தூரம் 29
“கொஞ்சம் சாஞ்சு உக்காருடி… சாப்பிட்ட உடனே படுக்க வேண்டாம்.” என கொடி சாய்ந்து அமர உதவி செய்தவன், “இப்போ எப்படி இருக்கு?” என்றபடி அவளின் காலுக்கு அருகில் அமர்ந்தான்.
“ம்ம்…” என்றவள் அனிச்சையாக தன் கால்களை சுருக்கிக்கொள்ள, மனைவியின் செயல் வலித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவளின் கால்களை இழுத்து, தன் மடியில் அழுத்தமாக வைத்துக் கொண்டான்.
இருதயம் திடுக்கிட்டு துடிப்பை நிறுத்தி விட்டதைப் போல், அவன் செயலை சில நொடிகள் வரை உணர்ந்து கொள்ள முடியாமல் உறைந்து போனாள்.
கணவனின் அழுத்தத்தில் தன்னுணர்வு பெற்றவளுக்கு அவனின் நெருக்கம் அவஸ்தையை கொடுக்க, அதிலும் தன் கால்கள் அவன் மடியில் இருப்பது வேறு அவளுக்கு திணறலைக் கொடுக்க, சாதாரணமாக இருக்க முடியாமல் நெளிந்தாள் பெண்.
அதை அவன் உணர்ந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், பாதங்களை அழுத்தியபடியே இருந்தான். அவனைத் தடுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவளும் தன்னை சாதாரணமாக காட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.
இருவரின் மனதிலும் பேரலையாய் ஒரு உணர்வு!
இப்போது எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற எண்ணச் சுழலுக்குள் இளங்கோ சுழன்று கொண்டிருக்க, கொடிக்யோ, ‘இவர் என்னை தனியா விட்டா போதும்.’ என்ற எண்ணத்தில் இருந்தாள்.
ஒரு வழியாக கணவனின், “கொடி…” என்ற அழைப்பு அவள் காதுகளைத் தீண்டியது. அந்த குரலில் இருந்த உணர்வுக்குவியல் பெண்ணவளைப் பட்டென விழிகளைத் திறக்க வைத்தது.
இருவரின் பார்வையும் நேராக சந்தித்துக்கொள்ள, முதலில் பார்வையை விலக்கிக்கொண்டது இளங்கோதான். குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறுத்தது. மனைவியின் பார்வையை சந்திக்க முடியவில்லை.
ஒரு பெருமூச்சை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றான். முடியவில்லை போலும். கண்களை மூடி, “ஊப்ஸ்…” என்று காற்றை ஊதி, தலையை இருபக்கமும் ஆட்டிக்கொண்டவன், அழுத்தமாக தலையையும் கோதிக்கொண்டான்.
கோபத்தில் பேசும் போது வார்த்தைகள் தங்கு தடையின்றி சாட்டையாய் சுழலும். ஆனால் அதே நேரம் நிதானத்தில் பேச நினைக்கும் போது, வார்த்தைகளுக்கு பஞ்சமாகி போகும். இளங்கோவிற்கும் அதே நிலைதான்.
தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டவனுக்கு மனைவியிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சுத்தமாகவே தெரியவில்லை.
சில நிமிட நேரங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “கொடிம்மா…” என்றான் தவிப்புடன்.
இத்தனை ஆண்டு கால இல்வாழ்க்கையில் கணவனின் இந்த தவிப்பையும் இயலாமையையும் அவள் பார்த்ததே இல்லை.
கணவனின் தவிப்பு பெண்ணவளுக்கு பெரும் சங்கடத்தைக் கொடுக்க, அவளால் என்ன செய்ய முடியும்? அவள் மனது இதமானால், அவன் வலியைப் போக்க முடியும். அவன் சங்கடங்களை தீர்க்க முடியும். அவனின் குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிக்கொண்டு வர முடியும்.
அப்படி அவள் யோசிக்கும் போதே அவளின் மனசாட்சி, ‘உன் இக்கட்டான சூழலில் உன்னைத் தனிமையில் தவிக்க விட்டவன், உன்னையும் உன் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாதவன், உன் பிள்ளைகளை உன்னிடமிருந்து தூரமாக்கியவன், தனிமை எனும் நரகத்தைக் காட்டியவன்…’ என வரிசையாக பட்டியலிட, உண்மை தான் என்றாலும், ஏனோ இந்த நேரத்தில் அதை வெளிக்காட்ட அவளால் முடியவில்லை.
அன்பை வழங்கினால் பேரன்பைத் திருப்பி செலுத்துவோம். வெறுப்பையும் கோபத்தையும் உதாசீனத்தையும் செலுத்தினால், அப்போதும் நாம் அன்பையே செலுத்துவோம் என்பதுதான் கொடியின் மந்திரம்.
அதுதான் அவளை இத்தனை பிரச்சனையிலும் நம்பிக்கையோடு வாழ வைத்தது. மற்றவர்களுக்கே அப்படியென்றால் கணவன் என்று வரும்போது அவள் மறுப்பாளா? இல்லை இதுதான் சமயம் என பழிதீர்க்க நினைப்பாளா?
நிச்சயம் இல்லை. கொடியின் இயல்பே மன்னிப்பதும் மறப்பதும்தானே?! வாழ்ந்து விட்ட வாழ்க்கையில் பின்னோக்கி போக முடியாது. ஆனால் இனி வரும் நாட்களையாவது சரியாக கடந்து செல்ல முடியும்.
தொலைந்து போன மணிகளைத் தேடுவதை விட கையில் இருக்கும் மணிகளை வைத்து மாலை தொடுக்கலாமே!
தன் கணவனையே சமாதானமாக பார்த்தாள்.
அந்த பார்வை என்ன சொல்லியது ஆடவனுக்கு?
இதை இப்படியே விட்டுவிடு என்றா?
நீ வருத்தப்படாதே, நான் கலங்கவில்லை என்றா?
என்னிடம் நீ விளக்கம் சொல்லத் தேவையில்லை என்றா?
உன்னை எனக்குத் தெரியும், நீ கலங்காதே என்றா?
அந்த நொடி, மனைவியின் பார்வையில் தெரிந்த செய்தியை உணர்ந்த அந்த நொடி, மொத்தமாக உடைந்துவிட்டான் இளங்கோ.
தன் வயதையும், தான் ஒரு ஆண் என்பதையும், ஆண் அழக்கூடாது என்று சொன்ன மூடநம்பிக்கையையும் அந்த நொடி மறந்தவனாக, மனைவியின் பாதங்களில் முகத்தைப் புதைத்து கதறிவிட்டான் இளங்கோ எனும் நாற்பது வயது ஆண்மகன்.
“பூம்மா… பூம்மா…” என்ற வார்த்தைகள் தவிர, வேறொன்றும் அவன் இதழ்களைத் தாண்டி வெளிவரவில்லை.
கணவனின் கதறலைக் கண்டு கொடியின் இதயம் ரணமாய் வலித்தது. கைகள் தன்னால் அவன் சிரத்தைத் தடவிக் கொடுத்தது. அரும்பாய் வளர்ந்திருந்த மயிர்கள் குத்திய போதும், அவன் வார்த்தையால் முள்ளாய் வதைத்ததையும் மறந்தவளாய், வருடிக் கொண்டிருந்தவளின் அந்த செய்கையில் மேலும் உடைந்தான் இளங்கோ.
கோதிய விரல்களில் சிறு அழுத்தம் கொடுத்து, அவனை நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.
அதில் நிமிர்ந்து மனைவியின் முகம் நோக்கியவனிடம், ‘வேண்டாம்’ என தலையை அசைக்க, மனைவியின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு மேலும் மேலும் குற்ற உணர்ச்சியைத்தான் கொடுத்தது.
இனியும் அவளைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன், தன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, தன்னை சமன் செய்தான்.
எப்போதும் நேர் கோட்டில் செல்லும் ரயில்களும் கூட சில நேரங்களில் தடம் மாறத்தான் வேண்டும். வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன? எதிர்பாராத நேரத்தில் ஒரு நெருப்பு பொறி தோன்றும். ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிப் போகும்.
எப்பேற்பட்ட துன்பங்களின் நடுவிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வது, நம் கையில் தான் இருக்கிறது என்பதை இளங்கோ புரிந்து கொண்டிருந்தான். புரிய வைத்திருந்தாள் இளங்கோவின் கொடி.
பல நேரங்களில் மனக்கசப்பு, போராட்டங்கள். அதையும் தாண்டி ஒரு துளி சக்கரையாய் கொஞ்சம் இனிப்பு. அந்த இனிமை தான் புண்பட்ட மனதிற்கு இதமளித்து இன்னும். சில காலம் பொறுமையாக இருப்போமே… எப்படியும் மாறி விட வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையோடு, சோதனைகளைத் தாங்குவதற்கான வலிமையையும் அளிக்கிறது.
பழையபடி சச்சரவுகளும் சண்டைகளும் எல்லை மீறி செல்லும்போது, இனி தாங்காது என்று ஒரு முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், மீண்டும் அந்த இனிமையும் அழகிய தருணமும் முத்தாய்ப்பாய் அமைந்து, எடுக்க வேண்டிய முடிவுகளை ஒத்தி போடச் சொல்கிறது.
இதெல்லாம் இளங்கோ சமீப காலமாக யோசித்தது. தனிமையான நேரங்களில் எண்ணங்கள் மட்டுமே அவனுக்கு துணையாக… அதிகம் யோசிக்கும் மனம் பக்குவப்படும், நிதானிக்கும், தெளிவாக செயல்பட வைக்கும்.
இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறான், யோசிக்கிறான். பேச வேண்டும், அவளிடம் தன் மனதை மொத்தமாக கொட்ட வேண்டும் என நேற்று வரை யோசித்து வைத்திருந்த அனைத்தும், மனைவியின் அருகாமையில் காணாமல் போயிருந்தது.
அவளுக்கு விளக்கம் தேவையில்லை, ஆனால் அவனுக்கு? தன் ஒவ்வொரு செயலிலும் பலமாக அடிவாங்கியவளுக்கு அவன் என்ன செய்திட முடியும்?
தன் பக்கம் இருக்கும் சிறு சிறு நியாயங்களையாவது அவளிடம் கூற வேண்டுமே!
ஒரு மூச்சை இழுத்து தன்னை சமன் செய்தவன், “கொடிம்மா… நடந்த எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டு என்னுடைய செயலை நான் நியாயப்படுத்திக்க விரும்பல. என்னை மன்னிச்சிடுன்னு உங்கிட்ட கேட்குற தகுதி கூட எனக்கில்ல. அது எனக்குத் தெரியும்…” என்று சிறு இடைவெளி விட்டான்.
கணவன் பேச ஆரம்பித்ததுமே கொடியின் உடல் தன்னால் இறுகிக்கொண்டது. அதை இளங்கோவாலும் உணர முடிந்தது. அது அவன் இதயத்தைக் கூர்மையான கத்தி கொண்டு கிழித்தது.
அதன்பிறகு அவளிடம் விளக்கம் கொடுக்க அவனாலும் முடியவில்லை. இது இப்படியே போய்விடுமோ என்று பயந்தாலும், இல்லை இல்லை சரி செய்து விடுவேன், விரைவில் அனைத்தையும் சரி செய்து விடுவேன் என்று தனக்குள்ளே முடிவெடுத்துக் கொண்டவன், “படுக்குறியா? இல்ல, இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கியா? என கேட்க,
மருந்தின் விளைவில் ஏற்கனவே அவள் தூக்கத்தின் பிடியில்தான் இருந்தாள். இப்போது கணவனே கேட்கவும், ‘படுக்கிறேன்’ எனும் விதமாக செய்கை செய்ய, அவளை தளர்த்தி கட்டிலில் வசதியாக படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.
அங்கு தம்பிகள் இருவரும் சோம பானத்தின் உதவியில் சொர்க்கத்திற்கு அருகில் சென்றிருக்க, இருவரையும் பார்த்து புன்னகைத்தவன் தொலைவில் தெரிந்த இருளை வெறிக்க ஆரம்பித்தான்.
அடுத்தநாள் காலை மிகவும் பரபரப்பாக விடிந்தது அந்த குடும்பத்திற்கு. நந்தினியின் சம்மதத்திற்காக காத்திருந்தது போல அடுத்தடுத்து நிகழ்வுகள் வேகமாக நடந்தன.
வெங்கடேஷ் அழைத்து வினோத்திற்கு நந்தினியின் சம்மதத்தைக் கூற, அவனும் அன்று மதியம் போல் வருவதாக கூறிவிட்டான்.
நந்தினி, கொடிக்கு தேவையானதை செய்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
நந்தினியின் மனப்போராட்டத்தை உணர்ந்த கொடி, அவளுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு, தன் அருகே அமர வைத்து கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அதே நேரம் இளங்கோவும் அறைக்குள் வர, இருவரையும் பார்த்தவன் நந்தினியின் அருகில் வந்து நின்றான்.
மனைவியின் விழியில் தெரிந்த செய்தியில் தங்கையின் தலையில் கை வைத்து, “ராசாத்தி, உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் சொல்லு, போதும். எங்களுக்காக, எங்க விருப்பத்திற்காக யோசிக்காத…” என்றவன்,
“உன் பயம் நியாயமானதுதான். ஆனால் இப்போ பயப்படத் தேவையில்லை. வினோத்துக்கு உன்னை பிடிச்சுதான் பெண் கேட்டார். ஒரு வருஷமா உன்னை தெரியும்னு சொல்றார். அவர் உன்கிட்ட வந்து பேசாம, எங்ககிட்ட பேசினதுலயே அவரோட குணம் எங்களுக்கு புரிஞ்சது. நீயும் பேசிப்பார், உனக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம். உன்னோட விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம்.” என்றான் ஆறுதல் படுத்தும் விதமாக.
“ம்ம்…” என்றவளுக்கு தெளிவுதான் இல்லை. ஒருவேளை வினோத்திடம் பேசினால் தெளிவு பிறக்குமா?
நந்தினியை ஒரு வழியாக சமாதானம் செய்திருந்தனர் அண்ணன்கள் மூவரும்.
அன்று மதிய உணவு நேரத்திற்கு வருவது போலத்தான் அழைத்திருந்தான் வெங்கடேஷ்.
வினோத்தும் சரியாக அந்த நேரம் வந்துவிட, பரஸ்பர விசாரிப்புகள் முடிந்த பிறகு, திருமண பேச்சை எடுத்தான் இளங்கோ.
“எனக்கு சுத்தி வளைச்சு பேச விருப்பம் இல்ல மச்சான். ஒரு வருஷமா உங்க தங்கச்சியை எனக்கு தெரியும். அவங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க கடந்த காலம் எனக்கு தேவையில்லை. எனக்கு மட்டும் இல்ல, எங்க வீட்ல யாருக்குமே தேவையில்லை.”
“என்னை பிடிச்சா, எல்லாருக்கும் என் மனைவியையும் பிடிக்கும். எந்தவித சங்கடமும் இல்லாம சந்தோஷமா உங்க தங்கச்சியை எனக்கு கட்டி வைங்க. நீங்க இளவரசியா வச்சுருக்கீங்க, நான் என் மனைவியை மகாராணியா பார்த்துப்பேன்.” என எந்தவித முகப்பூச்சும் இல்லாமல் நேரடியாகவே பேசினான் வினோத்.
வினோத்தின் அந்த பேச்சு அங்கு இருந்த அனைவருக்கும் அவனைப் பிடிக்க வைத்தது.
ஆனால் நந்தினியோ அப்போதும் யோசனையிலேயேதான் இருந்தாள். அதை அனைவரும் கவனித்தது போல வினோத்தும் கவனிக்கத்தான் செய்தான்.
அதனால் அவளிடம் நேரடியாகவே, “உங்க பயத்தை தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா அது சரியும் கிடையாது. எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரியே இருக்காது. நம்ம வாழ்க்கை எப்படி இருக்கணும்னு நாமதான் டிசைட் பண்ணணும். எனக்கு தெரியும், என் வாழ்க்கை உங்களோட ரொம்ப சந்தோசமா இருக்கும், நான் நம்புறேன். அதே நம்பிக்கை உங்களுக்கும் வரணும். கண்டிப்பா வர வைப்பேன். அது உடனே வராது, என் கூட நீங்க வாழ்கிற வாழ்க்கைலதான் அதை உணர முடியும்.
நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். உங்களுக்கு தேவையான நேரம் எடுத்துக்கோங்க. நல்லா யோசிச்சு உங்களுக்கு எது நல்ல முடிவுனு தோனுதோ அந்த முடிவ எனக்கு சொல்லுங்க. உங்க பழைய வாழ்க்கையை தள்ளி வச்சிட்டு, பொறுமையா யோசிச்சு எனக்கு முடிவு சொல்லுங்க.” என முடித்துவிட நந்தினிக்குள் ஒரு ஆசுவாசம்.
“சரி.” என்றவள் அமைதியாக, அனைவரையும் சாப்பிட அழைத்தாள். அவளின் அண்ணன்களுக்கும் அடுத்து என்ன பேச என்று புரியவில்லை.
சங்கர்தான் வினோத்தின் பெற்றோர், அவனின் வேலை, உறவினர்கள் என விசாரித்து அந்த இடத்தை கலகலப்பாக வைத்துக்கொண்டார்.
ஆண்கள் இப்படியாக பேசிக் கொண்டிருந்த நேரம், சட்டென்று ஞாபகம் வந்தவனாக வினோத், “வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்னு சொன்ன உங்க தாட்ல எந்த மாற்றமும் இல்லையே?” என அவசரமாக கேட்க,
நந்தினியோ தன் அண்ணன்களைப் பார்த்துவிட்டு வினோத்தை பார்த்து, “அது… அந்த நேரம் மேரேஜ் வேண்டாம்னு அவாய்ட் பண்றதுக்காக நான் சும்மா சொன்னது…” என முணுமுணுக்க,
“என்னங்க சொல்றீங்க, அப்போ அது உண்மை இல்லையா? நான் வேற என் அம்மாக்கிட்ட மாமியார் வீட்டுல நிம்மதியா இருப்பேன்னு சொல்லி, அவங்களைக் கடுப்பேத்தி அவங்க சாபத்தை எல்லாம் வாங்கிட்டேனே…
இப்போ என் அம்மாவுக்கு தெரிஞ்சா, என்னை பங்கமா கலாய்ச்சு தள்ளிடுவாங்க. அதனால எதுக்கும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.” என பாவம் போல் கூற, அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
கொடியும் கூட வினோத்தின் பேச்சில் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.
நந்தினிக்கு வினோத்தின் பேச்சில் தன் காயங்கள் உலர்வதைப் போல உணர்ந்தாள். அதே மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் விடைபெற்று கொண்டான் வினோத்.
அன்று மாலையே அனைவரும் ஊர் திரும்ப, அடுத்த வாரத்தில் நர்த்தனாவின் தேர்வு இருப்பதால், இளங்கோவும் வெங்கடேசனும் அப்போதே ஊருக்கு கிளம்பிவிட்டனர்.
கிளம்பும் போது இளங்கோ, மனைவியிடம் நந்தினியைக் காட்டி, கண்ணசைத்துவிட்டு கிளம்ப கொடிக்கு, ‘நந்தினியிடம் பேசு’ என்று கணவன் பார்வையால் சொல்லி சென்ற செய்தி புரிந்தது.
ஆனால் கொடிக்கோ நந்தினியிடம் பேச வேண்டும் என்ற தேவையை இருக்கவில்லை.
அன்று மாலை சந்திராவிடமும் சுப்புவிடமும் பேசிய நந்தினி, திருமணத்திற்கு சரியென்று சொல்லிவிட்டாள்.
அவளின், ‘சரி’ என்ற ஒற்றை வார்த்தை அந்த குடும்பத்தில் மாயம் செய்தது.
சிறகை தொலைத்த பறவை ஒன்று, மீண்டும் வானில் பறக்க பார்க்குது. அன்பு கொண்ட உறவுகள் ஆனந்தம் கொள்கிறது. ஆண்டவனே, தவறாக எழுதினாலும் அன்பு கொண்ட உள்ளங்கள் தவறகூடாது. மறுமணம், நறுமணம் என்றென்றும்…
***
1 comment
Very, very interesting
😌😌😌
CRVS (or)CRVS 2797