Home Antiheroதூரம் – 33

தூரம் 33

நந்தினியின் திருமணம் முடிந்து இரண்டு வாரம் ஆகியிருக்க மறுவீடு, விருந்து என அனைத்தும் முடிந்து அவளை வருசநாட்டில் விட்டபிறகே, இளங்கோவிற்கு சற்று ஓய்வு கிடைத்தது.

இடையில் மனைவியின் செக்கப், மகளின் ஸ்கூல் அட்மிசன் என அந்த வேலைகளும் சேர்ந்து கொள்ள ஓய்வே இல்லை.

இதில் நவீன் வேறு நர்த்தனாவை ஸ்கூல் மாற்ற வேண்டாம் என்று பிரச்சனை செய்ய, அவனை சமாதானம் செய்யவே போதும் போதுமென்றானது.

“அடுத்த வருடம் நாமும் போய்விடலாம்.” என கொடி மகனை சமாதானம் செய்ய, அதன்பிறகே அமைதியானான்.

கொடியின் தொண்டைக்குள் வைத்திருந்த அந்த டியூபை ஏற்கனவே நீக்கியிருக்க, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தாள்.

மனைவி, மகனுக்காக சொன்னாளா? இல்லை, தன் முடிவை சொன்னாளா? அவனுக்கு புரியவில்லை. ஆனாலும் அந்த ஒரு வார்த்தையில்தான் அவனுக்கான நிம்மதியே இருந்தது என அப்போதுதான் இளங்கோவிற்கே புரிந்தது.

நடேசனும் குடும்பத்துடன் டெல்லி கிளம்பிவிட, அவர்களின் வழக்கமான நாட்கள் தொடங்கியது.

அனைவரும் அவரவர் அன்றாட வேலைகளில் தொலைய, தனியே இருப்பது கொடிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

வீட்டு வேலைகளில் பாதியை நர்த்தனா செய்துவிட, சமையல் மொத்தமும் சுப்புவே முடித்துவிட கொடிக்கு பொழுதே போகவில்லை.

என்ன செய்வது எனத் தெரியாமல் நாட்களைக் கழித்து கொண்டிருக்க, அடுத்த நாள் மகளை ஹாஸ்டல் விடும் நாள் என்று ஞாபகத்திற்கு வர, அவளுக்குத் தேவையானதை எல்லாம் மெதுவாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

அன்று மாலை வீட்டுக்கு வந்தவனிடம், “ப்பா, நதி நாளைக்கு ஹாஸ்டல் போறா, இன்னைக்கு வெளிய போலாமா?” என நவீன் கேட்க நர்த்தனாவும், “போலாம்ப்பா.” என்றதும் இளங்கோ மனைவியைப் பார்க்க அவளோ, “நீங்க போயிட்டு வாங்க.” என்றுவிட்டாள்.

உடனே மற்ற மூவரின் முகமும் விழுந்துவிட அதைப் பார்த்தவள், “டேப்லட் போடுறதுனல எனக்கு டயர்டா இருக்கு நவீ, நீங்க போயிட்டு வாங்க.” எனவும்,

“ம்மா அதையே சொல்லாத, நாம எல்லாரும் வெளியே போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு. நதியும் நாளைக்கு ஹாஸ்டல் போயிட்டு அப்புறம் அவ எப்ப வருவாளோ? அவ இருக்கும் போதே போயிட்டு வரலாம்மா. சரி ஹோட்டல் எல்லாம் போக வேண்டாம், அத்தை வீட்டுக்கு போலாமா? அங்க போலாமாப்பா?” என உடனே தாயிடம் பேசிவிட்டு தந்தையிடம் கேட்க,

“ஆமாப்பா, அத்தைக்கும் சொல்லிட்டு அப்படியே பார்த்துட்டு வரலாம்.” என நர்த்தனாவும் சொல்ல, கொடிக்கும் மறுக்க முடியவில்லை.

ஏற்கனவே நர்த்தனா ஹாஸ்டல் போவதில் பெரும் பிரச்சனை செய்தவன், இப்போது அவள் வரவில்லை என்றால் இதற்கும் அழுது ஆர்ப்பாட்டம் செய்வான் என்று மகனைப் பற்றி புரிந்தவள், “சரி, போகலாம்.” என்றதும்,

“நவீ, சந்திரா பாட்டிக்கிட்ட போய் சொல்லிட்டு வா. நதி வெங்கடேஷுக்கும் நந்தினிக்கும் கூப்பிட்டு சொல்லு. நான் குளிச்சிட்டு வரேன்.” என நகர, கொடியும் தன் புடவையைப் பார்த்துவிட்டு, அது சற்று வெளுத்திருக்க வேறு புடவை மாற்றிக்கொண்டாள்.

தலையில் இப்போது சற்று முடி வளர்ந்திருக்க, எண்ணெய் வைத்து கையால் தடவி சரி செய்துகொண்டாள். இளங்கோ கிளம்பி வர பிள்ளைகளும் தயாராகி இருந்தனர்.

வீட்டு பெரியவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பும் நேரம் சரியாக சந்திராவும் வந்தார்.

நால்வரும் குடும்பமாக கிளம்பி போவதைப் பார்த்த சந்திராவிற்கு மனதே நிறைந்து போனது.

மூவரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப, கார் வருசநாடு நோக்கி சென்றது.

பிள்ளைகள் மட்டுமே பேசிக் கொண்டு வந்தாலும், அதை ரசித்துக்கொண்டே வந்த மனைவியைப் பார்க்கும் போது மனம் இதமாகத்தான் இருந்தது.

அதே இதம், நந்தினியைப் பார்த்துவிட்டு வெங்கடேசன் வீட்டிற்கு சென்று வந்த பிறகும், ஏன் அடுத்த நாள் மகளை ஹாஸ்டலில் விட்டு வரும்வரை இருந்தது.

நர்த்தனாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு, மதுரையில் இருக்கும் சீனிசாரின் வீட்டிற்கு காரை விட்டான் இளங்கோ.

இளங்கோவை முறைத்துக்கொண்டே கொடியை அணைத்துக் கொண்ட கவிதா வீட்டிற்குள் செல்ல,

“உன் வொய்ஃப் கூட உன்னை மன்னிச்சிடுவாங்க போல, என் வொய்ஃப் வாய்ப்பே இல்ல…” என சீனிசார் சிரிக்க,

“பரவாயில்ல சார், அப்போதான் செஞ்ச தப்பு மறக்காம இருக்கும்.” என்றவன் மகனுடன் உள்ளே நுழைந்தான்.

“பயப்பட எல்லாம் ஒன்னுமில்ல கொடி, நதிக்கு அவளோட ஸ்டடீஸ்க்கு இதுதான் நல்லது. உங்க ஊருமே கிராமம், அங்க டியூசன் சென்டர்னு என்ன இருக்கு? இனி அவளுக்கு படிக்கவும் நிறைய இருக்கும். தேனில இருந்து உங்க ஊருக்கு வர்றதுக்கே ஒரு மணி நேரமாகிடும். அடுத்து டியூசன் அது இதுன்னு புள்ள பாவம்.

இதே ஹாஸ்டல்னா எந்த பிரச்சனையும் இருக்காது. ஸ்டார்டிங்ல கஷ்டமா இருக்குமே தவிர, பழகிட்டா சரியாப்போகும். என் பொண்ணு பாரு போகவே மாட்டேன்னா, இப்போ லண்டன்ல இருந்து வரமாட்டேங்கிறா, பழகிடுவாங்க.” என தன்னால் முடிந்தளவு கொடியைத் தேற்ற, அவளுக்கும் இதெல்லாம் புரியத்தான் செய்தது.

பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு அவளும்தான் படிக்கவில்லையே. அதைப்பற்றி சொல்லாமல் கவிதா பேசினாலும் நிதர்சனம் புரியுமே, சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

மனைவியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் புரிந்தவன் கவிதாவைப் பார்க்க, அவரோ இப்போதும் அவனை முறைத்துக்கொண்டே, “கொடி நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும், பேசலாமா?” என தயக்கமாக ஆரம்பிக்க,

“என்னக்கா?” என்றவள் கணவனை வேகமாக பார்க்க, அவனோ கண்ணை மூடித்திறந்து அவளுக்கு சமாதானம் சொல்லி மகனிடம், “நவீ வா, அப்பாவோட ஆஃபிஸ் போய்ட்டு வரலாம்.” என அழைக்க, சீனி சாரும் அவர்களோடு கிளம்ப, இப்போது கவிதாவைத் தயக்கமாக பார்த்தாள் கொடி.

“ப்ளீஸ் கொடி, இப்படியெல்லாம் பார்த்து என்னை சங்கடப்படுத்தாத. நான் நடந்து முடிஞ்ச எதையும் பேசப்போறது இல்ல.” என வருத்தமாக சொல்ல,

“இல்ல… இல்லக்கா… எல்லோரும் அதையே பேசும்போது…” என திக்கித் திணற,

“ஹேய் விடு… நீ எனக்கு விளக்கமெல்லாம் சொல்ல வேண்டாம். இளாவைப்பத்தி எங்க வீட்டுகாரர் பேசும்போது எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் தெரியுமா? இளாவோட எந்த பேச்சு எங்க ஆரம்பிச்சாலும் அதுல நீயும் குழந்தைங்களும் இல்லாம இருக்க மாட்டீங்க. எத்தனையோ நார்த் இன்டியன் ட்ரிப் வந்துருக்கு, ஆனா எதையுமே இளா ஒத்துக்கிட்டு போனதில்லையாம்.

ஃபேமிலிய விட்டுட்டு போறமாதிரி இருந்தா எங்கிட்ட சொல்லாதீங்கனு இவர்கூட சண்டையே போடுவாராம்.” என நிறுத்த, அது கொடிக்கே தெரியுமே.

தவிர்க்க முடியாத சில சமயங்களில் குடும்பத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு போயிருக்கிறான். அதை இப்போது நினைத்தாலும் புன்னகைதான் கொடிக்கு.

“ஆனா இப்போ கண்டிப்பா ட்ரான்ஸ்ஃபர் வேணும்னு கேட்டு வாங்கிருக்கார். அது உன்னை விட்டுட்டு போறதுக்காகனு நீ நினைச்சிடக் கூடாதில்லையா? அது சீனிக்காக… அவருக்கு ஆப்போசிட்டா அந்த ஆஃபிஸ்ல ஏகப்பட்ட பாலிடிக்ஸ். இளாவுக்கு பதிலா சீனியே ட்ரான்ஸ்ஃபர் கேட்டுருப்பார் போல. ஆனா ஹையர்ல ஒத்துக்கல. இதெல்லாம் பார்த்துட்டுதான் இளா ட்ரான்ஸ்ஃபர்க்கு அப்ளை செய்திருக்கார்.

ஆனா சீனி அதுக்கு ஒத்துக்கல, இளா கண்டிப்பா வேணும்னு சொல்லி வாங்கிருக்கார். எல்லாம் சீனிக்காக… இளாவால் சீனிக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுனு தான் பண்ணிருக்கார்.” என கவிதா வருத்தமாக சொல்ல,

அன்று கணவன் கூறியதுதான். ஆனால் இந்தளவிற்கு பிரச்சனை இருக்குமென்று சொல்லவில்லையே… யோசனையாக கவிதாவைப் பார்க்க,

“இனி மூனு வருசம் இளா இங்கதான் இருக்கணும், அடுத்த வருசம் நவீனும் இங்க வந்துடுவான். நீ என்ன செய்ய போற?” என கேட்க,

அதில் அதிர்ந்தவள், “நான்… நான்… என்ன செய்யக்கா?” என திருவிழாவில் காணாமல் போனவள் போல விழிக்க,

“கொடி நான் ஒன்னு சொல்வேன், என்னைத் தப்பா நினைச்சிக்கக்கூடாது. நீ ஏன் மறுபடியும் படிக்கக்கூடாது? உன் திறமைக்கும் அறிவுக்கும் நீ படிச்சா பெரியாளா வருவ.” என தன் எண்ணத்தை சொல்ல,

“க்கா, நான் எப்படி? பிள்ளைங்க படிக்கிற வயசுல நான் என்ன படிக்க? அதெல்லாம் வேண்டாம் க்கா…” என கொடி திணற,

“அப்படியெல்லாம் யோசிக்காத கொடி, முதல்ல உன்னால முடியும்னு நினை. உன் மேல நீ நம்பிக்கை வை. நீ படிக்கிறனு சொன்னா போதும், இளா யோசிக்கவே மாட்டார். உடனே சரின்னு சொல்வார்.” என்றதும்,

“ஆனா… இப்போ போய் காலேஜ் எல்லாம்… நினைச்சாலே ஒருமாதிரி இருக்குக்கா.” என்றவளுக்கும் ஆசை துளிர்விட்டது.

“கொடி நீ இன்னும் எந்த உலகத்துல இருக்க? காலேஜ்ல போய் படிக்கணும்னு அவசியமே இல்லை. இப்ப எல்லாம் ஆன்லைன் கிளாஸ் எவ்வளவோ வந்துருச்சு. டிகிரியும் கரஸ்ல படிச்சா போதும். எக்ஸாம் மட்டும் போய் எழுதிட்டு வரலாம். உனக்கு ஓகேவா சொல்லு. என் ஃபிரண்டு கோச்சிங் கிளாஸ் வச்சிருக்கா, சேர்ந்திடலாம்.” என கொடியின் ஆசையைத் தூண்டி விட்டார் கவிதா.

“அவர்கிட்ட கேட்டுட்டு சொல்லட்டுமா? அவர் என்ன சொல்வார்னு தெரியலையே…” என தயக்கமாகவும் பயமாகவும் கொடி கேட்க,

“என்ன சொல்வார்? அதெல்லாம் ஒன்னுமே சொல்லமாட்டார். இதை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார். ஏற்கனவே நீ மட்டும் தனியா வீட்ல இருக்கணுமேனு பயந்துட்டுதான் இருக்கார். நீ படிக்கிறேன்னு சொன்னா போதும், உடனே சரின்னு சொல்லிடுவார்.” என கொடியின் பயத்தை மெல்ல மெல்ல போக்கி, அவளுக்குள் தன்னம்பிக்கையைத் துளிர வைத்தார் கவிதா.

கொடிக்குள்ளும் பல நாளாக இந்த யோசனை ஓடிக்கொண்டுதான் இருந்தது.

படித்திருந்தால் தன்னை யாரும் இப்படி ஏமாற்றி இருக்க வாய்ப்பில்லையே என்ற எண்ணம் எப்போதும் உண்டு அவளுக்கு. அதனாலே கவிதா கேட்டதும் அவள் கண்களில் படிக்கும் ஆர்வம் வந்துவிட்டது.

“என்ன படிக்கலாம் க்கா? எனக்கு இதைப்பத்தி ஒன்னும் தெரியல.” எனவும்,

“அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல, சீக்கிரம் கத்துக்கலாம். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம், நீ ஸ்கூல் படிக்கும்போது உனக்கு ஒரு ஆசை இருக்கும் இல்ல. நீ என்ன ஆகணும்னு நீ யோசிச்சு வச்சிருப்ப இல்லை. அதை சொல்லு, இப்போ அதை செய்ய முடியுமா பார்க்கலாம்.” என கவிதாவும் ஊக்குவித்தாள்.

“நான்… நான் அப்போ டீச்சர் ஆகணும்னு நினைச்சேன். டீச்சர் ட்ரைனிங் படிக்கணும்னு ஆசை.” என தயங்கியபடியே கூற,

“அட! இது நல்லா இருக்கே… இன்னைக்கு டீச்சர்ஸ்க்குதான் டிமாண்டே… சரி, அப்போ ஒன்னு பண்ணலாம். ஒரு டிகிரி அப்ளை பண்ணலாம். அப்படியே என் ஃப்ரண்டு மாண்டசோரி கிளாஸ் எடுக்குறா, அதுல ஆன்லைன் கிளாஸ் சேர்ந்துக்கலாம். இது ஆறு மாசம் ஆன்லைன் கோர்ஸ் தான். எக்ஸாம் மட்டும் போய் அட்டென்ட் பண்ணிட்டு வர மாதிரி இருக்கும்.

இந்த ஆறு மாசம் முடிஞ்சதும், ஃபர்ஸ்ட் அவகிட்டயும் ஒர்க் பண்ணலாம். அப்புறம் தனியா ஸ்கூல் ஓபன் செய்து, நீயே எல்லாருக்கும் கிளாஸ் எடுக்கலாம். இந்த ஐடியா பெட்டரா இருக்கும்னு எனக்கும் தோனுது. உனக்கு ஓகேவா? எங்கேயும் அலைய வேண்டியதில்லை. படிக்கிறதும் சிரமம் இல்லை. என்ன, பண்ணலாமா?” என கவிதா விடாமல் அவளின் ஆசையைத் தூண்டிக்கொண்டே இருக்க, கொடியின் விழிகளிலும் அவளது கனவு விரிந்தது.

“ம்ம்… ஓகேதான் க்கா, அவர் என்ன சொல்வாரோ தெரியல. அவர்கிட்ட கேட்டு முடிவு பண்ணிக்கலாம்.” என முடிக்கவும், மற்றவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வந்தவன் முதலில் மனைவியைப் பார்த்துவிட்டு பின் கவிதாவைப் பார்க்க, அவருமே அவனை முறைத்துக் கொண்டே கண்ணை மூடித்திறக்க, “ஊப்ஸ்…” என்று ஒரு பெரும் மூச்சை விட்டவன் தளர்ந்து போய் அந்த சோபாவில் அமர்ந்தான்.

கணவனிடம் தான் சொல்வதா? இல்லை கவிதா சொல்வாரா என தலையைக் குனிந்து குழப்பத்தில் இருக்க, அவளுக்கு அந்தக் கஷ்டமும் தேவையில்லை என்பது போல, கவிதாவே அனைத்தையும் இளங்கோவிடம் பேசினார்.

கவிதா பேசியதைக் கேட்ட நவீன், “வாவ்! அம்மா நீ சூப்பர்மா! நிஜமாவா ம்மா? நீ படிக்க போறியா? சூப்பர் ம்மா!” என கொடியை அணைத்துக்கொள்ள, ஆனால் அவள் பார்வையோ கணவனிடம் இருந்தது.

அவன் என்ன சொல்வானோ என்ற பதட்டத்தில் இருந்தவளைக் கண்டவனுக்கு தன் மீதே எரிச்சல் வந்தது.

ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ஒரு மணி நேரம் உங்ககிட்ட விட்டுட்டு போனதுக்கு, இன்னைக்குதான் உருப்படியா ஒரு காரியம் செஞ்சிருக்கீங்க.” என கவிதாவை கலாய்த்தபடியே தன் சம்மதத்தைக் கூற, கொடியின் விழிகளில் கண்ணீரின் பளபளப்பு.

விழிகள் கசிந்தாலும் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

கொடியின் வாழ்க்கையிலும் சிறு மாற்றம் ஏற்பட்டது.

நல்ல நாட்களை அடைய சில மோசமான நாட்களைக் கடந்து தான் ஆகவேண்டும்.

எல்லா துயரங்களையும் ஆற்றி (மாற்றி) விடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. அதற்கு தேவை, ‘பொறுமை!’

***

You may also like

1 comment

M. Sarathi Rio August 5, 2026 - 1:05 pm

Super & Very Very Interesting

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured