Home Antiheroதூரம்- 30

தூரம் 30

நந்தினியின் திருமண வேலைகள் வெகு வேகமாக நடந்தது.  பெரியவர்களுக்கு இதை விட வேறென்ன சந்தோசம் இருக்க முடியும்?

மகளின் சம்மதம் கிடைத்த அன்று, பேச்சியிடமும் சுப்புவிடமும் சொல்லிக்கொண்டு வந்த சந்திராவுக்கு அப்படி ஒரு அழுகை. இது ஆனந்தத்தால், மகிழ்ச்சியால் வந்த அழுகை.

எங்கே தன் மகள், தன்னைப் போலவே தனியாகவே நின்று விடுவாளோ என்ற பயம், அவரை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருந்தது. தன் பிள்ளைகள் அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார்கள் என்று தெரியும்தான். இருந்தாலும் மகள் ஒரேடியாக வேண்டாம் என்று விட்டால் அவளைக் கட்டாயப்படுத்த முடியாதே!

அதனால் இத்தனை நாளும் அந்த பயத்தை மனதில் வைத்துக் கொண்டேதான் நடமாடினார். இப்போதுதான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. பெண் பார்க்கும் படலம் என்று எதையும் செய்து நந்தினியை வருத்தப்படுத்த வேண்டாம் என்று விட்டான் வினோத்.

இரண்டு ஊருக்கும் பொதுவான ஒரு கோவிலில் வைத்து இரண்டு குடும்பங்களும் சந்தித்து, மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என்றார் வினோத்தின் அப்பா. அதுவே அனைவருக்கும் சரியென்று பட்டது.

ஒரு வாரத்திற்கு முன்பே நடேசன் தன் குடும்பத்துடன் வந்துவிட, வெங்கடேசனும் குடும்பமாக வந்துவிட, இளங்கோ மட்டும் கொடியை அழைப்பதா, வேண்டாமா என திணறிக் கொண்டிருந்தான். இளங்கோவின் இந்த நிலையை சங்கரால் உணர முடிந்தது. என்னதான் மருமகனின் மீது கோபம் இருந்தாலும், அதை இந்த நேரம் காட்ட சங்கரால் முடியவில்லை.

அனைவரும் குடும்பமாக இருக்க, இளங்கோ மட்டும் தன் மகள் இல்லாமல் தனித்து நிற்பதில் அவருக்கு உடன்பாடில்லை. அதனால் அமுதாவின் துணையோடு கொடியை அழைத்து வந்துவிட்டார். தாயைப் பார்த்ததும் பிள்ளைகள் இருவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.

அதிலும் கூடுதலாக நர்த்தனா, தன் அம்மாவை இறுக்கி அணைத்தபடியே நின்றிருந்தாள் வெகு நேரமாக. அந்த அணைப்பே கொடிக்கு உணர்த்தியது, மகள் தன்னை எவ்வளவு தூரம் தேடியிருக்கிறாள் என்று.

வீட்டுக்குள் நுழையும் வரைக்கும் தான் வந்தது சரியா, தவறா என்ற குழப்பத்திலேயே இருந்தவளுக்கு, மகளின் இறுக்கமான அணைப்பு சரியென்று சொல்லிவிட்டது. தான் அழைக்காமலே கொடி வந்தது இளங்கோவிற்கு சந்தோசமாக இருந்தாலும், மனதின் ஓரத்தில் குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது.

‘நாம அழைத்திருக்கலாமோ? எதிர்பார்த்திருப்பாளோ?’ என மனம் யோசித்தது. ‘ம்ச்! டேய், தப்புக்கு மேல தப்பு பண்ற, நீ என்ன சின்னப் பையனா? நாற்பது வயசாகிடுச்சு, இன்னும் உனக்கு பக்குவம் வரலன்னா, நீ இப்படியேதான் இருக்கப்போற…’ என மனசாட்சி சாட, மனம் கலங்கிவிட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை.

“சொல்லிருந்தா நானே கார் எடுத்துட்டு வந்துருப்பேனே மாமா?” என சங்கரிடம் சொன்னாலும் பார்வை மனைவியிடமே இருந்தது.

“உங்களுக்கு இங்க நிக்க கூட நேரமில்லன்னு தெரியும், அதுதான் நானே அழைச்சிட்டு வந்துட்டேன்.” என்றார் சங்கர்.

கொடியும் அமுதாவும் பேச்சியை சென்று பார்த்து வந்தார்கள். பேத்தியின் முடியில்லா தலையைப் பார்த்து அந்த பெரியவருக்கு இதயமே நொறுங்கிப் போனது. அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறிவிட்டார். கொடிக்குமே தன்னையறியாமல் விழிகளில் நீர் கொட்டியது.

அமுதாதான் இருவரையும் சமாதானம் செய்தாள். கொடி வந்தது பெரியவர்களுக்கு அப்படி ஒரு நிம்மதியையும் ஆசுவாசத்தையும் தந்தது.

என்னதான் கேட்பவர்களிடம் உடல்நிலை சரியில்லை என்று சொன்னாலும், முக்கியமான விசேஷத்தில் அவள் இல்லையென்றால் வருத்தமாகத்தானே இருக்கும்.

“கொடி, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் வனிதாவுக்கு ஹெல்ப் பண்றேன்.” என்ற அமுதா அவளை அறையில் படுக்க வைத்துவிட்டு, நர்த்தனாவைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.

மகளின் கையில் புத்தகம் இருக்க, அவள் மிகவும் தீவிரமாக படிப்பது புரிந்தது. கொடியின் முகத்தில் சிறு புன்னகையும் சிந்தனையும் உதித்தது.

‘எப்போதிருந்து இவள் போனை தொடாமல் இருக்கிறாள்?’ என யோசித்தபடியே கண்களை மூடினாள்.

இங்கு வந்த நேரம் பார்த்தது தான் கணவனை, அடுத்து பார்க்க இயலவில்லை. அவனுக்கு வேலைகள் அதிகம் என அவளுக்கும் புரியத்தான் செய்தது. கணவனைத் தொந்தரவு செய்யாமல் தந்தையுடன் வந்துவிட்டாள். மகளைப் பற்றிய சிந்தனைகளோடே உறங்கிவிட்டாள் பெண்.

வினோத்தின் அப்பா கூறியது கந்தவேலுவிற்கும் சரியென்று பட, அருகில் உள்ள ஊரான கண்டமனூர் முருகன் கோவிலில் இரு குடும்பங்களும் சந்திப்பதற்கு ஏற்பாடானது. பரஸ்பர நல விசாரிப்பிற்கு பிறகு திருமணத்தைப் பற்றி பேச ஆம்பித்தனர்.

அந்த மாத கடைசியிலேயே நாள் குறிக்கப்பட, எல்லோருமே அதற்கு ஒத்துக்கொண்டனர். நாட்கள் தள்ளி பார்த்தால் நந்தினியின் மனது மாறிவிடுமோ என்ற பயம்தான் பெற்றவர்களுக்கு. அதை வினோத்தின் குடும்பமும் புரிந்துகொள்ள அடுத்தடுத்து வேலைகள் நடந்தது.

நர்த்தனாவிற்கு பொதுத்தேர்வு என்பதால் முழு நேரமும் அவளுடன் ஒரு ஆள் இருக்க வேண்டியது அவசியமானது. அதோடு திருமண வேலைகளும் சேர்ந்து கொள்ள, இளங்கோவிற்கு நேரமே போதவில்லை. அது கொடிக்கும் புரிய என்ன செய்வது என யோசித்தாள்.

ஃபங்க்ஷன் முடிந்ததும் கிளம்பிவிட வேண்டும் என்ற முடிவில்தான் இருந்தாள். ஆனால் இப்போது மகளுக்காக யோசிக்க ஆரம்பித்தாள். சங்கர் இது எதிலும் தலையிடவில்லை. அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என ஒதுங்கிக்கொண்டார்.

அன்று காலையில்தான் நிச்சயம் முடிந்தது. “உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே? உன்னால இப்படியே வரமுடியுமில்ல? யாரும் என்னமும் சொல்லட்டும், நீ ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. உனக்கு அங்க இருக்க முடியலன்னா உடனே எனக்கு சொல்லிடணும். பசங்களை உன்கூடவே வச்சிக்கோ, நீ தனியா எங்கேயும் இருக்கக்கூடாது.” என மனைவியிடம் நூறு முறை இதையே பேசியிருப்பான்.

அவள் அனைத்திற்கும், “ம்ம்…” என்று மட்டுமே பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். கணவனின் பயம் அவளுக்கு புரியாமல் இல்லை. வம்பு பேசுபவர்களின் வாயை யாரால் மூட முடியும்?

பேசி பேசி ஓய்ந்து ஒரு கட்டத்தில் அவர்களே அமைதியாகி விடுவார்கள். இதற்கு ஏன் நம் மூளையை சூடாக்கிக் கொள்ள வேண்டும்?

வனிதா தன் வீட்டு ஆட்களை எச்சரித்து தான் அழைத்து வந்திருந்தாள். அதோடு வெங்கடேஷும் அவர்களிடம் பேசியிருக்க, கொடியிடம் நலம் விசாரித்ததோடு சரி, எந்த வம்பையும் இழுத்து வைக்கவில்லை சுப்புவின் அண்ணிகள்.

இப்படி அனைத்துமே மிகவும் இயல்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்தது. அன்று நிச்சயம் முடிந்து வீடு வரவே இரவாகி விட்டது. நேரமாக நேரமாக இளங்கோவிற்கான தவிப்பான நிமிடங்கள் ஆரம்பமாகின.

பிள்ளைகள் இருவரும் களைப்பையும் பொருட்படுத்தாமல் கொடியிடம் வளவளத்துக் கொண்டிருந்தது வேறு, இளங்கோவை எரிச்சல் படுத்தியது.

இளங்கோவின் பார்வை மாற்றத்தை உணர்ந்த நர்த்தனா கொடியிடம், “ம்மா, நாங்க வழக்கம் போல தாத்தா, பாட்டிகிட்ட தூங்குறோம். நீ போகும் போது எங்ககிட்ட சொல்லிட்டு போறீயாமா?” என கேட்கும் போதே நர்த்தானாவிற்கு கண்கள் கலங்கி விட்டது.

“ம்மா நீ போறீயாமா? மறுபடியும் தாத்தா வீட்டுக்கே போய்டுவியா?” என நவீனும் கேட்க, என்ன பதில் சொல்வாள்? பிள்ளைகள் இருவரையும் கலக்கத்துடன் பார்த்தாள்.

சற்று நேர மௌனத்திற்க்கு பிறகு இளங்கோதான் பேச்சை ஆரம்பித்தான். “நதி, மார்னிங் எழுந்து படிக்கணும்ல, போய் தூங்கு. அலாரம் வச்சிட்டியா, இல்ல நான் எழுப்பணுமா?” எனவும்,

“வச்சிட்டேன் ப்பா, தாத்தாவும் எழுப்பி விடுவார்.” என்றவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள். நவீனோ, “ம்மா இங்கேயே இரேன்… இனி நான் உங்கிட்ட கோபப்பட மாட்டேன்மா, ப்ராமிஸ்!” என அவளைக் கட்டிக் கொண்டு கேட்க,

“நவீ, உனக்கும் தனியா சொல்லணுமா?” என இளங்கோ மகனையும் அதட்ட,

“ம்ம் போறேன்…” என தந்தையை முறைத்தபடியே அவனும் சென்றுவிட, மகனின் கோபம் பெற்றவளுக்கு சிரிப்பை வரவைத்தது.

பிள்ளைகள் இருவரின் மனநிலையும் பெற்றவளுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.

அது கணவனுக்கும் புரிய, மனைவியை அறைக்குள் அழைத்து வந்தவன், அவள் என்ன ஏதென்று உணரும் முன்னே இறுக அணைத்திருந்தான்.

பதிலுக்கு அணைக்கவில்லையே தவிர, அந்த அணைப்பை தடுக்கவுமில்லை கொடி. சில நிமிடங்களில் தன்னை சுதாரித்தவன், மனைவியை கட்டிலில் அமர வைத்து அவளுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்தான்.

கணவனின் செயலையே விடாமல் பார்க்க, “ப்ளீஸ், இப்படி என்னை பார்க்காத கொடிம்மா… எனக்கு உன் மறுப்பான ஒரு பார்வையை கூட கொடுக்காத, அதை என்னால தாங்கிக்கவே முடியல. எனக்கான பக்கத்தை தயவு செய்து நீ கேளுடி ப்ளீஸ்…

இந்த மறுப்பும் உன் உடல் இறுக்கமும் உன்கிட்ட இருந்து என்னை தள்ளி, ரொம்ப தூரம் தள்ளி வைக்குதுடி. இந்த தவிப்பு மரண வலியை தருதுடி எனக்கு. நீ என்னை மன்னிக்கவெல்லாம் வேணாம், வெயிட் நான் சொல்லிடுறேன்…

எனக்கு உன்னை புரியுதுடி. ஆனாலும் ப்ளீஸ்டி… நீ என் பக்கத்தையும் கேளேன்…” என தவிப்பாக கேட்க, அவளுக்கோ விழிகளில் இருந்து நீர் வழிந்தது.

எத்தனை எத்தனையோ காரணங்களை அவன் பக்கமிருந்து அடுக்கினாலும், அவளின் வலியும் வேதனையும் இல்லையென்று ஆகிவிடுமா?

அவளுக்கு இந்த நோய் மட்டும் வரவில்லை என்றால், கணவனும் பிள்ளைகளும் அவளை இன்னுமே ஒதுக்கித் தானே வைத்திருப்பார்கள். என்ன முயன்றும் அவள் உடல் தன்னால் இறுகிக்கொண்டது.

அதை உணர்ந்தவன், “ப்ளீஸ்… விடு… விடு… நான் ஒன்னும் பேசல, நீ ஃப்ரீயா விடு, ஸ்ட்ரெஸ் ஆகாத.” என மனைவியிடம் பரிதவிப்பாக சொல்ல, அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

கொடி அப்படியே அமர்ந்திருக்க, இளங்கோ இனியும் அமைதியாக இருக்க வேண்டாம், தன் பக்கத்தை கண்டிப்பாக அவளிடம் சொல்லியே ஆகவேண்டும் என முடிவெடுத்து,

“கொடிம்மா, உனக்கு என்னை எப்போ மன்னிக்கத் தோனுதோ அப்போ மன்னிச்சா போதும். ஆனா தப்போ, சரியோ என் பக்கம் நான் சொல்லிடுறேன்.” என்றவன் ஒரு பெருமூச்செடுத்து தன் பக்கத்தைக் கூற ஆரம்பித்தான்.

“இப்போ யோசிக்கும் போது, நான்தான் நிதானமில்லாம உங்கிட்ட கோபப்பட்டுட்டேன்னு புரியுது.” என்றவன்,

“எனக்கு இந்த கடன் வாங்குறது எல்லாம் சுத்தமா பிடிக்காது. ஏனோ அது குடும்பத்துல இருக்குற நிம்மதியை மொத்தமா அழிச்சிடும்னு தோனும். ம்ச்! இப்போவும் அதைத்தானே செய்துருக்கு…” என்றான் சலிப்பாக.

“என் அம்மாக்கிட்ட பேசாம, அவங்களை சம்மதிக்க வைக்க என்னோட வேலையை தூக்கி எறிஞ்சிட்டு உனக்காக, நீ வேணுங்கிறதுக்காக ஆர்மிக்கு போனேன். உனக்காக உன்னை நல்லா பார்த்துக்கணும், உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கணும், உனக்கு ஒரு கஷ்டமும் வந்துடக்கூடாதுனு யோசிச்சு யோசிச்சு ஒன்னு ஒன்னையும் பண்ணேன்.

நதி பிறந்ததும் உங்களை விட்டுட்டு என்னால அங்கே போக முடியும்னு தோனல. அதனால அங்கிருந்தும் வந்துட்டேன். இங்கேயே வேலைக்கு பார்க்கலாம்னு தோனும்போது அம்மா மறுபடியும் உன்னை வச்சு பிரச்சனை செய்யவும், கொஞ்சமும் யோசிக்காம சீனி சார்கிட்ட கெஞ்சி அந்த வேலைக்கு சேர்ந்தேன்.” என்றவன் அப்படியே சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.

அவளுக்கும் இதெல்லாம் தெரியும்தானே? அதனால் தானே கணவனின் மேல் கரை காணாத காதல் இருந்தது. ஆனால் இப்போது? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் ஆரம்பித்தான்.

“எனக்குனு நான் எதையும் யோசிச்சதே இல்ல. நீங்கதான் நான் நான்தான் நீங்க. அப்படித்தான் நான் நினைச்சேன். நீங்க சிரிச்சா நான் சிரிப்பேன், நீங்க வருத்தப்பட்டா என் உலகமே இருண்டு போயிடும். உங்களைத் தாண்டி என் உலகமே இல்லன்னு தான் என்னோட நினைப்பே…

ஆனா நீ…” என அந்த இடத்தில் நிறுத்தியவன், “இப்போ யோசிக்கும் போது தப்பில்லன்னு தோனுது. ஆனா அப்போ நான் ரொம்ப கோபத்துல இருந்தேன். எப்படி சொல்ல… அம்மாவை எதிர்த்து நீதான் வேணும்னு அவ்வளவு பிரச்சனை செய்து கல்யாணம் செய்து, அவங்க முன்னாடியே இந்த பிரச்சனை வரவும், அதோட அவங்க உன்னைப்பத்தி பேசினதை தான் என்னால ஏத்துக்க முடியல.

என் அம்மாவே ஆனாலும் அவங்க பேசுற மாதிரி நீ நடந்துக்கிட்டியேனு தான் என்னோட கோபமே… வீட்டு வாசல்ல ஒருத்தன் வந்து அசிங்கமா பேசும் போது, அதை எப்படி சாதாரணமா எடுத்துக்க முடியும்? சொல்லு…

கடன் வாங்க எங்க இருந்து இவ்வளவு தைரியம் வந்தது? அதிலும் லட்சக்கணக்குல…? அதை உங்கிட்ட நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாத்தையும் மறச்சதுமில்லாம நகையை அடகு வச்சு கடனைக் கட்டினேனு நீ சொன்னப்போ, என்னாலே ஏத்துக்கவே முடியல.

உனக்கு தெரியுமா? நான் ஆர்மி விட்டு வந்து வேலையில்லாம இருந்தப்ப தான் பணத்தோட அருமையை தெரிஞ்சிக்கிட்டேன். அப்போ கூட நான் யாருக்கிட்டயும் கடன் வாங்கல, என்னோட கஷ்டத்தை பார்த்துதான் அம்மா சண்டையே போட்டது. அப்போவும் நான் அவங்களைத் தான் சத்தம் போட்டேன். படிக்கிற பொண்ணை என்னோட விருப்பத்துக்காக கல்யாணம் செய்துட்டு வந்தேன். உனக்கு எதுவும் தெரியாது. உன்னை நான்தான் பார்த்துக்கணும்னு நினைச்சேன்.” என்று பெருமூச்சுவிட்டவன்,

“அதெல்லாம் தப்புன்னு இப்போ தெரியுது. கல்யாணம் செய்த கையோட உன்னை படிக்க வச்சிருக்கணும். அதுக்குப்பிறகு தான் ஒரு குழந்தைனு நான் யோசிச்சிருக்கணும். எல்லாம் என்னோட தப்புதான்…” என்றான் வருத்தமாக.

தான் பேசுவது அனைத்தும் தன்னை நிரபராதியாக்க, தன் செயல்களை நியாயப்படுத்த என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று தோன்றிய நொடி அமைதியாகிவிட்டான்.

ஏனோ இந்த சூழலையே வெறுத்தான். வாழ்க்கையே சூனியம் போல் தோன்றியது. அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாத நிலையில் தான் இருந்தான் இளங்கோ.

மனைவியின் மீதான அதீத காதல், அவளின் சிறு தவறைக்கூட பெரிதாகக் காட்டியது. அதீத காதல் அதீத கோபத்தையும் கொட்ட வைத்தது.

இதிலிருந்து தானும் மீண்டு மனைவியையும் மீட்பானா? அவர்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் புதுப்பிப்பார்களா?

ஆசைக்காக காதலித்து இருந்தால் எப்படி இருந்திருப்பானோ? அவளே அவன் வாழ்க்கை என்று காதலித்தான். அதனால் தான் இன்னமும் வலிக்கிறது அவன் இதயம். ஆனாலும் விடுதலையில்லா சட்டம் ஒன்று கேட்டான், அவள் காதல் பிடிக்குள் அகப்பட்டு கிடக்க.

***

You may also like

1 comment

M. Sarathi Rio August 2, 2026 - 7:04 pm

Very, very. Interesting.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured