Home Antiheroகாதலி – 27

அத்தியாயம் – 27

 “இந்த உலகத்தை பார்க்கும் முன்னாடியே என் பிள்ளையைக் கொன்னுட்டீங்களே!” ஒரே வரிதான், அந்த ஒற்றை வரியில் அந்த ஆறடி ஆண் மகனை மொத்தமாக சாய்த்திருந்தாள் பெண்.

அந்த வார்த்தையில் இருந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டான் ஷ்யாம். உண்மைதானே என மனசாட்சி அவனைக் குத்தியது. லலிதாவிற்கு இதில் எந்தளவு பங்கிருக்கிறதோ அதே அளவில் இவனுக்கும் அந்த தவறில் பங்கிருக்கிறதே. அதை நினைத்த நொடி, அந்த பொல்லாத உண்மை அவனைச் சுட்ட நொடி, அதைத் தாங்கும் சக்தியற்றவனாக கண்களைப் பட்டென்று திறந்துவிட்டான்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

திறந்தவனின் பார்வையில் கதறியழுது கொண்டிருந்த மனைவியின் பிம்பமே விழ, அவளுக்கு முன் தன் வலி ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தவன், அவள் திமிற திமிற இழுத்து இறுக்கி அணைத்தவன், அவளின் முதுகை தலையை என மாறி மாறி வருட ஆரம்பித்திருந்தான்.

மெல்ல மெல்ல அவள் அழுகை விசும்பலுக்கு வந்ததும், அவனிடமிருந்து விலகியவளை விடாமல், “அது என்னோட குழந்தையும் தான ஸ்ரீ.” என்றான் வலி நிறைந்த குரலோடு. என்னையும் புரிந்து கொள்ளேன் என்றது அந்தக் குரல்.

அந்தக் குரலில் இருந்த வலி அவளை அசைத்துப் பார்த்தாலும், இழந்ததன் வலிதான் பெரிதாகத் தெரிந்தது பெண்ணுக்கு. ‘அம்மா’ என்றழைக்க வந்திருந்த அழகு பெட்டகம் அழிந்து போனது தான் கண் முன்னே விரிந்து அவளைப் பாடாய்படுத்தியது.

எத்தனை வலியைச் சுமந்து, கரைந்து போனதோ, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் கத்தியால் கீறியதைப் போல் ரணமாக வலித்தது. அந்த வலிக்கு முன் கணவனின் வலி பெரிதாகப் படவே இல்லை அவளுக்கு. ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி அவனைத் தன்னிடமிருந்து பிரித்து தள்ளிவிட்டவள், “உன்னோட குழந்தையா… ஹான் சொல்லு உன்னோட குழந்தையா?” என ஆங்காரமாகக் கேட்டாள் நாகம்மை.

ஒற்றை வரியிலும், ஒற்றை பார்வையிலும் ஒருவரை அந்நியப்படுத்த முடியுமா? முடியும் என்று காட்டிக் கொண்டிருந்தாள் நாகம்மை. ஆனாலும் பதில் சொன்னான். “ஆமா அது என் குழந்தையும் தான்.” என்றான் உறுதியாக.

“ஹான், உங்க குழந்தையே தான், உங்கம்மாவுக்கு பயந்துட்டு இல்லன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்.” அத்தனை எள்ளல் அந்தக் குரலில். அவள் முடிக்கும் முன்னே அவன் கை மனைவியின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

“இனி ஒரு வார்த்தை பேசின, நான் மனுசனா இருக்கமாட்டேன். என்னை அசிங்கப்படுத்துறதா நினைச்சி, உன்னை நீயே கேவலப்படுத்திக்காத.” என்றான் கடும் சீற்றத்துடன்.

அவனுக்குக் குறையாத சீற்றத்துடன் இருந்தவளும், “இந்த கல்யாணம் உனக்கு மட்டும் இல்ல, எனக்குமே பிடிக்காத கல்யாணம் தான். ஆனா நான் உனக்கு உண்மையாதானே இருந்தேன், என்ன செய்தாலும் பொறுமையாதானே போனேன். ஆனா நீ என்ன செஞ்ச, முதல் நாளே விவாகரத்து வேணும்னு கேட்ட, அடுத்த நாளே என்னை… என் விருப்பம் இல்லாம ச்சே.” என்றவள்,

பின் தலையைக் குலுக்கி, “அடுத்து எந்த புருஷனும் செய்யாத ஒரு செயலை செஞ்ச, குழந்தையே வேண்டாம்னு நீ தான் சொன்ன, அப்புறம் உனக்கு இந்த குழந்தை மேல எப்படி பாசம் வந்தது? நம்ப முடியல, நம்பவே முடியல, நடிப்பு எல்லாம் நடிப்பு. ஒருவேளை இந்த குழந்தைக்கு ஒன்னும் ஆகாம போயிருந்தா நீ வந்து இப்படியெல்லாம் பேசியிருப்பியா சொல்லு, பேசியிருப்பியா? இல்ல கண்டிப்பா இல்ல… நீயே கூப்பிட்டு வந்து கலைச்சிருப்ப.” என அவனின் அதிர்ந்த தோற்றம் எதையும் கணக்கில் கொள்ளாமல், கத்தி போன்ற கூர்மையான சொற்களைக் கூறி, அவனது இதயத்தைக் கிழித்துக் கொண்டிருந்தாள் அவனது மனையாள்.

அந்த சொற்களும் அதன் கூர்மையை சரியாகக் காட்டிக் கொண்டிருந்தது. அவனது இதயத்தை அந்தக் கூர்சொற்கள் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் சமாளித்து அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தான். கணவனின் நிதானம் மேலும் கோபத்தீயை ஏற்ற, அதைப் பட்டெனத் தட்டிவிட்டவள், “இனி உங்க கூட என்னால வாழமுடியாது. நீங்க சொன்ன மாதிரியே நான் உங்களுக்கு விவாகரத்து தரேன். அதுக்கு என்ன செய்யனுமோ செய்ங்க, என்னை விட்டுட்டுங்க.” என்றாள் மிகவும் தீவிரமானக் குரலில்.

எத்தனை அதிர்ச்சியைத் தான் அவனும் தாங்குவான். நிலைத்தடுமாறி அப்படியே அந்தக் கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

விவாகரத்து! அவன் அவளிடம் கேட்டது தான். தான் கேட்கும்போது அவளுக்கு எப்படி வலித்திருக்கும் என்று இப்போது அவனால் உணர முடிந்தது.

வலி, வலி, இந்த வலியை எப்படி கடந்து வர? அதைவிட, அவன் மனைவியை எப்படி இதிலிருந்து மீட்க? சிலையாக அமர்ந்துவிட்டான். ஆனால் அவள் நிறுத்தவில்லை. பேசிக்கொண்டே சென்றாள்.

இத்தனை நாட்களாக பட்ட கஷ்டங்கள், லலிதா செய்த ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி அழ, அவன் இதயம் இதற்கு மேல் இந்த பாரத்தை தாங்கமாட்டேன் என்று சொல்லவும், அவளை வருத்தக்கூடாது என்று மனதுக்குப் புரிந்தும், வேறுவழியில்லாமல் “போதும் ஸ்ரீ, நிறுத்து.” என சத்தமாக அதட்ட, அதில் அவளது விழி நீரும் பேச்சும் சட்டென நின்றுவிட, அவனை உறுத்து விழித்தபடி நின்றாள் பெண்.

“அப்ப சொன்னது தான், இப்பவும். உனக்கு கொடுத்த சாய்ஸை நீ சூஸ் பண்ணல, அது உன்னோட தப்பு. இப்போ வந்து கொடுன்னு கேட்டா எப்படி தரமுடியும். ப்ரனீத் குட்டியை சேர்த்து நமக்கு நாலு குழந்தைங்க. நம்ம குடும்பம் இதுதான். இனி நீயா நினைச்சாலும் எங்கிட்ட இருந்து விலக முடியாது. நீ தான் என் காலத்துக்கும்னு நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். உனக்குப் பிடிச்சாலும், பிடிக்கலனாலும் அதுதான் நடக்கும். உனக்காக கொஞ்ச நாள் நீ கேட்குற தனிமையைக் கொடுக்குறேன். யோசி, யோசிச்சு அடுத்து நான் வரும்போது ஒரு முடிவைச் சொல்லு.” என அவன் பேசி முடிக்கும் முன்னே,

“என் முடிவு இதுதான், நான் மாறமாட்டேன்… எனக்கு உங்க கூட வாழ இஷ்டம் இல்ல.” என நாகம்மையும் கத்த, இப்போது ஷ்யாமிற்கும் சுத்தமாக பொறுமை போயிருந்தது.

“ஆஹான்.” என்ற இறுக்கமானச் சொல்லோடு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி, ஒரு கையால் தன் நாடியைத் தடவியவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் நாகம்மை. அந்தக் குரலில் இருந்த இறுக்கமும், அழுத்தமும் அவளை பயங்கொள்ளச் செய்ய, விழிகளை விரித்தபடி அப்படியே நின்றிருந்தாள் அவள்.

“ம்ம், சொல்லு, நீ சொன்னதை மறுபடியும் சொல்லு.” என அவளை நெருங்கியவனைப் பார்க்க, கண்கள் இரண்டும் ரத்தமெனச் சிவக்க, உடல் இறுகிப்போய் பார்க்கவே பயம் வர, நாகம்மையின் கால்கள் தன்னால் பின்னோக்கிச் சென்றது.

மனைவியை ஒரே எட்டில் பிடித்தவன், அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான். விழிகள் இரண்டும் மருண்டு, முகமெல்லாம் அழுததில் சிவந்து, கேசங்கள் கலைந்து பார்க்கவே சோக சித்திரமாக இருந்தவளைக் கண்டு அவன் இதயத்திலும் உதிரம் வடிந்தது. அதை மறைத்து, “ஏன் ஸ்ரீ இப்படியெல்லாம் பேசுற? இழப்பு எனக்கும் தான, எனக்கும் வருத்தம் இருக்கும் இல்ல, என்னோட வலி உனக்கு புரியலையா? இதுல என்னோட தப்பு எங்க இருக்கு?” என்றான் வேதனையான குரலில்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“என்ன தப்பா, எல்லாம் எல்லாமே தப்பு தான். குழந்தைன்னு ஆரம்பிச்ச அன்னைக்கே அது உருவாக வேண்டாம்னு நினைச்சதே பெரிய தப்பு. அதுக்கப்புறம் நான் என்ன பண்றேன், எப்படி இருக்கேன், எதுவும் கேட்காம கொஞ்சமும் பொறுப்பே இல்லாம இருந்தது ஒரு தப்பு. அதுவும் என் கூட இருந்துட்டு இன்னொருத்தி பேரைச் சொன்னீங்களே, அதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது. அன்னைக்கே மனசால நான் செத்துட்டேன். இப்போ நீங்க மனசால செத்துப் போன ஒரு பொனத்து கூடதான் பேசிட்டு இருக்கீங்க.” கொஞ்சமும் சீற்றம் குறையாமல் பேசியவளைப் பார்த்து வாயடைத்து நின்றான் ஷ்யாம்.

அதன்பிறகு அவன் எதுவும் பேசவில்லை. அவனது அந்த முகத்தைப் பார்த்த நாகம்மையும் எதுவும் பேசவில்லை. பேசிப் பேசி இருவருக்குள்ளும் காயங்கள் அதிகமானதே தவிர, குறையவில்லை. அதன் வலியைத் தாங்கிக் கொள்ளத்தான் இருவராலும் முடியவில்லை.

என்ன நினைத்தானோ, மனைவியின் அருகே சென்றவன், அவள் திமிற திமிற இழுத்து அணைத்து, இதழோடு இதழ் பொருத்தியவன், அணைத்த வேகத்தில் அவளை விட்டான். “நீ கேட்டதை கண்டிப்பா கொடுக்குறேன்.” என்று தன் வலி நிறைந்த குரலை மறைத்து, முயன்று வரவைத்த சாதாரணக் குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

கிளம்பியவன் கதவோரம் நின்று அவளைத் திரும்பி பார்த்தான். அவளிடம் அசைவில்லை என்றதும் வேகமாகக் கதவைத் திறந்து போய்விட்டான்.

சற்று நிமிடத்தில் அவனது ஐ20 கிளம்பிய சத்தத்தில் தான் நிகழ்வுக்கு வந்தவள், திக்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்துவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் வீரம்மா வந்து, “பேராண்டி எங்க பாலா, காரையும் காணோம்?” எனக் கேட்க,

“போயிட்டார். எங்க போறேன்னு சொல்லிட்டு போகல. உனக்குத் தேவைன்னா போன் செஞ்சி கேளு.” என வெடுக்கென்று சொல்ல, அவருக்கோ புருவம் யோசனையாக சுருங்கியது. அவளிடம் ஒன்றும் கேட்காமல் ஷ்யாமிற்கு போன் செய்யப் போக, அவனே அழைத்தான்.

“பாட்டிம்மா, ஒரு அர்ஜென்ட் வொர்க் யாருகிட்டயும் சொல்லாம கிளம்பிட்டேன், தப்பா நினைச்சிக்காதீங்க. முருகேசன் கூடதான் வந்தேன், கார் அவன் கொண்டு வருவான். நீங்க ஸ்ரீயை பத்திரமா பார்த்துக்கோங்க, நான் அடிக்கடி போன் பண்றேன்.” என்று அவர் பேசம் முன் இவன் பேசி வைத்துவிட, சரியாக அந்த நேரம் முருகேசன் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தினான்.

“என்னய்யா… இந்த பையன் வந்ததும் தெரியல, போனதும் தெரியல, நடுராத்திரிதான் வந்தான், விடிய பார்த்தா காணோம், எதுவும் பிரச்சனையா?” அப்போதுதான் மாரியம்மாவும், இலக்கியாவும் உணவை எடுத்துக் கொண்டு அங்கு வர, அந்தப் பேச்சு அப்படியே நின்றது.

“சுவரொட்டி தான செஞ்சிருக்க மாரி, சூப்பை முதல்ல ஊத்திக் கொடு, அப்புறமா சாப்பிடட்டும்.”

“சரிங்கத்த, ஏன்த்த தம்பி வந்துருந்தாரா? போன் போட்டாரு. எங்களையும் இங்கையே வந்து இருக்க சொல்றாரு. அது எந்தளவுக்கு சரியா வரும்? என்னால முடியாதுன்னும் சொல்ல முடியல, நீங்க கொஞ்சம் சொல்லுங்க அத்த. அண்ணிக்கு இதெல்லாம் தெரிஞ்சா நல்லாவா இருக்கும்.”

“நானே சொல்லனும்னு இருந்தேன் மாரி, தம்பி எங்கிட்ட முன்னாடியே சொன்னாரு, நானும் உன்னைமாதிரி தான் யோசிச்சேன். ஆனா இப்போ என்னமோ அவர் சொல்றது சரின்னுதான் படுது. எதுக்கு நீங்க அங்கையும், நாங்க இங்கையும் இருக்கனும், பிள்ளைகள அழைச்சிட்டு இங்க வந்துடு, பரந்தாமன் கிட்ட கூட பேசிட்டேன்.”

“என்னத்த இது, முன்னாடியே சொல்லிருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேனே, இதெல்லாம் சரியா இருக்காது அத்த.”

“அத்த, அம்மத்தா சொல்றது தான் சரி, இங்கையும் ரெண்டு பொம்பளைங்க, அங்கையும் மூனு பொம்பளைங்க, எங்க வீட்டுல எங்கம்மா, உங்க மூனு வீட்டுக்கும் ஓடி ஓடியே நான் களைச்சிப் போயிடுவேன் போல. அதனால பேசாம இங்கனவே வந்து இருங்க.” என அதட்டல் போல முருகேசன் சொல்ல, இருமனதாக தலையை ஆட்டிவிட்டு நாகம்மையை காண போய்விட,

“என்னய்யா, என்ன பிரச்சனை, நீ இப்படி ஓங்கியெல்லாம் பேச மாட்டியே, என்னாச்சு?”

“அட கெழவி, பிரச்சனை எல்லாம் பெருசா ஒன்னுமில்ல, ஸ்ரீக்குட்டியை உங்க மாப்பிள்ள பேராண்டி அவர் கூட கூப்பிட்டுருக்கார். இந்த மேடம் வரலன்னு சொல்லிட்டாங்களாம். அப்படியே பேசி வாய் வார்த்தை கூடிப்போச்சு, அவ்ளோதான். அவருக்கும் லீவு இல்ல. இவளைத் தனியா விடவேண்டாம்னு நினைச்சித்தான் அத்தையை இங்க வந்து இருக்கச் சொல்லிருக்கார்.”

“ஆனா, அதையும் தாண்டி என்னமோ இருக்குய்யா, யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க, நானே கண்டுபிடிக்கிறேன்.” என்ற வீரம்மாவைப் பார்த்து பக்கென்று இருந்தது முருகேசனுக்கு.

அடுத்து வந்த நாட்கள் ஷ்யாம் சொன்னது போலத்தான் அனைத்தும் நடந்தது. காயத்ரியையும், பாட்டியையும் கைக்குள் போட்டுக்கொண்டு அனைத்தையும் செய்து முடித்திருந்தான்.

கல்லூரி சேர்க்கைக்கு மட்டும் அவள் பிடிகொடுக்காமல், எல்லாரையும் ஒருவழி செய்ய, “மாமா, எலி காயலாம். ஆனா எலி__ சேர்ந்து காயனும்னு எந்த அவசியமும் இல்லை. நீங்க வந்து உங்க பொண்டாட்டி, கால்ல விழுவீங்களோ, இல்ல கட்டிப்பிடிப்பீங்களோ, என்னமோ பண்ணுங்க. நீங்களே உங்க வேலையை முடிச்சிடுங்க, என்னை விட்டுடுங்க.” என காயத்ரி கடுப்பாக கத்தவும் தான் வேறுவழி இல்லாமல் கிளம்பி வந்திருந்தான்.

ஷ்யாமின் சிந்தனைகள் நடந்து முடிந்தவைகளை அசை போட, எதிரில் எதிரியைப் போல் வந்து நின்ற முருகேசன் முறைத்துக் கொண்டு, “நீதான் அந்தக் குள்ளச்சிக்கு ஐடியா கொடுத்தியா?” என்றான் கடுப்போடு.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஹாஹா… கண்டுபிடிச்சிட்டியா?” என்ற ஷ்யாம் வாய்விட்டுச் சிரிக்க, “உன்னை…” என அவன்மேல் பாய்ந்திருந்தான் முருகேசன்.

You may also like

1 comment

M. Sarathi Rio October 4, 2026 - 1:45 pm

ம்க்கூம்… இதுங்களுக்கு இதே வேலையாப்போச்சு. வேற வேலை வெட்டியே இல்லைப் போலயிருக்கு.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured