Home Anti Heroineஎபிலாக் – 03

எபிலாக் – 03

by Vathani S

எபிலாக் – 03

“இதுதான் நீங்க எங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கான விலையா.?” என அகானா கிண்டலாக கேட்ட நொடி, 

“நிறுத்து அம்மு..” என்ற மஞ்சரியின் அதட்டல் அந்த இடத்தையே நிரப்பியது. 

“ம்மா.. நான் எப்போ பேசனும்னு ஆரம்பிச்சாலும், நீங்களோ இல்ல ஆகனோ என்னை பேச விடாம பண்ணிடுறீங்க.. இப்போ நான் பேசலன்னா வேற எப்பவும் என்னால பேச முடியாது..” என ஆத்திரத்தை அடக்கியக் குரலில் அகானா கூற,

“நீ பேசி நாங்க ரொம்ப கேட்டாச்சு, இன்னும் நீ பேச என்ன இருக்கு..” என்றார் மைதிலி சட்டென கோபமாக. 

அகானாவின் பேச்சில் அவருக்கு கோபம் வர ஆரம்பித்திருந்தது.

“மைத்தி..” என்ற ரவியின் அதட்டலில் அமைதியாகிவிட்டாலும், அகானாவை முறைத்துக்கொண்டே தான் இருந்தார்.

“இப்படி முறைச்சிட்டே தான் இருப்பன்னா, வெளியில் இரு. நான் பேச வேண்டியதை பேசிட்டு வந்துடுறேன்..” என்றதும் கணவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் மைதிலி.

ஒரு முடிவு எடுத்தப் பின், அது அவருக்கு பிடிக்காத முடிவுதான் என்றாலும், கணவனுக்காக அந்த இடத்தில் நிற்க வேண்டும் என்று நினைத்துதான், அவருக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு இடத்திற்கு ரவியுடன் வந்தார் மைதிலி. இப்போது எப்படி அவரை விட்டு செல்ல, அதனால் அமைதியாக நின்று கொண்டார்.

இப்போது ரவி “நீ என்ன பேசனுமோ பேசு..” என மகளைப் பார்த்துக் கூற, 

‘ஹான்’ என முகத்தை வெடுக்கென திருப்பிக் கணவனை முறைத்தாள் அகானா.

மகளைத் தூக்கி வைத்தபடி, மனைவிக்கு அருகில் நின்ற ஆகனுக்கு, அவள் முறைப்பில் சிரிப்பு வந்துவிட்டது.

தன் மாமா ஏதோ ஒரு முடிவோடு தான் வந்துருக்கிறார் என்று புரிந்தது ஆகனுக்கு.

இன்றோடு இதை பேசி முடித்து விடட்டும் என அவனும் அமைதியாகவே ஒதுங்கிக் கொண்டான்.

அகானாவின் சிறுபிள்ளைத்தனமான செய்கையில், அங்கிருந்த அத்தனை பேருக்குமே உதட்டில் லேசான புன்னகை மலர்ந்தது நிஜம்.

ஆனால் அதை அகானாவிற்கு காட்டும் தைரியம் தான் யாருக்கும் இல்லை.

“அம்மு.. இந்த நேரத்துல தேவையில்லாத பிரச்சினையை இழுத்துட்டு இருக்காத..?” என மஞ்சரி மகளை அடக்க,

“நீங்க இதுல தலையிட வேண்டாம், இது எனக்கும் என் பொண்ணுக்கும் உள்ள பிரச்சினை, நாங்களே பேசி சரி பண்ணிக்கிறோம்..” என்று ரவி கூறி முடித்ததுமே, மஞ்சரியின் முகம் இயலாமையைக் காட்ட, அகானாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது..

“எங்க அம்மா இல்லாம நீங்க இல்ல.. அவங்க இல்லாம நான் இல்ல. அவங்களை இப்படி யாரும் மூனாவது ஆள் மாதிரி பேசக்கூடாது. முக்கியமா நீங்க பேசவேக்கூடாது.” என்றாள் ஆத்திரத்தை அடக்கியக் குரலில்.

“அம்மு..” என ஆகன் மனைவியின் தோளைத் தட்ட,

“என்ன.. என்ன அம்மு? அவர் என் அம்மாவை ஒதுங்கி போக சொல்றார். அதை பார்த்துட்டு நீயும் சும்மா இருக்க.” என அவனிடமும் பாய,

“அம்மு.. அவர் பேசி முடிக்கனும்னு வந்துருக்கார். பேசி உனக்கு என்ன தோனுதோ சொல்லிடு. இன்னையோட இந்த பிரச்சினையை முடிச்சி விடு. அவரைப் பார்க்கும் போதெல்லாம் நீ முகத்தைக் காட்டுறதும், அவர் உனக்காக ஏங்குறதும் சரியில்ல.. தப்போ சரியோ இன்னைக்கு அவர் உன்கிட்ட பேசனும்னு ஒரு முடிவோட வந்துருக்கார்..” என ஆரியன் தங்கையின் தோள் தட்டு சமாதானம் செய்ய, ஆகனும் “அவர் என்ன சொன்னாலும் நீ கேட்க போறது இல்ல.. அப்படி அவர் என்னதான் சொல்றாருன்னு பார்க்கலாம் விடு..” என சமாளிக்க, மஞ்சரியை கலக்கமாக பார்த்தாள் அகானா.

“நீங்க பேசிட்டு வாங்க அம்மு.. நான் பாப்பாவை வெளிய வச்சிட்டு இருக்கேன்..” என ஆகனிடமிருந்த குழந்தைக்கு கையை நீட்ட, அதுவோ ஆகனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு வர மறுக்க, சட்டென மஞ்சரியின் விழிகள் நிறையத் தொடங்கியது.

அந்த இடமே கனமாகத் தோன்றியது.

“ம்மா..” என்ற அகானா தன்னிலையையும் மறந்து வேகமாக அவரிடம் சென்று தோளோடு அனைத்துக் கொண்டவள், “ம்மா நீங்க இல்லாம எனக்கு எதுவும் பேசவும் வேண்டாம், கேட்கவும் வேண்டாம்.. யூ ஆர் ஸ்ட்ராங்க் அண்ட் ஐயர்ன் லேடி ம்மா.. இந்த சின்ன விசயத்துக்கு போய் அப்செட் ஆகலாமா..” என கரகரப்பாக கூற, மஞ்சரியின் நிறைந்த விழிகளில் இருந்து நீர் வழியத் தொடங்கியது.

ஆனால் அதற்கு மாறாக இதழ்கள் அழகாய் புன்னகைத்தது. “ஒன்னும் இல்லடா..” என மகளை சமாதானம் செய்ய, 

அவளோ ரவியிடம் திரும்பி “என் அம்மாவை வச்சு என்கிட்ட பேச விருப்பம் இருந்தா பேசுங்க, இல்லைன்னா இந்த பேச்சே வேண்டாம்..” என அழுத்தமும், கண்டிப்புமாக கூற, 

“ஓகே ஓகே..” என தன் இரு கைகளையும் தூக்கி சரண்டர் போல் காட்டிய ரவி, “உங்களுக்கு இல்லாத உரிமை எனக்கு இல்லங்க.. நான் பேசும் போது குறுக்க பேசாதீங்கன்னு மட்டும் தான் சொன்னேன்..” என மஞ்சரிக்கு விளக்கம் கொடுத்த ரவி, மூக்கு விடைக்க நின்றிருந்த மகளை விட்டு, அவளுக்கு அருகில் நின்றிருந்த மருமகனை முறைத்தார்.

“மாமா.. நான் என்ன சொன்னாலும் உங்க பொண்ணு கேட்கமாட்டா.. அதனால என் தலையை உருட்டாம என்ன பேசனுமோ, அதை பேசுங்க..” என ஆகனும் படபடவென பேச, அங்கிருந்த அனைவர் முகத்தில் சூழல் மாறியதற்கான பாவனை தெரிந்தது. 

“எங்களுக்கு பரம்பரை சொத்துன்னு எதுவும் கிடையாது. எல்லாமே எங்க சம்பாத்தியம் தான். அதுல முதல் போட்டது மைதிலி. அவ போட்ட அமவுன்ட்க்கு இப்போ வரை வட்டியும் முதலும் எவ்ளோன்னு கணக்கு பார்த்து செட்டில் பண்ணியாச்சு.. அதுக்கு சாட்சி உங்க விஜிம்மா…” என்றதும், அகானா விஜயாவைப் பார்க்க, அவரும் ஆம் என்பது போல் தலையசைத்தார்.

அடுத்து எங்க சொத்துல மைதிலி எந்த பங்கும் வேண்டாம்னு சொல்லிட்டா.. அதனால எங்க பங்கை மூனா போட்டுட்டோம். என்னோட பங்கை ரெண்டா பிரிச்சு ஒன்னை ஹரினி, ஹரிஷ்க்கும் இன்னொரு பங்கை ஆகன், மகிழினிக்கும் எழுதி வச்சிருக்கேன்..” என்றதும் அகானா முகம் மீண்டும் கோபத்தில் சிவக்க ஆரம்பிக்க,

“நீ சொன்ன மாதிரி என்னோட சொத்துக்கள் எதுவும் உன் பேர்ல இல்லை. நாங்க யாரும் ‘வாங்கு’ன்னு உன்னை போர்ஸ் பண்ணவும் மாட்டோம். ஆனா அது ஆகனுக்குத்தான், அதை வேண்டாம்னு நீ சொல்லக்கூடாது, சொல்லவும் முடியாது..” என்றார் நிதானமாக.

இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே அறிந்திருந்தாளோ என்னவோ, ரவியின் பேச்சைக் கேட்டதும் ஒரு கிண்டலான பார்வை, ஒரு நக்கலான சிரிப்பு அவள் முகத்தில் உண்டானது.

“ம்ம் பக்கா ப்ளான்தான், க்ரேட் ஐடியா.. மீதியையும் சொல்லி முடிங்க..” என்ற போது அவள் பார்வை மைதிலியிடம் சென்று நின்றது.

“எனக்கென்ன உன்னை பார்த்து பயமா? என்னோட ப்ராபர்டி எல்லாம் ஆல்ரெடி நாலு பேருக்கும் பிரிச்சு எழுதிட்டேன். அதை மாத்த முடியாது.” என்றார் கோபமாக.

“ம்ம் அப்போ எனக்கு எதுவுமே இல்லையா?” என்றாள் சற்றே தாங்கலாக. அந்தக் குரலில் மஞ்சரிக்கு பயம் வர, ரவிக்கோ மகள் ஏதோ கேட்க போகிறாள் என்று நிம்மதி பிறக்க,

“உனக்கு என்ன வேணும் அம்மு..” என்றார் வேகமாக. மகள் தன்னிடம் எதையாவது கேட்டுவிட வேண்டும் என்ற பேராசை அவருக்கு. அந்த ஆசை அவரை அகானாவிடம் கேட்க வைத்தது. 

“அவங்க எல்லாருக்கும் கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும். அவங்ககிட்ட இருந்து வாங்கி எனக்கு கொடுக்கக்கூடாது. உங்ககிட்ட என்ன இருக்கோ அதை எனக்கே எனக்கா கொடுத்துடுங்க..” என்றதும் சுற்றி நின்றவர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

மைதிலியின் முகம் கோபத்தையும், அதிர்ச்சியையும் தாண்டிய ஒரு உணர்வை வெளிப்படுத்த, ரவியோ சிரித்தபடியே மகளைப் பார்த்தார்.

‘உன்னால கொடுக்க முடியாது, அதனாலத்தான் அதை கேட்டேன்’ என்ற பார்வையோடு அகானா பார்க்க, இப்போது அனைவரின் குற்றம் சாட்டும் பார்வையாக அகானாவை நோக்கித் திரும்பியிருந்தது.

“அம்மு.. என்ன இது?” என ஆகன் அதட்ட,

“ம்ச் அம்மு.. விளையாட்டு போதும்..” என மஞ்சரியும் மகளை அதட்ட,

“ஏன் அவர் கொடுக்கமாட்டாரா?” என நக்கல் நிறைந்த குரலில் கேட்க,

“அகி.. போதும் உன்னோட விளையாட்டுப் பேச்சு. அவர்கிட்ட இருக்கிறதே அந்த வீடு மட்டும் தான். அதை எப்படி அவர் கொடுக்க முடியும்…” என ஆரியன் அதட்ட, 

‘ஓகே’ என்ற தோள் குலுக்கலுடன் அகானா அங்கிருந்து நகர, 

“நான் உன்கிட்ட கொடுத்தது அந்த வீட்டோட பத்திரம் தான்..” என்றார் ரவி. இப்போது அனைவரின் அதிர்ந்த பார்வையும் ரவியிடம் திரும்ப, அகானாவின் புருவமும் யோசனையாகவே சுருங்கியது.

“எஸ்.. நானும் என்னோட மனைவியும் இனி இங்க இருக்க முடியாது. உனக்கும் உன்னோட அம்மாவுக்கும் செஞ்ச துரோகத்துக்கான தண்டனை எங்களுக்கு இதுவரை கிடைக்கல. அதனால அதைத் தேடி நாங்களே போறோம். இது நாங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவுதான். என் மனைவிக்கும் இதுல முழு சம்மதம்..” என்றதும், மஞ்சரி சட்டென அங்கிருந்து வெளியேறிவிட, துக்கத்தில் ரவியின் தொண்டைக்குழி ஏறி இறங்கியதை அங்கிருந்த அனைவராலும் உணர முடிந்தது.

“உன்னையும் உன் அம்மாவையும் எந்த வீட்டு படியேறி வரக்கூடாதுனு நாங்க சொன்னோமோ, அந்த வீட்டுக்கு உரிமையாளரா, சொந்தக்கரங்களா நீங்க ரெண்டு பேரும் இருக்கப் போறீங்க..” என மைதிலி கூற, ரஞ்சனிக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

“கண்ணா என்ன டா இதெல்லாம்.? நீ இப்படி, இதெல்லாம் வேண்டாம்னு சொல்லு கண்ணா..?” என மகனைப் பிடித்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டார் ரஞ்சனி.

வினோத் வந்து ரஞ்சனியை பிடித்தவன் “அண்ணா எடுத்த முடிவு ரொம்ப சரி ரஞ்சிக்கா.. நீ இப்படி அழுது அவர் முடிவை பலவீனமாக்கிறாத..” என கூற,

“வினோ.. தப்பு செஞ்சது நாம எல்லாரும் தான். தண்டனை அவருக்கு மட்டும்னா எப்படிடா..?” என அழ,

“ம்மா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..” என மனைவியின் உடல் இறுகுவதை உணர்ந்து ஆகன் தாயை அடக்கப் பார்க்க,

ஆனால் அதற்குள் அகானாவோ “அப்போ நீங்களும் உங்க அண்ணா கூட சேர்ந்து கிளம்புங்க..” என பட்டென சொல்ல, அங்கிருந்த அனைவருமே ரஞ்சனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தனர்.

‘சும்மாவே ஆடும் சாமி, வேப்பிலையைக் கையில கொடுத்தா காளி அவதாரம் எடுக்காதா?’ என மனதுக்குள் திட்டிக்கொண்டிருக்கும் நேரம்,

“சரி நான் அவளையும் அழைச்சிட்டு போறேன்..” என ரவி கூற,

“எனஃப் மாமா.. எனஃப்..” என்ற ஆகனின் கர்ஜனைக் குரலில் அனைவரும் இப்போது அவனைத் திரும்பி பார்த்தனர்.

“நீங்க எல்லாரும் அம்முவை எப்படி காட்ட ட்ரை பண்றீங்க.. சொத்துக்கு ஆசைப்படுறவன்னா, இல்ல ஈவு இரக்கமே இல்லாதவன்னா.?” என ஆவேசமாக கேட்க,

“கண்ணா…” என்ற ரவியிடம் 

“மாமா நீங்க எனக்கு முக்கியம், உங்களை எங்கேயும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது, அதே நேரம் என் மனைவியையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. அவளுக்கு பிடிக்காத எதையும் என்னால செய்ய முடியாது. நீங்க எனக்காக எழுதின எல்லா சொத்தையும் ஏதாவது ஆஷ்ரமத்துக்கு எழுதி வச்சிடுங்க.. இந்த வீடு, ஹாஸ்பிடல் எதுவும் எனக்கு வேண்டாம்..” என அதே குரலில் பேச, அங்கிருந்த யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

ஆனால் ஆகனின் கோபத்திற்கும், அன்பிற்கும் அப்பாற்பட்டவள்தானே நம் அகானா.. அவளிடம் ஆகனின் எந்த கோபமும் எடுபடாதே..

“அவன் சொல்றதையெல்லாம் யோசிக்க வேண்டாம். சீக்கிரம் வீட்டை காலி பண்ணிட்டு, சாவி கொடுத்துட்டு கிளம்புங்க..” என மிகவும் அசால்டாக சொல்லிவிட்டு அறைக்குச் சென்றுவிட ‘என்னடா இது?’ என அனைவருமே ஆகனைத்தான் பாவமாக பார்த்தனர்.

You may also like

1 comment

M. Sarathi Rio August 23, 2026 - 9:20 pm

அடிப்பாவி.. பொசுக்குன்னு எல்லாரையும் கிளம்ப சொல்லிட்டாளே..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured