Home Antiheroகாதலி – 07

அத்தியாயம் – 07

அறைக்குள் வந்த நாகம்மையோ, ஷ்யாம் வருவதற்காக நிற்க, வந்தவனோ கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவளையேத் தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே நின்றான். அவன் நின்ற தோரணையும் பார்த்த பார்வையும் அதுவரை அவளுக்குள் இருந்த சிறு தைரியத்தையும் பொசுக்கிவிட, என்ன பேசுவது என தெரியாமல் திணறிப் போனாள்.

சில நிமிடங்கள் அவன் அப்படியே நிற்க, பேச வேண்டும் என்று வந்தவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லாமல் இருக்க, அவனுக்குள் மீண்டும் கோபம் ஏற ஆரம்பித்தது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“தென்…” என்றபடியே அவளுக்கு முன்னே ஒரு எட்டு வைக்க ஆரம்பித்ததும், அந்த குரலில் இருந்த இறுக்கமும் அவன் முன்னேறிய விதமும் பயத்தைக் கொடுக்க வேகமாக நிமிர்ந்தவள், “நான் உங்களுக்கு எதாவது செய்யணுமா?” என்ற கேள்வியைத் தொடுக்க வைத்தது.

மனைவியின் அந்த கேள்வியில் அவனது புருவங்கள் வியப்பில் மேலுயர, பார்வையோ அவளை ஆராய்ந்து பார்த்தது.

பதில் சொல்லாமல் அவன் அப்படியே நிற்க, நொடி நேரம் தயங்கியவள் அவன் பேசமாட்டான் என உணர்ந்து, “அதுவந்து… அதுவந்து… நான் உங்களைத் தப்பா எல்லாம் நினைக்கல, தப்பா நினைச்சிடுவேன்னு யோசிக்காதீங்க. நேத்து நடந்தது நம்ம ரெண்டு பேரோட விருப்பம் இல்லாம நடந்த விபத்து போல. அது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதை நினைச்சு நீங்க இங்க எப்படி இருக்குறதுனு யோசிக்க வேண்டாம். நீங்க இங்க இருக்குற வரை உங்க முன்னாடிகூட நான் வராம இருக்கேன். இது இல்லாம நான் வேற எதாவது செய்யணுமா?” என யோசித்து வைத்ததை சொல்லி முடிக்க,

அவள் கூறியதைக் கேட்டது போலவே காட்டிக்கொள்ளாமல் மீண்டும், “தென்…” என நிதானமாகக் கேட்க, இப்போது தூக்கிவாரிப் போட அவனைப் பார்த்தாள்.

‘நான் சொன்னது அவனுக்குப் புரியலையா’ என மனதுக்குள் நினைத்தவள், “அது மாமாவும் அத்தையும் வந்தபிறகு தானே நீங்க ஊருக்கு போற மாதிரி ப்ளான் இருக்கு. அதே மாதிரி செய்யுங்களேன். இப்போ உடனே போனா எல்லாரும் என்ன நினைப்பாங்களோ?” என வார்த்தைகளை மென்று விழுங்கியபடி அவனைப் பார்க்க,

“சோ நான் இதெல்லாம் பண்ணணும்னு நீ நினைக்கிற ரைட்!” என நிதானமாக, மேலும் ஒரு எட்டு அவளுக்கு அருகில் எடுத்து வைத்து கேட்க, அவனின் அந்த கேள்வியில், ‘இல்லை’ என அவள் வேகமாகத் தலையை ஆட்ட,

ஆட்டிய அவள் தலையை வலது கையால் பிடித்தவன், அவளது கண்களுக்குள் தன் பார்வையைப் பாய்ச்சியபடியே, “பட் நான்…” என அவன் தலையை வலம் இடமாக அசைத்து உதட்டைப் பிதுக்க, அதுவரை இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் மொத்தமாக விழுந்துவிட்டது பெண்ணுக்கு.

இனி என்ன செய்ய, என்ன சொல்ல என்று தெரியாமல் அவள் உடல் தளர கணவனைப் பாவமாகப் பார்த்தவள், அவனிடமிருந்து தன்னை விடுவித்து அவனைத் தாண்டி நகர்ந்து செல்ல, அதுவரை அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ, “நான் உனக்கு எதாவது செய்யணுமா?” என்ற மனைவியின் கேள்வியையே அவன் திருப்பி கேட்க, சட்டென்று நின்றவள் வேகமாக அவன் புறமாகத் திரும்பி திகைத்த பார்வையைக் கொடுக்க,

அதைக் கண்டு கொள்ளாமல், “உனக்கு நான் என்ன செய்யணும்?” என்றான் மீண்டும் அதே குரலில்.

“இல்ல… இல்ல, ஒன்னும் வேண்டாம். நான் போறேன்…” என்று நகர்ந்துவிட, அதுவரை இறுக்கமாக இருந்தது போல் தன்னைக் காட்டிக்கொண்டவனுக்கோ மெல்லிய புன்னகை.

கட்டிலில் அமர்ந்தவனுக்கு தன் மனைவியானவளை நினைத்து சற்று யோசனைதான். நிமிடத்தில் தன் மனநிலையை மாற்றிவிட்டாளே இவள் எந்த வகை? என யோசித்தவாறே கண்ணை மூடி சாய்ந்தவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள்.

இரவில் அவளுடன் கூடிய கூடல் வேறு நினைவிற்கு வந்து அவனை சிலிர்க்க வைத்தது. முதன்முதலாக முழுமையாக ஒரு பெண்ணை அறிந்திருக்கிறான். அந்த நேரம் தனக்காக அவளது இளக்கம் மனதில் சாரலடித்தாலும், சற்றுமுன் இருவருக்கும் பிடிக்காமல் நடந்ததாக அவள் கூறியது ஆண்மகனான அவனை வெகுவாகக் காயப்படுத்தியிருந்தது.

எத்தனை நேரம் யோசனையில் இருந்தானோ, அவன் போன் அடித்து அவனை நிகழ்வுக்கு கொண்டுவர, அதை எடுத்துப் பார்த்தவன் நயனா என்ற பெயர் வரவே, வேகமாக அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், “சொல்லு நயனா…”

“ம்ம் ஷ்யாம், உன் வொய்ஃப்கிட்ட சைன் வாங்கிட்டியா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” நயனா.

“வாட்! என்ன பிரச்சனை? அதெல்லாம் எதுவும் இல்ல, நான் வாங்கிட்டு உனக்கு சொல்றேன். அதெல்லாம் நினைச்சு நீ டென்சன் ஆகாத.” என அவளை அதட்ட,

“ச்சே… ச்சே… எனக்கு என்ன டென்சன்? உங்கிட்ட ஒப்படைச்ச பிறகு எனக்கு எதுக்கு கவலை, டென்சன் எல்லாம். அதெல்லாம் எதுவும் இல்ல. நீ நாளைக்குத்தான கிளம்புற, அதுக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு உன் வொய்ஃப்பை அழைச்சிட்டு வா. அம்மாவும் பார்க்கணும் சொல்றாங்க, நானும் பார்க்கணும்.” என்றதும்,

“இன்னைக்கேவா? இன்னைக்கு முடியுமா தெரில நயனா, நான் ஸ்ரீக்கிட்ட பேசிட்டு சொல்லட்டுமா? ஸ்ரீக்கு எப்படி வசதினு கேட்கணும், நீ கன்ஃபார்ம் பண்ணிக்காத, நான் கேட்டுட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்.” என்றவன் அடுத்து அவள் பேசும் முன் வைத்துவிட்டு யோசனையானான்.

இது என்ன புது தலைவலி? நயனா கேட்டு முடியாது என்று அவனால் சொல்லவே முடியாது. ஆனால் இது… என தலையை அழுந்தக் கோதியவன், கண்மூடி ஒருதரம் மூச்சை ஆழ்ந்து சுவாசித்தவன் ஒரு முடிவோடு கீழிறங்கி வந்தான்.

எல்லோரும் சாப்பிட்டு முன்னறையில் இருக்க காயத்ரியும் நாகம்மையும் மட்டும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர். நாகம்மை சாப்பிட்டுக் கொண்டிருக்க, காயத்ரி எதுவோ கோபமாகப் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அங்கே போகலாமா வேண்டாமா என நொடி நேரம் யோசித்தவன், பிறகு போகலாம் என்று நினைத்து அங்கே செல்ல, அவனைப் பார்த்த நாகம்மை சட்டென்று எழுந்துவிட, தனக்கு பின்னே ஷ்யாம்தான் நிற்கிறான் என்று தெரியாத காயத்ரியோ, “எதுக்கு இப்போ டீச்சரை பார்த்த ஸ்டூடண்ட் மாதிரி எழுந்து நிக்கிற? எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படி செய்யாதன்னு. மரியாதை மனசுல இருக்கணும்…” என நீளமாகப் பேசிக்கொண்டே போக,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“உன் அக்கா என் மேல இருக்குற மரியாதைல எழுந்த மாதிரி தெரியலையே, ஏதோ சிங்கத்தைப் பார்த்த மான் மாதிரி பயத்துல எழுந்து நின்ன மாதிரி தெரியுது.” என நிதானமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மனைவிக்கு அருகில் இருந்த சேரில் அமர, இப்போது காயத்ரியும் பட்டென்று எழுந்து நின்றுவிட்டாள். அக்காவிற்கு கொடுத்த தைரியம் எல்லாம் எங்கோ போய்விட, அவளும் பயத்தில்தான் அவனைப் பார்த்தாள்.

அதைக் கண்டும் காணாமல் பார்த்தவன் வந்த சிரிப்பை அடக்கி மனைவியைப் பார்த்து, “உட்கார், சாப்பிடும்போது யார் வந்தாலும் எழுந்துக்க கூடாது. அது அந்த சாப்பாட்டை நாம மதிக்காத மாதிரி புரியுதா? உட்கார்.” என அதட்ட,

“இல்ல… இல்ல, நான் அப்புறம் சாப்பிடுறேன். நீங்க சாப்பிட்டதும் சாப்பிடுறேன், பசியில்ல…” என கையை கழுவப் போக,

“உன்னை உட்காருனு சொன்னேன்.” என அதட்ட, அதில் சட்டென்று அமர்ந்துவிட்டாள். மெல்லிய குரலில் அதட்டினாலும் அந்த குரலில் இருந்த கோபம் காயத்ரிக்கும் புரிய, விழிகளை விரித்து பயத்துடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்தவன், “ஏன் நீ சாப்பாடு வைக்க மாட்டியா? அதுகூட தெரியாதா?” என அவளையும் அரட்ட, அதில் சுயம் வந்தவள் வேகமாக அவனுக்கு தட்டை வைத்து பரிமாற, அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் பக்கத்தில் இருந்த நாகம்மைக்குத்தான் ஒரு வாய்கூட இறங்கவில்லை.

தட்டில் இருந்த உணவை பிசைந்துகொண்டே இருந்தாள். அதை பார்த்தவன், “இட்லி தானா போய் வாயில் விழுந்துடுமா?” என கேட்க, அந்த கேள்வியில் அவள் புரியாமல் விழிக்க, “பட்டிக்காடு மாதிரி என்னைப் பார்க்காத, இட்லியைப் போட்டு அந்த பிசை பிசையிறியே அதுக்கு வாய் இருந்தாகூட அழுதுருக்கும். முதல்ல சாப்பிடு, சாப்பிட்டு ரூமுக்கு வா, உங்கிட்ட பேசணும்.” என கை கழுவ எழ, அதுவரைக்கும் அவனையே யோசனை, கோபம், ஆச்சரியம் என பல விதங்களில் பார்த்துக்கொண்டிருந்தாள் காயத்ரி.

கை கழுவிவிட்டு வந்தவன் நேராக காயத்ரியின் முன் நின்று, “இன்னைக்கு நீங்க வெளிய போற ப்ளான் இருக்கா?” என்றான் மொட்டையாக.

அவளும் எதற்கு கேட்கிறான் என்ற யோசனையுடன், “இல்ல…” எனவும்,

“ஓகே, நானும் உன் அக்காவும் வெளிய போறோம், நைட் வர லேட்டாகும் அதான் கேட்டேன். அப்புறம் அக்கா ஹஸ்பண்ட எப்படி கூப்பிடுவீங்க?” என நக்கலாகக் கேட்க,

அதில் தன் தவறு புரிய, “சா… சாரி மாமா…” என்றவளின் விழிகளில் நீர் வழியத் தயாராக இருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கும் வருத்தமாகிவிட, “சாரி…” என்றுவிட்டு, மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

You may also like

1 comment

M. Sarathi Rio September 9, 2026 - 7:24 pm

அடேயப்பா..! இவன் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கிறானே.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured