Home Love - Family - Romanceநெஞ்சம் – 04

அத்தியாயம் – 04 

அந்த நாள் முழுக்க ஆபீஸ் வேலை, புதிய இடம், புதிய மனிதர்கள் என்று அலைந்த களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தாள் இலக்கியா. 

கதவை மூடிவிட்டு செருப்பைக் கழற்றியவள், கைப்பையை சோபாவில் போட்டுவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். 

காலையிலிருந்து ஓடிக்கொண்டே இருந்ததால், அந்த ஃப்ளாட்டுக்குள் வந்த பிறகுதான் உடம்பே கொஞ்சம் ஓய்வெடுத்தது போல இருந்தது.

அதே நேரம், ஹாலில் இருந்த சோபாவில் லேப்டாப்பை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்த அர்ஜுன், திரையிலிருந்து பார்வையை விலக்காமல், “வந்துட்டீங்களா?” என்று கேட்டான்.

“ம்… இப்போதான்.”

“டிராஃபிக் அதிகமா?”

“மெட்ரோல கூட்டம் இருந்துச்சு.”

“ஓ…” அவ்வளவுதான். அதற்குப் பிறகு இருவரும் தங்களுடைய வேலையைப் பார்த்தார்கள். இலக்கியா தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துவிட்டு, நேராக அறைக்குள் போய்விட்டாள்.

பத்து நிமிடங்கள் கழித்து, முடியை துண்டால் துடைத்தபடியே வெளியே வந்தவள் நேராக சமையலறைக்குள் நுழைந்தாள். 

அலமாரியைத் திறந்து என்னென்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, எது எங்கே இருக்கிறது என்பதே புரியவில்லை.

ஹாலில் இருந்த அர்ஜுனை எட்டிப் பார்த்தபடி, “அர்ஜுன்…” என்று அழைத்தாள்.

அவன் உடனே லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்து வந்தான்.

“என்னங்க?”

“சர்க்கரை எங்க இருக்கு?”

ஒரு நொடி அவளைப் பார்த்தவன், மேலே இருந்த அலமாரியைக் காட்டினான்.

“அந்த டப்பாவுல இருக்கும்.” நேத்து நான் சொல்லாமலே எல்லாம் தேடி எடுத்தாங்க, இன்னைக்கு என்னாச்சு? யோசனை அவனுக்கு.

இலக்கியா “ஓ… சரி.” என்றதும், அவன் திரும்பிச் செல்லப் போனவன், மீண்டும் நின்று, “டீ போடுறீங்களா?” என்று கேட்டான்.

இது என்ன கேள்வி என்றாலும், “ம்… உங்களுக்கும் சேர்த்துதான்.” என்றாள் பொறுமையாக.

“நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்ல.” என்றான் கனிவாக.

“பரவாயில்ல… எனக்கு அடிக்கடி டீ குடிக்கனும், அதுவும் இந்த ஈவ்னிங்க் டீ இல்லன்னா தலைவலிக்க ஆரமிச்சுடும்..” என தலையை ஆட்ட,

அர்ஜூன் சிரித்தபடியே மீண்டும் ஹாலுக்குப் போய்விட்டான்.

பாலை அடுப்பில் வைத்துவிட்டு, டீ தூள் எடுக்க முயன்றபோது, பக்கத்தில் இருந்த ஸ்பூன் கீழே விழுந்தது. அதை எடுக்கக் குனிந்தவள், “ச்சே…” என்று முணுமுணுத்துக் கொண்டே மீண்டும் எழுந்தாள்.

அந்த நேரத்தில், ஹாலிலிருந்து அர்ஜுனின் சிரிப்புச் சத்தம் கேட்டது. யாரோடு போனில் பேசிக் கொண்டிருந்தான்.

“டேய், மூணு நாள்லேயே எப்படி பழகிடுவாங்க? என்னைப்பத்தி தெரிஞ்சும் நீ வேற ஆரம்பிக்காத.”

தாமுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் இலக்கியா.

“சரி டா, வீட்டுக்குப் போய் பேசுறேன்.” போனை வைத்துவிட்டு சமையலறை வாசலுக்கு வந்தவன், “என்னாச்சு? ஏதாவது தேடுறீங்களா?” என்று கேட்டான்.

“டீ தூள் கிடைக்கல.”

“அது கீழ இருக்குற டப்பா.”

“இவ்வளவு நாளும் நீங்கதான் டீ போட்டீங்களா?”

“இல்ல, பெரும்பாலும் வெளியிலதான் குடிப்பேன்.”

“ம்ம்..” அவள் தலையாட்டினாள்.

சில நிமிடங்களில் இரண்டு கப்புகளிலும் டீயை ஊற்றி, ஒன்றை அவன் பக்கம் நீட்டினாள்.

“தேங்க்ஸ்.”

“சர்க்கரை சரியா இருக்கான்னு தெரியல.”

ஒரு வாய் குடித்தவன், “நல்லாத்தான் இருக்கு.” என்றான்.

“நிஜமாவா?”

“நிஜமாத்தான்.”

அவளும் தன்னுடைய கப்பை எடுத்துக் குடித்தாள்.

“ம்… பரவாயில்ல.” அதைக் கேட்டதும் அர்ஜுனுக்குச் சிரிப்பு வந்தது.

“என்ன சிரிக்கிறீங்க?”

“இல்ல… உங்க முகத்தைப் பார்த்தா, டீ நல்லா வரலன்னு நீங்களே முடிவு பண்ணிட்ட மாதிரி இருந்துச்சு.”

“அப்படியா?”

“ம்.”

“ஆனா டீ எப்படி இருந்தாலும் குடிப்பேன்..” என்றாள் ரசித்து.

அர்ஜுன் அவளை ஆழ்ந்து பார்த்தான். பின் சில நொடிகள் இருவரும் அப்படியே நின்றபடி டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

பிறகு, சமையலறைக்குள் திரும்பிச் சென்ற இலக்கியா, ஃப்ரிட்ஜைத் திறந்தபடி, “நைட்டுக்கு என்ன பண்ணலாம்?” என்று கேட்டாள்.

லேப்டாப்பை மீண்டும் திறக்க முயன்ற அர்ஜுன், “எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே.” என்றான்.

“அதான் பிரச்சினை. எதுவான்னா என்ன?”

“தோசை?”

“மாவு இருக்கா?”

“இருக்கும்னு நினைக்கிறேன்.”

“இருக்கும்னு நினைக்கிறேன்னா?”

அவன் சிரித்தான். “இந்த வீட்டுல என்ன இருக்கு, என்ன இல்லன்னு எனக்கே பாதி தெரியாது.”

அந்த பதிலைக் கேட்டதும், இலக்கியாவுக்கு தன்னையறியாமல் சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பு பெரியதாக இல்லை.

ஆனால், கல்யாணத்திற்குப் பிறகு அந்த வீட்டுக்குள் வந்த முதல் இயல்பான சிரிப்பு அதுதான்.

இலக்கியாவின் சிரிப்பைப் பார்த்த அர்ஜுனுக்கு ஒரு நொடி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடந்த மூன்று நாட்களாக, அவளுடைய முகத்தில் தெரிந்தது எல்லாம் களைப்பும் தயக்கமும்தான். இப்போது, சில நொடிகளுக்காவது அவள் இயல்பாகச் சிரித்ததைப் பார்த்ததும், அவனுக்கே கொஞ்சம் மனம் லேசாக இருந்தது.

“சரி, மாவு இருக்கான்னு பார்த்துட்டு சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு அவனும் சமையலறைக்குள் வந்தான். இலக்கியா ஃப்ரிட்ஜைத் திறந்தபடி, உள்ளே இருந்த காய்கறிகளை வெளியே எடுத்துக் கொண்டிருந்தாள்.

“இந்த டப்பாவா?” என்று ஒரு ஸ்டீல் டப்பாவை எடுத்துக் காட்டினான்.

“அதைத் திறந்து பாருங்க.” 

டப்பாவைத் திறந்தவன், “கண்டுபிடிச்சிட்டேன். மாவு இருக்கு.” என்றான்.

“நல்லவேளை.”

“இல்லன்னா?”

“இல்லன்னா, நைட்டுக்கு நீங்க பிஸ்கட் சாப்பிட வேண்டியதுதான்.”

“அதுக்கெல்லாம் நான் பழகிட்டேன்.” அவன் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தையில் ஏனோ இலக்கியாவின் கை ஒரு நொடி நின்றது.

“தினமும் வெளியிலயே சாப்பிடுவீங்களா?”

“பெரும்பாலும் ஆமாம். ஆபீஸ் கேன்டீன், இல்லன்னா ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிடுவேன்.”

“வீட்டுல சமைக்க மாட்டீங்களா?”

“சமைக்கத் தெரியாது.” அதைச் சொல்லும்போது அவன் முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால், தெரியாத காரணத்தால் இலக்கியாவுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அந்த வீட்டில் தனியாக அவன் எப்படி இருந்திருப்பான் என்று நினைத்துப் பார்த்தாள்.

அதே நேரத்தில், சமையலறை மேடையில் இருந்த வெங்காயத்தை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள். இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை, கண்கள் எரிய ஆரம்பித்துவிட்டது.

“ச்சே…” என்று முணுமுணுத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த அர்ஜுன், “கொஞ்சம் தள்ளி நின்னு நறுக்குங்க. இங்க ஃபேன் காற்று வராது.” என்றான்.

“பரவாயில்ல.”

“ஒரு நிமிஷம்.” என்று சொல்லிவிட்டு ஹாலில் இருந்த சிறிய டேபிள் ஃபேனை எடுத்துக் கொண்டு வந்து அவள் அருகே வைத்தான்.

“இப்போ ஓகேவா இருக்கும்.”

இலக்கியா ஒரு நொடி அவனைப் பார்த்தாள்.

“தேங்க்ஸ்.”

“வெங்காயத்துக்காக தேங்க்ஸா?”

“இல்ல… ஃபேனுக்காக.”

“ஓ… பரவாயில்ல.” அவன் சிரித்தபடியே ஹாலுக்குத் திரும்பப் போக, இலக்கியா திடீரென்று, “அர்ஜுன்…” என்று அழைத்தாள்.

“ம்?”

“உங்களுக்கு தோசையும் சாம்பாரும் மட்டும் போதுமா? சட்னி அரைக்கட்டுமா?”

“எதுக்கு இவ்வளவு கஷ்டம்? அதுவே போதும்.”

“எனக்கு சட்னி வேணும்.” அவள் முகத்தைச் சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னதும், அர்ஜுனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“அப்போ அரைச்சிடுங்க.”

“தேங்காய் எங்க இருக்கு?”

“அதையும் நான்தான் தேடணுமா?”

“இந்த வீட்டுல என்ன இருக்கு, என்ன இல்லன்னு உங்களுக்கே தெரியாதுன்னு நீங்கதான் சொன்னீங்க.”

அவன் சிரித்தபடியே ஃப்ரிட்ஜைத் திறந்தான்.

“கிடைச்சிருச்சு.”

“நல்ல பையன்.” அந்த வார்த்தை இலக்கியாவின் வாயிலிருந்து தன்னையறியாமல் வந்துவிட்டது.

அடுத்த நொடியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இலக்கியா உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு மிக்ஸியை எடுத்தாள். அர்ஜுனும் எதுவும் சொல்லாமல் தேங்காயை மேசையில் வைத்துவிட்டு வெளியே சென்றான்.

ஆனால், ஹாலில் வந்து அமர்ந்த பிறகும் அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மட்டும் மாறவில்லை.

சமையலறைக்குள் நின்றிருந்த இலக்கியாவோ, “நல்ல பையனா?” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

ஆனால் எவ்வளவு முயன்றும், உதட்டோரத்தில் வந்த அந்தச் சின்ன புன்னகையை மட்டும் அவளால் மறைக்க முடியவில்லை.

சமையலறை மேடையில் வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்த இலக்கியா, என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே காய்களை நறுக்க ஆரம்பித்தாள். 

ஹாலில் லேப்டாப்பைத் திறந்து வைத்திருந்த அர்ஜுன், இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை சமையலறை பக்கமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் இன்னொருவர் நடமாடுவது அவனுக்கே இன்னும் புதிதாகத்தான் இருந்தது.

அந்த நேரத்தில், மேசையின் மீது இருந்த அவனுடைய போன் சிணுங்கியது. திரையில் தாமுவின் பெயர் தெரிந்ததும், “இப்போ எதுக்கு இவன்?” என்று முணுமுணுத்தபடியே அழைப்பை எடுத்தான்.

“சொல்லுடா.”

“டேய், என்ன பண்ற? நைட்டு சாப்பாடு முடிஞ்சுதா?”

அர்ஜுன் சிரித்தான். “இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.”

“ஏன்டா, இலக்கியா என்ன பண்றாங்க?”

அவன் தன்னையறியாமல் சமையலறையை எட்டிப் பார்த்தான். இலக்கியா அப்போது தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள்.

“கிச்சன்ல இருக்காங்க.”

“அப்போ சரி. நான் இன்னொரு அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுறேன்.”

“எதுக்குடா?”

“எதுக்குன்னா? கல்யாணம் ஆனா ஃப்ரண்ட் வீட்டுக்கு வரக்கூடாதா?”

“வராதே.”

“போடா. சுபத்ராவையும் கூட்டிட்டு வர்றேன்.”

“டேய், நாளைக்கு வாடா.”

“நீ சொல்றதைக் கேட்டா நான் தாமுவா இருப்பேனா?”

அவன் சிரித்தபடியே போனை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்க, சமையலறை வாசலில் நின்று கொண்டிருந்தாள் இலக்கியா.

“யாரு?”

“தாமு.”

“ஓ…”

“அவனும் சுபத்ராவும் வீட்டுக்கு வர்றாங்களாம்.”

இலக்கியா ஒரு நொடி யோசித்தாள். “இப்போவா?”

“ம்… அவனுக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது.”

“அப்போ இன்னும் கொஞ்சம் தோசை மாவு எடுத்துட்டு வரணும்.”

“இல்ல, அவன் வந்தா சாப்பிட மாட்டான். பேசித்தான் உயிரை வாங்குவான்.”

அவன் சொன்ன விதத்தில் இலக்கியாவுக்குச் சிரிப்பு வந்தது. அதை மறைக்க முயன்று மீண்டும் சமையலறைக்குள் திரும்பியவள், “சட்னி மட்டும் போதாது. ஏதாவது வேற பண்ணணும்.” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

“என்ன சொன்னீங்க?” என்று ஹாலிலிருந்து அர்ஜுன் கத்தினான்.

“ஒண்ணுமில்ல.”

“நான் வந்து ஹெல்ப் பண்ணவா?”

அதைக் கேட்டதும் இலக்கியா சிரித்தபடியே, “உங்களுக்கு சமைக்கவே தெரியாதுன்னு அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னீங்க.” என்றாள்.

“அது உண்மைதான். ஆனா, காய்கறி கழுவுறது, வெங்காயம் உரிக்கிறதெல்லாம் தெரியும்.”

“அப்படியா? சரி, இந்த வெங்காயத்தை உரிச்சுக் கொடுங்க.”

அடுத்த நிமிடம், சட்டையைக் கொஞ்சம் மடித்துக் கொண்டு சமையலறைக்குள் வந்தவன், மேடையின் ஓரத்தில் இருந்த வெங்காயக் கூடையை எடுத்துக் கொண்டு நின்றான். இரண்டு பேரும் ஒரே இடத்தில் நின்றதால், அந்த பெரிய சமையலறை மிகவும் சின்னதாகத் தோன்றியது.

இலக்கியா அடுப்பைப் பார்த்துக் கொண்டிருக்க, அர்ஜுன் வெங்காயத்தை உரித்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் நடுவில், வெளியிலிருந்து குழந்தைகள் விளையாடும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஆபீஸ் எப்படி இருந்துச்சு?” என்று வெங்காயத்தின் தோலைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டபடியே கேட்டான் அர்ஜுன்.

“நல்லாத்தான் இருந்துச்சு.”

“பழகிட்டீங்களா?”

“இன்னும் இல்ல. கொஞ்ச நாள் ஆகும்.”

“ம்… எனக்கும் சென்னை வந்தப்போ அப்படித்தான் இருந்துச்சு.”

இலக்கியா அவனைத் திரும்பிப் பார்த்தாள். “நீங்களும் முதல்ல சென்னைக்கு வரும்போது பயந்தீங்களா?”

“பயமா இல்ல. ஆனா, யாருமே இல்லாம தனியா இருக்குறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு.”

அவன் சாதாரணமாகச் சொல்லிவிட்டு மீண்டும் வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தான். ஆனால் அந்த ஒரு வார்த்தை மட்டும் இலக்கியாவின் மனதுக்குள் ஏதோ செய்தது.

ஏனோ, அந்த நிமிடம், அவனும் தனியாகத்தான் இந்த வாழ்க்கைக்குள் வந்து நின்றிருக்கிறான் என்ற எண்ணம் முதன்முறையாக அவளுக்குள் தோன்றியது.

You may also like

1 comment

M. Sarathi Rio July 31, 2026 - 1:48 pm

எதுவுமே முதல்ல பண்ணும்
போது கொஞ்ம் பயமாவும், தயக்கமாவும்தானே இருக்கும்..?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured