அத்தியாயம் – 23
அருகருகே அமர்ந்திருந்த சபரி மற்றும் ஷ்யாம் இருவர் முகத்திலும் ஒரு தீவிரமான பாவனை தெரிந்தது. இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவே அந்த பாவனை சொல்ல, அப்போதுதான் வந்த அனுவிற்கு அது புரிந்தது.
வீட்டில் இருந்து அப்போதுதான் வந்திருந்தாள். அங்கு இருந்த ஷ்யாமை அவள் எதிர்பார்க்கவில்லை என்று அவளது அதிர்ந்த தோற்றமே சொன்னது. மனைவியைப் பார்த்ததும் சபரியின் முகம் இறுக்கத்தைக் காட்ட, கணவனின் கோபத்தில் அனுவோ அமைதியாகச் சற்றுத் தள்ளிப் போய் நின்றுகொண்டாள்.
“சபரி, நான் வீட்டுக்குப் போகும் போது, அவங்களை தவிர வேற யாரும் இருக்கக்கூடாது.” என்றான் அழுத்தமாக.
“ஷ்யாம் பொறுமையா இரு, எதையும் யோசிக்காம செய்யக் கூடாது. ஃபர்ஸ்ட் அப்பா ரெக்கவர் ஆகி வீட்டுக்கு வரட்டும், பிறகு சூழல் பொறுத்து பேசுவோம்.” என்ற சபரியை வெறித்துப் பார்த்தான் ஷ்யாம்.
“அப்போ அவங்களை அப்படியே விட சொல்றியா? அவங்க செஞ்ச தப்பை அவங்களுக்குப் புரிய வைக்க வேண்டாமா? கரைஞ்சு காணாம போனது என்னோட உயிர். அது உனக்குப் புரியுதா? அபார்ட் ஆனதுல இருந்தே ஸ்ரீ இன்னும் வெளிய வரல, இதுல இவங்கதான் எல்லாம் செஞ்சாங்கனு தெரிஞ்சா, அவ என்ன பண்ணுவா? எப்படி ரியாக்ட் பண்ணுவா எதுவும் எனக்குத் தெரியாது. இங்க இருந்தா கண்டிப்பா இவங்க சும்மா இருக்கமாட்டாங்கனுதான் ஊர்ல விட்டுட்டு வந்துருக்கேன்.
“ம்ச்… அப்படி இல்ல ஷ்யாம், இப்போ அதுக்கான சிச்சுவேசன் இல்லை, அதைத்தான் சொல்ல வந்தேன். அப்பா கொஞ்சம் ஸ்டேபிள் ஆகட்டும் அதுக்குப் பிறகு நீ பேசு. இன்னும் அவருக்கு அவங்கதான் செஞ்சாங்கனு முழுசா தெரியாது. அவங்க பாலாவை ஹாஸ்பிடல்ல பார்க்க வராம ஒதுங்கி இருந்ததுக்குத்தான் நாம கோபமா இருக்கோம், சவி ஹாஸ்டல் போறேன்னு எல்லாம் சொல்றானு நினைச்சுட்டு இருக்கார். அன்னைக்கு நான் பேசினதும்தான் அவருக்கு தெரிஞ்சது. அதுவும் முழுசா தெரியாது. இப்போ நீ போய் பேசி அவங்க மறுபடியும் பிரச்சனை செய்தா…” என்று சபரி பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களை நோக்கி கோபமாக வந்து கொண்டிருந்தார் லலிதா.
இவர்கள் இருவரின் பேச்சையும் தூரமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்த அனு, ஒன்றைத் தெளிவாகக் கண்டு கொண்டிருந்தாள். அவள் கண்டுகொண்ட செய்தி மனதுக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அது அவர்கள் லலிதாவை, ‘அம்மா’ என்று அழைத்துப் பேசவே இல்லை.
‘அவங்க, இவங்க’ என்று மட்டுமே குறித்துப் பேசினார்கள். இதை லலிதா உணர்ந்தாலோ அல்லது தெரிந்து கொண்டாலோ என்ன மாதிரி பிரச்சனையை உருவாக்குவாரோ என்று பயந்து போய் நின்றிருந்தாள்.
லலிதா வந்தவர் ஷ்யாமும் அங்கிருப்பதைப் பார்த்து, “ஓ நீயும் இங்கதான் இருக்கியா, உன் பொண்ட்டாடிய பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வந்தாச்சா?” என்றார் நக்கல் குரலில்.
தாயின் பேச்சில் சட்டென்று வேகமாக எழுந்து, “என்ன சொன்னீங்க, திரும்ப சொல்லுங்க.” என இறுகிய தன் கை முஷ்டியை அவர் முன் காட்டமுடியாமல் தன் கோபத்தை அடக்க முடியாமல், அழுத்தமான காலடிகளை ஓரெட்டு முன் வைத்து இறுக்கமான குரலில் கேட்க, மகனின் இந்த செயலில் அதிர்ந்த லலிதா ஓரடி பின்னே சென்றார் என்றால், சபரியோ வேகமாக எழுந்து தம்பியைப் பிடித்து மடக்கியிருந்தான்.
“எதுக்கு வந்தீங்களோ, அந்த வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்புங்க. நான் என்ன பண்ணணும், பண்ணக்கூடாதுனு சொல்ற வேலை எல்லாம் வேண்டாம்.” என்றான் அடக்கப்பட்டக் கோபத்துடன்.
“ஷ்யாம் போதும், நீ வீட்டுக்கு கிளம்பு. அங்க வச்சுப் பேசிக்கலாம், இது ஹாஸ்பிடல் வீடு கிடையாது. ஃபேமிலி மேட்டர் பேசுற இடம் கிடையாது.” என அண்ணனாக சபரி அதட்ட,
தமையனை உதறித் தள்ளியவன், “இனி அந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, இவங்க இருக்குற அந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன். இவங்களை முதல்ல இங்க இருந்து போகச் சொல்லு, பார்த்தாலே நான் என் கன்ட்ரோல் தாண்டி எதுவும் செஞ்சிடுவேனோனு பயமா இருக்கு.” என்றான் கண்ணில் ரௌத்திரத்துடன்.
ஷ்யாமின் செய்கையில் அதுவரை அதிர்ச்சியில் இருந்த லலிதா அவனது கடைசி வாக்கியத்தில் உணர்வுக்கு வந்தவர் ஓங்கி அறைந்திருந்தார் மகனை.
“என்ன விட்டா பேசிட்டே போற, கொஞ்சமும் மரியாதை கிடையாது. யாருக்கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சிதான் பேசுறியா? இப்படி எல்லாம் பேசத்தான் உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தேனா? ரெண்டு நாள் கூட ஆகல அவ கூட போய் இருந்து, அதுக்குள்ள அவ உன்னையும் மயக்கிட்டாளா? ச்சே… என்ன பொம்பள அவளெல்லாம்…” என முடிக்கும் முன்னே,
“போதும் நிறுத்துங்க.” என அந்த இடமே அதிரும் அளவிற்கு கத்தியிருந்தான் ஷ்யாம்.
தள்ளி நின்ற அனுவை, சபரி ஒரு அனல் தெறிக்கும் பார்வை பார்க்க, அதில் அவளுக்கும் உள்ளுக்குள் குளிரெடுக்க, வேகமாக வந்து லலிதாவப் பிடித்து சற்றுத் தள்ளி அழைத்துச் செல்ல, சபரியிடமிருந்து திமிறிக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
அவர்களின் அந்த வாக்குவாதத்தில் நான்கைந்து பேர் கூடிவிட, ஷ்யாம் தன்னைக் கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டுப்போனான். தன்னை மடக்கிப் பிடித்திருந்த சபரியை உதறியவன் நேராக லலிதாவிடம் சென்று, “என் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு, அதை ஏன் கருவுலயே கொன்னீங்க? உங்களுக்கு கோபம்னா அது என் மேலயும் ஸ்ரீ மேலயும் தான, அதை எங்க மேல காட்டிருக்கலாம் தான? இந்த உலகத்தைப் பார்க்க துடிச்சிட்டு இருந்த ஒரு உயிரை அநியாயமா கருவிலேயே கரைச்சிட்டீங்களே? ஏன் இப்படி பண்ணீங்க? சொல்லுங்க, ஏன் இப்படி பண்ணீங்க?” என அடக்கப்பட்ட ரௌத்திரக் குரலுடன் கேட்க,
உனக்கு சளைத்தவள் இல்லை நான் என காட்ட ஆரம்பித்தார் லலிதா. “அட முளைக்கவே இல்லாம போன ஒரு உயிருக்காக, என் குழந்தை என் குழந்தைனு சொல்ற. நான் இருபத்தியெட்டு வருஷம் பொத்தி பொத்தி வளர்த்த என் பையனை எவளோ ஒருத்திக்கு தூக்கி கொடுக்குற எனக்கு எவ்வளவு வலிக்கும்?” என தோரனையாக, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் கேட்டவரை வெறித்துப் பார்த்தான் ஷ்யாம்.
அடுத்து ஒரு நொடி கூட ஷ்யாம் அங்கு நிற்கவில்லை. சபரி தடுக்க, தடுக்க கிளம்பியிருந்தான். வீட்டிற்கும் செல்லவில்லை, பைத்தியம் பிடித்தவனைப் போல் ரோட்டில் அலைந்து கொண்டிருந்தான்.
நெஞ்சமெல்லாம் இரணமாக வலித்தது. ஒரு உயிரை கருவிலேயே கருக்கிவிட்டு அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் தைரியமாக தன்னிடம் பேசும் தாயை, நினைக்கும் போது உள்ளம் மொத்தமும் கசந்து போனது.
தன்னையோ, தன் குடும்பத்தையோ பொறுத்தவரை லலிதா ஒரு நல்ல தாய்தான். ஆனால் நாகம்மையைப் பொறுத்தவரை அப்படி இல்லை என்று முதலிலிருந்தே தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் காட்டிக் கொண்டிருந்தார்.
பிடிக்காத மருமகள், போகப்போக சரியாகிவிடும் என்று எண்ணிய தங்களின் முட்டாள்தனத்தை என்ன சொல்ல? குழந்தை என்று வந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறான், இன்று அது பொய்யாகிப் போனதில் தன்னையே வெறுத்தான்.
அவர் உதாசினப்படுத்தும் போதே சுதாரித்திருக்க வேண்டுமோ, ஆனால் இத்தனை கீழ்த்தரமாக, கொடூரமாக நடந்து கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே. தெரிந்திருந்தால் விட்டிருக்க மாட்டானே. உள்ளம் தன் உலகறியா சிசுவை எண்ணி கதறித் துடித்தது.
தன் மீதும் தவறு உண்டோ? பிடித்தோ, பிடிக்காமலோ மனைவி என்று வந்தவளை தான் மதித்தால்தானே மற்றவர்கள் மதிப்பார்கள். மனைவியை மதிக்காமல், அவள் விருப்பம் இல்லாமல், மனைவி என்ற உரிமையை வலுக்கட்டாயமாக எடுத்து, அப்படி எடுத்துக் கொண்டதும் இல்லாமல், வார்த்தைகள் எனும் விசம் தடவிய அம்புகளைச் செலுத்தி இரணப்படுத்தினால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா?
உண்மையும் அதுதான், ஷ்யாம் அப்படித்தான் நினைத்துக் கொண்டான். தான் செய்த தவறுக்கான தண்டனைதான் இப்போது தன் சிசு தன்னைக் காணாமலே கரைந்துவிட்டது என்று வலிக்க வலிக்க நினைத்தான்.
வலி… வலி… வலி… சொல்லிலும் செயலிலும் விவரிக்க முடியாத ஒரு பெரும்வலி. இதை எப்படி ஆற்றுப்படுத்த? இதிலிருந்து எப்படி வெளியில் வர? மனைவியை எப்படி சமாதானம் செய்ய என்ற கேள்விகளுக்கு அவனுக்கு பதில் தெரியவில்லை. கால்கள் தன்போக்கில் செல்ல சென்ற இடமோ நயனாவின் வீடாக இருந்தது.
ப்ரனீத்திற்கு உணவூட்டியபடியே நயனாவின் அம்மா வெளியில் நின்றிருக்க, இவனைப் பார்த்ததும் அவரிடமிருந்து நெளிந்து வழுக்கிக் கொண்டு இறங்கி ஓடிவந்தான் அந்த குட்டி.
“ஷ்யாம் ப்பா…” என்ற அந்த சின்ன வாண்டின் குரலில் நிதானத்துக்கு வந்தவன், குனிந்து சிறுவனைத் தூக்கிக்கொண்டே, “இங்க என்ன பண்ற கண்ணா, யார் கூட வந்த?” என்றபடியே சுற்றும் முற்றும் பார்த்தான்.
பார்த்தவன் அதிர்ந்தான். ‘ஓ காட்!’ என்று மனதுக்குள் உண்டான அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் நிற்க, அவனையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பெரியவர். அவனின் கசங்கியத் தோற்றம் அவருக்கு புதிதாக ஒரு கதை சொன்னது.
அந்த ஆராய்ச்சியில் தன் மனநிலையைக் காட்டப் பிடிக்காதவன், வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதட்டுக்கு கொண்டு வந்து, “ஹாய் ஆன்ட்டி!” என்றான்.
“வா ஷ்யாம், எப்போ வந்த? நீ இங்க வருவனு நயனி சொல்லவே இல்லையே?” அந்த ஆராய்ச்சி பார்வையை விடாமலே கேட்டார்.
“எஸ் ஆன்ட்டி, ஒரு எமெர்ஜென்சியா வர வேண்டியதாகிப் போச்சு. ஸ்ரீக்கு சடனா ஹெல்த் இஸ்ஸூஸ் வந்துட்டேன், நயனா எங்க? ரெஸ்ட் எடுக்குறாளா?”
“என்னாச்சு பாலாவுக்கு, இப்போ எப்படி இருக்கா? ஏன் முன்னமே சொல்லல? நானாச்சும் வந்து பார்த்துருப்பேனே, நீ ஏன் இவ்ளோ டல்லா இருக்க?”
“எனக்கு என்ன? நான் நல்லாத்தான் இருக்கேன், ஆனா ஸ்ரீதான் பாவம். ஆவளுக்குத்தான் அபார்ட் ஆகிடுச்சு ஆன்ட்டி, ஹாஸ்பிடல்ல இருந்தா, நேத்துதான் ஊர்ல போய் விட்டுட்டு வந்தேன். இப்போ நல்லா இருக்கா. இங்க என்னாச்சு, நயனா எங்க?”
“உனக்கு ஞாபகம் இல்லையா ஷ்யாம், நயனாக்கு நேத்து செக்கப். அவ டெல்லிதான் போயிருக்கா.” எனவும்தான் அவனுக்கு அந்த ஞாபகமே வந்தது.
“ஓ மை காட்!” எனத் தலையில் தட்டிக் கொண்டவன், “இதை எப்படி மறந்தேன்? அவக்கிட்ட இன்ஃபார்ம் கூட பண்ணல, என்ன செய்றாளோ, எப்படி சமாளிக்கிறாளோ…?” எந்த் தோழிக்காக புலம்பியவன், உடனே அவளுக்கான கவலைக்குள் புகுந்துகொண்டான்.
ப்ரனீத்தை இறக்கி அவரிடம் கொடுத்தவன், தன் போனை எடுத்து தன் மருத்துவ நண்பனுக்கு அழைத்து நயனாவைப் பற்றிய விபரங்களைக் கூறி விசாரிக்க ஆரம்பித்தான்.
பேசி முடித்ததும் அவனுக்கு கிடைத்த தகவல்களை அவரிடம் பகிர்ந்தவன், “சாரி ஆன்ட்டி, இங்க எமர்ஜென்சியா வரவேண்டிய சிச்சுவேஷன் அதனாலதான். தப்பா எடுத்துக்காதீங்க…” என மன்னிப்புக் குரலில் பேச,
“எனக்குப் புரியுது ஷ்யாம் உன்னோட சிச்சுவேஷன். ரொம்பவும் முக்கியமில்லைனா நீ நயனாவை விட்டுருக்க மாட்டனு எனக்குத் தெரியும் ஷ்யாம்.” என்றவருக்கு பல கேள்விகள்.
அவரின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். எங்கே சென்றான், என்ன செய்தான் என யாருக்கும் தெரியாமல் போக, அடுத்த இரண்டு நாட்களாக அவனைத் தேடிக் கலைத்துப் போனான் சபரி.
இங்கு லலிதாவோ தன் அறையில் ஆங்காரத்துடன் அமர்ந்திருந்தார். அவருக்கு ஷ்யாம் இப்படி நடந்து கொண்டது முதலில் அதிர்ச்சி என்றால், அடுத்து அவன் பேசப்பேச குற்ற உணர்விற்குப் பதிலாகக் கோபம் வந்தது. அந்த கோபத்தில்தான் ஹாஸ்பிடல் என்றும் பாராமல் மகனை அடித்துவிட்டார்.
இப்போதும் அவர் செய்ததை தவறென்று நினைக்கவே இல்லை. தன் மகனின் வாழ்க்கையைக் காப்பாற்றியதாக ஒரு எண்ணம். ஆனால் அந்த மகனோ அவருக்குப் பிடிக்காத அந்த ஒருத்தியின் மேல் பித்தாகித் திரிந்து கொண்டிருந்தான்.
மருத்துவமனையில் நடந்த ரசபாசத்தில் யாரும் அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பரந்தாமனின் அறையில் இருந்த செவிலிப் பெண்ணிடம் அவரது உடல்நிலையை விசாரித்தவர், அங்கிருந்த மற்றவர்களிடம் சொல்லாமலே வீடு வந்துவிட்டார்.
இவர் வீடு வரவும் சங்கவி கிளம்பவும் சரியாக இருக்க, லலிதாவை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், முத்தம்மாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். இப்போது அந்த பெரிய வீட்டில் அவர் மட்டும் தனியாக. இனி தன் வாழ்நாள் முழுவதும் இப்படியொரு தனிமையில்தான் கழிக்கப் போகிறார் என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
மருத்துவமனையில் தன் அருகில் அமர்ந்திருந்த அனுவைப் பார்த்தவன், “அப்பா டிஸ்சார்ஜ் ஆனதும் லாயரைப் பார்த்து ப்ரொசீட் பண்ணலாம். மியூச்சுவலா அப்ளை பண்ணிட்டா ரெண்டு பேருக்கும் நல்லது. எந்தப் பிரச்சனையும் இல்லாம கேஸ் முடிஞ்சிடும்.” என மனைவியின் அதிர்ந்த பார்வையைக் கண்டுகொள்ளாமல், எதிரே தெரிந்த ஐசியு வாசலைப் பார்த்தபடி அவள் மீது அனல் வார்த்தைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான் சபரி.
1 comment
அடேய்… போங்கடா ! பிரச்சினையை பேசி சரி பண்றதை விட்டு, ஊதி ஊதி பெருசாக்கி தனித்தனி தீவா வேற மாறி நிக்குறாங்க.
😌😌😌
CRVS (or) CRVS 2797