அத்தியாயம் – 19
“சொல்லுங்க ஆன்ட்டி, ஸ்ரீக்கு என்னாச்சு? எதுவும் சீரியசான ப்ராப்ளமா?” என்றபடியே மருத்துவருக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தான் ஷ்யாம்.
“அதை நான்தான் கேட்கணும் ஷ்யாம், என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?” என நேரடியாக கேட்டார் அவர்.
“எங்களுக்குள்ள என்ன ஆன்ட்டி? அப்படியெல்லாம் எதுவுமில்லையே? ஆனா அதுக்கும் நீங்க சொல்லப் போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?” என யோசனையாக இவனும் கேட்க,
“ம்ம்… இருக்கப் போய்த்தான கேட்குறேன். உன் வொய்ஃப்பை பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்கு. எல்லாத்தையும் எல்லாரையும் புரிஞ்சிக்கிற பொண்ணு மாதிரிதான் இருக்கா. ஆனா ஏன் உன் அம்மாவுக்கு அவளைப் பிடிக்கல?” என்றார் மருத்துவர் சிந்தனையோடு.
இல்லையென்று மறுத்துப் பேச முடியாது, அம்மாவும் ஆன்ட்டியும் நெருங்கியத் தோழிகள். கண்டிப்பாக என் திருமணம் அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சனைகளை இவரிடம் அம்மா சொல்லியிருப்பார். அதனால் எதையும் மறைக்கவும் முடியாது’ என்று நினைத்தவன், “அது… அவ வில்லேஜ், படிக்கல, வசதியில்ல. அதோட பெரிய ப்ராப்ளம் அப்பா வழி சொந்தம். இதுதான் ஸ்ரீயை அம்மாவுக்குப் பிடிக்காம போனதுக்கு காரணம்னு நினைக்கிறேன் ஆன்ட்டி.” என்றான் ஷ்யாமும் பட்டும் படாமலும்.
“அது மட்டும் இல்ல ஷ்யாம், உனக்கும் அவளைப் பிடிக்கல, அதுவும் காரணம்.” என்றார் மருத்துவர் நிதானமாக.
“வாட்!” என எழுந்தே விட்டான் ஷ்யாம். “யார் இப்படி சொன்னது, எனக்கு அவளைப் பிடிக்காம போக என்ன ரீசன் இருக்கு? அவ என்னோட வொய்ஃப். அவளை எப்படி எனக்கு பிடிக்காம போகும்?” என்றான் அவனும் அதே நிதானத்துடன்.
“உன் அம்மாவுக்கு இது தெரியுமா?” என்றார். இப்போது நிதானம் சென்று சற்று கோபச்சூடு ஏறியிருந்தது அவர் குரலில்.
“எது?” என குழம்பியவன், “ஆன்ட்டி என்ன சொல்ல வர்றீங்க? எனக்கு புரியல, அம்மாவுக்கு ஏன் பிடிக்கணும்? எனக்குப் பிடிச்சா போதும். அதோட எனக்குப் பிடிச்சா அம்மாவுக்கும் பிடிக்கும். ஆனா ஸ்ரீக்கு அபார்ட் ஆனதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றவன் மொத்தமாகக் குழம்பி போயிருந்தான்.
“இருக்கு, சம்மந்தம் இருக்கு. இல்லாம நான் ஏன் இவ்வளவு பேசப்போறேன்?” என்றவர், “உன் அம்மாதான் என் மகனுக்கு பிடிக்காமதான் இந்த கல்யாணம் நடந்தது. அவனுக்கு பிடிச்சிருந்தா கூட என்னை நானே சமாதானம் செஞ்சிருப்பேன். அவனுக்குப் பிடிக்காம கல்யாணம் செஞ்சதை என்னால ஏத்துக்கவே முடியல. என் ஹஸ்பண்ட்ட எதிர்த்தும் பேச முடியாத சூழல். அன்னைக்கு என்னால அந்த கல்யாணத்தை நிறுத்த முடியல. சீக்கிரம் அவளை அனுப்பிடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா இந்த ஷ்யாம் பிடிக்கல பிடிக்கலனு என்ன வேலை பார்த்துட்டு போயிருக்கான் பார். இவனுக்காக அவளை இங்க இருந்து துரத்தி விடுற ப்ளான் எல்லாம் நான் போட்டா, அவ இப்படி ஒரு குண்டைத் தூக்கி என் தலையில போடுறானு உங்கம்மா எங்கிட்ட சொல்றாங்க. இப்போ இதுக்கெல்லாம் நீ எனக்கு பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல, ஆனா உங்கம்மாவுக்கு புரிய வைக்க வேண்டியது உன்னோட கடமை.” என்று நிறுத்த ஷ்யாமின் முகம் அவமானத்தில் கருத்துப் போனது.
மகனின் அந்தரங்கத்தைப் போய் வேறு ஒருவரிடம் பேசியிருக்காரே, எப்படி? இப்படியொரு எண்ணம் வந்தது? இனி அவர் முகத்தில் எப்படி முழிப்பது? முழித்தாலும் சாதாரணமாக அவரை எப்படிக் கடப்பது? என யோசனையில் இருந்தவனை, “ஷ்யாம்!” என்று சுமதி அழைக்க,
“ஆன்ட்டி…” என்றவன் பின் ஒரு பெருமூச்செடுத்து, “ஸ்ரீயை அனுப்ப அம்மா இவ்வளவு தீவிரமா இருப்பாங்கனு நினைக்கல ஆன்ட்டி.” என்றான் வருத்தமானக் குரலில்.
“ஷ்யாம் நான் இப்படி பேசுறேன்னு நீ தப்பா நினைக்கக்கூடாது. என் ஃப்ரண்ட் அப்படிங்கிறதால நான் லல்லிய சப்போர்ட் செய்யல, ஒரு அம்மாவா அவளோட பாய்ன்ட் கரெக்ட்தான். பட் நாங்க நல்லா வாழ்ந்துட்டு இருக்கோம்னு அவளுக்கு புரிய வைக்காம, காட்டாம போனது உங்களோட தப்பு. அதை முதலில் சரி செய்ங்க.
இதை ஏன் சொல்றேன்னா உன் வொய்ஃப் இங்க வந்து இந்த ரெண்டு நாள்ல லல்லியை இங்க பார்க்கவே இல்ல. அப்போ அவளுக்கு உன் வொய்ஃப் மேல எந்த மாதிரியான எண்ணம் இருக்கும்னு நீயே முடிவு பண்ணிக்கோ. அதை மாத்த வேண்டியதும் உன்னோட வேலைதான்.” என்று முடித்தவர்,
“உன்னைக் கூப்பிட்டதே ஒரு முக்கியமான செய்தியை சொல்லத்தான். குழந்தையைப் பத்தி உன் வொய்ஃப் எப்படி கண்டுபிடிச்சதா உங்கிட்ட சொன்னாங்களா? என கேட்க, அவனும் இரவு மனைவி தன்னிடம் பேசியதைப் பகிர்ந்தவன் கேள்வியாகப் பார்க்க,
“ஷ்யாம் இது ஒரு சென்சிடிவான ப்ராப்ளம். சோ எடுத்தேன், கவிழ்த்தேன்னு ரியாக்ட் பண்ணிடக்கூடாது.” என பல முஸ்தீபுகளை தொடங்கியவர், அங்கிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து கையில் உருட்டிக் கொண்டே, “கரு தானா கலையல ஷ்யாம்…” என்றார் மிகவும் அழுத்தமாக.
“வாட்! என்ன சொன்னீங்க ஆன்டி? புரியல…” என்றவன் அதிர்வும் பயமுமாக அவரைப் பார்க்க,
“எஸ் ஷ்யாம்… நான் செக் பண்ண வரை உன் வொய்ஃப் ஹெல்தி பெர்சனாலிடி. அபார்ட் ஆகுறதுக்கு முன்னாடி எந்த ஒரு கஷ்டமான வேலையும் செய்யல. கருவும் நல்ல வளர்ச்சியிலதான் இருந்துருக்கு. வீரியமான கருக்கலைப்பு மருந்து எடுத்துக்கிட்டதாலதான் அபார்ட் ஆகிருக்கு. ஒன்னு இது உன் வொய்ஃப் குழந்தை வேண்டாம்னு செஞ்சிருக்கணும், இல்லை அவளுக்கு வேண்டாதவங்க யாராச்சும் செஞ்சிருக்கணும். ஆனா அவ கன்சிவ் ஆனது யாருக்குமே தெரியலையே, அப்போ யாரை சந்தேகப்பட?” என கேள்வியும் பதிலுமாகப் பேசியவரை வெறித்துப் பார்த்தான் ஷ்யாம்.
அவன் உணர்வுகள் மொத்தமும் வெடித்து சிதறக் காத்துக் கிடந்ததைப் போல் இருந்தது அவன் முகம். அதைப் பார்த்த சுமதி, “ரிலாக்ஸ் ஷ்யாம்… ரொம்ப சென்சிடிவா டீல் செய்யணும். சோ கேர்ஃபுல்லா டீல் பண்ணு. நீ நான் பார்த்து வளர்ந்த பையன் அப்படிங்கிறதாலதான் உனக்கு சொல்றேன். சோ…” என நிறுத்த,
“ஐம் அன்டர்ஸ்டேண்ட் ஆன்ட்டி. நான் பார்த்துக்குறேன், கவனமாவே சரி செய்றேன். அவங்க ஒத்துழப்புக் கொடுத்தா…” என்று எழுந்து கதவு வரை சென்றவன் பின் திரும்பி மருத்துவரிடம், “ஸ்ரீ ட்ராவல் பண்ணலாமா ஆன்ட்டி? ஊருக்கு அனுப்பலாம்னு இருகேன்.” என்றான் யோசனையோடு.
“பண்ணலாம், பட் ஒரு டூ டேஸ் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தப் பிறகு பண்ணலாம். ப்ளீடிங் ஆக வாய்ப்பிருக்கு.” எனவும், “ஓகே தேங்க் யூ ஆன்ட்டி. தேங்க்ஸ் ஃபார் த சப்போர்ட்.” என நன்றி சொல்ல, “போடா பெரிய மனுசா…” என சிரித்தவர், “கவனம் ஷ்யாம்…” எனவும் அவனும் தலையை மட்டும் அசைத்தபடி வெளியில் வந்தான்.
வந்தவன் நேராக மனைவியின் அறைக்குள் செல்லாமல், அந்த அறையைத் தாண்டி இருந்த காரிடரில் ஒரு மூலையில் போய் நின்றான். முதலில் அவன் கேட்டதை எல்லாம் ஜீரணிக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு நடந்ததை முற்றிலும் அலசி ஆராய நேரம் வேண்டியிருந்தது. இதே குழப்பத்துடன் மனைவியிடம் சென்றால் அவளிடம் கத்திவிடுவோமோ என்ற பயமும் இருந்தது. அதனால் சற்று நேரம் தனியாக யோசிக்கலாம் என்று அங்கு வந்து நின்றான்.
வெகுநேரமாக அறைக்கு வராத தம்பியைத் தேடி போன் செய்து தோற்றுப்போய் காரிடருக்கு வந்த சபரி, அங்கு தீவிர சிந்தனையில் இருந்த ஷ்யாமைக் கண்டு அருகில் சென்றான்.
“என்னடா இது, உன்னை எங்க எல்லாம் தேடுறது? போன் பண்ணா எடுக்கல, என்ன பிரச்சனை?”
“அதெல்லாம் இருக்கட்டும் நீ காலேஜ் போகலையா?”
“நான் என்ன கேட்குறேன், நீ என்ன பதில் சொல்ற? நான் கிளம்பி அனுவை பிக்கப் பண்ண போனேன், அவ லீவ் சொல்லிட்டேன் வரலைனு சொல்றா. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அவளா ஒரு முடிவு எடுத்துருக்கா. எங்கிட்ட சொல்லிருக்கலாம் தானனு சத்தம் போட்டுட்டு வந்துட்டேன். அப்புறம் எங்க காலேஜ் போக, நானும் ஆஃப் போட்டுட்டு வந்துட்டேன்.”
“ம்ம்…” என்றவனுக்கு ஒரு யோசனை. அண்ணியிடம் விசாரித்தால் என்ன என்றுத் தோன்ற உடனே சபரியிடம், “வா அண்ணி வீட்டுக்கு போகலாம். எனக்கு ஒரு உண்மை தெரியணும். அது கண்டிப்பா அண்ணிக்குத் தெரிஞ்சிருக்கும். அவங்ககிட்ட கேட்டா கிடைக்கும்னு நினைக்கிறேன்.” என்று அவசரப்பட,
“என்ன நடந்துச்சுனு சொல்லுடா, அவளுக்குத் தெரியுமா தெரியாதானு நான் சொல்றேன்.” என்றான் சபரி.
“ம்ச்… உனக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்காது. ஆனா அண்ணிக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நீ இரு, நான் போய் ஸ்ரீட்ட சொல்லிட்டு வர்றேன்.” என்றவன் வேகமாக மனைவியின் அறைக்கு ஓடினான்.
அறைக்குள்ளோ அவளைச் சுற்றி அனைவரும் இருக்க, நேராக மனைவியிடம் சென்றவன் மற்றவர்களைப் பார்த்து, “நான் கொஞ்சம் பேசணும், வெளிய இருங்க.” என்றான். அவன் சொன்னதும் வெளியேற நாகம்மையோ அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“ஸ்ரீ என்ன நடந்ததுனு மறைக்காம எங்கிட்ட சொல்லு. பாப்பா வந்ததுல இருந்து நீ என்ன என்ன செஞ்ச எல்லாம், எல்லாமே… வீட்டு வேலை செஞ்சது முதற்கொண்டு, என்ன என்ன வேலை, எப்ப எப்ப செஞ்ச, இப்படி எல்லாமே சொல்லு.” என பரிதவிப்பாகக் கேட்க,
‘ஏன்’ என கேட்க வந்தவள் அவன் முகத்தில் தெரிந்த பரிதவிப்பில், கரு உண்டானதில் இருந்து அவளது பயம், கோபம், பரிதவிப்பு, ஆற்றாமை என காட்டிய உணர்வுகள். வீட்டில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு, இரண்டு நாட்களாக யோசித்தது, அடுத்த நாள் ஒரு முடிவோடு கீழே வந்தது, லலிதா காபி கொடுத்தது என நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவள் முகத்தில், அன்றைய வேதனை மிச்சமிருக்க கேட்டவனோ அவளை அப்படியே தன்னோடு இறுக்கியிருந்தான்.
சில நிமிடங்களில் விடுவான் என்று பார்க்க, அவனது இறுக்கம் கூடிக்கொண்டே போனதே தவிர, குறையவே இல்லை. அவள் விலகலாம் என நினைக்க தன்னிடமிருந்து பிரித்தவன், “சவிக்கிட்ட சொல்லி உன்னோட திங்க்ஸ் பேக் செஞ்சி கொண்டு வர சொல்றேன். இங்க இருந்தே ஊருக்கு கிளம்பு.” என்றவன் வெளியில் சென்றுவிட விக்கித்துப் போனாள் பெண்.
‘என்ன சொல்றாங்க? ஊருக்குப் போகணுமா? அம்மா கூடவா? தனியாவா? அவ்ளோதானா? ஏன் இப்படி சொன்னாங்க, அப்போ நான் வேணும்னுதான் பாப்பாவை கொன்னுட்டேன்னு நினைக்கிறாங்களா? அப்படித்தான் நினைக்கிறாங்களா…’ என அவளது மூளை கண்டதையும் யோசிக்க ஆரம்பித்திருந்தது.
ஆனால் வெளியில் வந்தவனோ நேராக சுமதியிடம் சென்று அன்றே டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டு, முழு வசதியுடன் ஊருக்கு அழைத்துச் செல்வதாக சொல்ல, அவரும் என்ன நினைத்தாரோ உடனே சரியென்றுவிட்டார்.
தங்கையிடம் மனைவியின் பொருட்களை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்லிவிட்டு, சபரியோடு அனுவைப் பார்க்கச் சென்றான். ஏற்கனவே பயத்திலும் குற்ற உணர்விலும் இருந்தவள், இருவரையும் அந்நேரம் பார்த்ததும் அதிலும் ஷ்யாமின் குற்றம் சாட்டும் பார்வையைப் பார்த்ததும், எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் லலிதா தன்னிடம் பேசிய அனைத்தையும் இருவரிடமும் சொல்லிவிட்டாள்.
மனைவி பேச ஆரம்பித்ததுமே கண்களில் கோபம் எரிந்தது சபரிக்கு. “ச்சீ… நீயெல்லாம் ஒரு பொம்பளையா? என்ன மாதிரியான ஜென்மம் நீயெல்லாம்? ச்சே… எப்படி ஒரு உயிரை… நீ படிச்சவதான? உங்கிட்ட எத்தனை தடவ சொல்லிருப்பேன், கேட்டியா? இப்போ எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கு பார்த்தியா? இனி எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்? செய்றதையும் செஞ்சிட்டு இங்க வந்து உக்காந்துட்டு நல்லவ மாதிரி வேசம் போட்டுருக்க ச்சீ… உன்னோட மனசுக்குத்தான் நமக்குனு ஒரு குழந்தைகூட உருவாகாம போயிருக்கு.” எனப் பேசிக்கொண்டே அனுவின் கழுத்தைப் பிடித்திருந்தான் சபரி.
அனு சொல்லி முடித்ததும் பெரிதாக அதிரவில்லை ஷ்யாம், ஓரளவுக்கு இதை எதிர்பார்த்திருந்தான்தான். ஆனால் மனதின் ஒரு மூலையில் அப்படி இருக்காது என நினைத்துக்கொண்டே வந்தவனுக்கு அனுவின் பேச்சு அது பொய் என்று நிரூபித்துவிட, எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
ஷ்யாம் வெளியேறவும் உள்ளே சபரியின் சத்தம் அதிகம் கேட்கவும் பயந்து போய் எட்டிப்பார்த்த அனுவின் அம்மா, ஓடிப்போய் அவளைத் தன் பக்கம் இழுத்து, “என்ன தம்பி, என்ன இதெல்லாம்? உங்க மேல நாங்க வச்சிருக்கிற மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க. தப்பு செஞ்சா சொல்லித் திருத்துங்க, அதை விட்டுட்டு இப்படியெல்லாம் நடந்துக்காதீங்க தம்பி.” என கோபமும் அழுகையும் ஆற்றாமையுமாகப் பேச,
“ஒரு குழந்தையோட மதிப்பு அது இல்லாதவங்களுக்குத்தான் தெரியும்னு சொல்லுவாங்க. அது பொய்… உங்க மகளுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்ல. நாளைக்கு நான் டிவோர்ஸ் பேப்பர் அனுப்புவேன், சைன் பண்ணி அனுப்பு. ரீசன்ல என் மனைவிக்கு குழந்தை பெத்துக்குற தகுதி இல்லனு மென்ஷன் பண்றேன். நீ செஞ்ச தப்புக்கு இதுதான் தண்டனை.” என்றவன் கோபத்தில் அவளைத் தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேற, நடந்த எதையும் நமப முடியாமல் அதிர்ச்சியில் நின்றிருந்தார் அனுவின் அம்மா.
1 comment
ஆமாம் டா! அப்ப டீல்ல விட்டுட்டு
இப்ப வந்து ஆளாளுக்கு பஞ்சாயத்து பண்ணுங்க.
😊😊😊
CRVS (or) CRVS 2797