அத்தியாயம் – 06
ராமநாதன் வீட்டில் மதிய உணவு முடிந்த பிறகும், வீட்டில் இருந்த சலசலப்பு மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.
ஹாலில் குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்க, பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நந்தினியும் பிரியாவும் இலக்கியாவை விடவே மாட்டோம் என்பது போல அவளருகிலேயே அமர்ந்திருந்தார்கள்.
“அண்ணி, இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போங்களேன்…” என்று பிரியா முகத்தைச் சுருக்கிக் கேட்க, இலக்கியா சிரித்தபடி அர்ஜுனைப் பார்த்தாள்.
“நாங்க கிளம்பணும். நாளைக்கு office இருக்கு.” என்று அர்ஜுன் பதில் சொல்ல, உடனே நந்தினி, “சரி சரி… கல்யாணம் ஆனதுக்கப்புறம் எல்லாரும் இப்படித்தான் பிஸி ஆகிடுவாங்க.” என்று சலித்துக்கொண்டாள்.
“நீ மட்டும் ரொம்ப ஃப்ரீயா இருக்குற மாதிரி பேசாத.” என்று அர்ஜுன் சிரித்தான்.
லலிதா ஒரு சிறிய கவரை இலக்கியாவின் கையில் கொடுத்தார்.
“இதெல்லாம் எதுக்கும்மா?” என்று அவள் தயக்கத்துடன் கேட்க,
“முதல் தடவையா வீட்டுக்கு வந்திருக்க. வாங்கிக்கோ.” என்று அன்பாகச் சொன்னார்.
அதை மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டாள்.
கிளம்புவதற்கு முன், ராமநாதன் அர்ஜுனின் தோளைத் தட்டிவிட்டு, “அடுத்த தடவை இவ்வளவு நாள் கேப் விடக்கூடாது.” என்றார்.
“சரி மாமா.”
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வெளியே வந்தார்கள்.
காரில் ஏறியதும், சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை.
வீட்டின் சத்தமும், குழந்தைகளின் சிரிப்பும் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
சாலையில் காரை செலுத்திக்கொண்டிருந்த அர்ஜுன், திடீரென்று இலக்கியாவைப் பார்த்தான்.
“வீட்டுக்குப் போயிடலாமா… இல்ல கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரலாமா?”
ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தவள் திரும்பினாள்.
“எங்க?”
“பீச் போயிட்டு வரலாம்னு தோணுச்சு.”
சில நொடிகள் யோசித்தவள், மெதுவாகத் தலையசைத்தாள்.
“சரி.”
மாலை நேரம் என்பதால், கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்தது.
குழந்தைகள் மணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலர் பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். அலைகள் கரையைத் தொட்டு விட்டு மீண்டும் திரும்பிச் சென்றுகொண்டிருந்தன.
அர்ஜுனும் இலக்கியாவும் கூட்டம் குறைவாக இருந்த இடத்தில் வந்து அமர்ந்தனர்.
கடற்காற்று இலக்கியாவின் தலைமுடியைக் கலைத்தது.
சில நிமிடங்கள் இருவரும் அமைதியாகவே இருந்தனர்.
அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த இலக்கியாவின் மனதிற்குள் திடீரென்று ஏதோ ஒரு காட்சி வந்து போனது.
மங்கலான ஒரு மாலை நேரம்…
அதே கடற்கரை…
தொலைவில் யாரோ சிரித்துக்கொண்டே அவளை அழைப்பது போல…
ஒரு நொடி அந்த நினைவு வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது.
அவள் தன்னையும் அறியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
“என்னாச்சு?” என்று அர்ஜுனின் குரல் கேட்டதும், சட்டென்று நிமிர்ந்தாள்.
“ஒண்ணுமில்லை.”
அவன் எதுவும் கேட்கவில்லை.
ஆனால், அதே நேரத்தில் அவனுடைய மனதிற்குள்ளும் ஏதோ ஒரு பழைய நினைவு மின்னல் போல வந்து சென்றது.
அதே கடற்கரை…
யாரோ ஒருவரிடம் கோபமாகப் பேசிக்கொண்டிருக்கும் தன்னுடைய குரல்…
அதற்குப் பிறகு வெறுமை.
ஒரு பெருமூச்சு விட்டவன், தலையை அசைத்துக்கொண்டான்.
இருவருமே தங்களுக்குள் வந்த அந்த நினைவுகளை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
அந்த அமைதியை உடைத்தது அர்ஜுனின் அலைபேசி.
திரையில் “அம்மா” என்ற பெயர் ஒளிர்ந்தது.
“சொல்லும்மா…”
“என்னடா, கிளம்பிட்டீங்களா?”
“ஆமாம். இப்ப பீச்சுல இருக்கோம்.”
“அப்படியா? இலக்கியா எங்க?”
அர்ஜுன் அலைபேசியை அவளிடம் நீட்டினான்.
“அம்மா பேசுறாங்க.”
“ஹலோ ஆன்ட்டி…”
“என்னம்மா, நல்லா போய்ட்டு வந்தீங்களா?”
“ம்… ரொம்ப நல்லா இருந்துச்சு.”
“சரி, வீட்டுக்குப் போனதும் ஒரு கால் பண்ணு.”
“சரிங்க.”
போனை வைத்துவிட்டு மீண்டும் கடலை நோக்கித் திரும்பினாள்.
“உங்க அம்மா ரொம்ப அன்பா பேசுறாங்க.” என்று மெதுவாகச் சொன்னாள்.
அர்ஜுன் சிரித்தான்.
“அவங்க எல்லார்கிட்டயும் அப்படித்தான்.”
சூரியன் மெதுவாக மறைய ஆரம்பித்திருந்தான்.
“கிளம்பலாமா?” என்று அர்ஜுன் கேட்டான்.
“ம்…”
இருவரும் எழுந்து காரை நோக்கி நடந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும், இலக்கியாவின் அலைபேசி மீண்டும் ஒலித்தது.
அம்மாதான்.
“எப்படிடா இருந்துச்சு?”
“நல்லாத்தான் இருந்துச்சும்மா.”
“எல்லாரும் நல்லா பேசினாங்களா?”
“ம்…”
“சரி, ரெஸ்ட் எடு.”
சில நிமிடப் பேச்சுக்குப் பிறகு போனை வைத்தாள்.
அந்த நேரத்தில், அர்ஜுனும் ஹாலில் நின்றபடியே தன்னுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“சாப்பிட்டாச்சா?”
“சாப்பிட்டாச்சும்மா.”
“இலக்கியாவைப் பார்த்துக்கோ.”
“சரிம்மா.”
போனை வைத்தவன், சோபாவில் இருந்த பையை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்.
அந்த நாள் பெரிதாக எந்தப் பேச்சும் இல்லாமல் முடிந்தது.
அடுத்த நாள்.
திங்கட்கிழமை காலை.
அலாரம் அடித்த அடுத்த நிமிடமே அர்ஜுன் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.
அறைக்குள் இருந்த இலக்கியாவும் அவசரமாகத் தயாராகிக்கொண்டிருந்தாள்.
“எத்தனை மணிக்கு கிளம்பணும்?” என்று அவள் கேட்டாள்.
“எட்டு மணிக்குள்ள கிளம்பிட்டா சரியா இருக்கும்.”
“சரி.”
இருவரும் அவசரமாகத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
திங்கட்கிழமைக்கே உரிய பரபரப்பு, அந்த வீட்டிலும் ஆரம்பித்துவிட்டது.
கதவை பூட்டிக்கொண்டு வெளியே வந்த இருவரும், லிஃப்டுக்காகக் காத்திருந்தனர்.
“இந்த வாரம் ரொம்ப பிஸியா இருக்கும் போல.” என்று இலக்கியா மெதுவாகச் சொன்னாள்.
“எனக்கும் அப்படித்தான் தோணுது.”
லிஃப்ட் கதவு திறந்தது.
இருவரும் உள்ளே நுழைந்தனர்.
புதிய வாரம்…
புதிய வேலை…
புதிய சந்திப்புகள்…
அவர்களுக்காகக் காத்திருந்தது.
சென்னை காலை நேர பரபரப்பு ஏற்கனவே ஆரம்பித்திருந்தது.
சாலைகளில் வாகனங்கள் வரிசையாக நகர்ந்து கொண்டிருக்க, அர்ஜுனின் கார் மெதுவாக சிக்னலைக் கடந்து சென்றது. இலக்கியா ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இருந்த அமைதியான மனநிலை, திங்கட்கிழமை காலை வந்ததும் எங்கோ மறைந்து போயிருந்தது.
அர்ஜுன் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “இன்னைக்கு ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கா?” என்று கேட்டான்.
“காலைல ஒரு ரெவ்யூ மீட்டிங்க் இருக்கு. அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு.”
“புதுசா ஜாயின் பண்ணிருக்கீங்கள்ல… ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.”
“உங்களுக்கு எப்பவும் டென்ஷனே வராதா?”
அவன் சிரித்தான்.
“வரும். ஆனா, வெளியே காட்டிக்க மாட்டேன்.”
“அது நல்ல விஷயமா, கெட்ட விஷயமா?”
“எனக்கே தெரியல.”
அவள் சிரித்துவிட்டு மீண்டும் வெளியே திரும்பிக்கொண்டாள்.
சில நிமிடங்களில் மெட்ரோ நிலையம் வந்துவிட்டது.
காரை நிறுத்தியவன், “ஈவ்னிங் லேட்டாகுமா?” என்று கேட்டான்.
“தெரியல. வேலை இருந்தா ஆகலாம்.”
“சரி. கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு மெசேஜ் மட்டும் பண்ணிடுங்க.”
“ம்… சரி.”
கதவைத் திறந்துவிட்டு இறங்கியவள், இரண்டு அடி நடந்துவிட்டு திரும்பினாள்.
“பை.”
ஒரு நொடி ஆச்சரியமாக அவளைப் பார்த்த அர்ஜுன், மெதுவாகச் சிரித்தான்.
“பை.”
அவள் கூட்டத்திற்குள் மறைந்து போகும் வரை பார்த்துக்கொண்டிருந்தவன், பிறகுதான் காரை அலுவலகத்தை நோக்கித் திருப்பினான்.
வங்கிக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே இலக்கியா வேலையில் மூழ்கிப் போய்விட்டாள்.
“குட் மார்னிங் மேம்!” என்று ரிசப்ஷனில் இருந்த பெண் சிரித்தபடி சொல்ல,
“குட் மார்னிங்.”
தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கணினியை இயக்கியவள், மேசை முழுவதும் குவிந்திருந்த கோப்புகளைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
அதே நேரத்தில், பக்கத்தில் அமர்ந்திருந்த கவிதா என்ற பெண், “மேம், இன்னைக்கு கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கும் போல.” என்றாள்.
“ஏன்?”
“மாசக் கடைசி இல்லையா?”
“அச்சோ…” என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் இலக்கியா.
அதைப் பார்த்துக் கவிதா சிரித்துவிட்டாள்.
“பரவாயில்லை மேம். இரண்டு நாள்ல பழகிடுவீங்க.”
இலக்கியாவும் சிரித்தபடி தலையசைத்தாள்.
அதே நேரத்தில், அர்ஜுன் அலுவலகத்தில் தன்னுடைய லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“டேய் மச்சான்!”
தாமுவின் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான்.
கையில் இரண்டு காபி கோப்பைகளோடு நின்று கொண்டிருந்தான் தாமு.
“என்னடா, திங்கட்கிழமை காலையிலேயே இவ்வளவு சீரியஸா இருக்க?”
“வேலை இருக்கு.”
“பொய் சொல்லாத. நேத்துப் பீச் போயிட்டு வந்ததுக்கப்புறம், நீ வில்லங்கமா ஏதாவது யோசிச்சிட்டு இருக்கியா?”
அர்ஜுன் சட்டென்று அவனைப் பார்த்தான்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
“சுபத்ரா தான் சொன்னா.”
“அவளுக்கு எப்படித் தெரியும்?”
“அதெல்லாம் சீக்ரெட்.”
அர்ஜுன் சிரித்தபடி காபியை வாங்கிக்கொண்டான்.
“உன் பொண்டாட்டி இன்னும் இரண்டு நாள் உன்னோட இருந்தா, நீ ரொம்ப டீசென்ட் ஆயிடுவடா.”
“அப்போ இப்போ நான் decent இல்லையா?”
“நீயா?” என்று தாமு சிரிக்க, அர்ஜுன் மேசையில் இருந்த பேனாவை அவன் மேல் வீசினான்.
“சரி சரி, கோபப்படாத.”
இருவரும் சிரித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அர்ஜுனின் மொபைல் திரை ஒளிர்ந்தது.
“Meeting started. Save me.”
இலக்கியாவிடமிருந்து வந்த மெசேஜைப் பார்த்தவன், தன்னையும் அறியாமல் சிரித்துவிட்டான்.
அதைப் பார்த்த தாமு புருவத்தை உயர்த்தினான்.
“என்னடா, ரொமான்ஸ் எல்லாம் ஆரம்பிச்சுடுச்சா?”
“சும்மா இருடா.”
என்று சொல்லிவிட்டு, அர்ஜுன் உடனே பதில் அனுப்பினான்.
“All the best.”
வங்கியின் கூட்ட நெரிசலுக்கு நடுவே, அந்த மெசேஜைப் பார்த்த இலக்கியாவின் உதடுகளில் தானாகவே ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.
அதைப் பார்த்த கவிதா, “என்ன மேம், ஏதாவது நல்ல news ஆ?” என்று கேட்டாள்.
சட்டென்று போனை மூடியவள், “ஒண்ணுமில்லை.” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினாள்.
ஆனால், அந்த நாள் முழுவதும் தெரியாமல் மனதுக்குள் ஒரு லேசான அமைதி மட்டும் இருந்தது.
அர்ஜுன் அனுப்பிய அந்த ஒரு வரி மெசேஜ், அவளுக்குத் தெரியாமலே இலக்கியாவின் மனதை கொஞ்சம் இலகுவாக்கியிருந்தது.
அடுத்த சில மணி நேரங்கள் வேலை பரபரப்பாகவே கடந்தன. வாடிக்கையாளர்கள், மீட்டிங்கள், புதிய கோப்புகள் என்று நேரம் போனதே தெரியவில்லை.
மதியம் ஒரு மணியளவில், கவிதா தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, “மேம், லஞ்ச் போகலாமா?” என்று கேட்டாள்.
கணினித் திரையிலிருந்து பார்வையைத் திருப்பிய இலக்கியா, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “அடடா! ஒரு மணி ஆகிடுச்சா?” என்று கேட்டாள்.
“நீங்க காலைல இருந்து ஒரே வேலையிலயே இருக்கீங்க. வாங்க, கொஞ்சம் ப்ரேக் எடுங்க.”
இருவரும் வங்கியின் கேன்டீனுக்குள் சென்றார்கள்.
“சென்னைக்குப் புதுசா மேம்?” என்று கவிதா கேட்டாள்.
“இல்ல. ஆனா, இந்த ப்ராஞ்ச் தான் புதுசு.”
“கல்யாணம் எப்ப ஆச்சு?”
திடீரென்று வந்த அந்தக் கேள்வியில், இலக்கியா ஒரு நொடி தடுமாறினாள்.
“ரெண்டு வாரம் ஆகுது.”
“வாவ்! அப்படின்னா, இன்னும் ஹனிமூன் பீரியட்லதான் இருக்கணும்.”
அவள் சிரிக்க முயன்றாள்.
“அப்படியெல்லாம் எதுவுமில்லை.”
“அட, எல்லாரும் அப்படித்தான் சொல்வாங்க.”
அதற்கு மேல் இலக்கியா எதுவும் சொல்லவில்லை. சாப்பாட்டை அமைதியாகக் கிண்டிக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில், அலுவலகத்தில் தாமுவும் அர்ஜுனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
“டேய், சீரியஸா ஒரு கேள்வி கேட்கட்டுமா?” என்று தாமு கேட்டான்.
“கேளு.”
“இப்போ நீ சந்தோஷமா இருக்கியா?”
அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையை நிறுத்தினான்.
சில நொடிகள் எதுவும் பேசவில்லை.
“ஏன்டா திடீர்னு இப்படி கேட்குற?”
“சும்மா. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த அர்ஜுனுக்கும், இப்போ இருக்குற அர்ஜுனுக்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரியுது.”
அவன் மெதுவாகச் சிரித்தான்.
“எல்லாரோட வாழ்க்கையும் மாறும்ல.”
“மாறலாம். ஆனா, நீ இன்னும் எதையோ யோசிச்சுட்டே இருக்குற மாதிரி இருக்கு.”
அர்ஜுன் ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
“சில விஷயங்களுக்குக் கொஞ்சம் டைம் வேணும், தாமு.”
அவன் நண்பனின் முகத்தைப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
“சரி, நீயே சொல்லுற வரைக்கும் நான் கேட்க மாட்டேன்.”
“தேங்க்ஸ்.”
“ஆனா, ஒரு விஷயம் மட்டும்.”
“என்ன?”
“இலக்கியா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. அவளை தேவையில்லாம கன்ஃபியூஸ் பண்ணிடாத.”
அந்த வார்த்தைகள் அர்ஜுனின் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின.
அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
மாலை ஐந்து முப்பது மணியளவில், இலக்கியா தன் மேசையில் இருந்த கோப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளுடைய அலைபேசி அதிர்ந்தது.
“கிளம்பிட்டீங்களா?”
அர்ஜுனிடமிருந்து வந்த மெசேஜ்.
அதைப் பார்த்தவள், தெரியாமல் சிரித்தாள்.
“இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.”
என்று பதில் அனுப்பிவிட்டு, பையை எடுத்துக்கொண்டாள்.
அதே நேரத்தில், அர்ஜுன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தான்.
“சரி. நான் மெட்ரோ ஸ்டேஷன் பக்கத்துல wait பண்ணுறேன்.”
என்று அனுப்பிவிட்டு, காரை நோக்கி நடந்தான்.
மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியே வந்த இலக்கியா, சாலையோரத்தில் நின்றிருந்த அர்ஜுனின் காரைப் பார்த்ததும், ஏனோ மனதுக்குள் ஒரு சிறிய நிம்மதி தோன்றியது.
காரில் ஏறியவள், “ரொம்ப நேரமா wait பண்ணீங்களா?” என்று கேட்டாள்.
“இல்ல. இப்போதான் வந்தேன்.”
“ம்…”
சில நிமிடங்கள் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது.
திடீரென்று, அர்ஜுனின் அலைபேசி ஒலித்தது.
திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவன், ஒரு நொடி தயங்கினான்.
அதை இலக்கியாவும் கவனித்துவிட்டாள்.
“எடுத்துப் பேசுங்க.”
அவன் மெதுவாகத் தலையசைத்துவிட்டு, அழைப்பை ஏற்றான்.
“ஹலோ…”
அடுத்த நொடி, மறுமுனையில் கேட்ட குரலைக் கேட்டதும், அர்ஜுனின் முகத்தில் இருந்த அமைதி கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.
1 comment
முடியலை சாமி முடியலை.
😢😢😢
CRVS (or) CRVS 2797