அத்தியாயம் – 13
நாகம்மை அறைக்குள் நுழையும் வரை அமைதியாக நின்றிருந்த ஷ்யாம், உள்ளே நுழைந்ததும் லலிதாவைப் பார்த்து, “ம்மா ஒரு காஃபி குடுங்க, தலை வலிக்குது.” என்றபடியே அங்கிருந்த சோபாவில் அமர,
லலிதாவோ, “என்னாச்சு கண்ணா, இரு நான் தைலம் வச்சு விடுறேன், சவி அதுதான் அண்ணா காஃபி கேட்குறான்ல, போய் அத்தைக்கிட்ட வாங்கிட்டு வந்து கொடு.” என மகளிடம் வேலையை ஏவிவிட்டு, ஒன்றுமே நடவாதது போல மகனுக்கு அருகில் தானும் அமரப் போக, அதில் கடுப்பாகி பட்டென்று எழுந்தவன், “ம்மா நான் உங்ககிட்டதான் கேட்டேன், போய் எடுத்துட்டு வாங்க.” என அழுத்தமாகச் சொல்ல, மகனின் இந்த குரலில் லலிதாவிற்கு எப்போதும் சற்றுப் பயம் உண்டு.
அதனால் எதுவும் பேசாமல் எழுந்து சென்றார். ஆனால் முகம் மட்டும் கடுகடுவென இருந்தது. சற்றுமுன் மடியில் படுத்து செல்லம் கொஞ்சியவன், இப்போது விரட்டுவதிலேயே அவன் கோபம் புரிந்தது. இந்த கோபத்திற்கு காரணம் தான் அப்படி பேசியதுதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு, ‘வந்த முதல் நாளே ஆரம்பிச்சிட்டா, இனி பொறுமையா இருக்குறது சரியில்ல.’ என நாகம்மையைத் திட்டிக் கொண்டே காபி போட ஆரம்பித்தார்.
ஷயாமின் அருகில் வந்த சபரியோ, “போய் பாலாவைப் பாருடா, முகமே சரியில்ல.” எனவும், “ம்ம்…” என பெருமூச்சு விட்டவன் தங்கையைப் பார்த்து, “உனக்கு இங்க என்ன வேடிக்கை? போ… போய் ரெஸ்ட் எடு, ட்ராவல் பண்ணது டயர்டாகலையா?” என அவளை விரட்டியவன், அப்பத்தாவும் பாட்டியும் இருந்த அறையை நோக்கி நடந்தான்.
“சபரிண்ணா…” என்ற கலங்கிய சங்கவியைப் பார்த்து, “ஷ்யாம் பார்த்துப்பான் சவிமா, அவன் கிளம்பினதும் நீதான் பாலாவைப் பார்த்துக்கணும். அனுவை எதிர்பார்க்காத, அம்மாவை மீறி அவ கண்டிப்பா செய்யமாட்டா. அப்பா எழுந்ததும் இதைப்பத்தி நான் மேலோட்டமா சொல்லிடுறேன், அவர் பார்த்துப்பார். ஷ்யாம் இன்னைக்கு கிளம்புறான், அவனை டென்சன் பண்ணாம இருக்க சொல்லணும் இந்த அம்மாவை.” என யோசனையாகச் சொல்ல,
“பாவம் ண்ணா, பாலா அண்ணி…” என வருத்தமாக சங்கவி சொல்ல, “ம்ம்ம்…” என்று ஆமோதித்தவன், “இதுல நாம என்னடா பண்ண முடியும்? ஷ்யாம்தான் எல்லாம் பார்த்துக்கணும், நாம ஒவ்வொரு தடவையும் பாலாவுக்கு சப்போர்ட் செஞ்சா அவன் கண்டுக்கமாட்டான். அப்படி விட்டா இவனும் இன்னும் இன்னும் அவளைவிட்டுத் தள்ளிப் போயிடுவான். சரி, நீ போய் ரெஸ்ட் எடு. நானும் காலேஜ் கிளம்பணும்.” என தங்கையின் தலையை வருடிவிட்டு தன்னறைக்குச் சென்றுவிட, சங்கவியும் அங்கிருந்து அகன்றாள்.
தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த காயத்ரியோ, “அப்பத்தா என்ன யோசனை பண்ற? நாம போகலாம், அக்காவையும் அழைச்சிட்டு போகலாம். அவ இங்க நிம்மதியா இருப்பானு எனக்கு தோனல, ரொம்ப பயமா இருக்கு அப்பத்தா.” என்ற காயத்ரியின் கண்களில் இருந்து நீர் கொட்டியது.
“இனி என்ன செய்ய முடியும் அம்மு? அதுதான் அவளை மொத்தமா பாழுங்கிணத்துல தள்ளியாச்சே… அன்னைக்கே படிச்சி படிச்சி சொன்னேன், உன் ஆத்தாக்கிட்ட கேட்டாளா? இன்னைக்கு என் பேத்தி மனசளவுல உடைஞ்சி போய் நிக்கிறாளே? அங்க இருந்த வரைதான் கஷ்டப்பட்டா, இந்த வீட்டுக்கு வந்தாச்சும் நிம்மதியா இருப்பானு நினைச்சேனே? நாம இருக்கும் போதே இவ்வளவு பேச்சு, நம்ம போயிட்டா அவளை உருக்குலைச்சிடுவாங்க போலையே…” என புலம்ப, காயத்ரி இப்போது தேம்பி தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள்.
அப்போது கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்த ஷ்யாமைப் பார்த்து காயத்ரி முகத்தைத் திருப்ப, அப்பத்தாவோ, “வா ராசா…” என்றவாறே சிரிக்க முயன்றார்.
காயத்ரியை ஒரு பார்வை பார்த்தவன் பெரியவருக்கு எதிரில் அமர்ந்து, “பாட்டிம்மா…” என்றவன் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, “சாரி பாட்டிம்மா… அம்மா அப்படி பேசி இருக்கக்கூடாது. அவங்க பேசினதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். தயவுசெய்து தப்பா நினைச்சிடாதீங்க, உங்க பேத்தி என் பொறுப்பு. நீங்க என்னை நம்பலைனாலும், தன் தங்கையோட பொண்ணுதான் தனக்கு மருமகளா வரணும்னு இந்த வீட்டுக்கு கொண்டுவந்த என் அப்பாவை நம்பலாம். அவரை மீறி இங்க எதுவும் நடந்திடாது.” என நீண்ட விளக்கம் கொடுக்க,
“எதுக்கு ராசா மன்னிப்பு, அது இதுன்னு பெரிய வார்த்தை சொல்ற? என் பேத்தி எங்க இருந்தாலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளிச்சு இருந்துக்குவா. என்ன வாயைத் திறந்து எதையும் சொல்லமாட்டா.” என்றவர், “உன்கூட நீ வேலை செய்ற இடத்துக்கு அழைச்சிட்டு போகமுடியாதா ராசா?” என ஏக்கம் தழுவியக் குரலில் கேட்க,
“அங்கயா? அங்க எல்லாம் அவ்வளவு பாதுகாப்பு இருக்காது பாட்டிம்மா.” என அவனும் யோசிக்கமல் சொல்லிவிட, இப்போது காயத்ரி இன்னுமே அழுதாள்.
அந்த அழுகையில் எரிச்சலானவன், “ஃபர்ஸ்ட் அழுறதை நிறுத்து, எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?” என அவளை அதட்ட, அந்த அதட்டலில் அந்த சிறு பெண்ணின் அழுகை அப்படியே நிற்க, அவனைப் பார்த்து முறைத்து நின்றவளின் முகம் மட்டும் கோபத்தில் சிவந்திருந்தது.
காயத்ரியின் இந்த செய்கையில் ஷ்யாமிற்கு கோபத்திற்கு பதிலாக சிரிப்பே வந்தது. சங்கவியும் இப்படித்தான் நடந்து கொள்வாள். இப்போது காயத்ரியும் இன்னொரு சங்கவியைப் போல்தான் தெரிந்தாள்.
அவன் சிரிக்கவும் கடுப்பானவள், “இங்க என்ன காமெடி ஷோவா நடக்குது? ஈஈன்னு நிக்கிறீங்க…” என கத்த, “அம்மு…” என அப்பத்தா அதட்ட, “ம்ச்…” என்றவள் உர்ரென்று ஒரு இடத்தில் போய் அமர்ந்துவிட்டாள். அவள் செய்கையில் மேலும் சிரித்தவன் அப்பத்தாவிடம் பல சமாதானங்கள் சொல்லி அமைதிப்படுத்திவிட்டு வெளியே வர லலிதா காபியுடன் நின்றிருந்தார்.
யோசனையாக அவனைப் பார்க்க அவனோ அவரிடம் காபியை வாங்கியவன் மேலே செல்ல ஆரம்பிக்க, “தம்பி என்ன? தலைவலிக்குது சொன்னியே, எங்க போற? வா, காபியைக் குடிச்சிட்டு இப்படி உட்கார் நான் தைலம் தேச்சி விடுறேன்.” என்றதும் அங்கு நின்றிருந்த முத்தம்மாவோ பல்லைக் கடித்தார் என்றால் ஷ்யாமோ, “அதெல்லாம் எதுக்கு? காஃபி குடிச்சிட்டு கொஞ்சம் படுத்து எழுந்துக்குறேன். நைட் ட்ராவல் பண்ணணும்ல…” என்றவன் நிற்காமல் சென்றுவிட, ‘வந்த முதல்நாளே மகனிடம் எத்தனை மாற்றம்’ என்ற யோசனையில் மகனின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் லலிதா.
காஃபி கப்புடன் உள்ளே வந்தவனோ மனைவி அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு சற்று கரைந்துதான் போனான். கட்டிலின் கீழே தரையில் அமர்ந்து, ஒரு காலை நீட்டி, ஒரு காலை மடக்கி, மடக்கிய கால்முட்டியில் தலையை சாய்த்து அமர்ந்திருந்தாள். அவள் அழுது கொண்டிருந்தாள்கூட அவனுக்கு வலித்திருக்காதோ என்னவோ, ஆனால் அவள் முகத்தில் தெரிந்த பயமும் சோகமும் இனி வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்ற பாவமும், கணவனானவனை சுக்கு நூறாக உடைத்திருந்தது.
ஆனாலும் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளுக்கு எதிரே வந்து அவனும் அமர, அந்த அரவத்தில் நிமிர்ந்தவள் கணவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.
“உங்களுக்கு என்ன எடுத்து வைக்கணும்னு எனக்கு தெரியல, அதான் எடுத்து வைக்கல, நீங்க சொன்னா எடுத்து வைக்கிறேன். என்னென்ன எடுத்து வைக்கணும்?” என சாதாரணமாகக் கேட்க, அவள் கையைப் பிடித்து அந்த காபியைக் கொடுத்தவன், “குடி” என சொல்ல, வேண்டாம் என சொல்ல வந்தவள் அவனின் கோபப் பார்வையில் எதுவும் சொல்லாமல் வாங்கிக் குடிக்க ஆரம்பித்திருந்தாள்.
குடித்து முடிக்கும் வரை அவளையேப் பார்த்தவன், மனைவி கப்பை ஓரமாக வைக்கவும், அவள் கையைப் பிடித்து தனக்கருகில் இழுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான். என்ன நடந்தது என அவள் கிரகிக்கும் முன்னே அவன் அணைப்பில் இருக்கத் திணறிப் போனாள் பெண்.
எப்படி இதற்கு மறுமொழி காட்ட என்றுகூட தெரியாமல் குழம்பி, முதலில் சற்று முரண்டினாலும் அந்த இறுக்கமான அணைப்பில் தொலைந்துதான் போனாள் பெண். தன்னை மறந்து அவனில் தொலைந்தாள் பேதை.
கணவனின் இறுக்கமான அணைப்பில் அதுவரை தனக்குள் இருந்த வலி மெல்ல மெல்ல குறைவதை உணர்ந்தாள் அவள். அதனால் அவனிடமிருந்து விலகத் தோன்றாமல், அவன் அறியாமல் இன்னுமின்னும் வாகாக ஒன்றிக்கொண்டாள் நாகம்மை.
என்னதான் கணவனுக்குத் தெரியாமல் உணர்வுகளை மறைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவன் அணைப்பில் குழைந்து உருகும் பெண்ணவளின் உடல் அவளைக் காட்டிக்கொடுக்க, ஷ்யாமின் முகத்தில் மென் புன்னகை.
மேலும் இறுக்கி அவள் தலையில் அழுத்தமாக முத்தம் வைத்தவன், “எனக்கு திங்க்ஸ் பேக் பண்ணணும் ஸ்ரீ…” என காதுக்குள் சொல்ல, அந்த குரல் அவளை எதுவோ செய்ய, அவனிடமிருந்து பிரிவதற்குப் பதிலாக மேலும் ஒன்ற, அடுத்து நடந்த அனைத்தும் அவர்களுக்கு மட்டுமே உரித்தான இரகசியங்கள்.
மனைவியின் காயத்தை ஆற்றும் மார்க்கமாக அவளுக்குள் உருகிக் குழைந்து, தன் வெம்மையை மனைவிக்கு கடத்தி தடைகள் அனைத்தையும் கலைந்து, அவள் களைத்துப் போகும் வரை விடவில்லை அவன்.
நேரம் காலை பத்தென்று ஷ்யாமின் மொபைலில் அலாரம் அடிக்க, அதில் தன்னுணர்வு வந்தவள் கணவனை எட்டிப் பார்த்தாள். அவனோ ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, அவனிடமிருந்து பிரிந்து தள்ளி நின்று தூங்கும் கணவனையேப் பார்த்திருந்தாள்.
பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு பிடித்தத்திற்கான அனைத்திலும் ஈடுபாடு காட்டும் இவனை, என்ன செய்ய என்று யோசித்தவளின் முகத்தில் ஒரு அழகான புன்னகைதான்.
குளித்து கீழே வர பரந்தாமனும் அவருடன் அப்பத்தாவும் அமர்ந்திருக்க, தீவிரமாக ஏதோ பேசுவது புரிந்தது. இருவரையும் கடந்து சமையலறைக்குள் செல்ல, முத்தம்மாதான் அனைத்தையும் ஒதுக்கிக் கொண்டிருந்தார். அவர் மட்டுமே அனைத்து வேலைகளையும் பார்த்திருக்க வேண்டும் என்பது பார்த்ததுமே புரிந்துவிட, “சாரி முத்தும்மா, அது… அதுவந்து…” எனத் திணற, “எனக்கு இதெல்லாம் பழக்கம்தான், அதோட இவ்வளவு நேரம் காயத்ரி எனக்கு உதவிட்டுத்தான் போனா. எல்லாரும் சாப்பிட்டாச்சு, நீ போய் உட்காரு உனக்கு எடுத்துட்டு வர்ரேன்.” என அவளை சமாதானப்படுத்தினார்.
“ம்ம்… அது அவர்… அவரும்… வந்ததும் சேர்ந்து சாப்பிட்டுக்குறோம் முத்தும்மா.” என வெட்கம் மேலிட தயங்கி தயங்கிப் பேச, அதில் சிரித்தவர், “அவர்னா யாரு பாலாம்மா? ஏன் அவரு இத்துப்போன சுவருனு சொல்லிட்டு இருக்க? நாங்க எல்லாம் பாவானுதான் வீட்டுக்காரரை சொல்லுவோம்…” சிரிப்புடன் இழுக்க, “போங்க முத்தும்மா நீங்க… ரொம்ப கிண்டல் பண்றீங்க…” என சொல்லிவிட்டு சிவந்திருந்த முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ள, அப்போதுதான் அந்த பெரியவருக்கு சற்று ஆசுவாசமானது.
அடுத்து ஷ்யாம் கிளம்பும் வரைக்குமே இந்த இலகுவான மனநிலையில்தான் இருந்தாள் நாகம்மை. சபரி தங்கையிடம் சொன்னது போலவே தந்தையிடம் பேசியிருக்க, அவர் மனைவியிடம் என்ன பேசினாரோ, அதற்குப் பிறகு லலிதா வாயைத் திறக்கவே இல்லை.
ஷ்யாம் திரும்பி வர அடுத்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம் என்பதால், நாகம்மையும் காயத்ரியும் உதவ மதிய உணவை பெரிய விருந்தாகவே செய்திருந்தார் முத்தம்மா.
கிளம்பும் வரைக்குமே அவளைத் தன் பார்வை வட்டத்திலேயே வைத்திருந்தான் ஷ்யாம். இன்றையக் கூடலுக்குப் பிறகு நாகம்மையிடம் ஒரு தெளிவு வந்திருந்தது என்றால், ஷ்யாமிடம் குழப்பம் மட்டுமே குடிகொண்டது.
இந்த மனநிலையில் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டிய கருத்தடை மாத்திரைகளை எடுக்க நாகம்மை மறந்திருக்க, நினைவூட்ட வேண்டியவனும் இருந்த குழப்பத்தில் மறந்திருந்தான். இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்க மறந்துவிட்டனர்.
மாலை ஆறு மணிக்கு ஃப்ளைட் என்தால் நான்கு மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பியிருந்தான் ஷ்யாம். வீட்டிலேயே அனைவரிடமும் விடை பெற்றிருந்தான். அதனால் அவன் மட்டுமே கிளம்ப, கலங்கிய கண்களுடன் விடை கொடுத்தாள் பெண்.
மனைவியின் கலங்கிய முகம் அந்த ஆடவனின் உயிரையும் உருக்க, தன்னையேக் கட்டுப்படுத்தும் இந்த புதுவிதமான உணர்வில் கோபம் தலைக்கேறியது ஷ்யாமிற்கு. அதன் விளைவாக அடுத்து வந்த நாட்கள் மொத்தமும் தன் வேலையில் கவனத்தை செலுத்த, நடக்கப் போகும் விபரீதங்களை அறியாமல் மனைவி என்று வந்தவளை சுத்தமாக மறந்திருந்தான்.
1 comment
ஷ்யாம் சரியான காரியவாதி, அவனுக்கு தேவையான விஷயத்தை, தேவையான நேரத்துல மட்டும் யூஸ் பண்ணிக்கிற சமயோஜீதவாதி.
😉😉😉
CRVS (or) CRVS 2797