Home Antiheroதூரம் – 34

தூரம் 34

அப்போதே கவிதா தன் தோழியிடம் பேசி கொடிக்கு அட்மிசனை வாங்கிவிட்டார். அன்றே அந்த இன்ஸ்டியூட் சென்று பணத்தையும் கட்டிவிட்டு புத்தகங்களுடன் தான் வீட்டிற்கே சென்றனர் கொடியின் குடும்பத்தினர்.

கொடிக்குள்ளும் நம்பிக்கையின் வேர் துளிர்க்க ஆரம்பிக்க, அந்த வாரத்திலிருந்து இளங்கோ மதுரை ஆபீசிற்கு செல்ல வேண்டும். மனைவியிடம் ஆயிரம் பத்திரங்கள் கூறினாலும், மகனிடம் கொடியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நூறு முறை கூறியிருப்பான்.

“ப்பா, நீங்க சொல்லாமலே எனக்கு தெரியும். நான் நல்லாவே பார்த்துப்பேன். நீங்கதான் தனியா இருக்கீங்க, நீங்க உங்களை நல்லா பாத்துக்கோங்க.” என சிரித்துக்கொண்டே நவீன் கூற, அதில் பெற்றோர்களுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

அடுத்த நாள் இளங்கோ மதுரை செல்ல வேண்டும், அடுத்த சனிக்கிழமைதான் திரும்ப வர முடியும். இந்த ஒரு வாரம் எப்படி இவர்களை விட்டு இருப்பது என்பது தான், இளங்கோவின் மிகப் பெரிய கவலை.

எத்தனையோ சண்டைகளும் சச்சரவுகளும் வந்திருந்தாலும் கூட, வீட்டை விட்டு தனியே என்று எங்கேயும் இளங்கோ சென்றதில்லை. மனைவியோடு நடந்த அத்தனை பிரச்சனையிலும் கூட அவளை விட்டு இருக்கவில்லை தானே?

மதுரை செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் வந்த போது கூட, மனைவியின் மேல் இருந்த கோபத்தை ஒரு சாக்காகத்தான் எடுத்துக் கொண்டான். குடும்பத்தை விட்டு பிரிவது இளங்கோவிற்கு இதுவே முதல்முறை.

தன் பிரிவு மனைவியின் மனதில் இருக்கும் ரணங்களை ஆற்றும். அவளை பழையபடியே தன்னிடம் மீண்டும் காதலோடு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் தான் மதுரைக்கு கிளம்புகிறான்.

அன்றிரவு மனைவியின் கைகளைப் பிடித்தபடியே வெகுநேரம் அமர்ந்திருந்தான் இளங்கோ. இருவரும் எதுவுமே பேசவில்லை. பேசவும் தோன்றவில்லை. பேச்சு எங்கிருந்து ஆரம்பித்தாலும், ‘ஏன் இப்படி ஆனது?’ என்ற கேள்விதான் முன் வந்து நிற்கும்.

மீண்டும் மீண்டும் அதைப்பற்றி பேசப் பிடிக்கவில்லை. அமைதியாக அந்த தருணத்தை உள்வாங்கிக் கொண்டனர்.

“இங்க இருந்துப்பியா? தனியா இருந்துப்ப தானே? வேற வழி இல்ல, இருந்துக்கணும்.” இந்த மூன்று வார்த்தைகள் தான் அவனிடமிருந்து மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

கணவனின் குரலில் இருந்த நடுக்கமும் பயமும் கொடியை எதுவோ செய்ய தானாகவே அவள் இதழ்கள், “நான் இருந்துப்பேன்.” என்ற வார்த்தையை உதிர்த்து, அவனை சமாதானப் படுத்தியது.

அவன் மனதில் மனுஷ்ய புத்திரனின், ‘சீக்கிரம் வரேன், நான் இல்லாமல் நீ வாழ கற்றுக்கொள்வதற்கு முன்.’ என்ற வரிகள் ஓடிக்கொண்டிருந்தது.

அன்றிரவு இளங்கோவிற்கு தூக்கமே இல்லை. உறங்கிய மனைவியின் கையைப் பிடித்தபடியே படுத்திருந்தான்.

அடுத்த நாள் எப்போதும் போல் விடிய, மகனை பள்ளியில் விட்டுவிட்டு இளங்கோ மதுரைக்கு பயணமானான்.

கொடியை இன்னும் சிறிது காலம் வேலை எதுவும் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்க, கொடியை ஒரு வேலை செய்ய விடுவதில்லை மாமியார்கள் இருவரும்.

சுப்பு காலையிலேயே அனைவருக்கும் சமைத்து விட, இரவுக்கு சந்திரா செய்து விடுவார். மேல் வேலைக்கு ஆட்கள் இருக்க, பெரிதாக கஷ்டமும் இல்லை.

கொடி காலையில் ஆன்லைன் க்ளாசில் மான்டோசரி வகுப்பை அட்டெண்ட் செய்வதும், மாலையானால் மகனுடன் சேர்ந்து கல்லூரி பாடங்களைப் படிப்பதும் என அவளின் நாட்கள் சுவாரஸ்யமாக கடந்தது.

கணவன் வாரம் ஒருமுறையும் மகள் மாதம் ஒருமுறையும் என வந்து போக, பிரிவை ஒருவாறு ஏற்க பழகியிருந்தனர் அந்த குடும்பத்தினர்.

இப்படியே நாட்கள் கடந்து மாதங்களுமாகிட, கொடியின் முதல் தேர்வும் முடிந்தது.

முதல் நாளே சங்கர் மகளை அழைத்துச் சென்று இளங்கோவிடம் விட்டுவிட்டு வந்தார். அன்றிரவு கவிதாவின் வீட்டில் தங்கியவள், அடுத்த நாள் கணவனுடன் சென்று தேர்வை எழுதிவிட்டு வந்தாள்.

தேர்வு எழுத காரில் ஏறியதிலிருந்து, “பயப்படாத… இது ஒன்னும் ஐஏஎஸ் எக்ஸாம் இல்ல, ஜஸ்ட் போய் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துடு, நெர்வஸ் ஆகாத…” என மனைவியிடம் இல்லாத பதட்டத்தை, இவனே கொண்டு வந்துவிடுவது போல பேசிக் கொண்டே வந்தான்.

அவள் எக்ஸாம் முடிந்து திரும்பி வரும் நேரம், “நல்லா பண்ணலன்னா பயப்பட வேண்டாம், நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்.” என மீண்டும் ஆரம்பிக்க,

“நல்லாத்தான் பண்ணிருக்கேன், கண்டிப்பா நல்ல பெர்சென்டேஜ்தான் வரும்.” என நம்பிக்கையாக சொல்லவும் தான் அமைதியாக இருந்தான்.

அன்று மாலையே அவளை ஊரில் விட வந்துவிட்டவன் அடுத்த நாளே மீண்டும் மதுரை கிளம்பியிருந்தான்.

கொடி இப்போது மிகவும் சந்தோஷமாகவே இருந்தாள். அதை பார்க்கும் எல்லோருக்குமே புரிந்தது. முக்கியமாக சங்கருக்கு. மகளின் வாழ்க்கையை நினைத்து கலங்காத நாட்களே இல்லையே… இப்போது அவள் முகத்தில் தெரியும் ஒளியில் நிம்மதி அடைந்தார்.

ஆசையாய் படிக்க நினைத்தது, நிராசையாகவே போய்விட்டதென நினைத்து உள்ளுக்குள் மருகி, பின் கிடைக்கவே கிடைக்காது என்று தன் மனதை தேற்றி, ஒருவாறு இந்த வாழ்க்கைக்குள் தன்னை புகுத்தி வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு, நீ ஆசைப்பட்டது உன்னிடமே வந்து விட்டது. உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள் என காலம் அவளுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க, ஏனோ அதை விட்டுவிட மனமில்லை பெண்ணுக்கு.

இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்த கொடி என்றால் நிச்சயம் யோசித்திருப்பாள். ஏன், வேண்டவே வேண்டாம் என்று கூட கூறியிருப்பாள்.

ஆனால் இப்போதுள்ள கொடியோ அனுபவப்பட்டவள், பக்குவப்பட்டவள், வாழ்க்கையில் எது முக்கியம் என உணர்ந்தவள். அதனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

அன்று நந்தினியும் வினோத்தும் வீட்டிற்கு வந்திருந்தனர். நந்தினியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே நல்ல செய்தி என்பதை சொல்லாமல் சொல்ல, பல மாதங்களுக்கு பிறகு அப்போதுதான் சமைக்கவென சமையலறைக்குள் நுழைந்தாள் கொடி.

வேகமாக கேசரியை செய்ய ஆரம்பிக்க, சந்திராவும் சுப்புவும் நந்தினியை விட்டு நகரவே இல்லை. கந்தவேலுதான் மகன்களுக்கு அழைத்து சொல்ல, அது வாரக் கடைசி என்பதால் நர்த்தனாவை அழைத்துக்கொண்டு இளங்கோ வருவதாக கூற, வெங்கடேஷும் வந்துவிட்டான்.

சம்மந்தியிடம் பேசி அடுத்தநாள் அனுப்புவதாகக் கூறிய கந்தவேலு, மகளுக்கு என்னென்ன வாங்கவேண்டும் என பேச்சியிடம் கேட்க சென்றுவிட்டார்.

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும், பார்த்த பிறகு தன் முடிவு எவ்வளவு சரியென்று புரிந்துகொண்டாள் நந்தினி.

நடேசனும் அவன் மனைவியும் நந்தினியை அழைத்து வாழ்த்து சொல்ல, அனைவருக்கும் கேசரியை கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் கொடி.

சற்று நேரத்தில் இளங்கோ மகளுடன் வந்துவிட, “அத்த…” என நந்தினியைக் கட்டிக்கொண்டு, “நாளைக்கு அங்க வரணும்னு அப்பாக்கிட்ட சொன்னேன், நீங்களே வந்துட்டீங்க.” என நர்த்தனா குதிக்க, நந்தினியும் மருமகளை அணைத்துக்கொண்டாள்.

கொடி மகளையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இவளா தன்னை மதிக்காமல், திமிராக இருந்தவள்?’ என்று கொடிக்கே சந்தேகம் வந்துவிடும்.

அந்தளவிற்கு இப்போதெல்லாம் நர்த்தனாவிடம் மிகப்பெரிய மாற்றங்கள். ஹாஸ்டல் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் மிகவும் தயங்கி தயங்கி, ‘அந்த பிரச்சனையை’ கூறினாள். கூறிவிட்டு குற்றவுணர்ச்சியில் தாயைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்க, மகளுக்கு புரியும் வகையில் பேசி பலதையும் புரியவைத்து தான் அனுப்பினாள் கொடி.

மகள் திருந்ததான் இப்படியொரு பிரச்சனை வந்ததோ என்று கூட யோசித்திருக்கிறாள். மனைவியின் பார்வை மகளிடமே இருக்க, அவளை நெருங்கிய இளங்கோ, “என்னம்மா?” என்றதும்,

“ரொம்ப வளர்ந்துட்டா உங்க பொண்ணு.” என்றாள் புன்னகையுடன்.

பல நாட்கள் கழித்து இலகுவாக பேசிய மனைவியைப் பார்த்து ஆச்சரியமாக புருவத்தை உயர்த்திய இளங்கோ, “அவ நம்ம பெண்ணு.” என்றான்.

அதை கேட்டும் கேட்காது போல, “நவீ, அப்பத்தாவுக்கு சாப்பாட்டை கொடுத்துட்டு வா, தாத்தா அங்கதான் இருக்கார்.” என மகனிடம் பேசியபடியே நகர்ந்துவிட, இளங்கோவின் இதழ்கள் இறுக்கம் தளர்ந்து மெல்ல சிரித்தது.

அன்றைய நாளுக்கு பிறகு பழைய இறுக்கம் இல்லாமல் சாதாரணமாக கணவனிடம் பேச ஆரம்பித்தாள் கொடி. ஆனால் நடந்ததை மறந்துவிட்டாளா என்றால் இல்லைதான். இப்படியொரு மாற்றத்தை கொடுத்த காலம், அதையும் மாற்றும் என்று நினைத்தாள்.

நவீன் படிப்பில் மிகவும் தீவிரமாக இருந்தான். அவன் படிப்பதைப் பார்த்து கொடிக்கு மேலும் ஆசைதான் வந்தது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க, இவர்களைப் பார்த்த பெரியவர்கள் கூட கிண்டலடித்து சிரித்தனர்.

வார இறுதியில் வரும் இளங்கோவோ இருவரையும் முறைத்துக் கொண்டேதான் இருப்பான். சுப்புவிற்கு இதை பார்த்து கோபம் வரும்தான். ஆனால் இனி இவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைத்து அவமானப்பட அவர் தயாரில்லை. அதனால் கண்டும் காணாமல் இருக்கக் கற்றுக்கொண்டார்.

நந்தினிக்கு ஐந்தாம் மாதம் பூ வைத்துவிட்டு வந்தபிறகு, கொடியின் இரண்டாம் தேர்விற்கு சென்று வந்தார்கள். இந்த முறை இளங்கோ வாயையே திறக்கவில்லை.

அவள் படிப்பதைத் தான் பார்த்தானே… அதனால் எப்படியும் நன்றாக எழுதிவிடுவாள் என்று நினைத்து அமைதியாகி விட்டான்.  தேர்வு முடிந்ததுமே, அதே இன்ஸ்டியூட்டில் அபாகஸ் பயிற்சிக்கும் சேர்த்துவிட்டான்.

‘என்ன’ என்று பார்த்த மனைவியிடம், “கண்டிப்பா இதுவும் உனக்குத் தேவைப்படும். இதற்கு எக்ஸாம் எல்லாம் இல்லை. சிக்ஸ் மந்த் கோர்ஸ் முடிஞ்சதும் சர்டிஃபிகேட் கொடுத்துடுவாங்க. நாம தனியா இன்ஸ்டியூட்டே வைக்கலாம்.” என்றதும்,

விழிகளை விரித்து அவனைப் பார்த்தவள், “தேங்க்ஸ்!” என்றாள் மலர்ந்த புன்னகையுடன்.

அந்த புன்னகை மனைவி, அவனுக்கு கொடுத்த மகுடமாகவே நினைத்தான். அன்று ஊருக்கு போகாமல் தான் தங்கியிருக்கும் குவார்டஸிற்கு அழைத்து சென்றான்.

தனி தனி குவார்டஸ்தான். வீட்டின் முன்னே பூந்தோட்டம் போல மிகவும் அழகாக பராமரிக்கப்பட்ட இடமும் இருந்தது. அதைப் பார்த்ததுமே கொடியின் முகம் பூவாய் மலர்ந்தது.

“குவாட்டர்ஸ்னதும் நான் வேற மாதிரி யோசிச்சேன் மாமா, ஆனா இது ரொம்ப நல்லா இருக்கு. இங்க எல்லாருக்குமே இப்படித்தான் இருக்குமா?” எனது தன் கூட்டை விட்டு வெளியில் வந்து பேச,

“ஆமா, நீ நினைச்சதும் சரிதான். லேபர்ஸ் குவாட்டர்ஸ் எல்லாம் அப்படித்தான் இருக்கும், இது ஹையர் ஆபிசருக்கான குவாட்டர்ஸ். இது கொஞ்சம் ரிச் லுக்குலதான் இருக்கும்.” என்றபடியே வீட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

பொருட்கள் ஏதும் இல்லாமல் வீடு வெறிச்சென்று இருந்தாலும், பார்க்க மிகவும் அழகாக இருந்தது.

கிச்சனில் மட்டும் ஒரு இன்டக்ஷன் ஸ்டவ்வும் சில பாத்திரங்களும் இருக்க, அவசரத்திற்கு தேவையானதை மட்டும் செய்துகொள்ள பயன்படுத்துவான் என்று புரிந்தது.

மூன்று அறைகள், கிச்சன், ஹால் என இருந்த வீட்டை சுத்தி பார்த்துவிட்டு, ஹாலுக்கு வர இளங்கோ உடைமாற்றி அமர்ந்திருந்தான்.

“இன்னைக்கு வீட்டுக்கு போகலையா மாமா? நவீ வந்து தேடுவான்.” என தாயாக பரிதவிக்க,

“இல்ல, எனக்கு காலையிலிருந்து தலை வலிக்கிற மாதிரி இருந்துச்சு. இப்போ லைட்டா உடம்பும் சுடுது. இதோட டிரைவ் பண்ண முடியாது. இப்போ சாப்பிட்டு டேப்லட் எடுத்துக்கிறேன். நாளைக்கு நதிக்கும் லீவுதானே, அவளையும் கூப்பிட்டு மார்னிங் கிளம்பலாம்.” என்றவன் கண்ணை மூடி சோபாவில் சாய்ந்துவிட,

கணவனின் அருகில் வந்தவள், அவன் நெற்றியில் கையை வைத்து பார்க்க நன்றாக சூடு தெரிந்தது.

“ரொம்ப சூடா இருக்கே, ஃபீவர் அதிகமா இருக்கு போல மாமா… ஹாஸ்பிடல் போலாமா? இங்க பக்கத்துல எங்க ஹாஸ்பிடல் இருக்கு, சீனி சார்க்கு கூப்பிடவா?” என பதட்டமாக கேட்க,

“அதெல்லாம் வேண்டாம், இப்போ ஒருத்தர் சாப்பாடு கொண்டு வந்து தருவார். சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்கி எழுந்தா சரியா போகும். நீ டென்ஷன் ஆகாம, போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா.” என்றதும்,

“இல்ல மாமா, ஹாஸ்பிடல் போயிடலாம். எனக்கு பயமா இருக்கு.” என தவிப்பாக சொல்ல,

மனைவியின் முகத்தில் தெரிந்த பதட்டமே அவள் நன்றாகவே பயந்துவிட்டாள் என்பது புரிந்தது.

பல மாதங்களுக்குப் பிறகு, மனைவியை இப்படி பார்க்கிறான். அவன் மனதுக்குள் இதமாய் சாரல் வீசியது நிஜமே!

அந்த இதத்தை அனுபவிப்பவனாக, மனைவியின் கையைப் பிடித்து தன் கழுத்தடியில் வைத்து, கண்களை மூடிக்கொண்டான்.

கணவனின் நெருக்கமும் அவன் உடல் சூடும் கொடியை தவிக்க வைக்க, மெல்ல தன் கைகளை உருவ முயல, முடியவில்லை.

அத்தனை இறுக்கமாக பிடித்திருந்தான் இளங்கோ. மீண்டும் உருவ முயன்று தோற்றவள், அது முடியாமல் பின் அப்படியே தன் கையை விட்டுவிட்டு அமர்ந்து கொண்டாள்.

சில நிமிட நேரங்களில், கொடியும் தூக்கக் கலக்கத்தில் அவன் மீதே சாய்ந்து உறங்கிவிட்டாள்.

தன்மேல் கனத்தை உணர்ந்தவன், மெல்ல கண்ணைத் திறக்க, அவனுக்கோ இன்ப அதிர்ச்சி.

மனைவி தெரிந்து எல்லாம் தன் மீது படுத்து தூங்க மாட்டாள் என்பது அவனுக்கு புரியும். நிச்சயம் இது அவளறியாமல் நடந்ததுதான்.

“கோபத்தில் புரியாமல் செய்த இந்த மாமாவை மன்னிக்க மாட்டியா பூம்மா?” என்றவன், தன் நெஞ்சத்தில் இருந்த மனைவியின் முகத்தை வருடியவாறு முணுமுணுக்க,

உறக்கத்தில் இருந்தாலும் கணவனின் முணுமுணுப்பு அவளையும் எட்டத்தான் செய்தது. அதைக் கேட்டவளின் முகம் கசங்கிப்போனது.

எத்தனையோ மாற்றங்களைக் கொடுத்த காலம் இதையும் மாற்றும் என்ற நம்பிக்கையுடன், விழிகளில் வடிய இருந்த நீரை கட்டுப்படுத்திக் கொண்டு அப்படியே படுத்திருந்தாள் கொடி.

ஒவ்வொரு நாளும் காத்துக்கொண்டு தான் இருக்கிறேன். முன்பு போல் என்னிடம் பேசுவாய் என்று. என் காதலோடு நான் பேசிவிட்டேன். நீயாவது உன் காதலோடு பேசு.

***

You may also like

1 comment

M. Sarathi Rio August 6, 2026 - 3:39 pm

Super & Very Very Interesting

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured