Home Antiheroதூரம் – 26

தூரம் 26

இவர்கள் கிளம்பிய அன்று மாலையை நிவிக்கு பிரசவவலி எடுத்துவிட கணேசன், நடராஜ், அமுதா என அனைவருமே நிவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். கொடிக்குமே அங்கு இருப்பு கொள்ளவில்லை, தன் தந்தையை உடனே அனுப்பி வைத்தாள்.

அவர் முதலில் கிளம்பவே இல்லை, இளங்கோதான் பேசிப்பேசியே அவரை அனுப்பி வைத்தான். சுகப்பிரசவம் முடியாது என்று சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுத்தனர்.

அதனால் கண்டிப்பாக அங்கு ஆட்கள் தேவைப்படும் என்பதால், அமுதாவும் ஆனந்தியும் நிவியுடனே தங்கிவிட சங்கர், குழந்தை பிறந்ததும் பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்துவிட்டார்.

என்னதான் குழந்தையைப் பற்றியும் நிவியைப் பற்றியும் ஆனந்தியிடம் போனில் விசாரித்து இருந்தாலும், தன் தந்தையிடமும் பலமுறை கேட்டு தெரிந்து கொண்டாள் கொடி.

குழந்தை பிறந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அந்த மகிழ்வுடனே அன்றைய நாள் கழிந்தது.

இரண்டாம் நாள் மாலை கீமோ செய்ய அப்பாய்ன்மென்ட் கொடுத்திருந்தனர் மருத்துவர்கள்.

முதல்நாள் மாலையே தலைமுடியை எடுக்க அழைத்து செல்வார்கள் என நர்ஸ் கூறிவிட்டு செல்ல, இளங்கோவால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.

கேட்டதில் இருந்து மகளின் கையைப் பிடித்துக்கொண்டே அமர்ந்திருந்தார் சங்கர். மகளை எதிலிருந்தோ காப்பது போல அவளைவிட்டு அகலாமல் அமர்ந்திருந்தார்.

இளங்கோவால் மனைவியை நெருங்க முடியவில்லை. அவர்கள் இருவரையுமே ஏக்கமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு கணேசன் வர, அவரைப் பார்த்து இளங்கோ புன்னகைக்க, பிள்ளைகள் இருவரும் கொடியின் இருபக்கமும் வந்து கட்டிக்கொண்டனர்.

“ம்மா, நீ ஓகேதான?” என நவீன் கேட்க,

“ம்ம்…” என்பது போல் கொடி தலையசைக்க,

நர்த்தனா, “ம்மா பேசமாட்டியா?” என்றவளின் குரல் சட்டென்று உடைந்து போனது.

மகளிடமிருந்து இப்படியொரு கேள்வியை கொடி எதிர்பார்க்கவில்லை. தன் தைரியமெல்லாம் மெல்ல மெல்ல தன்னைவிட்டு நழுவுவது போல் உணர, வேகமாக கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

அவனும் அதிர்ந்துதான் போயிருந்தான் மகளின் கேள்வியில். மனைவியின் முகத்தில் தெரிந்த வேதனையில், “நதி உங்கிட்ட என்ன சொல்லி கூப்பிட்டு வந்தேன்?” என கடுமையாக கேட்க,

“ப்பா…” என்றாள் தேம்பியபடி. மகளிடம் வந்தவன் அவள் முகத்தைத் துடைத்தபடியே, “அம்மா சீக்கிரம் பேசிடுவா. நீ பயந்து அவளையும் பயம் காட்டக்கூடாது.” என சமாதானம் செய்ய,

“ஸாரிம்மா!” என தாயைப் பார்த்து சொன்னவள், தன் அத்தையின் அருகில் அமர்ந்து அவள் மேல் சாய்ந்துகொண்டாள். அதுவே சொன்னது மிகவும் பயந்து போயிருக்கிறாளென.

நந்தினியும் அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தாள். நவீனுக்கும் இதெல்லாம் பார்க்கும்போது பயம்தான். ஆனால் அக்காவைப் போல அழவில்லை.

தாயிடம் சிரித்து பேசியபடியே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் மகனை அழைத்துக்கொண்டு வெளியில் சென்ற இளங்கோ, திரும்பி வரும் போது இருவரும் மொட்டையோடு வந்தனர்.

அதைப் பார்த்து நந்தினியே சத்தம் போட்டு அழ, நர்த்தனாவை சொல்லவே வேண்டாம். தகப்பனைக் கட்டிக்கொண்டு அப்படியொரு அழுகை.

நவீன் சிரித்தபடியே தாயிடம் வர, அவளோ மகனை வாரிச் சுருட்டிக்கொண்டாள்.

“ஏன் தம்பி… ஏன் தம்பி…” என திணறியபடியே கேட்க,

“நானும் அப்பாவும் பாண்டி கோயில்ல போய் மொட்டை போட்டுகிட்டு வந்தோம், உனக்கு சீக்கிரம் சரியாகணும் இல்ல?” என தன் மொட்டையைத் தடவியபடி சிரிக்க, மகனைப் பார்த்து கொடியின் விழிகளில் நீர் நிறைந்து போனது.

அவள் கண்ணீரைத் துடைத்து விட்டபடியே, “ம்மா நான் ஒன்னு சொல்லட்டா? நாளைக்கு உனக்கு மொட்டை போட்டுருவாங்க தானே? அப்போ நம்ம மூனு பேரும் மொட்டையா இருப்போம், இவ மட்டும் முடியோட இருப்பா. அதனால இவளுக்கும் மொட்டை போட்டுடலாமா?” என நர்த்தனாவை காட்டி கிண்டலாக கேட்க, எல்லாரும் பட்டென்று சிரித்து விட்டனர்.

சங்கர் கூட தன் கோபத்தையெல்லாம் மறந்து பேரனை அணைத்துக்கொண்டார்.

அதுவரை அழுது கொண்டிருந்த நர்த்தனா தம்பியின் பேச்சில், “டேய்…” என்று அவன் மொட்டை மண்டையில் நங்கென்று கொட்டினாள்.

“ம்மா பாருமா…” எனது தாயிடம் புகார் அளித்தவன், “இங்க பாரு நதி, நாளைக்கு நாங்க மூனு பேரும் மொட்டையோட இருப்போம். நீ மட்டும் தனியா வித்தியாசமா இருப்ப. அப்புறம் உன்னை நம்ம ஃபேமிலியே இல்ல, வேற யாரோனு நினைச்சுப்பாங்க. ஒழுங்கா மொட்டை போட்டு எங்ககூட சேர்ந்துடு, இல்லைனா யாரும் உன்னை நம்ம ஃபேமிலினு நம்பவே மாட்டாங்க.” என சிரிக்காமல் அக்காவை கிண்டல் செய்தான்.

“ப்பா பாருங்கப்பா… இவனை சும்மா இருக்க சொல்லுங்கப்பா.” எனது தந்தையிடம் புகாரெடுத்து செல்ல, அந்த நிமிடம் அங்கிருந்த அத்தனை பேரின் இறுக்கங்களும் சற்று தளர்ந்துதான் போனது.

அனைவரின் முகத்திலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

அன்று மாலை கொடியை மொட்டையிட அழைத்துச் செல்ல, சங்கரையும் கணேசனையும் வர வேண்டாம் என சொல்லிவிட்டாள் கொடி.

வழக்கம் போல நந்தினியும் இளங்கோவும் செல்ல நவீனும், “நானும் வரேன் ப்பா.” என சேர்ந்து கொண்டான்.

உள்ளே நுழைந்த நொடியில் இருந்து இளங்கோவின் இதயம் தாறுமாறாக துடித்தது.

கொடிக்கும் பயத்தில் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. அவளைப் பிடித்திருந்த நந்தினியால் அதை உணர முடிந்தது.

“அண்ணி ஜஸ்ட் ரிலாக்ஸ்! ஒன்னும் இல்ல… பயப்படாதீங்க…” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி சமாதானம் செய்தாள்.

கொடிக்கு முன்னே இருவர் இருந்தனர். அவர்கள் இருவருமே சற்று வயதானவர்கள். அவர்களின் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள் என்று. உடன் வந்தவர்கள் கையில் மொபைலுடன் ஓரமாக நின்றிருந்தனர்.

அதைப் பார்த்த இளங்கோவிற்கு சலிப்புதான் வந்தது.

“என்ன ஜென்மங்களோ!” என வாய்க்குள் முணுமுணுத்தபடி நாற்காலியில் அமர்ந்தான்.

அடுத்த பத்து நிமிடத்தில் கொடி அழைக்கப்பட, உடன் இருந்த மூவருக்குமே பயத்தில் முகம் வெளிறியது.

“உங்களுக்கு ரொம்ப அழகான முடி…” என மென்மையாக அவளிடம் பேசியபடியே, கொடியின் தலையைப் பிரித்து இரண்டு பக்கமும் விட்டார் அந்தப் பெண்மணி.

“எங்க அம்மாவுக்கு நிறைய முடி, ரொம்ப அழகா இருக்குல்ல… சீக்கிரம் வளர்ந்திடுமா?” என நவீன் சிரித்தபடியே கேட்க,

“எஸ் அஃப்கோர்ஸ்! பட் சிக்ஸ் மன்த்ஸ் கண்டிப்பா இப்படித்தான் இருக்கணும், உனக்கு ஓகேவா?” என அவரும் சிரித்தபடியே கேட்க,

“எனக்கு டபுள் ஓகே, எங்க அம்மாவுக்கு சரியானா போதும்.” என்றதும்,

“டெஃபனட்டா சரியாகிடும், இப்போ அவங்களுக்கு ஸ்டார்டிங் ஸ்டேஜ்தான். நீங்க சரியான டைமுக்கு தான் வந்துருக்கீங்க, சோ பயமே வேண்டாம். கண்டிப்பா கியூர் ஆகி உன்கிட்ட வந்துடுவாங்க உங்க அம்மா.” என அவன் தலையை தடவிவிட,

“தேங்க்யூ மேம்!” என்று அந்த சிஸ்டருக்கு நன்றி சொன்னவன், தந்தையின் அருகில் போய் நின்று கொண்டான்.

நந்தினி, கொடியின் ஒரு பக்கம் அவள் கையைப் பிடித்தபடி நின்றிருக்க, அந்தப் பெண்மணி கொடியிடம் ஏதேதோ பேசியபடியே தன் வேலையை செய்து கொண்டிருந்தார்.

உள்ளே நுழைந்ததிலிருந்து இளங்கோ மனைவியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் பயத்தின் ரேகைகள் கொஞ்சமும் தென்படவில்லை. அனைத்தையும் எளிதாக ஏற்க சித்தமாகி இருந்தாள்.

கத்தரிகோலால் இரண்டு பக்கமும் அவள் முடியை வெட்டிய நொடி, அதைக் காண சகிக்காதவன் தலையைக் குனிந்து கொண்டான். அவள் தலைமுடியில் ட்ரிம்மரை வைக்கும் போது அவன் உயிர் அடங்கி துடித்தது.

கீழே குனிந்து இருந்தவனின் கண்களில் இருந்து சொட்டு சொட்டாக கண்ணீர் பூமியில் விழுந்தது. பல நினைவுகள் வந்து அவனை பலமாக தாக்கியது.

எத்தனை இரவுகள் கூடலின் முடிவில், அந்த கூந்தலில் வாசம் பிடித்து கிறங்கி கண் மூடியிருந்தேன். எத்தனை பொழுதுகள் அந்த கூந்தல் என் மார்பில் பரந்து விரிந்து கிடக்க, என் தோள்களில் சாய்ந்து சுகமான தூக்கம் கொண்டிருந்தாள்.

நினைக்க நினைக்க அவனையும் மீறி அழுகை வந்தே விட்டது. இப்போது கொடியின் பார்வை முழுவதும் கணவனிடத்தில்தான்.

அவன் கண்களில் இருந்து பூமியில் விழுந்த கண்ணீரும், அவன் அடக்க அடக்க வெளிவந்த கேவலுமே சொன்னது அவனின் மனப்போராட்டத்தை.

இளங்கோவின் கண்ணீர் அவளைப் பலவீனப்படுத்தும் போல இருந்தது. ஏதோ ஒரு ஆறுதலுக்காக அவன் கையை பற்றிவிடுவோமோ என்று அஞ்சியவள், பக்கத்தில் இருந்த நந்தினியின் மடிசாய்ந்து அழுதுவிட்டாள்.

யாருமில்லை அவ்விடத்தில். கொடி, கொடியை மடி தாங்கிய நந்தினி, பக்கத்திலேயே தரையை நோக்கியபடி இளங்கோ, இளங்கோவையே கவனித்த நவீன் மட்டுமே இருந்தனர். மற்றவர் அனைவருமே வெளியே சென்று விட்டனர்.

தந்தையின் அழுகை குரலில் நவீன் என்ன நினைத்தானோ? இளங்கோவை தோளோடு அணைத்து நிற்க, ஆறுதலுக்காக கூட என்னை தேடாத அளவிலா அவளை நான் நடத்தினேன் என்று நினைத்தவன், மகனின் அணைப்பில் கண்ணீர் உகுக்கலானான்.

நவீனின் தோள் குலுக்கலில் கணவன் உடைந்து விட்டதை அறிந்தவள் தொண்டையை செருமி, “ப்ளீஸ் சிஸ்டர்… சீக்கிரம் செய்யுங்க.” என்றவள்,

“இதென்ன, இன்னும் கொஞ்ச நாளில் பழையபடி வளர்ந்திட போகுது. இதுக்கு போய் ஏன் இப்படி…” என்று முடிக்கும் முன்னே அவளிடமும் ஒரு கேவல் பிறந்து விட்டது.

இவர்களின் உணர்ச்சிமயமான போராட்டத்தை கண்ட அந்தப் பெண்மணி, “சார் உங்களுக்காகவே அவங்க திரும்பி வருவாங்க, பயப்படாதீங்க. நீங்க தான் அவங்களுக்கு துணையா இருக்கணும். இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டே, இன்னும் நீங்க கடந்து வரவேண்டிய காலம் எவ்வளவோ இருக்கு. சோ அதுக்கெல்லாம் உங்களையும் தயார் படுத்திக்கோங்க, அவங்களையும் தயார் படுத்துங்க. ஷீ இஸ் எ வெரி பிரேவ் உமன்.” என கொடியைப் பாராட்டி, அனைத்தையும் முடித்து அவளுக்கு ஒரு தொப்பியையும் அணிவித்து அனுப்பினார்.

திக் திக் நிமிடங்களாக கடந்தது கொடியின் கீமோதெரபி நேரம். அனைவரும் மிகவும் பயந்து போயிருந்தனர். என்னதான் வெளியே தைரியமாகக் காட்டிக்கொண்டாலும், கொடிக்குள்ளும் அத்தனை பயம்.

மனைவியின் விழியில் தெரிந்த பயத்தின் ரேகைகளை கண்டுகொண்டவன், அங்கிருந்த யாரையும் கணக்கில் கொள்ளாமல் அருகில் சென்றான். அதனைக் கண்ட சங்கரும் இதற்குமேல் வீம்பு பிடிக்க வேண்டாமென்று நினைத்தாரோ என்னவோ? பேரப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியேறிவிட, நந்தினியும் கணேசனும் வெளியில் வந்துவிட்டனர்.

அருகில் வந்துவிட்டானே தவிர, அவளிடம் எப்படி நெருங்குவது என தெரியாமல் சில நொடி நின்றவன் அடுத்த நொடி, “பூம்மா…!” என்றான் ஆதுரமாக.

கணவனின் ஆதுரமான அழைப்பு மூளையை எட்டியது. ஆனால் மனதை சென்றடையவில்லை. அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவள் நிலையும் கோவமும் மெழுகாய் மனதை தீயிட்டு உருகி பிழிய, தாளமுடியாமல் இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் முகம் முழுக்க அவன் தோள்களிலேயே புதைந்துபோக இறுகிக் கிடந்தாள்.

மனைவியின் முதுகை மென்மையாக வருடிவிட்டவன், “எல்லாம் சரியாகிடும் பூம்மா… எதைப் பத்தியும் கவலைப்படாதே. இனி உன் நினைப்பெல்லாம் சீக்கிரம் சரியாகி வந்து என்கூட சண்டை போடுறதுலதான் இருக்கணும்.

வேற எதைப் பத்தியும் நீ யோசிக்க வேண்டாம். எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் சரிதானே?” என்று கேட்டவன் அவளை விலக்கி நெற்றியில் முத்தமிட்டான்.

அவளுடைய வெறுமையான முகம் அதிக கவலையைக் கொடுத்தாலும் வெளிக்காட்டாது அணைத்தபடியே நின்றிருந்தான்.

இரண்டு நர்ஸ்கள் வந்து கீமோவிற்கு அவளை அழைத்துச்சென்றனர். ஒவ்வொரு நொடியும் யுகங்களாக கடந்தது அனைவருக்கும்.

ஒரு வழியாக அவளை அறைக்கு மாற்றியவர்கள், “நாளைக்கு ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் மிஸ்டர் இளங்கோ. ஃபர்ஸ்ட் டைம்தான் பயம். அடுத்து அடுத்து பழகிடும். நெக்ஸ்ட் கீமோ முடிஞ்சு டூ வீக்ஸ்ல சர்ஜரி ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். பில் டீடைல்ஸ் எல்லாம் ரிசப்சன்ல கேட்டுக்கோங்க. நீங்க ஓகே சொல்லிட்டா, சர்ஜன் அப்பாய்ட்மென்டை கன்ஃபார்ம் பண்ணிடலாம். அவர் சென்னைல இருந்து வரணும்.” என மருத்துவர் கூற,

“ஓகே சார், நீங்க கன்ஃபார்ம் பண்ணிடுங்க. சர்ஜரி முடிஞ்சு எத்தனை நாள் இருக்குற மாதிரி இருக்கும்?” என கேட்க,

“டூ வீக்ஸ் கண்டிப்பா இருக்கணும். அடுத்து ஃபிப்டீன் டேஸ் ஒன்ஸ் செக்கப் ஃபோர் டைம்ஸ் வரமாதிரி இருக்கும். அடுத்து மந்த்லி செக்கப்தான். சிக்ஸ் மந்த்ஸ் கழிச்சு ஸ்பீச் தெரப்பி கொடுப்போம். அதுவரை பேச ட்ரை பண்ண வேண்டாம். நான் சொல்லும் போது ஸ்டார்ட் பண்ணா போதும்.” என மருத்துவர் முடிக்க, இளங்கோவும் கணேசும் அனைத்தையும் கேட்டுக்கொண்டு வெளியில் வர, அனைவர் முகத்திலும் ஒரு ஆசுவாசம்.

சங்கர் தன் இறுக்கம் தளர்ந்து சேரில் சாய்ந்திருக்க, அவர் மடியில் படுத்து உறங்கியிருந்தான் நவீன். ஒருபக்கம் கையில் புத்தகத்தோடு நந்தினியின் தோளில் சாய்ந்தபடி உறங்கியிருந்தாள் நர்த்தனா.

“இளா நீ இரு, நான் போய் எல்லாருக்கும் காபி வாங்கிட்டு வரேன்.” என கணேசன் நகர்ந்திட, மகளுக்கு அருகில் அமர்ந்தவன் தங்கையிடமிருந்து மகளைத் தன் தோளில் சாய்த்து, புத்தகத்தை நந்தினியின் மடியில் வைத்துவிட்டு, அப்படியே கண் மூடி சாய்ந்து அமர்ந்தான் இளங்கோ.

ஓர் ஆணின் உச்சக்கட்ட கர்வத்தை

அவனுக்கு பிடித்த பெண்ணின் சிறு உதாசினம்

தரை மட்டம் ஆக்கிவிடும்!

***

You may also like

1 comment

M. Sarathi Rio July 29, 2026 - 3:08 pm

Very Interesting

😢😢😢
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured