தூரம் 31
ஏனோ அதன்பிறகு மனைவியிடம் விளக்கம் கொடுக்ககூட அவனுக்கு பிடிக்கவில்லை. அப்படியே எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.
அவன் செய்கையை அவனாலயே மன்னிக்க முடியவில்லை எனும் போது, மனைவி மட்டும் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தானே?!
கொடிக்கும் இந்த சூழ்நிலை பிடிக்கவில்லைதான். தன் பக்கமும் தவறு இருக்கத்தானே செய்கிறது. அந்த தப்பிற்கான தண்டனையாகத்தான் கணவனின் ஒதுக்கமும் பிள்ளைகளின் பாராமுகமும் என்று அவளுக்கு தெரியாதா?
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. நந்தினியின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன.
நர்த்தனாவின் தேர்வும் கொடியின் மூன்றாவது கீமோவும் முடிந்திருக்க, பிள்ளைகளுக்காக இங்கேயே இருக்க முடிவு செய்திருந்தாள் கொடி.
அதை இளங்கோவும் உணரத்தான் செய்தான். அதனால் முன்னைப் போல் சாதாரணமாக இருக்க முடியாமல், அவர்கள் அவஸ்தைப்பட்டார்கள்.
குழு பெண்கள் அனைவரும் வந்து கொடியைப் பார்த்து சென்றிருந்தனர். அதோடு தினமும் யாராவது ஒருவர் வந்து அவளை நலம் விசாரிக்காமல் இருந்ததில்லை.
சீனி சாரும் கவிதாவும் கூட இரண்டு முறை வந்து பார்த்து சென்றிருந்தனர். அப்போதும் கூட கவிதா, இளங்கோவிடம் முகத்தைக் காட்டிக்கொண்டு தான் இருந்தார்.
கொடி இங்கேயே தங்கி விட்டதில் பெரியவர்களுக்குத்தான் ஒரு ஆசுவாசம், ஒரு நிம்மதி.
எங்கே பெரியளவில் கொடி பிரச்சனை செய்து அங்கேயே இருந்து விடுவாளோ என்ற பயம், அவர்களுக்கு எப்போதும் இருந்தது. கொடி இங்க வந்தபிறகு அந்த பயம் போனது உண்மை.
கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும் என்று, பழசையெல்லாம் மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் கொடி. அவளை வேலையே செய்ய விடாமல் பார்த்துக் கொண்டனர் நந்தினியும் நர்த்தனாவும்.
ஆம், நர்த்தனாவும் இப்போது வீட்டு வேலைகளை தன் அத்தையோடு சேர்ந்து செய்ய பழகியிருந்தாள்.
அடுத்த நாள் நர்த்தனாவிற்கு எக்ஸாம் ரிசல்ட். முதல் நாள் மிகவும் பதட்டத்துடன் இருந்தாள். கொடி மகளைத் தன்னுடனே வைத்துக் கொண்டாள்.
அன்றிரவு மனைவியுடன் பேச வேண்டும் என அவளுக்கு முன்னே வந்தமர்ந்தான் இளங்கோ.
‘என்ன?’ என்பது போல் பார்த்தவளிடம், “நதி பற்றி கொஞ்சம் பேசணும்.” என்றான்.
மகளைப் பற்றியா, ‘என்ன’ என்ற பதட்டம் தன்னால் வந்தது பெற்றவளுக்கு.
எதையும் சொல்லாமலே பதட்டப்படுபவளிடம், நடந்ததைக் கூறினால் எப்படி பயப்படுவாளோ என்ற பதட்டம் வந்தது கணவனுக்கு.
ஆனாலும் இன்று கண்டிப்பாக இதைப் பற்றி பேசிவிட வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தான்.
காரணம், தன்னிடம் எதையோ மறைப்பது போல, தன்னை இன்னமே ஒதுக்கி வைத்து இருப்பது போல, எப்போதும் ஒரு சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தாள் கொடி.
அதை பலமுறை இளங்கோ பார்த்து இருக்கிறான். அதனாலயே அவளின் மன உளைச்சலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று, மகளைப் பற்றி சொல்லிவிட முடிவு செய்தான்.
மனைவியின் பதட்டத்தைக் குறைக்கும் பொருட்டு, “நீ பயந்துக்கிற மாதிரி பிரச்சனையெல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் சரியாயிடுச்சு, சரி பண்ணிட்டோம். உன்கிட்ட சொல்லாம விட்டதுக்கு காரணம், நீயும் டென்ஷன் ஆகி பாப்பாவையும் பயமுறுத்திடுவ. இப்போ எல்லாம் சரியாயிடுச்சு.” என்றவன் நர்த்தனாவின் பிரச்சனைகளை மனைவியிடம் கூற ஆரம்பித்தான்.
கணவன் சொல்ல சொல்ல மனைவியின் முகம் பயத்தில் வெளிற ஆரம்பித்தது. கேட்க கேட்க அவளின் பயம் கூடியே தவிர குறையவில்லை.
வேகமாக எழுந்து அவளின் அருகில் சென்றவன், மனைவியின் முதுகை ஆதரவாக வருடியபடி, “இதுக்குத்தான் சொல்லாம இருந்தேன். இப்போ எல்லாமே சரியாயிடுச்சு, நீ பயந்துக்காத. நதிகிட்டயும் உனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத, அவ இப்பதான் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துருக்கா.” என்றான். இருந்தும் மனைவியின் முகம் தெளியவில்லை.
“நீ இப்படி இருந்தா பேச வந்ததை, என்னால பேச முடியாது கொடி.” என சற்று கடுமையாக கூற, அவனின் கடுமை அவளுக்கு உரைத்தாலும், மகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
மீண்டும் இருவருக்குள்ளும் ஒரு அமைதி. எப்படி ஆரம்பிக்க என தெரியாமல் நிமிட நேரம் யோசித்தவன் பின், “உனக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா எனக்குத் தெரியல. பிள்ளைங்க ரெண்டு பேரையும் மதுரை ஸ்கூல் சேர்க்கலாம்னு பேசியிருந்தோம்.” என்று மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
‘அப்படியா’ என்பது போல் புருவத்தை சுருக்கியவளுக்கு, ஆம் பேசியிருக்கிறார்கள். நவீன் ஒருமுறை பள்ளியில் கிரிக்கெட் பாலால் ஒரு மாணவனின் மண்டையைப் பதம் பார்த்து வைக்க, அதனால் இளங்கோ பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடமும் அந்த பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டு வந்தது. அன்றிரவு மகனை அதட்டியதோடு தன்னிடமும் ஹாஸ்டலில் சேர்க்கப் போவதைப் பற்றி பேசியதும் மெல்ல மெல்ல ஞாபக அடுக்கில் மேலெழுந்தது.
“ம்ம்ம்…” என்றவள், ‘இப்போ அதுக்கு என்ன?’ என்பது போல பார்க்க,
“இந்த ஸ்கூல்ல இனியும் பாப்பாவை விட எனக்கு மனசில்ல. என்னதான் இப்போ அந்த பையன் அமைதியா இருந்தாலும் அவனோட தங்கையும் அந்த ஸ்கூல்தான் படிக்கிறா. இது தேவையில்லாத பிரச்சனையில முடியும். நதி ரொம்ப சின்ன பொண்ணு, அவளுக்கு இன்னும் விவரம் தெரியல. அவளை ஹாஸ்டல் விடலாம்னு யோசிச்சிருக்கேன்.
அவளுக்கும் அப்போதான் சூழல் சரியா புரியும், படிக்கவும் தோனும். இப்போ மாதிரி ரிசல்டுக்காக பயந்துட்டு இருக்க மாட்டா.” என்று நிறுத்த,
கொடிக்கு கணவன் சொல்வது புரிந்தாலும், ஏற்கனவே இவர்கள் மதுரைக்கு போவதாகத்தானே முடிவு செய்திருந்தார்கள். இப்போது ஏன் இவ்வளவு விளக்கம்? என யோசிக்க,
மனைவியின் யோசனை அவனுக்கும் புரிய, “இதுவும் உனக்கு சொல்லிருக்கேன். நான் இந்த ப்ரான்ச்ல ஜாயின் செஞ்சி பதினைஞ்சு வருசம் ஆகிடுச்சு. எப்போ என்றாலும் எனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் கொடுப்பாங்க. என்னால முடியாதுனு சொல்ல முடியாது. அப்போ அதுக்கு ஏத்த மாதிரி நாம மூவ் ஆக வேண்டியிருக்கும்னு சொல்லிருந்தேன்.” என்றபடி மனைவியைப் பார்க்க,
‘இது எப்போது?’ என மீண்டும் மூளையை யோசிக்க, ஆம் சொல்லியிருக்கிறான். அன்று வீட்டுக்கு வரும்போதே மிகவும் டென்சனாக வந்தான். என்ன என்று அவள் கேட்கும் முன்னே,
“ம்ச்! என்னதான் இவனுங்களுக்காக நாய் மாதிரி வேலை செஞ்சாலும், வன்மத்தை கொட்ட நேரம் பார்த்துட்டே இருப்பாங்க போல… என்னால சீனி சாருக்கும் ப்ரஷர்.” என எரிச்சலில் கத்தினான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது. “என்ன மாமா…” என அவன் வருத்தத்தைப் போக்கும் விதமாக கேட்க,
“ம் சீனி சார் எனக்கு மட்டுமே சப்போர்ட் பண்றார்னு, அவர் மேல் ஹையர்ல எவனோ சொல்லிருக்கான். அதுக்கு அவர் மேல என்குயரி வச்சிருக்காங்க. சார் என்கிட்ட சொல்லவே இல்ல, சொன்னா நான் கோபப்படுவேன்னு மறைச்சிருக்கார். இன்னைக்கு ஆபீஸ்ல எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அத வச்சுதான் எனக்கே தெரிஞ்சது.
அவர்கிட்ட கேட்டா உன்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லி பிரஷர் பண்றாங்க, நான் முடியாதுனு சொல்லிட்டேன். அதனால இந்த மாதிரி டார்ச்சர் பண்றாங்க. இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல, நீ உன் வேலையை பாரு. என்னை மீறி இந்த ஆபீஸ்ல என்ன நடந்திட போகுதுனு சொல்லிட்டு போறார்.” என்றான் கோபமாக.
“சரி மாமா, பொறுமையா சார்கிட்ட பேசுங்க. உங்களுக்காக தானே யோசிக்கிறார்.” என கொடியும் எடுத்துச் சொன்னாள்.
“நமக்காக அவர் கஷ்டப்படக்கூடாது. அப்படியே ட்ரான்ஸ்ஃபர் போட்டா திண்டுக்கல் இல்லன்னா மதுரை கேட்டு வாங்கிட்டு போயிடலாம். நமக்கும் பக்கம்தானே? பின்னாடி பிள்ளைகளோட படிப்பு காலேஜ் வரும்போது நம்மளும் சிட்டிக்கு போறதுதானே நல்லது. நாளைக்கு சீனி சார்கிட்ட பேசி எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்தா, உடனே அப்ரூவ் பண்ணிடுங்கனு சொல்லிடுறேன்.” என்றான் இளங்கோ.
“சரிதான் மாமா, ஆனா நான் எப்படி அங்க வர முடியும்? இங்க அத்தைங்க, மாமா, அப்பத்தா எல்லாரும் இருக்கும்போது…” எனக் கொடியும் சூழ்நிலையைப் புரிந்து கேட்க,
“டிரான்ஸ்ஃபர் வர்றது கன்ஃபார்ம். அப்போ பசங்கள ஹாஸ்டல்ல விட்டுட்டு, வீக்லி ஒன்ஸ் வர்ற மாதிரி பாத்துக்கலாம். இல்ல நீ மட்டும் இங்க இரு, நான் வாரத்துக்கு ஒருமுறை வந்துட்டு போறேன். ஆனா பசங்க ஹாஸ்டல் போறது உறுதி.” என்றதும்,
“என்ன, நான் மட்டும் தனியா இருக்கணுமா? அதெல்லாம் முடியாது. நானும் உங்க கூட தான் வருவேன். நான் இல்லாம நீங்க ஜாலியா இருக்கலாம் நினைச்சுட்டு இருக்கீங்களா?” என முகத்தைத் தூக்கிக்கொண்டு கொடி நகர,
“அடேங்கப்பா! மேடத்துக்கு இப்பதான் என் கூட இருக்கணும்னே தோனுதா? இத்தனை நாள் எங்க மேடம் போனீங்க?” என இளங்கோவும் மனைவியின் பின்னலைப் பிடித்து வம்பு செய்தான்.
“நான் இங்கதான் இருந்தேன், நீங்க தான் வேலை செஞ்சிட்டு டயர்டா வர்றீங்க, வந்ததும் தூங்கிடுறீங்க. சரி, நம்ம மாமா டயர்டா இருக்காரு, தூங்கட்டுமேனு விட்டேன். அதுதான் இப்போ தப்பா போச்சு…” என கொடியும் பேச,
“எல்லாம் நேரம்டி… நான் எப்போ உன்னை பக்கத்துல வராதன்னு சொன்னேன்?” என அவளை அப்படியே இழுத்து பின்பக்கமாய் அணைத்துக் கொண்டான்.
அதுவரை இருந்த கோபம், எரிச்சல், டென்ஷன் எல்லாம் மட்டுப்பட்டது போல் ஒரு உணர்வு.
அவள் கூந்தலில் முகத்தைப் புதைத்தபடியே, “நீ இல்லாம நான் எங்க போயிருக்கேன்? இதுவரை போனதில்லை, இனிமேயும் எங்கேயும் போக மாட்டேன்.” என வாசம் பிடிக்க,
“ம்ச்… கூசுது மாமா, விடுங்க… பிள்ளைங்க வந்துட போறாங்க.” என கெஞ்சினாலும், அவனிடமிருந்து விலக மனமில்லை பெண்ணவளுக்கு.
“ம்ம்ம்… இன்னைக்கு வெளிய போலாம், எங்க போகலாம் சொல்லு.” என மனைவியை விடாமல் கேட்க,
“ஆமா மாமா, நம்ம வெளிய போயே ரொம்ப நாளாயிடுச்சு. கண்டமனூர் முக்கு கடைக்கு போகலாமா? அங்க எல்லாமே சூடா இருக்கும். நதிக்கு பானி பூரியும், தம்பிக்கு அங்கு உள்ள ஜீரா தோசை ரொம்ப பிடிக்கும்.” என்றதும்,
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி. தேனிக்கு போயி ஒரு படம் பார்த்துட்டு, அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்னு லிஸ்ட் பெருசா போடுவனு பார்த்தா, பானிபூரியும் ஜீரா தோசைனு கேட்டுட்டு இருக்க…” என மனைவியிடம் செல்லமாக சலித்தபடி, அவள் நெற்றியில் முட்டிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
மனைவியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளிலேயே, அந்த நாட்களுக்கு சென்று வந்துவிட்டாள் என்று இளங்கோவிற்கு புரிந்தது. அவனும் அதைத்தானே யோசித்தான்.
“அன்னைக்கு சீனி சார் வீட்டு பங்க்ஷன் முடிஞ்சதும், நானே நாம எல்லோரும் மதுரைக்கு போறத பத்தி பேசுறதா தான் இருந்தேன். அதுக்குள்ள நதியும் சீனி சார் மனைவியும் சேர்ந்து எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டாங்க. சரி, கார்ல வரும் போதாவது நீயாவது கேட்பனு நினைச்சேன், ஒன்னுமே கேட்கல.” என்றான் பெருமூச்சுடன்.
அன்றைய சூழலில் அவள் எப்படி கேட்டுவிட முடியும்? கணவனும் பிள்ளைகளும் அவளை ஒதுக்கி வைத்திருந்த அந்த நிலை? இப்போது கூட அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் கணவனின் பேச்சுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
மீண்டும் இளங்கோவே ஆரம்பித்தான். “எனக்கு மதுரைக்கு ட்ரான்ஸ்ஃபர் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. நான் போகாம விட்டா சீனி சாருக்கு மேலும் பிரச்சனை வந்துடும். என்னதான் நான் பாத்துக்குறேன்னு அவர் சொன்னாலும், என்னால அவருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அதனால கண்டிப்பா நான் போகத்தான் வேணும். குறைந்தது மூனு வருஷம் அங்கே ஒர்க் பண்ற மாதிரிதான் இருக்கும்.
அதனால கண்டிப்பா நான் அங்க போயே ஆகணும். நாளைக்கு பாப்பாவோட ரிசல்ட் வந்துடும். அவளை மட்டும் மதுரை ஸ்கூல்ல சேர்த்துடலாம். தம்பி இங்கேயே இருக்கட்டும். அடுத்த வருஷம் அவனையும் மதுரையில சேர்த்துடலாம். அதுவரை நீயும் தம்பியும் இங்கேயே இருங்க, நான் வீக்லி ஒன்ஸ் வரேன். இடையில வீக்காஃப் கிடைச்சாலும் வந்துடுறேன். முடிஞ்சா பாப்பாவையும் கூப்பிட்டு வந்துடுறேன்.” என மனைவியின் முகத்தைப் பார்க்காமல் குனிந்தபடியே கடகடவென பேச, கொடிக்குள் சொல்ல முடியாத உணர்வு மேலெழும்பியது.
கணவன் முன்னமே தன்னிடம் அனைத்தையும் சொல்லத்தான் செய்திருக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த மனக்கசப்புகளில், அவள்தான் அனைத்தையும் தவறாக நினைத்துக் கொண்டாளோ என்ற யோசனை வர அமைதியாகி விட்டாள்.
“இந்த ஒரு வருஷம், உனக்கான நேரம். நீ என்ன செய்யணும் நினைக்கிறியோ செய்யலாம். என்னை மன்னிச்சு எங்க கூட இருக்க உனக்கு விருப்பம் இருந்தா, இப்ப வேணும்னாலும் நீ அங்க வந்துடலாம். நீயும் எங்க கூட வா என்று சொல்ற தகுதியை நான் இழந்துட்டேன். இனி உன்னோட முடிவு தான், என்னோட முடிவும். உனக்கு டைம் இருக்கு, யோசிச்சு முடிவு பண்ணு.” என்று சொல்லிவிட்டு மனைவியையே பார்க்க, அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
இத்தனை விளக்கங்களுக்குப் பிறகும் மனைவி தன்னை பார்க்கவில்லையே என்ற ஆதங்கமும் இயலாமையும் சேர, வேகமாக எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.
கணவன் பேசிவிட்டு சென்ற பிறகு, கொடிக்குள்ளும் பல யோசனைகள். அடுத்து என்ன செய்யலாம் என்ற மாதிரியான எண்ணங்கள்.
இப்படியே இருவரும் அவரவர் எண்ணங்களில் சுழல, அடுத்த நாள் நர்த்தனாவின் தேர்வு முடிவும் வர, நல்ல மதிப்பெண் எடுத்தே தேர்வாகி இருந்தாள்.
அனைவருக்கும் சந்தோசமே… கூடுதலாக சுப்புவிற்கு. பேத்தியைக் கொண்டாடித் தீர்த்து விட்டார்.
மகளை மதுரையில் சேர்ப்பதும் தன் வேலை மாற்றலையும், அன்றிரவே வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்லிவிட்டான் இளங்கோ.
கந்தவேலுதான் மகனிடம் கத்திக் கொண்டிருந்தார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை இளங்கோ. தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
கணவனின் இந்த முடிவை மனைவி ஏற்பாளா?
சில நேரங்களில் அதீத அன்பென்பது
உடன் இருத்தல் மட்டும் அல்ல, சற்று விலகியிருத்தலும் கூடதான்.
***
1 comment
Super & Very Interesting
😌😌😌
CRVS (or) CRVS 2797