Home Antiheroதூரம் – 32

தூரம் 32

“ப்பா, நான் அம்மாக்கூட இருக்கட்டுமா?” என்ற மகளிடம்,

“வேண்டாம் நதி, அத்தைக்கூட இரு, அவ தனியா இருக்கா பாரு. அம்மாக்கூட அமுதா பெரியம்மா இருப்பாங்க.” என்று மகளை நந்தினியிடம் போக சொல்ல,

“ம்ம் ப்பா…” என்றவளும் நந்தினியின் அறைக்குள் செல்ல, மகள் உள்ளே செல்லும் வரை நின்று பார்த்துவிட்டு, மற்ற வேலையை பார்க்க சென்றிருந்தான் இளங்கோ.

மாப்பிள்ளை வீட்டில்தான் திருமணம் என்பதால், முதல் நாளே பெண்ணழைப்பு முடிந்து மண்டபத்தில் இருந்தனர் அனைவரும். வெங்கடேஷும் அதே ஊர்தான் என்பதால், கொடியின் உடல்நலன் கருதி, வெங்கடேஷின் வீட்டில் அவளை இருக்க வைத்திருந்தனர்.

இன்னுமே கூட்டமான இடத்திற்கு செல்வதைத் தவிர்க்க சொல்லியிருந்தார் மருத்துவர். அதனால் அமுதாவிடம், “அண்ணி நீங்க அவக்கூட இருங்க. கல்யாணத்துக்கும் தாலி கட்டும்போது வந்தா போதும். நாங்க அங்க இருக்கோம்.” என்றுவிட, அமுதாவும் சரியென்றுவிட்டாள்.

ஆனால் கொடிக்குத்தான் அங்கு இருக்க சிரமமாக இருந்தது. வனிதாவை போலவே அவர்களின் சொந்தங்கள் இருப்பார்களா? யாரும் எதுவும் சொல்லி விடுவார்களோ என்ற பயம் வேறு. அதோடு அமுதா முன்னால் பேசினால் நிச்சயம் அவளும் பதில் பேசி பெரும் பிரச்சனையாக வாய்ப்பிருக்க, ஒருவித பதட்டத்துடனே தான் இருந்தாள்.

தங்கையின் பதட்டத்தை உணர்ந்த அமுதா, “கொடி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்காது. வனிதாவும் வெங்கடேஷும் ஏற்கனவே அவங்களை மிரட்டித்தான் வச்சிருக்காங்க. அப்படியே அவங்க வாய் திறந்தாலும் நான் பேசமாட்டேன், உன் மாமியாரே பேசுவாங்க. கவலைப்படாத…” என சிரிக்க, கொடிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

உண்மைதான்! வெங்கடேஷை விட வனிதாதான் தன் வீட்டாட்களை அடக்கி வைத்திருந்தாள். அப்படியும் பிரச்சனை செய்தால், “இளா மாமா மதுரை போறாங்க, அங்க அத்தையையும் மாமாவையும் பார்த்துக்க ஆளில்லன்னு இவர் வேற சொல்லிட்டு இருக்கார். நீங்க இப்படியே கொடி அக்காவை அவமானப்படுத்திட்டு இருந்தா, என்னை அங்க மொத்தமா கூப்பிட்டு போயிடுவார் பார்த்துகோங்க.” என மிரட்டி வைத்திருக்க, யாரும் வாய் திறக்கவில்லை.

“கொடி, மாத்திரை போடணுமே சாப்பிடுறியா? வெங்கடேஷ் கொண்டு வந்து கொடுத்துட்டு போனான்.” என்ற அமுதாவிடம்,

“ம்ம்…” என தலையசைக்க, அவளுக்கு சாப்பிட கொடுத்து சிறிது நேரத்தில் மாத்திரையும் கொடுக்க, கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல உறக்கம் வந்துவிட்டது.

அவளை உறங்க வைத்துவிட்டு வெளியில் வர, ஆனந்தியும் வனிதாவும் வந்தனர். அவர்களை விட்டுச் செல்ல வெங்கடேஷ் தான் வந்திருந்தான்.

மூவரையும் பார்த்து சிரித்தவன், “அண்ணி தூங்கிருப்பாங்க, நீங்க அரட்டையடிச்சு அவங்களை தொல்லை செய்யாதீங்க.” என கிண்டலடித்துவிட்டு செல்ல,

“கொழுப்ப பாரேன்…” என ஆனந்தி முறைத்துக் கொண்டே உள்ளே வர, மற்றவர்களும் சிரித்துக்கொண்டார்கள்.

கொடியின் தூக்கம் கலையாமல் பார்த்துவிட்டு வந்தவர்கள் ஹாலில் அப்படியே அமர, “ஏன்க்கா உங்களுக்கு இளா மாமா மேல கோபமே வரலையா?” என இருவரையும் பார்த்து கேட்டாள் வனிதா.

அவளுக்கு பல நாட்களாக இந்த சந்தேகம் உண்டு. இளங்கோ அவர்களின் கணவன்மார்களிடம் கூட கிண்டலாக பேசுவானே ஒழிய, இவர்கள் இருவரிடமும் அத்தனை மரியாதையாகத்தான் பேசுவான். அதை வனிதா பலமுறை பார்த்திருக்கிறாள்.

“கொடி மேலையும் தப்பு இருக்குத்தானே வனி.” என்றாள் அமுதா வழக்கம் போல பட்டென.

“ம்ப்ச் அம்மு…” என தங்கையை அதட்டிய ஆனந்தி, “இளா மேல எங்களுக்கு எப்பவும் கோபம் வராது வனி. அவனை மாதிரி ஒரு மாப்பிள்ளையை தேடினாலும் கிடைச்சிருக்காது. உங்களுக்கே தெரியுமே, அவன் எப்படி கொடியை பார்த்துக்கிட்டான்னு. அதை பார்த்து எங்க கண்ணே பட்டுடுச்சு போல, அதான் அவ வாழ்க்கையே நரகமா மாறிடுச்சு. ஏதோ ஒரு போறாத காலம், இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு, நடந்திடுச்சு. இனியாவது எல்லாம் சரியா நடக்கட்டும்.” என்றார் பெருமூச்சுடன்.

“நீங்க சொல்றதும் சரிதான்க்கா, ஆனாலும் மாமா மேல எனக்கு கோபம்தான். ரெண்டு வருசம் அக்காவை என்ன பாடு படுத்திட்டார். அக்கா சரியா கூட சாப்பிடமாட்டாங்க, தெரியுமா?” என வருத்தமாக கூறினார்.

“வீட்டு பொம்பளைங்க கடன் வாங்குறது எல்லாம் நடக்குறதுதான். ஆனா அது ஆம்பளைங்களுக்கு தெரியாம இருக்கலாமா, சொல்லு? ஒரு தடவைன்னா கூட பரவாயில்லை. மூனு தடவை, முதல் தடவை வாங்கும் போதே சொல்லியிருந்தா அடுத்தடுத்து இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே. அதுவும் இளாவுக்கே தெரியாம நகையை கொண்டு போய் வச்சது தான் அவனுக்கு ரொம்பவே கோபம் வந்தது. இத்தனைய மறைச்சவ இன்னும் என்னவெல்லாம் மறைச்சாளோனு தானே ஆம்பளைங்க மனசு யோசிக்கும்.” என ஆனந்தி கூற,

“ஆனாலும்…” என அப்போதும் வனிதா இழுத்தாள்.

“இந்த கந்து வட்டியால, லோன் வாங்குறதுனால எவ்வளவு பிரச்சனைகளை நாம தினம் தினம் நியூஸ்ல பார்க்குறோம். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, வெறும் 770 ரூபா பணம் கட்டலன்னு பொண்டாட்டியை கூப்பிட்டு போய் ஆஃபிஸ்ல உக்கார வச்சிருக்கான், அந்த லோன் கொடுத்தவன்.

அப்படியெல்லாம் நடந்திருந்தா என்ன செஞ்சிருப்பா சொல்லு? உதவி செய்ற எண்ணத்துல செஞ்சாலும், நம்ம பாதுகாப்பும் நம்ம குடும்ப சூழலும் அதுக்கு சரியா இருக்கானு பார்க்கணுமா, வேண்டாமா? நீயே எல்லாம் பார்த்துக்கோனு அவக்கிட்ட மொத்தமா எல்லா பொறுப்பையும் கொடுத்தா, இப்படி பொறுப்பில்லாம இருந்தா யாருக்குமே கோபம் வரத்தானே செய்யும்.” என அமுதாவும் கூற, இருந்தாலும் வனிதாவிற்கு மனதே ஆறவில்லை.

அவள் முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்ட இருவரும், “விடு வனி, சிலதுக்கு தீர்வு இல்லை. அப்படியே அதை கடந்து போய்டணும், கண்டிப்பா மறந்துடணும். இல்லைன்னா வாழ்க்கை நரகமாகிடும்.” என்ற ஆனந்தி வாசலில் நிழலாடவும் திரும்பி பார்க்க சுப்பு வந்து கொண்டிருந்தார்.

“வாங்கத்த, யார்கூட வந்தீங்க?” என ஆனந்திதான் கேட்டாள், வனிதா பேசக்கூட, ஏன் பார்க்கக்கூட இல்லை.

அமுதா, வனிதாவையே பார்க்க அவளோ சுப்புவை கண்டுகொள்ளாமல் எழுந்து சென்றுவிட, “என்னத்த உங்க மருமகளுக்கு என்ன கோபமாம், இப்படி மூஞ்ச திருப்பிட்டு போறா?” என அமுதா விளையாட்டாகத்தான் கேட்டாள்.

“சிங்கம் மாதிரி ரெண்டு பிள்ளைங்கள பெத்தேன். வெளியில இருந்து வந்தா ஒருத்தியும் மதிக்க மாட்டான்னுதான் ரெண்டு பேருக்கும் சொந்தத்துலயே எடுத்தேன். அதான் என்னை உக்கார வச்சு கஞ்சி ஊத்துறாளுங்க போல… நல்லா இருக்கும் போதே இந்த போடு. நானெல்லாம் விழுந்துட்டா கொண்டு போய் எதாச்சும் ஆசிரமத்துல விட்டுடுவாளுங்க போல…” என எரிச்சலும் கோபமும் சலிப்புமாய் சுப்பு பேச, வீட்டுக்குள் இருந்த வனிதா விறுவிறுவென வேகமாக வந்து தன் மாமியாரின் முன் நின்றாள்.

அவள் வந்த வேகத்தைப் பார்த்து அடித்து விடுவாளோ என்ற பயமே வந்துவிட்டது சுப்புவிற்கு.

“என்ன சொன்னீங்க… இல்ல, இப்போ என்ன சொன்னீங்க…?” என கோபமாகக் கேட்க,

அமுதாதான், “வனி என்ன பண்ற நீ? எதுக்கு இப்போ பெரியவங்ககிட்ட மரியாத இல்லாம பேசுற?” என அவளைப் பிடித்துக்கொள்ள,

“விடுங்கக்கா… இவங்க எல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டாங்க. இப்படி பேசிப் பேசியேத் தான் ஒரு வாயில்லா பூச்சிய படுக்க வச்சிட்டாங்க. இன்னும் யாரை படுக்க வைக்கணுமாம் இவங்களுக்கு?” என ஆத்திரமாக பேச,

“ஏய் என்னடி வாய் நீளுது? அண்ணன் புள்ளன்னு எல்லாம் பார்க்கமாட்டேன், கொஞ்சம் கூட மாமியார்ன்ற மரியாதை இல்ல. வரட்டும் உன் வீட்டாளுங்க, இன்னைக்கு இதுக்கு நியாயம் கேட்குறேன்.” என சுப்புவும் விடாமல் பேசினார்.

அவருக்கு மருத்துவமனையில் இருக்கும் போது உடனிருந்து பார்க்காத கோபம் உள்ளே கனன்று கொண்டேதான் இருந்தது. அதற்கு வழி செய்வது போல் இன்று வனிதா பேச, சரியாக பிடித்துக்கொண்டார்.

ஆனால் அவருக்குத் தெரியவில்லை, மருமகளிடம் அவர்தான் மாட்டிக்கொண்டார் என.

“என்ன வளர்ப்பு சரியில்ல? யாரை கேட்கணும் கேளுங்க. உங்களை வளர்த்த உங்க வீட்டு ஆளுங்கதான் என்னையும் வளர்த்தாங்க. அப்போ உங்களை மாதிரிதானே இருப்பேன். மாமியார்னு மரியாதை கொடுக்கணுமா? நீங்க முதல்ல உங்க மாமியாரை பார்த்தீங்களா? மரியாதை கொடுத்தீங்களா? இல்லையில்ல? என்ன செய்றோமோ அதுதான் திரும்பியும் கிடைக்கும். நீங்க உங்க மாமியார், மருமகளுங்களை நல்லா பார்த்திருந்தா, உங்களை அவங்க தங்கமா பார்த்திருப்பாங்க.

அதை விட்டுட்டு எதுடா சாக்கு கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்து, சின்ன மாமா இறந்ததும் உங்க அம்மா பேச்சைக் கேட்டுட்டு ஆச்சிய கொண்டு போய் சந்திராத்த வீட்டுல விட்டீங்க. அடுத்து கொடி அக்கா வாழ்க்கையையும் நாசம் பண்ணிட்டீங்க…” என கோபமும் ஆத்திரமும் சேர பேச, அமுதாவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுத்தும் கூட பேசிக்கொண்டே இருந்தாள் வனிதா.

“அவங்க வாழ்க்கையில எல்லா நாடகமும் நடத்தி முடிச்சாச்சு. இனி எங்க வாழ்க்கைதான் மிச்சம் இருக்கு, அதுக்கும் எதாவது ப்ளான் வச்சிருப்பாங்க.” என மேலும் பேச, சுப்புவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

தன் கைக்குள்ளே வளர்ந்த தன் அண்ணன் மகள், தன் வீட்டிற்கு வந்தால் தனக்கு ஒரு துணையாக இருக்கும் என்று நினைத்து, கணவனிடமும் மாமியாரிடமும் பெரியளவில் பிரச்சனை செய்தே வெங்கடேஷ், வனிதா திருமணத்தை முடித்தார்.

‘நான் எப்படி என் மகனின் வாழ்க்கையை கெடுப்பேன்?’ என யோசிக்கும் போதே, ‘ஏன் நீ செய்யவில்லையா? உன்னை மீறி உன் மகன் திருமணம் செய்துவிட்டான் என்பதற்காகவே, அந்த பெண்ணை அத்தனை கொடுமை செய்தாயே? அதோடும் விட்டாயா? சாக வேண்டும் என்ற எண்ணத்தையே அந்த பெண்ணிற்கு கொடுத்து விட்டாயே, உனக்கெல்லாம் இந்த தண்டனை பத்தாது.’ என மனசாட்சி சாட, முகம் அவமானத்தில் மொத்தமாக விழுந்துவிட்டது.

“விடு வனி, ஆளுங்க யாரும் வந்துடப்போறாங்க. வீணா பிரச்சினையாகிடும், அமைதியா இரு. அம்மு, நீ போய் கொடி கூட இரு.” என ஆனந்தி இருவரிடமும் கூற,

“எதுக்குக்கா என்னை அடக்குறீங்க? இன்னைக்கு கொடியக்காவுக்கு இந்த நோய் வர இவங்கதான் காரணம். அக்காவும் மாமாவும் பேசி ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருப்பாங்க. இவங்க இடைல போய் தேவையில்லாம பிரச்சனையை பெருசாக்கினதும் இல்லாம, பிள்ளைங்க மனசுலயும் விசத்த கலந்து விட்டுருக்காங்க. இதெல்லாம் குடும்பத்துக்கு நல்லதா? சொல்லுங்க…

ஒரு பொண்ணு நல்லா இருக்கணும்னா, இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்கலாமா? என்னக்கா இதெல்லாம்? இவங்க பேச்சை கேட்காம கல்யாணம் செய்தது இவங்க பையன். அவரைத்தான் இவங்க பேசணும், செய்யணும். அதை விட்டுட்டு அமைதியா இருக்குறவங்களை போட்டு ஏறி மிதிப்பாங்களா?

நம்ம வீட்டுலயும் நாலு பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கும் இப்படி ஒரு நிலை வந்தா என்ன செய்வாங்க? இவங்க செய்ற பாவமெல்லாம் எங்களைத்தானே சேரும். செய்றது எல்லாம் செஞ்சிட்டு, இவங்க போய் சேர்ந்துடுவாங்க. அந்த பாவத்தையெல்லாம் சேர்த்து கஷ்டப்படுறது யாரு?” என கோபம் கொஞ்சமும் குறையாமல் பேசிக்கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் அவள் வாயை அடக்க முடியாது என புரிந்த ஆனந்தி, அமுதாவிடம் கண்ணைக் காட்டிவிட்டு சுப்புவை அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டாள்.

சுப்புவிற்கு இது பேரதிர்ச்சி. நிச்சயம் வனிதாவிடமிருந்து அவர் இதை எதிர்பார்க்கவே இல்லை. அவரின் நிலையைப் பார்த்த ஆனந்திக்கும் வருத்தம்தான். ஆனால் வனிதா பேசியதில் எந்த தவறும் இல்லையே?! அதோடு பேசியது தன் தங்கைக்கு எனும் போது ஆனந்தி ஏன் வாயைத் திறக்கப் போகிறாள்?

“விடுங்க அத்த, அவ சின்னப் பொண்ணு தானே, போக போக சரியா போயிடும். நான் வெங்கடேஷ்கிட்ட சொல்லி, அவளை கொஞ்சம் சத்தம் போட சொல்றேன்.” என அவருக்கு தகுந்தது போல பேசி ஒருவழியாக சமாதானம் செய்து, “படுங்க அத்த, காலையில நேரமா எழுந்துக்கணும்.” என்றுவிட்டு வெளியில் வர,

இங்கு ஆனந்தியை முறைத்தபடியே உட்கார்ந்திருந்தாள் வனிதா. கூடவே கொடியும் அமுதாவும்.

“அக்கா இவ போட்ட சத்தத்துல தூங்கிட்டு இருந்தவளே எந்திருச்சு வந்துட்டா பாரு…” என அமுதா சிரிக்க,

“இதெல்லாம் நீங்க பேசணும், நான் பேசி வில்லியாகிட்டு இருக்கேன்.” என வனிதாவும் சிரிக்க,

“நீ பேசினா என்ன? நாங்க பேசினா என்ன? எல்லாம் ஒன்னுதான், நீங்கதான் ஒன்னா ஒரே குடும்பத்துல இருக்கப் போறீங்க. நாங்க இன்னைக்கு வந்துட்டு நாளைக்கு போயிடுவோம், எங்களுக்கு எதுக்குப்பா உங்க வீட்டு பிரச்சினை?” என அமுதா வனிதாவிடம் வம்பு பேச,

“பேசுங்க, பேசுங்க… எல்லாம் என் நேரம்.” என்றவள் கொடியிடம், “அக்கா நந்தினியோட நகையெல்லாம் உங்க பேக்ல இருக்குன்னு மாமா சொன்னாங்க, அதை வாங்கிட்டு போகத்தான் வந்தேன், அதுக்குள்ள எனக்கு ஒரு ஃபைட் சீன்.” என சலிக்க,

கொடியும் சிரித்துக்கொண்டே அமுதாவைப் பார்க்க, அமுதா தங்கையின் பையில் இருந்த நகைப்பெட்டியை எடுத்து கொடுக்க, சரியாக வெங்கடேஷும் நடேஷும் உள்ளே வந்தார்கள்.

“என்ன எல்லாரும் ஒண்ணா உக்காந்திருக்கீங்க? என் பொண்டாட்டி மட்டும் இதை பார்க்கணும், அவளை விட்டுட்டீங்கனு உங்ககூட ஒரு சண்டை, நான் அனுப்பலன்னு என் கூட ஒரு சண்டைனு டைம் பாஸ் பண்ணிருப்பா.” என்றபடியே நடேசன் வர,

“நான் சொன்ன மாதிரியே நீங்க அரட்டை அடிச்சு அண்ணியை எழுப்பிட்டீங்களா?” என வெங்கடேஷும் கிண்டலாக கேட்டபடியே உள்ளே வர,

“வாடா நல்லவனே! உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன். எப்ப இருந்துடா உன் பொண்டாட்டி பேயோட்டுற வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சா? கொஞ்சம் முன்னாடி வந்துருந்தா அவ பேயோட்டினத பார்த்திருக்கலாம்.” என அமுதா, வெங்கடேஷை கிண்டல் செய்ய, அதில் எல்லோரும் சிரித்துவிட, கொடி கூட லேசாக புன்னகைத்தாள்.

“இப்போதான் உனக்கே தெரியுதா? நேராவே பார்த்தியா? ஒரு நாளைக்கே உனக்கு எப்படி அல்லு விடுது, அப்போ தினம் தினம் அவ கூட இருக்குற என் நிலைமையை யோசிச்சுப்பாரு…” என்றவன் மனைவியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான்.

இளங்கோவும் முன்னாடியெல்லாம் அமுதாவையும் ஆனந்தியையும் வா, போ என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் திருமணம் ஆனபிறகு அப்படியே வழக்கத்தை மாற்றிவிட்டான்.

ஆனால் வெங்கடேஷும் நடேசும் அப்போதிருந்தே இதே மரியாதைதான்.

“ஒழுங்கா ஓடிருங்க, அடுத்து நீங்கதான் வாங்குவீங்க.” என கணவனையும் விட்டு வைக்காமல் திட்டித்தீர்த்து, மாமியார் இருக்கும் அறையைக் காட்டி “அக்கா, உள்ள ஒரு கண் வச்சிக்கோங்க. நான் காலையில பசங்களை எல்லாம் கிளப்பி விட்டுட்டு இங்க வந்து கிளம்பிக்கிறேன்.” என நகைப் பெட்டியுடன் கிளம்ப ஆண்களும் அவளுடனே கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பியதுமே கொடியின் முகம் வாடிவிட்டது. நந்தினியின் திருமணத்தில் அவளின் பங்கென்று எதுவுமே இல்லையே என்ற வருத்தமும் சேர்ந்து கொண்டது.

அதை உணர்ந்த ஆனந்தி, “கல்யாணத்தோட எல்லாம் முடிஞ்சிடாது கொடிம்மா. இனிதான் எல்லாமே இருக்கு. நீ நந்தினிக்கு செஞ்சி பழகிடு. அப்போதான் நதிக்கு செய்யும் போது திணறமாட்ட…” என தங்கையின் மனதை மாற்ற பேச, அது ஒரு வகையில் வேலை செய்தது.

சகோதரிகள் இருவரும் பேச, அதைக் கேட்டுக்கொண்டே கொடியின் அன்றைய இரவு கழிந்தது.

அடுத்தநாள் காலை ஏழு மணிக்கே முகூர்த்தம் என்பதால், நடேசனின் மனைவி நந்தினியுடன் இருந்ததால், வனிதா ஒருத்தியால் பிள்ளைகள் எல்லோரையும் ரெடி செய்ய முடியாது என அமுதா முன்னமே கிளம்பி மண்டபத்திற்கு சென்றுவிட்டாள்.

ஆண்கள் அனைவரும் வீட்டிற்கு வந்துதான் அவசரம் அவசரமாக கிளம்பி சென்றனர். முகூர்த்த நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் இளங்கோ வந்து மனைவியை அழைத்துச் சென்றான்.

கூட்டம் அதிகமில்லாத இடம் பார்த்து அவளை அமர வைத்துவிட்டு, அமுதாவின் மகன் விகாஷை மனைவியுடன் இருக்க வைத்தான்.

தன் பிள்ளைகளை எப்படியும் நந்தினி தேடுவாள் என்று அவனுக்குத் தெரியும். அதனால் நர்த்தனாவை தங்கையுடனே நிற்கவிட்டான்.

கந்தவேலுவும் சுப்புலக்ஷ்மியும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் செய்து, நந்தினியைத் தாரை வார்த்து கொடுக்க, மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கிக் கொண்டான் வினோத்.

வினோத்தின் குடும்பம் தவிர்த்து மீதியிருந்த அத்தனை பேர் கண்களும் கலங்கித்தான் போனது அந்த நொடி.

இந்த வாழ்க்கையாவது அவளுக்கு நீண்டு நிலைக்க வேண்டும் என்ற வேண்டுதல்தான் அனைவரிடமும்.

என்ன முயன்றும் அவளின் முன்னாள் திருமணம் அவர்களின் கண்ணுக்குள் மின்னலாய் வந்து போனதை, யாராலும் தவிர்க்கவே முடியவில்லை.

அடித்து, பிடித்து சண்டையிட்டு என எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், அன்யோன்யமாக வாழ்ந்த வாழ்வல்லவா அது?! அவையனைத்தும் வினோத்திற்கும் புரிய, மனைவியின் கையைப் பிடித்து அழுத்திக்கொடுத்தான்.

அதைப் பார்த்த சந்திராவிற்கு வேற என்ன வேண்டும்? தன் மகள் வாழ்ந்து விடுவாள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது அவருக்கு.

பேச்சியும் பேத்தியை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்க, இருவருக்கும் அருகில் வந்து நின்றான் இளங்கோ. அவனைப் பார்த்ததும் முகம் பூவாய் மலர்ந்து போனது இருவருக்கும்.

“அப்பத்தா கூட்டத்துல நிக்க வேண்டாம், அங்க கொடி கூட போய் உக்காருங்க.” என்றவனுக்கு தலையசைத்தவர் மருமகளைப் பார்க்க,

அவரோ இளங்கோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இதை சாத்தியமாக்கியவன் என் மகன் என்ற எண்ணம் சுப்புவிற்கு வந்ததோ, இல்லையோ சந்திராவிற்கு வந்தது. பார்வை மகளிடம் இருக்க, மகனின் கையைப் பிடித்தபடியே நின்றிருந்தார் நன்றி சொல்லும் விதமாக.

பெண்ணுக்கு மட்டுமில்ல, ஆணுக்கும் கருவறை உண்டு. அங்கே சுமப்பது குழந்தையை அல்ல, ‘குடும்பத்தை!’

***

You may also like

1 comment

M. Sarathi Rio August 4, 2026 - 2:44 pm

Super & Very, very interesting

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured