அத்தியாயம் – 03
அதிகாலை ஐந்து மணிக்கே இலக்கியாவிற்கு விழிப்பு வந்துவிட்டது.
சில நொடிகள் எங்கே இருக்கிறோம் என்பதே புரியாமல், அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். வெண்ணிற மேற்கூரை, ஜன்னலின் திரை வழியாக உள்ளே வந்த மங்கலான வெளிச்சம், எதிரே இருந்த அலமாரி… ஒவ்வொன்றாக விழிகளில் பதிந்த பிறகுதான் நேற்று நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது.
ஒரு பெருமூச்சுடன் எழுந்து காலைக் கடன்களை முடித்து, கதவைத் திறந்தாள்.
வீடு முழுவதும் அமைதியாக இருந்தது.
வரவேற்பறையின் சுவர்க் கடிகாரம் ஐந்தரை மணியைக் காட்டியது.
சமையலறைக்குள் சென்று ஒருமுறை அதைச் சுற்றி தன் பார்வையை செலுத்தினாள். பின் அடுப்பின் மேல் இருந்த பாத்திரத்தை எடுத்துப் பார்த்தாள். நேற்று இரவு கழுவி தலைகீழாக வைத்திருந்தான் அர்ஜுன்.
பாலை ஃபிரிட்ஜிலிருந்து எடுத்தவள் அடுப்பில் வைத்தாள்.
காபித் தூள் எங்கே என்று நேற்று பார்த்தது நினைவில் இருந்ததால், மேல் அலமாரியைத் திறந்து டப்பாவை எடுத்தாள்.
காபி கொதிக்கும் மணம் மெதுவாக வீடு முழுவதும் பரவியது.
அந்த நேரத்தில் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தாள். அர்ஜுன் தூக்கக் கலக்கத்தோடு வெளியே வந்தான். அவளைக் கண்டதும் ஒரு நொடி நின்றவன், “குட் மார்னிங்…” என்றான்.
“மார்னிங்…”
“இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டீங்களா?”
“தூக்கம் போயிடுச்சு.”
அவன் தலையசைத்தான்.
“நான் போட்டிருப்பேன்.”
“பரவாயில்லை… ஆயிடுச்சு.”
அவன் மேடையின் மீது இருந்த இரண்டு கோப்பைகளைப் பார்த்துவிட்டு, “எனக்கும் சேர்த்தா?” என்று கேட்டான்.
“ம்…”
இலக்கியா இரண்டாவது கோப்பையிலும் காபியை ஊற்றினாள்.
அவன் வாங்கிக் கொண்டு ஒரு மிடறு அருந்தினான்.
“நல்லாருக்கு.”
அவள் சிறிய தலையசைப்பு மட்டும் கொடுத்தாள்.
காபி முடிந்ததும் அவன் கோப்பையை கழுவ சிங்க்கை நோக்கி நடந்தான்.
“நான் கழுவிக்கிறேன்.”
“இருக்கட்டும்.”
“நீங்க office கிளம்பணும்.”
“இன்னும் நேரம் இருக்கு.” என்றபடியே கோப்பையை அவன் கழுவி வைத்தான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியா, “காலைல டிபன்…” என்று ஆரம்பித்தாள்.
“வெளியில சாப்பிட்டுக்கலாம்.”
“நான் செய்யறேன்.”
“இப்பவேவா?”
“உப்புமா பத்து நிமிஷம்.”
அவன் அவளைப் பார்த்தான்.
“உங்களுக்கு சிரமமா இருக்கும்.”
“இல்ல. எனக்கு பழக்கம் இருக்கு.”
அவள் அந்த வார்த்தையைச் சொன்ன விதத்தில் தயக்கத்தை விட உறுதி அதிகமாக இருந்தது.
“சரி…” என்றவன் ஓரமாக நின்றான்.
இலக்கியா கடாயை அடுப்பில் வைத்தாள். எண்ணெய் சூடானதும் கடுகு போட, அது படபடவென வெடித்த சத்தத்தில் அர்ஜுன் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தான்.
அவள் அமைதியாக வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
“கத்தி பார்த்து…” என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டான்.
அவள் கையைப் பார்த்தான். ஆள்காட்டி விரலில் சிறிய கீறல். ஒரு சொட்டு ரத்தம்.
“ஒரு நிமிஷம்.” அவன் வேகமாக அறைக்குள் சென்று சிறிய First Aid Box-ஐ எடுத்துக் கொண்டு வந்தான்.
“இதெல்லாம் ஒன்னுமில்ல,” என குழாயைத் திறந்து கையை நீரில் காட்ட.
“ஒரு நிமிஷம்.” அவன் பஞ்சால் ரத்தத்தைத் துடைத்தான்.
சிறிய Band-Aid ஒன்றை எடுத்து ஒட்டிவிட்டான்.
“முடிஞ்சது.” இலக்கியா தன் விரலைப் பார்த்தாள்.
“தேங்க்ஸ்.”
“கத்தி புதுசு. கொஞ்சம் ஷார்ப் வேற.”
“ம்…” என்றதும், அவன் மீண்டும் ஹாலுக்குச் சென்றுவிட்டான்.
இலக்கியா சில நொடிகள் அப்படியே நின்றாள்.
விரலில் ஒட்டியிருந்த சிறிய Band-Aid-ஐப் பார்த்துவிட்டு மீண்டும் சமையலைத் தொடர்ந்தாள்.
சிறிது நேரத்தில் உப்புமாவின் மணம் வீடு முழுவதும் பரவியது.
இரண்டு தட்டுகளில் பரிமாறி மேசையில் வைத்தாள்.
“சாப்பிடலாமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
அர்ஜுன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு எழுந்தான்.
“இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்களா?”
“ம்…” இருவரும் மேசையின் இருபுறமும் அமர்ந்தார்கள்.
முதல் வாய் உப்புமாவை சாப்பிட்டவன், தண்ணீர் குடிக்காமல் அவளைப் பார்த்தான்.
“என்ன?” என்று இலக்கியா கேட்டாள்.
“நல்லா இருக்குங்க.”
பதிலுக்கு அவள் எதுவும் சொல்லவில்லை.
ஆனால்…
காலையிலிருந்து முதல் முறையாக,
அவள் முகத்தில் மிக மெல்லிய ஒரு மாற்றம் தோன்றியது. அது புன்னகையா இல்லையா என்று கூட சொல்ல முடியாது.
அது நேற்றைய அமைதியை விட கொஞ்சம் மென்மையாக இருந்தது.
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கறீங்களா?”
உப்புமா இருந்த பாத்திரத்தை கையில் எடுத்தபடி இலக்கியா கேட்டாள்.
அர்ஜுன் தலையசைத்தான்.
“போதும்.”
அவளும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. தன்னுடைய தட்டில் இருந்ததை மெதுவாக முடித்தாள். இருவரும் சாப்பிட்டு எழுந்ததும், தட்டுகளை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
“விடுங்க… நான் கழுவிக்கிறேன்.”
“பரவாயில்லை.”
“நீங்க ரெடி ஆகுங்க.”
“இரண்டு தட்டுதானே…”
அவன் சொல்லியும் கேட்காமல் குழாயைத் திறந்துவிட்டாள். அர்ஜுன் சில நொடிகள் நின்று பார்த்துவிட்டு தன் அறைக்குள் சென்றான்.
குளித்து முடித்து வெளியே வந்தபோது, கருநீல நிற சட்டையின் கைப்பகுதியை மடித்துக் கொண்டே வரவேற்பறைக்கு வந்தான். தலைமுடியைத் துணியால் துடைத்தபடியே கடிகாரத்தை அணிந்தான்.
அந்த நேரத்தில் இலக்கியாவும் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
இளம் நீல நிற காட்டன் சேலை. நெற்றியில் சிறிய குங்குமப்பொட்டு. தலைமுடியை ஒற்றை பின்னலாகப் போட்டிருந்தாள்.
அவளை ஒரு நொடி பார்த்தவன் உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
“எத்தனை மணிக்கு கிளம்பலாம்னு சொன்னீங்க?”
“எட்டே கால்.”
“ம்…” அவன் மேசையிலிருந்த கார் சாவியை எடுத்துவிட்டு மீண்டும் வைத்தான்.
“மெட்ரோல போறீங்களே?”
“ம்…”
“நான் விட்டுட்டு போறேன்.”
“வேண்டாம்… நான் ஆட்டோ…”
“நான் போற வழியிலதான்.”
அவள் எதுவும் சொல்லவில்லை.
அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன், “கிளம்பலாமா?” என்று கேட்டான்.
இலக்கியா கைப்பையை எடுத்துக் கொண்டாள்.
கதவைப் பூட்டிவிட்டு இருவரும் லிஃப்டை நோக்கி நடந்தார்கள்.
லிஃப்ட் வர சில நொடிகள் ஆனது.
அந்த நேரம் முழுவதும் இருவரும் அமைதியாக நின்றிருந்தார்கள்.
கீழே வந்து காரில் ஏறியதும், அர்ஜுன் காரை எடுத்தான்.
காலை நேரம் என்பதால் சாலையில் வாகனங்கள் அதிகமாக இருந்தன.
இலக்கியா ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிக்னலில் கார் நின்றபோது, சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருந்த வயதான பெண் ஒருவர் காரருகே வந்தார்.
“மல்லிகைப்பூ வேணுமா தம்பி?”
அர்ஜுன் சிரித்தபடி, “வேண்டாம்மா…” என்றான்.
அந்தப் பெண் காரின் உள்ளே ஒரு பார்வை பார்த்துவிட்டு, “புதுசா கல்யாணமாச்சா?” என்று கேட்டார்.
அர்ஜுன் பதில் சொல்லும் முன்பே பச்சை விளக்கு எரிந்துவிட்டது.
கார் மெதுவாக முன்னே நகர்ந்தது.
இலக்கியா எதுவும் பேசவில்லை.
அர்ஜுனும் அந்தப் பேச்சைத் தொடரவில்லை.
சில நிமிடங்களில் மெட்ரோ நிலையம் வந்தது.
காரை ஓரமாக நிறுத்தினான்.
“இங்கிருந்து சரியா?”
“ம்…”
அவள் கதவைத் திறக்க முயன்றாள்.
திறக்கவில்லை.
மீண்டும் முயன்றாள்.
அர்ஜுன் அவளைப் பார்த்துவிட்டு, “வெய்ட்…” என்று சொல்லி தன்னுடைய பக்கத்திலிருந்த பொத்தானை அழுத்தினான்.
“இப்போ திறக்கும்.”
கதவு திறந்தது.
“தேங்க்ஸ்.” என்றபடியே காரிலிருந்து இறங்கியவள் இரண்டு அடி நடந்துவிட்டு திரும்பினாள்.
“ஈவ்னிங்க்..” என்று ஆரம்பித்தவள் நிறுத்திக் கொண்டாள்.
“ம்?”
“நான்… வந்துடுவேன்.” அவள் சொல்ல நினைத்தது அதுதானா, வேறு ஏதாவது தானா என்று அவளுக்கே தெரியவில்லை.
அர்ஜுன் மட்டும் இயல்பாகத் தலையசைத்தான்.
“அவசரமில்லாம வாங்க.”
அந்த ஒரு வார்த்தை கேட்டதும் இலக்கியா சில நொடிகள் அவனைப் பார்த்தாள்.
பிறகு மெதுவாக திரும்பி மெட்ரோ ஸ்டேசனை நோக்கி நடந்தாள்.
அவள் உள்ளே செல்லும் வரை காரை நகர்த்தவில்லை அர்ஜுன்.
கூட்டத்திற்குள் அவள் மறைந்த பிறகுதான் காரை இயக்கினான்.
தன் காரை அலுவலகம் நோக்கித் திருப்பியவன், சிவப்பு சிக்னலில் மீண்டும் நின்றான்.
அப்போது தான் பயணியர் இருக்கையைப் பார்த்தான்.
இலக்கியாவின் தண்ணீர் பாட்டில் அங்கேயே இருந்தது.
அதை எடுத்துப் பார்த்தவன் சிறிது நேரம் யோசித்தான்.
பிறகு அலைபேசியை எடுத்தான்.
“உங்க வாட்டர் பாட்டில் கார்லயே இருக்கு.” என்று ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு வைத்தான்.
மெட்ரோ படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த இலக்கியாவின் அலைபேசி அதிர்ந்தது.
செய்தியைப் படித்தவள், பையில் இருந்த காலி இடத்தைப் பார்த்தாள்.
உண்மையிலேயே மறந்து விட்டிருந்தாள்.
சில வினாடிகள் கழித்து அவள் பதில் அனுப்பினாள்.
“சாரி…”
அதற்கு அர்ஜுனிடம் இருந்து வந்த பதில் ஒரு வரிதான்.
“சாயங்காலம் வாங்கிக்கோங்க.”
அர்ஜுன் அலுவலகத்தை அடைந்தபோது ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன், வழக்கம்போல் வரவேற்றவர்களிடம் புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தான்.
“டேய் மாப்பிள்ளை!” தாமுவின் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தான்.
“வந்துட்டியா?”
“ம்.”
“என்னடா… கல்யாணம் ஆன மறுநாளே office. ரொம்பவும் சின்சியரா இருக்கியே.”
அர்ஜுன் சிரித்தான்.
“இந்த ப்ராஜெக்ட்ல என்னை விட மாட்டேங்களே.”
“அது சரி.” தாமு அவன் அருகில் வந்து நின்றான்.
“எப்படி இருக்க?”
அந்த ‘எப்படி’ என்று இருவருக்குமே தெரியும்.
அர்ஜுன் கணினியை இயக்கியபடியே, “நல்லாதான் போகுது…” என்றான்.
“சரி… முகத்தைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது.”
தாமு நண்பனின் தோளில் தட்டிவிட்டு சிரித்தபடி சென்றுவிட்டான்.
அர்ஜுனும் சிரித்தான்.
ஆனால் அந்தச் சிரிப்பு உதட்டைத் தாண்டவில்லை.
அதே நேரம்…
இலக்கியா மெட்ரோவில் இருந்து இறங்கி வங்கிக்குள் நுழைந்தாள்.
கிளையின் மேலாளர் அவளை வரவேற்று, பணியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
“இவர் இலக்கியா. இனிமே நம்ம branchல Assistant Manager.”
ஒவ்வொருவரும் புன்னகையுடன் வாழ்த்து சொல்ல, அவளும் அதே புன்னகையோடு பதில் சொன்னாள்.
வேலை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்கள் வரிசை அதிகமாகிவிட்டது.
புதிய கிளை.
புதிய முகங்கள்.
புதிய வேலை.
அதற்குள் அவள் முழுவதுமாக மூழ்கிப் போயிருந்தாள்.
மதியம் ஒரு மணியளவில் தாமு மீண்டும் அர்ஜுனின் மேசைக்கு வந்தான்.
“வாடா… லஞ்ச் போலாம்.”
“நீ போ. நான் வரேன்.”
“நேத்துல இருந்தே அதைத்தான் சொல்லிட்டு இருக்க.”
வேறு வழியில்லாமல் எழுந்தான் அர்ஜுன்.
இருவரும் உணவகத்தில் அமர்ந்தனர்.
“வீட்டிலிருந்து சாப்பாடு இல்லையா?”
“இன்னைக்கு இல்லை.”
“அப்போ நாளையிலிருந்து?”
“தெரியல.”
தாமு அவனைப் பார்த்தான்.
“டேய்… நீ ஓகே தானே?”
அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கரண்டியை வைத்தான்.
“நான் ஓகே.”
“நீ ஓகேன்னு சொல்றதால நான் நம்பிடுவேன்னு நினைக்காத.”
அவன் சிரித்துவிட்டான்.
“சாப்பிடு.”
அதற்கு மேல் தாமுவும் எதுவும் கேட்கவில்லை.
மாலை ஐந்து மணிக்கே இலக்கியாவின் வேலை முடிந்தது.
வங்கியிலிருந்து வெளியே வந்தவள் பையைத் திறந்து பார்த்தபோதுதான் தண்ணீர் பாட்டில் நினைவுக்கு வந்தது.
அலைபேசியை எடுத்தாள்.
“நான் கிளம்பிட்டேன்.”
என்று மட்டும் அர்ஜுனுக்கு அனுப்பினாள்.
இரண்டு நிமிடங்களுக்குள் பதில் வந்தது.
“நானும்.”
அதற்கு மேல் எந்தச் செய்தியும் இல்லை.
மாலை ஆறு மணியளவில் அர்ஜுன் வீட்டுக் கதவைத் திறந்தான்.
வீடு அமைதியாக இருந்தது.
காலணியைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தவன், தண்ணீர் குடித்துவிட்டு சோபாவில் அமர்ந்தான்.
ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை.
கதவு மணி ஒலித்தது.
சென்று கதவைத் திறந்தான்.
வாசலில் நின்றிருந்தாள் இலக்கியா.
கையில் அலுவலகப் பை.
முகத்தில் நாள் முழுவதும் வேலை செய்த களைப்பு.
“வந்துட்டீங்களா…”
“ம்…”
அவள் உள்ளே வந்தாள்.
கைப்பையை சோபாவின் அருகே வைத்துவிட்டு செருப்பை ஒதுக்கி வைத்தாள்.
அர்ஜுன் மேசையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.
“இத…” அவள் பார்த்ததும் சிரித்துவிட்டாள். “நான் மறந்துட்டேன்.” என்றாள் சிரித்தபடியே.
“தெரியும்.” அவன் பாட்டிலை அவளிடம் கொடுத்தான்.
வாங்கிக் கொண்டவள் மூடியைத் திறந்து ஒரு மிடறு குடித்தாள்.
“தேங்க்ஸ்.”
“பரவாயில்லை.”
சில நொடிகள் அமைதியாக இருந்தனர்.
பிறகு இலக்கியா கேட்டாள்.
“காபி குடிப்பீங்களா?”
அர்ஜுன் அவளைப் பார்த்தான்.
நேற்று…
அவன் கேட்ட கேள்வி.
இன்று…
அவள் கேட்டாள்.
“குடிப்பேன்.”
“அஞ்சு நிமிஷம்.”
அவள் சமையலறைக்குள் சென்றாள்.
அர்ஜுன் வரவேற்பறையிலேயே அமர்ந்திருந்தான்.
சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.
அந்தச் சத்தம்…
நேற்று வெறுமையாக இருந்த வீட்டை விட…
இன்று கொஞ்சம் உயிரோடு இருப்பது போல உணர வைத்தது.
1 comment
அட ராமா..! இதை விட ஸ்லோவா எழுத முடியாதோ…?
😀😀😀
CRVS (or) CRVS 2797