அத்தியாயம் – 18
மருத்துவமனையில் இருக்கமாட்டேன் என்று வீட்டிற்கு வந்த மனைவியைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தார் பரந்தாமன். “எப்படி வீட்டுக்கு வந்த மருமகள கவனிக்காம விட்ட? அந்த பொண்ணு சொல்லலனு எல்லாம் சொல்லாத, அனுவுக்கு ஒவ்வொரு தடவையும் நீதான் ஞாபகமா வச்சுக் கேட்ப?” என அவர் தப்பிக்க வழியில்லாமல் கேட்க,
“இப்போ என்னங்க பிரச்சனை உங்களுக்கு? பிடிக்காம ஒருத்திய கட்டிட்டு வந்துருக்கான். அவ கூட வாழ்ந்துட்டு போயிருக்கான்னு நான் என்ன ஜாதகமா கண்டேன்? இதெல்லாம் அவதான் வந்து சொல்லணும், அவளே சொல்லலன்னும் போது எனக்கு எப்படித் தெரியும்? குழந்தையைப் பத்தின அக்கறை அவளுக்குத்தான் இருந்திருக்கணும். எனக்கு இல்ல…” என கணவரின் முகத்தில் அடித்தாற் போல் சொல்ல,
“ச்சே! நீயெல்லாம் ஒரு மனுஷினு உங்கிட்ட பேசி நேரத்தை வீணாக்குற என்னை சொல்லணும். என்னமோ பண்ணித்தொல, ஆனா நாளைக்கு உன் மகன் வந்து கேட்பான், அப்போ என்ன பதில் சொல்லப் போறனு நானும் பார்க்குறேன்.” என்றவர் எழுந்து அறைக்குள் சென்றுவிட, லலிதாவிற்குள் பெரும் யோசனை. வரமாட்டான் என்று நினைத்த மகன் வந்துவிட்டான். அவன் நடந்தைதை நம்பினானா இல்லையா தெரியவில்லை.
நம்பிவிட்டால் பிரச்சனை இல்லை, ஒருவேளை நம்பவில்லை என்றால் என்ன செய்ய? அவனை எப்படி சமாளிக்க என்று யோசிக்க ஆரம்பித்தார்.
அதோடு இந்த அனு வேறு புதிதாக ஒரு பிரச்சனையைக் கிளப்பிக் கொண்டு போய் அவள் வீட்டில் உட்கார்ந்து கொண்டாள். அவளையும் சமாளிக்க வேண்டும், என்ன செய்யலாம் என மூளையைக் குடைய ஆரம்பித்தார்.
அனுவின் வீட்டிலோ, ‘கொஞ்ச நாள் இங்கேதான் இருக்கப் போகிறேன்’ என்று வந்த மகளை வியப்பாக பார்த்தனர் அவளின் பெற்றோர். பின்னே இருக்காதா, எத்தனையோ முறை வந்து இரு என்று அழைத்தும் வராத மகள் இப்போது வந்திருக்கிறாள் என்றால், வியக்காமல் என்ன செய்வார்கள். ஏதேனும் பிரச்சனையா என்று அனுவின் பெற்றோர் எத்தனைக் கேட்டும் எதையும் சொல்லவில்லை அவள். பின்னே சொல்வதென்றால் ஆதியிலிருந்து அந்தம் வரை சொல்லவேண்டுமே? பிறகு தன் மகள் இத்தனை கீழ்த்தரமாக இறங்கிவிட்டாளா என்று நினைத்து வருத்தப்பட மாட்டார்கள்? அதனால் அனு பிரச்சினையப்பற்றி மூச்சு விடவில்லை. ஆனால் மாமியார் மீது எரிமலையாய் கோபம் கனன்று கொண்டிருந்தது என்னவோ உண்மை.
இங்கு மருத்துவமனையிலோ அனைவரும் நாகம்மை விழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். எழுப்பலாம் என்று சொன்ன தங்கையிடம் ஷ்யாம் ஆடித் தீர்த்துவிட, அவன் கோபத்தைப் பார்த்து அனைவரும் அப்படியே அமர்ந்துவிட்டனர்.
வந்ததும் மகளைப் பார்த்த மாரியம்மாவிற்கு தன் மாமியார் சொன்ன உண்மையின் வீரியம் உறைக்கத் தொடங்கியது. திருமணத்தில் பார்த்ததற்கு இப்போது பாதியாக இருந்தாள். இதில் கர்ப்பமாக இருந்திருக்கிறாள், தன்னிடம் கூட சொல்லாமல் விட்டிருக்கிறாள் என்றால், தன் மீதும் கோபத்தில் இருந்திருக்கிறாள் மகள் என்று அவருக்கு புரிந்தது.
இப்போது மகளிடம் பேசி தன்னோடு அழைத்துச் சென்று விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். அண்ணனிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
சபரியோ பக்கத்தில் எல்லோரையும் ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த முருகேசனிடம், “வாங்க முருகேசன், கேன்டீன் போயிட்டு வரலாம். இங்கதான் இத்தனை பேர் இருக்காங்களே, அவங்க பார்த்துப்பாங்க. அத்தைக்கும் குடிக்க எதாவது வாங்கிட்டு வரலாம்.” என்றவன், “ஷ்யாம் உனக்கு?” என தம்பியிடம் கேட்க,
அவனோ “ம்ச்…” என்று சொல்ல, ‘என்னமோ என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லாம படுத்துருக்க மாதிரி, வர்றவங்க எல்லாரையும் நான் கவனிச்சிட்டு இருக்கேன். இவனோட…’ என மனதுக்குள் புலம்பியவன், “அவன் கிடக்கான் முருகேசன், நீங்க வாங்க.” என்றழைத்துச் சென்றுவிட, இப்போது ஷ்யாமை நேரடியாக முறைத்தான் முருகேசன்.
“கிளியைப் பிடிச்சி கொரங்கு கைல கொடுக்குறதுனு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி இருக்குண்ணே, அதை எங்க ஸ்ரீகுட்டி மூலமாத்தான் தெரிஞ்சுக்கணும்னு இருக்கு. பாவம் எங்க வூட்டு புள்ள… உங்க தம்பி எப்பவும் இப்படித்தானா, இல்ல இப்படித்தான் எப்பவுமா? உர்ருன்னேதான் இருப்பாரா?” என முருகேசன் படப்படவென பேச, அந்த நேரடியானப் பேச்சில் சபரி வாய்விட்டு சிரித்திருந்தான்.
“நீங்க பேசினத மட்டும் அவன் கேட்டுருக்கணும், ருத்ரமூர்த்தியா நின்னுருப்பான். ஏற்கனவே அப்படித்தான் இருக்கான்.” என தம்பியைப் பற்றி சொல்ல,
“இல்லண்ணே வந்தவங்கள வாங்கனு கூட சொல்லல, இவர் குணமே இப்படித்தானா, இல்ல எங்ககிட்ட மட்டுமா எனக்குத் தெரியல. எங்க அம்மத்தா அத்தனை சொல்லி அழுதுச்சு. நான்கூட அப்படியெல்லாம் எதுவும் இருக்காது, கிழவி தப்பா புரிஞ்சிக்கிடுச்சுனு நினைச்சேன், ஆனா இங்க வந்து பார்க்கும்போது அதெல்லாம் உண்மையோனு தோனுது.” என மனதில் பட்டதை மறைக்காமல் சொல்ல, சபரிக்கு அவமானத்தில் முகம் கறுத்துப் போனது.
‘அப்படியெல்லாம் இல்லை’ எனத் தடுத்துப் பேசும் அளவிற்கு எதுவும் நல்லதாக நடக்கவில்லையே? அவனும் உண்மையைத்தானே சொல்கிறான் என்று உணர்ந்த நேரம், இன்னும் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தான் முருகேசன்.
“போலாமா முருகேசன், அத்தைக்கு காபியா, டீயா?” எனவும், “அத்தைக்கு காபிதான், நான் வாங்கிட்டு வரேன்.” என முருகேசன் எழும்ப போக, “அட இருப்பா, உங்க வீட்டுக்கு வரும் போது நீ கவனி, இப்போ நான்தான் செய்யணும்.” என்றவன், சங்கவிக்கும் சேர்த்து ஒரு பால் வாங்கிக்கொண்டு அறையை நோக்கி நடந்தான். மனதில் தம்பியிடம் பேசியே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான்.
அறைக்குள் நுழையும் போது நாகம்மை விழித்து தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் கையிலிருந்த காபியை பக்கத்தில் இருந்த ஷ்யாமிடம் திணித்தவன், “ஸ்ரீ குட்டி…” என அழைக்க, அதில் அவனைப் பார்த்து முகம் மலர, சோர்வாக புன்னகைத்தாள் ஷ்யாமின் ஸ்ரீ.
அவன் காபியை தன்னிடம் திணித்ததே அதிர்ச்சி என்றால், மனைவியை, ‘ஸ்ரீ குட்டி’ என அழைத்தது பேரதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும் ஷ்யாமிற்கு.
‘என்ன இவன் இப்படி கூப்பிடுறான்? அதுக்கு அவ வேற சிரிக்கிறா…’ என மனதுக்குள் இருவரையும் தாளித்தபடி வேறவழி இல்லாமல் தன் மாமியாரிடம் காபியை நீட்ட, அவரும் மறுக்க முடியாமல் வாங்கிக்கொள்ள, ஒரு தலையசைப்போடு ஷ்யாம் நகரப்போக இப்போது மீண்டும் முருகேசனின் ஸ்ரீ குட்டி என்ற வார்த்தை அங்கேயே நிற்க வைத்தது அவனை.
“ஸ்ரீ குட்டி இப்போ எப்படி இருக்குடா?” என்ற முருகேசன் கேட்டுக்கொண்டே நாகம்மையிடம் செல்ல, “பரவால்ல மாமா…” என அவளும் மெல்ல புன்னைகைக்க,
‘எத மறுபடியும் ஸ்ரீ குட்டியா…’ என ஜெர்க்கானவன், ‘வந்ததுல இருந்து இந்த கொசுத்தொல்லை தாங்க முடிலடா ஷ்யாமா’ என கடுப்பானவன், “இவன் என்னடா என்னோட பொண்டாட்டிக்கு செல்லப்பேர் வச்செல்லாம் கூப்பிட்டு இருக்கான்?” என பக்கத்தில் இருந்த சபரியிடம் கடித்து துப்பிக் கொண்டிருந்தான்.
“ஹலோ நீங்க நேத்துதான் புருஷனா அப்பாய்ன்ட் ஆகிருக்கீங்க. அவர் அப்போ இருந்தே பாலாவுக்கு மாமாவா இருக்கார்.” எனவும் ஷ்யாம் முறைக்க, “சாரி, ஐ மீன் அத்தைப் பையனா இருக்கார். சோ நீ கொஞ்சம்…” என்று கையை வாயருகில் கொண்டு சென்று செய்கையில் ‘வாயை மூடிட்டு இரு’ என நக்கலாகச் சொல்ல,
“பேசுங்கடா பேசுங்க… இந்த கொசு போறதுக்குள்ள எங்கிட்ட அடி வாங்காம போகமாட்டான் பார்த்துக்கோ.” என கடுப்பாய் சொன்னாலும் பார்வை முழுவதும் மனைவியிடமே இருந்தது.
“மாமா எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? அத்தைக்கு என் மேல கோபம் போச்சா? அப்பத்தா எங்கிட்ட பேசவே இல்ல மாமா…” என சிறுபிள்ளையாய் முருகேசனிடம் சலுகைக் கொஞ்சிய மனைவியைப் பார்த்து கடுகடுவென ஆனது ஷ்யாமிற்கு.
“அதுக்கு இருக்கு, அந்தக் கிழவிய போய் வச்சிக்கிறேன். நீ சொல்லு, எப்படி இருக்க? எப்படி ஆச்சு? நீ கவனக் குறைவா இருக்குற ஆளெல்லாம் இல்லையே என்னாச்சு?” என கண்டிப்பான விசாரணை வைக்க,
முகத்தில் இருந்த சிரிப்பு துணி கொண்டு துடைத்தார் போல இருந்த இடம் தெரியாமல் போக, இப்போது கணவனைத் திரும்பி பார்த்தாள். அந்த பார்வையில் ஒரு பயமும் கோபமும் இருக்க, அவளருகில் போய் கட்டிலில் அமர்ந்தவன் தன் மேல் அவளை சாய்த்துக்கொண்டு “ஏன் ஸ்ரீ?” என கேள்வியும் கேட்டு வைக்க, கணவனின் செய்கையில் நெளிய ஆரம்பித்திருந்தாள் நாகம்மை.
“குட்டிம்மா, இங்க ஏதோ தீயிற வாசனை வருதுல்ல…?” என சபரி தங்கையிடம் கிண்டலடிக்க, அது ஷ்யாமிற்குப் புரிந்தது. மற்ற யாருக்கும் புரியவில்லை.
“வயர் எதுவும் கருகியிருக்கும்ண்ணே, போய் முன்னாடி சொல்லுவோம், இல்லாட்டி பெருசா எதுவும் ஆகிடப்போகுது.” என ஷ்யாமை முறைத்துக் கொண்டே முருகேசன் வெளியேற, அண்ணனும் தங்கையும் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டனர்.
அவர்களைப் பார்த்து ஷ்யாம் முறைக்க, “வா சவி நாமளும் ஓடிரலாம், இல்ல அவன் பாட்டுக்கு போய் ரிசப்ஷன்ல சொல்லிட போறான்.” என சபரியும் கிளம்ப, சங்கவியும் மாரியம்மாவை, “வாங்கத்தை” என அழைத்துச் சென்றுவிட, இப்போது அறைக்குள் இருவர் மட்டுமே.
தன் தோளில் சாய்ந்தபடியே அமர்ந்திருந்தவளின் வயிற்றை மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஷ்யாம். தன் உயிர் அங்குதான் உயிர்த்திருந்தது என்ற எண்ணமே அந்த செய்கைக்கு காரணம்.
“என்னங்க நீங்க ஒன்னும் கேட்கல, உங்களுக்கு ஒன்னும் தெரிய வேண்டாமா?” என அவளே பேச்சை ஆரம்பித்தாள்.
“ஸ்ரீ!” எனக் கண்டித்தவன், “உங்கிட்ட சொன்னேன்ல இதெல்லாம் வீட்டுல போய் பேசிக்கலாம்னு, வீட்டுல போயே பேசிக்கலாம். இப்போ நீ ரெஸ்ட் எடு போதும்.” என்றவனிடம், “நான் கொஞ்ச நாள் எங்க வீட்டுல போய் இருந்துட்டு வரட்டுமா?” என மெல்லியக் குரலில் கேட்டாலும் அழுத்தமாகக் கேட்க, இப்போது வருடிய அவன் கைகள் அப்படியே நின்றது.
“ஏன் ஸ்ரீ அத்தை உன்னை கூப்பிட்டாங்களா?” என உள்ளே கோபம் கொப்பளித்தாலும் வெளியே சாதரணமாகக் கேட்டான்.
“இல்ல… இல்ல… அம்மா கூப்பிடல. ஆடிக்கு அழைக்கணும்னு மட்டும்தான் சொன்னாங்க. இன்னும் பத்து நாள் தானே இருக்கு. அதுதான் இப்பவே போலாமான்னு கேட்டேன்.” எனவும்,
“ஊப்ஸ்…” என அதுவரை உள்ளுக்குள் புதைத்திருந்த கோபத்தை ஒரு பெருமூச்சில் வெளியிட்டவன், “பத்து நாள் இருக்கே பார்த்துக்கலாம். டாக்டர் ஆன்ட்டி ட்ராவல் பண்ணலாம்னு சொல்லிட்டா, நானே கொண்டு வந்து விட்டுட்டு வரேன் ஓகேவா? இப்போ எதுவும் யோசிக்காத.” என மனைவியின் வாயை அடைத்தாலும், ஆடிக்கு அழைப்பதைப் பற்றி பாட்டிக் கேட்டதற்கு, அம்மா சொன்ன பதிலை தங்கையின் மூலம் தெரிந்துகொண்டவன், அப்போதே மனைவியை அழைத்துக்கொண்டு ஊருக்குப் போகும் முடிவை எடுத்திருந்தான். இப்போது மனைவி கேட்டதும் தங்கள் பயணத்தை உறுதியாக்கிவிட்டான்.
சிறிது நேரத்தில் சபரியிடம் சொல்லி அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியவன், அவன் மட்டும் மனைவியுடன் இருந்தான். அவன் செய்கை ஒவ்வொன்றையும் ஆச்சரியமாகப் பார்த்தாலும், எதையும் வாய் திறந்து கேட்கவில்லை நாகம்மை. மனைவியின் பார்வை தன்னைத் தொடர்வதை ஷ்யாம் உணர்ந்திருந்தாலும், அவனும் எதுவும் சொல்லவில்லை. அவள் வாயிலிருந்தே வரட்டும் என்று அமைதியாகவே இருந்தான்.
பரந்தாமனும் முத்தம்மாவும் காலை உணவுடன் வர, “என்னத்த நீங்க வர்றீங்க? அம்மா எங்க?” என தந்தையின் மேல் ஒரு குற்றப்பார்வையை பதித்துக்கொண்டே கேட்க, முத்தம்மாவோ பரந்தாமனை ஒரு பார்வை பார்த்தவர், “அது பாலாவோட அம்மா வந்துருக்காங்கள்ல, அவங்ககூட வருவா. பாலாவுக்கு சாப்பிடணுமேனு நாங்க முன்னாடியே வந்துட்டோம். நான் இருக்கேன் நீ வீட்டுக்குப் போயிட்டு வா.” என்று அழுத்தமாகச் சொல்ல,
அந்த பேச்சில் இருந்த அழுத்தம் அவனுக்கு எதையோ உணர்த்த, “சரிங்கத்த, சுமதி ஆன்ட்டி இப்போ வந்துடுவாங்க. வந்து இவளைப் பார்த்துட்டு போகட்டும் அப்புறம் போறேன்.” என்றவன், அவன் தந்தை கிளம்பும் வரை முறைப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
பரந்தாமனும் மருமகளிடம் நலத்தை விசாரித்துவிட்டு, உடனே வீட்டுக்கு கிளம்பியிருந்தார். மனைவி எனும் பிசாசிடம் தங்கையை தனியாக விட்டு வந்திருந்தாரே?
சற்று நேரத்தில் வந்த மருத்துவரோ நாகம்மையைப் பரிசோதித்துவிட்டு, அவளிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிவிட்டு ஷ்யாமை அழைத்துக்கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்தவனின் முகம் கோபத்தில், இறுகிக் கருத்துப் போய் இருந்தது. அவனைப் பார்த்து முத்தம்மா என்னவென்று கேட்க பதிலே சொல்லவில்லை. மருத்துவர் சொன்ன, “கரு தானா கலையல ஷ்யாம்.” என்ற வார்த்தைகள் கொடுத்த வலியைத் தாங்க முடியாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தான் ஷ்யாம்.