Home Antiheroகாதலி – 14

அத்தியாயம் – 14

ஷ்யாம் கிளம்பிய பிறகு நாகம்மையை யாரும் தனியே விடவில்லை. அன்றைய இரவில் தங்களது அறைக்குப் போகக்கூட பயந்து, காயத்ரியுடனும் பாட்டியுடனுமே தங்கிக் கொண்டாள். அடுத்த நாள் அப்பத்தாவும் காயத்ரியும் கிளம்ப ஆயத்தமாக, மனதுக்குள் வருத்தம் ஆழிப்பேரலையாக பொங்கினாலும், அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகமாகவே அனுப்பி வைத்தாள்.

அதற்கடுத்த நாளில் இருந்து லலிதாவுடனான அவளது சோதனைக் காலம் ஆரம்பித்திருந்தது. வீட்டில் இருப்பவர்கள் அவரவர் வேலைகளுக்கு என கிளம்ப பரந்தாமனும் அவர்களது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ட்ரஸ்ட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். அதற்காக காலையில் சென்று மதிய உணவிற்குத்தான் அவரும் வருவார். அந்த நேரத்தில் லலிதாவும் முத்தம்மாவும் நாகம்மையும் மட்டுமே வீட்டில் இருக்க, முத்தம்மாவை இருக்கச் சொல்லிவிட்டு அத்தனை வேலைகளையும் மருமகளையே ஏவ ஆரம்பித்தார் லலிதா.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

முத்தம்மா மறுப்பு சொன்னாலும் நாகம்மையே, “பரவால்ல முத்தும்மா…” என தடுத்து விடுவாள். பரந்தாமன் வந்ததும் அவரும் அவளும் சேர்ந்து தோட்ட வேலைகளை செய்வர். இது அவளுக்குப் பிடித்தமும் கூட என்பதால், முகத்தில் எந்த முகச்சுணக்கமும் காட்டியதில்லை.

“அதுதான் நீ சும்மாதான இருக்க, எல்லா வேலையும் நீயே செஞ்சிடுற. அப்புறம் எதுக்கு வேலைக்கு ஆளு? அவங்களுக்கு ஏன் வெட்டி சம்பளம்?” என்று அவளிடமே சொல்லிவிட்டு, அடுத்த ஒரே வாரத்தில் வேலைக்காரர்களையும் நிறுத்தியிருந்தார் லலிதா.

முத்தம்மாவிற்கு எதற்கென்று புரிய, லலிதாவிடம் பேசியும் அவர் கேட்கவில்லை. அதனால் நாகம்மையை முடிந்தளவு தன் பார்வை வட்டத்திலேயே வைத்திருந்தார். வேலைகளையும் முடிந்தளவு குறைக்க வைத்திருந்தார். இதில் பெருங்கொடுமை இரவு அனைவரும் உண்ட பிறகே அவள் உண்ண வேண்டும் என்று சொல்லியிருக்க, பலநாள் பழைய சாதம்தான் அவளுக்கு இரவுணவாகிப் போனது.

சங்கவி தன்னுடன் அமர்ந்து சாப்பிட பலமுறை வற்புறுத்தியும் கேட்டதில்லை. முத்தம்மாவும் பரந்தாமனும் சக்கரை நோயாளிகள் என்பதால் இரவு நேரமே உணவெடுத்துக் கொள்ள, இது எதுவுமே பரந்தாமனுக்கு தெரியாமல் போயிருந்தது. இதெல்லாம் அவளுக்குப் பழக்கம் என்பதால் எந்த மறுப்போ, சுணக்கமோ காட்டவில்லை.

இப்போதெல்லாம் நாகம்மையின் ஜாகை முத்தம்மாவின் அறையென்றாகிவிட, அவள் இரவு தாமதமாக வருவதை அறிந்து அவரும் விசாரிக்க சிரித்தே மழுப்பியிருந்தாள்.

காயத்ரி அவ்வப்போது வீட்டு போனுக்கு அழைத்துப் பேசுவாள். மாரி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என பேச, லலிதா அவள் பேசி முடிக்கும் வரை அந்த இடத்தை விட்டு அகலமாட்டார். அதனால் யாரிடமும் எதைப்பற்றியும் நாகம்மை வாய் திறந்ததில்லை. நாட்கள் இப்படியே நகர அன்று ஒரு ஞாயிறு அனைவரும் கோவிலுக்குப் போகலாம் என முடிவெடுத்திருந்தனர்.

அன்று கணவனோடு வெளியில் சென்றதுதான், அதன்பிறகு இன்றுதான் செல்லப் போகிறோம் என்று தோன்றவும், வெகுநாட்கள் கழித்து நாகம்மையின் முகத்திலும் ஒரு மலர்வு வந்திருந்தது.

அவளையேக் கவனித்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் எப்படி கல்லு மாதிரி இருக்கா, எப்படி அவளைத் தடுப்பது என யோசிக்க ஆரம்பித்திருந்தார். அவரின் நல்ல நேரமோ, இல்லை நாகம்மையின் கெட்ட நேரமோ முத்தம்மாவிற்கு தலை சுற்றல் வந்து மயங்கிவிட, வீடே அதிர்ந்து போனது.

“அண்ணி… அண்ணி…” என அவர் கன்னத்தைத் தட்டிய லலிதா, “சவி குளுக்கோமீட்டர் எடுத்துட்டு வா, சுகர் செக் பண்ணு.” என சத்தமிட, அவளும் அடுத்த நொடி எடுத்து வந்து பார்க்க சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்திருந்தது. உடனே தேவையான முதலுதவியைச் செய்து படுக்கவைக்க, அவருக்கோ கிளம்பும் நேரம் இப்படியாகிவிட்டதே என்ற தர்மசங்கடம்.

அனைவரையும் பார்த்து, “நீங்க கிளம்புங்க, இனி ஒன்னுமில்ல. நான் பார்த்துக்குவேன்.” என சொல்ல, பரந்தாமன் எதுவோ மறுத்து சொல்ல வரும் முன்னே, “என்ன அண்ணி நீ? அதெல்லாம் தனியா இருக்க வேண்டாம், பாலா உங்ககூட இருக்கட்டும், நாங்க போயிட்டு வந்துடுறோம். பூஜைக்கு வேற கொடுத்துருக்கு, போகாம இருக்க முடியாது.” என யாரும் மறுக்க முடியாதபடி பேச, நாகம்மையின் முகத்தில் நொடியில் வந்து போன ஏமாற்றத்தை யார் பார்த்தார்களோ, இல்லையோ பரந்தாமனும் சபரியும் பார்த்திருந்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இப்போது லலிதாவைக் கவனிக்க, அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. ‘ச்சே என்ன ஜென்மம்’ என நினைத்தபடியே, “ம்மா கொஞ்சம் சும்மா இருங்க, அத்தை இப்ப எப்படி இருக்கு? உங்களுக்கு ட்ராவல் பண்ண முடியுமா?” என சபரி கேட்க,

“ம்ச்… சபரி என்ன இது? அத்தைக்கு முடியல…” என பேசிய தாயை முறைத்தவன், “சும்மா இருங்கனு சொன்னேன், அத்தை நீங்க சொல்லுங்க ஓகேவா?” எனவும்,

“சபரி நான் சொல்றது உனக்கு விளங்கலையா? அவங்க அலைய வேண்டாம். இப்போ இவ வீட்டுல இருந்தா என்ன? எப்படா ஊர் சுத்தலாம்னு கனவு கண்டுட்டு இருந்திருப்பா போல, போகலாம் சொன்னதும் ஆளுக்கு முன்னாடி கிளம்பி நிக்கிறா. அவளும் அவ கட்டியிருக்குற துணிமணியும்…” என தன் இன்னொரு முகத்தை வெளியில் காட்ட கேட்டவர்கள் அதிர்ந்து போயினர் என்றால், அப்போதும் நாகம்மையின் முகத்தில் புன்னைகைதான். ஆனால் அந்த புன்னகையின் பின்னால் இருக்கும் வலி, அதை அறிந்தான் சபரி.

“மாமா நீங்க எல்லாரும் கிளம்புங்க, நான் முத்தும்மாகூட இருந்துக்குறேன். அத்தை சொன்ன போல அவங்க அலைய வேண்டாம்.” என்றவள் முத்தம்மாவிடம் திரும்பி, “முத்தும்மா வாங்க கொஞ்ச நேரம் படுப்பீங்களாம்.” என அவரைக் கைத்தாங்கலாக தூக்கப்போக, அப்போது சங்கவியும் வந்து உதவி செய்ய, சபரி தன் மனைவியை முறைத்துப் பார்த்தான்.

“ப்பா, நானும் அனுவும் வீட்டுல இருக்கோம். இல்ல சவியும் நானும் இருக்கோம், நீங்க கிளம்புங்க. வந்ததுல இருந்து அந்த பொண்ணு வெளிய எங்கேயும் போனதே இல்ல. இன்னைக்கும் கிளம்பி வந்த பொண்ணை வேண்டாம்னு சொல்றது சரியில்ல.”

“என்னங்க, பூஜையே அத்தை நமக்காகத்தான் கொடுத்துருக்காங்க, நாம போகாம எப்படி? ஒரு நாள்தான பாலா இருக்கட்டும், இன்னொரு தரம் போகும் போது அழைச்சிக்கலாம்.” என அனுவும் அத்தைக்கு ஏற்றார் போல பேச,

“இப்போ நீ வாய மூடல, என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி வரும்.” எனக் கடித்தப் பற்களுக்கிடையே சபரி வார்த்தைகளைத் துப்ப, அரண்டு பார்த்தாள் அனு. அதற்குள் அறைக்குச் சென்ற நாகம்மை, முத்தம்மாவைப் படுக்க வைத்துவிட்டு தானும் உடையை மாற்றிவிட்டு வந்துவிட, லலிதாவிற்கு எதையோ சாதித்த உணர்வு.

“சரி கிளம்புங்க, அதுதான் அவ இருக்குறதுனு முடிவாகிடுச்சே, இன்னும் என்ன வேடிக்கை? ஐயர் காத்திட்டு இருப்பார்.” என ஒன்றுமே நடவாதது போல லலிதா பேச, ‘ச்சே!’ என்றாகிப் போனது அனைவருக்கும். அப்போது உள்ளிருந்து வந்த சங்கவியும் உடை மாற்றியிருக்க, அவள் முகத்தில் தப்பு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு.

“நானும் அண்ணிகூட இருக்கேன் டாடி, நீங்க போயிட்டு வாங்க.” என்று ஒரே முடிவாக பரந்தாமனைப் பார்த்து கூற, லலிதா ஏதோ சொல்ல வர, “ஓகேடா பார்த்து இருங்க, எனி எமர்ஜென்சி கால் பண்ணுங்க. நாங்க வந்துடுறோம்.” என்ற பரந்தாமன் முன்னே நடக்க, அவரை எதிர்த்து ஒன்றுமே பேசமுடியாத லலிதா மருமகளை முறைத்துவிட்டு கிளம்பிவிட, ஒருவழியாக அனைவரும் கிளம்ப சபரி, மனைவியிடம் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன பண்ற அனு? நீ பண்றது எல்லாம் சரியா?” என மனைவியைப் பார்த்து நேர்ப்பார்வையில் கேட்க அதில் தலை குனிந்தவள், “அத்தையை மீறி நான் எதுவும் பண்ண மாட்டேன் சபரி. உங்களுக்கே தெரியும், என்னைப் பொறுத்தவரை அத்தை எனக்கு நல்ல மாமியார்தான். அதோட எனக்கு இருக்குற பிரச்சனையை அவங்க ஒரு நாளும் பெருசா நினைச்சது கிடையாது. இதே வேற ஆளா இருந்திருந்தா எனக்கு டைவர்ஸே வாங்கி கொடுத்துருப்பாங்க. ஆனா அத்தை அப்படி எதுவும் பண்ணல, எனக்கு உறுதுணையா இருக்காங்க.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவங்கள எதிர்த்து எதுவும் பேசமாட்டேன், செய்யவும் மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.” என தெளிவானக் குரலில் பேச, அவளை முறைத்துப் பார்த்தான் சபரி.

“இதே நிலமை நாளைக்கு உனக்கும் வரலாம், ஆனா அப்போ பாலா உன்னை மாதிரி கண்டுக்காம, அமைதியா எல்லாம் போகமாட்டா.” என்றவன், அதன்பிறகு வீடு வரும் வரைக்குமே எதுவும் பேசவில்லை.

வீட்டில் முத்தம்மா உறங்கும் வரை பொறுமையாக இருந்த சங்கவி, நாகம்மையிடம், “அண்ணி சாரி, சாரி. நான் உங்களைக் கவனிச்சிருக்கணும், கவனிக்காம விட்டது என் தப்புதான். அம்மாவுக்கு உங்களைப் பிடிக்காதுனு தெரிஞ்சும் நான் கவனிக்காம…” என அடுத்து என்ன பேச என்று தெரியாமல் திணற,

“அட ஏன்பா நீ சாரி எல்லாம் சொல்ற? சரி வா, உனக்கு தலைக்கு மசாஜ் பண்றேன்.” என பேச்சை மாற்ற,

“ம்ச்… அதெல்லாம் வேண்டாம் அண்ணி. நீங்க சொல்லுங்க, நேத்து பேசும் போது அண்ணா என்ன சொன்னான்?”

“நேத்தா? அவர் எங்கிட்ட பேசவே இல்லையே? அப்படி உங்கிட்ட சொன்னாரா?”

“இல்லை இல்லை… அவன் சொல்லிட்டாலும்… எப்படியும் இது தானே உலக வழக்கம். அதுதான் நைட் நீங்க பேசுவீங்கனு நினைச்சு கேட்டேன், அப்போ எப்போ பேசுனீங்க?”

“இங்க இருக்கும் போது பேசினதுதான். வேற எப்படி பேச? எங்கிட்டதான் அவர் நம்பர் இல்ல, அதோட எனக்கு போனும் இல்லை.” என எதார்த்தமாகச் சொல்ல, கேட்டவளுக்கு எப்படி இருக்கிறதாம்? “அண்ணி…!” என்றவளுக்கு அடுத்த வார்த்தையே வரவில்லை.

ஒருவாறு தன் அதிர்ச்சியை மறைத்தவள், “ஏன் அண்ணி இப்போ எல்லாம் எல்லாருக்கிட்டயும் மொபைல் இருக்கண்ணி. உங்ககிட்டயும் இருக்குனு நினைச்சேன், இல்லைனு எனக்குத் தெரியவே இல்லண்ணி, சாரி வெரி சாரி அண்ணி…”

“ஹேய் என்னப்பா நீ! எனக்கு அவசியமில்லனு தோனுச்சு, அதனால வச்சிக்கல. அதோட உனக்குத் தெரியுமா, அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அப்புறம் எதுக்கு, வீண்செலவும் கூட…” என இதெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்பது போல பேச, சங்கவியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

வீட்டில் எல்லோரிடமும் ஒரு லேப், ஒரு போன் என்று இருக்கும், அப்படி இருக்க நாகம்மையிடம் ஒரு போன்கூட இல்லாதது ஏதோ மிகப்பெரும் தவறு செய்து விட்டது போல தோன்றியது. எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம், அன்றே சபரி சொன்னானே நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. ஆனால் சிறுபிள்ளைத்தனமாக இருந்து அண்ணியைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே என வருந்தியபடியே, “அத்தைக்கிட்ட, காயத்ரிகிட்ட எல்லாம் எப்படி பேசுவீங்க?” என பதில் தெரிந்தும் உள்ளே போனக் குரலில் கேட்க,

“அதுதான் வீட்டு போன் இருக்கேமா, அதுல பேசிக்குறேன்.” என சாதாரணமாக சொல்ல, அப்போ ப்ரைவசியே இருக்காதே என வாய்வரை வந்ததை அப்படியே விழுங்கி, இதுபற்றி அப்பாவிடம் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டாள். அடுத்து நாகம்மை வருத்தப்படும்படி எதையும் பேசாமல் தன் கல்லூரி, படிப்பு என பேச ஆரம்பித்து பேச்சு நாகம்மையின் படிப்பில் வந்து நின்றது.

“அண்ணி, நீங்க சொல்லுங்க உங்க ஸ்டடீஸ் பத்தி, நீங்க காலேஜ் டிஸ்கன்டின்யூனு காயு சொன்னா…”

“ம்ம்ம்…” என்றவளின் முகத்தில் அப்படியொரு வேதனை. சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “அப்பாவுக்கு நான் ஒரு லாயர் ஆகணும்னு ஆசை. அதனால மெரிட்ல வந்த மெடிக்கல் சீட்டை விட்டுட்டு லா காலேஜ் சேர்ந்தேன். ஒரு வருஷம் நல்லாத்தான் போச்சு. அப்புறம் ஒரு நாள் அப்பா எங்களை விட்டு போயிட்டார். அவர் இல்லைனு நம்பவே கொஞ்ச நாளாச்சு. எங்க வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு. வீட்டை நான்தான் பார்த்துக்க வேண்டிய சூழல். அப்பாவே இல்ல, இந்த படிப்பு எதுக்குனு வந்துட்டேன்.” என்றவளின் குரலில் அத்தனை விரக்தி.

“நீங்க என்ன மார்க் அண்ணி ட்வெல்த்ல? மெரிட்ல மெடிக்கல் சீட் கிடைச்சதுனா உங்க ஸ்கூல் ஃபர்ஸ்டா நீங்க?”

“ம்ச்…” என்றவள், “அந்த வருஷம் ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஆனா என்ன யூஸ்? சரி, நான் போய் முத்தும்மாவை பார்த்துட்டு டீ வைக்கிறேன்.” என சென்றுவிட, அந்த குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்த சங்கவியின் மனதில் பெரும்பாரம்.

‘ஸ்டேட் ஃபர்ஸ்ட்! லாயர் கனவு!’ இதுவே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இன்று இரவு ஷ்யாமிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவள், உடனே சபரிக்கு ஒரு மெசேஜ் போட்டாள், புதிதாக வந்த மாடலில் ஒரு மொபைல் வேண்டும் என்று.

ஆயிற்று ஷ்யாம் டார்ஜிலிங் வந்து முழுதாக இருபது நாட்கள் முடிந்திருந்தது. இந்த இருபது நாளில் உண்மையிலேயே வேலைப்பளு அதிகம்தான் அவனுக்கு. தூங்கும் நேரம் கூட குறைவாகிப் போயிருந்தது. இதில் எங்கே வீட்டைப்பற்றி, மனைவியைப்பற்றி யோசிக்க? ஆனால் மனதின் ஓரம் அவளின் கலங்கிய கண்களும் கசங்கிய முகமும் வந்து பாடாய்படுத்தியது.

வந்த அன்று சபரிக்கு அழைத்து சொல்லியிருந்ததோடு சரி, அதன்பிறகு யாரிடமும் பேசவில்லை. சங்கவிதான் அடிக்கடி மெசேஜ் செய்து கொண்டிருப்பாள். ஆனால் அதில் மனைவியைப்பற்றி ஒரு செய்தியும் இருக்காது. இவனுக்கும் கேட்க வேண்டும் என்று இருந்தாலும் சின்னப் பெண்ணிடம் எப்படி கேட்க? அதனால் கேட்கவில்லை.

சரி அவன்தான் பேசவில்லை, அவளாவது அழைத்து பேசியிருக்கலாம் என பலநாள் கோபத்தில் இருக்க, அவளிடம் போனே இல்லையென்று சவி பேச்சுவாக்கில் சொல்லும் போதுதான் தெரிந்தது. மூன்று நாட்கள் அவளுடன் இருந்து எதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் வந்து விட்டோமே என அவனுக்கு அவனே சாடிக்கொண்டான்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நயனா வேறு இந்த வாரம் ட்ரீட்மென்டுக்காக டெல்லி வருவதாக இருக்க, அவளையும் போய் பார்க்க வேண்டும். ப்ரனீத் பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதன்பிறகுதான் ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அதோடு ஆன்லைனில் மனைவிக்கு ஒரு மொபைல் வாங்கி அனுப்பலாம் என்று நினைத்து, பேச்சுவாக்கில் லலிதாவிடம் பேசும்போது சொல்லிவிட, ‘ஏன், எதற்கு, அவள் கேட்டாளா’ என காச்மூச்சென்று அவரும் கத்திவிட, போகும் போது வாங்கிப் போகலாம் என்று நினைத்து ஆர்டர் செய்யும் எண்ணத்தையே விட்டுவிட்டான்.

இப்படியே இருவரின் நாட்களும் விரைய அன்றைய வேலையை முடித்து அப்போதுதான் ஷ்யாம் தனக்கான குவாடர்சுக்குள் நுழைந்தான். அப்போது, “ஹாய் ஷ்யாம், என்னாச்சு லேட்?” என்றபடியே வந்தான் ஷ்யாமுடன் ஒன்றாக பணியில் இருக்கும் சதீஸ்.

“ஹாய் சதீஸ், உனக்கென்னப்பா குடும்பஸ்தன்? விட்டுடுவார், என்னை இந்த சீப் விட்டாத்தானே? புழிஞ்சி எடுக்குறார் மனுஷன்.” என சிரித்தபடியே இவனும் பதில் சொல்ல,

“இதுக்குத்தான் சொல்றது, ஃபேமிலியா வந்துருக்கணும் ஷ்யாம் பையா. பாருங்க, இவரை டியூட்டி முடிஞ்சதும் டான்னு வீட்டுல இருப்பார். உங்க சீஃப்பும் சீக்கிரம் போங்க, உங்க வொய்ஃப் தனியா இருப்பாங்கனு அனுப்பி வைப்பார்.” என ஷ்யாமைக் கிண்டலடித்தபடியே வந்தாள் ஸ்வேதா. சதீஷின் மனைவி. இவர்களும் தமிழ்தான், ஊர் திண்டுக்கல்.

“அவனைக் கிண்டல் பண்ணலைனா உனக்கு வேலையை ஓடாதா? அவனே டயர்டா வந்துருக்கான், என்ன பேசுற?”

“அடேங்கப்பா! இப்போ நான் என்ன சொன்னேன் உங்க ஃப்ரண்ட? வொய்ஃப்பை கூட்டிட்டு வாங்கனு சொன்னேன், அது தப்பா? பாருங்க, நேரம் கெட்ட நேரத்துல வந்து, இதுக்குப்பிறகு சாப்பிட்டு, தூங்கி உடம்பு என்னத்துக்கு ஆக? நல்ல எண்ணத்துல ஒன்னு சொல்லக்கூடாது. உடனே வரிஞ்சிக்கட்டிட்டு வந்துடணும்?”

“உங்க சண்டையைக் கொஞ்சம் நிறுத்துங்க சாமிகளா… நீங்க போடுற சண்டையைப் பார்த்தே எனக்கு என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரணும்ன்ற ஆசையேப் போச்சு.”

“என்ன…?” என சதீசும் ஸ்வேதாவும் ஒன்றாக அலற, “பின்ன என்னடா, பார்க்குற நேரமெல்லாம் எலியும் பூனையுமா இருந்தா, எனக்கு என்ன தோனும்?” என ஷ்யாம் கண்சிமிட்டி சொல்ல, “அடப்பாவி…!” என்றனர் மீண்டும் ஒன்றாக.

“சரி ஜோக் எல்லாம் விடு, எப்போ உன் ஸ்ரீயை அழைச்சிட்டு வரப்போற? இப்படியே எத்தனை நாள் இருக்க முடியும்? உன் கோபம், பயம் எல்லாம் தூக்கிப்போட்டுட்டு அவங்களை அழைச்சிட்டு வா ஷ்யாம். உன்கூட இருக்குற மாதிரி இருக்குமா? இந்த வயசை விட்டுட்டு அப்புறம் எப்போ ஒன்னா இருக்க போறீங்க?” என நண்பனாக சதீஸ் அட்வைஸ் செய்ய, அமைதியாக இருந்தானே தவிர பதில் சொல்லவில்லை ஷ்யாம்.

அன்று பாட்டி கேட்டதற்கு பட்டென்று பதில் சொன்னவனால் இப்போது நண்பனிற்கு பதில் சொல்ல முடியவில்லை. மனைவியின் சூழ்நிலையை தான் பயண்படுத்திக் கொண்டதாக ஒரு குற்ற உணர்வு. அதனால்தான் அவளிடம் பேசத் தயக்கம். இப்போது இங்கு வந்த பிறகு அவளை மிகவும் தேடும் மனதையும் உடலையும் அடக்கும் வழி தெரியாமல்தான், வேலை வேலை என ஓடிக் கொணடிருக்கிறான்.

ஷ்யாமின் அமைதியைக் கவனித்த ஸ்வேதா, “பையா, ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க, நான் டிஃபன் எடுத்து வைக்கிறேன். இவரும் இன்னும் சாப்பிடல.” என அவன் கவனத்தைக் கலைக்க,

“ஸ்வே, உனக்கு எதுக்குமா கஷ்டம்? நான் பார்த்துப்பேன்ல…” என சங்கடமாக பதில் சொல்ல, அதில் காளியாக மாறியிருந்தாள் ஸ்வேதா. அதைப் பார்த்து சிரித்தவன், “சரி சரி வரேன், அதுக்கு ஏன் இப்படி அனபெல் போல முறைக்கிற? டேய் சதீஸ் நீ தெய்வம்டா…” என்றவன் ஸ்வேதா அடிக்க வருவதற்குள் வீட்டுக்குள் ஓடியிருந்தான்.

ஏனோ மனைவியைப் பற்றி பேசியதும் அந்த நேரம் மனம் இதமாக, அன்றைய நாளும் அதே போல் கழிய, அடுத்த நாள் சங்கவி போன் செய்தபோது அதுவரை இருந்த இதமெல்லாம் மொத்தமாகத் தொலைய, நயனாவைப் பார்க்க போகவேண்டும் என்பதைக்கூட மறந்து உடனே சென்னை கிளம்பியிருந்தான் மனைவியின் மீது முழுக் கோபத்தோடு.

You may also like

1 comment

M. Sarathi Rio September 20, 2026 - 7:29 pm

அடப்பாவி..! அவ மேல என்னடா தப்பு,..? நீங்க மொத்தப் பேரும் தான் தப்பு. கோபம் வந்தால் உங்க அம்மா மேல காட்டு, அதை விட்டு பொண்டாட்டி மேல ஏன் காட்டுறே..?
கிறுக்குப் பிடிச்சவனே.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured