தூரம் 28
“உட்காருங்க மிஸ்டர் இளங்கோ…” என்ற மருத்துவரை குழப்பமாக பார்த்தபடியே அமர்ந்தான் இளங்கோ.
“சொல்லுங்க டாக்டர், சடனா வரச் சொல்லவும் கொஞ்சம் பயமா இருக்கு. கொடிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என பயந்தபடியே கேட்க,
“நோ… நோ மிஸ்டர் இளங்கோ. ஆக்சுவலி உங்களுக்கு ஒரு குட் நியுஸ்தான் சொல்லப் போறேன். சோ டோன்ட் பேனிக்.” என்று இளங்கோவை சமாதானப்படுத்தியவர்,
“என்னோட ஃப்ரண்ட் கனடாவில இருந்து டெல்லி எய்ம்ஸ்க்கு ஒரு கேஸ்க்காக வந்துருக்கார். அவருக்கு உங்க வொய்ஃப்போட ரிபோர்ட்ஸை அனுப்பினேன். அவரோட ஒபினியன் என்னனா, உங்க வொய்ஃப்க்கு சர்ஜரியே வேண்டாம்னு சொல்றார். கீமோவிலேயும் ரேடியேஷன்லயுமே அவங்க நல்லா ரெகவர் ஆகிட்டு வராங்க. இனி சர்ஜரி செய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு சொல்றார்.” என்றபடி இளங்கோவைப் பார்க்க, அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கண்கள் கூட கலங்கிப் போனது. “என்ன சொல்றீங்க டாக்டர்…” என்றவனின் குரல் வெளியே கேட்கவே இல்லை.
“எஸ் இளங்கோ, செகண்ட் கீமோக்கு அப்புறம் அவங்களுக்கு நல்ல இம்ப்ரூவ்மென்ட். டெஸ்ட் பண்ணதுல பெட்டரா கியூராகிட்டு வராங்க. செல்ஸ் கவுன்டும் நார்மலா இருக்கு.” என்றதும்,
“பட் இது சாத்தியமா டாக்டர்? சர்ஜரி அட்வைஸ் பண்ணிட்டு இப்போ தேவையில்லன்னா எல்லாருமே பயப்படுவாங்க. குழம்பவும் செய்வாங்களே…” என இளங்கோ சந்தேகமாக கேட்க,
“நீங்க கேட்குறதும் சரிதான் இளங்கோ. இவங்களுக்கு ஸ்டார்டிங் ஸ்டேஜ்தான். அண்ட் வேற எந்த ஹெல்த் இஸ்ஸூசும் இல்லை. அண்ட் சர்ஜரி செய்யாமலே கீமோல கியூர் பண்ற டெக்னாலஜி எல்லாம் வெளிநாடுகள்ல இருக்கு. ஏன் நம்ம எய்ம்ஸ்ல கூட இருக்கு. இன்னும் இங்க வரல. ரீசன் பெருசா ஒன்னுமில்ல, டாக்டர்ஸ் ரிஸ்க் எடுக்க மாட்டேங்குறாங்க.” என்றவர்,
“டூ டேஸ் அவர் அங்கதான் இருப்பார். நாளைக்கு ஈவ்னிங் அவர் கூட எனக்கொரு மீட்டிங் இருக்கு. நீங்களும் உங்க வொய்ஃப்பை கூப்பிட்டுகிட்டு வாங்களேன். அவர்கிட்ட ஒரு ஒபினியன் வாங்கிக்கலாம். அவர்கிட்ட பேசினா உங்களுக்கும் நிறைய டவுட்ஸ் கிளியராகலாம்.” என்றதும்,
“ஸுயர் டாக்டர்! பட் கொடி ட்ராவல் பண்ணலாமா? அது ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என இளங்கோ கேட்கவும்,
“நோ… நோ… அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு அட்ரஸ், மத்த டீடைல்ஸ் எல்லாம் நான் அனுப்பி வைக்கிறேன். எனி டவுட்ஸ் நீங்க எப்போ கேட்டாலும், நான் க்ளியர் பண்றேன். டெல்லில பார்க்கலாம்.” என அவனுக்கு விடை கொடுக்க, அவனும் அவரிடமிருந்து மகிழ்ச்சியாகவே விடைபெற்றான்.
நடேசனுக்கு அழைத்து கூறியவன், “உனக்கு லீவ் இருக்குமாடா? ராசாத்தியும் வருவா.” என கேட்க,
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீங்க எந்த ஃப்ளைட், என்ன டைமிங்னு மட்டும் சொல்லிடு. நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” எனவும்,
“சரிடா, உனக்கு இங்க இருந்து என்ன கொண்டு வரணும்? சித்திக்கிட்ட சொல்லிடுறேன்.” என இளங்கோ கேட்டதும்,
“அதெல்லாம் வேண்டாம், நாங்களே அங்க வர ப்ளான்ல தானே இருக்கோம். நீங்க வாங்க, பார்த்துக்கலாம்.” என போனை வைத்துவிட்டான்.
அடுத்து இளங்கோ நேராக சென்றது மனைவியிடம்தான். கணவனின் வருகை கொடியை யோசிக்க வைக்க, “ராசாத்தி ஒரு காபிடா, பயங்கர தலைவலி.” என நெற்றியை நீவியபடி அமர்ந்திருக்க,
சற்று நேரத்தில் சங்கர், கணேசன், நடராஜ் என அனைவரும் வந்துவிட, இப்போது எல்லோரையும் குழப்பமாக பார்த்தாள் கொடி.
“என்ன இளா…” என கணேசன் ஆரம்பிக்க, மருத்துவர் கூறிய அனைத்தையும் கூறியவன், “நாளைக்கு மார்னிங்கே கிளம்பணும் அண்ணா.” என்றான் மிதமிஞ்சிய தவிப்புடன்.
கேட்ட அனைவருக்கும் அப்படியொரு நிம்மதி. இன்றைய காலத்தில் சர்ஜரி என்பது சாதாரணமாக நடக்கக் கூடியதுதான். அது அடுத்தவருக்கு. அதே தன்வீட்டிலோ, தனக்கு தெரிந்தவர்களுக்கோ எனும் போது, உண்டாகும் பயத்தை சொல்லில் வடிக்க முடியாது இல்லையா?
“மாமா உங்களால் வர முடியுமா? அங்க நடேசன் இருக்கான், பிரச்சினை இல்ல. என்ன செய்யலாம்?” எனவும்,
“ஹான் வரேன்… நானும் வரேன், போகலாம்.” என்று விட்டார் சங்கர். அவருக்கு மகளின் வலி குறைந்தால் போதும் என்ற நிலைதான்.
மனைவியிடம் வந்தவன், “நான் பாப்பாவை விட்டுட்டு, நம்மளோட ஐடி ப்ரூஃப் எல்லம் எடுத்துட்டு வந்துடுறேன். நீங்க ரெடியா இருங்க. மார்னிங் ஃபைவ் தர்டிக்கு ஃப்ளைட். வந்ததும் அப்படியே கிளம்பத்தான் சரியா இருக்கும்.” என்றவன் அவள் பதிலுக்காக நிற்க, மனைவி அமைதியாகவே இருக்கவும் இதயம் வலித்தாலும், ஒன்றும் சொல்லாமல் மகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினான்.
நந்தினி, சந்திராவிற்கு அழைத்து என்ன என்ன கொடுத்துவிட வேண்டும் என கூறியவள், நடேசனுக்கும் அழைத்துப் பேசினாள். அவள் போனை வைத்த நேரம் சரியாக வெங்கட்டும் அழைக்க, அவனிடமும் நாளை டெல்லி போவது பற்றி பேசிவிட்டு,
“நீயும் வரியா வெங்கி? நாம எல்லாம் ஒன்னா இருந்து எவ்ளோ நாளாச்சு…?” என குரல் கம்ம சொல்ல, கேட்டவனுக்கு மனம் உருகிப்போனது.
இந்த பிரச்சனையில் தங்கை தனிமையை உணர்கிறாள் என்று புரிந்து கொண்டவன், “ஓ… எஸ் போலாமே… நீ கேட்டு நான் இல்லன்னு சொல்வேனா? இளங்கோ கூட நானும் வந்துடுறேன்.” என்று வைத்தவன், இளங்கோவிற்கு அழைத்து அவனும் வருவதாக கூறிவிட்டான்.
மனைவி, பிள்ளைகளை கொண்டு வந்து லட்சுமிபுரத்தில் விட்டவன், இளங்கோவுடன் கிளம்ப ஆயத்தமானான். வனிதா இருப்பதால் சுப்புவும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டார்.
ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து, ஐவரும் டெல்லி விமானத்தில் ஏறினர். அடுத்த நான்கு மணி நேரத்தில் டெல்லி விமான நிலையத்தில் இருந்தனர்.
நடேசனும் இவர்களுக்காக காத்திருக்க, நந்தினியைப் பார்த்ததும் அணைத்துக்கொண்டான். அவளோ அவனை முறைத்துவிட்டு வெங்கட்டையே ஒட்டி நடக்க, அதைப் பார்த்த எல்லோருக்கும் சிரிப்பு.
மூவரில் நந்தினி வெங்கட்டிடம்தான் அதிக நெருக்கம். இளங்கோவைப் பார்த்து வளர்ந்ததால் நடேசன், இளங்கோவின் கார்பன் காபி. ஆனால் வெங்கட் மிகவும் ஜாலி டைப். அனைத்தையும் ஈசியாக எடுத்து செல்பவன், அதனாலே அவனிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.
மிலிட்டரி குவார்டஸ் என்பதால் பலத்த பாதுகாப்பு. அதோடு நடேசனும் கேப்டன் கேடரில் இருக்க, மரியாதையும் அதிகம். நடேசனுக்கு கொடுக்கும் மரியாதையை விழி விரிய பார்த்த கொடியின் விழிகள், தன்னாலே கணவனைப் பார்த்தது.
அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். மனைவியின் விழி பாஷை புரிந்தவன், “எனக்கு வருத்தமெல்லாம் இல்ல. நீ இதையெல்லாம் யோசிக்காத, இதுக்கு நீ காரணமும் இல்ல.” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூற, ஆனாலும் அவள் விழிகளில் தவிப்பு அப்படியேதான் இருந்தது.
“ம்ச்! பூம்மா… நான் இப்போ ஒர்க் பண்றது இதைவிட பெரிய கேடர்தான். ரெண்டுமே சென்ட்ரல் கவர்மென்ட் ஜாப்தான். கண்டதையும் யோசிச்சு டென்சன் ஆகாத, ஃப்ரீயா விடு.” என்றான் மீண்டும் மெல்லிய குரலில். ஆனால் அவளுக்குத்தான் மனசே கேட்கவில்லை.
அவள் மனம் எதை எதையோ யோசித்து எங்கெங்கோ பயணித்தது. ஒரு வழியாக வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்து, சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க வைத்து, நந்தினியையும் சங்கரையும் குழந்தைகளுடன் விட்டுவிட்டு, மற்றவர்கள் மட்டும் ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.
நடேசன் இருந்ததால் சுலபமாக அவர்களால் உள்ளே செல்ல முடிந்தது. அதோடு இவர்களுக்கு முன்பே அந்த மருத்துவரும் வந்திருக்க, மனைவியை அழைத்துக்கொண்டு இளங்கோ மட்டும் உள்ளே சென்றான்.
வெளியில், “ராசாத்தி குரலே சரியில்ல, நேத்து எங்கிட்ட பேசும் போதே அழுத மாதிரி இருந்தது.” என்றான் வெங்கட்.
“கல்யாண பேச்சு எடுத்ததில் இருந்து அப்படித்தான் இருக்கா. இளாக்கிட்ட வீட்டோட மாப்பிள்ளைனா ஓகேன்னு சொல்லிருக்கா. அது எப்படி சரியா வரும், யார் வந்து இருப்பா?” என்றான் நடேசன் கவலையாக.
“நான் வந்ததே இதைப் பத்தி பேசத்தான். ராசாத்தி இப்படி சொல்றான்னு இளா சொன்னதுமே நான் மாப்பிள்ளை வீட்டுல பேசிட்டேன். அந்த பையனுக்கு இவளை ரொம்ப பிடிச்சிருக்கும் போல, அதனால என்ன? நான் வந்து இருக்குறேன், மோஸ்டா வொர்க் ஃப்ரம் ஹோம்தான் இருக்கும். மேனேஜ் பண்ணிக்கிறேன்னு சொல்றான். அவங்க வீட்டுலயும் சரின்னுதான் சொல்றாங்க. இப்போ இவளை எப்படி கன்வின்ஸ் பண்றது?” என வெங்கட் கேட்க,
“பேசலாம் மாமா, இப்படியே விட முடியாதுல்ல… அப்புறம் நாங்களும் இங்கேயே இருக்கப் போறதும் இல்ல. அடுத்து இவருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆனா எங்களை ஊர்ல விட்டுட சொல்லிருக்கேன். அத்தையும் பாவம் தானே? ரொம்ப நாளா தனியா கஷ்டப்படுறாங்க. இவருக்கும் இன்னும் ஏழு வருஷம்தான் இருக்கு…” என நடேசனின் மனைவி கூற நடேசனும் ஆமாம் என்றுவிட,
“அப்போ இன்னைக்கே நந்தினிகிட்ட பேசலாம். எப்படியும் அண்ணி அவக்கிட்ட பேசிருப்பாங்க. சோ நாம பேசினா கொஞ்சம் மனசிறங்க வாய்ப்பிருக்கு.” என்றான் வெங்கட்.
உள்ளே கொடியை மீண்டும் ஒருமுறை செக் செய்தவர், அவளுடைய ரிப்போர்ட்சையும் பார்த்துவிட்டு, “வெல் குட்! இம்ப்ரூவ்மெண்ட் மிஸஸ் பூங்கொடி. சர்ஜரி நாட் நெசசரி…” என்று இருவரின் பயத்தையும் போக்கினார்.
பின், “இந்த மொட்டை போடுறதும் தேவையில்லைதான், பட் முடி உதிர்தலைப் பார்த்து பேஷன்ட் பயந்துக்குவாங்க. அவங்களோட தன்னம்பிக்கையை இழந்திருவாங்கனு தான் மோஸ்ட் ஆஃப் டாக்டர்ஸ் மொட்டை போட சொல்றாங்க. இப்போ இவங்களுக்கு எடுத்த இரண்டு கீமோ ரேடியேஷனே போதும். அவங்களோட பிளட் செல் கவுண்ட் இம்ப்ரூவ் ஆகியிருக்கு.
அவங்க மூக்கில் இருந்து குடலுக்கு ஒரு டியூப் கொடுத்து இருப்பாங்க இல்லையா? அதனாலதான் அவங்களால பேச முடியாது. ஒரு 3 மந்த்ஸ்ல அவங்களால நார்மலா பேச முடியும். சாப்பிடுறதும் ஃபர்ஸ்ட் இனிப்பு சுவை தெரியும். அடுத்த மூனு மாசம் கழிச்சு மத்த சுவை எல்லாம் தெரியும். இதை நீங்க சர்ஜரி செய்தால் குரல் வர வாய்ப்பு ரொம்ப குறைவு. என்னதான் ஸ்பீச் தெரப்பி எல்லாம் எடுத்தாலும், கன்ஃபார்மா குரல் வந்துடும்னு எங்களால சொல்ல முடியாது.
பெட்டர், நீங்க இன்னொரு கீமோ மட்டும் பண்ணிடுங்க. மெடிசன் கண்டினியூ பண்ணுங்க, செக்கப் அண்ட் டயட் ஃபாலோ பண்ணுங்க. சீக்கிரம் குணமாகி பழைய மாதிரி ஆகிடுவீங்க.” என அந்த மருத்துவர் நம்பிக்கையாக பேசவும் தான் இளங்கோவிற்கு அவன் பயமே தெளிந்தது.
அதன்பிறகு அவள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை கவனித்தவர், சில மருந்துகளையும் மாற்றி எழுதிக் கொடுத்து அவர்களை அனுப்ப, இரண்டு மருத்துவர்களுக்கும் நன்றி சொல்லி வெளியே வந்தனர் இருவரும்.
இவர்கள் வெளியே வருவதை முதலில் பார்த்தது வெங்கடேஷ்தான்.
அவன் மற்றவர்களிடம் கூற அனைவரும் கொடியிடம் வந்தனர். அவர்களிடம் மருத்துவர் கூறியதை எடுத்து சொல்ல, அதைக் கேட்ட அனைவருக்கும் அவ்வளவு நிம்மதி, மகிழ்ச்சி.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற அந்த பழமொழி தான் அனைவருக்கும் ஞாபகம் வந்தது.
அங்கிருந்து வீட்டிற்கு வந்தவர்கள் சங்கரிடமும் நந்தினியிடமும் அனைத்தையும் கூறிவிட, மகள் அமர்ந்திருந்த சோபாவிலேயே சங்கரும் அமர்ந்துவிட்டார். மகளுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என்ற வார்த்தை அவரை வெடிக்க வைத்தது.
மகளின் கைகளால் தன் முகத்தை மூடி தேம்பிவிட்டார். அவரைப் பார்த்து கொடியும் அழ, மனைவியின் மற்றொரு பக்கம் இளங்கோ அமர்ந்து அவளை சமாதானம் செய்ய, நடேசனும் வெங்கடேசனும் சங்கரை சமாதானம் செய்தனர்.
அடுத்து அனைவரையும் சாப்பிட வைத்து அவரவருக்கான அறைகளை ஒதுக்கிவிட்டு, நந்தினியுடன் வெளியில் வந்தான் நடேசன். இவர்களுக்காகவே நடேசன் மனைவியும் வெங்கடேசனும் காத்திருந்தனர்.
சாதாரண பேச்சுக்களைத் தொடர்ந்து நந்தினியின் திருமண பேச்சு வந்தது. முன்பெல்லாம் எடுத்ததும் வேண்டாம் என்று சொல்பவள் இப்போது அமைதியாக இருக்க, அதுவே அவர்களை பேசத் தூண்டியது.
வெங்கிதான், “என்னதான் ஓடுது உன் மண்டையில? உனக்கே தெரியும், நாங்க யாரும் உன்னை அப்படியே விடமாட்டோம் என்று. பின்ன ஏன் உனக்கு இந்த வீம்பு? இன்னும் நீ பழசை மறக்கலையா?” என மிகவும் பொறுமையாக கேட்டான்.
“அது… எனக்கு இந்த மேரேஜ் லைஃப்பே கொஞ்சம் பயமா இருக்கு. வரவருக்கும் அதே மாதிரி ஆயிடுச்சின்னா அப்புறம் அப்புறம்…” என திணறியவள், “என்னை இப்படியே விட்டுடுங்களேன்…” என்றாள் பரிதாபமாக.
அவளுக்கே புரிந்து போனது, இன்றைக்கு தன்னிடம் பேசி சம்மதம் வாங்காமல் விட மாட்டார்கள் என்று. அதுவே தான் நடந்தது.
நடேசனோ, “அம்மாவை நினைச்சு பயப்படாதே, அடுத்த ட்ரான்ஸ்ஃபர்ல அண்ணியையும் பிள்ளைகளையும் கொண்டு வந்து ஊர்ல விட்டுடுவேன். அடுத்த ஃபைவ் இயர்ஸூல நானும் ஊருக்கே வந்துடுவேன். அதனால பயப்படாதே…” என அவளின் பயத்தின் ஒரு பகுதியான, தாயைப் பற்றின கவலையையும் தீர்த்து வைத்தான்.
இப்படி எல்லோரும் நந்தினியை மூளை சலவை செய்து, அவளின் சம்மதத்தை வாங்கி விட்டனர்.
நந்தினி சம்மதம் சொன்ன பிறகே, “அந்த மாப்பிள்ளை பையன் பேரு வினோத், இப்போ இங்க வந்திருக்கான். நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர சொல்றேன். நீ பார்த்துட்டு உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு, மேற்கொண்டு பேசுவோம்.” என தங்கையிடம் கூற, காண்டாகி விட்டாள் நந்தினி.
“ஏன்டா வெங்கி, சொங்கி எல்லாத்தையுமே முடிவு பண்ணிட்டு தான் என்கிட்ட பேசிருக்க… உன்னை என்ன பண்றேன் பாரு…” என தன் கையில் வைத்திருந்த பவர் பேங்கை வைத்து அவன் மண்டையில் நங்கு நங்கென்று கொட்டினாள்.
“ஏய்… ஏய்… இருடி… பிசாசு… கொட்டி, கொட்டியே என் மண்டையில ஒரு கொண்டையே வளர்ந்திடும். அப்புறம் உங்க அண்ணி நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டா. நான் யாரோனு தள்ளி வச்சிடுவா, விடுடி…” எனக் கத்தினான்.
“இரு, இப்பவே பெரியப்பாவை கூப்பிட்டு சொல்றேன்.” என போனை எடுக்கப் போக,
“இப்படி ஒரு பிளான போட்டுக் கொடுத்ததே உங்க பெரியப்பாவும் உங்க இளா அண்ணாவும்தான்.” என காமெடியாக கூறி தங்கையை அணைத்துக் கொண்டவன்,
“உனக்கு டைம் கொடுத்தோம், நீயும் அந்த வேதனையிலிருந்து வெளியே வந்துட்ட. அடுத்து உனக்கு ஒரு நல்லது செய்யணும், குடும்பமா வாழணும். அதை நாங்க பார்க்க வேண்டாமா? இது எல்லாம் உன் நல்லதுக்காக மட்டும் தான் செய்றோம். நீ நல்லா யோசி, நாளைக்கு அந்த பையன் வருவான். அவனையும் பாரு, பேசு. உனக்கு புடிச்சிருந்தா அடுத்து மேற்கொண்டு எல்லா ஏற்பாடும் செய்யலாம்.” என அவள் வருத்தப்படாதவாறு மிகவும் பொறுமையாக எடுத்துச் சொன்னான்.
அதற்கு நந்தினி பதில் ஏதும் சொல்லவில்லை. அமைதியாக எழுந்தவள் குழந்தைகள் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
“என்னடா, அமைதியா போறா?” என நடேசன் கவலையாக கேட்க,
“நாம ரொம்ப ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. அவ யோசிக்கட்டும், பொறுமையா, நிதானமா யோசிச்சு நல்ல முடிவுதான் எடுப்பா. நீங்க பேசிட்டு வாங்க, நான் போறேன்.” என நடேசனின் மனைவியும் குழந்தைகளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“டேய் அண்ணா வருவானா? சரக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்.” என நடேசன் கேட்க,
“அவன் வேண்டாண்டா, நீ எடுத்துட்டு வா நாம அடிக்கலாம்.” என வெங்கட்டும் கூற, அதற்கடுத்து நடந்ததை சொல்லவும் வேண்டுமா?
கையில் சரக்கோடு, தங்கள் சிறுவயது காலத்தை அசை போட்டபடி, அந்தப் பொழுதை இனிமையாக்கிக் கொண்டிருந்தனர்.
மதுதான் மனிதனின் மிக மோசமான எதிரி. ஆனால் உன் எதிரியிடமும் அன்பு செலுத்து என்கிறது பைபிள். பைபிளின் வாசகப்படி எதிரியிடம் அன்பு செலுத்த தொடங்கியிருந்தார்கள் நடேசனும் வெங்கடேஷூம்.
***
1 comment
Very Interesting