அத்தியாயம் – 04
விடியலை வரவேற்று வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்த கானப் பறவைகளின் கூச்சலோடு, தன் முகத்தை மெல்ல மெல்லக் காட்டி செங்காலை பொழுதினை பரப்பிக் கொண்டிருந்தது இளஞ்சூரியன். அன்றைய நாள் விடியலில் வழக்கம்போல் விழித்த நாகம்மைக்கு உடலெல்லாம் அடித்துப் போட்டார் போலொரு வலி.
திருமணத்திற்கு முன்பே உண்டான மன உளைச்சல் காரணமாக இரண்டு இரவுகள் உறக்கமில்லாமல் கழிய, அடுத்து திருமண அசதி, அதைத் தொடர்ந்து நீண்ட பயணம், அதோடு நேற்றிரவு கணவன் வலிக்க வலிக்க கொடுத்த மன வலி, அப்படியே அமர்ந்த வாக்கிலேயே உறங்கியது என எல்லாம் சேர்ந்து, அவளுக்கு அப்படியொரு உடல் வலி. ஆனால் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ள முடியாதே!
தட்டுத் தடுமாறி ஒருவாறு எழுந்தவள் குளியலறை சென்று தன்னைச் சுத்தப் படுத்திக்கொண்டு மணியைப் பார்க்க, அந்த கடிகாரம் தன் கடமை தவறாத நகர்தலின் மூலம் மணி ஐந்தென்று காட்டிக் கொண்டிருந்தது. அறையை விட்டு வெளியில் வந்தவளுக்கு அங்கு நிலவிய அமைதியே இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை என்று எடுத்துச் சொல்ல, கெஸ்ட் ரூம் சென்றவள் உறங்கும் பாட்டியையும் தங்கையையும் பார்த்துவிட்டு, குளித்து புடவையை மாற்றி பூஜையறைக்குள் நுழைந்தாள்.
கைகளைக் கூப்பி அங்கு வீற்றிருந்த நாகம்மையின் படத்தை அமைதியாகப் பார்த்தாள். வெளியில் அமைதியாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் மனம் ஊமையாய் கதறிக் கொண்டிருந்ததை அவள் மட்டுமே அறிவாள். பெரிதாக எந்த வேண்டுதலையும் வைக்கவில்லை. ‘எனக்கு என்ன தர உனக்கு விருப்பமோ, அதையேக் கொடு.’ என்று மட்டும் சொல்லிக் கொண்டவள், தீபம் ஏற்றி, கற்பூரம் காட்டி அன்றைய நாளைத் துவங்கினாள்.
தன் வீட்டில் செய்யும் அன்றாட வேலைகளை மனதில் வைத்து தட்டு தடுமாறி ஒருவாறு வேலைகளை ஆரம்பித்தாள். ஆறு மணி வாக்கில் வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக வர, வந்தவர்களைப் பார்த்து புன்னகைத்து அவர்களிடம் பேச ஆரம்பித்திருந்தாள்.
“எம்மா நீ பார்க்க அமலா மாதிரி இருக்கமா.” என்ற வேலைக்காரி முத்தம்மாவிற்கு ஒரு புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
அதற்குள் பாட்டியும் காயத்ரியும் வந்துவிட, அவர்களுடன் நேரம் கொஞ்சம் இனிமையாக கழிந்தது. எல்லோருடனும் அனுசரனையாகப் பேசும் முத்தம்மாவைப் பாட்டிக்கு மிகவும் பிடித்துப்போனது.
“ஏம்மா காபி குடிச்சியா?” என்ற அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் புன்னகைக்க, “என்ன பொண்ணுமா நீ? முதல்ல அந்த காபி தண்ணிய குடி, குடிச்சிட்டு மத்த வேலையைப் பார்க்கலாம்.” என அன்பாக மிரட்டி கையில் காபி டம்ளரை திணித்த முத்தம்மாவை உடனே பிடித்துப்போனது நாகமைக்கு.
ஏனோ இந்த விடியல் அவளுக்கு சற்றுப் பிடித்துதான் போனது. மென் சிரிப்புடன் முத்தம்மாள் கொடுத்த காபியை துளி ரசித்து அருந்தி முடிக்கவும் அனு அங்கே வரவும் சரியாக இருந்தது.
அனுவைப் பார்த்ததும், “அக்கா!” என்றபடியே வர,
“எழுந்து குளிச்சிட்டியா நாகம்மை? நானே சொல்லணும்னு இருந்தேன். எப்போ எழுந்த? நைட் ட்ராவல் பண்ணது பயங்கர டயர்ட், அதுதான் நான் எழுந்துக்க லேட்டாக்கிடுச்சு.” என்றபடியே முத்தம்மா கொடுத்த காபியை வாங்கிக்கொள்ள,
“இல்லாட்டினாலும் நீ ஐஞ்சு மணிக்கு எந்திருச்சு, வாசல் தெளிச்சு, கோலம் போடுற குடும்ப குத்து விளக்குதான்…” என முத்தம்மா, அனுவை கிண்டல் செய்ய,
அனுவோ, “முத்து…” என பல்லைக் கடிக்க, “பின்ன என்ன அனும்மா, அதுவே இந்த வீட்டுக்குப் புதுசு, அதுக்கு முன்னாடி எழுந்து வர்றத விட்டுட்டு, இப்படி வந்து நியாயம் பேசுறியே?” அனுவின் தவறை சுட்டிக்காட்ட,
“அது நாகம்மை நேரமே எழுந்துப்பானு எனக்குத் தெரியாதுல, அதான்…” என முத்தம்மாளுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு நாகம்மையிடம் திரும்பி,
“சரி விடு நாகம்மை, நீ நல்லா தூங்கினியா? தம்பி எப்படி? உன்னை ஏதும் சொன்னாரா?” என கேட்க,
“ம்ம் க்கா… தூங்கினேன். யாரு வாசலெல்லாம் தெளிச்சு கோலம் போடுவாங்க?” என பேச்சை மாற்ற, அவள் பேச்சை மாற்றியது அனுவிற்கு புரியவில்லை. ஆனால் முத்தம்மாவிற்குப் புரிந்தது, அவர் முகத்தில் கவலையின் சாயல்.
“அதெல்லாம் நாம செய்ய வேண்டாம் நாகம்மை, அதுக்கு ஆளுங்க இருக்காங்க. மாமாவுக்கு நம்ம வீட்டு ஆளுங்க செஞ்சா ரொம்ப சந்தோசப்படுவாங்க. ஆனா அத்தை அவங்களும் செய்ய மாட்டாங்க, நம்மளையும் செய்ய விடமாட்டாங்க.” எனவும்,
“ஏன்? இதுல என்ன இருக்கு? வீட்டுப் பொம்பளைங்க செஞ்சாதான் லட்சுமி நம்ம வீட்டுல தங்கும்னு எங்க அம்மா ஊர்ப்பக்கம் பேசுவாங்க. அது மாமாவுக்கும் தெரியும் போல, அதனாலகூட அப்படி நினைச்சிருக்கலாம்.” என நாகம்மை சொல்ல,
“இதெல்லாம் எனக்குத் தெரியாது நாகம்மை, அது நம்ம யாராவது செய்து மாமாக்கிட்ட நல்ல பெயர் வாங்கிட்டா அத்தைக்குப் பிடிக்காது.” எனவும்,
“ஆமாம் ம்மா, லலிதாம்மா அப்படித்தான். ஆனா அதுக்காக எல்லாம் நீ சும்மா இருக்காத, நாளையில் இருந்து நீயே செய். கிராமத்துப் பழக்க வழக்கம் மாத்தாத.” என முத்தமாவும் சொல்ல, நாகம்மையும் சரியென்று தலையாட்டினாள்.
பிறகு இருவருக்கும் காபியை கொடுத்து அவரவர் கணவன்மார்களுக்கு கொடுக்கச் சொல்ல, அனு வாங்கிக் கொண்டு நகர, நாகம்மையோ, “அது வந்து முத்தம்மா, பாட்டியும் காயத்ரியும் இருக்காங்க. அவங்களுக்கு முதல்ல கொடுத்துட்டு வந்துடுறேனே…” என தங்கள் அறைக்குச் சென்று அவனைப் பார்க்கும் சமயத்தைத் தவிர்க்கப் பார்க்க,
“இது ஒரு பிரச்சனையா? அவங்களுக்கு நான் கொடுக்கிறேன், நீ உன் புருசனுக்கு கொடுத்துட்டு வா.” என்று கட்டாயப்படுத்தி சொல்லி அனுப்பிவிட, வேறு வழியில்லாமல் காபியை வாங்கிக்கொண்டு தன் அறை நோக்கி நகர்ந்தாள்.
இங்கு கோவிலில் தம்பதி சகிதமாக பரந்தாமனும் லலிதாவும் அமர்ந்திருக்க, மண்டல பூஜைகள் ஆரம்பமாகியது. பூஜையில் அமர்ந்திருந்தாலும் லிலதாவின் மனம் முழுவதும் தன் வீட்டில்தான். எப்படியும் மகன் இன்றைக்குத் தன் வாழ்க்கையை ஆரம்பித்திருக்க மாட்டான் என்று அவருக்கு உறுதி. ஆனால் ஒரு நாள் போல் மற்ற நாட்களும் இருக்காதே? மகனுக்குப் பிடிக்கவில்லை என்பது மகிழ்ச்சி அளித்தாலும், தன் வாழ்க்கையில் மனைவி என்றால் அது இவள் ஒருத்திதான் என்று மகன் சொன்னதுதான் பக்கென்று இருந்தது.
அவளுடன் இப்போது வாழவில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் வாழ்ந்து விடலாம் என அவன் யோசித்துவிட்டால்? அதற்குள் இருவருக்கும் இடைவெளியை ஏற்படுத்தி விடவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
காலையிலேயே அனுவிற்கு அழைத்து கேட்க, அவளோ அவரது எண்ணம் புரிந்து நடந்ததை சொல்லிவிட, அப்போதுதான் அவருக்கு நிம்மதியே வந்தது. இன்னும் இரண்டே நாட்கள்… அதற்குப் பிறகு ஊருக்குப் போய் மற்றதைப் பார்த்துக்கொள்ளலாம் என ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
காபியோடு அறைக்குள் வந்தவள் அவன் அங்கு இல்லாததை உணர்ந்து, ஒரு ஆசுவாசப் பெருமூச்சை விட்டு எங்கே என சுற்றிலும் பார்க்க, “இன்னைக்கு இருந்து இங்க ஜாயின் பண்ணிட்டியா?” என்ற திடீர் குரலில் அதிர்ந்தாலும், நேற்றிரவு போல் பயந்து அந்த டம்ளரை தவறவிடாமல் இறுக்கிப் பிடித்துக்கொண்டே குரல் வந்த பக்கம் திரும்பினாள்.
அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்க்க, “இல்ல, வேலைக்காரியா இன்னைல இருந்து எங்க வீட்டுல ஜாயின் பண்ணிட்டியானு கேட்டேன்.” நக்கல் பொதிந்த சொல்லம்புகளை சரியாக அவளைப் பார்த்து வீசினான், ஒரு ஏளனப் புன்னகையுடன்.
அவனது வார்த்தைகள் கூர் அம்பு போல இதயத்தைக் குத்தி கிழித்தாலும் அந்த வலியை வெளிக்காட்டாமல், “அது… அது வந்து… முத்துமாதான் கொடுத்து விட்டாங்க.” எனத் திக்கித் திணறியபடி சொல்ல,
அவளது, ‘முத்துமா’வில் புருவத்தை ஏற்றி இறக்கியவன் காபியை வாங்கிக்கொண்டு, “வெல், உன்னோட முடிவு என்ன? யோசிச்சுப் பார்த்தியா?” என விடாமல் அவளைக் கேட்டு நோகடிக்க, என்ன சொல்வது அவனிடம்? வந்த முதல் நாளே எத்தனை வலிகளைத்தான் தாங்குவாள்.
எதற்காக அழுவாள், என்ன பேசுவாள்? மணமான நாளே மணவிலக்குப் பற்றி பேசினால் அந்த பெண்ணின் மனதில் எப்படியான ரணம் உண்டாகும்? அது அவனுக்குப் புரியவே இல்லையா? தன் மன வலிகளை விழிகளில் தேக்கி அவனைப் பார்த்து, ‘இல்லை’ எனும் விதமாகத் தலையசைக்க,
“அதனால் என்ன? இன்னும் ரெண்டு நாள் இருக்கு, யோசிச்சு சொல்லு.” என மேலும் அவளைக் காயப்படுத்திவிட்டு, காபியை அருந்த ஆரம்பிக்க, அதற்கு பிறகும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறி மீண்டும் கிச்சனுக்குள் தஞ்சம் புகுந்தாள்.
அதற்குள் பாட்டியும் காயத்திரியும் வந்துவிட அவர்களுடன் நேரம் கொஞ்சம் இனிமையாக போனது.
காலை உணவுக்காக எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, வெளியில் செல்வது போல கிளம்பி வந்தான் ஷ்யாம். அப்போதுதான் வந்த சபரி, தம்பியைக் கேள்வியாகப் பார்க்க, “நான் கொஞ்சம் வெளியே போகணும், நயனாவுக்கு பர்த்டே. இன்னைக்கு அவகூட இருக்கிறேன்னு ஆல்ரெடி ப்ளான்.” என்றுவிட்டு யாரையும் பார்க்காமல் சென்றுவிட, இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் நாகம்மை கிச்சனுக்குள் நுழைய, முத்தம்மாவிற்கும் சபரிக்கும் அனுவிற்கும் முகமெல்லாம் வியர்த்துப் போனது.
கேள்வியாகப் பார்த்த காயத்ரியை, “அது தம்பியோட ஃப்ரண்ட். யுஎஸ்ல இருந்து வந்திருக்கு. கல்யாணம் ஆன பொண்ணுதான். அதைப் பார்க்க போறார்.” என பதட்டத்தில் உளற,
எல்லாரின் முக பாவனைகளையும் கவனித்த பாட்டிக்கு என்ன புரிந்ததோ, “அதனால என்ன பேத்தி, பட்டணத்துல இதெல்லாம் சகஜம் தான? நாங்க என்ன தப்பாவா நினைக்க போறோம். நீங்க வெசனப்பட வேண்டாம். ஆகுற சோலியைப் பாருங்க.” என்று சாதாரணமாகப் பேசுவதைப் போல சொல்ல, அப்போதுதான் மற்ற மூவருக்குமே மூச்சு சீரானது.
என்னதான் மற்றவர்களுக்காகப் பேசினாலும் பாட்டியின் மனதில் ஷ்யாமைப் பற்றி சந்தேகத்திற்கான முதல் விதை மிகவும் ஆழமாக விழுந்து விட்டது என்னவோ நிஜம். முத்தம்மா எல்லோரையும் சாப்பிட அழைக்க, சபரியும் கூட மூவரையும் வெளியில் அழைத்துச் செல்வதாக சொல்ல, பாட்டி வயதின் முதிர்வால் முடியாது என்றுவிட, நாகம்மைக்கு அதிலெல்லாம் பெரிதாக விருப்பம் இருக்கவில்லை. அதனால் அவளும் பாட்டியின் துணைக்கென்று வீட்டில் இருந்துவிட, அனுதான் காயத்ரியை மட்டும் அழைத்துக்கொண்டு கணவனோடு கிளம்பிவிட்டாள்.
எல்லோரும் கிளம்பியதும் முத்தம்மா, நாகம்மையை சற்று நேரம் உறங்கச் சொல்ல, அவளுக்கும் கண்டிப்பாக அந்த உறக்கம் தேவையாகப்பட வேண்டாம், இல்லை என்று எந்த வார்த்தைகளையும் உதிர்க்காமல், பாட்டி இருந்த அறையிலேயே படுத்து உறங்கிவிட்டாள்.
பெரியவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வருத்தமாகப் பார்த்துக்கொள்ள முத்தம்மாதான், “இப்போதான கல்யாணம் ஆகிருக்கு, போகபோக எல்லாம் சரியாகிடும் ஆத்தா.” என ஆறுதலாகச் சொல்ல,
பாட்டியோ, “அவங்கப்பன் இருந்த வரைக்கும் அவளை ராணி மாதிரி வளர்த்தான். அவன் போன பொறகு கஷ்டத்தை தவிர ஒன்னையும் பார்த்ததில்ல தாயி. பெத்தவதான்னு பேரு, ஆனா இவதான் எல்லாத்துக்கும் பெத்தவ மாதிரி நடந்துக்கிட்டா. படிச்ச படிப்ப பாதில விட்டுட்டு, வயக்காட்ட இழுத்துக் கட்டி மேல வந்தா. அவளுக்குனு ஒரு சந்தோசமும் இல்லத்தா. இதுதான் வேணும்னு வாய் திறந்து கேட்காமாட்டா. போற இடத்துலயாச்சும் நல்லா இருக்கணும்னுதான் எம்மருமவ, எம் பேரனுக்கும் கொடுக்காம இங்க கொடுத்துருக்கா. இங்க அவ நல்லா இருக்கணும்த்தா.” என மிகவும் வருத்தமான குரலில், கண்கள் பணிக்க சொல்ல,
முத்தம்மாவோ, “அதெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருப்பாத்தா, நீங்க வெசனப்படாதீங்க. இங்க லலிதா கொஞ்சம் பகட்டா பேசுமே ஒழிய, அதுக்கும் நல்ல குணம்தான். எங்க அத்தை பொண்ணுதான் லலிதா. என் புருஷன் செத்து, எம் பிள்ளைங்க என்னை தெருவுல விட்டப்போ பரந்தாமன் தம்பியும் லலிதாவும்தான் என்னை இங்க அழைச்சிட்டு வந்தாங்க.
நான் இங்க வந்து பதினைஞ்சு வருஷம் ஆச்சு, அப்போ இருந்து இங்கதான். வீட்டு வேலையில இருந்து மேற்பார்வை வரை நான்தான். லலிதாவுக்கு அதுக்கெல்லாம் நேரம் இருக்காது. அவ லேடிஸ் கிளப், ரோட்டரி கிளப்னு சுத்திட்டு இருப்பா. நான் வந்த பிறகு பிள்ளைங்க மூணும் என் வளர்ப்புதான். சபரியும் சவியும் அப்படியே ஒட்டிக்கிட்டாங்க. இந்த ஷ்யாம் பையன் ஒட்டுறதுக்கு ரொம்ப நாளாச்சு. கொஞ்சம் லலிதா மாதிரி பகட்டுதான், ஆனா நல்லவன்தான். சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” என நம்பிக்கையாகப் பேச, அன்று இரவே அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கப் போகிறான் என்பதை அறியாமல்.
1 comment
Super Super, Super
😀😀😀
CRVS (or) CRVS 2797