அத்தியாயம் – 24
பரந்தாமன் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது. மனைவியை அவர் எதற்கும், எங்கும் அனுமதிக்கவில்லை. என்ன பிரச்சனை என்று முழுதாகத் தெரியாவிட்டாலும், அவர் உடல்நிலையைப் பொறுத்து பிள்ளைகளும் சொல்லாவிட்டாலும், பிரச்சனையின் மூலக்காரணம் மனைவி தான் என்று அவருக்குப் புரிந்தது. அதனாலே மொத்தமாக தன்னில் இருந்து அவரை விலக்கி வைத்தார்.
அதனால் சபரி விடுமுறை எடுத்து முழுநேரமாக அவரைக் கவனித்துக் கொண்டிருந்தான். சங்கவி முன்னே சொன்னது போல விடுதியில் சேர்ந்திருந்தாள். சபரிதான் சமாதானம் செய்து அனுப்பியிருந்தான்.
இதில் ஷ்யாம் அன்று போனவன் தான் யாரிடமும் எந்த வகையிலும் தொடர்பில் இல்லை. முதலில் ஏதோ கோபத்தில் இருக்கிறான், வந்துவிடுவான் என்று நினைத்திருக்க, அந்த நினைப்பையே பொய்யாக்கி இருந்தான் இளையவன்.
நாகம்மையிடம் அழைத்துப் பேசி அவள் நலம் விசாரித்த சபரியிடம், அவளோ கணவனைப் பற்றி கேட்க, ஷ்யாம் அங்கும் போகவில்லை என்று தெரிந்து போனது. அடுத்து சதீஷிடமும் விசாரிக்க, அவனுக்கும் தெரியவில்லை என்ற பதிலே வர, உள்ளுக்குள் பயம் படரத் தொடங்கியது சபரிக்கு. வீட்டில் யாரிடமும் சொல்லிக் கலவரப்படுத்த தோன்றாமல் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் தேட ஆரம்பித்திருந்தான்.
ஒருவேளை நயனாவிற்குத் தெரியுமோ என்று அவளிடமும் கேட்க, அவளுக்கு எதுவுமே தெரியவில்லை. சோர்ந்து போனவனுக்கு என்ன செய்வது என்றுதான் புரியவில்லை.
ஷ்யாம் விவரம் தெரியாத சிறுபையனும் அல்ல. தன்னை விட அறிவுக்கூர்மையும், அனுபவமும் கொண்டவன், எதையும் இலகுவாக எடுத்துச் செல்லும் குணம் கொண்டவன். அப்படி இருந்தவன், இப்போது என்ன சூழ்நிலையில் எங்கு இருக்கிறானோ? ஏன் இப்படி செய்கிறான்? என்ன காரணம் என ஷ்யாமிலேயே சபரியின் கவனம் இருக்க, அனுவை சுத்தமாக மறந்திருந்தான்.
அனுவும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்தாள். ஆனால், அவளின் வீட்டில் இருந்தாள். அன்றைய பேச்சிற்குப் பிறகு சபரி அவளிடம் பேசவே இல்லை.
அவன் கல்லூரிக்குச் செல்லாததால், அவள் வேலையை விட்டது தெரியாமலேப் போனது. அனு முதலில் சில நாள்கள் அவனுக்கு அழைத்துப் பார்த்தாள் தான். ஆனால் மனைவியின் மேல் இருந்தக் கோபத்தில் சபரி போனை எடுக்காமல் விட்டுவிட, அடுத்து அவளும் அழைக்கவில்லை.
அதோடு அனுவும் இப்போது அங்கு இருப்பது தான் உசிதம் என்று நினைத்திருந்தான் சபரி. இங்கு அழைத்து வந்தால் லலிதா மீண்டும் தன் வலைக்குள் கொண்டு வந்து விடுவாரோ என்று பயம்.
சொல்வார் பேச்சைக் கேட்டு நடந்தால் என்ன நடக்கும் என்று அவளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றுதான் விவாகரத்து வரை பேசியிருந்தான். ஆனால் அதைச் செயலில் காட்டியிருப்பானா என்றால் நிச்சயம் இல்லை.
அனு, அவனின் ஒவ்வொரு அணுவிலும் உயிர்ப்பாக இருப்பவள், உயிராகத் துடிப்பவள். அப்படி தன்னில் கலந்து போனவளை எப்படி விடுவான்.
தன் நிலையை உணர்ந்து, மீண்டும் இது போலொரு சூழல் வந்தால் எப்படி சமாளித்து நடந்துகொள்ள வேண்டும் என்று அனுவிற்குப் புரிய வைப்பதற்காகவே தான் இந்தப் பிரிவு. சபரி அப்படித்தான் நினைத்தான். அவனின் சரிபாதியும் அப்படி நினைக்க வேண்டுமே. ஆனால் அனு அப்படி நினைக்கவில்லை.
கணவன் தன்னை மொத்தமாகவே வெறுத்துவிட்டான் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள். தப்பு செய்தவரை விட அதற்கு துணை போகிறவர்களுக்குத்தான் தண்டனை அதிகம் என்பது அவள் விஷயத்தில் உண்மையாகிப் போனதே. இதை யாரிடம் சொல்லி அழுவாள்.
வாழ்வே வெறுத்துப் போனது போலொரு எண்ணம். உறக்கம் அற்ற இரவுகள் பெண்ணின் எண்ணங்களை எங்கெங்கோ கடத்திச் செல்ல, இங்கிருந்து யார் கண்ணிலும் படாமல் தூரமாக, ரொம்பத் தூரமாக போய் விடலாமா’ என்று யோசித்து, அதுதான் சரியென்று முடிவிற்கும் வந்திருந்தாள். அதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்தாள். ஏற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தாள்.
மனைவியின் எண்ணச் சூழலைப் புரிந்து, அவளுக்குத் தன்னை புரியவைக்கும் முன் காலம் கடந்து விடுமோ சபரிக்கு!
***
இங்கு நாகம்மையின் நிலையோ முற்றிலும் வேறாகிப் போனது. வார்த்தைகளில் அளவிட முடியாத அளவிற்கான வலியையும், வேதனையையும் கொடுத்தது. திடீரென்று வந்தான், நான்தான் உனக்கு உலகம் என்று சொர்க்கத்தை அருகில் காட்டினான்.
காட்டிய நொடியில் தலைக்குப்புற கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டான். இப்போது எங்கே போனான்? எப்படி இருக்கிறான்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான்? என்ன நடந்தது? ஒருவேளை குழந்தையை நான்தான் எதுவும் செய்துவிட்டேன் என்று நினைத்துவிட்டானோ? கணவன் தன்னை நம்பவில்லையோ? இப்படித்தான் அவளது யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அவளைத் தேடி வந்திருந்தாள் காயத்ரி.
“அக்கா இங்க என்ன செய்ற? அம்மா கூப்பிட்டுச்சு.”
“வரேன் அம்மு, நீங்க எப்போ வந்தீங்க? காலேஜ்ல என்ன சொன்னாங்க?”
“எல்லாம் ஓகே ஆகிடுச்சுக்கா, மாமா இருக்கும்போது என்ன கவலை. அவரே எல்லாம் ரெடி பண்ணிட்டார். அப்புறம் உனக்கும் கரஸ்ல ஜாய்ன் பண்றதுக்கு அப்ளிகேஷன்ஸ் வாங்கிருக்கார். ஃபர்ஸ்ட் இதை ஃபில் பண்ணு.”
“ம்ச், இதெல்லாம் யார் கேட்டா, எதுக்கு இந்த அதிகப்பிரசங்கித்தனம் உனக்கு. நான் கேட்டேனா.. சொல்லு நான் கேட்டேனா? கேட்டா மட்டும் செய்ங்க. கொஞ்சம் விவரம் வந்துட்டா போதும், பெரிய மனுஷங்க போல எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடந்துக்குறது.” எனப் பொரிந்து கொட்டிவிட்டு நடந்துவிட்டாள் நாகம்மை.
‘இப்போ என்ன கேட்டேன்? எதுக்கு இவங்க இவ்ளோ டென்சன் ஆகுறாங்க?’ என மனதுக்குள் புலம்பிய காயத்ரி போனை எடுத்து அழைப்பு விடுத்தாள் அவளது மாமனிற்கு.
அந்தப்பக்கம் போன் எடுத்ததும், “இப்போ உங்களுக்கு நிம்மதியா, சந்தோசமா? என் அக்கா என்னை இதுவரைக்கும் கோபமா பார்த்தது கூட இல்ல. ஆனா இன்னைக்கு என்னை திட்டிட்டு போய்ட்டாங்க. எல்லாம் உங்களால தான். நீங்க அவங்களைப் படிக்க வைக்கனும்னா நீங்கதான் பேசனும், என்னை ஏன் இதுல இழுத்து விட்டீங்க.” என தான் வாங்கிய வசவை, இப்போது போனில் அந்தப்பக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“சரி சரி விடு, இதெல்லாம் நடக்கும்னு தெரியும் தான. இப்போ அவ இருக்குற மூடுக்கு கண்டிப்பா எல்லாத்துக்கும் நோ தான் சொல்லுவான்னு நமக்குத் தெரியுமே, அவளை எப்படியாச்சும் கன்வின்ஸ் செய்யனும். அதுதான் உன்னோட டாஸ்க்.”
“எத டாஸ்கா, எல்லாம் என் நேரம், தெரியாம உங்ககிட்ட வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன், எனக்குத் தேவையா?” எனப் புலம்பினாலும், அக்காவிற்காக அதை செய்தே ஆகவேண்டும் என்று ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாள் காயத்ரி.
“சரி சரி செய்றேன், ஆனா உங்களுக்காக இல்ல, எங்க அக்காவுக்காக.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள், எப்படி நாகம்மையை சம்மதிக்க வைப்பது என யோசனையானாள்.
காயத்ரிக்கு அவளது பனிரெண்டாம் வகுப்பிற்கான ரிசல்ட் வந்திருந்தது. நாகம்மை எதிர்பார்த்தது போலவே மாநில அளவில் முதலிடம் தான் வந்திருந்தாள். ஊரும் உலகமும் அறிய மீடியா அவளைக் கொண்டாடித் தீர்த்தது. அனைத்தையும் அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நாகம்மை. இதை அவளும் அனுபவித்திருக்கிறாளே. எல்லாம் இந்த ஒரு நாள் மட்டும்தான். அடுத்தநாள் அவர்களுக்கு வேறு ஒரு செய்தி கிடைத்து அதைப் பார்க்க போய்விடுவார்கள்.
ஆனால் அந்தப் பெண் படித்தாளா, இல்லையா என்று எதையும் அறிந்து கொள்ளாத ஒரு ஜிகினா உலகம். விரக்தியான புன்னகை. அன்றிலிருந்து பெரும் யோசனை. சில முறை வாய் வார்த்தையாக அப்பத்தாவிடம் சொல்லியிருந்தாள். ‘கரஸ்ல கூட படிச்சிருக்கலாம், டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்.’ அதை அவர் அப்படியே பேராண்டியிடம் சொல்ல, இப்போது நாகம்மை இருக்கும் மனநிலையில், இந்தப் படிப்பு அவள் மனதிற்கும் சற்று மாற்றம் கொடுக்கலாம் என நினைத்து, அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டனர் அனைவரும். அதன் முதற்படியாகத்தான் அப்ளிகேஷன் வாங்கி வந்தது.
நாகம்மை சென்று சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தான் முருகேசன். “என்ன அம்மு, இங்க என்ன பண்ற?” என்றான் தனியாக நின்ற காயத்ரியைப் பார்த்து.
“ம்ம், என்ன மாமா உன்னைத் தான் பார்க்க வந்தேன்.”
“என்னைப் பார்க்க வந்தியா, நம்புற மாதிரி இல்லையேமா? என்னைப் பார்க்கனும்னா என்னைத்தேடி வரனும், என் தோப்புக்கு வரனும், இல்ல வீட்டுக்கு வரனும். இங்கன உக்காந்துட்டு என்னைத் தேடி வந்தேன்னு நீ சொன்னா நம்புற மாதிரியா இருக்கு?”
“அம்மாடியோவ்… வர வர உங்கிட்ட பேசவே முடில மாமா, எல்லாம் வக்கீலு போல பாய்ன்ட் பாய்ன்டா பேசிட்டு இருக்க, சரி அதைவிடு. நேத்து போன மேட்டர் என்னாச்சு?” என்றாள் அடக்கப்பட்ட புன்னகையுடன்.
அதைக் கேட்டதும், காயத்ரியைப் பார்த்து முறைத்தவன், “அதுதான் எல்லாத்தையும் பாட்டியும் பேத்தியும் சேர்ந்து கெடுத்துட்டீங்களே, அப்புறம் என்னடி புதுசா வெவரம் கேட்குறவ.” எனக் கடுப்பாகக் கேட்க,
“நாங்க எங்க கெடுத்தமாம், நீங்க தான் கெடுத்தீங்க.” என அவனைப் பார்த்து ஒற்றை கண்ணைச் சிமிட்ட, “அடிங்க்” என கீழே கிடந்த கட்டையை எடுத்து காயத்ரியை விரட்டப்போக,
“மாமாவோவ், எப்படித்தான் என்னை விரட்டினாலும், கடைசில உன் வீட்டுல வந்து குத்த வைக்கப் போறது இந்த காயத்ரி தான், அத மறந்துடாத.” எனச் சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். மாமன் மகளின் செய்கையில் தன்னை மீறி புன்னகைக்க, இரண்டு நாட்கள் முன் தன் வீட்டில் வந்து அழுதவளை நினைத்துப் பார்த்தான்.
முருகேசனின் தாய் பரிமளம் மகனை திருமணத்திற்காக நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பேச்சை முருகேசன் கேட்காமல் போக, வீதியில் அமர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தாயின் இந்த செய்கையில் கடுப்பானவன், ‘என்னமோ செஞ்சு தொலைங்க’ எனச் சொல்லிவிட்டுப் போய்விட, அவரும் மிகத்தீவிரமாக பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்.
அப்படி பார்த்ததில் சொந்தத்திலேயே ஒரு பெண் இருப்பதாக கேள்விப்பட்டு, அவர்களிடம் விசாரித்துப் பார்க்கலாம் என கிளம்பும் நேரம், வீட்டில் வந்து அமர்ந்து கொண்டாள் காயத்ரி.
“அத்த உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்.” என நேரடியாக ஆரம்பித்தாள்.
“என்ன அம்மு, ரொம்ப முக்கியமா, போயிட்டு வந்து பேசுவோமா? நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பனும்.”
“இங்க என் வாழ்க்கையே அந்தரத்துல தொங்குது, நல்ல நேரம் முடியிறது தான் இப்போ பிரச்சனை.” கடுகு போல வெடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய் அரைக்காப்பிடி, என்ன பேச்சு பேசிட்டு இருக்க? என்னனு தெளிவா சொல்லு, நல்ல நேரம் போனா போகட்டும்.” தானாக வாயைக் கொடுத்தான் முருகேசன்.
ஆனால் அவனிடம் திரும்பாமல் வீரம்மாவிடம் சென்றவள் “அப்பத்தா, எனக்கு மாமாவைக் கட்டிக்க விருப்பம், உங்களுக்கு விருப்பமா?” எனக் கேட்கவும், அந்த இடமே அமைதியானது. அங்கிருந்த மூவரும் அதிர்ச்சியின் பிடியில் இருந்தனர்.
“லூசு என்ன பேச்சு இதெல்லாம், முதல்ல இடத்தை காலி பண்ணு. ஆளு எம்புட்டு, பேச்சு எம்புட்டு பாரு.” என காயத்ரியை அதட்ட ஆரம்பித்தான்.
அதற்குள் பெண்கள் இருவரும் நிதானத்திற்கு வந்துவிட, “எலேய் முருகேசு செத்த சும்மா இரு, நான் பேசுறேன்.” என்ற பரிமளம், “அம்மு இது விளையாட்டுப் பேச்சு இல்ல. அவனுக்கும் வயசு ஏறிட்டுப் போகுது, நீ படிக்கிற புள்ள, எல்லாத்துலயும் விளையாடுற மாதிரி இதுலயும் விளையாடக் கூடாது. எனக்கு பொல்லாத கோவம் வரும்.” என அவரும் கண்டிக்க,
“ம்ச், அத்த நான் நெசமாதான் சொல்றேன், எனக்கு மாமான்னா கொள்ளை இஷ்டம், அக்காவுக்கு பேசும்போது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அம்மா வேண்டாம் சொல்லவும் தான் எனக்கு அது சரியாகிச்சு. அது என்னனு எல்லாம் எனக்குத் தெரியல, ஆனா இப்போ நீங்க வேற பொண்ணு பார்க்க போனா எனக்கு பைத்தியம் மாதிரி, செத்துடலாம் போல எல்லாம் தோனுது அத்த.” என அவள் பேசி முடிக்குமுன்னே கண்களில் நீர் வழிய ஆரம்பிக்க, தாய்க்கும் மகனுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால் வீரம்மாள் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்திருந்தார். மகளைப் பார்த்து, “பரி, நம்ம வீட்டுக்கு எம்பேத்தி தான் மருமவ, இந்த வருஷம் அந்த வீட்டுல இருந்து படிக்கட்டும், அடுத்த வருஷம் கல்யாணம் முடிஞ்சி இந்த வீட்டுல இருந்து படிக்கட்டும்.” என்று முடிவாகச் சொல்ல, பொங்கிவிட்டான் முருகேசன்.
“ஏய் கிழவி, வாயை மூடிட்டு சும்மா இருக்கமாட்ட. அவ வயசென்ன, என் வயசென்ன, பச்சமண்ணு அது. அதுதான் வெவரம் தெரியாம பேசிட்டு இருக்குன்னா, நீயும் அதுக்கு உடந்தையா பேசிட்டு கெடக்க, முதல்ல அவளுக்கு புத்தி சொல்லி வூட்டுக்கு அனுப்பு.” என அப்பத்தாவிடம் கத்தியவனின் முன்வந்து நின்றாள் காயத்ரி.
“எது சொல்றதா இருந்தாலும் எங்கிட்ட நேரா சொல்லுங்க, நான் இங்கதான் இருக்கேன். எனக்கு உங்களத்தான் விருப்பம், உங்கள கட்டிக்கத்தான் விருப்பம்.” என நேராக அவனைப் பார்த்துச் சொல்ல,
“அறைஞ்சேனா பல்லெல்லாம் கொட்டிரும். படிக்கிற வயசுல என்ன பேச்சு இது? உன் அம்மா காதுக்கு போனா என்ன நடக்கும் தெரியுமா… மூடிட்டு போய் வேலையைப் பாருடி. வந்துட்டா காதல் கன்றாவின்னு.” என கையோங்கியவனைப் பிடித்து இழுத்தார் பரிமளம்.
“எங்கம்மா கிட்ட தான் முதல்ல சொன்னேன்.” என அடுத்தக் குண்டைத் தூக்கி வெகு சாதாரணமாகப் போட்டாள். இப்போது வீரம்மாவே பேத்தியை அதிர்ச்சியாகப் பார்த்தார்.
“என்னடி செஞ்சிட்டு இருக்க, அத்தை கிட்ட என்னத்த உளறிட்டு வந்த?” மீண்டும் கோபமாக திமிறிக்கொண்டு வந்தான் முருகேசன்.
“இப்போ என்ன, எதுக்கு இப்படி திமிறிட்டு இருக்க, உன்னத்தான் கட்டுவேன்னு எங்கம்மாட்ட சொல்லிட்டு வந்துருக்கேன். எங்கம்மா என்ன சொன்னாலும் அத நான் கேட்க மாட்டேன். உனக்கே விருப்பம் இல்லன்னாலும், உன்னத்தான் கட்டுவேன். விருப்பம் இல்லாம கட்டினா குடும்பம் நடத்த முடியாதா? எங்கக்காவும் மாமாவும் பிடிக்காமத்தான் கட்டிக்கிட்டாங்க, அவங்க குடும்பம் நடத்தல.” என பெரிய மனுசி போல் வியாக்கானம் பேச, கேட்ட மூவரும் வாயில் கைவைக்க, மகளைத் தேடி வந்த மாரியோ, அவள் பேச்சில் கீழே கிடந்த விளக்குமாறை எடுத்து விளாசிவிட்டார்.
“என்ன பேச்சு இதெல்லாம்… உன் வயசென்ன? பேசுற பேச்சென்ன? உன்னையும் நம்பி ஒருத்தி படிக்க வைக்குறேன்னு கங்கனம் கட்டிக்கிட்டு அலையுறா பாரு அவளைச் சொல்லனும். அவளுக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்னாகும்?” என பேசிக்கொண்டே அடிக்க, காயத்ரியோ ஒரு அடிக்கு கூட கத்தவில்லை, கதறவில்லை, நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்றாள்.
காயத்ரியின் அந்தச் செயல் முதன்முறையாக முருகேசனைக் கூர்ந்து பார்க்க வைத்தது. அவளது இந்த பிடிவாதம் கூட அவனுக்கு மயிலிறகால் வருடுவது போல் இருந்ததென்னவோ உண்மை.
மருமகளின் கோபத்தைப் பார்த்து இப்போது வீரம்மாவிற்கும் கோபம் வந்துவிட, அவரிடமிருந்த விளக்குமாறை பிடுங்கி எறிந்தவர், “நிறுத்து மாரி, வயசு புள்ளைய என்ன செய்றொம்னு தெரிஞ்சி தான் செய்றியா? வர வர அறிவு மங்கிப்போச்சா உனக்கு. அவ தான் கூரில்லாம பேசிட்டு கிடக்கான்னா, உக்காந்து புத்திமதி சொல்லாம, நீ என்ன செய்ற? அவ வந்து கேட்கும்போது கூட எனக்கு அந்த எண்ணம் இல்ல. ஆனா இப்போ நடந்துக்கிட்ட பார்த்தியா இந்த முறைக்கு எம் பேரனுக்கும், பேத்திக்கும் தான் கல்யாணம். நான் முடிவே பண்ணிட்டேன், என்னை மீறி யார் தடுக்குறாங்கன்னு நானும் பார்க்குறேன்.” என சண்டைக்கு வரிந்து கட்டிகொண்டு கிளம்ப,
“ம்ச் கெழவி செத்த சும்மா இரு…” என வீரம்மாவை அடக்கியவன், தன் அம்மாவிடம் சென்று, “என்னம்மா நீ ஒன்னும் சொல்லாம இருக்க, உனக்கு இதுல விருப்பம் இல்லையோ?” என யோசனையாகக் கேட்டான்.
“என்னடா, என்ன சொல்ல சொல்ற? இந்த முறையும் கேட்டு மூக்க உடைச்சிக்கிட்டு வர சொல்றியா? அதுக்கு நான் ஆள் இல்ல. மவராசன் கணக்கா பையன வச்சிக்கிட்டு வீடு தேடிப்போய் பொண்ணு கேட்டா, மூஞ்சிக்கு நேரா இல்லன்னு சொல்றா உங்கத்த. சரி அவங்க மனசுல என்ன இருக்கோன்னு நானும் பொறுமையா வந்துட்டேன். ஆனா புள்ளைய கட்டிக் கொடுத்த இடத்தைப் பத்தி விசாரிக்கனுமா வேணாமா?”
“எங்கண்ணே, எங்கண்ணேன்னு சொல்லி புள்ளைய கொண்டு போய் நட்டாத்துல விட்டுட்டு வந்துட்டா. இப்போ இன்னொரு புள்ளைக்கும் அததான் யோசிச்சிட்டு இருக்கா போல. இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் வீடு தேடி வந்துட்டா, இனி யார் என்ன சொன்னாலும், இவதான் எம் மருமவ.” என இது நாள் வரைக்கும் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் பரிமளம் கொட்டிவிட, குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கான நிசப்தம் சூழ்ந்து கொண்டது அந்த இடத்தில்.
அனைத்தும் தன் கையை மீறிச் சென்றுவிட்டதை அந்த கணம் உணர்ந்தார் மாரியம்மாள். அவருக்கு முருகேசனுக்கு கொடுக்க வேண்டாம் என்ற எண்ணமெல்லாம் இல்லை. படிக்கிற பெண், வயதும் குறைவே என்ற கவலைதான்.
மாமியாரிடம் சென்றவர், “எனக்கு விருப்பம் இல்லாம எல்லாம் இல்லத்த, ஏற்கனவே ஒரு தரம் செய்த தப்பை மறுபடியும் செய்வேன்னு நினைச்சிட்டீங்களா? அப்படியெல்லாம் இல்லத்த, இவளும் நம்ம கண்ணு முன்னாடியே பொழைச்சா எனக்கு வேற என்ன கவலை சொல்லுங்க. படிக்கிற புள்ள, வயசும் இப்போதான பதினெட்டு நடக்குது. அதுதான் யோசிச்சேனே தவிர, கொடுக்கக்கூடாதுனு எல்லாம் இல்லத்த.” என்றவரின் குரலில் மிதமிஞ்சிய வருத்தமே இருந்தது.
ஒருவழியாக பெண்கள் அனைவரும் சமாதானமாகி முருகேசனைப் பார்க்க, அவனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். “என்னல பேராண்டி, மூஞ்சி மூனார் வரைக்கும் போயிருக்கு என்ன விசயம்? எம் பேத்திய மட்டும் கட்டமாட்டேன்னு சொல்லு, உன்ன வகுந்துடுறேன், வகுந்து.” என்றார் வீரம்மா.
“கெழவி, உன் வாய கொஞ்சம் குறை. என்ன பேச்செல்லாம் பேசுற? எல்லாருக்கும் இஷ்டம்னா, எனக்கும் இஷ்டம்னு நீயா நினைச்சிப்பியா, எங்கிட்ட கேட்கனும்னு கூரு வேணாம். படிக்கிற புள்ள, அவளுக்குத்தான் புத்தி மழுங்கி போச்சுன்னா, உங்களுக்கு என்ன? எனக்கு சுத்தமா விருப்பமில்ல, முதல்ல படிச்சி முடிக்கட்டும்.” என அழுத்தமாகச் சொல்லி முடிக்க,
“அவ படிச்சி முடிக்கும்போது நீ அரைக்கெழவனா இருப்ப, அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஒரு வருஷம் போகட்டும், அடுத்த வருஷம் கல்யாணம். இதுதான் முடிவு.” என்று அப்பத்தா முடித்துவிட்டார்.
“என்னமோ பண்ணித் தொலைங்க, இன்னைக்கு இஷ்டம்னு சொல்லிட்டு, நாளைக்கு கஷ்டம்னு வந்து நின்னா கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாட்டேன், வகுந்துட்டு போயிட்டே இருப்பேன்.” என காயத்ரியைப் பார்த்து சொன்னவன், தன் அம்மாவிடம், “ம்மா, நாளைக்கு அந்த பொண்ணு வீட்டுல போய் சொல்லிட்டு வந்துடலாம். வருத்தப்படாம, பதமா சொல்லனும்.
கெழவி, நாளைக்கு நீதான் இதெல்லாம் செய்ற, விடியறதுக்குள்ள காச்ச, தலவலின்னு எங்குட்டாச்சும் முக்காடு போட்டுட்டு படுத்திருந்த… அப்படியே படுத்துற வேண்டியதுதான். என்ன சொன்னது புரிஞ்சதா?” எனச் சொல்லிவிட்டு வெளியேறியவன் மாரியம்மாவைப் பார்த்து தயங்க,
“என்னய்யா?” என்றபடி அவரும் வர, “இந்த பேச்சு நமக்குள்ளையே இருக்கட்டும் அத்த, இப்பவே சொன்னா ஆளாளுக்கு ஒன்னு பேசிட்டு திரிவாங்க, அப்புறம் ஸ்ரீக்குட்டிக்கும் இப்போ சொல்ல வேண்டாம், அவ சரியானதும் சொல்லிக்கலாம்.” எனவும், “சரிதான்யா” என்றவர் மகளைப் பார்த்து முறைத்தார்.
“நீ போ மாரி, புள்ள இங்கனவே இருக்கட்டும். அங்க வந்தா பெரியவ என்ன என்னனு கேட்டுட்டே இருப்பா.” என மருமகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இப்போது அதையெல்லாம் நினைத்தவனுக்கு இதழ்கடையில் அழகானதொரு புன்னகை வீற்றிருந்தது.
1 comment
காயத்ரி சூப்பர், தெளிவான முடிவைத்தான் எடுத்திருக்காள், முருகேசனை கட்டிக்க கொடுத்து வைச்சிருக்கணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797