அத்தியாயம் – 08
அறைக்குள் வந்த ஷ்யாமோ பால்கனியை நோக்கி நடந்தான். கையிலிருந்த சிகரெட்டை பற்றவைத்து இழுத்தவனின் முகம் யோசனையில் தொடுவானத்தை நோக்கி இருந்தது. எப்படி மனைவியிடம் நயனாவைப் பற்றி பேசுவது என்ற எண்ணம்தான் அவனுக்கு பிரதானமாக இருந்தது. நாகம்மை மறுத்தாலும் அவன் ஒன்றும் விட்டுவிடப் போவதில்லைதான். இருந்தாலும் அவள் சரியென்று சொல்லி கையெழுத்திட்டால் மட்டுமே நயனா இதற்கு ஒத்துக்கொள்வாள் என்று அவனுக்குத் தெரியும்.
அதோடு நயனா இருக்கும் இந்த சில காலங்களாவது நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தான் ஷ்யாம். அவனின் பிடிக்காத இந்த திருமணத்தைக் கூட அதற்கு சாதகமாக்கிக் கொண்டான் ஷ்யாம்.
திருமணம் முடிந்த நாள் முதல் அவள் மேல் இருந்த வெறுப்பில் சற்று கோபமாக நடந்து கொண்டான்தான். அதற்கு ஒரு காரணம் தந்தை என்றால், மற்றொரு காரணம் நயனா. அவனைத் திருமணம் செய் என்று நச்சரித்துக்கொண்டே இருந்தாள். அவர்கள் மேல் காட்ட முடியாத கோபம், எரிச்சல், தன் கையாலாகதத்தனம் என எல்லாம் சேர்ந்து மனைவி என்று வந்தவளிடம் காட்ட வேண்டியதாகிவிட்டது.
அன்றிரவு அவளிடம் பேசிவிட்டு படுத்தவன் வெகுநேரம் உறங்கவே இல்லை. தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை. அந்த கொடுமையை தன் மனைவிக்கு செய்திருந்தான் ஷ்யாம். சில மணி நேரங்களிலேயே அது தப்பென்று உணர்ந்தும் விட்டான்தான். ஆனால் அவளிடம் இறங்கிப் போய் மன்னிப்பு கேட்க அவன் ஈகோ விடவில்லை.
அடுத்த நாளும் அவன் முன் வந்து நிற்கவே அவள் பயப்படுவது புரிய, கொஞ்சமாக இளகி வந்தவன் மீண்டும் கோபம் எனும் அரக்கனின் உச்சாணிக் கொம்பில் போய் அமர்ந்துகொண்டான். அந்த கோபம்தான் மீண்டும் தீப்போன்ற வார்த்தைகளைக் கொட்ட வைத்தது.
ஆனால் அவன் எதிர்பாராதது நேற்று நடந்த இருவரின் கூடல். இருவரும் எதிர்பாராமல் தாம்பத்யம் நடந்திருந்தாலும் இருவருக்குமே இது ஒரு புது உணர்வுதானே! நினைக்கும் போது அவனுக்கு ஒருபக்கம் குற்ற உணர்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் அந்த ஆணவனின் உடல் சிலிர்க்கத்தான் செய்தது.
இப்படியாக மனைவியைப் பற்றிய யோசனைகளில் அவன் இருக்க, அப்போதுதான் அவனைத் தேடி உள்ளே வந்தாள் நாகம்மை. பால்கனியில் நிற்பவனிடம் தயங்கி தயங்கி வந்து நின்றாள். அவள் வந்து சில நிமிடங்கள் ஆகியும்கூட அவன் யோசனையில் இருந்து விலகவில்லை.
என்ன பேசுவது என்று தெரியாமல், “நா… நான் வேணும்னா போயிட்டு அப்புறம் வரட்டா?” என்று அவள் நகர ஆரம்பிக்கவுமே,
“ஓ… வந்துட்டியா? சாரி கவனிக்கல.” என்றவன் கையிலிருந்த சிகரெட்டை ஒருமுறை ஆழ்ந்து இழுத்துவிட்டு, அதை நசுக்கி குப்பையில் போட்டுவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“நான் என் ஃப்ரண்டோட பையனை தத்தெடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அதுக்கு என் மனைவியா உன்னோட சைன் கண்டிப்பா வேணும். என்னைப் பொறுத்தவரை இந்த கல்யாணம்கூட அதுக்காகத்தான்.” என்றதும், என்ன சொல்கிறான் என்ற குழப்பங்கள் சூழ கணவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் நாகம்மை.
அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தில் பேசுவதை நிறுத்தியவன், “அதை அப்புறம் பேசுவோம், இப்போ என் ஃபரண்ட் வீட்டுல இன்னைக்கு லஞ்ச்க்கு வர சொல்லிருக்காங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். நீ கீழ போய் எல்லாருக்கும் சொல்லிட்டு கிளம்பு. ஒரு மணிக்கு அங்க இருக்கணும்.” எனவும்,
“நான் எப்படி? அங்க நான், நான் வரணுமா?” என திக்கி திணறி ஒருவழியாகக் கேட்க, மனைவியின் அந்த பயத்தில் அவனுக்கு காணமல் போன கோபம் மீண்டும் வந்தமர்ந்து கொள்ள, “ஏய்…!” என்று அவளுக்கு முன் ஒரெட்டு வைத்துவிட்டான்.
அதில் அவள் மேலும் அரண்டு ஒரு அடி பின்னே நகர அதைப் பார்த்தவன், “ச்சே…!” என மறுபக்கம் திரும்பி தன் தலையைக் கோதிக் கொண்டவன், ஒரு பெருமூச்சைவிட்டு உடனே அவளிடம் திரும்பி, “ஏன் மகாராணிக்கு என் கூட வர பிடிக்கலையா? இல்ல அதவிட பெரிய வேலை எதுவும் இருக்கா?” என நக்கல் குரலில் கேட்க, அந்த குரலில் இருந்த இறுக்கமும் கோபமும் நாகம்மையை நடுங்க வைத்தது என்னவோ உண்மை.
“என்ன பட்டிக்காட்டு மேடம் கிளம்புறீங்களா, இல்லை…” என அதே குரலில் கேட்க, “ம்ம் சரி, வர்றேன். நான் போய் எல்லாருக்கிட்டயும் சொல்லிட்டு கிளம்புறேன்.” என அதற்கு மேல் அங்கு நிற்காமல், விட்டால் போதுமென்று ஓடிவிட, அந்த செயலில் அவன் இறுக்கம் சற்று தளர்ந்தது. முகத்தில் மெல்லிய புன்னகைகூட வந்தமர்ந்தது.
அவள் நகரவும் அவன் போன் அடிக்க ஊரிலிருந்து லலிதாதான் அழைத்துக் கொண்டிருந்தார். புருவங்கள் சுருங்க எடுத்தவன், “எஸ் ம்மா…” எனவும்,
“தம்பி என்ன பண்றமா? சாப்பிட்டியா, எப்படி இருக்க?” என வரிசையாக கேள்விகளைக் கேட்க,
“ம்மா, அதெல்லாம் நான் சாப்பிட்டேன், எனக்கு என்ன, நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க எப்ப கிளம்புறீங்க? அங்க வொர்க் எல்லாம் ஓவரா?” என எரிச்சலாகப் பேச,
மகனின் எரிச்சலைக் கண்டுகொள்ளாமல், “முடிஞ்சது கண்ணா, இன்னைக்கு நைட் கிளம்புறோம். நான் பேக் பண்ணிட்டு இருக்கேன், அப்பாவும் சவியும் அவங்க வீட்டுக்கு சொல்லிட்டு வர போயிருக்காங்க. நீ பேக் செஞ்சிட்டியா? உனக்கு எடுத்துட்டு போக வேண்டிய பொடி, மத்தது எல்லாம் முத்தம்மா அத்தைக்கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன். அவங்க ரெடி செஞ்சிடுவாங்க. அது மட்டும் நான் வந்ததும் பேக் செஞ்சிக்கலாம், மத்ததெல்லாம் நீ செஞ்சிடு தம்பி.” என சொல்ல,
“அதெல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா? முதல்ல நீங்க வாங்க, பார்த்துக்கலாம்.” என்றுவிட்டு, “ம்மா இன்னைக்கு நயனா வீட்டுல லஞ்சுக்கு கூப்பிட்டுருக்காங்க. நாளைக்கு நான் கிளம்புறதுனால இன்னைக்கே வர சொன்னா. அங்க நான் கிள்மபிட்டேன், சோ பேக் பண்ற வேலையை நாளைக்கு பார்த்துக்குறேன்.” என ஷ்யாம் முடித்துவிட,
“ம்ச்ச்… கண்ணா என்ன பழக்கம் இது? மேரேஜ் முடிஞ்சா ஃபர்ஸ்ட் டைம் ஒரு விருந்துக்குப் போகும்போது எல்லாம் பார்த்துதான் போகணும். அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது. அவ வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம், போகவும் கூடாது.” என கண்டிப்பான குரலில் பேச,
“ம்மா, ஐ நோ எவ்ரிதிங்க். உங்ககிட்ட நான் பெர்மிஷன் கேட்கல, இன்ஃபர்மேஷன்தான் கொடுக்குறேன். நயனா பிரச்சனையில நீங்க மாறப்போறதே இல்ல அப்படித்தானே? எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை. நான் அங்கதான் போகப் போறேன்.” என்று கடுகடுவெனப் பொறிந்துவிட்டு, லலிதா அடுத்து பேசுவதற்கு முன்னே இவன் போனை வைத்துவிட்டான்.
பேசும் போதே வைத்துவிட்ட மகனின் செய்கையில் பல்லைக் கடித்தார் லலிதா. பொதுவாக தாய் சொல்வதைத் தட்டாமல் செய்யும் மகன்தான் ஷ்யாம். ஆனால் அதெல்லாம் நயனா விசயத்தில் நேரெதிராக மாறிப் போனது. அவர் தடுத்து என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். ஷ்யாமின் இந்த செய்கையே லலிதாவிற்கு நயனாவைப் பிடிக்காமல் போக வைத்தது.
அங்கு ஊரில் பரந்தாமனோ மகளை அழைத்துக்கொண்டு தங்கை வீட்டிற்கு வந்திருந்தார். முதல் நாள்தான் மண்டல பூஜை எல்லாம் நலமாக, எந்தவித தடங்களும் இல்லாமல் நல்லபடியாக முடிந்திருந்தது. கணக்கு வழக்குகள் எல்லாம் பார்த்து முடித்து இன்று கிளம்புவதாக ஏற்பாடு. அதனால் தங்கையிடமும் மற்ற உறவுகளிடமும் சொல்லிவிட்டு, தங்கைக்கு தைரியமும் சொல்ல வந்திருந்தார்.
ஆனால் அவர் பயந்தது போல எல்லாம் மாரியம்மா பயந்து இருக்கவில்லை. அண்ணன் வீட்டில் பெண்ணைக் கொடுத்திருக்கிறோம், அவர்கள் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் ஒருபக்கம் இருந்தாலும், எங்கு இருந்தாலும் அந்த இடத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் சரியாகத் தன்னைப் பொருத்தி, தன்னை சமாளித்துக் கொள்வாள் என்று மகளின் மேல் மலையளவு நம்பிக்கை இருந்தது. அதனாலையே அவர் மற்றவர்களிடம் கவலை என்று எதுவும் வெளிக்காட்டாமல் சாதாரணமாக நடந்துகொண்டார். அந்த நம்பிக்கையைக் கண்ட பரந்தாமனுக்கு தன் மகனை நினைத்து மனதில் பாரமேறிக் கொண்டது.
தன்னால் தங்கையின் நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி வேறு புதிதாக முளைத்து பயத்தைக் கொடுத்தது. அவரும் பல வருடங்கள் உயரதிகாரியாகப் பணி புரிந்தவராகிற்றே? தன் முகத்தில் எதையும் காட்டாமல் அனைத்தையும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு விடைபெற்று வந்தார்.
பரந்தாமனின் அந்த நம்பிக்கை சிறிது நாளிலேயே பொடிபொடியாக சிதறி விழப்போகிறது என்று அவருக்குத் தெரியாமல் போனது. இவை அனைத்தையும் அந்த ஆற்றோரத்தில் அமர்ந்திருந்த நாகம்மை ஒரு புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
இங்கு ஷ்யாமிடம் பேசிவிட்டு கீழே வந்த நாகம்மையோ அனைவரிடமும் விசயத்தைச் சொல்ல, அதைக்கேட்டு எல்லோரும் அவளை அதிசயமாகப் பார்த்தனர். ‘என்ன ஷ்யாம் வெளியில் அழைத்துப் போகிறானா?’ என வீட்டாட்கள் வியப்பில் வாய் பிளக்க, காயத்ரியின் புருவம் சுருங்கியது. முகமும் யோசனைக்குத் தாவியது.
அவள் உடனே அனுவிடம் எதுவோ கேட்கப் போக, நாகம்மையோ அவளை இழுத்துக்கொண்டு அவர்களுக்கென இருந்த அறைக்குள் நுழைந்தாள். தங்கையின் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு “அம்மு எனக்கு… எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. நான் அங்க போய் சமாளிச்சிடுவேனா?” என பதட்டமான குரலில் கேட்கவும்தான் தன் யோசனையைக் கை விட்டாள் காயத்ரி.
உடனே தன்னை நிதானித்து தமக்கையின் முகத்தை தன் இரு கைகாளாலும் தாங்கிப் பிடித்தவள், “என் அக்காவால சமாளிக்க முடியாத பிரச்சனைனு ஒன்னு இருக்கா என்ன? அதெல்லாம் தூசு போல தட்டிட்டு வந்துடுவீங்க.” என கிண்டல் போல பேசி சமநிலைக்கு கொண்டுவந்தாள்.
அதன்பிறகு அவள் மனம் சமாதானம் ஆகும்படி பேசி, என்ன உடுத்தலாம் என ஆராய்ந்து, ஒரு அஜந்தா நீலத்தில் பிங்க் வண்ண ரோஜாப்பூக்கள் கொத்து கொத்தாக எம்ப்ராய்டரி செய்திருந்த மெல்லிய ஜியார்ஜட் புடவையை அணிய வைத்திருந்தாள். பின் கூந்தலைத் தளர பிண்ணி வகுட்டில் குங்குமமும் நெற்றியில் சிறு பொட்டுமாக நின்ற தமக்கையை திருஸ்டி கழித்தாள் சின்னவள். அப்போது ஜாதிமல்லிச் சரத்துடன் முத்தம்மா வர, பின்னோடு பாட்டியும் வர இருவருக்குமே நாகம்மையைப் பார்த்து மனம் நிறைந்து போனது.
தன் கையில் இருந்த பூவை அவளுக்கு வைத்துவிட்டு, “பார்க்க மகாலட்சுமியாட்டம் அம்சமா இருக்க, போய் சாமிக்கு விளக்கேத்திட்டு, ஷ்யாமக் கூப்பிட்டு வா. பன்னெண்டுக்கு முன்னாடி வீட்டுல இருந்து கிளம்புங்க. அதுக்குப் பிறகு ராகுகாலம் வந்துடும். போகும் போது தெருமுனையில இருக்குற விநாயகர் கோவில்ல சாமி கும்பிட்டு போங்க.” என சொல்ல, நாகம்மை எல்லாவற்றிற்கும் சரி சரியென தலையாட்டிவிட்டு, பூஜையறையில் விளக்கேத்திவிட்டு கணவனை அழைக்க தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.
அடுத்து நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்!
1 comment
அய்யய்யோ..! அப்படி என்ன வில்லங்கம் பண்ணப் போறான்னு தெரியலையே..?
😌😌😌
CRVS (or) CRVS 2797