Home Antiheroகாதலி – 09

அத்தியாயம் – 09

அறைக்குள் வந்த மனைவியை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம். பின் மெச்சுதலாகப் புருவத்தை உயர்த்திவிட்டு, கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியில் வர, நாகம்மையும் அவன் பின்னோடு ஓடிவந்தாள்.

கீழே வந்த இருவரையும் பார்த்த முத்தம்மா, “தம்பி போகும்போது நம்ம விநாயகர் கோவிலுக்கு போயிட்டு போங்க, சீக்கிரமா கிளம்புங்க.” என்றதும், பதிலேதும் சொல்லாமல் ஷ்யாம் முன்னால் நடக்க, நாகம்மைதான், “சரி முத்தும்மா… சரி முத்தும்மா…” என காரில் ஏறும்வரை சொல்லிக்கொண்டே வந்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மனைவியின் செயல் ஒவ்வொன்றும் கணவனானவனுக்கு எப்படி இருக்கிறதாம்? அவள் செய்கைகள் ஒவ்வொன்றும் தன்னை மறந்து, அவனுக்கு சிரிப்பைத்தான் கொடுத்தது. அதில் அவன் இறுக்கங்கள் கூட மெல்ல தளர்ந்ததுதான்.

ஒருவழியாக இருவரும் கிளம்ப கார் அங்கிருந்த விநாயகர் கோவிலில் சில நிமிடங்கள் நின்று, பின் நயனாவின் வீட்டை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. காரில் ஏறியதில் இருந்து கருமமேக் கண்ணாக, வெளியிலேயே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள் நாகம்மை. அவளது விழிகளில் தெரிந்த ரசனையைப் பார்த்தவன், இதெல்லாம் எங்கே பார்த்திருக்க போகிறாள் என்ற எண்ணம்தான்.

அவளிடம் பேசி தெரிந்து கொள்ளலாமா என்று ஒரு மனது யோசித்தாலும், மற்றொன்றோ அவளிடம் தான் பேசுவதா என ஈகோவை தன் கைவசம் வைத்துக்கொண்டது.

ஒரு மணி நேர பயணத்தில் ஒரு வீட்டின் முன் கார் வந்து நிற்க, அந்த வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுவாள் என்று ஷ்யாம் நினைத்தான். காரணம் அவனின் வீட்டை விட சற்று பெரியதுதான் நயனாவின் வீடு. ஆனால் அப்படி ஒன்றும் வியப்புடன் கவனிக்கவில்லை நாகம்மை. வீட்டை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் அவன்கூடே நடந்து வந்தாள்.

இவர்களின் கார் சத்தம் கேட்டு ஒரு வயதான பெண்மனி வர, அவரின் கையைப் பிடித்தபடி ஒரு குட்டி வாண்டு ஒன்று தன் குட்டிக் கண்களை உருட்டியபடி வந்தது. அந்த வாண்டின் பார்வை முழுக்க நாகம்மையின் மேல் இருக்க, நாகம்மையின் பார்வையும் அந்த வாண்டின் மேல்தான் இருந்தது.

ரோஜாப்பூவிற்கு கை, கால் முளைத்தது போல, அழகு பொக்கிஷமாக இருந்த வாண்டை நோக்கிய நாகம்மை, அழகான புன்னகையைக் கொடுத்து தன்னைப்போலக் கையை நீட்ட, அவள் கையை வேகமாகப் பற்றிக்கொண்டது அந்த குட்டிப் பூங்கொத்து. அந்த மென்மையான குட்டிக்கைகளில் தன்னைத் தொலைத்தவள், அந்த அல்லிப் பூச்செண்டை அப்படியே அள்ளித் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள் நாகம்மை.

“செல்லத்துக்கு என்ன பேராம்?” என்று கேட்டபடியே உள்ளே நகர, “ப்ரனீத்” என்று தன் அரிசிப் பற்களைக் காட்டிச் சிரித்தது அந்த குட்டி வாண்டு.

“அழகா இருக்கே செல்லத்தோட பேரு. என்ன பண்றீங்களாம் நீங்க?” என பேசிக்கொண்டே உள்ளே போக, அவளுக்குப் பின்னே நின்றிருந்த ஷ்யாமைப் பார்த்து, “உன் வொய்ஃப் ரொம்ப நல்லமாதிரி போல ஷ்யாம். கள்ளங்கபடம் இல்லாத பொண்ணு போல, நல்லா பார்த்துக்கோ.” என நயனாவின் அம்மா பரிமளா சொல்ல,

“ம்ம் ஆன்ட்டி.” என்றவன், வேறெதுவும் சொல்லாமல் வீட்டுக்குள் போக, அவரும் ஒரு பெருமூச்சோடு அவனைப் பின்தொடர்ந்து உள்ளே வந்தார்.

“ஹேய் வா, வா ஷ்யாம். உன் வொய்ஃப் சோ கியூட்டா. எவ்ளோ அழகா இருக்காங்க? என் கண்ணே நெறையப்பட்டிருக்கும். முத்தும்மாக்கிட்ட சொல்லி இன்னைக்குச் சுத்தி போட சொல்லுடா.” என நயனா சந்தோசமாக சொல்ல, குனிந்திருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்தவன், “ம்ம்ம்…” என்று மட்டும் சொல்லிவிட்டு வேறு பேச ஆரம்பித்துவிட்டான்.

ஆனால் நாகம்மைக்கோ அந்த குட்டிப் பூச்செண்டை பார்க்கும்போது இருந்த ஆர்ப்பரிப்பு, ‘ஹாய் ஐயாம் நயனா!’ என்று நயனா தன்னை அறிமுகப்படுத்திய நொடியில் இருந்து இந்த உலகமே இருண்டு போனது போலொரு தோற்றம் வர, மொத்தமாக வடிந்து போனது.

நேற்றிரவு கணவனின் புலம்பலுக்கு சொந்தக்காரி இவள்தானா? தன் கணவன் ஒரு மணமான பெண்ணையா இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறான்? என மனதுக்குள் பலவாறு நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தாள். உடனே அங்கிருந்து போய்விட வேண்டும் என மனம் கூப்பாடு போட்டாலும், அது முடியாத காரியம் என்று நினைத்துப் பல்லைக் கடித்து, தன் வேதனையை மறைத்து தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள். பார்ப்பவர்களுக்கு அது வெட்கம் போல் தோன்றும். ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே? சில நிமிடம் மனைவியைக் கூர்ந்து பார்த்தவனுக்கு அவளின் இறுக்கமானத் தோற்றம் வேண்டிய கதையைச் சொல்ல, ‘அட!’ என்று யோசித்தவனுக்கோ சுவாரஸ்யமாகிவிட்டது. அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆசையும் வந்துவிட்டது.

நயனாவும் ஷ்யாமும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க, நாகம்மை அமைதியாக ப்ரனீத் பேசுவதை, ஒரு வலி நிறைந்தப் புன்னைகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது இருவருக்கும் ஜூஸுடன் நயனாவின் தாய் வர, இருவரிடமும் அதைக் கொடுத்துவிட்டு, “நீங்க பேசிட்டு இருங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்று நகர, ப்ரனீத்தும் இப்போது பாட்டியின் பின்னே சென்றான்.

“ஷ்யாம் உன் வொய்ஃப்கிட்ட சைன் வாங்கிட்டியா? நேத்தே வாங்கிடுறேன்னு சொன்னியே?” என நயனா கேட்கவும், ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த நாகம்மைக்கு புரை ஏறியது. அவள் தொடர்ந்து இருமவும், “ஹேய் பார்த்து… பார்த்து…” என அவள் தலையைத் தட்டிவிட்டு, “இங்க ரெஸ்ட் ரூம் இருக்கு பாருங்க, போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடுங்க, கண்ணெல்லாம் சிவந்துடுச்சு.” என நயனா வருத்தமாகச் சொல்ல, நெஞ்சை நீவியபடியே கணவனை ஒரு பார்வை பார்த்தவள் வாஷ் ரூம் நோக்கிப் போய்விட்டாள்.

அவள் நகரவும் மனைவியை யோசனையாகப் பார்த்தவன், ‘லூசு எதுக்கு இப்போ இந்த ரியாக்ஷன் கொடுத்துச்சு தெரில’ என மனைவியை திட்டிவிட்டு, நயனாவிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருந்தான்.

நாகம்மை முகத்தைக் கழுவி வர ப்ரனீத்தும் தன் குட்டி பொம்மைகளைத் தூக்கி வந்து அவளிடம் காட்ட ஆரம்பித்தான். அவளுக்கும் இப்போது ஒரு மாற்றம் வேண்டும் போல் தோன்ற அவனை அள்ளிக்கொண்டு, “அடடே! எவ்ளோ குட்டி குட்டி டாய்ஸ் வச்சிருக்காங்க ப்ரனீத் குட்டி? எனக்குத் தரீங்களா?” என கேட்டபடியே அடுப்படியை நோக்கி நகர்ந்துவிட்டாள்.

“இன்னும் உன் வொய்ஃப்கிட்ட ப்ரனீத் பத்தி சொல்லலையா ஷ்யாம்?” என காட்டமாக நயனா கேட்க,

“சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல, இது என்னோட முடிவு. என்னோட முடிவை ஏத்துக்குறதா இருந்தா என்கூட இருக்கட்டும், இல்லையா நாளைக்கே அவங்க வீட்டுக்கு கிளம்பட்டும். எனக்கு நோ அப்ஜெக்சன்” என ஷ்யாம் விட்டேற்றியாகப் பதில் சொல்ல,

“இப்போ உன்னை கன்னம் கன்னமா அறையணும் போல வருதுடா இடியட். ஆனா என் ஃப்ரண்டா போயிட்டியேனு உன்னை சும்மா விடுறேன். ஏன் உன் விருப்பத்துக்கு ஆடத்தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டியா ப்ளடி தக்காளி…” என நயனா கத்த,

“இப்போ எதுக்கு இவ்ளோ எமோஷன்ஸ் உனக்கு? ப்ரனீத் அடாப்ஷன் பத்தி நான் அவக்கிட்ட பேசிட்டேன். என்ன அது ப்ரனீத்னு மட்டும் அவளுக்குத் தெரியாது. இன்னைக்கு சொல்லிடுறேன் ஓகேவா? நீ டென்ஷன் ஆகாத.” என ஷ்யாம் சொல்லவும்,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ப்ளீஸ் ஷ்யாம், இப்படி எல்லாம் ஒரு பொண்ணை… அதுவும் வொய்ஃப்பை ட்ரீட் பண்ணாதடா, கஷ்டமா இருக்கு. என் ஃப்ரண்ட், என் ஷ்யாம் இப்படி பட்டவன் இல்லையே? மார்னிங் பேசும் போதுகூட நீ நல்லாத்தான பேசின, இப்போ என்னடா?” என சலிப்பும் ஆற்றாமையும் சேர கேட்க,

”ம்ச் நயன்… ப்ளீஸ் ஐ நீட் சம் டைம். உனக்கு சொன்னா புரியாது, எனக்கும் எல்லாத்தையும் அக்செப்ட் செஞ்சிக்க டைம் வேணும். அதுக்காக நான் இப்படியே இருந்துடுவேன்னு நினைக்காத, ப்ரனீத்காக நான் கண்டிப்பா அவளை ஏத்துக்கத்தான் வேணும்.” என்று அவன் தீர்க்கமாகச் சொல்ல ஆயாசமாக வந்தது நயனாவிற்கு.

அதன்பிறகு நயனாவின் அம்மா சாப்பிட அழைக்க, சாப்பாட்டு நேரம் கலகலப்பாக இல்லையென்றாலும் அமைதியாகவும் இல்லை.

ப்ரனீத்தும் நாகம்மையும் நன்றாக ஒட்டிக் கொண்டனர். அதைப் பார்த்த பரிமளாவிற்கு கண்களில் நீர் திரையிட்டது. ஆனால் அதை காட்ட அவரால் முடியாது. நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மகள் வருத்தப்படுவாள் என்று தனக்குள்ளே மறைத்துக்கொண்டார்.

விருந்து முடிந்து கிளம்பும் நேரம் தன் கையில் இருந்த ப்ரனீத் தூக்கத்திற்கு சிணுங்க ஆரம்பித்தான். அழும் குழந்தையை தாயிடம் கொடுப்பதுதானே முறை என்பதுபோல் ப்ரனீத்தை நயனாவிடம் கொடுக்க வந்த நாகம்மையிடமிருந்து, பரிமளா வாங்கிக் கொண்டார்.

அவள் ஆச்சரியமாகப் பார்க்க, “அவனுக்கு தூங்கும்போது நான் வேணும், இல்லைன்னா இப்படிதான் சிணுங்கிட்டே இருப்பான்.” என பதில் கொடுத்துவிட்டு ஒரு அறைக்குள் போய்விட்டார்.

அப்போதுதான் நாகம்மையும் ஒரு விசயத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். அவர்கள் வந்த நொடியில் இருந்து நயனா ப்ரனீத்தைத் தூக்கவே இல்லையென்று. ஏன் இப்படி? பெற்ற குழந்தையிடம் எதற்கு இந்த ஒதுக்கம்? அப்படி என்ன பிரச்சனை? என தன் பிரச்சனையை மறந்து நயனாவைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

குழந்தையை உறங்க வைத்து வரவும் இவர்கள் கிளம்ப ரெடியாக இருக்க, குங்குமப் பிரசாதமும் புடவையும் வைத்து பரிமளா கொடுக்க, விழிகள் தன்னைப்போல் கணவனை நோக்கியது, வாங்கவா வேண்டாமா என்று.

அதைக் கவனித்த நயனா, “அம்மா தாயே! உங்க வீட்டுக்கார் சொன்னாதான் வாங்குவீங்களா? அவர் ஒன்னும் சொல்லமாட்டார், வாங்கிக்கோங்க.” எனக் கிண்டலடிக்க, அதில் புன்னகைத்தாலும் யோசனையாகவே நிற்க, “வாங்கு ஸ்ரீ, நேரமாகுது.” என்றுவிட்டு தலையைக் கோதுவது போல் மற்றையப் பக்கம் திரும்பி, அவளைப் பார்க்காமல் வெளியில் சென்றுவிட்டான்.

அவன் என்ன சொல்லி அழைத்தான் ஸ்ரீயா? ஸ்ரீ நானா? என் பெயர் அதுவல்லவே? என்ன… ஏன்… என்ற யோசனைகளுடனே அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினாள்.

பயணத்தில் இருந்த இருவரின் முகமும் யோசனையில்தான் இருந்தது. ப்ரனீத் பற்றி எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனை கணவனுக்கு, ஸ்ரீ என்று ஏன் அழைத்தான், அதை எப்படி கேட்பது என்ற யோசனை மனைவிக்கு.

இருவரும் யோசனையில் இருக்க அந்த ஐ ட்வென்டி கடற்கரை சாலையில் ஒரம் கட்டி நின்றது. காரை நிறுத்தியவன் மனைவியிடம் திரும்பி, “ஸ்ரீ உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.” என்றவன், அந்த ஆழியில் அடித்து வரும் அலைகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

‘பேசணுமா? என்ன பேசணும்? மறுபடியும் டிவோர்ஸ் பத்தி பேசப்போறானா? உன் முடிவு என்னன்னு கேட்கப் போறானா? அப்போ நான் என்ன சொல்லணும்? கடவுளே!’ என மனதுக்குள் நொடியில் தோன்றிய நூறு எண்ணங்களை அப்படியே அடக்கியவள், பந்தயக் குதிரையாய் ஓடிய மனதைக் கட்டுப்படுத்தி, அவன் பேச்சில் காதைக் கொடுத்த பெண்ணுக்கு அடுத்து அவன் கூறிய செய்தியில் மயக்கம் வராத குறைதான்.

அப்படி என்னதான் சொல்லித் தொலைச்சான் இந்த ஷ்யாம்?

You may also like

1 comment

M. Sarathi Rio September 12, 2026 - 11:24 pm

ஏன் குழந்தையை அடாப்சன் எடுக்கணும், குழந்தைக்கு பாட்டி இருக்கிறாங்கத் தானே..?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured