Home Antiheroகாதலி – 26

காதலி – 26

by Vathani S

அத்தியாயம் – 26

அன்று நயனாவின் வீட்டில் இருந்து கிளம்பிய ஷ்யாம் நேராக சென்றது மனைவியிடம் தான். நள்ளிரவில் வீட்டுக்கு வந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தார் வீரம்மா.

“என்ன பேராண்டி இது, நேரங்கெட்ட நேரத்துல, போன வேகத்துல வந்துட்டீக? ப்லசர நீங்களா ஓட்டிக்கிட்டு வந்தீக, அப்பாவுக்கு எப்படி இருக்கு?”

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“இப்போ நல்லா இருக்கார் பாட்டி, மைல்ட் அட்டாக் தானம். ரொம்ப கவனமா பார்த்துக்கச் சொல்லி டாக்டர் சொல்லிருக்கார். அதோட எல்லாரும் அங்க இருக்காங்களே, அதுதான் நான் வந்துட்டேன்.”

“ம்ம் சரியப்பு… முடிஞ்சளவுக்கு இந்த நேரத்துல பயணம் செய்றதை தவித்துடுங்கயா, வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே, போன வேகத்துல திரும்பி வரவும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.”

“அதெல்லாம் இல்ல பாட்டிம்மா, அங்க என்ன பிரச்சனை இருக்க போகுது, இங்க ஸ்ரீயை தனியா விட்டுட்டு போயிட்டேன்ல, அதோட அப்பாவும் இங்க வந்து, அவரோட மருமக கூட இருக்க சொல்லிட்டார்.”

“ம்ம் அதுவும் சரிதானப்பு… சாப்டியா, காப்பித் தண்ணீ எதுவும் வச்சுத் தரவா? ரொம்ப களப்பா தெரியிறியே.”

“அதெல்லாம் வேண்டாம் பாட்டி, ரொம்ப லேட்டாகவும் தேனிலயே சாப்பிட்டுட்டு தான் வந்தேன். ஸ்ரீ தூங்கிட்டாளா? இப்போ எப்படி இருக்கா? நடக்குறாளா? மாத்திரை எல்லாம் நேரத்துக்கு கரெக்டா எடுத்துக்கிட்டாளா?”

“நான் இருக்கேனல்ல அப்பு, அதெல்லாம் சரியா பார்த்துக்கிட்டேன், இன்னைக்கு பொழுதோட கொஞ்சம் நடக்க வச்சேன், அலுப்பா இருக்குன்னு அவ அப்பவே படுத்துட்டா, நீயும் போய் உடம்பு கழுவிட்டு தூங்கு, மத்தெதெல்லாம் விடிய பேசிப்போம்.”

“சரிங்க பாட்டி.” என்றவன் மனைவியின் அறைக்குள் நுழைய, ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் மனையாள். அவளைப் பார்த்ததுமே அழையா விருந்தாளியாக பெரும் பாரம் ஒன்று மனதுக்குள் ஏறி அமர்ந்து கொண்டது.

என்ன செய்ய, இவளிடம் எப்படி நடந்ததைச் சொல்ல, சொன்னாலும் நம்புவாளா? இனி என்னுடன் இந்த வாழ்க்கையைத் தொடர்வாளா? முதன்முதலாக மனதுக்குள் பயம் வந்து அப்பிக் கொண்டது.

‘ஏன் சொல்லப் போகிறாய், சொல்லி உன் வாழ்க்கையை நீயே கேள்விக்குறியாக்கி கொள்ளப் போகிறாயா? அவளுக்குத் தெரிந்தால் இப்படி அமைதியாக இருப்பாளா? நீயும் வேண்டாம், உன்னுடனான இந்த வாழ்க்கையும் வேண்டாமெனப் போய்விடுவாள். அதுதான் உனக்கு வேணுமா?’ என ஒரு மனம் எடுத்துரைக்க,

மற்றொரு மனமோ, ‘அவளிடம் சொல்லிவிடு, சொல்லி அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து வாழ்வதில் தான் இல்வாழ்க்கையில் மேலும் மேலும் அன்யோன்யம் கூடுமே ஒழிய, இன்றைய சூழலுக்காக மறைத்து, நாளை அதுவே பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பிருக்கிறது. அவள் எப்படி ரியாக்ட் செய்தாலும், அனைத்தையும் தாங்கி உண்மை அனைத்தையும் சொல்லிவிடு’ என கட்டளை இட, அதற்கு ஷ்யாமும் அடிபணிந்தான்.

ஆமாம், நாளை காலை விடிந்ததும் முதல் வேலையாக அவளிடம் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

ஒரு முடிவுக்கு வந்த பிறகே, உடல் கழுவி, உடை மாற்றி வந்து மனைவியின் அருகில் படுத்தான். கட்டிலின் அசைவை உணர்ந்ததும் விழி மலர்த்தியவள் பார்வையில் கணவனின் பிம்பம் பட, தன்னாலே நெருங்கி அவன் மார்பில் தலை வைத்து, கோழிக்குஞ்சாய் சுருண்டு கொண்டாள் அவனுக்குள்.

அந்த செய்கையில் அவனின் மனதில் ஒரு இதம் பரவினாலும், இரு மடங்காய் பயம் கூடத்தான் செய்தது. தானும் வாகாக அவளை அணைத்துக் கொண்டவன், ஒரு கை மனைவியின் கேசத்தை வருட, மற்றொரு கரமோ முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தது. மனதில் நாளைய விடியலில் தன் வாழ்விலும் விடியல் வந்துவிட வேண்டுமென, அடுத்த நாளின் விடியலை நோக்கி தவமிருக்க ஆரம்பித்தான்.

அவன் எண்ணத்தை நொடியில் உடைப்பது போல அவனிடமிருந்து பட்டென்று பிரிந்து எழுந்து அமர்ந்தாள் பெண், “பாவா, நீங்களா? என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க?” கண்ணைக் கசக்கியபடிக் கேட்டவளை புன்சிரிப்புடன் பார்த்தவன், “வேலை முடிஞ்சிருச்சு மேடம், அதான் உடனே வந்துட்டேன். ஆனா வந்தது மேடத்துக்குப் பிடிக்கல போலையே.” என சீண்ட,

“ம்ச், லூசு மாதிரி எல்லாம் பேசக்கூடாது, இந்த நட்ட நடு ராத்திரில பேய்க்கும், பிசாசுக்கும் டஃப் கொடுக்குறமாதிரி வந்து படுத்திருந்தா பயமும் வரும், சந்தேகமும் வரும். எதுக்கும் உங்க காலை கொஞ்சம் காட்டுங்க, அது இருக்கா இல்லையான்னு செக் பண்ணிக்கிறேன்.”

“ஆஹான், மேடம் ஊருக்கு வந்ததும் தான் பேச்சே வருது, இதுக்கு முன்னாடி இந்த டைலாக் எல்லாம் எங்க போச்சாம்?” என சீண்ட, அதுவரை வாய் பேசிக் கொண்டிருந்தவள், சட்டென்று பேச்சை நிறுத்தி திருதிருவென விழிக்க, அதில் வாய்விட்டுச் சிரித்தான் ஷ்யாம்.

“இங்க வா” என அவள் மறுத்தும் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டவன், தன் நுனி மூக்கால் அவள் காது மடல்களை உரசி, “உனக்கு எங்கிட்ட ஏதாவது கேட்கனுமா?” என்றான்.

‘ஆம் அவளுக்கு அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி ஒன்று இருந்தது.’ அமைதியாக அவனைப் பார்க்க, “உனக்கு என்ன கேட்கனுமோ கேளு, நான் சொல்றேன், அதோட எனக்கும் உங்கிட்ட பேசனும்.” என,

“நீங்க சொல்லுங்க, அப்புறம் நான்…” என்றவளின் இதழை தன் கைக்கொண்டு மூடியவன், “லேடிஸ் ப்ர்ஸ்ட்.” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,

“ம்ம்ம்.” என்றவள், “நயனா அக்கா எப்படி இருக்காங்க, செக்கப் எல்லாம் போய்ட்டு தான் இருக்காங்களா? எனக்கு அவங்க நம்பர் தெரியல, இல்லைன்னா நானே பேசியிருப்பேன். நேத்து இருந்து ப்ரனீத் குட்டி ஞாபகமாவே இருக்கு, நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா அழைச்சிட்டு வரச் சொல்லிருப்பேன். ப்ரனீத் குட்டியை எப்போ நம்மகிட்ட கூப்பிட்டுக்குவோம்?” என்று அவள் வரிசையாகக் கேட்க,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நேற்று தான் அவனைப் பார்த்ததும், பார்ப்பதற்கு அமைந்த சூழ்நிலையையும் நினைத்து ஷ்யாமின் உடல் விறைத்தது. அணைப்பில் இருந்த நாகம்மைக்கு அந்த வித்தியாசம் புரிய, கேள்வியாக புருவம் உயர்த்த, “நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன அன்னைக்குத்தான் நயனாவுக்கு செக்கப் டெல்லில, நான் இருப்பேன்னு நினைச்சிட்டு வந்துருக்கா, அது என் மைண்ட்லயே இல்ல. இங்க உன்னைப் பத்தி சவி சொல்லவும், சுத்தமா ப்ளாங்காகிட்டேன்.

அங்க நான் யாருக்கும் சொல்லாம வந்துட்டேன். அதுல மேடம் கோபமா இருக்காங்க, யார் கூடவும் பேசுறது இல்ல. ப்ரனீத் குட்டியோட லீகல் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சது, சட்டப்படி அவன் நம்ம குழந்தைதான். ஆனா ஆன்ட்டி தான் அவங்க காலம் வரைக்கும் எங்க கூட இருக்கட்டும், முடியாத காலத்துல வந்து அழைச்சிக்கோங்கன்னு சொல்றாங்க, நயனும் அதுதான் சொல்றா. எனக்கும் அதுதான் சரின்னு படுது. பட் அவங்கனால முடியாத கட்டத்துல ப்ரனீத் நம்மகூட இருப்பான்.” என்றான் தீவிரமான குரலுடன்.

“ம்ம்ம்… இப்போ அவங்க உங்ககிட்ட பேசிட்டாங்களா?”

“ம்ச், இல்லை இன்னுமே டெல்லில இருந்து வரல, டூ டேஸ் ஆகும். கீமோதெரபி செய்வாங்க, என் ப்ரண்டோட வொய்ஃப் கூட இருக்காங்க, பார்த்துப்பாங்க.”

“கீமோதெரபின்னா ரொம்பவே கஷ்டமில்ல.” என்றவள், “ப்ரனீத் குட்டிய நம்மகிட்ட விட்டுட்டு அவங்கம்மா, அக்கா கூட போயிருக்கலாம்.” என கொஞ்சம் வருத்தமாகச் சொல்ல,

“ஆன்ட்டிக்கு நயனா அங்க ஹாஸ்பிடல்ல படுற கஷ்டத்தை பார்த்து ரொம்ப பயம், முன்னாடியுமே அங்கிள் தான் போயிட்டு இருந்தார். இப்போ ஏஜ் ஆகவும், அவளா போய்க்கிறா. இங்க இருந்து டெல்லி வருவா, அப்புறம் நான் பார்த்துக்குவேன்.” என்றவனுக்கு தோழியை நினைத்து மனம் கனத்துப் போனது.

கணவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு, “சரி, நீங்க உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க கேட்போம்.” என்றாள் கண்ணில் சிரிப்போடு.

“ஏத லவ் ஸ்டோரியா? அப்படி ஒன்னு இருந்தா தான சொல்ல, நான் மட்டுமே லவ் பண்ணதெல்லாம் லவ் ஸ்டோரி ஹிஸ்ட்ரில சேராதாம்.”

“என்ன நீங்க மட்டுமா? அவங்க உங்களை லவ் பண்ணலையா?” என அதிர்ச்சியாகக் கேட்க,

“ம்ச், இல்ல அவளுக்கு சின்ன வயசுல இருந்தே அவங்க மாமா பையன் மேல தான் இன்ட்ரெஸ்ட். இது தெரியாம, நான் லவ் பண்றேன்னு நினைச்சு, அப்படியே ஃபீலாகி போய் அவகிட்ட சொல்லலாம்னு போனா… அவ அவளோட ஆளை கூப்பிட்டு வந்து இன்ட்ரோ கொடுக்குறா, எப்படி இருக்கும் மனுஷனுக்கு.” என கடுப்பாக ஷ்யாம் பேச,

“ஹாஹா… அடப்பாவி! செம பல்பு போல, உங்க லவ் ஒன் சைட் லவ்வா ஹாஹா… அப்புறம் என்னாச்சு?” என்றாள் அடக்க முடியாத சிரிப்போடு.

“அப்புறம் என்னாச்சு, எடுத்துட்டுப்போன க்ரீட்டிங்க் கார்டை என்னையவே பார்த்து கேலி செஞ்சு குப்பத்தொட்டில போட்டுட்டு, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ன்னு விஷ் பண்ணிட்டு வந்துடேன்.” எனச் சோகமாக சொல்வதைப் போல் சொன்னாலும், அவன் முகத்திலும் அடக்கப்பட்ட புன்னகையின் சாயல்.

அவன் சொல்லி முடித்ததும், கண்ணில் நீர் வரும் வரை கலகலவென சிரித்தவள், “இந்த லவ்வுக்குத்தான் எங்கிட்ட அவ்ளோ பில்டப். உங்களை…” என கையில் கிள்ளிவிட்டு, அவன் மேலையே சாய்ந்திருந்தாள்.

அந்த சிரிப்பு சத்தமெல்லாம் அடங்கிய சில நிமிடங்களில், “நீங்க என்னமோ பேசனும் சொன்னீங்க தானே. என்ன பாவா, சொல்லுங்க.” என அவளே ஆரம்பிக்க, அதுவரை சிரித்து தன் கவலையை மறந்திருந்தவன், மனைவி கேட்டதும் நொடியில் பதட்டத்தை தத்தெடுத்துக் கொண்டான். உடல் கூட லேசாக நடுங்க ஆரம்பித்தது. அவன் இதயத்தின் ஓசை, மார்பில் சாய்ந்திருக்கும் அவளுக்கும் கேட்டது.

சட்டென்று கணவனின் நிலையை அறிந்தவள், “என்ன பாவா… ஏன் இப்படி உடம்பெல்லாம் நடுங்குது? என்ன செய்யுது? எதுவும் பிரச்சனையா?” எனக் கேள்விகளால் அடுக்க, ‘ஒன்னுமில்ல’ என்பது போல் தலையை ஆட்டியவன், வேகவேகமாக முகத்தை இரு கைகளாலும் அழுந்தி தேய்த்துக் கொண்டான்.

“உங்களுக்கு சொல்ல கஷ்டமா இருக்குன்னா சொல்ல வேண்டாம் பாவா, விடுங்க, நீங்க கஷ்டப்படாதீங்க.”

“இல்ல இல்ல, நான் சொல்லனும். இன்னமும் இதை மனசுக்குள்ள வச்சு போராடவோ, உன்னை ஏமாத்தவோ எனக்குத் தெம்புல்ல.” என ஆக்ரோசமாகக் கத்தியவன், “இந்த கல்யாணம் என்னதான் பிடிக்காம நடந்தாலும், முதல் நாளுக்குப் பிறகு உங்கிட்ட என்னால கோபமா நடந்துக்க முடியல ஸ்ரீ, அடுத்த நாள் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனது கூட, என்னை நானே ஏமாத்திக்கத்தான். உன் மேல என்னோட எண்ணங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சாய ஆரம்பிக்கவும், எனக்கே என்னைப் பிடிக்காம போகிடுச்சு. நேத்து வரை பிடிக்கல பிடிக்கலன்னு சொன்ன ஒருத்தி பின்னாடி என்னோட எண்ணங்கள் பயணம் ஆகவும், எனக்கு கோபம், என் மேலயே கோபம். அதெல்லாம் சேர்ந்து தான் அன்னைக்கு அப்படி செய்ய வச்சது.” என்றவன் ஒரு பெருமூச்சைவிட்டு அவளைப் பார்க்க, ஒன்றும் புரியாத குழந்தை போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் கண்மணி.

“அய்யோ! எப்படி சொல்லுவேன்? என்ன சொல்லுவேன்? என்னால முடியல ஸ்ரீ. உங்கிட்ட சொல்லவும் முடியல, சொல்லாம இருக்கவும் முடியல. ஆனா சொல்லிடனும்னு முடிவோடதான் வந்துருக்கேன், நான் சொன்ன பிறகு நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் சம்மதிக்கிறேன்.” என்றவன், தன்னை சமன்செய்து, அவள் முகத்தைப் பார்க்காமலே எதிரே தெரிந்த சுவற்றில் பார்வையைப் பதித்தபடியே நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

சொல்லி முடித்தும் அவளிடமிருந்து சில நொடிகளுக்கு அசைவே இல்லை. கண்கள் இரண்டும் கோவைப்பழமாகச் சிவந்து, விழிகளில் வழிந்த நீரைக் கூட துடைக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், அக்கினி பிழம்பு போல அவனை உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள் நாகம்மை.

மனைவியின் இந்த கோலத்தில் ஷ்யாமின் உள்ளத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. தன் மனைவி அழுது பார்த்திருக்கிறான், பயந்து பார்த்திருக்கிறான், ஏன் முதன்முறையாக கலகலத்து சிரித்துக் கூட பார்த்திருக்கிறான். ஆனால் இந்த கோலம், வதம் செய்யும் காளியின் தோற்றம் என அவன் மனம் சொல்ல, மொத்த தைரியத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டவன், நடுங்கிக் கொண்டிருந்த அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து, “ஸ்ரீ…” என அழைக்க,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

பட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டவள், “என்னை தொடக்கூடாது.” என்றாள் கட்டளையாக.

அந்தக் குரலில் இருந்த அந்நியத் தன்மையில், “ஸ்ரீ…” என அவன் அதிர்ந்து பார்க்க, “உங்க அம்மா என் குழந்தையை கொல்லல, நீங்க நீங்கதான் கொன்னுட்டீங்க. நீங்க மட்டும் தான் இதுக்கு காரணம்.” எனப் பொங்கிய சினத்துடன் சீறியவளை கொஞ்சமும் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாமன்.

You may also like

1 comment

M. Sarathi Rio October 3, 2026 - 6:42 pm

ஆமா இந் ஷ்யாம் தான் கொன்னுட்டான் அந்த குழந்தையை. இவன் மட்டும் பெட்ரூம்ல நெருக்கமும், ரூமுக்கு வெளியில டிஸ்டன்ஸூம் மெயின்டெய்ன் பண்ணலைன்னா..
லலிதாவுக்கு இந்தளவுக்கு துணிச்சல் வந்திருக்குமா..?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured