Home Antiheroகாதலி – 15

அத்தியாயம் – 15

வயல்பட்டி

வானமெங்கும் கருமேகங்கள் சூழ்ந்து, அந்தி பகல் நேரம், இரவிற்கு நிகராக மாறி மழை வருவதற்கான அறிகுறியைக் காட்டிக் கொண்டிருந்தது. ‘மழ அடிச்சி ஊத்தும் போலயே’ என வானத்தை அன்னாந்து பார்த்தவாறே, மோட்டாரை நிறுத்திவிட்டு கரும்பிற்கு பாய்ந்து கொண்டிருந்த நீரை தென்னைகளுக்கு திருப்பிக் கொண்டிருந்தான் முருகேசன்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

இன்னும் சற்று நேரத்தில் வானம் பொத்துக்கொண்டு ஊத்தும், அதற்குள் ஊருக்குள் சென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “மாமா… மாமா…” என்ற அழைப்புக் கேட்டு நிமிர்ந்து பார்க்க, தூரத்தில் காயத்ரியும் அவள் தங்கையும் வந்து கொண்டிருந்தார்கள்.

‘இந்த நேரத்தில் எங்கே வருகிறார்கள், அதிலும் மழை எப்போது வேண்டுமென்றாலும் அடித்து ஊற்றும் வாய்ப்பிருக்கிறது தெரிந்தும் ஏன்’ என யோசித்தபடியே, மண்வெட்டியை ஓரமாகப் போட்டவன், அவர்களுக்கு முன்னே வேகமாக சென்று அங்கிருந்த மோட்டர் ரூமிற்குள் அழைத்துச் சென்றான்.

“என்ன அம்மு இந்த நேரத்துல, அதுவும் வயக்காட்டுக்கு… யாருக்கும் எதுவுமா?” என கேட்க,

“இல்ல மாமா, நாளைக்கு ரிசல்ட் வருதுல மாமா, அதான் உங்ககிட்ட ஞாபகப்படுத்திட்டு போலாம்னு…” என இழுக்க,

“அட கிறுக்கு பிடிச்ச கூவைகளா! எனக்குதான் முன்னமே தெரியுமே, நான் வந்து சொல்லமாட்டேனா? இதுக்கு ஏன் இம்புட்டு தொலவு வரீங்க? பாரு வானம் இருட்டிக்கிட்டு கெடக்கு, மழை இப்ப வந்துடும். இந்த மழைல எப்படி நனைஞ்சிட்டே வீட்டுக்கு போவீங்க? படிச்சா மட்டும் போதுமா, அறிவு வேணாமா?” என கண்டமேனிக்கு கத்தியவன், “சின்னப் புள்ளையும் இழுத்துட்டு வந்துருக்க, கொஞ்சமும் அறிவு இல்லடி உனக்கு…” என்றவன், சின்னவளை இழுத்து ஓரமாக நிறுத்தினான்.

“அது மாமா… அக்கா போன பிறகு நீ வீட்டுப்பக்கம் வரவே இல்ல, எங்கிட்டவும் பேசல. அப்பத்தாவும் அம்மாக்கூட சண்ட போட்டுட்டு அங்க வந்துடுச்சு, அதுக்கும் நீ வந்து என்னனு கேட்கல. அதான் உனக்கு கோவமோ என்னமோனு…” என இப்போதும் இழுக்க,

“செவுல சேர்ந்து நாலு விட்டேன்னா தெரியும், அப்பத்தா உங்கிட்ட சொல்லலையா? நான் இங்கனவே இல்லத்தா, விவசாயிகள் போராட்டம் நடக்குல டெல்லில, அங்கன போய் ஒரு மாசம் ஆச்சு. முந்தாநாள்தான் வந்தேன். இதை நீ எனக்கு போன் போட்டுருந்தா சொல்லிருப்பேனே அம்மு.” என முடிக்கவும், காயத்ரி அழ ஆரம்பித்திருந்தாள்.

“ஏய் என்ன அம்மு, எதுக்கு இப்படி கண்ண கசக்குற? எதுவா இருந்தாலும் சொல்லுத்தா பாத்துக்கலாம், எங்காத்தா எதுவும் உன்ன வஞ்சிச்சா? இல்ல கெழவி திட்டிச்சா? என்ன புள்ள, சொல்லு, சொல்லிட்டு ஒப்பாரி வை.” என அவன் பேசப்பேச, காயத்ரியின் அழுகை கூடியதே ஒழிய குறையவில்லை.

“ஏய் சின்னக்குட்டி, எதுக்குடி இவ இந்த அழு அழுறா?” என சின்னவளிடமும் கேட்க, “அது மாமா நீங்க பேசலைனதும் உங்களுக்கு கோபம்னு பயந்துட்டோம். அப்பத்தாக்கிட்ட கேட்டதுக்கு திட்டி விட்டுருச்சு, அத்தையும் மூஞ்சக் காட்டாம பேசிடுச்சு அதுதான்…” என சின்னவள் இலக்கியா பதில் சொல்ல,

“அதுக்காடி இந்த அழுக? உங்க அப்பத்தா, உங்க அத்ததான… நீயும் குடுமிய பிடிச்சு சண்ட போடாம இங்க வந்து ஒப்பாரி வைக்கிற, நீயெல்லாம் எம் மாமன் பொண்ணுனு வெளிய சொல்லிக்காத. சிரிச்சிப்புடுவானுங்க, ராங்கித்தனம் வீட்டுல மட்டும் தான்போல…” என கிண்டலடித்தவன்,

அவள் பதில் பேசாமல் குனிந்த வாக்கிலே இருக்கவும், என்ன நினைத்தானோ அதற்கு மேல் எதுவும் பேசாமல், “சரி, வாங்க கெளம்புவோம். மழை கொட்ட ஆரம்பிச்சிட்டா போற வழி கூடத் தெரியாது.” என்றவன் காயத்ரியின் கையைப் பிடிக்க, அப்போது மழையின் முதல்துளி இருவரின் கைப்பிடியிலும் பட்டுத் தெறிக்க, காயத்ரியின் கைப்பிடி இறுகியது.

அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றாலும், மனம் மட்டும் ஊரிலிருந்து வந்த நாளிற்கு பின்னோக்கிச் சென்றது. வீட்டிற்கு நுழைந்த உடனே வீரம்மா (அப்பத்தா) மருமகளை பிடிபிடியென்று பிடித்துவிட்டார். “உன் அண்ண மவன்னு எம்பேத்தியக் கொடுத்த, நீ இங்க நிம்மதியா இருக்க, ஆனா எம்பேத்தி நிம்மதியா இருக்காளா இல்லையானு தெரியுமா? எவ்வளவு எகத்தாளமா பேசுறா உன் அண்ணிக்காரி? ஒருத்தர் வாயத் திறந்து மறுத்து பேசல, நாங்க இருக்கும் போதே எம்பேத்திய இந்த பாடு படுத்துறவ, நாங்க வந்த பிறகு என்னவெல்லாம் கொடும படுத்துவாளோ ஆரு பாத்தா?

உனக்கு நிம்மதி தானே, நீ நிம்மதியா இரு. இந்தா இவள ஒரு பணக்காரனப் பார்த்துக் கட்டிக்கொடு, அந்தா அவளுக்கு ஒருத்தனப் பார்த்து தள்ளிவிட்டுட்டு நீ நிம்மதியா இங்க பண்ணயம் பண்ணு. அதுதான ஒனக்கு தேவை.” என மனதில் இருந்ததெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு,

“என் பேத்தி நல்லா பொழைக்கிறானு தெரியாம இந்த வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டேன், ஒன் கையால ஒரு வாய் தண்ணிகூட குடிக்க மாட்டே.” என்றவர், அழுதுகொன்டே மகளின் வீட்டிற்கு போய் விட்டார்.

காயத்ரியும் எதுவும் பேசவில்லை. தன் அப்பத்தா பேசியது சரிதான் என்பது போல எண்ணம் அவளுக்கு. அதனால் எதுவும் பேசாமல் தங்களின் அறைக்குள் நுழைந்துகொண்டாள். அந்த வீட்டில் அவர்களுக்கென்று தனித்தனி அறைகள் எல்லாம் இல்லை. மொத்தமே நான்கு அறைகள். மாடியில் ஒரு அறை, அதுவும் பரந்தாமன் தன் வீடு கட்டும் போது இதையும் எடுத்துக் கொடுத்தது. பிள்ளைகள் படிப்பதற்காக என அந்த அறையைக் கட்டிக் கொடுத்தார், அதோடு சகல வசதிகளும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

ஆனால் என்ன அந்த அறையைத்தான் யாரும் அந்த வீட்டில் உபயோகிக்கவில்லை. கீழே உள்ள அறைகளில் மூன்று பெண்களுக்கும் ஒரே அறையை தனியாக ஒதுக்கியிருந்தார். இப்போது அந்த அறைக்குள்தான் காயத்ரி நுழைந்திருந்தாள்.

எங்கு பார்த்தாலும் நாகம்மையுடன் அவர்கள் கழித்த அந்த இனிமையான தருணங்களே வந்து வந்து போனது. ஏனோ தன் முருகேசன் மாமனை திருமணம் செய்திருந்தால் அக்காவின் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்ற சிந்தனைகள் மட்டும்தான் அவளுக்குள் வியாபித்திருந்தது. அவருக்கும் அக்காவின் மேல் ஆசை இருந்திருக்குமோ, அதனால்தான் திருமணத்தில் கூட இருக்கவில்லையோ?

எப்படி வலித்திருக்கும்? எல்லாம் இந்த அம்மாவால்… இப்போது அக்காவும் நல்லா இல்லை, மாமாவும் நல்லா இல்லை. அம்மாவால் அவமானப்பட்ட தன் முருகேசன் மாமாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவள், அடுத்த நாளே தன் அத்தை வீட்டிற்குச் செல்ல, அவரோ அவளை வாய்க்கு வந்ததெல்லாம் ஏசி அனுப்பிவிட குற்ற உணர்வு மேலும் ஏறிப் போனது.

அதோடு முருகேசனும் அவளுடன் தொடர்பில் இல்லாமல் போக, அவனுக்கும் தங்கள் மேல் கோபம்தான் என்று முடிவேக் கட்டிவிட்டாள். அவனைப் பார்க்க வேண்டி ஏகப்பட்ட சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி போய் பார்த்தாலும், அவனைப் பார்க்க முடியவில்லை. அவனுக்கும் தங்களைக் காணப் பிடிக்கவில்லை போல என உறுதியாக நினைத்துவிட்டாள். அதனால்தான் நாளைய ரிசல்டை மனதில் வைத்து இன்று பார்த்தே ஆகவேண்டும் என்று வந்துவிட்டாள். பார்த்தும் பேசியும் விட்டாள்.

அதுவரை இருந்த இறுக்கம் தளர மனதிற்குள் ஒரு புது தெம்பும், புத்துணர்ச்சியும் சேர, அவனோடு இணைந்து நடந்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அம்மு, வீடு வந்துடுச்சி நீங்க போங்க, நாளைக்கு நான் ரிசல்ட் பார்த்துட்டு வீட்டுக்கு வர்றேன். கண்டதையும் போட்டு குழப்பாத, எனக்கு நீங்க மூணு பேரும் ஒன்னுதான், உங்க மூணு பேர் மேலயும் சக்கரை கணக்கா அக்கறைதான். ஆனா உன் அக்கா மேல கொஞ்சம் அதிகமா போச்சு. அதை எங்காத்தா தப்பா நினைச்சிட்டு வந்து பொண்ணு கேட்டு, பிரச்சனை பண்ணிட்டு வந்துடுச்சி. சரி முடிஞ்சத இனி பேச வேணாம், அவ இன்னொரு வீட்டுக்கு வாழ போய்ட்டா. நான் சொல்றது உனக்கு புரியுதா?” எனக் கிண்டலாக ஆரம்பித்து சீரியசாக முடிக்க,

அந்த வார்த்தையில் இருந்த அழுத்தம் அடுத்து இப்படி யோசிக்கக்கூடாது என்ற கண்டனம் இருக்க, தலை தன்னால் சரியென்றாடியது.

இங்கு நாகம்மையோ இரண்டு நாட்களாக காலையில் எழவே முடியாமல் மிகவும் சோர்வாக உணர்ந்தாள். வேலை அதிகம் என்பது அவளுக்கேத் தெரியும். அதோடு மனமும் சோர்வாக இருக்க, அதுகூட காரணமாக இருக்கலாம் என நினைத்து அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எப்போதும் போல் அன்றாட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

முத்தம்மாவும் சங்கவியும் அவளது சோர்ந்த தோற்றம் கண்டு விசாரிக்க, களைப்பு என்று மட்டும் சொல்ல அது பரந்தாமனின் காதுக்கும் போக, அவளை முழுவதுமாக ரெஸ்டில் இருக்க வைத்தார். இல்லை, வேண்டாம் என தனக்கு பயந்து மறுப்பாள் என்று லலிதா நினைக்க, நாகம்மையோ சரியென்று மேலே தங்கள் அறைக்கேச் சென்று படுத்துவிட்டாள்.

அவளது இந்த செய்கை வித்தியாசமாக இருக்க மனதில் ஒரு பயம் வந்து விழுந்தது. பெரிய மருமகளிடம் அதுபற்றி விசாரிக்க, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்று அனுவும் சொல்ல, ஆனால் லலிதாவிற்கு சந்தேகம் தீரவில்லை.

ஒருவேளை அவர் நினைத்தது போல் இருந்தால், என்று யோசிக்கக்கூட லலிதாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் நாகம்மையைத் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தார்.

அறைக்கு வந்த நாகம்மைக்கோ உடல் பயத்தில் நடுங்கியது. நேற்று திடீரென மயக்கம் வரவும் சாதாரணமாக நினைத்தவள், இன்று எழுந்துகொள்ளக்கூட முடியாத அளவிற்கு சோர்வும் மயக்கமும் வர, கண்டுபிடித்து விட்டாள். வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் சோர்வு என்று சொன்னவளால், லலிதாவின் கூரிய பார்வைக்கு பதில் சொல்லமுடியவில்லை. அவரிடமிருந்து தப்பிக்கவே தங்கள் அறைக்கு வந்திருந்தாள்.

உள்ளே வந்ததும்தான் அவளுக்கு தான் செய்யாமல் விட்ட காரியத்தின் விளைவு புரிந்தது. அத்தனை தூரம் கணவன் சொல்லியும் மறந்துவிட்டாளே? அவனுக்கு தெரிந்தால் வார்த்தைகளாலயே பொசுக்கிவிடுவானே என பயந்துகொண்டு யாரிடமும் மூச்சுவிடாமல் இருந்தாள்.

அன்று சங்கவி அவளுக்கென்று ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்ததும் அதற்கு, “இப்படித்தான் ஆரம்பிக்கும், அப்புறம் சொத்துல வந்து நிக்கும்.” என வார்த்தைகளை அமிலங்களாகத் தெளிக்க, அந்த போனை தொட்டுக்கூட பார்க்கவில்லை நாகம்மை.

கணவனிடம் இதை எப்படி சொல்ல? கலைக்க சொல்வானோ? அம்மா வீட்டிற்கு போ என்று சொல்வானோ? விவாகரத்து கொடு என்று சொல்வானோ? என பல யோசனைகள் மூளையைக் குடைய, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலே இரண்டு நாட்களைக் கழிக்க, லலிதாவிற்கு தேவையான பதில் நாகம்மையின் இந்த பயத்திலே கிடைத்திருந்தது.

இப்படியே இருப்பது சரியல்ல, செய்தது சரியோ தப்போ கணவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்து, தன் சோர்வை புறம் தள்ளி வழக்கம்போல நேரத்தில் எழுந்து வேலைகளைச் செய்ய, அதிசயமாக அன்று அடுப்பங்கறையில் இருந்தார் லலிதா.

அவள் வந்து நின்றதும் காஃபியை நீட்ட அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு வாங்கிக்கொள்ள, அதை கண்டுகொள்ளாமல் நகர்ந்து விட்டார். ஆனால் அவள் குடிக்கிறாளா என்று ஓரப்பார்வையில் பார்க்காமல் இல்லை. நாகம்மையோ முதன்முதலில் மாமியார் தனக்காக ஒன்று செய்ததை நினைத்து மகிழ்ந்தவாறே, சற்றே கசப்பானாலும் அந்த காபியை முழுவதும் குடித்திருந்தாள்.

ஒவ்வொருவாராக எழுந்து வர இங்கு நாகம்மைக்கோ நிற்க முடியவில்லை. அடிவயிறு இழுத்துப் பிடிக்க ஆரம்பித்த வலி, மெல்ல மெல்ல அவள் உயிரையே எடுக்கும் அளவிற்கு அதிகமாக, வெளியே காட்டக்கூடாது என எவ்வளவோ முயன்றும், அந்த உயிர் உருகி வெளியேறும் நேரம், “அம்மா…” என்று அடிவயிறை இறுக்கிப் பிடித்துக் கத்திக் காட்டிக் கொடுத்தது.

அடுத்து என்ன நடந்தது என்றெல்லாம் அவளுக்கு ஞாபகம் இல்லை. நினைவு திரும்பிய நேரம் மருத்துவமனையில் இருந்தாள். என்னாச்சு என்று அவளுக்கு கேட்கக்கூடப் பிடிக்கவில்லை. என்ன ஆனது என்றுதான் அவளுக்குத் தெரிந்து போனதே.

தன் வய்ற்றில் உருவான முதல்துளி தன்னைக் காணப் பிடிக்காமலே சென்றுவிட்டது. ஒரு உயிர்… அதிலும் தன் உதிரத்தில் துளிர்த்த ஒரு உயிரை சந்தோசமாக வரவேற்காமல், பயந்து வேணுமா வேண்டாமா என யோசித்தால், உனக்கு வேண்டவே வேண்டாம் என்று கடவுள் தன்னுடன் எடுத்துக்கொண்டார் போல.

இனி என்ன ஆனால் என்ன என முற்றும் துறந்த நிலைக்கு வந்துவிட்டாள். அவள் விழித்ததும் அனைவரும் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக, லலிதாவின் முகத்தில் ஒரு திருப்தியான பார்வை. அதை கவனிக்கும் நிலையில் யாரும் இல்லை.

அவள் அருகில் வந்து அமர்ந்த சங்கவி, “எப்படி இருக்கு அண்ணி? ஹாஸ்பிடல் கூப்பிட்ட அன்னைக்கே வந்துருக்கலாமே? இப்போ…” என்றவள் கலங்க, நாகம்மையின் கண்களும் கலங்கியது.

“வலி இருக்கா அண்ணி? இன்னைக்கு முழுசும் பெயின் இருக்கும் சொன்னாங்க, ரெண்டு நாள் இங்கதான் இருக்கணும், அப்புறம் வீட்டுக்கு போகலாம். அண்ணனுக்கு கால் பண்ணேன் போகவே இல்ல.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சங்கவியின் போன் அலற, எடுத்துப் பார்த்தவள், ‘ஷ்யாம்’ என்று வரவும் வெளியில் வந்து, “அண்ணா…” என்றவளால் அடுத்துப் பேசவே முடியவில்லை.

தங்கையின் அழுகை என்னவோ ஏதோவென்ற பதட்டத்தைக் கொடுக்க, “என்ன சவி, என்னனு சொல்லுடி? அப்பா ஓகேதான?” என பதட்டமாக ஷ்யாம் கேட்க,

“அண்ணி… அண்ணிக்கு அபார்ட் ஆகிடுச்சு.” என்று கேவ,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“வாட்! எப்போ? இப்போ எங்க இருக்கீங்க? எப்போ கன்சிவ் ஆனாங்க, ஏன் யாரும் எனக்கு சொல்லல? சபரி கூட சொல்லல…” என அவன் அனுவை மனதில் வைத்துப் பேச, சங்கவிக்கு கோபம் தலைக்கேறியது.

“போதும் நிறுத்து! நீயெல்லாம் என்ன மனுஷன்? ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்து, அம்போனு விட்டுட்டுப் போயிட்ட, இங்க என்ன பண்றா, எப்படி இருக்கா எதாவது தெரியுமா? முதல்ல அவக்கிட்ட பேசுனியா? நீயெல்லாம் ச்சே…” என்றவள், “இதுக்கு நீ கல்யாணம்ன்ற அந்த கருமாதிய பண்ணாமலே இருந்திருக்கலாம், நான் அண்ணினு சொன்னது பாலா அண்ணியை. அவங்கதான் கன்சிவ் ஆகிருந்தாங்க, அவங்களுக்குத்தான் இப்போ ஆபார்ட் ஆகிடுச்சு.”

“வாட்!” என்று ஷ்யாம் அதிர,

“எஸ், உன்னோட குழந்தை இந்த உலகத்தைப் பார்க்காம கருவிலேயே அழிஞ்சிடுச்சி இப்போ புரியுதா?” என தன் கோபம் மொத்தத்தையும் அவனிடம் கொட்டியவள், போனை அணைத்து போட்டுவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

You may also like

1 comment

M.Sarathi Rio September 21, 2026 - 6:22 pm

அச்சோ.. அந்த கரு தன் மகனோட உசிருன்னனு தெரிஞ்சும் எப்படி அதை கலைக்க மனசு வந்ததோ..? மாமியார்க்காரி ஒரு ராட்சசி, மகன் ஒரு காரியவாதி.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured