அத்தியாயம் -16
கணவன் மனைவி காதல் என்பது
கட்டி பிடித்தலிலும்
முத்தம் இடுதலிலும் இல்லை
தன்னோடு வாழ்பவரின்
வலியையும் உணர்வையும்
புரிந்து கொள்வதில்தான்
இருக்கிறது.
மருத்துவமனை களேபரங்கள் எல்லாம் ஓரளவுக்கு முடிய, ஆசுவாசமாக ஒரு இருக்கையில் அமர்ந்தார் லலிதா. விஷயம் தெரிந்ததும் அடித்துப்பிடித்து ஷ்யாம் வருவான் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. அவன் வேலைப்பற்றிதான் அவருக்குத் தெரியுமே. மகனால் இடையில் விடுப்பு எடுத்து வரமுடியாது என்று தெரிந்ததால்தான் தைரியமாக இந்த வேலையை செய்தார். அதோடு அவன் மீதும் கோபம். பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை என்று தன்னிடம் ஆடிய ஆட்டம் என்ன? இப்போது செய்து வைத்த வேலை என்ன? அப்படியே ஷ்யாம் வந்து கேட்டாலும் யாருக்கு என்ன தெரியும்.
டாக்டர் சொன்ன அதே பதிலைத்தான் வீட்டில் இருப்பவர்களும் சொல்லப் போகிறார்கள். நடந்தது தன்னைத் தவிர யாருக்கும் இதுவரை தெரியாது, இனி தெரியப் போவதுமில்லை. இங்கு இருப்பவர்களுக்கேத் தெரியவில்லை, வெளியூரில் இருந்து வரும் மகன்தான் கண்டுபிடிக்கப் போகிறானா? என எகத்தாளமாக நினைத்தவருக்கு மனதில் ஏதோ சாதித்த உணர்வு. அது அவர் முகத்தில் மகிழ்ச்சியைக் காட்ட, அப்போதுதான் நாகம்மையைப் பார்த்துவிட்டு கணவனுடன் வந்த அனு, ‘இந்த அத்த ஏன் இப்படி இருக்காங்க’ என யோசனையுடன் அவர் அருகில் அமர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும், “வா அனு, உள்ளேப் போய் பார்த்தியா அவளை?” என என்ன முயன்றும் அந்த குரலில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை லலிதாவால்.
ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை அனு. “ஆமா அத்தை.” என்று விட்டேத்தியாகப் பதில் சொல்ல,
“லூசுதான்டி நீ… நீ எதுக்கு அவளை எல்லாம் போய் பார்க்குற? அவ மூஞ்சில முழிக்கிறதே பாவம் நமக்கு. பாரு இப்போதான் உனக்கு ஒன்னொன்னா ட்ரீட்மென்ட் பாசிடிவ் ஆகிட்டு வருது, இந்த நேரத்துல அவ மூஞ்சில முழிச்சி எதையும் கெடுத்துக்காத.” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அதட்ட, அனுவோ அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
சற்று நெருங்கியமர்ந்து மாமியாரின் கையைப் பிடித்துக்கொண்டு, “நான் குழந்தைக்காக இந்த மூணு வருஷமா எவ்வளவு கஷ்டப்படுறேன். எனக்கு மட்டும் ஏன் இந்த கடவுள் ஓரவஞ்சனை பண்றார்? அப்படி நான் என்ன பாவம்தான் பண்ணிட்டேன்?” என அழ ஆரம்பித்திருந்தாள்.
“ஏய் அனு இப்ப என்ன நடந்துப்போச்சுனு நீ இப்படி அழற? உனக்கும் குழந்தைப் பிறக்கும். உன் வயித்துல உருவாகுற குழந்தைதான் நம்ம வீட்டு முதல் வாரிசு. அத்தை இருக்கும் போது எதுக்கு கவலைப்படுற? நான் பார்த்துக்குறேன் விடு.” என ஒரு உயிரைக் கரைத்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பேச,
“இல்லத்த எனக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லைனு பார்த்தா, பாலாவுக்கும் இல்லையே… அவளுக்கும் என்னை மாதிரியே ஆகிடுச்சே…” என்றாள் அனு வேதனையான குரலில்.
“என்ன ஆச்சு, அதுவும் உன்னை மாதிரியே? அப்படியெல்லாம் எதுவும் இல்ல. உன்னை அவளோட இணை சேர்க்காத. ஆனா நீ கூட மறைச்சிட்ட பார்த்தியா? அன்னைக்கு உங்கிட்ட துருவி துருவி கேட்டேன்ல, கொஞ்சம் டவுட்டா இருக்கு அத்தைனு நீ சொல்லிருந்தாகூட நான் கவனிச்சிருப்பேன். இப்ப கடைசி நேரத்துல ஆகுமா ஆகாதானு எவ்வளவு பயம், பதட்டம்? நல்லவேளை எந்த பிரச்சனையும் இல்லாம ஆகிடுச்சு.” என்றார் சாதனைப் படைத்து விட்டது போல.
“என்ன… என்னத்த சொல்றீங்க? நீங்க… நீங்களா இப்படி? நீங்க என்ன செஞ்சீங்க? அப்போ பாலா கன்சிவ் ஆனது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? தெரிஞ்சுதான் ஏதோ பண்ணிட்டீங்களா?” கொஞ்சம் பதட்டமாக அனு கேட்க,
“என்ன… எதுக்கு இவ்வளவு ஷாக்? ஆமா நான்தான் பண்ணேன். இப்போ என்ன செய்யணும் அதுக்கு? எனக்குப் பிடிக்காத ஒருத்தி, என் வீட்டுக்கே மருமகளா வருவா. என் குடும்ப வாரிசையே சுமப்பா, அதை பார்த்துட்டு நான் அப்படியே அவளைத் தாங்கணுமோ? அது என்னால முடியாது, எப்பவும் முடியாது. அவ ஆகாதவ, ஆகாதவதான். இதையே காரணம் காட்டி இந்த உம்மனாமூஞ்சியைத் துரத்தி விடுறனா இல்லையானு பாரு.” சூளுரைப்பது போல் லலிதா பேச,
“அத்த நீங்க இப்படின்னு… என்னால நம்பவே முடியல. ஏன் இப்படி பண்ணீங்க? ஒரு குழந்தை இல்லைனு நானும் உங்க பையனும் எந்தளவுக்கு வருத்தப்படுறோம்னு உங்களுக்குத் தெரியும்தான? தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ணீங்க? இந்த பாவமெல்லாம் உங்களை விட்டுட்டு எங்களைத்தானே சேரும். நாங்களும் எங்க குழந்தைகளும் தானே கஷ்டப்படுவோம். எப்படி அத்த? இந்த மாதிரி ஒரு பாவத்தை செய்ய முடிஞ்சது? நீங்களும் ஒரு அம்மாதான?” அனுவிற்கும் இப்போது பதட்டம் போய் கோபம் ஏற ஆரம்பித்தது.
“இதோப்பார் அனு, நானும் ஒரு அம்மாதான். என் பையனுக்கு அம்மான்றதாலதான் நான் இப்படி யோசிச்சேன். யார் என்ன சொன்னாலும் எனக்குப் பிரச்சனை இல்லை. நான் செஞ்சது தப்புனு எனக்குத் தெரியல. என் பையன் வாழ்க்கையைக் காப்பத்திருக்கேன். நான் சொல்றதெல்லாம் உனக்குப் புரியாது, கோபம் வரும். ஆனா என் இடத்துல இருந்து யோசிச்சாதான் எல்லாருக்கும் புரியும். நாளைக்கு நீயும் ஒரு அம்மா ஆனாதான் என்னோட உணர்வை புரிஞ்சிக்க முடியும்.” என அப்போதும் தான் செய்தது சரியென்றே பேச,
“நீங்க செஞ்சது தப்பு… தப்பு கூட இல்ல பாவம். மகாபாவம்… இந்த பாவத்துக்கு நானும் ஏதோ ஒரு வகையில துணையா ஆயிட்டேன் போல. இந்தப் பாவத்தை எங்க போய் தொலைக்க போறேன். நாளைக்கே உங்க மகன் வந்து கேட்டா என்ன சொல்லுவீங்க? அவர் ரொம்ப ஷார்ப், கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவார். அப்போ நீங்க என்ன பதில் சொல்லுவீங்கனு நான் பார்க்குறேன்.” என்று ஆற்றாமையாகப் பேசியவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார் லலிதா.
“நம்ம வீட்டுல நீ என் கூடதான் இருந்த, ஆனா நான் சொல்லாம உன்னால கண்டுப்பிடிக்க முடிஞ்சதா? இல்லையில்ல, இங்க இருக்குற உங்களாலயே கண்டுபிடிக்க முடியல. அங்க இருந்து வர்றவன்தான் கண்டுபிடிக்க போறானா? அப்படியே கண்டுப்பிடிச்சாலும் எனக்கு கவலை இல்லை. ஷ்யாமுக்கு எப்படி புரிய வைக்கணும்னு எனக்குத் தெரியும். நீ உன் வேலையை மட்டும் பாரு. அப்புறம் இந்த விஷயம் இது நமக்கு மட்டுமே தெரிஞ்சதா இருக்கணும்னு நினைக்கிறேன். வேற யாருக்கும், ஏன் சபரிக்கே தெரிஞ்சாக் கூட நான் உனக்கும் மாமியார்தான் மறந்துடாத.” என கொஞ்சமும் பயம் இல்லாமல் மிரட்டிய லலிதாவைப் பார்த்து முதன்முதலாக அருவருத்துப் போனாள் அனு.
“நாளைக்கு என்னைப் பிடிக்கலனா என் குழந்தையையும் இப்படித்தான் செய்வீங்களா அத்தை?” இப்போது மிகவும் நிதானமாக வந்தது அனுவின் குரல். அதற்கு பதில் சொல்லாமல் ஒரு நக்கல் பார்வையை பரிசளித்த லலிதா, எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
‘அத்தையா இப்படி’ அனுவால் இதை நம்பவே முடியவில்லை. பாலாவைப் பிடிக்காது என்று தெரியும். முதலில் அப்படித்தான் இருக்கும், போகப்போக சரியாகிவிடும், தானும் அவளுக்கு சப்போர்ட் செய்தால் மேலும் அவளைக் காயப்படுத்துவார் என்றுதான் ஒதுங்கியிருந்தாள். ஆனால் ஒரு உயிரையே எடுக்கும் அளவிற்குப் போவார் என்று நினைக்கவே இல்லை.
இதை இப்படியே விடமுடியாது. என்ன செய்ய, என்ன செய்ய என்று யோசித்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் சபரி. “என்ன அனு இப்படியே உக்காந்துட்ட, வீட்டுக்கு போகல, சவியும் அத்தையும் இங்க இருந்துக்குறேன் சொல்லிட்டாங்க, ஹெல்ப்புக்கு நான் இருந்துக்குறேன். நீ கிளம்பு, உன்னை வந்து வீட்டுல விட்டுட்டு வரேன்.” எனவும்,
கணவனின் கைகளைப் பிடித்தவள், “சபரி நான் கொஞ்ச நாள் எங்க வீட்டுல போய் இருந்துட்டு வரட்டுமா?” எனவும்,
“என்ன அனு பேசுற? ஷ்யாம் இருந்தாகூட பரவாயில்லை, அவன் இல்லாத நேரத்துல நாம இப்படி நடந்துக்குறது சரியா சொல்லு. பாலா நம்மளைப் பத்தி என்ன நினைப்பா சொல்லு. அவளே மன கஷ்டத்துல இருக்கும் போது, நாம ஆறுதலா இருக்கணுமே ஒழிய, ஒதுங்கிப் போகக்கூடாது.” என கண்டிக்க,
“சபரி நான் எப்படி… எப்படி உங்ககிட்ட இதை சொல்லி புரிய வைக்கிறதுனு எனக்குத் தெரியல. நான்… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. என்னால இங்க இருக்க முடியல, நீங்க கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க சபரி. நம்ம நல்லதுக்குத்தான் நம்ம குடும்பத்தோட நல்லதுக்குத்தான் சொல்றேன். ப்ளீஸ் சபரி… என்னை எங்க வீட்டுல விட்டுடுங்க.” எனக் கெஞ்சிய மனைவியை யோசனையாகப் பார்த்தான் சபரி.
கரு கலைந்தது அனுவிற்கு மிகவும் மன அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது போல, இங்கிருந்தால் மேலும் பாதிப்பாகும் என்று நினைத்துதான் அம்மா வீட்டில் விட சொல்கிறாள்’ என அவனாக ஒன்றை நினைத்து அவளைத் தன்மேல் சாய்த்து, “ஓகே அனு, எனக்கு உன்னோட ஹெல்த்தான் ரொம்ப முக்கியம். நீ சட்டுனு டென்சன் ஆகக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க. அதுக்காக உன்னை உங்க வீட்டுல விடுறேன். ஆனா நீ செய்றதுல எனக்கு ரொம்ப வருத்தம் அனு. அன்னைக்கு சொன்னதுதான் இப்பவும் சொல்றேன், பாலா இடத்துல நீ இருந்திருந்தா அவ கண்டிப்பா உன்னை விட்டுட்டு போகமாட்டா.” என்றதும்,
“எனக்குத் தெரியும் சபரி, அவ ரொம்ப நல்லவ. அவளுக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது.” என்றவள், “ஷ்யாம் கிளம்பிட்டாரா? அவங்க வீட்டுக்கு சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“அத்தைக்கு சொல்லிட்டேன், அத்தையும் முருகேசனும் வராங்க. ஷ்யாம்கு கால் பண்ணிட்டேதான் இருக்கேன், எடுக்க மாட்டேங்குறான். சவி பேசிட்டேன் சொன்னா, சரி பார்ப்போம். நீ போய் சொல்லிட்டு வந்துடு. நான் அப்பாக்கிட்ட சொல்லிட்டு வரேன் கிளம்புவோம்.” என அவளை விலக்கி நகரப் போனவனின் கையைப் பிடித்தவள், “சபரி… நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும், உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்காம போய் எனக்கு டைவோர்ஸ் கொடுக்க சொன்னா கொடுத்துடுவீங்களா?” என பாவமாகக் கேட்க,
“என்னதான்டி உன் பிரச்சனை? எதுக்கு இப்போ லூசு போல கேட்டுட்டு இருக்க? இந்த கேள்வியே அபத்தம்னு உனக்குத் தெரியும். அப்படி இருந்தும் ஏன் கேட்குற? சொல்லு, என்ன ஓடுது உன் மூளையில?” என மனைவியை அதட்டி கேட்க,
“ம்ச்… ஒன்னுமில்லப்பா. சும்மா கேட்கணும்னு தோனுச்சு கேட்டேன். அதுக்கு ஏன் இவ்வளவு டென்சன்?” என சட்டென்று பேச்சை மாற்றியவள் உடனே, “ஷ்யாம் வந்ததும் எப்படியாவது பாலாவையும் அவர்கூட அனுப்பி வச்சிடுங்க சபரி. அதுதான் அந்த பொண்ணுக்கு நாம செய்ற நல்லது.” என்று பொடி வைத்துப் பேசி சென்ற மனைவியை, ‘இன்னைக்கு இவளுக்கு என்ன ஆச்சு’ என யோசனையாகப் பார்த்தான் சபரி.
ஷ்யாம் அதிர்ச்சியில் அமர்ந்தது எல்லாம் சில நொடிகள்தான். அதன்பிறகு எதற்கும் தாமதிக்கவில்லை. தன் சீஃபிடம் சென்றவன் எமெர்ஜென்சி என லீவ் அப்ளை செய்துவிட்டு, சதீஷிடம் மட்டும் பிரச்சனையை மேலோட்டமாக கூறிவிட்டு கிளம்பியிருந்தான்.
வீட்டில் இருந்து லலிதாவைத் தவிர அனைவரும் விடாமல் அவனுக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யார் அழைப்பையும் எடுத்துப் பேசும் மனநிலையில் ஷ்யாம் இல்லை. ‘எப்படி அவள் தனியாக சமாளித்தாள்’ இதே கேள்விதான் மூளையைக் குடைந்து எடுத்தது.
தன் உயிர், தன்னால் உருவான ஒரு உயிர். தன்னை அப்பா என்றழைத்து இந்த பிறவியின் மோட்சத்தைக் கொடுக்ககூடிய அவர்களின் வாரிசு, ஜனிக்காமலே இந்த கொடுங்கோலனைப் பார்க்காமலே கரைந்து போனதை என்னவென்று சொல்லி அழ? ஆண்கள் அழக்கூடாது என்று யார் சொன்னது?
இதோ தன் பார்வையில் படாமலே தன்னை உணர வைக்காமலே கரைந்து காற்றாக மாறி, அவனைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரித்த அந்த சின்னஞ்சிறு உயிரை நினைத்து உடைப்பெடுத்தது அவன் விழிகள்.
மனைவியிடம் அவன் பேசிய அகம்பாவ பேச்சிற்குத்தான் இப்படி ஒரு தண்டனையை கடவுள் தனக்கு கொடுத்து விட்டாரோ என்று மறுகினான். இனி அவள் முகத்தில் எப்படி விழிக்க? தானும் உடனில்லாமல் யாரிடமும் சொல்லாமல் எப்படி சமாளித்திருப்பாள்? அந்த வலி… உடல் வலியை விட மனவலிதானே அதிகம். தனக்குத்தானே நினைத்து, கரைந்து, உருக்குலைந்து போயிருப்பாளே? என மனைவிக்காக ஒவ்வொரு நொடியும் கதறினான்.
ஸ்ரீ… ஸ்ரீ… என மனம் ஊமையாய் அழுது துடித்தது. எப்படி கவனிக்காமல் விட்டாள் என்று யோசித்துப் பார்த்தான், அப்படி ஒன்றும் பொறுப்பில்லாதவள் அல்லவே, வேறு என்ன? ஒருவேளை தன்னிடம் சொன்னால், ‘அன்றைய பேச்சை ஞாபகம் வைத்து மீண்டும் விவாகரத்து பற்றி பேசுவேன் என்று பயந்து, சொல்லாமல் விட்டாளோ? கடவுளே அப்படித்தான் இருக்கும் என தன் மனைவியைப் பற்றி சரியாகக் கணித்தான்.
முயன்று தன்னைக் கட்டுப்படுத்தி அடுத்து என்ன செய்ய என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அப்போது அவனுக்குத் தெரியவில்லை, மகன் எடுத்த முடிவுகளை லலிதா ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்றும், மேலும் மேலும் பிரச்சனைகளைத்தான் கொடுக்கப் போகிறார் என்றும்.
1 comment
நாகம்மை ஷ்யாம்க்கு பொண்டாட்டியா, இல்ல லலிதாக்கு பொண்டாட்டியா..?
ஒரு புருசனோட முடிவுகளை எல்லாம் அவங்க யார் தடுக்கிறதுக்கு ..?
😴😴😴
CRVS (or) CRVS 2797