தூரம் 27
அன்று நர்த்தனாவின் பள்ளியில் இருந்து இளங்கோவிற்கு அழைப்பு வந்திருந்தது. யோசனையோடு செல்லை எடுத்தவனுக்கு அவர்கள் கூறிய செய்தியில் சர்வமும் ஒடுங்கிவிட்டது.
மகளைப் பற்றி என்றாலே இப்போதெல்லாம் பயம் தன்னால் அவன் இதயத்தை இறுக்கிப் பிடிக்கிறது. சீனி சாரிடம் விஷயத்தை கூறி பர்மிஷன் வாங்கியவன், வேக வேகமாக பள்ளிக்குச் சென்றான்.
நவீனும் நர்த்தனாவும் ஆஃபீஸ் அறையின் வெளியில் அமர்ந்திருக்க, நர்த்தனாவின் முகம் பயத்தில் வெளுத்துப் போயிருந்தது.
பிள்ளைகளிடம் சென்றவன், “என்னம்மா என்ன, என்னாச்சு நவீ?” என இருவரையும் பார்த்து பதட்டமாக கேட்க,
“ப்பா, நான் எந்த தப்பும் பண்ணலப்பா, என்னை நம்புங்கப்பா.” என பிரச்சனை என்னவென்றே சொல்லாமல் அழ, அவளை தட்டிக்கொடுத்தபடியே மகனைப் பார்க்க, அவன் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டான்.
கேட்ட இளங்கோவிற்கு அடக்க முடியாதளவிற்கு கோபம். ஆனால் இப்போது கோபப்பட முடியாத சூழல். ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முதலில் பார்க்கலாம் என, ‘தான் வந்துவிட்டதை’ பியூன் மூலம் சொல்லி அனுப்பினான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவரையும் உள்ளே அழைக்க, மகனை வெளியே நிறுத்திவிட்டு மகளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் இளங்கோ.
நர்த்தனாவின் வகுப்பாசிரியரும் கூடவே இரண்டு மாணவிகளும் நிற்க, யோசனையாகவே அவர்களைப் பார்த்தான்.
“உக்காருங்க மிஸ்டர் இளங்கோ, உங்க பொண்ணு இந்த அகாடமில எக்ஸாம் எழுதணுமா, வேண்டாமா?” என எடுத்ததுமே காரமாக பேசினார் பள்ளியின் தலைமையாசிரியை.
“மேம், ஃபர்ஸ்ட் என்ன பிரச்சனைனு சொல்லுங்க, எதுவுமே சொல்லாம நீங்க இப்படி பேசினா நான் என்ன புரிஞ்சிக்க முடியும்?” எரிச்சல் வந்தாலும் மிகவும் பொறுமையாகவே கேட்டான் இளங்கோ.
“எக்ஸாம் ஹால்ல உங்க பொண்ணு பிட் அடிச்சுருக்கா. அவளை டீச்சர் கையும் களவுமா பிடிச்சிருக்காங்க. இந்த பசங்களும் பார்த்திருக்காங்க, ஆனா உங்க பொண்ணு ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்க.” என பொறுமையின்றி பேச,
உடனே இளங்கோ மகளைப் பார்த்தான். “இல்லப்பா, பிராமிஸா இல்லப்பா…” என நர்த்தனா அழ ஆரம்பித்துவிட்டாள்.
“ஓகே மேம்… இப்போ நீங்க என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் எனக்கு ஓகே தான். ஆனா நீங்க எனக்கு ஒரு ஃபேவர் பண்ணணும். இந்த ஸ்கூல்ல இருக்கிற எல்லா கிளாஸ் ரூம்லயும் சிசிடிவி கேமரா இருக்குதானே? இவங்க கிளாஸ் சிசிடிவி கேமரா ஃபுட்டேஜை நான் பாக்கணும்.” என்றான் நிதானமாக.
“நோ… நோ… சேர்மன் பர்மிஷன் இல்லாம அதெல்லாம் செய்ய முடியாது. நாங்க தான் எவிடன்ஸ் வச்சிருக்கோமே, அப்புறமும் உங்களுக்கு டவுட் வருதுன்னா நான் என்ன பண்ண?” என இப்போது கிண்டல் குரலில் கேட்டவரை வெற்றுப் பார்வை பார்க்க முடியாமல் போனது அவனுக்கு.
தன் பொறுமை, நிதானம் அனைத்தையும் இழந்த இளங்கோ, “நீங்க என்ன சொன்னாலும் கேட்டுட்டு பொறுமையா போக முடியாது. என் பொண்ணோட லைஃப் அண்ட் ஃபியூச்சர் இதுல இருக்கு. நான் கேட்டதை நீங்க செஞ்சுதான் ஆகணும்.” என்றான் கோபமாக.
“சார் நான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன், நீங்க உங்க லிமிட்டை தாண்டி பேசிட்டு இருக்கீங்க. சேர்மன் பர்மிஷன் இல்லாம நாங்க ஒன்னும் பண்ண முடியாது.” என அந்த தலைமையாசிரியையும் கத்த ஆரம்பித்தார்.
“ஓ… அப்படியா? ஓகே.” என்றவன் உடனே சீனி சாருக்கு அழைத்து நடந்ததைக் கூறினான். அவரும் அந்த பள்ளியின் சேர்மனும் நண்பர்கள் என்பதால்தான், இந்தப் பள்ளியிலேயே சேர்த்தான். அவர் உடனே அந்தப் பள்ளியின் சேர்மனுக்கு அழைத்து நடந்ததை விளக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் சேர்மனிடமிருந்து தலைமையாசிரியருக்கு அழைப்பு வந்தது.
அந்த பக்கம் என்ன பேசினாரோ, தலைமையாசிரியரின் முகம் பதட்டத்தைக் காட்டியது.
அங்குள்ள ஆஃபீஸ் அறைக்கு இளங்கோவையும் வகுப்பாசிரியரையும் அழைத்துச் சென்றவர், சிசிடிவி வீடியோவை ஆராய, அதில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்த இளங்கோவிற்கு ரத்தம் கொதித்தது.
வேகமாக திரும்பி வகுப்பாசிரியரை முறைத்தவன், அதே கோபத்தோடு தலைமையாசிரியரையும் முறைத்தான்.
“இதுதான் நீங்க விசாரித்த லட்சணமா? உங்க ஸ்கூல் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு. அடுத்த வருஷம் நான் வேற ஸ்கூல் மாத்திக்கிறேன். இனி இந்த ஸ்கூல் என் பையனுக்கும் பொண்ணுக்கும் வேண்டாம்.” என்று இருவரையும் முறைத்தபடியே கூறியவன், பிள்ளைகளுக்கு லீவு சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான்.
அங்கு தலைமையாசிரியர், வகுப்பாசிரியரைப் பிடித்து சத்தம் போட்டவர், உடனே அந்த சாட்சி சொன்ன மாணவிகளின் பெற்றோர்களையும் வரவைத்து விட்டார்.
நடந்தது என்னவென்றால், நர்த்தனாவின் முன்னும் பின்னும் இருந்த இரு மாணவிகளும் பிட் பேப்பரை கை மாற்றும் போது, சரியாக நர்த்தனாவின் பெஞ்சின் கீழே அது விழுந்துவிட்டது. அதே நேரம் ஆசிரியரும் அங்கு வந்துவிட, அந்த பிட் பேப்பரை நர்த்தனாதான் வைத்திருந்தாள் என நினைத்து திட்ட, அந்த மாணவிகளும் அவள்தான் அதைப் பார்த்து எழுதினாள். நாங்கள் பார்த்தோம் என தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவள் மேல் பழியை சுமத்த, அதை நம்பிய ஆசிரியரும் தலைமையாசிரியரிடம் அழைத்துச் சென்றுவிட்டார்.
பள்ளி நிர்வாகத்தை நினைத்து எரிச்சல் வந்தது இளங்கோவிற்கு. பயந்து போயிருந்த மகளை சமாதானம் செய்யவே பெரும்பாடாகிப் போனது. இதற்கு சில நாட்கள் முன்புதான் ஒரு பிரச்சனையில் இருந்து அவளை வெளிக்கொண்டு வந்தான். அதற்குள் மற்றொன்றா என பைத்தியமே பிடித்தது அவனுக்கு.
***
கொடியின் இரண்டாவது கீமோ செய்யும் நேரம் யாரையும் அழைத்துச் செல்லவில்லை இளங்கோ. சங்கர், நந்தினி, அவன் என மட்டுமே சென்றிருந்தார்கள்.
முதல் நாள் தான் சுப்பு அழைத்துச் சொன்னார், நர்த்தனாவிற்கு காய்ச்சல் என்று. எனவே மகளிடமும் பேசினான். மகனிடமும், ‘அக்காவைப் பார்த்துக்கொள்’ என்று கூறிருந்தான்.
மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு உடனே ஊருக்கு வந்திருந்தான். இருவருமே பள்ளிக்கு செல்லவில்லை. மகளுக்குத் துணையாக நவீனும் வீட்டில்தான் இருந்தான்.
அவன் வீட்டிற்குள் நுழையும் நேரம் சந்திராவும் சுப்புவும் நர்த்தனாவின் அருகில்தான் அமர்ந்திருந்தனர்.
“என்னம்மா…” என்றபடியே மகளிடம் செல்ல,
“என்னனே தெரில தம்பி, பயந்து பயந்து அழறா. நைட்டெல்லாம் தூங்கவே இல்ல, அரண்டு போய் எழுந்துக்குறா. இன்னைக்கு பூசாரிகிட்ட போயி மந்திரிச்சுட்டு வந்தோம். இப்போ தான் தூங்க ஆரம்பிச்சா.” என சுப்பு கலக்கமாக கூற,
“எங்கேயாவது பயந்துருப்பாகா, இனி சரியாகிடுவா. நீங்க தம்பிக்கு காபி கொடுங்க. நான் அத்தைக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன். தம்பி, அப்பத்தா உன்னை கேட்டுட்டே இருந்துச்சு. பார்த்துட்டு கொடி எப்படி இருக்கானு சொல்லிட்டு வந்துடு.” என சந்திரா சொல்ல,
“ம், இதோ வரேன் சித்தி.” என்றவனின் முகம் யோசனைக்கு சென்றது.
மகளுக்கருகில் அமர்ந்தவன் கழுத்தில் கை வைத்து காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்க, உடலில் சூடில்லை. போர்வையை இழுத்து மூடியவன் கண்களில் பட்டது, அவள் தலையணைக்கு அடியில் வைத்திருந்த மொபைல்.
‘எந்த நேரமும் மொபைல்தான்’ என சலித்தபடி எடுக்க, அது ஆஃபாகியிருந்தது. நேற்றும் அவன் கால் செய்யும் போது ஸ்விட்ச் ஆஃப் என்றுதானே வந்தது என நெற்றி சுருங்க யோசித்தவன் மொபைலை ஆன் செய்தான்.
ஆன் செய்த அடுத்த நொடி வரிசையாக மெசேஜ் வர, யோசனையோடே அதை திறந்து பார்த்தவனின் முகம் கோபத்தில் ரத்தமென சிவந்தது. அவளின் காய்ச்சலுக்கான காரணமும் புரிந்தது.
விட்டால் இப்போதே அதன் காரணமானவர்களை அடித்து கொல்லும் அளவிற்கு கோபம் தலைக்கேறியது. ஆனால் மகளிடம் விசாரிக்காமல் செய்யக்கூடாது என, கோபத்தை அடக்கி மகள் விழிப்பதற்காக காத்திருந்தான்.
நவீன் நன்றாக உறங்கவும் அவனை தன்னுடைய அறையில் படுக்க வைத்துவிட்டு, மகளின் அறையில் வந்தமர்ந்தான்.
சில நிமிடங்களிலேயே விழித்துக்கொள்ள, தகப்பனைப் பார்த்ததும் பயம் வரவில்லை. ஒரு நிம்மதி, ஆசுவாசம், இனி அப்பா பார்த்துக் கொள்வார் என்கிற தைரியம் என்பது போன்ற உணர்வுகளை மகள் காட்டியபடியே, “ப்பா… ப்பா…” என்றாள்.
“ஏன் அம்மு, நைட் ரொம்ப நேரம் தூங்காம படிச்சியா? அதனால காய்ச்சல் வந்துடுச்சா?” என தனக்கு எதுவுமே தெரியாதது போலவே கேட்க,
“ப்பா, நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா… சாரிப்பா! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் ப்பா.” என சத்தமாக அழ,
“உஷ்ஷ்! சத்தம் வரக்கூடாது, என்ன நடந்ததுனு மட்டும் சொல்லு.” என வெளியில் யாருக்கும் கேட்காதபடி அதட்ட,
“அதுப்பா… என் ஃப்ரண்டோட அண்ணா எங்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண பார்த்தாங்க. நான்… நான்…” என்றவள் தேம்பி தேம்பி அழ,
“ம்ம் சொல்லு…” என இறுகிப்போய் கேட்க,
“ப்பா, நான் வேணும்னு செய்யலப்பா… கோபத்துல என்னோட வாட்டர் பாட்டில் வச்சு அவன் மண்டையை உடைச்சிட்டேன் ப்பா. அவனுக்கு ரொம்ப ரத்தம் வந்தது. போலீஸ்ல சொல்லிடுவாங்களா? என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்களாப்பா…?” என சொல்லி முடிக்கும் முன்னேயே அவளுக்கு மூச்சுத் திணறியது.
வேகமாக அவள் அருகில் சென்று முதுகைத் தடவி, அவளின் பஃப்பை எடுத்து வாய்க்கருகில் வைக்க, சில நிமிடங்கள் கழித்து மூச்சு சீரானது.
“நீ செஞ்சது தப்பா, சரியா?” என்றான் மகளைக் கூர்மையாக பார்த்தபடி.
“ரொம்ப சரி! அவன் எங்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண வந்தான், அதனாலதான் அடிச்சேன்.” என பயமில்லாமல் சொல்ல,
“அவ்ளோதான்! நீ செஞ்சது தப்பில்ல. அப்புறம் ஏன் இவ்வளவு பயம்? ம்ம்ம்… இனி அப்பா பார்த்துக்குறேன்.” என்றவன் மகளின் போனை எடுத்து அவளிடம் கொடுக்க,
“நான் அடிச்சதை அவனோட ஃப்ரண்ட் வீடியோ எடுத்து வச்சிருக்கான். நாளைக்கு நான் அவனுக்கு கால் பண்ணலன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டுறான்ப்பா.” என மீண்டும் அழுகைக்கு செல்ல,
“அவனை எப்படித் தெரியும்?” என நிதானமாக இளங்கோவிடமிருந்து கேள்வி வந்தது.
“அது… அது… ஃப்ரண்ட் கூட சாட் பண்ணும்போது…” என பயத்தில் திணறியபடியே சொல்ல,
“தப்பு எங்க ஆரம்பிச்சது?” என்றான் இன்னும் வெகு நிதானமாக.
“ப்பா சாரிப்பா! நான்தான் தப்பு பண்ணிட்டேன். இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் ப்பா. ப்ளீஸ்ப்பா… சாரிப்பா!” என தகப்பனிடம் கெஞ்ச, இதற்கு மேலும் அவளைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்தவன், மகளின் தலையை வருடியபடியே,
“இது மோசமான ஒரு ஜிகினா உலகம் அம்மு. இங்க யாரையும் நாம குறையோ, தப்போ சொல்ல முடியாது. நாம சரியா இருக்கணும், கவனமா இருக்கணும். அதிலும் பெண் குழந்தைகள் எப்போதுமே கவனமா இருக்கணும். நிமிர்ந்து நேரா பார்த்து பழகணும். ஒருத்தரோட பார்வையும் பேச்சும் தப்பா தெரிஞ்சா உடனே அவங்களைவிட்டு ஒதுங்கிடணும்.
அது ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி. இந்த பிரச்சனையை நான் பார்த்துக்குவேன். இதையே நினைச்சு பயந்துட்டு இருக்கக்கூடாது அம்மு. இன்னும் உன் லைஃப்ல நிறைய கடந்து வரவேண்டி இருக்கு. அப்படியே கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் ஆமா நான்தான் பண்ணேன், என்னை அவன் தப்பா பார்த்தான்னு தைரியமா சொல்லணும். நீ செய்தது தப்பே இல்லை. அதை மைண்ட்ல வச்சிக்கோ.” என மேலும் மேலும் பேசி, மகள் மனதில் இருந்த பயத்தையும் குற்றவுணர்ச்சியையும் போக்க ஆரம்பித்தான்.
ஒரே நாளில் அவள் பயத்தைப் போக்க முடியாது என்று அவனுக்கும் புரிந்தது. மெல்ல மெல்ல மாற்றலாம் என உணர்ந்தவன், அவளுக்கு அருகில் அமர்ந்து தலையை வருடிவிட்டான்.
“தூங்கு நதிமா… நான் இங்கதான் இருப்பேன்.” என சமாதானம் செய்து உறங்க வைத்தவன், மகள் உறங்கியதும் அவள் மொபைலில் இருந்த வீடியோக்களை எல்லாம், தனக்கும் வெங்கடேஷிற்கும் நடேசனிற்கும் அனுப்பினான்.
அடுத்த நொடி இருவரும் அழைக்க, “வெங்கி உன் எஸ்ஐ ஃப்ரண்ட் இருக்கானே, அவன்கிட்ட சொல்லி என்ன செய்யலாம்னு கேளு. பாப்பா பேர் எங்கேயும் வரக்கூடாது.” என்றவன்,
நடேசனிடம், “அவனை என்ன செய்யலாம்டா? படிக்கிறவனா போயிட்டான், இல்லைன்னா…” என கோபமாக கத்தினான்.
“அதுக்காக அவனை அப்படியே விட சொல்றியா? நம்ம பொண்ணு மேல கை வைச்சா என்ன நடக்கும்னு அவனுக்கு தெரியணும். நீ அட்ரஸ் மட்டும் அனுப்பு, நான் பார்த்துக்குறேன். இதுல பாப்பா பேரோ, இந்த இன்சிடென்டோ வெளிய வராது.” என நடேசனும் கோபமாக பேச,
“ண்ணா, அவனை நான் பார்த்துக்குறேன். பசங்க இருக்காங்க, கண்ணை காட்டினா போதும் முடிச்சிடுவாங்க.” என வெங்கடேஷும் சொல்ல,
“இந்த வீடியோ யார் யாருக்கிட்ட இருக்கோ, முதல்ல அதையெல்லாம் க்ளியர் பண்ணணும். அதன்பிறகு அவனை என்ன செய்யணுமோ செய்யுங்க.” என்றான் ஓய்ந்து போய்.
இளங்கோவின் இப்போதைய சூழல் புரிய, கொடியைப் பற்றி விசாரித்துவிட்டு வைத்தனர்.
சொன்னதைப் போலவே அடுத்த நாளே அனைத்தையும் முடித்திருந்தனர் சகோதரர்கள் இருவரும். அந்த பையனை மட்டுமல்ல, அவனின் பெற்றோரையும் தூக்கியவர்கள் வீடியோ பற்றி விசாரிக்க, அவனோ பயந்தபடியே தன்னிடம் மட்டும்தான் இருக்கிறது என கூற, அவனிடமிருந்த அனைத்தையும் அழித்தவர்கள் மொபைலையும் உடைத்து, பெற்றோர் முன்னேயே அவனையும் நொறுக்கி அனுப்பி வைத்தனர்.
பொறுக்கி தறுதலையை பிள்ளையாக பெற்றால் இதையெல்லாம் பார்த்து தானே ஆகவேண்டும் என, மகனை நினைத்து நொந்தபடியே அவனை மருத்துவமனையில் சேர்க்க, அள்ளிக்கொண்டு அந்த இடத்தை காலி செய்தர்கள் அந்த நாயின் பெற்றோர்கள்.
அடுத்தடுத்த நாட்களில் மகளின் பயத்தை மொத்தமாக போக்கி, இதைப்பற்றி யாரிடமும் பேசக்கூடாது, முக்கியமாக கொடியிடம் என உறுதியாகக் கூறி பள்ளிக்கு அனுப்பினான்.
அதையெல்லாம் மறந்து இப்போதுதான் சாதாரணமாக இருக்கிறாள், மீண்டும் ஒரு பிரச்சினையா என தலை வெடித்தது.
புதிதாக தோன்றும் ஒவ்வொரு நெருக்கடியும் தட்டி கழிக்காமல் சந்திப்பதே, முதிர்ச்சியின் அடையாளம். இளங்கோ முதிர்ச்சி அடைய ஆரம்பித்துவிட்டான்.
அவன் பிள்ளைகளுடன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே சீனிசாரும் அழைத்து பேசியிருக்க, அவனும் சற்று கோபத்தைக் குறைத்தான் எனலாம்.
ரிவிசன் எக்சாம் முடிந்து நர்த்தனாவின் பொதுத் தேர்விற்கு, இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தது.
ஸ்டடி லீவில் இருந்ததால் மகளை அழைத்து வந்து மனைவியிடம் விட்டிருந்தான் இளங்கோ.
முதல்நாள் தான் சந்திராவும் சுப்புவும் நவீனுடன் வந்து கொடியை பார்த்துச் சென்றிருந்தனர்.
மொபைலை தொடக்கூட இல்லாமல் புத்தகமும் கையுமாக இருக்கும் மகளை யோசனையாக பார்த்தாள் கொடி. மகளிடம் நிறைய மாற்றங்கள். புதிதாக குடிவந்த அமைதி. எதுவும் பிரச்சனையோ? வழக்கம் போல தன்னிடம் மறைக்கிறார்களோ என மனதை போட்டுக் குழப்பிக் கொண்டாள்.
பெண்பிள்ளைகள் சந்தோஷமாக இருந்தால் அவங்க பேசுவதை யாராலும் நிறுத்த முடியாது. அதே அவங்க சோகமாக இருந்தால் யாராலும் பேச வைக்க முடியாது என, கொடிக்கும் தெரியாதா என்ன? ஆனால் அம்மாவால் முடியாதது அகிலத்தில் உண்டா?
***
1 comment
Very, Very Interesting
😌😌😌
CRVS (or) CRVS 2797