அத்தியாயம் – 25
ஷ்யாம் டார்ஜிலிங் வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. ‘ஸ்ரீ… ஸ்ரீ…’ என மனைவியின் எண்ணங்கள் வந்து அவனை உண்ணவும், உறங்கவும், ஏன் அவன் உயிராய் நேசிக்கும் வேலையும் கூட செய்யவிடாமல் பாடாய்படுத்தியது. உடலும் உள்ளமும் ‘ஸ்ரீ, ஸ்ரீ’ என நொடிக்கு நூறுமுறை துடிக்க, தன்னை நினைத்தே ஆச்சரியமாகிவிட்டது.
அவளது கோபத்திற்கு மரியாதை கொடுத்து, எவ்வளவோ தன் மனதை அடக்கிப் பார்த்தும் முடியாமல், அவள் தன்னிடம் சண்டை போட்டாலும் பரவாயில்லை, போய் பார்த்துவிட்டாவது வரலாம் என்று கிளம்பிவிட்டான் மனைவியிடம். உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவனை சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சதீஷ்.
‘அன்று அவன் வந்த கோலம் என்ன? இன்று…’ என யோசித்தவனுக்கே ஷ்யாமின் அன்றைய நிலையை இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை. ஷ்யாமும் அதைத்தான் மனதில் ஓட்டிக் கொண்டிருந்தான்.
முதல்நாள் இவனது கோலத்தைப் பார்த்ததும், சதீஷ் பதறி என்னவென்று விசாரிக்க, எதுவும் சொல்லாமல் அறைக்குள் அடைந்து கொண்டான். அடுத்த இரண்டு நாட்களும் அவனது வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை. அடுத்த நாள் வேலைக்கு வந்திருப்பான் என்று சதிஷ் நினைத்திருக்க, அங்கும் வரவில்லை. கதவைத் தட்டி அக்கம், பக்கம் உள்ளவர்களின் கவனத்தைக் கவர சதீஷிற்கும் விருப்பமில்லை. அவனுக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்தவன் வேறுவழியில்லாமல் ஜன்னலை உடைத்து உள்ளே வந்திருந்தான்.
உள்ளே வந்தவனின் பார்வையில், நட்ட நடு ஹாலில் கலைந்த தலையும், ஓய்ந்த தோற்றமும், பலநாள் பட்டினி கிடந்தவன் போல படுத்திருந்தான். அவன் நிலையைப் பார்த்து அதிர்ந்து போயிருந்தான் சதீஷ். நாகம்மைக்கு அபார்ஷன் ஆனது அவனுக்கும் தெரியும் என்பதால், அதனால் இப்படி இருக்கிறான் என்று நினைத்து, சமாதானம் செய்தான்.
“ஷ்யாம்… உன் கஷ்டம் எனக்கு புரியுதுடா, யாருக்கும் இப்படியொரு நிலை வந்துடக்கூடாது தான். ஆனால் வந்துடுச்சு, அதுல இருந்து எப்படி ரிலீவ் ஆகி வெளிய வரனும்னு யோசி. நீயே இப்படி இருந்தா உன் வொய்ஃபை நினைச்சுப் பாரு. அவங்களுக்கு இது எவ்வளவு கஷ்டம், இப்போ நீ ஏன் இங்க வந்த? அங்க இருந்து அவங்களுக்கு ஆறுதல் சொல்லனுமே தவிர, இப்படி வந்து ஒளிஞ்சிக்கக்கூடாது ஷ்யாம்.”
“ம்ச்… தானா கரு கலைஞ்சிருந்தா நீ சொல்றது எல்லாம் சரி, ஆனா குழந்தையே வேண்டாம்னு கலைச்சிருந்தா?”
“என்னடா… என்ன சொல்ற, உன் வொய்ஃபா பண்ணிட்டாங்க, ஏன் இப்படி செஞ்சாங்க?”
“ம்ச், அவ இல்ல. அவளுக்கு அவ்வளவு கல் மனசும் இல்ல.” என்றவன் தன்னை சமாளித்து, விசத்தை அருந்துவது போலொரு கசப்புத் தன்மையுடன், “அம்மா” என்றான்.
“வாட் அம்மாவா! யாரு உன் வொய்ஃபோட அம்மா, உன்னோட மாமியாரா?” ஷ்யாமின் அம்மா இதை செய்திருப்பார் என்று சதீஷிற்குத் தோன்றவே இல்லை.
“என்னோட அம்மா.” அந்த வார்த்தையைச் சொல்ல அத்தனை கஷ்டப்பட்டான் ஷ்யாம். அவனால் இனி ஒரு போதும் அந்த வார்த்தையை உச்சரிக்க முடியுமென்று தோன்றவே இல்லை. அந்தக் கசப்பை அப்படியே விழுங்கியவன், “எனக்குப் பிடிக்காத மனைவின்னு நினைச்சு, அவ எங்கூட இருக்கக்கூடாதுன்னு நினைச்சு, எனக்கு நல்லது செய்றதா நினைச்சு, என் குழந்தையை… என் குழந்தையைக் கருவிலேயே கொன்னுட்டாங்கடா.” என்றவன் அதுவரை அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம் தாளாமல், யாரிடம் தன் உணர்வுகளைக் கொட்டுவது என்றும் தெரியாமல் இறுக்கமும், அழுத்தமும் சேர, தலையை அழுந்தக் கோதியவன், “டேமிட்” என்று கத்த ஆரம்பித்தான்.
சதீஷிற்கு இதற்கு என்ன மறுமொழி சொல்வது என்று கூடத் தெரியவில்லை. கேட்டவன் ஒருவகையான அதிர்ச்சியில் இருந்தான் என்று சொல்ல வேண்டும். அதற்குள் ஷ்யாமின் கத்தலைக் கேட்டு ஸ்வேதாவும் வந்துவிட்டாள்.
வந்தவள் அவன் கத்தலையும், கணவனின் அதிர்ச்சியையும் கண்டு குழப்பமாகி, கணவனின் தோளில் கைவைத்து பலமாக அசைக்க, அதில் சுய உணர்வுக்கு வந்தவன், ஷ்யாமை ஆதரவாக அணைத்துக் கொண்டான். சிலபல நிமிடங்கள் கழித்து நிதானத்திற்கு வந்த ஷ்யாமும், அங்கு ஸ்வேதாவும் இருக்கவும் அமைதியாகிவிட, அவளோ இருவருக்கும் டீ தயாரித்து வருவதாக, நண்பர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேறினாள்.
“எப்படி… எப்படி இதுக்கெல்லாம் மனசு வந்தது? ஒரு குழந்தையோட அருமை, அது இல்லாதவங்களுக்குத் தான் தெரியும். எங்க கஷ்டம் தெரியும் தான, பகல்ல எவ்வளவுதான் சந்தோசமா இருக்குற மாதிரி காட்டிக்கிட்டாலும், நைட்டான ஸ்வேதா அழறதை என்னால தடுக்க முடியாத நிலை.
அதெல்லாம் கொடுமை. உனக்கு சொல்ல வேண்டாம். சபரிண்ணா கூட அந்த சிச்சுவேஷன்ல தான் இருக்கார். இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்? நீ அவங்களை என்ன செஞ்ச? அப்படியே விட்டுட்டு வந்துட்டியா? உன் மனைவி அவங்களுக்குத் தெரியுமா? என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன், நீ எங்கையோ பார்த்துட்டு இருக்க.” என அதட்ட,
“ஸ்ரீக்கு நானே சொல்லிட்டேன்.” என்றான் விரக்தியான குரலில்.
“வாட்?” என சதீஷ் அதிர்ந்து பார்க்க,
“எஸ், நானே சொல்லிட்டேன். இது தெரிஞ்சதும் நானும் முதல்ல அவகிட்ட இருந்து மறைச்சிடலாம், தெரிஞ்சா தாங்கமாட்டா, என்னையும் விட்டுட்டு போயிடுவான்னு பயந்தேன். ஆனா எப்படியும் தெரிஞ்சிடும், ஏன் அவங்களே அவளுக்கு சொல்லுவாங்க நான் தான் செஞ்சேன்னு. அப்படி இருக்கும்போது இதை எத்தனை நாளுக்கு மறைக்க முடியும் சொல்லு. மறைச்சி தினம் தினம் பயந்து பயந்து சாவுறதுக்கு, சொல்லிட்டு சொல்லிட்டோமே அப்படிங்கிற எண்ணத்துலயாச்சும் இருக்கலாம்.” என்றான் மொத்தமான கசந்து போன குரலில்.
“ஷ்யாம் கொஞ்சம் யோசிச்சிருக்கலாமேடா, இப்போ அவங்களுக்கு உன்னோட அருகாமை ரொம்ப முக்கியம். உனக்கும் தான். நீ இப்படி வந்து யார் கூடவும் பேசாம இருந்தா நடந்த எதுவும் இல்லைன்னு ஆகிடுமா? இல்ல நடக்கப் போறதுக்கு தீர்வாகிடுமா? யோசிச்சு பாரு ஷ்யாம்.” என்றவன், “அவங்களை நீ எதுவும் கேட்கலையா?” என்றான் சதீஷ் மீண்டும்.
ஒருமுறை கண்களை இறுக மூடித் திறந்தவன், நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லியிருந்தான். “அவங்க திருந்தமாட்டாங்க சதீஷ், என் லைஃபை சேஃப் பண்றது தான் அவங்க குறிக்கோள்ன்னு நினைக்கிறாங்க. அதுல பாதிக்கப்பட போறது நான்தான்னு அவங்களுக்குப் புரியல. யாருக்காக அவங்க இதெல்லாம் செய்தாங்களோ, இனி அவங்களுக்கு அவன் இல்லை. அதை நான் சொல்லமாட்டேன். செய்ல்ல காட்டுவேன்.
இதுக்கு ஒரு வகையில நானும் காரணம்டா, அப்படி இருக்கும்போது இதுக்கான தண்டனையை நானும் அனுபவிக்கனுமே, அதுதான் யாரோ சொல்லி அவளுக்குத் தெரிய முன்னாடி, நானே சொல்லிடலாம்னு முடிவு செஞ்சி சொல்லிட்டேன்.” என்றவன் அடுத்த யோசனையில் அமைதியாகிட, லலிதாவின் மேல் சதீஷிற்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தாலும் நண்பனுக்காக பல்லைக் கடித்து, அமைதியாக இருந்தான்.
சில நிமிடங்களில் ஸ்வேதா இருவருக்குமான தேநீருடன் வரவும், வேண்டாம் என்று மறுக்காமல் எடுத்துக் கொண்டான் ஷ்யாம். அடுத்து அவன் நினைத்து வைத்திருந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அவனுக்கும் தெம்பு வேண்டுமாக இருந்தது. குடித்து முடித்தவன் ஸ்வேதாவிடம், “ஸ்வேத், எனக்கு நல்ல பசி. நம்ம ஊரு சாப்பாடு வேணும். காரம் சாரமா இருக்கனும், செஞ்சிட்டு கூப்பிடுறியா குளிச்சிட்டு வரேன்.” எனவும், என்றும் கேட்காதவன் இன்று கேட்கவும், அவளும் வேகமாக தலையாட்டி விட்டு சென்றாள்.
அடுத்து சதீஷ் அவனை கலக்கமாகப் பார்க்க, “தப்பா எந்த முடிவுக்கும் போகமாட்டேன் மச்சி, அவ என்னை வேண்டாம்னு சொன்னாலும், ஒதுங்கிப் போனாலும், ஒதுக்கினாலும், நான் விடமாட்டேன். அவ இல்லைன்னா நான் இல்லடா, அதை இந்த ரெண்டு நாள்ல உணர்ந்துட்டேன். அவ கூட வாழனும்டா, திகட்ட திகட்ட ஒரு வாழ்க்கை, நானும் அவளும் எங்க குழந்தைகளுமா வாழனும்.” என்றவனின் குரலில் இருந்த உறுதியில் தான் சதீஷிற்கு சற்றே மூச்சு சீரானது.
அன்றைய நாள் முழுக்க சதீஷ் ஷ்யாமை விட்டு எங்கும் அகலவில்லை. ‘வீட்டில் இருந்து யார் கூப்பிட்டாலும், தான் இங்கு வரவில்லை என்று சொல்லிவிடு’ என ஷ்யாம கேட்டுக்கொள்ள, சதீசும் மறுக்கவில்லை. அந்த நேரம் சபரியும் அழைக்க, ஷ்யாம் சொன்னதையே அவனும் சொல்லிவிட்டான்.
அடுத்து வந்த நாட்களில் வேலைக்குப் போனவன், தன் யோசனைகளில் முதற்படியாக மனைவியை கண்டதையும் யோசிக்க விடாமல் படிக்கவைக்க முடிவு செய்தான். மனைவியின் நிலையை அறிந்துகொள்ள காயத்ரியிடமும், வீரம்மாவிடமும் மட்டும் தொடர்பில் இருந்து கொண்டான். அதற்கு ஏற்றாற் போல தன் அப்பத்தாவிடம் அவள் புலம்பியதைத் தெரிந்த பிறகு சற்றும் தாமதிக்கவில்லை.
காயத்ரியின் கல்லூரி சேர்க்கை அதற்கு வழிவகுத்துக் கொடுக்க, மதுரை வந்தவன், அவளுக்குப் பிடித்த படிப்பில் சேர்த்தவன், மனைவிக்கும் கரஸில் சேர்வதற்கான அப்ளிகேசனையும் கையோடு வாங்கி ஃபில் செய்து கொடுத்திருந்தான்.
காயத்ரியிடம் கொடுத்துவிட்டது எக்ஸ்ட்ரா அப்ளிகேஷன். மனைவியின் மனநிலையைத் தெரிந்து கொள்வதற்காகக் கொடுத்துவிட்டான். அவன் நினைத்தது போலவே தங்கையைக் கடித்துக் குதறியிருந்தாள் வார்த்தைகளால்.
அடுத்தடுத்து அவளை ஒவ்வொருவராக படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த, தன் மனநிலையில் இருந்து சற்றும் இறங்கி வரவில்லை நாகம்மை. வாழ்வே வெறுத்துப்போனது போல் இருக்க, மனைவியின் நிலையை அறிந்தவன் வேறுவழியில்லாமல் அவளைக் காணக் கிளம்பியிருந்தான்.
“என்ன சதீஷ், என்ன யோசனை?”
“ம்ச் ஒன்னுமில்லடா… பாலா எந்த பிரச்சனையும் செய்யாம உன் கூட வந்துட்டா போதும். இங்க வந்துட்டா அப்புறம் எல்லாம் சரி செஞ்சிடலாம். அதான் என் பொண்டாட்டி இருக்காளே, பேசிப் பேசியே பாலாவை கரைச்சிடுவா.”
“ம்ம், அந்த நம்பிக்கையில தான் போறேன். என்னைப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னே தெரிலடா… ஆனா அவளை விட்டுட்டு இனியும் தனியா இருக்க முடியாது. மாட்டவும் மாட்டேன். எப்படியும் யோசிச்சு ஒரு முடிவோடதான் இருப்பா, பார்ப்போம் என்ன செய்றான்னு.”
“ம்ம்… வீட்டுக்கு போறியா, சபரிண்ணாட்ட சொல்லிட்டியா?”
“ம்ம், அங்க இனி எப்பவும் போகமாட்டேன்னு சொல்லிருக்கேன்ல, சொன்ன சொல்லு சொன்னதுதான். சபரிகிட்ட சொல்லிட்டேன். அவனும் இப்போ ஏற்காடுல இருக்கான். அதனால பிரச்சனை இல்லை. வரும்போது சவியை மட்டும் பார்த்துட்டு வருவோம்.” என்று முடிக்க, நண்பனை அணைத்து விடுவித்தவன், ஏர்போர்ட்டில் விட்டு அவன் போகும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் வந்தான் சதீஷ்.
சதீஷின் செயலில் தானாக ஒரு புன்முறுவல் ஷ்யாமின் உதடுகளை அலங்கரித்தது. ‘நல்ல நண்பன் கிடைப்பது வரம்’ அது தனக்கு கிடத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான் ஷ்யாம்.
***
இங்கோ வீட்டில் உள்ள அத்தனை பேரும், அவளைப் பார்த்து பார்த்து கவனித்தாலும், மனம் கிளைக்கு கிளை தாவும் குரங்காய் கணவனை நாடி ஓடத் தொடங்கியது. கணவனைப் பிரிந்து வந்துவிட்டதன் வலி ஒரு நொடியும் அகலாது, நாகம்மையைப் போட்டு வருத்திக் கொண்டிருந்தது.
மருத்துவமனையில் இருந்த அந்த இரண்டு நாட்களும், யாரையும் எதிர்பார்க்காது ஒற்றை ஆளாக நின்று அவன் அவளைத் தாங்கிய விதமும், அன்போடு அரவணைத்துச் சென்றதும், கண் முன்னால் வந்து நின்று, அது இன்னுமின்னும் வேண்டும் என்று ஏங்க வைத்தது.
அவனின் வலிய கரங்களுக்குள், அந்த கையணைப்பில் அடங்க வேண்டும் போலிருந்தது. பரந்த வெற்று மார்பில், அதன் சூட்டில் கிடைக்கும் இதத்தில் அங்கேயே முகத்தைப் புதைக்க வேண்டும் போலிருந்தது பெண்ணவளுக்கு. அவனுடைய அக்கறையான கவனிப்புக்குள் கரைந்து காணாமல் போக வேண்டும் என மனம் ஓலமிட்டது.
அவன் இங்கிருந்த வரைக்கும், முகத்தைக் கூட பார்க்காமல், அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவளுக்கு அவன் கிளம்பியதும், ‘ஏன் இப்படி நடந்து கொண்டோம்’ என்றிருந்தது. அந்தளவுக்கு கணவனின் நினைவுகள் அவளைப் போட்டு ஆட்டிப் படைத்தன.
வெறுமையாகக் கிடந்த அவளின் இதயக்கூட்டுக்குள் வீறுநடை பயின்று வந்து கணவனானவன் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டது அவள் அறிந்தது தான். ஆனால் அவளின் உடலின் அணுக்கள் தொடங்கி, உயிரின் துடிப்பில் நிறைந்து, உணர்வுகளின் ஆதிக்கத்தில் கூட நிறைந்திருப்பான் என்பது அவள் எதிர்பாராதது!
தான் இத்தனை தூரத்துக்கு கணவனை நேசித்த போதிலும், அதன் எதிரொலி அவனிடம் சற்றும் இல்லையே! அப்படி இருந்திருக்க இப்படி தாய் வீட்டில் விட்டு வைத்திருப்பானா? இதோ அவள் வந்து முழுதாக ஒரு மாதம் முடிந்து விட்டதே!
அவளுக்கு இருக்கும் இந்தத் துடிப்பும், தவிப்பும், ஏக்கமும் அவனுக்கு இல்லையா? உடலிலும், உயிரிலும் கலந்துவிட்ட கணவனை நினைவுகளிலும் சுமந்தபடி இருந்தவளின் முன்னால், நிஜத்திலும் அவனே வந்து நின்றபோது, நம்ப இயலாமல் விழிகளை விரித்துப் பார்த்தாள் நாகம்மை.
அவன்தானா? அல்லது அவளின் கற்பனையா? கண்களைக் கசக்கிவிட்டு திரும்பவும் பார்த்தாள். பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன! முகமும் அதிகாலை தாமரையாய் மலர்ந்தது!
வந்துவிட்டான்! அவளைத் தேடி அவள் கணவன் வந்தே விட்டான்! இது போதுமே! “பாவா…” ஆவலும், ஆசையுமாக உதடுகள் உச்சரிக்க, ஆனால் அங்கோ சத்தத்திற்குப் பதிலாக காற்று மட்டுமே வந்தது.
தன்னைக் கண்டதும், மலர்ந்து விகசரித்த மனைவியின் முகத்தைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தான் ஷ்யாம். கைகள் தன்னால் விரிய, கண்கள் இமை மூடி வாவென்று அழைத்தது.
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக, இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தவள், தாயை நாடும் கன்றாக துள்ளிக்கொண்டு ஓட முயல, “பார்த்து… பார்த்து ஸ்ரீ.” என்று பதறியவன், ஒரே எட்டில் அவளைக் கொண்டு வந்திருந்தான் தன் கைகளுக்குள்.
அவன் மீதும், தன் குடும்பத்தின் மீதும் கோபத்தில் இருந்தாலும், அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் அவன் மனைவி. மனம் நெகிழ்ந்து போனது. அவனுக்குத் தெரியும் தன் மனைவியால் தன்னை வெறுக்க முடியாதென்று. அந்த நம்பிக்கையில் தானே வந்திருந்தான்.
மனம் நெகிழ, “என்னை போன்னு சொல்லிட்டு, எதுக்காக என்னை எதிர்பார்க்கனுமாம்.” சிரிப்பும், சீண்டலுமாக மனைவியை அணைத்து வருடியபடியே அவன் கேட்க, பட்டென்று அவனிடமிருந்து பிரிந்தவள், கடுப்பாக அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள்.
“ஓ, சார் இதுதான் சாக்குன்னு இந்தப்பக்கம் எட்டிக்கூட பார்க்காம இருந்தீங்க போல.” என்று கோபமாக சொல்லத் தொடங்கியவளின் விழிகளில், அப்போதுதான் அவன் முகம் பட்டது.
ஷேவ் செய்யாத முகம், அதில் தெரிந்த களைப்பு, விழிகளில் தெரிந்த சோர்வு அனைத்தும், அவள் இல்லாமல் அவனும் சந்தோசமாக இல்லை என்று சொல்லியது.
நெஞ்சம் கசங்க, விழிகளில் அருவியாக நீர் கோர்க்க, ஒரு கையை மட்டும் உயர்த்தி கணவனின் கன்னம் பற்றி, “சாப்பிட்டீங்களா பாவா?” என்று கேட்டு முடிக்கும் முன்னே கேவல்கள் வெடித்து வெளியில் வந்தது.
அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து கன்னத்தோடு சேர்த்து அழுத்தியவன், மற்றொரு கையால் வாகாக அணைத்தவன், விழிகளை ஒருமுறை மூடித் திறந்து, “ம்ம்” என்றவன், “நீ?” என, அவளும், “ம்ம்” என்று தலையை உருட்ட, தன் முகத்தைப் பார்க்காமலே அவள் தலையை உருட்ட, அதுவே சொன்னது தன்னிடம் பொய் சொல்கிறாளென்று.
தன் அணைப்பை இறுக்கியபடி மனைவியைப் பார்த்தான் ஷ்யாம். அவளுக்குள் இருக்கும் உணர்வை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று, ‘வேண்டும் வேண்டாம்’ என்று இரு முடிவுகளுக்கும் இடையில் தத்தளித்தவள், இன்று வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் என்று அவனுக்குப் புரிந்துபோனது. தன்னிடம் சொல்வதற்கு தயங்குகிறாள் என்றும் புரிந்தது.
“ஸ்ரீக்குட்டி உன் பாவாவுக்கு பசிக்குது, சாப்பிடலாமா?” என அவளை இயல்பிற்கு கொண்டுவர ஆரம்பித்தான்.
“சாப்பிட்டேன் சொன்னீங்க, பொய் சொன்னீங்களா? உங்களை…” என சாய்த்திருந்த தலையைக் கொண்டே அவன் நெஞ்சில் முட்டியவள், “வாங்க போலாம்.” என கையை விடாமல் பிடித்துக் கொண்டு முன்னே செல்ல, மனைவி ஒரு தெளிவிற்கு வந்துவிட்டாள் என ஷ்யாமும் உணர்ந்து கொண்டான்.
நேரம் தெரியாமல் அவனுக்கு அன்றைய பொல்லாத நாள் நினைவிற்கு வந்தது. அம்பி போல் இருந்த மனைவி அந்நியனாக மாறிய தினமல்லவா அது.
1 comment
அப்பாடா..! இப்பவாவது தெளிவு வந்ததே.
😌😌😌
CRVS (or) CRVS 2797