Home Antiheroகாதலி – 12

அத்தியாயம் – 12

சங்கவியின் ஆர்ப்பாட்டத்தில் ஷ்யாமைத் தவிர வீட்டில் அனைவரும் எழுந்து வந்துவிட, அந்த காலை வேளையில் வீடே அமளி துமளிப்பட்டது. ஒரு இடத்தில் இல்லாமல் எல்லோரையும் ஒருவழி செய்து கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டிப்பெண்.

அனைவரும் ஹாலில் இருக்க ஷ்யாம் மட்டும் அங்கு இல்லாமல் இருக்கவும், “என்னாச்சு ஷ்யாம் இன்னும் வரல, உடம்பு எதுவும் சரியில்லையா? இவ்வளவு நேரம் தூங்கமாட்டானே?” என, ‘என் பொறுமை எல்லாம் இவ்வளவுதான்’ என்பது போல, பேச்சை லலிதா ஆரம்பிக்க நாகம்மைக்கு உள்ளுக்குள் உதறத் தொடங்கியது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவளும் வந்ததில் இருந்து கவனிக்கத்தானே செய்கிறாள். அவளிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்பதமாய் மூத்த மருமகளிடம் குழைந்து கொண்டிருந்தார் லலிதா. அதோடு இவளைப் பார்த்து ஜாடைப் பேச்சுக்கள் வேறு. அதையெல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை நாகம்மை. இருந்தாலும் மனது சோர்ந்துதான் போனது.

லலிதா தன்னிடம்தான் அந்த கேள்வியை கேட்டார் என்பது போல, “தூங்கிட்டு இருக்காங்க அத்த.” என வாய் பதில் சொன்னாலும், கண்கள் மாடியில் அவர்கள் அறையைத் தொட்டு தொட்டுச் சென்றது.

“ம்ம்ம்…” என்று வேண்டா வெறுப்பாய் பதில் சொன்னவர், “சரி நான் போய் பார்த்துட்டு வர்ரேன்.” என எழப் போனவரின் கையைப் பிடித்து தடுத்தாள் சங்கவி.

“ம்மா அதுதான் தூங்குறாங்கனு அண்ணி சொல்றாங்க இல்ல, விடுங்க. உங்களுக்கும் கால் வலினு சொல்லிட்டு இருந்தீங்கல்ல, நீங்க ரெஸ்ட் எடுங்க, அண்ணா வரட்டும். அண்ணி நீங்க போய் பார்த்துட்டு வாங்க.” என்றவள் தாயின் முறைப்பைக் கண்டுகொள்ளவில்லை.

நாகம்மையும் தயக்கத்துடன் மாமியாரைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே கணவனுக்கான காபியை எடுத்துக்கொண்டு மேலே நகர, அனுவோ, “அத்தை இன்னைக்கு ஹாஸ்பிடல் போகணும், நீங்க வர்றீங்க தானே? இல்லைனா அம்மாவை கூப்பிட்டுக்குறேன்.” என லலிதாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள் அனு.

“ம்ம்… உங்கம்மா அப்படி எத்தனை தடவை உன் கூட ஹாஸ்பிடலுக்கு வந்துருக்காங்க? எல்லா தடவையும் நான் தானே வர்றேன். ஆனா இந்த முறை அவங்களவே அழைச்சிட்டுப் போ, சுமதிகிட்ட நான் போன்ல பேசிக்கிறேன். ரொம்ப டயர்ட் வேற, அதோட ஷ்யாம் கிளம்புறான்ல, அவனுக்கு எல்லாம் பார்த்து எடுத்து வைக்கணும்.” என சம்மந்திக்கு ஒரு கொட்டு வைத்துப் பேச,

“சரிங்க அத்த, நான் அம்மாக்கிட்ட சொல்லிடுறேன். காலேஜுக்கும் பெர்மிஷன் போட்டுடுறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.” அனுவும் பொட்டிப் பாம்பாய் அடங்கினாள் அவரிடம்.

“ம்ம்… சபரி வரணுமானு நான் சுமதிக்கு கேட்குறேன், அவன் வரணும்னா அவனையும் பெர்மிஷன் போடச் சொல்லிடு. அப்புறம் அவ போன் செஞ்சு என்னை ஒருவழியாக்கிடுவா.”

“சரிங்கத்த, நீங்க டாக்டர் ஆன்ட்டிக்கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க, நான் அவர்கிட்ட பேசிடுறேன்.” என்ற அனு, பக்கத்தில் இருந்த காயத்ரியைப் பார்த்து சிரித்தபடியே அவளிடம் பேச ஆரம்பித்தாள்.

சங்கவியோ அப்பத்தாவிடம் ஊரில் பார்த்த, கேட்ட எல்லாவற்றையும் சொல்லி சொல்லி அவரை ஒருவழி செய்து கொண்டிருந்தாள்.

இவர்களை எல்லாம் பார்த்த லலிதா எரிச்சலுடன் கிச்சனுக்குள் சென்றார். அங்கு இருந்த முத்தம்மாவிடம், “அண்ணி எப்படி தனியா இருந்தீங்க? எத்தனை தடவைக் கூப்பிட்டாச்சு, ஏன் இப்படி பண்றீங்களோ?” என ஷ்யாமின் கல்யாணத்திற்கு வராததைக் குறித்துப் பேச,

“அதனால என்ன லல்லி, எப்படியும் வீட்டுல ஒரு ஆள் இருந்து தானே ஆகணும். நான் இருந்தேன்னு இருக்கட்டுமே, இப்போ அதனால என்ன? சரி நீ சொல்லு, அங்க எல்லாம் எப்படி? எல்லாம் நல்ல முறையில நடந்துச்சா? பூஜைக்கு சரியா எடுத்து வச்சீங்க தானே?” என வேறு பேசவிடாமல் கேட்டார் முத்தம்மா.

“அதுக்கு என்ன அண்ணி, அதெல்லாம் நல்லாதான் போச்சு. சரி இங்க என்ன நடந்துச்சு? புதுசா வந்தவ எப்படி இருக்கா? வீட்டைப் பார்த்ததும் ‘ஆ’ன்னு வாயை பிளந்துட்டு நின்னாளா?” என இந்த மருமகள் எனக்குப் பிடிக்கவில்லை என்று தன்பேச்சில் காட்டினார்.

“லல்லி என்ன பேச்சு இது? அவ நம்ம வீட்டு மருமக. பிடிச்சாலும் பிடிக்கலனாலும் இந்த வீட்டுக்கு வாழ வந்தவ. நீயே இப்படி பேசினா மத்தவங்க எப்படி பேசுவாங்க? உங்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல.” என பெரியவராக கண்டிப்புக் காட்ட,

“ம்ம் நீங்க என்னவோ சொல்லுங்க அண்ணி, எனக்கு அவளைச் சுத்தமா பிடிக்கல. ஷ்யாமுக்கு எப்படி ஒரு வாழ்க்கை அமைய வேண்டியது. இப்படி ஒரு பட்டிக்காட்டுப் பொண்ணு, நினைக்கவே எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருது அண்ணி. முதல்ல இவன் கிளம்பட்டும், அதுக்குப்பிறகு இருக்கு அவளுக்கு. அவளை நான் பார்த்துக்குறேன்.” என கண்ணில் பொங்கிய கோபத்துடன் முத்தம்மாவிடம் பேசிய லலிதா, ஷ்யாம் எடுத்துச் செல்வதற்கான பொருட்களைச் செய்யச் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.

லலிதா பேசியதில் முத்தம்மாவிற்கு சிறுபயம் எட்டிப் பார்த்தது என்னவோ உண்மை. இவளிடம் நாகம்மை என்ன பாடுபடப் போகிறாளோ என்று நினைக்கும் போதே, அந்த சிறு பெண்ணின் மீது தன்னையும் அறியாமல் இரக்கம் சுரந்தது.

முடிந்தளவு அவரால் நாகம்மையைக் காப்பற்ற முடியும். ஆனால் எல்லா நேரமும் அது முடியாதே? ஷ்யாம் போவதற்குள் அவன் காதில் இதைப்பற்றி போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அடுத்த வேலையை செய்ய ஆரம்பித்தார்.

இங்கு அறைக்குள் வந்தவளை பால்கனியில் முதுகு காட்டி நின்றிருந்த ஷ்யாமே வரவேற்றான். அவனிடம் சென்றவள், “காஃபி” என நீட்ட, தன் கையில் இருந்த சிகரெட்டை குப்பையில் போட்டுவிட்டு காஃபியை வாங்கியவன், “தென்…” என்றவாறே அவளைப் பார்க்க, அந்த பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட தலை குனிந்தாள் பெண்.

“நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்.” என இறுக்கமானக் குரலில் சொல்ல, அதில் சட்டென்று நிமிர்ந்தவளின் முகத்தில் பயத்தின் ரேகைகள்.

“என்ன… என்ன சொல்ல?” எனத் தடுமாறியவாறு கேட்க, “அம்மா என்ன சொன்னாங்க?” என்றான் கூர்மையான விழிகளால் அவளைத் துளைத்தெடுத்தபடி.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“என்ன சொன்னாங்க, ஒன்னும்… ஒன்னுமே சொல்லலயே? உங்களைக் கேட்டாங்க, தூங்கிட்டு இருக்கீங்க சொன்னேன். அவ்வளவுதான்…” திணறியபடி பதில் சொல்ல,

“ஓ…” என்று தோளைக் குலுக்கியவன் காஃபியை அருந்த ஆரம்பித்திருந்தான். எதற்கு கேட்டான் என்ற குழப்பத்துடனே நாகம்மை அங்கேயே நிற்க, “நேத்து நாம பேசினது நமக்குள்ள மட்டும்தான். நம்ம விசயம் வேற யாருக்கும் தெரியிறதை நான் விரும்பமாட்டேன். ப்ரனீத் பத்தி வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம். நான் எப்போ சொல்லணுமோ அப்போ சொல்லிக்குறேன்.” என வெளியில் வேடிக்கைப் பார்த்தபடியே பேசினான்.

“ம்ம் சரி.” என்ற நாகம்மை நகரப் போக, “உனக்கு நான் ரெண்டு சான்ஸ் கொடுத்தேன். இப்பவும் உனக்கு டைம் இருக்கு, டிவோர்ஸ் நோட்டிசும் உங்கிட்டதான் இருக்கு. ப்ரனீத் பத்தி உனக்கு அப்ஜெக்ஷன் இருந்தா நீ டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணிட்டு கிளம்பலாம். இல்லை நோ அப்ஜெக்ஷன்னா…” என்றவன், தனக்கு அருகில் இருந்த டீப்பாய் மேல் கிடந்த ஒரு பத்திரத்தைக் காட்டி இதுல சைன் பண்ணலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.” என்றவன், சற்றும் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் மீதமிருந்த காஃபியை அருந்த தொடங்கினான்.

கணவன் பேச்சை ஆரம்பித்ததும், அதிலும் மீண்டும் டிவோர்ஸ் என்றதும் உள்ளுக்குள் மொத்தமாக உடைந்து கொண்டிருந்தாள் பெண். இப்படித்தானா… இப்படியேத்தான் தன் வாழ்க்கைப் போகுமா என மனதுக்குள் கதறியவள், கண்ணை மூடி அந்த வலியை விரட்ட நினைத்தாள்.

நினைத்தாள்தான் ஆனால் முடியவில்லை, தன்னையும் அறியாமல் இருவருக்கும் நடந்த அன்றைய கூடல் நினைவிலாட, அதற்கு மேல் எதையும் யோசிக்கும் திராணியற்று, பட்டென்று கண்ணைத் திறந்தவள் அங்கிருந்த பேப்பரில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு, “உங்களை அத்த கீழ வரச் சொன்னாங்க, உங்களுக்கு திங்க்ஸ் எடுத்து வைக்கணுமா?” என்றாள் உடைந்து போன குரலில்.

“ம்ம்… எடுத்து வைக்கணும்தான், ஆனா அதை நான் எடுத்து வச்சிக்குவேன். உன் ஹெல்ப் தேவைப்படாது. பட் உன்னோட திங்க்ஸ் வெளியவே இருக்கே, அதை எடுத்து வை. இப்போ என்னோட கபோர்ட்ல ஒரு பக்கம் நான் க்ளீன் பண்ணிருக்கேன். அங்க வச்சிக்கோ.” என்றவன், ஒன்றுமே நடக்காதது போல் காஃபி கப்பை அவளிடம் நீட்டியபடியே சொல்ல,

“நன்றி…” என மீண்டும் விரக்தி குரலில் பேசியவளைக் கூர்மையாகப் பார்த்தவன், “எதுவும் சொன்னாதான் எனக்குத் தெரியும்.” என்றான் இரு பொருள் பட.

“என்ன… என்ன சொல்ல?” என நாகம்மை மீண்டும் திணற, “உன்னோட திங்க்ஸ் வைக்க இடம் வேணும்னு நீதான் கேட்கணும்.” என்றான் கண்டிப்பானக் குரலில்.

அப்போதுதான் அவளுக்குமே தெரிந்தது. வந்த இந்த இரண்டு நாளில் அவளது உடைகளைக் கூட அடுக்கவில்லை என்று. முதல் நாளே அவளுக்கு ஞாபகம் இருந்ததுதான், ஆனால் அன்றைய இரவில் அவன் கொடுத்த அதிர்ச்சியில் அப்படியே மொத்தமாக எல்லாம் மறந்திருந்தாள்.

இப்போது கணவன் சொல்லவும்தான் அதை இன்னுமே அடுக்கவில்லை என்று புரிந்தது. “ஸாரி… நான் கேட்கணும் நினைச்சேன், அப்புறம்…” என இழுத்தவள், “தேங்க்ஸ்” என முடிக்க,

“இட்ஸ் ஓகே!” என்றவன் கீழே சென்றுவிட, அப்போதுதான் சீராக மூச்சே வந்தது பெண்ணுக்கு. அப்படியே தளர்ந்து அங்கிருந்த சுவரில் சாய்ந்தவளின் பார்வை தொடுவானத்தை தொட்டு நின்றது. இவனை என்ன கணக்கில் சேர்க்க என சுத்தமாக புரிபடவில்லை. ஒதுங்கிப் போனாலும் பிரச்சனை, ஒட்டி நின்றாலும் பிரச்சனை, இவனிடம் எப்படி நடந்துகொள்ள? பற்றாக்குறைக்கு லலிதாவும் வந்துவிட்டார். சும்மாவே அவருக்கு இவளைப் பிடிக்காது. இனி அவரோடு எப்படி காலத்தைக் கடத்துவது? பயமும் ஆயாசமும் சேர இப்போது தோள் சாய ஒரு உறவு தேவைப்பட்டது அந்தப் பேதைக்கு. உதடுகள் தன்னால், “அப்பா” என முணுமுணுத்தது.

அந்த நொடி காற்று ஒன்று பலமாக வீச அவளது தோளில் ஒரு மென் கரம் விழுந்தது. பார்க்காமலே அது யாரென்று நாகம்மைக்குப் புரிந்தது. “அம்மு…” என்று உதடுகள் முணுமுணுக்க, நொடியில் தன் முகத்தில் இருந்த உணர்ச்சிகளை மறைத்து ஒரு புன்னகையை உடுத்தி தங்கையின் பக்கம் திரும்பினாள்.

“அக்கா என்னாச்சு? மாமா ஊருக்குப் போறாங்கனு நீ அப்செட்டா இருக்கியாம், ஏன் என்னாச்சு?” என்றாள் தமக்கையின் முகத்தை வருடியபடி.

“அது… அதெல்லாம் இல்ல அம்மு, உனக்கு யார் சொன்னா?” என்றாள் சிரிக்க முயன்றபடி.

“எனக்கு யார் சொன்னா என்ன? ஆனா உண்மைதானே? பாரு, உன் முகம் டல்லடிக்குது, நீ இப்படி இருந்தா மாமா எப்படி கிளம்புவாங்க? ஃபீலாகும்தான், ஆனா அதை அவர் கிளம்பும் போது காட்டணுமா? அங்க போயும் இதுவேதான் யோசிச்சிட்டு இருப்பார். போகிற வரையாச்சும் நார்மலா இருக்கா.” என்ற தங்கையின் பேச்சைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்று கூடத் தெரியவில்லை.

போதும்… இது போதும். இவர்கள் இப்படியே நினைத்துக் கொள்ளட்டும். அதுதான் எனக்கு நல்லது என நினைத்துக்கொண்டாள். அதோடு தற்போதைய நிதர்சனமும் புரிய, அவளுக்குத் தலையை ஆட்டிவிட்டு தங்கையுடன் சேர்ந்து தனது பொருட்களை அடுக்கிவிட்டுக் கீழே வந்தாள்.

“மாமாவுக்கு அத்தைனா ரொம்ப பிடிக்கும் போல, அங்க பாரு.” என காயத்ரி காட்டிய திசையைப் பார்த்த நாகம்மைக்கு, கணவனின் இந்த முகம் வியப்பைக் கொடுத்தது.

ஆம்! அங்கு லலிதாவின் மடியில் படுத்துக்கொண்டு சங்கவியிடம் வமபளந்து கொண்டிருந்தான் ஷ்யாம். லலிதாவோ மகனின் கேசத்தைக் கோதிக் கொடுத்தபடி, இருவரையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த மூன்று நாட்களில் இன்றுதான் கணவன் இப்படி சிரித்துப் பார்க்கிறாள் பெண். அந்த சிரிப்பில் மயங்கிய மனதை இருக்கும் இடம் உணர்ந்து, அதை மறைத்தபடியே தன் அப்பத்தாவின் அருகில் போய் நின்றாள்.

நாகம்மையை அங்கே பார்த்த நொடி லலிதாவின் கண்களில், நொடியில் ஒரு வெறுப்பு வந்து போனது. அது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், பார்க்காமலே நாகம்மையால் உணர முடிந்தது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் நிற்க அப்பத்தாதான், “சம்மந்திம்மா, தம்பி இன்னைக்கு கிளம்பறதா பாலா சொல்லிச்சு, அப்படியே நாங்களும் நாளைக்கு கிளம்பறோம்மா. உனக்கேத் தெரியுமே அங்க போட்டது போட்டபடி வந்துட்டோம். சின்னவளுக்கும் காலேஜ் சேரதுக்கு எழுதிப் போடணும். எல்லா வேலையும் இருக்கு. மாரியால எல்லாம் சமாளிக்க முடியாது. ஆடிக்கு வந்து பொண்ணை அழைச்சிக்குறோம், அதுவரைக்கும் நாங்க வந்து பார்த்துக்குறோம் சரிதானே?” என பேச்சை ஆரம்பிக்க,

“அதனால என்னம்மா, இங்கதான் இவ்வளவு வசதி இருக்கே, மருமகளுக்கு என்ன கஷ்டம் வந்துட போகுது? அதெல்லாம் இருந்துக்குவா. நீங்க கவலைப்படாதீங்க, ஆடிக்கு தம்பிக்கு லீவெல்லாம் இருக்காதுனு நினைக்கிறேன். உங்க பேத்தியை மட்டும் வந்து கூப்பிட்டுக்கோங்க. நமக்குள்ள என்ன சம்பிரதாயம்?” என பொடி வைத்துப் பேச, காயத்ரிக்கு சுர்ரென்று ஏறியது என்றால், ஷ்யாமிற்கு உடல் இறுகிப் போனது.

தாய்க்கு சந்தேகம் வராதது போல் எழுந்தமர்ந்தவன் பார்வை மனைவியின் மேலே இருந்தது. அவளோ துள்ளிக்கொண்டு நின்ற காயத்ரியின் கையை யாரும் அறியா வண்ணம் தடுத்துப் பிடித்துக்கொண்டு குனிந்த வாக்கிலே நின்றாள்.

அப்பத்தாவும் அப்போது பேத்தியின் முகத்தைதான் பார்த்தார். அவள் எந்தளவுக்கு நொறுங்கிக் கொண்டிருப்பாள் என்று வளர்த்த அவருக்குத் தெரியாதா? மீண்டும் தன் பேத்தியை இங்கு கொண்டுவந்து மாட்டிவிட்ட மருமகளை மனதுக்குள் திட்டிக்கொண்டே எழுந்தவர், “சரிதான்மா, நாங்க போய் எல்லாம் எடுத்து வைக்கிறோம், கிள்மபுறதுனு ஆச்சு அதை ஏன் தள்ளிப் போட்டுக்கிட்டு? இன்னைக்கே கிளம்பிக்கலாம்னு பார்க்குறேன். மருமகக்கிட்ட பேசிட்டு வரேன்.” என்றவர் அங்கிருந்து நகர்ந்துவிட, யாரைப்பற்றியும் யோசிக்காமல் தமக்கையின் கையைத் தட்டிவிட்டு காயத்ரியும் அப்பத்தாவின் பின்னாடியே சென்றுவிட, ஷ்யாம் அப்படியே இறுகிப்போய் நிற்க, அங்கிருந்த மற்றவர்களோ லலிதாவை முறைத்துக்கொண்டு நின்றனர்.

சங்கவி தாயை முறைத்துக்கொண்டே தலையைக் கொஞ்சமும் நிமிர்த்தாமல் நின்றிருந்த நாகம்மையின் கையைப் பிடித்து, “அண்ணி…” என்றதும், “அப்பத்தா சொல்றதும் சரிதானே, அவங்களுக்கு எடுத்து வைக்க நான் ஹெல்ப் பண்ணிட்டு வர்ரேன்.” என யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சொல்லிவிட்டு நகரப் போனவளை, “ஸ்ரீ!” என்ற ஷ்யாமின் அழுத்தமான அழைப்பு அங்கேயே நிறுத்தியது.

அப்போதும் அவள் தலையை நிமிர்த்தவில்லை. “அப்பா அப்படியெல்லாம் இன்னைக்கு உடனே அவங்களை அனுப்பிட மாட்டார். நீ மேல போய் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை. நான் இப்போ வர்ரேன்.” என நீ செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயக் குரலில் சொல்ல, கணவனை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தவள் அவர்கள் அறைக்குச் செல்ல, மகனையும் மருமகளையும் அவர்களது பேச்சையும் கவனித்த லலிதாவிற்கு, ‘இவளை விரட்ட முடியாதோ’ என்ற பயம் மெல்ல எட்டிப் பார்த்தது.

You may also like

1 comment

M. Sarathi Rio September 18, 2026 - 6:34 pm

மருமகளை விரட்டிவிட்டு இவங்க என்ன பண்ணப் போறாங்லாம்.. ?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured