Home Historical Novelநெஞ்சம் – 07

நெஞ்சம் – 07

by Vathani S

அத்தியாயம் – 07

“ஹலோ…”

அர்ஜுன் அழைப்பை ஏற்ற அடுத்த நொடியே, மறுமுனையில் இருந்த குரல் அவன் முகத்தில் இருந்த இயல்பை சட்டென மாற்றியது.

“அர்ஜுன்… நான் கார்த்திக் பேசுறேன்.” என்ற எதிரில் இருந்தவனின் குரலில், ஸ்டீயரிங்கின் மீது இருந்த அர்ஜுனின் விரல்கள் தன்னையும் அறியாமல் இறுகின. சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவன், பிறகு மெதுவாக, “சொல்லு கார்த்திக்…” என்றான்.

“இன்னைக்கு உன்னை மெட்ரோ ஸ்டேஷன்ல பார்த்தேன்.” என்றதும், அர்ஜுன் ஒரு நொடி இலக்கியாவைப் பார்த்துவிட்டு, மீண்டும் சாலையின் மீது பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“ம்…”

“உன் கூட ஒரு பொண்ணு இருந்தாங்க…”

“என் wife.” என்றான் பட்டென.

மறுமுனையில் சில நொடிகள் அமைதி நிலவியது.

“உண்மையாவே சொல்றேன் அர்ஜுன்… உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.” அந்த வார்த்தைகளைக் கேட்டதும், அர்ஜுன் எதுவும் பேசவில்லை.

“நீ கல்யாண வாழ்க்கையை வெறுத்துட்டு, தனியா வாழ்ந்துடுவியோன்னு நாங்க எல்லாரும் பயந்தோம். அவளை நினைச்சு, உன்னோட வாழ்க்கையையே வாழாம விட்டுருவியோன்னு நினைச்சேன்.”

அர்ஜுனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகியது.

காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த இலக்கியாவுக்கும், அவனுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றம் தெளிவாகத் தெரிந்தது.

“இன்னைக்கு உன் முகத்துல இருந்த அந்த நிம்மதியைப் பார்த்ததுக்கப்புறம்தான், எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “கார்த்திக்…” என்று அழைத்தான்.

“இல்ல, நான் எதுவும் தப்பா சொல்லல. நீ நல்லா இருக்கணும். அதுதான் முக்கியம். சரி, டிரைவ் பண்ணிட்டு இருப்ப. அப்புறம் பேசலாம்.”

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

காருக்குள் மீண்டும் அமைதி நிலவியது.

அர்ஜுன் போனை கீழே வைத்துவிட்டு, எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

சில நொடிகள் கழித்து, இலக்கியா மெதுவாக, “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.

அவன் சட்டென்று சுயநினைவுக்கு வந்தவன் போல திரும்பிப் பார்த்தான்.

“இல்ல… முன்னாடி தெரிஞ்சவங்க.”

“ஓ…”

அதற்கு மேல் அவளும் எதுவும் கேட்கவில்லை.

ஆனால், “முன்னாடி தெரிஞ்சவங்க” என்ற இரண்டு வார்த்தைகளுக்குப் பின்னால் ஏதோ சொல்லப்படாத கதை ஒன்று இருப்பதை அவளால் உணர முடிந்தது. காருக்குள் ஓடிக்கொண்டிருந்த 

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே,

 ஓயாமல் என்னை பந்தாடுதே..” மட்டும், என்ற பாடல் மட்டும் அந்த அமைதியை உடைக்க முயன்று கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு, இருவருக்கும் இடையே பெரியதாக எந்தப் பேச்சும் நடக்கவில்லை. அர்ஜுன் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இலக்கியாவும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

சிக்னலில் கார் நின்றபோது, தன்னையும் அறியாமல் அவன் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்தவன், இப்போது எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

“என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்க வேண்டும் போல இருந்தாலும், அந்தக் கேள்வியை மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டாள் இலக்கியா.

சில நேரங்களில், ஒருவரின் அமைதியைக் கலைக்காமல் இருப்பதுதான் சரி என்று அவளுக்குத் தோன்றியது.

வீட்டின் கீழே கார் வந்து நின்றதும், அர்ஜுன் வழக்கம்போல, “வாங்க…” என்று மட்டும் சொல்லிவிட்டு கீழே இறங்கினான்.

இலக்கியாவும் அமைதியாக அவன் பின்னால் நடந்தாள்.

லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது கூட, இருவரும் எதுவும் பேசவில்லை.

லிஃப்ட் கதவு திறந்ததும், உள்ளே நுழைந்தார்கள்.

ஐந்தாவது மாடியை நோக்கி லிஃப்ட் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த அமைதியை உடைத்தது மீண்டும் இலக்கியாதான்.

“உங்களுக்கு தலை வலிக்குதா?”

அர்ஜுன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“ஏன் கேட்குறீங்க?”

“இல்ல… நீங்க ரொம்ப அமைதியா இருக்குற மாதிரி தோணுச்சு.”

ஒரு நொடி அவளைப் பார்த்தவன், மெதுவாகச் சிரித்தான்.

“ஆபீஸ்ல கொஞ்சம் வேலை டென்ஷன். வேற எதுவுமில்லை.”

அவள் தலையசைத்தாலும், அந்தப் பதில் முழுமையாக உண்மை இல்லை என்று ஏனோ அவளுக்குத் தோன்றியது.

வீட்டுக்குள் வந்ததும், இலக்கியா தன்னுடைய கைப்பையை சோபாவில் வைத்துவிட்டு, பால்கனியை நோக்கி நடந்தாள்.

மாலை நேரக் காற்று மெதுவாக முகத்தில் பட்டது.

அதே நேரத்தில், அர்ஜுன் சட்டையை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.

சோபாவில் இருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்தவன், சில நொடிகள் யோசித்துவிட்டு மீண்டும் கீழே வைத்துவிட்டான்.

அதைத் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த இலக்கியாவுக்கு, அவனுடைய மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருப்பது மட்டும் புரிந்தது.

அந்த நேரத்தில், அவளுடைய அலைபேசி ஒலித்தது.

திரையில் “அம்மா” என்று தெரிந்ததும், உடனே அழைப்பை ஏற்றாள்.

“சொல்லும்மா…”

“வேலை முடிஞ்சுதா?”

“ம்… இப்போதான் வீட்டுக்கு வந்தேன்.”

“சரிடா, சாப்பிட்டுட்டு சீக்கிரம் தூங்கு. முகமே சரியில்லையேன்னு காலையிலேயே தோணுச்சு.”

இலக்கியா சிரித்தாள்.

“எனக்கு ஒண்ணுமில்லைம்மா.”

“அர்ஜுன் எங்க?”

அந்தக் கேள்வியைக் கேட்டதும், தன்னையும் அறியாமல் ஹாலில் நின்றிருந்த அவனைப் பார்த்தாள்.

“இங்கதான் இருக்காரு.”

“சரி, அவர்கிட்டயும் பேசணும்.”

“ஒரு நிமிஷம்.”

அலைபேசியை அர்ஜுனிடம் நீட்டியவள், “அம்மா பேசணுமாம்…” என்றாள்.

ஒரு நொடி தயங்கியவன், பிறகு போனை வாங்கிக் கொண்டான்.

“ஹலோ, சொல்லுங்க அத்தை…” என்று அர்ஜுன் இயல்பாகக் கேட்டான்.

“மாப்பிள்ளை, எப்படி இருக்கீங்க? வேலை எல்லாம் எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கோம் த்த, வேலையும் போயிட்டு இருக்கு அத்தை.”

“இலக்கியா கொஞ்சம் டயர்டா பேசுறா. ஆபீஸ் வேலை அதிகமா இருக்குமோ?”

அர்ஜுன் ஒரு நொடி பால்கனியில் நின்றிருந்த இலக்கியாவைப் பார்த்தான்.

“புது ப்ராஞ்ச் இல்லையா… அதான் கொஞ்சம் அலைச்சலா இருக்கும்.”

“நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்கப்பா. வெளியே சொல்லிக்க மாட்டா. மனசுக்குள்ளயே போட்டுக் குழப்பிட்டு இருப்பா.”

அந்த வார்த்தைகளைக் கேட்டதும், அர்ஜுனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.

“சரிங்க அத்தை. நான் பார்த்துக்கறேன்.”

“சரி, ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு சீக்கிரம் தூங்குங்க.”

“சரிங்க த்தை.”

போனை வைத்துவிட்டு திரும்பியவன், சில நொடிகள் அப்படியே நின்றான்.

பால்கனியில் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்த இலக்கியா, கீழே சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா என்ன சொன்னாங்க?” என்று அவள் திரும்பாமல் கேட்டாள்.

“உங்களை நல்லாப் பார்த்துக்கச் சொன்னாங்க.”

அந்தப் பதிலைக் கேட்டவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்.

“அப்படியா?”

“ம்…”

சில நொடிகள் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது.

ஏனோ கணவனின் அமைதி அவளை வெகுவாக பாதிக்க, “இன்னைக்கு ஏதோ சரியில்லாம இருக்கீங்க.” என்றாள் சலிப்பாக

அர்ஜுன் புருவத்தை உயர்த்தினான்.

“நானா?”

“ம்… கார் ஓட்டிட்டு வரும்போது இருந்தே. வந்ததும் காபி குடிக்கலாம் சொல்லுவீங்க”

சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவன், மெதுவாகச் சிரித்தான்.

“நீங்க மேனேஜர்னு அடிக்கடி ப்ரூஃப் பன்றீங்க..” என பேச்சை மாற்ற முயற்சித்தான்.

“நான் சீரியசா கேட்டுட்டு இருக்கேன்.” என்றவளின் குரல் சற்று சத்தமாக ஒலித்தது.

அவள் முகத்தில் இருந்த அந்தக் கவலையைப் பார்த்ததும், “ஒண்ணும் பெருசா இல்லங்க. ஒரு பழைய friend phone பண்ணியிருந்தான். அவ்வளவுதான்.”

“கார்ல வரும்போது அவர்தான் பேசினவரா?”

“ம்.”

“ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்டா, இப்போ டச்ல இல்லையா?”

அந்தக் கேள்வியைக் கேட்டதும், அர்ஜுனின் மனதில் சில நிமிடங்களுக்கு முன் கார்த்திக் சொன்ன வார்த்தைகள் மீண்டும் ஒலித்தன.

அவளை நினைச்சு, உன்னோட வாழ்க்கையையே நீ வாழாம விட்டுருவியோன்னு பயந்தேன்…’

அடுத்த நொடியே, அந்த எண்ணத்தை மனதிலிருந்து தள்ளியவன், “ஒரு காலத்துல ரொம்ப close…” என்று மட்டும் சொன்னான்.

அந்தப் பதிலுக்கு மேல் இலக்கியாவும் எதுவும் கேட்கவில்லை.

இரவு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், அந்த வீட்டின் இரண்டு அறைகளிலும், இரண்டு பேரின் மனதிலும் வெவ்வேறு கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.

ஒருபுறம், பல வருடங்களாக மறைத்து வைத்திருந்த கடந்த காலம் மீண்டும் கதவைத் தட்ட ஆரம்பித்திருந்தது.

மறுபுறம், தன்னருகில் இருக்கும் மனிதனைப் பற்றி இன்னும் ஒன்றும் தெரியவில்லை என்ற உணர்வு, இலக்கியாவின் மனதை பெருவாரியாகக் குழப்பிக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை, அந்தக் கேள்விகளுக்கு நடுவே அவர்களுடைய வாழ்க்கை மீண்டும் வழக்கம்போல் ஓட ஆரம்பிக்கப் போகிறது என்பதே இருவருக்கும் தெரியவில்லை.

அந்த இரவு, வழக்கத்திற்கு மாறாக இருவரும் அதிகம் பேசவில்லை.

இலக்கியா அறைக்குள் சென்று அலமாரியைத் திறந்து, மறுநாளுக்குத் தேவையான உடைகளை எடுத்துவைத்து கொண்டிருந்தாள். ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த அர்ஜுன், கையில் அலைபேசியை வைத்திருந்தாலும், அவனுடைய மனம் எங்கோ வேறு இடத்தில் இருந்தது.

சில நிமிடங்களுக்கு முன் கார்த்திக் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போய்க் கொண்டிருந்தன.

உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு…”

ஒரு பெருமூச்சை விட்டவன், தலையை சோபாவின் பின்னால் சாய்த்துக் கொண்டான்.

அந்த நேரத்தில், அறையில் இருந்து வெளியே வந்த இலக்கியா, ஹாலில் இருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “பதினொன்னு ஆகிடுச்சு. இன்னும் தூங்கலையா?” என்று கேட்டாள்.

அவளுடைய குரலில் இருந்த அக்கறையை உணர்ந்தவன், “தூங்கப் போகணும்னு தான் நினைச்சேன்.” என்றான்.

“நாளைக்கு மறுபடியும் ஓட ஆரம்பிக்கனும்.”

“ஆமாம்.”

அவள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஒரு மிடறு குடித்துவிட்டு, “நாளைக்கு நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருக்கும் போல.” என்றாள்.

“ஏன்?”

“காலைல ஒரு presentation இருக்கு. ஹையர்ல கூப்பிட்டு இருந்தாங்க.”

“டென்ஷனா இருக்கீங்களா?”

இலக்கியா மெதுவாகச் சிரித்தாள்.

“கொஞ்சம் இருக்கு.”

“நீங்க எல்லாத்தையும் ரொம்ப யோசிக்கிறீங்க.”

“அப்படியா?”

“ம்… எல்லாம் சரியா நடக்கும்.”

அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தைகள், ஏனோ இலக்கியாவுக்குள் ஒரு சிறிய நிம்மதியைக் கொடுத்தது.

“தேங்க்ஸ்…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள்.

“எதுக்கு?”

“தெரியல… சும்மாதான்.”

அவள் சிரித்தபடியே அறைக்குள் சென்றுவிட, அர்ஜுன் சில நொடிகள் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறகு எழுந்து பால்கனிக்குச் சென்றவன், இரவு வானத்தை வெறித்துப் பார்த்தான்.

கீழே, சென்னை நகரம் இன்னும் விழித்துக் கொண்டிருந்தது.

அந்த விளக்குகளுக்கு நடுவே, தன்னுடைய வாழ்க்கையும் மெதுவாக வேறு ஒரு பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

ஆனால், அந்தப் பாதையில் கடந்த காலம் மீண்டும் வந்து நிற்குமா, இல்லையா என்பதை மட்டும் அவனால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில், அறைக்குள் படுத்திருந்த இலக்கியாவும் தூங்காமல் மேற்கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அர்ஜுன் மாலையில் பேசிய அந்தத் தொலைபேசி அழைப்பு, அவனுடைய முகத்தில் தெரிந்த அந்தச் சிறிய மாற்றம், “ஒரு காலத்துல ரொம்ப close…” என்று அவன் சொன்ன வார்த்தைகள்…

எல்லாமே அவள் மனதிற்குள் சுற்றிக் கொண்டிருந்தன.

ஆனால், அதைப் பற்றி அவனிடம் கேட்கும் அளவுக்கு, இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையே அந்த உரிமை வளரவில்லை என்பதையும் அவள் உணர்ந்தாள்.

அந்த எண்ணத்தோடே, கண்களை மூடியவள், மெதுவாகத் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

You may also like

1 comment

M. Sarathi Rio August 5, 2026 - 6:22 pm

வாயைத் திறந்து பேசினால் தானே உரிமையே வரும், இல்லைன்னா பொறுமை கூட போயிடும் போலயிருக்கு.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured