அத்தியாயம் – 5
“டேய், கொஞ்சம் சட்னி இருந்தா எடுத்து வைடா. எல்லாத்தையும் நீயே காலி பண்ணிடாத.”
தோசையைத் தட்டில் போட்டுக் கொண்டிருந்த இலக்கியா, ஹாலில் இருந்து கேட்ட தாமுவின் சத்தத்தைக் கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
“நீ சாப்பிடுற வேகத்தைப் பார்த்தா, இன்னும் இரண்டு தோசை ஊத்தணும் போல இருக்கு.” என்று அர்ஜுன் சொல்ல,
“மச்சான், கல்யாணத்துக்குப் பிறகு உன் வீட்டுக்கு முதன்முறையா வந்திருக்கேன். மரியாதை கொஞ்சம் கூட இல்லடா உனக்கு.” என்று தாமு குறைப்பட்டுக் கொண்டான்.
“உனக்கு மரியாதை கொடுத்தா, இந்த வீட்டையே உன் பேருக்கு மாத்திடுவ.”
அர்ஜுனின் பதிலில் சுபத்ரா சிரித்தபடி, “இலக்கியா, நீங்க இவங்க இரண்டு பேரோட பேச்சைக் கொஞ்சம் கூட சீரியஸா எடுத்துக்காதீங்க. காலேஜ்ல இருந்தே இப்படித்தான்.” என்றாள்.
“அதெல்லாம் பார்த்தாலே தெரியுது.” என்று இலக்கியாவும் சிரித்தாள்.
“அடப்பாவி! கல்யாணம் ஆன நாலே நாள்ல, என் friend-ஐ எனக்கு எதிரா மாத்திட்டீங்களே!” என்று தாமு நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.
“அதுக்கு நீயே காரணம்.” என்று சுபத்ரா அவனை முறைத்துவிட்டு, “சரி, ஞாயிற்றுக்கிழமை ராமநாதன் அங்கிள் வீட்டுக்குப் போறீங்களாமே?” என்று கேட்டாள்.
“ஆமாம். மதியம் போகணும்.” என்று அர்ஜுன் பதில் சொல்ல, தாமு உடனே, “அட, அந்த அங்கிள் வீட்டுச் சாப்பாடு செம்மையா இருக்கும். இலக்கியா, சாப்பிடுறதுக்கு முன்னாடி டயட் எல்லாம் யோசிக்காதீங்க.” என்றான்.
“நான் எப்ப டயட்ல இருந்தேன்?” என்று இலக்கியா சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“அப்படித்தான் இருக்கணும். இல்லன்னா, இந்த அர்ஜுன் கூட வாழ்றது கஷ்டம்.”
“டேய்!” என்று அர்ஜுன் கையில் இருந்த குஷனை அவன் மேல் தூக்கி வீச, ஹால் முழுக்க சிரிப்புச் சத்தம் நிரம்பியது.
சாப்பிட்டு முடித்ததும், சுபத்ரா இலக்கியாவுடன் சேர்ந்து சமையலறைக்குள் சென்றாள். பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருந்த இலக்கியாவைப் பார்த்தவள், “உனக்கு இங்க பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.
“இன்னும் பழகிட்டுதான் இருக்கேன்.”
“ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் சரியாகிடும்.”
இலக்கியா சிரித்தபடியே தலையசைத்தாள்.
“சரி, நாளைக்கு நல்லா ரெடி ஆகிட்டு போ.”
“எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குறீங்க?”
“அட, முதல் முறையா அர்ஜூன் அண்ணாவோட ரிலேடிவ் வீட்டுக்குப் போறீங்க. அதுவும்…” என்று இழுத்தவள், “அர்ஜுன் அண்ணா இதையெல்லாம் வெளில காட்டிக்க மாட்டாரு. ஆனா, நீ நல்லா ரெடி ஆகிட்டு வந்தா, உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷப்படுவாரு.” என்றதும்,
இலக்கியா சிரித்துவிட்டு, “அப்படியெல்லாம் எதுவும் இருக்காது.” என்றாள்.
“நீ வேணா பாரு. நாளைக்கு காலைல இருந்து, ‘இன்னும் ரெடி ஆகலையா?’ன்னு வந்து கேட்டுட்டே இருப்பாரு.”
“சுபி!” என்று ஹாலில் இருந்து தாமு கத்த, “இதோ வந்துட்டேன்!” என்று சிரித்தபடி வெளியே வந்தாள் சுபத்ரா.
கிளம்புவதற்கு முன், தாமு கதவின் அருகில் நின்று, “மச்சான், நாளைக்கு போய்ட்டு வந்ததும் எனக்கு கால் பண்ணு. ஃபுல் ரிபோர்ட் வேணும்.” என்றான்.
“உனக்கு வேற வேலையே இல்லையா?”
“இல்ல.”
“அதான் தெரியுமே.” என அர்ஜூன் சலிக்க, சிரித்தபடியே லிப்ட்டுக்குள் ஏறிக் கொண்டார்கள்.
கதவை மூடிவிட்டு உள்ளே வந்த அர்ஜுன், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தான். சமையலறையில் பாத்திரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த இலக்கியா, “உங்க ஃப்ரண்ட்ஸ் ரொம்ப கலகலப்பா இருக்காங்க.” என்றாள்.
“இது கொஞ்சம்தான். தாமுவுக்கு இன்னும் நேரம் கிடைச்சா, வீடே தலைகீழா ஆகிடும்.”
“அவரைப் பார்த்ததுமே தெரிஞ்சது.”
அர்ஜுன் சிரித்துவிட்டு, “நாளைக்கு போகனுமேனு டென்ஷனா இருக்கீங்களா?” என்று கேட்டான்.
இலக்கியா கொஞ்சம் யோசித்துவிட்டு, “கொஞ்சம்.” என்றாள்.
“எதுக்குங்க.?”
“புதுசா எல்லாரையும் மீட் பண்ணணும்ல.”
“அங்க யாரும் உங்களை இன்டெர்வியூ எடுக்கப் போறது இல்ல. சாதாரணமா இருங்க.”
அவன் அவ்வளவு சாதாரணமாகச் சொன்னதும், இலக்கியாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அடுத்த நாள் காலை…
அலாரம் அடிக்கும் முன்பே இலக்கியாவுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. மணி எட்டுதான் ஆகியிருந்தது. ஹாலுக்குப் போனவள், அர்ஜுன் பால்கனியில் நின்று போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“சரி மா, நாங்க நேரத்துக்குக் கிளம்பிடுவோம்.” போனை வைத்துவிட்டு உள்ளே வந்தவன், “அம்மாதான். சீக்கிரம் கிளம்பச் சொல்றாங்க.” என்றான்.
“இப்பவேவா?”
“உங்களுக்கு ரெடி ஆக டைம் வேணாமா?”
“நான் என்ன அவ்வளவு நேரம் எடுப்பேனா?”
“எனக்குத் தெரியாது. ஆனா, சுபத்ரா நேத்து ரொம்ப கான்ஃபிடென்டா சொல்லிட்டுப் போனாங்க. கொஞ்சம் டைம் கொடுன்னு..” என சிரிக்க,
“அவங்க பேச்சை நம்பிட்டீங்களா?”
“கொஞ்சம்.”
“போதும்.”
அந்தப் பதிலில் அர்ஜுன் சிரித்துவிட்டு, காபிக் கோப்பையை எடுத்துக் கொண்டான்.
அறைக்குள் நின்று புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியாவுக்கு, சுபத்ரா சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.
“நல்லா ரெடி ஆகிட்டு போ…” அவள் தெரியாமலே சிரித்துக் கொண்டாள். அதே நேரம், வெளியே இருந்து அர்ஜுனின் குரல் கேட்டது.
“இலக்கியா… இன்னும் எவ்வளவு நேரம்?”அந்தக் குரலைக் கேட்டவள், “ஐந்து நிமிஷம்!” என்று சத்தமாகப் பதில் சொல்லிவிட்டு, தன்னுடைய சிரிப்பை அடக்க முடியாமல் கண்ணாடி முன்னால் நின்றாள்.
அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த இலக்கியாவைப் பார்த்த அர்ஜுன், கையில் இருந்த போனை கீழே வைத்துவிட்டான். இளஞ்சிவப்பு நிறப் புடவையில், பாதி ஈரத்தோடு இருந்த முடியை ஒரு பக்கமாகப் போட்டபடி நின்றவளைப் பார்த்தவன், ஒரு நொடி என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றான்.
அவன் பார்வை மாறியதை கவனித்த இலக்கியா, “என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டாள்.
“ஒண்ணுமில்லங்க…”
“அப்புறம் ஏன் அப்படிப் பார்க்குறீங்க?”
“இல்ல… நல்லா இருக்கீங்க.” அவன் சாதாரணமாகச் சொன்னாலும், இலக்கியாவுக்குள் ஏதோ ஒரு சிறிய மகிழ்ச்சி வந்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “நேத்து இதைத்தான் எடுக்கச் சொன்னீங்களே. அதான் கட்டிட்டேன்.” என்று சொல்லிவிட்டு, ஹாலில் இருந்த பையை எடுத்தாள்.
“கிளம்பலாமா?”
“இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. சாப்பிட்டுட்டுப் போலாம்.”
“அங்க போயும் சாப்பிடப் போறோம். இங்கயும் சாப்பிடணுமா?”
“என் அம்மாவுக்குத் தெரிஞ்சா, ‘வீட்டுல இருந்து வெறும் வயித்தோட போனீங்களா?’ன்னு என்னைத்தான் திட்டுவாங்க.”
“சரி, உங்க அம்மாவுக்காகச் சாப்பிடுறேன்ங்க.”
“அட, ரொம்ப பெரிய தியாகம்.”
“ஆமா, அதை அப்ரிசியேட் பண்ணணும்ங்க.” இருவரும் பேசிக்கொண்டே காலை உணவை முடித்துவிட்டு கீழே இறங்கினார்கள். காரில் ஏறியதும், இலக்கியா ஜன்னல் பக்கமாகத் திரும்பி அமர்ந்துகொண்டாள். ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னை சாலைகளில் வழக்கத்தை விடக் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது.
சில நிமிடங்கள் இருவருக்கும் இடையே எந்தப் பேச்சும் இல்லை. ரேடியோவில் ஓடிக்கொண்டிருந்த பழைய பாடலை மெதுவாகக் கேட்டுக்கொண்டே வந்தார்கள்.
திடீரென்று, “இலக்கியா…” என்று அர்ஜுன் அழைத்தான்.
“ம்?”
“அங்க போனதும் யாராவது ஏதாவது கேட்டா, டென்ஷன் ஆகாதீங்க.”
“நான் டென்ஷன் ஆகுற மாதிரி தெரியுதா உங்களுக்கு?”
“கொஞ்சம்.”
“நீங்க மட்டும் ரொம்ப கூலா இருக்குற மாதிரி எனக்குத்
“தெரியுது” அர்ஜுன் சிரித்துவிட்டான்.
“நான் சின்ன வயசுல இருந்து அவங்க வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன். அதான்.”
“சரி, நான் ஏதாவது உளறிட்டா, அப்புறம் நீங்கள்தான் சமாளிக்கணும்.”
“நீங்க என்ன உளற போறீங்க, அப்படியே இருந்தாலும் பார்த்துக்கலாம்.”
“ம்ம் சரி… தேங்க்ஸ்..”
“நோ ஃபார்மாலிடிஸ்..”
அவன் அவ்வளவு உறுதியாகச் சொன்னதும், இலக்கியா அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்த ஒரு வார்த்தையில் இருந்த நம்பிக்கை, ஏனோ அவளுக்குள் ஒரு சின்ன நிம்மதியைக் கொடுத்தது.
‘ஏன் இந்த நம்பிக்கை தன் வீட்டில் உள்ளவர்களுக்கு வரவில்லை? வேகமாக மனம் அதை யோசித்து சோர்வடைந்தது. உடலும் தன்னாலே இறுகிப் போனது.
அதே நேரத்தில், கார் ஒரு பெரிய வீட்டின் முன்பு வந்து நின்றது.
வீட்டின் வெளியிலேயே இரண்டு மூன்று கார்கள் நின்றுகொண்டிருந்தன. உள்ளே இருந்து சிரிப்புச் சத்தமும், குழந்தைகள் ஓடி விளையாடும் சத்தமும் கேட்டது.
“அச்சோ…” என்று இலக்கியா தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டாள்.
“என்னங்க?”
“நீங்க சொன்னீங்கல்ல… அங்க யாரும் இருக்க மாட்டாங்கன்னு.”
“நான் எப்பங்க அப்படிச் சொன்னேன்?” என்று சிரித்தபடி காரை நிறுத்தினான் அர்ஜுன்.
“நான் காரை விட்டே இறங்கல.”
“சரி, நீங்க கார்லயே இருங்க. நான் மட்டும் போயிட்டு சாப்பிட்டுட்டு வந்துடுறேன். அம்மா கேட்டா சொல்லிடுங்க..” அவன் அப்படிச் சொன்னதும், இலக்கியா அவசரமாகக் கதவைத் திறந்து இறங்கினாள்.
“ஹலோ! நான் எப்ப அப்படிச் சொன்னேன்?”
“நோ ஆர்கியுமென்ட்ஸ். வாங்க…” அவன் சிரித்தபடியே முன்னால் நடக்க, அவனை முறைத்தபடியே பின்னால் நடந்தாள் இலக்கியா.
அவர்கள் கேட்டைத் தாண்டி உள்ளே சென்ற அடுத்த நொடி,
“அர்ஜுன் வந்துட்டான்டா!” என்ற குரல் வீடு முழுக்க ஒலித்தது.
“அர்ஜுன் வந்துட்டான்டா!” என்ற குரல் கேட்ட அடுத்த நொடியே, வீட்டுக்குள் இருந்த இரண்டு சின்னப் பசங்க வாசல் வரை ஓடி வந்தார்கள்.
“அர்ஜுன் மாமா!” என்று கத்திக்கொண்டே வந்த இருவரும், அவன் காலைக் கட்டிக்கொள்ள, இலக்கியா ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள். காரிலிருந்து இறங்கி வந்ததிலிருந்து அவன் முகத்தில் இருந்த சீரியஸான தோற்றம், அந்த ஒரு நிமிடத்தில் மொத்தமாக மாறிப்போயிருந்தது.
“டேய், ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்கடா!” என்று சிரித்தபடியே அவர்களைத் தூக்கி நிறுத்தியவன், “அம்மா எங்க?” என்று கேட்டான்.
“உள்ள இருக்காங்க மாமா. அத்தை வந்தாச்சு, பெரியம்மா வந்தாச்சு, எல்லாரும் வந்தாச்சு!” என்று ஒரே மூச்சில் சொல்லிவிட்டு, மீண்டும் வீட்டுக்குள் ஓடினார்கள்.
அவர்களுக்குப் பின்னால் மெதுவாக நடந்த இலக்கியா, வாசலுக்குள் நுழைந்ததும், ஹாலில் இருந்த அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பியதை உணர்ந்தாள்.
“வாப்பா அர்ஜுன்!” என்று ராமநாதன் எழுந்து வந்து அவன் தோளைத் தட்டினார்.
“எப்படி இருக்கீங்க சித்தப்பா..?”
“நல்லா இருக்கேன். நீ எப்படிடா இருக்க?”
“நல்லா இருக்கேன்.”
அடுத்த நொடியே, ராமநாதனின் பார்வை இலக்கியாவின் பக்கம் திரும்பியது.
“இதுதான் எங்க வீட்டு மருமகளா? வாம்மா, உள்ள வாம்மா.. உங்க கல்யாணத்துக்கு நாங்க யாரும் வரமுடியல. அப்படியான சூழ்நிலை. அர்ஜுனுக்கும் தெரியும். இருந்தாலும் சொல்லனும்ல…” என ஆர்ப்பாட்டமாய் வரவேற்க,
சிரிக்க முயன்றபடியே தலையசைத்த இலக்கியா, அர்ஜுனின் அருகில் வந்து நின்றாள்.
“என்னம்மா, இங்க பிடிச்சிருக்கா?” என்று ராமநாதனின் மனைவி லலிதா கேட்டதும், “ம்… கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டு இருக்கேன் ஆன்ட்டி.” என்றாள்.
“அதெல்லாம் சீக்கிரம் பழகிடுவ. வா, உட்காரு.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்க, மேல்மாடியில் இருந்து இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள்.
“அர்ஜுன்!” என்று கத்திக்கொண்டே வந்த மூத்த பெண், “கல்யாணம் ஆனதுக்கப்புறம் ஆளையே பார்க்க முடியலையே!” என்று குறைப்பட்டுக்கொண்டாள்.
“அக்கா, இப்போதான் ஒரு வாரம் ஆகுது.”
“ஒரு வாரமா? எங்களுக்கு ஒரு வருஷம் மாதிரி இருக்கு.”
அருகில் நின்றிருந்த இன்னொரு பெண் சிரித்தபடி, “அண்ணா, எங்களையெல்லாம் மறந்துட்டீங்களோன்னு நினைச்சோம்.” என்றாள்.
“அப்படியெல்லாம் இல்லடா.”
“சரி, இவங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்த மாட்டீங்களா?” என்று அவள் கேட்டதும், அர்ஜுன் திரும்பி இலக்கியாவைப் பார்த்தான்.
“இவங்கதான் இலக்கியா.”
“ஹாய், நான் நந்தினி.”
“நான் பிரியா.” இலக்கியாவும் சிரித்தபடியே, “ஹாய்…” என்றாள்.
“அண்ணி, வாங்க. இங்க உட்காருங்க.” என்று பிரியா அவளது கையைப் பிடித்து சோபாவில் அமர வைத்தாள்.
அர்ஜுன் பக்கத்தில் அமர்ந்திருந்த ராமநாதன், “டேய், உன் சித்தி உனக்கு இன்னும் காபி கூட கொடுக்கலையா?” என்று வீட்டுக்குள் சத்தம் போட்டார்.
“அப்பா, வந்த உடனே காபியா?” என்று நந்தினி சலித்துக்கொள்ள, “அப்புறம் என்ன? இவன் இந்த வீட்டுப் பையன் மாதிரின்னாலும், புது மாப்பிள்ளை இல்லையா!” என்று ராமநாதன் பதில் சொல்ல, ஹால் முழுக்க சிரிப்பு பரவியது.
இலக்கியா சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தாள். யாருமே அவளுக்குப் புதுசா, அந்நியம் போல் நடந்து கொள்ளவில்லை. எல்லாரும் பல வருடங்களாகத் தெரிந்தவர்கள் போலவே பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில், சின்னப் பையன் ஒருவன் ஓடி வந்து, “மாமா, மேல ரூமுக்கு வாங்க. நான் புதுசா வாங்கின car காட்டுறேன்.” என்று அர்ஜுனின் கையை இழுத்தான்.
“இப்பவா?”
“ஆமா, இப்பவே!”
“சரி, வா போலாம்.”
எழுந்தவன், ஒரு நொடி இலக்கியாவைப் பார்த்துவிட்டு, “நான் இப்ப வந்துடுறேன்ங்க.” என்று சொல்லிவிட்டு, பையனுடன் மாடிக்குச் சென்றான்.
அவன் சென்றதும், பிரியா இலக்கியாவை நோக்கி சிரித்தாள்.
“என்ன அண்ணி, அர்ஜுன் அண்ணா இப்படி இருப்பாருன்னு நினைக்கலையோ?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும், இலக்கியா மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்த அர்ஜுனைப் பார்த்தபடியே, “இல்ல…” என்று மெதுவாகச் சொன்னாள்.
காரில் வரும்போது இருந்த பதற்றம், வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருந்தது. அவளை யாரும் புதிதாக வந்தவள் மாதிரி நடத்தவில்லை. பல வருடங்களாகப் பழகிய ஒருவரைப் போலவே ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அண்ணி, கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்துடுவாங்க. அப்போதான் இந்த வீடு இன்னும் கலகலப்பா இருக்கும்.” என்று பிரியா சிரித்தபடியே சொல்ல, இலக்கியாவும் சுற்றிப் பார்த்தாள்.
சமையலறையில் இருந்து பாத்திரச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஹாலில் ராமநாதனும், லலிதாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டின் பரபரப்பையும், சிரிப்பையும் பார்த்துக்கொண்டிருந்த இலக்கியாவுக்கு, இங்கு வந்ததிலிருந்து முதல்முறையாக, மனதுக்குள் ஒரு சிறு நிம்மதி தோன்றியது.
சென்னை அவளுக்குப் புதிதில்லை தான். ஆனால் இப்போது அனைத்தும் புதிதாக தோன்றியது.
மீண்டும் ஒரு பெருமூச்சு வர, அதை வெளிக்காட்டமல் அவர்களோடு பேச ஆரம்பித்தாள்.
அதே நேரத்தில், மேலே இருந்து,
“அர்ஜுன் மாமா… சீக்கிரம் வாங்க!” என்று சின்னப் பையனின் குரல் மீண்டும் கேட்டது.
அந்தக் குரலைக் கேட்ட அனைவரும் சிரிக்க, ஹாலில் அமர்ந்திருந்த இலக்கியாவின் பார்வை தன்னையும் அறியாமல் மீண்டும் மேலே சென்றது.
அங்கே, சின்னப் பையன்களோடு சிரித்துக்கொண்டே நின்றிருந்த அர்ஜுனை பார்த்தவளுக்கு, இதுவரை தெரியாத அவனுடைய இன்னொரு முகம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.
இதயம் வருடிவிடவா…
உன் இதயம் திருடிவிடவா…
விழியில் நுழைந்துவிடவா…
என் வழியை மறந்துவிடவா…
வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…
1 comment
அட..இதுல என்ன அதிசயம் இருக்கு..? சில வீடு இப்படித்தான் கலகலன்னு இருக்கும், அர்ஜுன் அந்த வீட்டு பையன் என்கிறதால அவனும் அப்படி இருக்கான். இதுக்கேன் இம்புட்டு ஆர்ப்பாட்டம்..?
😌😌😌
CRVS (or) CRVS 2797