Home Antiheroகாதலி – 05

அத்தியாயம் – 05

ஷ்யாம், ‘நயனா’ என்றதும் வீட்டில் இருந்தவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பற்றியே தனிமையில் யோசித்துக் கொண்டிருந்தாள் நாகம்மை. என்ன மறைக்கிறார்கள், ஏன் மறைக்கிறார்கள்? அவர்களது அந்த அதிர்ச்சியே அதை தன்னிடம் சொல்ல மாட்டார்கள் என்று புரிய வைத்தது அவளுக்கு. ஒருவேளை அவரது முன்னாள் காதலியாக இருக்குமோ? என்ற யோசனை வர, அதை யோசிக்க, யோசிக்க மூளை சூடாகிப் போனது நாகம்மைக்கு.

ஆனாலும் பெரிதாக அதை வெளிக்காட்டவில்லை அவள். சிறிது நேரம் உடலை நீட்டி தூங்கி எழவும், உடலோடு சேர்ந்து மனமும் சற்று புத்துணர்ச்சியானது போல் இருந்தது. அது கொடுத்த தெளிவுடன் முகம் கழுவி வந்தவளை வரவேற்றது ஹாலில் இருந்த முத்தம்மாவும் பாட்டியும்தான்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

ஒப்பனை என்று எதுவுமில்லாமல் தெளிந்த முகத்துடன் சிறு புன்னகையுடன் வந்தவளை, முதலில் கவனித்த முத்தம்மாவிற்கு மனது நிறைந்து போனது. வந்த நேரம் முதல் அவள் முகத்தில் மருந்திற்கேனும் கூட சிறு புன்னகை என்று ஒன்று உதயமாகவே இல்லை. இப்போது சிரித்த முகமாக அவளைப் பார்க்கவும் அவர் முகமும் மலர, “வாம்மா, நல்லா தூங்குனியா? கொஞ்ச நேரத்துல நீ எழும்பலனா நானே வந்து உன்னை எழுப்பலாம்னு இருந்தேன். சாப்பிடுற நேரம் கூட தாண்டிட்டு பாரு…” என வாஞ்சையாக சொல்ல,

“பரவாயில்ல முத்தும்மா, பசி எடுக்கல. அப்பத்தா சாப்பிட்டாங்களா?” எனக் கேட்க,

“நாங்க ரெண்டு பேருமே சாப்பிட்டோம் ஆத்தா, நீ போய் வயித்துக்கு போட்டுட்டு வா. தலைக்கு எண்ணெய் வச்சு விடுறேன், சூட்டுக்கு நல்லா இருக்கும். பாரு கண்ணெல்லாம் செவந்து கெடக்கு.” என அப்பத்தா சொல்ல,

“சரி அப்பத்தா.” என்றவள், தனக்கு தேவையான அளவு சாப்பிட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து வர, முத்தம்மா கையில் காய்ச்சிய எண்ணெயுடன் வந்து நின்றார்.

சோபாவில் அமர்ந்திருந்த அப்பத்தாவின் கால்களுக்கு இடையில் அமர வைத்து, இளஞ்சூடாக இருந்த எண்ணெயை ஊற்றி அப்படியே மசாஜ் போல தேய்த்துக் கொடுக்க, அப்படியே கண்கள் சொக்கியது நாகம்மைக்கு. எண்ணெய் தேய்த்து முடித்து கொண்டையைப் போடவும்,

“ஆத்தா நீங்க கொஞ்சம் படுங்க, நான் புள்ளைக்கு வெளிய எல்லாம் சுத்திக்காட்டிட்டு வர்றேன்.” என அவரை அறையில் படுக்க வைத்துவிட்டு, “வா நாகம்மை, வெளிய இருக்குற தோட்டத்தைப் பார்க்கலாம். உனக்கு இந்த இடமெல்லாம் ரொம்ப பிடிக்குமே…” என அவளையும் அழைத்துக்கொண்டு செல்லவும், அவளுக்கும் அது சரியெனப்பட அவருடன் சென்றாள்.

அங்கிருந்த தோட்டத்தைப் பார்த்தவளுக்கு கண்களில் ஒரு மெச்சுதல் வந்து சேர்ந்தது. வீட்டின் முன்னால் ஒருபுறம் அழகுக்கென பூக்கள் இருந்தாலும், மறுபுறம் மூலிகைச் செடிகள் இருக்க, மற்றொரு புறம் பந்தலிட்டு பீர்க்கை, பாகற்காய், புடலை, பூசணி என இருக்க, பின்புறம் கீரைப் பாத்திகளும், மற்ற காய்கறிகளும் என பார்க்கவே அத்தனை ரம்மியமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது அந்தக் குட்டித் தோட்டம்.

விழியெடுக்காமல் பார்த்த நாகம்மையைப் பார்த்துச் சிரிப்பு வந்தது முத்தம்மாவிற்கு. “என்ன நாகம்மை அப்படியே நின்னுட்ட?” என சிரிப்புடன் கேட்டார் அவர்.

“முத்தும்மா, நிஜமாவே இதை நான் எதிர்பார்க்கவே இல்ல. பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோசமா இருக்கு. யார் இதெல்லாம் பார்த்துக்கிறது? தோட்டத்தைப் பார்த்தா தினமும் இதை மேற்பார்வைப் பார்க்க ஆள் இருக்கும் போலயே?” என ஆச்சரியமாகக் கேட்க,

“உன் மாமனாருக்கு வேற என்ன வேலை? ரிட்டையர்ட் ஆனதும் இந்த வேலையைத்தான் ஆரம்பிச்சார். அவரோட உழைப்புதான் இந்த சின்னத் தோட்டம். இன்னும் கொஞ்சம் பின்னாடி தள்ளி மாமரம், கொய்யா, வாழை, சப்போட்டா, முருங்கை, தேக்குனு மர வகையும் இருக்கு. அதெல்லாம் இப்பதான் வச்சோம். மூணு வருஷம்தான் ஆகுது.” என விளக்க,

“உண்மையிலேயே மாமா ரொம்ப க்ரேட்தான் முத்தும்மா. இன்னும் அவருக்குள்ளயும் ஒரு விவசாயி இருந்திருக்கார் பாருங்களேன்!” என ஆச்சரியமாகச் சொல்லியபடியே, கீரைக்கு நடுவில் இருந்த களைகளைப் பறிக்க ஆரம்பித்தாள் நாகம்மை.

“சரிதான், இனி மாமனாருக்கும் மருமகளுக்கும் இந்த தோட்டம் போதும்.” என சிரித்தவர், “நான் பூ பறிக்குற வரை மட்டும் களையை பிடுங்கினா போதும். போய் தலைக்கு ஊத்திட்டு சாமிக்கு விளக்கேத்து.” என்றபடியே படர்ந்திருந்த ஜாதி முல்லை மொட்டுக்களைப் பறிக்க ஆரம்பித்தார் முத்தம்மா.

நாகம்மையின் முகத்தில் தெரிந்த மகிழ்விலும் தெளிவிலும், இனி அவள் சமாளித்துக்கொள்வாள் என்ற எண்ணம் வலுப்பெற்றது அந்த அன்பான பெண்மணிக்கு.

இங்கு பீச்சிற்கு வந்த காயத்ரியோ எதிலும் ஒட்டாமல் அமைதியாக ஆர்ப்பரிக்கும் கடலலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனுவும் சபரியும் அவளை இழுத்து வைத்துப் பேசினாலும், கேட்டதற்கு பதில் சொன்னவள் மீண்டும் அமைதியாகிவிட, அனுவிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. அவளின் அமைதியை கலைத்தே ஆகவேண்டும் என்று உறுதி கொண்டவள், விடாமல் தன்னைப்பற்றி தன் குடும்பம், காதல், திருமணம் என எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் காயத்ரியும் தன்னைப்பற்றி, தன் குடும்பம் பற்றி சொல்ல கேட்ட இருவருக்கும் வருத்தமாகப் போய்விட்டது.

ஷ்யாமை நினைத்து, நாகம்மையின் வாழ்க்கை இனி எப்படி இருக்குமோ என்ற பயம்கூட வந்துவிட்டது இருவருக்கும். ஆனால் இத்தனை பேர் வீட்டில் இருக்க அப்படி என்ன செய்துவிடப் போகிறான் என்ற தைரியமும் இருந்தது. அதனால் காயத்ரியைப் பார்த்து சமாதானமாக பேசி, வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போதாவது அவர்கள் நயனாவைப் பற்றி சொல்லிருந்தால் காயத்ரியும் தமக்கையிடம் சூசகமாகப் பிரச்சனையை சொல்லிவிட்டு சென்றிருப்பாள். அங்கு விதி சதி செய்ததோ? நாகம்மையின் வாழ்க்கையைப் பார்த்து கெக்கலித்து நகைத்தது அந்த விதி.

“ஷ்யாம் இன்னும் என்ன கோபம்?” என்று பரிதாபமாகக் கேட்ட நயனாவைப் பார்த்து பல்லைக் கடித்தான் ஷ்யாம்.

“என்ன கோபம்னு உனக்குத் தெரியாதா? ஏன் ட்ரீட்மென்ட் வேணாம்னு சொல்ற? உன் குழந்தை பத்தின அக்கறை துளியும் உனக்கு இல்லையா? உனக்குப் பிறகு அவனை யார் பார்ப்பா?” என கனல் தெறிக்கக் கேட்டவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை நயனா.

“நயனா வாட் த ஹெல்? நான் உங்கிட்டதான் பேசிட்டு இருக்கேன் டேமிட்!” என அமர்ந்திருந்த டேபிளில் ஓங்கிக் குத்த, அதிலேயே அவன் கோபம் புரிய, சுற்றிலும் பார்வையை ஓட்டி யாரும் தம்மை கவனிக்கிறார்களா என்று பார்த்தவள், யாரும் இல்லை என்றதும் ஒரு ஆசுவாச மூச்சை விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

பின், “ஷ்யாம் என் வாழ்க்கையை விட, என் பையனோட வாழ்க்கை எனக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும், புரியும். அவனுக்காக நான் எல்லாமே அரேஞ்ச் செஞ்சிட்டுதான் இருக்கேன். என் பேரன்ட்ஸ் இருக்காங்க, இன்னும் என்ன பயம் உனக்கு?” என விரக்தியாகப் பேசியவளின் பேச்சில் ரத்த ஓட்டம் எகிறியது.

“ஸ்டாப்பிட் இடியட்!” என்று மேலும் கத்தியவன், “நீ என்ன பெரிய தியாகியா? உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு நான் ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டுட்டு இருந்தா, நீ ரொம்ப சிம்பிளா லைஃபை முடிச்சிக்கலாம்னு ப்ளான் பண்ற?” என கேட்க,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ப்ளீஸ் ஷ்யாம், நோ ஆர்கியுமென்ட் ப்ளீஸ். ஆல்ரெடி இதைப்பத்தி நாம நிறைய பேசிட்டோம். அகைன் அதே தான்னா என்னால டாலரேட் பண்ண முடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ, உனக்கு மேரேஜ் ஆகி டூ டேஸ்தான் ஆகுது. உன்னையும் இதுல இழுத்து விட்டுட்டேனோனு நான் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். அதுவே என்னோட குற்ற உணர்ச்சியை அதிகமாக்குது. நீ உன் வொய்ஃப்பை நல்லா பார்த்துக்கோ ஷ்யாம். அதுதான் நீ எனக்கு செய்ற பெரிய ஹெல்ப்.” என்றவளைக் கையாலாகதத் தனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன்பிறகு இருவருக்கும் பெரிதான பேச்சுக்கள் இல்லை. அவளிடம் பேசிப்பேசி அவன்தான் தோற்றுப் போனான். பேசிப் பிரயோஜனம் இல்லை என்றதும், அவள் கைகளில் இருந்த பத்திரங்களை வாங்கி அதில் கையெழுத்திட்டு தன்னோடு வைத்துக்கொண்டான்.

“ஷ்யாம்…” என்ற நயனாவை, “என் வொய்ஃப் கிட்டயும் சைன் வாங்கணும்ல…” என்றவன் தலையைக் கோதி தன் கோபத்தையும், ஆற்றாமையையும் அடக்க முயன்று கொண்டிருந்தான்.

‘நயனா’ அவன் வாழ்வில் வந்த தேவதைப் பெண். தனக்கே தனக்கென கடவுள் அனுப்பி வைத்த பட்டாம்பூச்சி பெண் என்று அவன் கனவுலகில் சஞ்சரிக்க, அவளுக்கோ நிவின் மேல் காதல் காட்டாறாய் பொங்கியது. அவளின் காதல் புரிந்த நொடி தன்னையே வெறுத்தவன், தன் காதலை மறைத்து அவளுக்காக நண்பன் வேடமிட்டான். அனைத்தும் சரியாகவே சென்றது.

நயனாவின் காதல் எந்த எதிர்ப்புமின்றி திருமணத்தில் முடிய, நிவினும் நயனாவும் டெல்லியில் செட்டிலானார்கள். அவர்களது அழகான இல்லற வாழ்க்கைக்கு சாட்சியாக ப்ரனீத் வந்தான். இரு வீட்டிலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை. ப்ரனீத்தைக் காண வந்த நிவினின் பெற்றோர் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு கிளம்ப, அவர்களை வழியனுப்பவென சென்றவன் அதன்பிறகு சடலமாகத்தான் வீடு வந்து சேர்ந்தான், அவனோடு அவனது பெற்றோர்களும்.

தன் உலகே இருண்டு போன நிலையில் மொத்தமாக சுருண்டவளுக்குத் தோள் கொடுத்தான் தோழன் ஷ்யாம். அனைத்து ஃபார்மாலிடிஸும் முடிந்து மூவரின் சடலங்களுடன் சென்னை வந்தவன், அவனே முன்னே நின்று அனைத்தையும் நடத்தி முடித்திருந்தான்.

கையில் இரண்டு வயது மகனுடன் வாழ்க்கையைத் தொலைத்து நின்ற தன் காதலியை எண்ணி எண்ணி மனம் வெதும்பியிருக்க, மீண்டும் இடியாக வந்து விழுந்தது நயனாவிற்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதற்கான அலைபேசி செய்தி. ஷ்யாம் முரடனாக, முசுடாக மொத்தமாக உருமாறிப் போனது அதன்பிறகேதான்.

You may also like

1 comment

M. Sarathi Rio September 6, 2026 - 2:31 pm

SUPER,SUPER,SUPER,SUPER,SUPER

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured