அத்தியாயம் – 02
மதிய வெயில் மெல்ல மாலையை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. சாலையின் நிறம் கூட மாறியிருந்தது. சில மணி நேரங்களுக்கு முன் வெப்பத்தில் வெண்மையாகக் காய்ந்திருந்த தார் சாலை, இப்போது சூரியன் சாய்ந்த ஒளியில் மங்கலான பொன்னிறத்தைப் பூசிக் கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை மெதுவாக நகரத்தின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தது.
காரின் உள்ளே மாற்றம் எதுவும் இல்லை.
அதே அமைதி. அதே நிதானம். அந்த அமைதியை இருவரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
ஒவ்வொரு உறவிலும் ஆரம்பத்தில் நிறையப் பேச்சுகள் இருக்கும் என்று அவசியமில்லை. சில உறவுகள் பேசாமலேயே தங்கள் முதல் அத்தியாயத்தை எழுத ஆரம்பித்துவிடும். அர்ஜுனுக்கும் இலக்கியாவுக்கும் அந்த முதல் அத்தியாயம், வார்த்தைகளால் அல்ல, அமைதியால் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.
செங்கல்பட்டைத் தாண்டியபோது வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. தொலைதூரப் பயண பேருந்துகளுக்குப் பதிலாக அலுவலக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு லாரிகள் என சாலை முழுவதும் நகரத்தின் துடிப்பு தெரிந்தது. அந்தக் காட்சியை ஜன்னல் வழியாகப் பார்த்த இலக்கியாவிற்கு, ‘சென்னை வந்துவிட்டது’ என்று யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
இந்த நகரம் அவளுக்குப் புதிதல்ல.
கல்லூரி முடித்த பிறகு வேலை கிடைத்து வந்ததும் இந்த நகரம்தான் அவளை ஏற்றுக்கொண்டது. கடந்த மூன்று வருடங்களாக வங்கி, விடுதி, மெட்ரோ நிலையம், மீண்டும் விடுதி என்ற வட்டத்திற்குள் அவளுடைய வாழ்க்கை சுழன்றது. வேலை முடிந்து மாலை விடுதிக்குள் நுழைந்ததும், கதவை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பது அவளுக்குப் பழக்கமாகிப் போயிருந்தது.
ஆனால்…
இன்றைய மாலை அப்படி இல்லை.
இன்று அவள் திரும்பிப் போவது விடுதிக்கு அல்ல.
தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குமல்ல.
ஒரு புதிய வீட்டிற்கு.
அந்த வீட்டில் அவளுக்காக ஒரு அறை இருக்கும்.
ஆனால்…
அங்கே அவளுக்கான இடம் இருக்கிறதா?
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அவளால் முடியவில்லை.
அர்ஜுன் காரை கிண்டி வழியாக நகர்த்திக் கொண்டிருந்தான். மாலை நேரப் போக்குவரத்து ஆரம்பமாகியிருந்தது. சிவப்பு விளக்கில் நின்றபோது, நடைபாதையில் கையைப் பிடித்தபடி நடந்துச் சென்ற வயதான தம்பதியரை அவன் கவனித்தான். அவர்களுக்குள் பெரிய உரையாடல் எதுவும் இல்லை. இருந்தாலும், அந்த மனிதர் சாலையைக் கடக்கும்போது தன் மனைவியின் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்திருந்தார்.
அர்ஜுன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
சில காட்சிகள்…
மனதைத் தொடுவதற்காகவே கண் முன் வந்து நிற்கும்.
சிக்னல் பச்சை நிறத்திற்கு மாற, வாகனங்கள் மீண்டும் நகர ஆரம்பித்தன.
மாலை ஏழு மணியை நெருங்கியபோது, கார் அசோக் நகர் பகுதியில் இருந்த அமைதியான குடியிருப்பிற்குள் நுழைந்தது. வாயிலில் இருந்த பாதுகாப்பு காவலர் அர்ஜுனைப் பார்த்ததும் புன்னகையுடன் கையை உயர்த்தினார்.
“வந்துட்டீங்களா சார்?”
“ம்… வந்துட்டேன்.”
“கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?”
“நல்லபடியா முடிஞ்சுது.”
“வாழ்த்துகள் சார்.”
“நன்றி.”
அவ்வளவுதான்.
காவலர் புன்னகையுடன் கதவைத் திறந்தார்.
கார் உள்ளே சென்று நிலத்தடி வாகன நிறுத்தத்தில் நின்றது.
எஞ்சின் நின்ற பிறகும் இருவரும் உடனே இறங்கவில்லை. நீண்ட பயணம் முடிந்த சோர்வை விட, ஒரு புதிய இடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் தயக்கம்தான் அவர்களுக்குள் அதிகமாக இருந்தது.
அர்ஜுன்தான் முதலில் கதவைத் திறந்து இறங்கினான். டிக்கியைத் திறந்து இரண்டு பெரிய பெட்டிகளையும் கீழே இறக்கினான். இலக்கியா தன் கைப்பையையும் சிறிய பயணப்பையையும் எடுத்துக் கொண்டாள்.
அவள் பெரிய பெட்டியை இழுத்துக் கொள்ள முயன்றபோது, அர்ஜுன் எதுவும் சொல்லாமல் அதன் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டான்.
“நான் எடுத்துக்கறேன்.”
அது ஒரு உதவி.
அதற்கு மேல் எதுவுமில்லை.
இலக்கியா ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு கைப்பிடியை விட்டாள். மறுப்பதற்கோ, நன்றி சொல்வதற்கோ அவளிடம் வார்த்தைகள் இல்லை.
இருவரும் லிஃப்டை நோக்கி நடந்தார்கள்.
லிஃப்ட் கதவு மூடியதும், கண்ணாடியில் இருவருடைய உருவமும் பக்கப்பக்கமாகத் தெரிந்தது.
ஒரே வாழ்க்கைக்குள் வந்த இரண்டு மனிதர்கள்.
ஆனால்…
இன்னும் இரண்டு தனித்தனி உலகங்கள்.
மூன்றாவது தளத்தில் லிஃப்ட் நின்றது.
வெளியே வந்த அர்ஜுன் வழக்கமான நடையோடு நடைபாதையில் நடந்தான். ஒரு வீட்டின் முன் நின்று சாவியை எடுத்தான். கதவின் பூட்டைத் திறக்கும் அந்தச் சிறிய சத்தம், இலக்கியாவின் மனதுக்குள் ஏதோ ஒன்றைத் திறந்தது போல இருந்தது.
கதவு திறந்தது.
அர்ஜுன் உடனே உள்ளே செல்லவில்லை.
சிறிது விலகி நின்று, “உள்ளே வாங்க…” என்றான்.
அந்த இரண்டு வார்த்தைகளில் உரிமையும் இல்லை.
அந்நியமும் இல்லை.
ஒரு மரியாதை மட்டுமே இருந்தது.
இலக்கியா கதவின் வாசலில் நின்றாள்.
வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தினாள்.
அளவான வரவேற்பறை.
சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள்.
சுவரில் மாட்டப்பட்டிருந்த சில ஓவியங்கள்.
மூலையில் புத்தக அலமாரி.
எல்லாமே ஒரு வீடு போல இருந்தது.
ஆனால்…
அந்த வீட்டை “என் வீடு” என்று மனம் அழைக்க இன்னும் தயாராக இல்லை.
அவள் மெதுவாக உள்ளே காலடி எடுத்து வைத்தாள்.
அந்த ஒற்றை அடியோடு…
அவளுடைய வாழ்க்கையும்…
அர்ஜுனுடைய வாழ்க்கையும்…
ஒரே வீட்டிற்குள் நுழைந்தது.
அது காதலின் தொடக்கமா…
இல்லை…
இரண்டு உடைந்த மனங்கள், ஒரே கூரையின் கீழ் வாழ கற்றுக்கொள்ளப் போகும் முதல் நாளா…
அதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.
அறைக்குள் வந்த இலக்கியா கதவை முழுவதுமாகச் சாத்தவில்லை. பாதியாக மட்டும் இழுத்துவிட்டு அப்படியே நின்றாள். புதிய வீடு. புதிய அறை. புதிய வாழ்க்கை. மூன்றுமே அவளுக்குச் சொந்தம்தான் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த மூன்றில் எதுவுமே இன்னும் அவளுடைய மனதுக்குள் இடம் பிடிக்கவில்லை.
கட்டிலின் அருகே இருந்த பயணப்பையை மெதுவாகத் திறந்தாள். மேலே இருந்த புடவைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்தாள். அலமாரியைத் திறந்தபோது உள்ளே காலியாக இருந்த தட்டுகள் அவளை வெறித்துப் பார்த்தது போல இருந்தது. வீட்டை விட்டு கிளம்பும்போது அம்மா ஒவ்வொரு துணியையும் மடித்து வைத்து இருந்தது நினைவுக்கு வந்தது. எதையும் அவசரமாக அடுக்காமல், மீண்டும் ஒரு முறை மடிப்பைச் சரி செய்து வைத்து கொண்டிருந்தாள்.
வெளியில் ஏதோ பாத்திரம் உரசும் சத்தம் கேட்டது.
அவள் கைகளை நிறுத்திவிட்டு ஒரு நொடி கேட்டாள்.
மீண்டும் அதே சத்தம்.
பயணப்பையை அப்படியே மூடிவிட்டு மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள்.
சமையலறையில் முதுகு காட்டி நின்றிருந்தான் அர்ஜுன். அடுப்பில் பாத்திரம் வைத்திருந்தான். அவன் திரும்பிப் பார்க்கும் முன்பே அவள் வந்திருப்பதை உணர்ந்ததுபோல, “காபி குடிப்பீங்களா?” என்று கேட்டான்.
“ம்…”
அவன் பாலை கலக்கிக் கொண்டிருந்த கரண்டியை ஒரு பக்கம் வைத்துவிட்டு, மேலே இருந்த டப்பாவைத் திறந்தான்.
“சர்க்கரை…?”
“கொஞ்சம்.”
அவன் தலையசைத்தான்.
அதற்குப் பிறகு இருவருக்கும் நடுவே வார்த்தைகள் இல்லை.
காபி கொதிக்கும் சத்தம் மட்டும் அந்த அமைதியை உடைத்துக் கொண்டிருந்தது.
இலக்கியா சமையலறை வாசலிலேயே நின்றிருந்தாள். உள்ளே வரலாமா… வேண்டாமா என்ற தயக்கம் இன்னும் அவளை விட்டு போகவில்லை.
“உள்ளே வாங்க…”
அவன் திரும்பாமல் சொன்னான்.
அவள் இரண்டு அடி முன்னால் வந்தாள்.
மேடையின் ஓரத்தில் இரண்டு கோப்பைகள் இருந்தது. ஒன்றை எடுத்தவன் காபி ஊற்றி அவள் பக்கம் நீட்டினான்.
“பாத்து… சூடா இருக்கு.”
“ம்…”
கோப்பையை வாங்கும்போது அவளது விரல்கள் லேசாக அவன் விரல்களைத் தொட்டுவிட்டு விலகின.
இருவருமே எதுவும் சொல்லவில்லை.
அவன் தன்னுடைய கோப்பையை எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்குச் சென்றான். அவளும் பின்னால் நடந்தாள்.
சோபாவின் ஒரு முனையில் இலக்கியா அமர்ந்தாள். எதிரே இருந்த ஒற்றை இருக்கையில் அர்ஜுன் அமர்ந்தான்.
வீட்டிற்குள் வந்த பிறகு அவர்கள் இருவரும் முதல் முறையாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் பேசத் தொடங்க யாருக்கும் தெரியவில்லை.
காபியை மெதுவாக அருந்திக் கொண்டிருந்த இலக்கியாவின் பார்வை அறை முழுவதும் சுற்றியது. சுவரில் பெரிய ஓவியம் எதுவும் இல்லை. இரண்டு புகைப்படங்கள் மட்டும். ஒன்றில் அர்ஜுன் பட்டமளிப்பு விழாவில் இருந்தான். இன்னொன்றில் அவனும் அவன் நண்பர்களும்.
அதை சில நொடிகள் பார்த்தவள் மீண்டும் கோப்பையிலேயே பார்வையை இறக்கிக் கொண்டாள்.
“சர்க்கரை சரியா இருக்கா?” என்றான் அர்ஜுன்.
“நல்லாருக்கு.”
“ம்…”
அந்த ‘ம்’ கூட உரையாடலை நீட்டிக்கவில்லை.
காபி முடிந்ததும் இலக்கியா எழுந்து இரண்டு கோப்பைகளையும் எடுத்துக் கொண்டாள்.
“நான் கழுவிக்கிறேன்.”
“விடுங்க… நான்…”
“பரவாயில்லை.”
அவள் சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் சென்றாள்.
குழாயைத் திறந்த சத்தம் கேட்டது.
அர்ஜுன் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே ஒரு நிமிடம் சமையலறையைப் பார்த்தான். பிறகு மெதுவாக எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்றான்.
சில நிமிடங்களில் சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன், மேசையிலிருந்த சாவியை எடுத்துக் கொண்டான்.
அந்த நேரத்தில் இலக்கியாவும் வெளியே வந்தாள்.
“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.”
அவள் அமைதியாகப் பார்த்தாள்.
“வீட்டுல எதுவும் இல்ல. மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்றேன்.”
“சரி.”
“கதவை யாருக்காகவும் திறக்க வேண்டாம். நான் வந்ததும் call பண்றேன்.”
“ம்…”
அவன் காலணியை அணிந்துகொண்டான்.
கதவைத் திறந்தவன் ஏதோ நினைவுக்கு வந்தது போல மீண்டும் திரும்பினான்.
“உங்க phone silent-ல இருக்குமா?”
“இல்ல.”
“சரி.”
அவ்வளவுதான்.
கதவு மெதுவாக மூடியது.
வீடு முழுவதும் மீண்டும் அமைதியாகிவிட்டது.
இலக்கியா சில நொடிகள் அப்படியே நின்றிருந்தாள். பிறகு பால்கனிக்குச் சென்றாள்.
கீழே வண்டிகள் வந்து போய்க் கொண்டிருந்தன. எதிரே இருந்த அடுக்குமாடி வீட்டில் ஒரு வயதான அம்மா துணி காயவைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுக் கதவு திறந்து ஒரு சிறுவன் பள்ளிப் பையை இழுத்தபடி உள்ளே ஓடினான்.
அவரவர்களின் வாழ்க்கை வழக்கம்போல ஓடிக் கொண்டிருந்தது.
அவளுடைய வாழ்க்கை மட்டும்…
எப்போது ஆரம்பித்தது…
எங்கே நிற்கிறது…
இனி எங்கே போகப் போகிறது…
என்று அவளுக்கே புரியாமல் இருந்தது.
அந்த எண்ணத்தை அப்படியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தாள்.
பயணப்பையை மீண்டும் திறந்தாள்.
அடியில் இருந்த ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்தாள்.
அதைத் திறக்க நினைத்தவள், அடுத்த நொடியே மீண்டும் மூடிவிட்டு அலமாரியின் கடைசி தட்டில் வைத்து கதவைச் சாத்தினாள்.
அந்தப் பெட்டிக்குள் இருந்ததை இன்று பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை.
அலைபேசியின் சிணுங்கல் அவளது எண்ணங்களை உடைத்தது.
திரையில் அர்ஜுனின் பெயர்.
ஒரு நொடி பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள்.
“கதவுக்கு வெளியே இருக்கேன்.”
“ம்…”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அவள் விரைந்து சென்று கதவைத் திறந்தாள்.
இரண்டு பெரிய பைகளுடன் நின்றிருந்தான் அர்ஜுன். ஒரு கையில் மளிகைப் பொருட்கள், இன்னொரு கையில் காய்கறிகள். அவன் உள்ளே வந்ததும், இலக்கியா கதவைச் சாத்திவிட்டு அந்தப் பைகளை வாங்க முனைந்தாள்.
“நான் எடுத்துக்கறேன்.”
“கனமா இருக்கு…”
“பரவாயில்லை.”
அவன் சமையலறை மேடையில் பைகளை வைத்துவிட்டு, ரசீதைக் கையில் மடித்தபடி ஓரமாக நின்றான்.
இலக்கியா பைகளைத் திறந்தாள். அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா, பால், தயிர், ரொட்டி, பழங்கள்… தேவையான எல்லாமே வாங்கி வந்திருந்தான்.
“எல்லாமே வாங்கிட்டீங்களே…”
“என்னென்ன வேணும்னு தெரியல. அதான் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துட்டேன்.”
அவள் பதில் சொல்லவில்லை.
பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக அலமாரியில் வைத்தாள். ஃபிரிட்ஜைத் திறந்து காய்கறிகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது, அர்ஜுன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துவிட்டு அவளைப் பார்த்தான்.
“இன்னைக்கு சமையல் பண்ண வேண்டாம்.”
அவள் திரும்பினாள்.
“ஏன்?”
“இப்போதான் வந்திருக்கோம். ரெண்டு பேருமே களைப்பா இருப்போம். வெளியிலிருந்து வாங்கிக்கலாம்.”
அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
“நான் சமைச்சிடுறேன்.”
“இப்பவா?”
“சிம்பிளா ஏதாவது…”
“வேண்டாம்.”
அவன் மெதுவாகத்தான் சொன்னான்.
“நாளையிலிருந்து பார்த்துக்கலாம்.”
அந்த வார்த்தையில் மறுப்பை விட, அவளைச் சிரமப்படுத்தக் கூடாது என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது.
“சரி.”
அவள் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
சமையலறையை ஒழுங்குபடுத்தி முடித்ததும், கை கழுவிக் கொண்டு வெளியே வந்தாள். வரவேற்பறையில் இருந்த சோபாவின் ஓரத்தில் அமர்ந்தாள். எதிரே தொலைக்காட்சி இருந்தது. அதை இயக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
அர்ஜுன் தன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையில் இரண்டு முறை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. மிகச் சுருக்கமாகப் பேசிவிட்டு வைத்தான்.
“நாளைக்கு office போகணுமா?” என்று இலக்கியா மெதுவாகக் கேட்டாள்.
“ம்… Work from home முடியாது.”
“ம்…”
“உங்களுக்கு?”
“நாளைக்கு report பண்ணணும்.”
“எத்தனை மணிக்கு?”
“ஒன்பது.”
“Branch?”
“அண்ணா நகர்.”
அவன் தலையசைத்தான்.
அதற்கு மேல் இருவரும் பேசவில்லை.
மாலை வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. பால்கனியின் திரையைத் தாண்டி வந்த சூரிய ஒளி சுவரில் இருந்து தரைக்குத் தள்ளி இறங்கியது.
அர்ஜுன் எழுந்து எல்லா அறைகளிலும் விளக்கைப் போட்டான்.
வீடு முழுவதும் வெளிச்சமாகிவிட்டது.
அந்த வெளிச்சத்தில் கூட…
அந்த வீட்டில் இன்னும் யாரோ புதிதாகக் குடியேறியிருப்பது போலத்தான் இருந்தது.
“சாப்பாடு order பண்ணிடலாமா?” என்று கேட்டான்.
“ம்…”
“என்ன சாப்பிடுறீங்க?”
“எதுவும்…”
“அது இல்ல…”
அவன் ஒரு நொடி யோசித்தான்.
“சப்பாத்தியா… தோசையா… Fried rice-ஆ…”
“சப்பாத்தி போதும்.”
“சரி.”
அவன் அலைபேசியில் உணவைப் பதிவு செய்தான்.
அரை மணி நேரம் கழித்து கதவு மணி ஒலித்தது.
அர்ஜுன் உணவை வாங்கி வந்து மேசையில் வைத்தான்.
“Plate எங்க இருக்கு?” என்று அவன் தன்னிடமே கேட்டுக் கொண்டிருக்க, இலக்கியா அமைதியாக சமையலறைக்குள் சென்று இரண்டு தட்டுகளை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அவள் சப்பாத்தியைப் பிரித்து குருமாவை ஊற்றினாள்.
இரண்டு டம்ளர்களில் தண்ணீர் நிரப்பி மேசையில் வைத்தாள்.
அர்ஜுன் நாற்காலியை இழுத்து அமர்ந்தான்.
“நீங்களும்…” அவள் எதிரே அமர்ந்தாள்.
இருவரும் அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
நடுவில் ஒரே ஒரு முறை மட்டுமே அவன் பேசினான்.
“குருமா காரமா இருக்கா?”
இலக்கியா தண்ணீர் குடித்துவிட்டு தலையசைத்தாள்.
“கொஞ்சம்.”
“வேற ஏதாவது order பண்ணவா?”
“வேண்டாம்.”
அவள் சப்பாத்தியைச் சிறு துண்டுகளாகப் பிய்த்துக் கொண்டே சாப்பிட்டாள்.
அவள் அதிகம் சாப்பிடவில்லை என்பதை அர்ஜுன் கவனித்தான்.
எதுவும் கேட்கவில்லை.
“இன்னொரு சப்பாத்தி எடுத்துக்கோங்க…” என்று மட்டும் சொன்னான்.
“போதும்.”
“சரி.”
அவன் தன் தட்டையும் காலி செய்துவிட்டு எழுந்தான்.
இலக்கியா தட்டுகளை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.
“விடுங்க… நான் கழுவுறேன்.”
“பரவாயில்லை.”
“நாளையிலிருந்து நீங்க பாருங்க. இன்னைக்கு நான்.”
அவள் அவனைப் பார்த்தாள்.
சில நொடிகள் கழித்து தட்டுகளை அவன் கையில் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.
வரவேற்பறை ஜன்னலருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த வீட்டில் இன்னும்…
அவர்களுடைய குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கவில்லை.
ஆனால்…
ஒருவருக்காக இன்னொருவர் செய்து கொண்ட சிறிய விஷயங்கள் மட்டும், எந்தச் சத்தமும் இல்லாமல் அந்த வீட்டின் வெறுமையை மெதுவாக நிரப்ப ஆரம்பித்திருந்தன.
தட்டுகளை கழுவி முடித்துவிட்டு சமையலறை விளக்கை அணைத்தான் அர்ஜுன். வரவேற்பறையில் நின்றிருந்த இலக்கியா இன்னும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. எதிரே இருந்த அடுக்குமாடி வீட்டின் ஜன்னல்களில் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகள் எரிய ஆரம்பித்தன.
“உங்களுக்கு வெளியே நடக்கணும் போல இருக்கா?” என்று அவன் மெதுவாகக் கேட்டான்.
இலக்கியா திரும்பிப் பார்த்தாள்.
“இல்ல…”
“ம்…”
அவனும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
மேசையில் இருந்த உணவுப் பொட்டலங்களை ஒன்றாகச் சேர்த்து கட்டி கதவின் அருகே வைத்துவிட்டு, “காலை குப்பை வண்டி வரும்போது போட்டுடலாம்.” என்றான்.
அவள் தலையசைத்தாள்.
“நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பணும்?”
“எட்டே கால்.”
“மெட்ரோல போறீங்களா?”
“ம்…”
“சரி.”
அவ்வளவுதான்.
அர்ஜுன் தன் அறைக்குள் சென்றான். சில நிமிடங்களில் ஒரு சிறிய காகிதத்துடன் மீண்டும் வெளியே வந்தான்.
“இதுல Wi-Fi password எழுதியிருக்கேன். Laptop use பண்ணணும்னா கனெக்ட் பண்ணிக்கலாம்.”
இலக்கியா அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டாள்.
“தேங்க்ஸ்.”
“ம்…”
அவன் திரும்பிச் சென்றுவிட்டான்.
காகிதத்தை மேசையின் மீது வைத்தவள் அறைக்குள் சென்றாள். பயணப்பையில் இன்னும் சில பொருட்கள் இருந்தன. அவற்றை மெதுவாக எடுத்து வைத்தாள். அடியில் இருந்த புத்தகங்களை அலமாரியில் அடுக்கும்போது, அவற்றுக்குள் சிக்கியிருந்த ஒரு பழைய புகைப்படம் கீழே விழுந்தது.
குனிந்து எடுத்தாள்.
பார்க்கக் கூடாது என்று மனம் சொல்லியும், விழிகள் இரண்டு நொடிகள் அந்தப் புகைப்படத்தின் மேல் நின்றுவிட்டன.
அடுத்த நொடியே அதை ஒரு புத்தகத்தின் நடுவில் வைத்துவிட்டு அலமாரியை மூடினாள்.
அறை முழுவதும் அமைதியாக இருந்தது.
கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவள், அலைபேசியை எடுத்தாள்.
அம்மாவிடமிருந்து ஒரு செய்தி.
“சாப்பிட்டுட்டியா?”
ஒரு நிமிடம் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,
“ம்… சாப்பிட்டேன்.”
என்று மட்டும் பதில் அனுப்பினாள்.
சில வினாடிகளில் மறுபடியும் செய்தி வந்தது.
“நல்லா தூங்கு. நாளைக்கு ஆபீஸ் போகணும்.”
அதைப் படித்தவள் அலைபேசியை அணைத்துவிட்டு தலையணையின் அருகே வைத்தாள்.
வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்து, அம்மா இதே வார்த்தையை மூன்று முறை சொல்லியிருப்பார்.
ஒவ்வொரு முறையும் அவள் பதிலும் இதேதான்.
“ம்…”
அறை விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.
தூக்கம் மட்டும் வரவில்லை.
அதே நேரத்தில், அடுத்த அறையில் இருந்த அர்ஜுனும் மடிக்கணினியை மூடிவிட்டு படுக்கையில் சாய்ந்திருந்தான். அலுவலக மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு வரியைக் கூட முழுவதுமாகப் படிக்க முடியவில்லை.
அலைபேசி ஒலித்தது.
திரையில் தாமு.
அழைப்பை ஏற்றான்.
“டேய்… சென்னை வந்துட்டியா?”
“ம்.”
“எப்படி இருக்க?”
அர்ஜுன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“எப்படி இருப்பாங்க, நல்லாதான்…”
“நான் அதை கேட்கலடா.” மறுமுனையில் சிரித்தான் தாமு.
“புரியுது.” அர்ஜுன் ஜன்னல் பக்கம் திரும்பினான்.
“எல்லாம் சரியாயிடும்.”
“ம்…”
“நாளைக்கு ஆஃபிஸ் வரியா?”
“வரேன்.”
“சரி… பாத்துக்கலாம்.”
அழைப்பு முடிந்தது.
அலைபேசியை மேசையில் வைத்தவன், ஜன்னலைத் திறந்தான்.
இரவு காற்று உள்ளே வந்தது.
எதிரே இருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒரு சிறுவன் பட்டத்தை சுருட்டிக் கொண்டிருந்தான். அவனை அவன் அப்பா கீழே அழைத்துக் கொண்டிருந்தார்.
அர்ஜுன் மெதுவாக ஜன்னலை மூடிவிட்டு விளக்கை அணைத்தான்.
அந்த இரவு…
ஒரே வீட்டில் இரண்டு அறைகள்.
இரண்டு அறைகளில் இரண்டு மனிதர்கள்.
இருவருக்கும் தூக்கம் வரவில்லை.
ஆனால்…
அதை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.
அடுத்த நாள் காலை, அந்த வீட்டில் முதல் விடியல் காத்துக் கொண்டிருந்தது.
1 comment
அட ராமா..! இதே மாதிரியே இவங்க பண்ணிட்டிருந்தாங்கன்னா
பேசாமல் நாங்க எழுந்து போயிட வேண்டியது தான் போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797