அத்தியாயம் – 22
பரந்தாமன் மருத்துவமனைக்கு வந்து முழுதாக இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. மைல்ட் அட்டாக்! அதிர்ச்சிகள் அதிகம் கொடுக்கக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்க, அவரை கண்ணாடி பாத்திரம் போல் கையாள வேண்டிய சூழல் அனைவருக்கும்.
சபரி வந்து அழைக்க வேண்டும் என்றெல்லாம் அனு எதிர்பார்க்கவே இல்லை. முத்தம்மாவின் மூலம் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே மருத்துவமனைக்கு வந்துவிட்டாள். லலிதா வந்து மருமகளிடம் பேசப்போக, சபரி பார்த்த ஒற்றைப் பார்வையில் எழுந்து வந்து கணவனை ஒட்டி நின்றுகொண்டாள் அனு.
இங்கோ முதல்நாள் மருத்துவமனை களேபரங்கள் அனைத்தும் முடிந்து ஐசியுவில் இருந்து அறைக்கு மாற்றவும்தான், அனைவருக்கும் போன உயிர் திரும்ப வந்தது. பதட்டத்துடன் முதலில் உள்ளே நுழைந்த மனைவியைப் பார்த்து முகத்தைத் திருப்பியவர்தான், அதன்பிறகு பார்வையை அவர்புறம் திருப்பவே இல்லை பரந்தாமன்.
இதில் யாரும் எதுவும் பேசவில்லை. அவரே வந்து கேட்டாலும் யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. அவர்களின் உதாசீனம் ஓரளவுக்கு ஏனென்று அவருக்குப் புரிந்தாலும், அதற்காக அவர் வருத்தப்படவுமில்லை. தான் செய்தது தவறென்று அவர் நினைக்கவே இல்லை. அந்த தவறை தவறென்று உணர வைக்க ஒருவன் வந்து கொண்டிருந்தான்.
ஷ்யாமிற்கு அன்றே அழைத்து சபரி விபரம் சொல்ல காரை ஓரமாக நிறுத்தி இறங்கியிருந்தான். “இங்க நான் பார்த்துக்கிறேன் ஷ்யாமா, நீ பாலாவை பாரு. அவளுக்கு இப்போ நீ கூட இருக்கணும், அப்பாவும் அதைத்தான் சொல்வார். கிரிட்டிக்கல்னா நானே உன்னைக் கூப்பிடுவேன். லீவ் எக்ஸ்டன்ட் பண்ணிடு. உடனே போகணும்னு குதிக்காத.” என்றான் அண்ணனாக.
“இப்போ எப்படி இருக்கார்?” என்றவன் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. அவர்களை விட்டுத் தள்ளி வந்திருந்தான். அந்தப் பக்கம் சபரி, “ஷ்யாமா… ஷ்யாமா…” என பலமுறை அழைத்துவிட்டான்.
பதிலேதுமில்லை என்றதும் சபரி போனை கட் செய்து மீண்டும் அழைக்க, அப்போதுதான் சுயத்திற்கு வந்தான் ஷ்யாம். “என்னடா நீ…” என சபரி அதட்ட,
“ம்ம்ச்… நத்திங் சபரி, நான் இப்போ வரல. ஆனா டூ டேஸ்ல கண்டிப்பா வருவேன். வந்து பார்த்துட்டு போறேன். எனக்கும் அங்க கொஞ்சம் வேலை இருக்கு.” என்றவன் குரலில் அத்தனை இறுக்கம். தாயை மனதில் வைத்துப் பேசுகிறான் என்று உடன்பிறந்தவனுக்குப் புரிந்தது.
“சரிடா நீ வா பார்த்துக்கலாம், ஆனா இதையெல்லாம் அத்தைக்கிட்டயோ பாலாக்கிட்டயோ சொல்லாத. நம்மனாலதான்னு நினைச்சு வருத்தப்படுவாங்க. அப்பப்ப உனக்கு போன் பண்றேன், மறக்காம சவிக்குப் பேசு, ரொம்பவே பயந்துட்டா.”
“ம்ம் சரி சபரி, நான் வரும்போது கால் பண்றேன். நீ பாரு, எனி எமர்ஜென்சி என்னை கூப்பிட்டு.” என்ற ஷ்யாம் கையோடு தங்கைக்கு அழைத்துப் பேசவும் தவறவில்லை. ஆனால் யாருக்கும் சந்தேகம் வராதது போல் பேச வேண்டும், என சுற்றும் முற்றும் பார்த்தபடியே பேசி முடித்தவனுக்கு மிகவும் வருத்தமாகிப் போனது. ஊர் வந்து சேர்வதற்குள் இப்படி ஒரு செய்தியை அவன் கேட்க வேண்டி ஆகிவிட்டதே என்று.
“அப்பா…” ஒருமுறை சொல்லிப் பார்த்தவன், சாலையின் நேர்குறியாக பார்வையைப் பதித்திருந்தான். அப்பாவை விட அம்மாதான் மிகவும் செல்லம் கொடுப்பார் ஷ்யாமிற்கு. லலிதாவின் அதிகப்படியான செல்லத்தினால்தான் பரந்தாமன் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக மாறக் காரணம். ஷ்யாமின் எண்ணங்கள் தன் சிறு வயதை நோக்கி ஓட ஆரம்பிக்க, அதைப் பிடித்து இழுத்து நிகழ்காலத்திற்கு வந்தவன், காரிலும் அமர்ந்திருந்தான்.
பக்கத்தில் இருந்த முருகேசனோ ஷயாமையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவனின் குறுகுறுப் பார்வையில் அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பிய ஷ்யாம் யோசனையோடே, ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்த, “நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா, உன்னை விரட்டி விரட்டி சைட்டடிச்சு உன்னைத்தான் கட்டிருப்பேனா பார்த்துக்கோ, நீ அம்புட்டு அழகு…!” என கிண்டல் பாவனையில் அவன் சொல்ல பக்கென்று சிரித்துவிட்டான் ஷ்யாம்.
“அடச்சீ… அவனா நீ…” என ஷ்யாமும் பதிலுக்கு கிண்டல் செய்ய ஆரம்பிக்க அதில், “போடாங்க்…” என கெட்டவார்த்தையில் திட்ட ஆரம்பித்திருந்தான் முருகேசன்.
ஒருவழியாக கார் கிளம்ப தேனியை நெருங்கிக் கொண்டிருந்தது ஐட்வென்டி. சற்று நேரத்தில், “தம்பி பக்கத்துல நிழலா பார்த்து நிறுத்துங்க, பாலா கொஞ்சம் இறங்கி நிக்கட்டும், கால் வெரைச்சிப் போகுதாம்.” என மாரியம்மா சொல்லவும், திரும்பி மனைவியைப் பார்த்தவன், அவள் அவஸ்தையாக நெளிவதைக் கண்டு சற்று தூரத்தில் தெரிந்த அடர்ந்து பறந்து விரிந்து கிடந்த ஒரு ஆலமரத்தின் நிழலில் நிறுத்தியிருந்தான் தன் ஐட்வென்டியை.
“இன்னும் அரை மணி நேரத்துல போய்டலாம் அத்தை, தேனி சந்தைல வீட்டுக்கு எதுவும் சாமான் வாங்கணுமா? நான் போய் சுவரொட்டியும் எலும்பு கறியும் வாங்கிட்டு வரேன், சுல்தான் பாய் கடைக்கிட்ட இறங்கிக்கிறேன்.” என முருகேசன் சொல்ல,
“சாமனெல்லாம் கிடக்கு தம்பி, கறி மட்டும் வாங்கிட்டு வந்துடுயா.” என்றபடியே இறங்கியவர், மகளையும் கைப்பிடித்து இறங்க உதவி செய்தார். அதற்குள் ஷ்யாமும் மனைவியின் அருகில் வந்துவிட, இருவருக்கும் தனிமை கொடுக்கும் பொருட்டு, மற்ற இருவரும் பேசியபடியே தள்ளிச் சென்றனர்.
“என்ன செய்யுது ஸ்ரீ? உக்காந்துட்டே வந்தது கஷ்டமா இருக்கா? மேனேஜ் செஞ்சிப்பியா? இல்ல இங்க தேனில ஹாஸ்பிடல்ல காட்டிட்டு போகலாமா?”
“அதெல்லாம் இல்ல பாவா, கொஞ்சம் கால் விரைச்ச போல இருந்தது. நடந்தா நல்லாருக்கும்னு தோனுச்சு அவ்ளோதான்…” என்றவள் கணவனின் கையைப் பிடித்து மெல்ல எட்டுக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
“ம்ம் சரி, பார்த்து மெதுவா நட.” என்றவனும் அவளது மெல்லிய பூவிடையை அணைத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
“எதுக்கு மாமா கூட வம்பு பண்ணிட்டே இருக்கீங்க?” அவளே ஆரம்பித்தாள்.
“ஹா ஹா… நான் எங்க ஆரம்பிச்சேன், அவனேதான் ஆரம்பிக்கிறான்.” சிரித்தபடியே பதில் கொடுக்க,
“ம்ம்… மாமா ரொம்ப பாவம் பாவா. எங்களை மாதிரிதான் அவரும். அப்பா இல்லாம கஷ்டப்பட்டார். சின்ன வயசுலயே கேன்சர் வந்து அவங்கப்பா இறந்துட்டாங்க. பெரிய மாமா இறந்ததும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. அப்போ எல்லாம் அப்பாதான் கூடவே இருப்பார். ஹாஸ்பிடல் செலவுக்காகனு கடன் வாங்கி, அது நிறைய ஆகிடுச்சி. வாங்கின இடத்துல அந்த ஆளுங்க வந்து முருகேசன் மாமாவை மிரட்டி கூப்பிட்டு போய் தோட்டத்துலயே அடச்சி வச்சு வேலை செய்ய வச்சிட்டாங்க.
கொத்தடிமை மாதிரி… பணம் கொடுத்தாதான் அனுப்புவோம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அப்பாதான் போலிஸ்க்கு எல்லாம் போய் கடனை எல்லாம் கட்டி இவரைக் கூப்பிட்டு வந்தாங்க. படிக்க வச்சாங்க, ஆனா மாமா ப்ளஸ்டூக்கு அப்புறம் படிக்க மாட்டேன்னு சொல்லி, அப்பாக்கூடவே விவசாயம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
கொஞ்ச நாள் கழிச்சு கரஸ்லயாச்சும் டிகிரி படிச்சே ஆகணும்னு எங்கப்பா கட்டாயப்படுத்தவும்தான் படிச்சாங்க. எந்த நேரமும் வேலை செஞ்சிட்டே இருப்பாங்க. என் மேல இல்ல, எங்க மூணு பேர் மேலயும் உயிர் அவருக்கு. அத்தை அதை தப்பா நினைச்சிட்டு வந்து பொண்ணு கேட்கவும், அம்மா இல்லைனு சொல்லுறதுக்கு முன்னாடியே மாமா, ‘எனக்கு அப்படியொரு எண்ணமே இல்லன்னு’ சொல்லி அத்தையை சத்தம் போட்டு கூப்பிட்டு போயிட்டாங்க.
அதுல அத்தைக்கும் அப்பத்தாவுக்கும் எங்க மேல வருத்தம்.” என நீண்ட பேச்சை முடிக்க, ஷ்யாமிற்கும் முருகேசனை நினைத்து வருத்தமாக இருந்தது. அன்பிற்கும் ஆதரவிற்கும் தந்தையில்லாமல் எத்தனைக் கஷ்டப்பட்டிருப்பான் என்று அவன்பால் இரக்கம் சுரந்தது. அவன் வாழ்க்கையைப் பறித்து விட்டோமோ என்று இடைப்பட்ட காலங்களில் பலமுறை அவன் யோசித்தது உண்டு. இன்று மனைவியின் பேச்சில் அந்த எண்ணம் மறைந்து, ஒரு இதம் பரவியது என்னமோ உண்மை.
“இப்ப நான் எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னு உங்களுக்கு தெரியுமா?” என நாகம்மை கேள்வியாக நிறுத்த, யோசனைகளில் இருந்த ஷ்யாமும் மனைவியை கேள்வியாக நோக்கினான்.
“இப்போவும் உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? குழந்தைக்காகத்தான் என்னைத் தேடி வந்தீங்களா? இந்த அக்கறை எல்லாம் அதனால் தானா?” என்ன முயன்றும் குரலில் ஆமாம் என்று விடுவானோ என்ற பயம் வந்திருந்தது.
“முட்டாள் மாதிரி உளறாதடி. நான் நடந்துக்குறது எல்லாம் உனக்கு அப்படி தெரியுதா? நான் காட்டுற அக்கறையும் அன்பும் உனக்கு குழந்தைக்காகத்தான்னு தோனுதா? சொல்லுடி…” பேச்சில் காரம் தூக்கலாகியது.
“ம்ச்… கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு டிவோர்ஸ் கேட்டா, நான் வேற எப்படி நினைப்பேன்? அப்புறம் அந்த… அந்த நேரத்துல போய் நயனானு வேற ஒருத்தங்க பேரைச் சொன்னா நான் என்னனு நினைப்பேன்?” குரலில் அத்தனை வலி அவளிடம்.
“ப்ச்… இவளோட… நான் என்னடி பேசுறேன், நீ என்ன சொல்லிட்டு இருக்க?” கடுப்பாகிவிட்டான். எதை எதோடு முடிச்சி போடுகிறாள்.
“நீங்க கேட்ட கேள்விக்குதான் நானும் பதில் சொல்லிட்டு இருக்கேன். சொல்லுங்க, அப்போ உங்களுக்கு என்னைப் பிடிக்கல, இப்போ பிடிச்சிடுச்சா?” என்றாள் விடாக்கண்டியாக.
“ம்ம், லூசுக் கிறுக்கிடி நீ. இப்போ இல்ல, அப்போவே உன்னைப் பிடிச்சித்தான் இருந்தது. ஆனா அது எனக்குப் புரியவே இல்லை. அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன். இப்போ எதுக்கு நீ இவ்வளவு இழுக்குற, ஸ்ட்ரெயிட்டா மேட்டர சொல்லு.” என்றதும்,
“அப்பாவோ இல்ல வேற யாரோ இருக்கும் போது அவங்க அருமை தெரியாதுனு சொல்லுவாங்க, உண்மையும் அதுதான். எங்கப்பா இருக்கும் போது அவரோட அருமை தெரியல, அதுக்காக அவரை நாங்க மதிக்காம அப்படியெல்லாம் இல்லை. அவர் இல்லாம போனதும்தான் வாழ்க்கைக்கு அப்பா எவ்வளவு முக்கியம்னு உணர ஆரம்பிச்சோம்.
என்னதான் பிடிக்காம நம்ம கல்யாணம் நடந்தாலும் இப்போ உங்களுக்கு பிடிச்சிடுச்சிதான? இந்த கல்யாணம்தான் உங்களுக்கு மாமா மேல கோபத்தை வர வச்சது. இப்போதான் எல்லாமே சரியாகிடுச்சு இல்ல, மாமா கூட பேசாலாமே…” என நீளமாகப் பேசி முடிக்க, அவளையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
ஒருவழியாக அவள் பேசி முடித்துவிட்டு கணவனையேப் பார்க்க, அவனோ அதைப்பற்றி எதுவும் சொல்லாமல், “இப்போ உனக்கு ஓகேவா, கிளம்பலாமா?” என கேட்க, மனைவியின் கண்களில் எரிச்சல் தெரிந்தது.
ஒன்றும் சொல்லாமல் நாகம்மையும் அப்படியே நிற்க, “சரி நீ இப்படியே நில்லு, உங்க அம்மா வந்து கேட்டா பதில் சொல்லு.” என்றவன், மொபைலை எடுத்து ஆராய, ‘சரியான உராங்குட்டன்’ என மனதுக்குள் சகட்டுமேனிக்குத் திட்டியவள், “போலாம்.” என கடுப்பாகச் சொல்ல, “சரி வா.” என்று அவளைப் பிடித்தபடியே வந்து காரில் ஏற்றினான்.
இவர்களைப் பார்த்து மற்றவர்களும் வந்துவிட இப்போது கார் முருகேசனின் கைக்கு வந்துவிட, “நான் கடைக்கு போகனணும்னு சொன்னேன்ல, என்னைய உக்கார சொன்னா…” என எரிச்சலாகக் கேட்க,
“எனக்கு என்ன தெரியும் இந்த ஊரைப்பத்தி? அங்க அங்க நிறுத்தாம நீயே கொஞ்சம் சீக்கிரமா ஓட்டு.” என்றவன் மனைவியின் அருகில் அமர்ந்துவிட, இப்போது இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சீட்டில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
ஷ்யாமின் செய்கையைப் பார்த்து பல்லைக் கடித்தவன் வேறு வழியில்லாமல் வாய்க்குள் திட்டியபடியே, “ஸ்ரீ குட்டி உனக்கு சந்தைல என்னடா வேணும்?” என்றபடியே காரை ஓட்ட, அவனது ‘ஸ்ரீ குட்டி’ என்ற அழைப்பில் பட்டென்று கண்களைத் திறந்தவன், முருகேசனை முறைக்க ஆரம்பிக்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் ஷயாமைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்..
ஊருக்குள் நுழைந்ததுமே கார் நேராக சென்று நின்றது என்னவோ ஷ்யாமின் வீட்டிற்குத்தான். பரந்தாமன் கட்டிய வீடு ஷ்யாமின் பெயரில்தான் இருந்தது. அங்கு ஏற்கனவே அனைவரும் காத்திருக்க, ஆரத்தி எடுத்து நலவிசாரிப்புகள் அனைத்தும் முடிந்து அன்றைய இரவு அமைதியாகவே கழிந்தது அனைவருக்கும்.
மனைவியைத் தன் கைவளைவுக்குள் வைத்திருந்தவன், அவள் பார்வை தன்மேலே இருப்பதைப் பார்த்ததும், “தூங்க விடு ஸ்ரீ, நீ இப்படி பார்த்தா நான் எப்படி தூங்க?” என அதட்ட,
அந்த அதட்டலில் தன் தலையால் அவன் நெஞ்சில் கோபமாக முட்டியவள், கோழிக்குஞ்சாய் அவனுக்குள் சுருண்டுகொள்ள, இதழ்க்கடையில் அழகான புன்னகை அவனிடம்.
மனைவி என்ன பேசப்போகிறாள் என்று தெரிந்துதான் அவளை அதட்டிப் படுக்க வைத்தான். ஏனோ இப்போது அதைப்பற்றி பேசத் தோன்றவில்லை அவனுக்கு.
தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் இருப்பதாக சொன்னதுமே, தன் பிடிவாதத்தை விட்டிருந்தான். அப்படியே காரைத் திருப்பிக்கொண்டு போய்விடலாம் என்று உள்ளம் கூக்குரல் இட்டது. ஆனால் அவனுக்கு அதைவிட முக்கியம், மனைவியை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்பதுதான். அதனால் தன் மனதில் தோன்றிய அத்தனை வலிகளையும் மறைத்து அவளுக்காக பயணத்தைத் தொடர்ந்திருந்தான். அதோடு சபரியும் அங்கு இருப்பதால் சற்று நிம்மதியாக இருந்தது.
இந்த யோசனைகளில் இருந்தவனிடம் வந்து அப்பாவைப் பற்றி நாகம்மை விரிவுரை வழங்கினால் அவனுக்கு எப்படி இருக்கும்? ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தத்தளிப்பவனை, மேலும் பேசி வெளியே வரவிடாமல் மூழ்கடித்துக் கொண்டிருந்தாள். பலதையும் யோசித்து அவன் உறங்க இரவு வெகு நேரமாகியிருந்தது.
முழுதாக ஒரு நாள் அங்கிருந்தவன் அன்றிரவே கிளம்பிவிட்டான். கார் இங்கையே இருக்கட்டும் என்றுவிட்டான். மதுரை வரை முருகேசன் வந்துவிட, அங்கிருந்து விமானத்தில் சென்னை வந்துவிட்டான். ஏர்போர்ட்டில் இருந்து நேராக மருத்துவமனைக்கு வந்தவனுக்கு கடந்த இரண்டு நாட்களாக நடந்ததுதான் எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
1 comment
எப்படி தெரியும் ? எப்பவும் அதிகாரத்துலயும், ஆணவத்துலயும் இருந்து பழகினவங்களுக்கு அவங்க செய்யுற தப்பி புரியாது, தெரியவும் தெரியாது.
😴😴😴
CRVS (or) CRVS 2797