரித்தாள்.
“கோச்சுக்காதடி லேகா… என்னோட விஷயமா இருந்தால் உன்கிட்டே சொல்லாமல் வேற யார்கிட்டே சொல்லப் போறேன்? ஆனா பாரு… இது நம்ம புகழேந்தி மாஸ்டரோட விஷயம் ஆச்சே. அதுக்குத்தான் கொஞ்சம் கவனமா இருக்கேன்.
“உனக்கே தெரியும், விஷயம் லீக் ஆனால் எந்த அளவுக்கு அது ஸ்ப்ரெட் ஆகும்னு தெரிஞ்ச நீயே இப்படிப் பண்ணா எப்படி?” சக்தி வருத்தமாகக் கேட்க, லேகா இறங்கி வந்தாள். புகழேந்தியின் ஒன்று இரண்டு விஷயங்கள் காட்டுத்தீ போன்று பரவி இருந்தது அவளுக்கும் தெரியுமே.
“சரி சொல்லு…” என்றவள் ரகசியத்தை கேட்கும் மனநிலைக்குச் சென்றாள்.
“அதுவா? மாஸ்டர் இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறாங்க, அதான்” இப்படிச் சொன்ன சக்தியை ஒரு துப்பும் பார்வை பார்த்தாள்.
“த்து… இதுதான் விஷயமா? இதுக்குத்தான் இம்புட்டு பில்ட்டப்பா? போடீங்…” நாக்கை கடித்து அவளை முறைத்தாள்.
“ஏய்… இது முன்ன நடந்த மாதிரி இல்லை. இது கன்ஃபாம் தான்” எழுந்து செல்லப் போன அவளது கரத்தைப் பிடித்து தடுத்தவள் அவளிடம் சொன்னாள்.
“அதெப்படி உனக்குத் தெரியும்? இதுக்கு முன்னாடியும் ரெண்டு முறை நீ இப்படிச் சொன்னதாத்தான் எனக்கு ஞாபகம்” அவளது இழுப்பில் அவளுக்கு அருகே மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
“எங்க அம்மா சொன்னாங்க லேகா. அந்த பொண்ணு ரதிக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் தானாம். மாஸ்டர் கிட்டே கூட ஃபோன்ல பேசறதா கேள்விப்பட்டேன். கல்யாண தேதி கூட குறிச்சுட்டாங்களாம்” அவள் சொல்ல, லேகா உற்சாகமானாள்.
“சக்தி, நீ நிஜமாத்தான் சொல்றியா? அதனால்தான் மாஸ்டர் ஒரே குஷி மூட்ல இருக்காரா?” என்றவளுக்குள் அத்தனை சந்தோசம்.
“இந்தக் காலத்தில் இருக்க பொண்ணுங்களை எல்லாம் புரிஞ்சுக்கவே முடியலை சக்தி. மாஸ்டருக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? அறிவில்லையா? எவ்வளவு ஹேன்சம்மா இருக்காங்க. நம்ம கிளாஸ்லேயே எத்தனைப் பொண்ணுங்க அவரை சைட் அடிக்கறாங்கன்னு தெரியும் தானே?” லேகா கேட்க,
“அதில் நீயும் ஒருத்தி தானே…” பட்டென இடை புகுந்து கேட்டாள்.
“கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொல்லாதே… மாஸ்டர் மட்டும் ‘ம்’ன்னு ஒரு வார்த்தை சொல்லட்டும். நானே அவரை கல்யாணம் பண்ணிப்பேன். அவ்வளவு ஏன்… ‘வா’ன்னு ஒரு வார்த்தை சொன்னால் அவர் பின்னாடியே போய்ட மாட்டேன்” லேகா சொல்லிக் கொண்டே போக, அவளைக் கேவலமான பார்வை பார்த்தாள்.
“ச்சீ… த்து… பேச்சைப்பார்… என்னடி பேச்சு இது? உனக்கே சொல்ல நாக்கு கூசல?” சற்று கடுப்பாகவே கேட்டாள்.
“ஏன்… இப்போ திடீர்ன்னு நீதான் மாஸ்டரை கட்டிக்கணும்னு உங்க அம்மா, அப்பா சொன்னா நீ சம்மதிக்க மாட்டியா என்ன?” அவள் கேட்க, பெரும் அதிர்வாக அவளைப் பார்த்தாள். அந்த நேரம் எந்த தேவதை ‘ததாஸ்து’ எனச் சொல்லிச் சென்றதோ என்னவோ?
“முதல்ல போய் வாயைக் கழுவுடி… மாஸ்ட்டரைப் போய்” என்றவளின் குரல் உள்ளே இறங்கி இருந்தது.
அதைப் பார்த்தவள், “என்னடி… குரலே இறங்கிடுச்சு…” அவளைக் கேலி செய்தாள்.
“அது ஏன்னு உனக்கே தெரியும்” என்றவளது குரலில் அப்படி ஒரு நன்றிப் பெருக்கு வழிந்தது. சக்தி அப்படியே உணர்ச்சிவசப்பட, லேகா மானசீகமாக தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
‘ச்சே… இவ விஷயம் தெரிஞ்சும் நான் இப்படி கேட்டது மிகப்பெரிய தப்பு’ தனக்குள் நொந்து போனாள்.
“சரி அதை விடு… உன் ஆளு நவீன் என்ன சொல்றான்?” வேகமாக பேச்சை மாற்றினாள்.
“அவனை என் ஆளுன்னு சொல்லாதன்னு உனக்கு எத்தனை நாள் சொல்லிட்டேன் லேகா?” சற்று சலிப்பாக கேட்டாள்.
“விளையாடுறியா நீ? அவன் உன்கிட்டே லவ்வை சொல்லி, அதை நீயும் அக்ஸப்ட் பண்ணி, காதல் வானத்தில் சிறகடிச்சு பறந்துட்டு இருக்க. நான் அதைச் சொன்னால் என்கிட்டே சண்டைக்கு வருவியா?” தோழியை குறுகுறுவென பார்த்து வைத்தாள்.
“அதை வேற இப்போ ஞாபகப்படுத்துவியா? என்னவோ ஒரு மாதிரி கில்ட்டா ஃபீல் ஆகுது லேகா” அவள் சொல்ல, லேகா புருவம் நெரித்தாள்.
“என்னடி சொல்ற? கில்ட்டா? அது எதுக்கு? நவீனும் உன் ஊர்க்காரன்தான். அவனுக்கும் உங்க குடும்பத்தைப் பற்றி நல்லாவே தெரியும். அப்படி இருக்கும்போது, நீ எதுக்கு இவ்வளவு அப்சட் ஆகற? உனக்கும் நவீனைப் பிடிக்கும் தானே?” அவளிடம் கேட்டாள்.
“எனக்கு நவீனைப் பிடிக்காதுன்னு நான் எப்போ சொன்னேன்? இது வேற?” என்ற சக்தியிடம் திடுமென ஒரு அமைதி நிலவியது.
“சக்தி… உங்க மாமாதான் உங்க குடும்பத்தைப் பார்த்துக்கறாங்க என்பது சரிதான். அந்த நன்றி, கடன்பாடு எல்லாம் உன் அப்பா அம்மாவோட சரியாப் போச்சு. அதுக்கு நீயோ, உன் தம்பியோ எப்படி பிணை ஆவீங்க?” அவளிடம் கேட்டாள்.
“ச்சே…ச்சே… மாமா எங்க குடும்பத்தை அவரோட சொந்த குடும்பமாகத்தான் பார்த்துக்கறாங்க. ஒரு சொல், ஒரு பார்வை கூட அவங்க எங்களைப் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. இது வேற…” என்றவளுக்கு உள்ளுக்குள் அத்தனை தவிப்பு.
“என்ன சக்தி? என்னன்னு சொன்னாத்தானே தெரியும்?” அவளிடம் கேட்டாள்.
“இவ்வளவு தூரம் எங்களுக்காக பார்த்து பார்த்து செய்யும் அப்பாவுக்கும், மாமாவுக்கும் எனக்கும் தம்பிக்கும் எப்படி வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு தெரியாதா என்ன?” என்றவளுக்கு அடுத்த காரணத்தை தோழியிடம் சொல்ல முடியவில்லை.
சக்தியின் அப்பாவின் வேலையில் ஏதோ சிக்கல், அதனால் கேஸ் நடக்கிறது என்பது வரைக்கும்தான் லேகாவுக்குத் தெரியும். அந்த வழக்கின் காரணமாக சக்தியின் அப்பாவுக்கு அரசாங்க வேலை பறிபோய், அவர் இப்பொழுது ஒரு கம்பெனியில் சாதாரண வேலையில் இருந்தார்.
குடும்பத்தை நடத்த வருமானம் போதும் என்றாலும், பிள்ளைகளின் படிப்பு, வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு எல்லாம் அவளது அப்பா தாமு எங்கே போவார் என வேண்டாம்?
அந்த மொத்த பணத்தையும் புகழேந்தியின் அப்பா பாபு தான் கொடுத்துக் கொண்டு இருந்தார். தாமுவின் வழக்கின் காரணமாக ஊருக்குள் அவருக்கு மிகுந்த கெட்ட பெயர் ஆகிப் போனது.
ஆனால் அதையெல்லாம் பாபு கொஞ்சம் கூட நம்பவே இல்லை. அதோடு தாமுவுக்கு தொடர்ந்து உதவியும் செய்ய, அதற்கு ஒரு வலுவான காரணம் வேறு இருக்க, அது எல்லாம் லேகாவுக்குத் தெரியாதே.
ஒரே ஊர் என்பதால் நவீனின் குடும்பத்தினருக்கும் தாமுவைப் பற்றித் தெரிந்திருக்கும். நவீன் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும், அவனைப் பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் அப்படி நினைக்க வேண்டுமே.
அவனது காதலை ஏற்கும் முன்பு சக்தி அதைப்பற்றி நிறைய யோசித்தாள். ஆனால் நவீனின் பேச்சும், அணுகுமுறையும் அவளை கரைத்து, அவன் காதலை ஏற்கச் செய்து இருந்தது. ஆனாலும் அவ்வப்பொழுது நெரிஞ்சி முள்ளாக தன் தந்தையின் வழக்கு விஷயம் அவளை உறுத்திக் கொண்டேதான் இருந்தது.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அந்த கேஸ் நடந்துகொண்டு இருக்கிறது. சொந்தமாக சொத்துபத்து, அவசரத்துக்கு சமாளிக்க ஒரு வேலை என இருந்தாலும், அரசாங்க வேலையில் இருந்ததுபோல் இருக்காதே.
அரசாங்க ஊழியர் என்ற கெத்து, பலம் எல்லாம் போக… எத்தனை பெரிய அவமானத்தை சந்தித்துவிட்டார். எப்படியாவது தன்மேல் இருந்த பழியை துடைத்து எறிந்துவிட்டு, மீண்டுமாக அந்த அரசாங்கப் பணியில் அமர வேண்டும் என்பதே தாமுவில் லட்சியமாக இருந்தது.
சக்தி அதையெல்லாம் சிந்தித்தவாறு அமர்ந்து இருக்க, லேகா அவளைப் பிடித்து உலுக்கினாள். “சக்தி… பெல் அடிச்சு மாஸ்ட்டரும் கிளாசுக்கு வந்துட்டாங்க. நீ என்ன இப்படியே உட்கார்ந்து இருக்க? எந்திரிடி… மாஸ்டர் உன்னைத்தான் பார்க்கறாங்க” அவளை இடிக்க, அடித்து பிடித்து எழுந்து நின்றாள்.
“குட்மார்னிங் மாஸ்டர்…” அனைவரும் எழுந்து நின்று வாழ்த்த, அதை ஏற்றுக்கொண்டு பதில் கொடுத்தான். அனைவரையும் அமரச் சொன்னவன், தன் கையில் இருந்த தடிமனான புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு, அனைவரையும் நிதானமாகப் பார்த்தான்.
அந்த ஒரு பார்வையிலேயே அனைத்து மாணவர்களின் மனநிலையை ஓரளவுக்கு அவன் கணித்து விடுவான். அன்றும் அதேபோல் பார்வையால் வலம் வந்தவன், தன் பாடத்தை நடத்தத் துவங்கினான்.
முதல் பாடவேளையிலேயே கணிதம் என்றால் எப்படி இருக்கும் என நம் அனைவருக்குமே தெரியும். நிச்சயம் பாடத்தில் கவனம் வைக்க முடியாது, தூக்கம் வரும். ஆனால் இப்படியான எந்த குறைகளையும் புகழேந்தியின் வகுப்பில் பார்க்கவே முடியாது.
ஏதோ வகுப்புக்குள் வந்தேன், ப்ரிப்பேர் செய்து வைத்த அனைத்தையும் ஸ்மார்ட் போர்டில் பதிய விட்டேன், அதை மாணவர்களை காப்பி செய்ய வைத்தேன் எனச் செய்யவே மாட்டான்.
முதலிலேயே அவன் எதைப்பற்றி எடுக்கப் போகிறான் என்பதை வெகு சுருக்கமாக சொல்லிவிடுவான். அதில் வரும் ஃபார்மலாக்கள், கணக்கீடுகள் எனச் சுருங்கச் சொல்லி, அந்த கணக்கை அவன் விவரிக்கையில் அனைவரும் உன்னிப்பாக கவனிப்பார்கள்.
அனைவரையும் அந்த அளவுக்கு கவனிக்க வைப்பான். கணக்கு எப்பொழுதும் கொஞ்சம் சிக்கலானதே. அதைத் தீர்க்கும் வழிமுறையை கச்சிதமாக விளக்கவில்லை என்றால் யாருக்கும் எதுவும் புரியாது. சிலருக்கு தங்களுக்குத் தாங்களே அந்த கணக்கை விளங்கிக் கொள்ள முடியும்.
அதையே மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், அதுவும் அவர்கள் முழுதாக விளங்கிக் கொள்ளும் அளவுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால் சுத்தமாகத் தெரியாது, சிலருக்கு வராது.
ஆனால் புகழேந்தி அந்த விஷயத்தில் மிகவும் தேர்ந்தவனாக இருந்தான். அப்படியே முழுதாக ஒவ்வொரு வழிமுறைகளையும் மற்றவர்களுக்கு புரியும்வண்ணம் மிகத் தெளிவாக சொல்லிக் கொடுக்கும் திறமை அவனுக்கு இயற்கையாகவே வாய்த்து இருந்தது.
பொதுவாக ஆங்கிலம், தமிழ் இந்த பாடப்பிரிவுகளின் பொழுது மட்டுமே இப்படியான ஆழ்ந்த புரிதலை, ஒரு சுவாரசியமான பொழுதை, இலகுவான மனநிலையை மாணவர்கள் கொண்டிருப்பார்கள். ஆனால் இதை கணிதப் பிரிவில் கொண்டு வந்தது புகழேந்தியின் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசுதான்.
அந்த வகுப்பே மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக அவனது வகுப்புக்கு கட்டுப்பட்டு இருந்தது. அவன் நிற்கும் நிலை, ஸ்மார்ட் போர்டை கையாளும் விதம், அந்த மார்க்கரை அவன் விரல்களுக்குள் சுழற்றும் லாவகம் என அவனை ரசிக்கவும் அங்கே ஆட்கள் இருந்தார்கள்.
அது அவனுக்கும் புரிந்தாலும், தன் பாடத்தில் கவனம் வைக்காமல், தன்மீது கவனம் வைக்கும் மாணவ, மாணவிகளிடம் சின்னச் சின்ன கேள்விகள் கேட்டு அவர்களையும் பாடத்துக்குள் இழுத்துச் சென்றான்.
“மாஸ்டர், செம்ம மேன்லிடி சக்தி… இவர் மட்டும் நம்ம மாஸ்ட்டரா இல்லாமல் போயிருந்தால் நானே போய் ப்ரப்போஸ் பண்ணி இருப்பேன்” லேகா சின்னக் குரலில் சொல்ல, அவளது தொடையில் நறுக்கென கிள்ளி வைத்தாள்.
“ஸ்… ஏன்டி இப்படி கில்லி விட்ட?” சக்தி கிள்ளிவிட்ட இடத்தை பரபரவென கையால் தேய்த்தவாறே கேட்டாள்.
“பாடத்தை கவனிக்கச் சொன்னா, அவரை கவனிக்கறியா நீ?” சக்தி கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே,
“சக்தி… இந்த இடத்தில் எந்த ஃபார்முலாவை அப்ளை பண்ணணும்?” புகழேந்தி கேட்க, சக்தி தன் இடத்தில் இருந்து எழுந்து நின்றாள்.
அவன் சுட்டிக் காட்டிய கணக்கை வேகமாக பார்வையிட்டவள், அதற்க்கான விடையைச் சொல்ல, “குட்… சிட்…” என்றவன் தன் பாடத்தை தொடர்ந்தான்.
இந்த நேரம் சக்தி அதற்கான பதிலை சொல்லாமல் போயிருந்தாலும் நிச்சயம் அவன் எதுவும் சொல்லியிருக்க மாட்டான். அதற்க்கான விடையைச் சொல்லி, “கொஞ்சம் கவனி” எனச் சொல்லி கடந்து இருப்பான்.
சொல்லப்போனால் புகழேந்தியை மாணவர்களுக்கு அவ்வளவு பிடிக்கக் காரணமே அவனது இந்த அணுகுமுறைதான். தன் பாடத்தில் கவனம் வைக்க வேண்டும் என நினைப்பவன், அதைச் செய்தே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டான். மாணவர்களின் மனம் புண்படும்படி ஒரு சுடுசொல் கூட சொல்ல மாட்டான்.
அவனது பாடத்தில் அரியர் வைத்தால் கூட அந்த மாணவர்களைத் தனியாக அழைத்து பொறுமையாக பேசுவான். அவர்களுக்கு எது கடினமாக இருக்கிறது எனக் கேட்டு அதைத் தீர்த்து வைக்க முயல்வான். அதனாலேயே அவனது பாடத்தில் அரியர் வைக்கவே மாட்டார்கள்.
ஜஸ்ட் பாஸ்மார்க்காவது வாங்கி விடுவார்கள். அவன் செல்லும் அனைத்தும் வகுப்புகளிலும் சென்டம் ரிசல்ட் என்பதால் சக பேராசிரியர்களுக்கு சற்று பொறாமையே. அவ்வளவு என் அவர்களது ஹெச்ஓடி கே கூட புகழேந்தி என்றால் கொஞ்சம் கடுப்புதான்.
ஆனால் இதையெல்லாம் புகழேந்தி கொஞ்சம் கூட கண்டு கொள்வது இல்லை. அந்த பாட வேளை முடிந்ததற்கான மணி அடிக்கப்பட, அப்பொழுதுதான் அனைவருமே கலைந்தார்கள். பெல் அடித்த உடனேயே வகுப்பை விட்டு வெளியேறிச் செல்லும் வழக்கம் என்றைக்குமே அவனுக்கு இருந்தது இல்லை.
அதுவும் அடுத்த பாடவேளை எப்பொழுதுமே அவனுக்கு ஃப்ரீ அவர்தான் என்பதால், மாணவர்களுக்கு வீட்டில் சென்று போட்டுப் பார்க்க சில கணக்குகளை கொடுத்துவிட்டே செல்வான். இன்றைக்கும் அவன் அவ்வாறே செய்ய மாணவர்களும் குறித்துக் கொண்டார்கள்.
அவன் அங்கிருந்து வெளியேற, சக்தி, வேகமாக அவன் பின்னாலேயே எழுந்து ஓடினாள். “லூசே எல்லாம் உன்னால…” என்றவாறு சக்தி செல்ல, லேகாவும் அவள் பின்னாலேயே சென்றாள்.
வகுப்பறைக்கு வெளியே, “மாஸ்டர்…” என்ற அழைப்போடு சின்னதாக மூச்சுவாங்க சக்தி அவன் முன்னால் சென்று நின்றாள்.
“சாரி மாஸ்டர்…” அவள் மன்னிப்பை வேண்ட, அவனோ சின்னதாக புன்னகைத்தான்.
“ஃப்ரண்டுக்கு அட்வைஸ் பண்ணவேண்டிய நேரமா அது?” சாதாரணமான குரல்தான் என்றாலும், சக்திக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று. கூடவே அவளுக்குப் பின்னால் ஓடி வந்த லேகா, அவனது இந்த பேச்சைக் கேட்டுவிட்டு ப்ரேக் அடித்ததுபோல் நின்றுவிட்டாள்.
அவள் அப்படியே திரும்பிச் சொல்லப் போக, “லேகா…” அவனது குரல் அவளைத் தடுத்தது.
‘ஆத்தீ… இவருக்கு என்ன முதுகுக்குப் பின்னாடியும் கண்ணு இருக்கா?’ நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள், வேறு வழியின்றி அவனை நோக்கி வந்தாள்.
‘ஐயோ போச்சு போச்சு… நான் அவரை சைட் அடிச்சதையும் கண்டு பிடிச்சிருப்பார் தானே…?’ எண்ணியவளுக்கு அவனை நெருங்கவே கால்கள் பின்னிக் கொண்டது.
எப்படியும் அவனை நெருங்கிச் சென்றுதானே ஆக வேண்டும். லேகா அவர்களை நெருங்க, ‘என்ன சொல்வானோ?’ என பயந்தாள். அவன் திட்டினால் கூட பரவாயில்லை, அவன்தான் அதைச் செய்ய மாட்டானே என்பதுதான் அவளது கவலையே.
“என்னோட க்ளாஸ் போர் அடிச்சதா லேகா?” அவன் கேட்க பதறிப் போனாள்.
“ஐயோ… அப்படில்லாம் இல்ல சார்…” வேகமாகச் சொன்னாள்.
“இல்ல… ரெண்டுபேரும் ரிலாக்ஸ் பண்ணிக்க விளையாடிகிட்ட மாதிரி இருந்தது, அதான் கேட்டேன்… சரி போ…” அவன் சொல்ல, விட்டால் போதும் என ஓடியே வந்துவிட்டாள்.
சக்தி இன்னுமே அங்கே நிற்க, “வீக் எண்டு ஊருக்கு வர்றேன்னு சொன்னியாம். நானும் சாயங்காலம் அண்ணா, அண்ணி கூட கிளம்பறேன். நீயும் எங்களோட வா… நாலு மணிக்கு ரெடியா இரு, ஹாஸ்டல்ல வந்து கூட்டிப் போறேன்” அவன் சொல்ல, சக்தி அப்படியே நின்று இருந்தாள்.
‘இந்த அம்மாவ…?’ என எண்ணியவள் மனதுக்குள் பல்லைக் கடித்துக் கொண்டாள்.