அத்தியாயம் – 03
சென்னையை சமீபத்ததுமே சபரி மனைவியை எழுப்பிவிட்டான். கூடவே வீட்டிற்கும் அழைத்து, வேலையாட்கள் அனைவரையும் ரெடியாக இருக்கச் சொன்னான். கார் நின்ற சத்தத்தில் விழித்த நாகம்மை ஒரு நொடி எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் விழிக்க, கழுத்தில் ஊஞ்சலாடிய மாங்கல்யம் இதற்காகத்தான் என கட்டியம் கூற, சட்டென்று உள்ளுக்குள் ஒரு பதட்டம். கைகள் சில்லிட, உடல் கூட லேசாக நடுங்கத் தொடங்கியது பெண்ணுக்கு.
தன் அருகில் இருந்த அனு இறங்கி, “நாகம்மை நீயும் தம்பியும் இறங்கி வந்து ஒன்னா நில்லுங்க, நான் உள்ள போய் ஆரத்தி எடுத்துட்டு வந்துடுறேன்.” என சற்றே தன்மையாகச் சொல்ல, அந்த கரிசனையில் நாகம்மையின் தலை தன்னால் ஆடியது.
தங்கையையும் பாட்டியையும் எழுப்பிவிட்டு முன்னால் பார்க்க, அங்கிருந்த ஆண்கள் இருவரையும் காணவில்லை. பெண்கள் மூவரும் இறங்கி நிற்க, ஷ்யாம் விடுவிடுவென நடந்து போவதும், சபரி அவனைத் தடுப்பதும் தெரிந்தது.
“தம்பி நில்லுங்க, ஆரத்தி எடுக்காம உள்ள போகக் கூடாது.” என வாசலை மறைத்து நின்று சொல்ல,
“இந்த கல்யாணத்துக்கு அது ஒன்னுதான் குறை.” என வெடுக்கென்று சொல்லிவிட்டு உள்ளே போனவன், நேராகத் தன் அறைக்கும் போய்விட்டான்.
அவன் சொன்னதைக் கேட்ட நாகம்மையின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது. தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டாள்.
காயத்ரிதான் கோபம் கொப்பளிக்க அனுவைக் கேள்வியாகப் பார்த்தாள். காயத்ரியின் பார்வைக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிய மனைவிக்கு உதவிக்கு வந்தான் சபரி.
“அது அவனுக்கு டயர்ட், அதுதான் போயிட்டான். நீங்களும் போங்க ரெஸ்ட் எடுங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம். அனு நாகம்மைக்கு, ஷ்யாம் ரூமைக் காட்டு. இவங்களுக்கு கெஸ்ட் ரூமை காட்டு.” என வரிசையாகச் சொல்ல, அவளும் தலையை ஆட்டிவிட்டு, மூவரையும் அழைத்துக்கொண்டு கெஸ்ட் ரூம் நோக்கி நடந்தாள்.
ரூமில் விட்ட அனு, “நாகம்மை நீ இங்கேயே ஃப்ரஷாகி, வேற புடவை மாத்திக்கோ. நான் உங்களுக்கு குடிக்க பால் கொண்டு வரேன்.” எனவும், அதற்கும் அவள் தலை சரியென ஆடியது.
அனு வெளியேற தமக்கையின் கையைப் பிடித்த காயத்ரி, “க்கா, என்னக்கா? எப்படிக்கா? இங்க சமாளிச்சிடுவியா?” என்றவளின் குரலில் அத்தனை கலக்கம்.
பாட்டியும் கூட, “ஏன்த்தா, பேராண்டி உன் முகத்தைப் பார்த்து ஒரு வார்த்தைக் கூட பேசல, இப்போ கூட வான்னு ஒரு வார்த்தை சொல்லல. இங்க நீ எப்படி சமாளிப்ப? உன் அம்மாக்காரி ஏன் இப்படி புத்தி கெட்டு முடிவெடுத்தா?” என வருத்தமாகச் சொல்லி கலங்கிய கண்களைத் துடைத்துக்கொள்ள,
தனக்குள் இருக்கும் துக்கத்தை மொத்தமாக மறைத்து, மற்ற இருவருக்கும் ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டிய கட்டாயம் நாகம்மைக்கு. தன் முகத்தில் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையைக் கொண்டு வந்தவள். “அம்மு நீயே இப்படி கலங்கினா மத்தவங்களை நான் எப்படி சரி செய்ய முடியும்? வந்த முதல் நாளே நாம எதிர்பார்க்குறது எல்லாம் நடக்கணும்னு நினைக்கிறது தப்பில்லையா? என்னை மாதிரிதான அவருக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல, அதை அவர் வெளிப்படுத்துறார். நாம எப்படி அதை தப்புனு சொல்ல முடியும்?
அவரோட ஆசைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் நடக்காம போன கோபம், விரக்தில இப்படி கோபமா நடந்துக்குறார். போகப் போக சரியாகும். சரியாக்கிடுறேன், நான் பார்த்துக்குறேன் அம்மு. நீ இதையே நினைச்சு உன் படிப்புல கோட்டை விட்டுடாதே… எல்லாம் சரியாகும். நான் சரி பண்ணிக்குவேன்.” என மற்றவர்களுக்குச் சொல்லி, தனக்கும் தைரியம் சொல்லிக்கொண்டாள்.
“க்கா, என்னக்கா…?” என்றாள் காயத்ரி சலிப்பாக.
“விடுமா, அதெல்லாம் எம் பேத்தி சமாளிச்சிக்குவா. அவ குணத்துக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என நாகம்மையை நெட்டி முறித்தார்.
அதில் புன்னைகத்தவள், “சரி நான் முதல்ல குளிச்சிட்டு வந்துடுறேன், நீங்க சும்மா கை, கால் மட்டும் கழுவுங்க. தண்ணி சேராம போயிடப் போகுது.” எனச் சொல்லி குளித்து, ஒரு சாதாரண காட்டன் புடவையைக் கட்டிக்கொண்டு அமரவும், அனு பாலுடன் வரவும் சரியாக இருந்தது.
மூவரிடமும் பாலைக் குடித்து குடிக்க வைத்தாள். நாகம்மை மறுத்தும் விடவில்லை. ஷ்யாம் அறைக்குச் சென்றதும், அவனுக்கு இருக்கும் கோபத்தில் எப்படியெல்லாம் கோபப்படுத்துவானோ எதுவும் தெரியாது. அதையெல்லாம் தாங்க சற்றேனும் தெம்பு வேண்டும் என்று நினைத்துதான் பாலைக் குடிக்க வைத்தாள். ஷ்யாமிற்கான பாலைக் கொடுத்து அவனது அறை வாயிலுக்கும் கொண்டு வந்து விட்டுவிட்டாள்.
அதுவரை அடுத்தவர்களுக்குத் தைரியம் சொன்னவள் இப்போது மொத்தமாக நடுங்கிப் போயிருந்தாள். கைகளிரண்டும் சில்லிட்டுப் போயிருக்க, அனுவின் கையைப் பிடித்து, “அக்கா…” என பரிதாபமாக அழைக்க,
அதுவரை வீட்டின் மூத்த மருமகளாக ஒரு கடமைக்காக செய்து கொண்டிருந்த செயலை, நாகம்மையின் ஒற்றை வார்த்தை புரட்டி போட்டது.
நாகம்மையின் கையை கரிசனமாக அழுத்தி விட்டவள், “நீதான்டா சமாளிக்கணும், தைரியமா போ, ஷ்யாம் ரொம்ப கோபக்காரர். ஆனா ரொம்ப நல்லவர். அவருக்கு அத்தையோட குணம் அவ்வளவுதான். அந்த குணம் அப்பப்ப தலை தூக்கும். மத்தபடி அவரை மாதிரி ஒரு நல்லவரைப் பார்க்கவே முடியாது. கோபத்துல நாலு வார்த்தை பேசுவார், மனசுல வச்சுக்காத. அப்புறம் வருத்தப்பட்டு அவரே மன்னிப்பும் கேட்பார்.” என பல தைரியங்களைச் சொல்லி அனுப்பிவிட்டாள்.
எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினாலும், பயம் அந்த உணர்வு அது அப்படியேதான் இருந்தது. கதவைத் திறந்து உள்ளே வந்தவளின் பார்வையில் விழுந்தது கட்டிலில் சாய்ந்தமர்ந்தபடி இவளையேப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம்தான். அவன் கண்களில் தெரிந்த சிவப்பின் அளவே அவன் கோபத்தை எடுத்துச் சொல்ல, இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காற்றில் கரைந்துவிட்டது.
கைகள் இப்போது வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்க, அவளது இதயத்தின் ஓசை அவளுக்கே கேட்கும் போல் இருந்தது. அப்போது “கதவைத் தாழ் போட யாராவது வரணுமா மகாராணிக்கு?” என நக்கலாக வந்த குரலில் திடுக்கிட்டு நிமிர, நடுங்கிக் கொண்டிருந்த கையில் இருந்த பால் டம்ளர் தவறி விழ, மொத்தப் பாலும் அந்த இடத்தில் கொட்டி சிதறியது.
அதைக் கண்டவன், “ஷிட்! அறிவில்ல உனக்கு? உன் கவனத்தை எங்க வச்சிருக்க? இடியட்! ஒரு பால் டம்ளர் கொண்டு வரக்கூட தெரியாதா? பட்டிக்காடு… பட்டிக்காடு… ஃபர்ஸ்ட் க்ளீன் பண்ணு.” என கடுகடுவெனக் கத்த, அந்தக் கத்தலில் எப்படி என்ன செய்வது என தெரியாமல திணறி சுற்று முற்றும் பார்க்க,
“வாஷ் ரூம் அங்க இருக்கு.” என இடத்தைக் காட்டி பல்லைக் கடிக்க, வேக வேகமாக அங்கே சென்றவள் மாப்பும் பக்கெட்டில் தண்ணியுமாக வந்து, அவசர அவசரமாக அந்த இடத்தைச் சுத்தம் செய்து முடித்து நிமிர,
“பெரிய பணக்காரப் புருஷன், வேலை செய்ய பத்து ஆளு இருப்பாங்க. நீ அப்படியே சொகுசா இருக்கலாம்னுதான என்னைப் பிடிக்கலனாலும் இந்த கல்யாணத்துக்கு சரினு சொன்ன. ஆனா அது மட்டும் என்கிட்ட நடக்காது. என்னைப் பொறுத்தவரைக்கும் நீ இந்த வீட்டுக்கு மருமகளா இருந்தாலும் எனக்கு நீ யாருமே இல்ல.” என வன்மமாகப் பேசப்பேச, விழிகள் அதிர்ச்சியில் விரிய விரிந்த விழிகளில் இருந்து நீர் பொலபொலவெனக் கொட்டியது.
கொட்டிய விழிநீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் அவனையேப் பார்க்க, “எனக்கும் சில ஆசைகள் இருந்தது. என்னுடைய மனைவியா வரப்போறவளுக்கு சில தகுதிகள் இருக்கணும்னு நினைச்சேன். அது எதுவுமே இல்லைனு ஆகிடுச்சு. என்னோட தகுதி என்னனு தெரியுமா? ஆஃப்ட்ரால் நீ ஒரு பட்டிக்காடு, உனக்கு நான்… இந்த ஷ்யாம் வேணுமா?” என மேலும் மேலும் அவளைக் காயப்படுத்த, இதயத்தில் வடியும் குருதியை மறைத்துக் கொண்டவளால் அவன் கேட்ட எதற்குமே பதில் சொல்ல முடியவில்லை.
யார் மேலோ இருக்கும் ஆதங்கமும் கோபமும்தான் இப்படி தன்மேல் விழுகிறது என அவளது அனுபவ அறிவு உணர்த்த, வந்த அழுகையும் கூட நின்றது.
“இன்னும் த்ரீ டேய்ஸ்… மம்மி வந்ததும் நான் கிளம்பிடுவேன், அடுத்து ஆறு மாசத்துக்கு உன் மூஞ்சில முழிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. உனக்கு இங்க இருக்க விருப்பம் இருந்தா இரு, இல்லைனா உன்னோட பட்டிக்காட்டுக்கு பொட்டியைக் கட்டிட்டு போயிடு. நான் நிம்மதியா இருப்பேன்.” என்றவன் பீரோவை திறந்து ஒரு பத்திரத்தை எடுத்து அதிர்ந்து நின்றிருந்தவளின் முன்னே போட்டான்.
“இது டிவோர்ஸ் பேப்பர். மியுச்சுவலா பிரியுறோம்னு இருக்கு. இதுல நான் சைன் பண்ணிருக்கேன். உனக்கு எப்போ விருப்பமோ அப்போ சைன் பண்ணிக்கொடு. அதுவரை உன்கிட்டயே வச்சுக்கோ.” என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகக் கொடுத்தவன், “லைட் ஆஃப் பண்ணு, நான் தூங்கணும்.” என அதிகாரமாகச் சொல்ல,
அந்த அறையில் எது எங்கிருக்கிறது என்று கூட தெரியாதவள் இப்போதும் விழிக்க, மீண்டும் தன் உக்கிரப் பார்வையை அவளை நோக்கி கொடுத்தவன், லைட்டை ஆஃப் செய்துவிட்டு படுத்துவிட்டான்.
அறைக்குள் நுழைந்த அரை மணி நேரத்தில், தன் வாழ்க்கையில் என்ன என்னவோ நடந்து விட்டது. அவனுக்குத் தன்னைப் பிடிக்காது என்பதை ஓரளவுக்கு யூகித்திருந்தாள்தான். ஆனால் இந்தளவிற்கு கோபமும் வன்மமும் இருக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை.
திருமணம் முடிந்த அன்றே மணவிலக்குப் பத்திரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரே பெண் தானாகத்தான் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டாள். ஒரே நாளில் தன் வாழ்க்கை சூனியமாகிவிட்ட உணர்வு. இதைப்பற்றி யாரிடமும் பேச முடியாது.
அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தாள். வார்த்தைகள் உயிரை எடுக்குமா என்ன? எடுத்திருந்தது. அவளது ஆன்மாவை சிதைத்திருந்தது கணவனானவனின் வார்த்தைகள்.
மனம் ரண்மாக வலிக்க அப்படியேத் தரையில் அமர்ந்தவள், தன் வாழ்க்கை எப்படி போகும், யாரிடம் சொல்லி அழ, அழக்கூட திராணியின்றி இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் நாகம்மை.
இங்கு சபரியின் அறையில், “என்னங்க அந்த பொண்ணப் பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சுங்க, உங்க தம்பி இருக்குற கோபத்தை எல்லாம் அவக்கிட்ட காட்டினா அவ தாங்குவாளா? பார்த்தா ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருக்கு. ரூமுக்கு கொண்டு போய் விடவும் அக்கானு பயந்துட்டு என் கையைப் பிடிச்சிக்கிட்டா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.” என மிகவும் வருத்தமாக கணவனிடம் அனு சொல்லிக் கொண்டிருக்க, சபரிக்கும் அதே எண்ணம்தான்.
“ஆமா அனு, எனக்கும் ரொம்ப வருத்தமாதான் இருக்கு. இந்த அப்பா ஏன் இப்படி பண்ணாரோ தெரியல. அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருந்தா இவ்வளவு பிரச்சனை இல்லை. அம்மாவுக்கும் சுத்தமா பிடிக்கல, அவனுக்கும் பிடிக்கல. அந்த பொண்ணு எப்படி மேனேஜ் பண்ணி இங்க இருக்குமோ தெரியல.” என சபரியும் சொல்ல,
“ஆமாங்க, அத்தை வந்தபிறகு என்ன நடக்குமோனு நினைக்கும் போதே எனக்கு பயமா இருக்கு. நாகம்மைக்கிட்ட ரெண்டு வார்த்தை சாதாரனமா பேசினாக்கூட திட்டுறாங்க, என்ன செய்ய?” எனவும்,
“நீ அப்படியெல்லாம் இருக்காத அனு, அவங்களுக்கு மரியாதைக் கொடுத்தா போதும் பயப்படணும்னு எந்த அவசியமும் இல்ல. தப்பு செஞ்சாதான் பயப்படணும். நீயும் நாகம்மையும் இந்த வீட்டுல கடைசி வரை இருக்கப் போறவங்க, நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருந்தாதான் எல்லாருக்கும் நல்லது. அம்மா கோபம் குறையிற வரை இப்படி இருப்பாங்க, அப்புறம் உங்கிட்ட நடந்துக்குற மாதிரி அவக்கிட்டயும் நடந்துப்பாங்க.
அம்மாவுக்கு பயந்து நீ ஒதுக்கி வைக்காத, அம்மா வரதுக்குள்ள அவளுக்கு ஓரளவுக்கு இந்த வீட்டை பழக்கிவிட்டுடு. அப்புறம் நாம காலேஜ் போயிட்டா அவளுக்கு தனியா இருக்க கஷ்டமா இருக்கும்.” என சபரியும் சொல்ல,
“நானும் அதுதான் நினைச்சேங்க, அத்தை வந்து என்ன சொல்லுவாங்களோ? அதுக்கு முன்னாடி இங்க இருக்குற பழக்க வழக்கத்தை நான் சொல்லிடுறேன். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றவள் லைட்டை அணைக்க,
“அனு நெக்ஸ்ட் வீக் டாக்டர்கிட்ட போகணும்ல, அம்மாக்கிட்ட சொல்லிட்டியா?” சபரி கேட்க, “ம்ம்… சொல்லிட்டேன்.” என்றவளின் குரல் இப்போது தேய்ந்து போயிருந்தது.
மனைவியின் மனநிலை அறிந்தவன், “அனும்மா…” என அவளைத் தன் பக்கம் திருப்ப,
“நமக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும்தான? நான் ஒன்னும் மலடி இல்லைதான?” என கணவனின் மார்பில் விழுந்து தேம்பி தேம்பி அழ,
“அனு, என்னடா இப்படியெல்லாம் பேசுற? பத்து வருஷம், பதினைஞ்சு வருஷம் கழிச்செல்லாம் குழந்தை பிறக்குது. நமக்கு மூணு வருஷம் தான்டா ஆகுது. கண்டிப்பா குழந்தை பிறக்கும். நீ இப்படியெல்லாம் யோசிச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காத, எல்லாம் சரியாகும்.” என பலதையும் சொல்லி ஒருவாறாக அவளைத் தேற்றி, உறங்க வைத்தவனுக்கு மனைவியை நினைத்து மனதெல்லாம் பாரம்.
1 comment
அடேயப்பா..! ரொம்பத்தான் மிரட்டுறான், இதே கோபத்தை அவங்கப்பா கிட்ட காட்ட வேண்டியது தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797