Home PREMIUM NOVELSநெஞ்சம் – 08

நெஞ்சம் – 08

by Vathani S

அத்தியாயம் – 08

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அர்ஜுன் மற்றும் இலக்கியாவின் வாழ்க்கையிலும் சிறுசிறு மாற்றங்கள் நிகழத்தான் செய்தது.

பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்றாலும், இருவருக்குள்ளும் இருந்த அந்தத் தயக்கம் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்திருந்தது.

காலையில் ஒன்றாகக் கிளம்புவது, மாலையில் ஒன்றாக வீட்டிற்குத் திரும்புவது, இரவு உணவின் போது இரண்டு வார்த்தைகள் பேசுவது என்று, அவர்களுக்குள்ளே தெரியாமல் ஒரு பழக்கம் உருவாகிக் கொண்டிருந்தது.

அந்த வாரத்தின் புதன்கிழமை காலை.

அர்ஜுன் வழக்கத்திற்கு மாறாக, காலையிலிருந்தே லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான். ஹாலில் இருந்த டீபாயின் மேல் சில ஃபைல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு கையில் மொபைல், இன்னொரு கையில் காபி கோப்பை என்று ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தான்.

அறையிலிருந்து வெளியே வந்த இலக்கியா, சோபாவில் அமர்ந்திருந்த அவனை ஒரு நொடி கவனித்தாள்.

காலையிலிருந்து அவன் முகத்தில் இருந்த இறுக்கம் அவளுக்கே புரிந்தது.

“என்னாச்சு அர்ஜூன்?” என்று தயக்கத்துடன் மெதுவாக கேட்டாள்.

மொபைலில் இருந்து பார்வையைத் திருப்பியவன், “ஒண்ணுமில்லைங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் திரையைப் பார்த்தான்.

“ஆனா உங்க ஃபேஸ் அப்படி சொல்லல அர்ஜூன்.? என்ன பிரச்சினை..” என அவள் கேட்ட விதத்தில் அர்ஜுன் தன்னையும் அறியாமல் சிரித்துவிட்டான்.

“இன்னைக்கு ஒரு foreign client meeting இருக்கு, என்றான் சிரித்தபடியே,

“ம்சிட் அவ்வளவுதானா?” என அவளும் சிரித்தபடியே கேட்க

“உங்களுக்கு அவ்வளவுதான். ஆனா, எனக்கு ஃபுல் டே டென்சன்.”

இலக்கியா சிரித்தாள்.

“அப்படி டென்சன் ஆகுற அளவுக்கு என்ன மீட்டிங்க்?”

“இந்த ப்ராஜெக்ட் மட்டும் கிடைச்சா, கம்பெனியோட வேல்யு வேற லெவல்ல போய்டும்.. அதனால இந்த மீட்டிங்க் ரொம்ப முக்கியம்.”

“அப்போ கண்டிப்பா கிடைக்கும்னு நினைச்சுக்கோங்க.”

“மேடம் ஈசியா சொல்லிட்டீங்களே.” என்று சிரித்தான் அர்ஜூன்.

“வேற என்ன பண்ணணும்? உங்க உழைப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அர்ஜூன். காலையிலேயே டென்சனாகி உட்கார்ந்தா மீட்டிங்க் நல்லா போயிடுமா?” என்றவளை, அர்ஜுன் சில நொடிகள் ஆழ்ந்துப் பார்த்தான்.

“நீங்க மோடிவேஷனல் ஸ்பீக்கர் ஆகலாம்.” என்றதும்,

“தேவையில்லை. ஒரு காபி போதும்.” என்று இலக்கியா பட்டென்று சொல்ல, அவளுடைய பதிலில் அர்ஜூன் பக்கென்று சிரித்துவிட்டான்.

சில நாட்களுக்கு முன்பு வரை, ஒரே வீட்டில் இருந்தும் அந்நியர்களைப் போல இருந்த இருவருக்கும் நடுவே, இப்போது மெதுவாக ஒரு இயல்பான உரையாடல் உருவாகிக் கொண்டிருந்தது.

“சரி, இன்னைக்கு மீட்டிங்க் முடிஞ்சதும் மறக்காம எனக்கு கால் பண்ணி சொல்லுங்க.”

“எதுக்கு?”

“நல்லா போச்சான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?”

அவளின் இந்த அக்கறையான பேச்சு, ஏனோ அர்ஜுனின் மனதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

“சரி.” என்று மட்டும் சொல்லிவிட்டு, லேப்டாப்பை மூடினான்.

அன்று மாலை. அலுவலக வேலையை முடித்துவிட்டு, அர்ஜுன் வழக்கம்போல் காரை மெட்ரோ நிலையம் நோக்கித் திருப்பினான்.

சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, இலக்கியாவிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை என்பதைப் பார்த்தவன், அவளுக்கு அழைக்க நினைத்துவிட்டு, மீண்டும் யோசனையை மாற்றிக் கொண்டான்.

“இன்னும் பிசியா இருப்பாங்களோ…”

என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

சில நிமிடங்களில் வங்கியின் முன் வந்து காரை நிறுத்தினான்.

அந்த நேரத்தில், வங்கி வாசலருகே நின்றிருந்த இலக்கியா, யாரோ ஒருவரிடம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

ஐம்பது வயதைக் கடந்த ஒருவன்.

அவனது முகத்தில் ஏதோ தயக்கம் தெரிந்தது.

“நான் ஏற்கனவே சொன்னேன்ல… என்கிட்ட இதைப் பற்றிப் பேச வேண்டாம்னு.”

இலக்கியாவின் குரலில் இருந்த கோபம், அர்ஜுனுக்கே புதிதாக இருந்தது.

“இல்லம்மா… நான் வந்தது…”

“எதுக்காக வந்தீங்கன்னு எனக்குத் தெரியும்.”

“ஒரு நிமிஷம் மட்டும் கேளு…”

“எனக்கு எதுவும் கேட்க வேண்டாம்.”

அந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பிப் பார்த்தாள்.

சாலையோரத்தில் நின்றிருந்த அர்ஜுனின் கார் கண்களில் பட்டதும், ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்.

அடுத்த நொடியே, அந்த மனிதரிடம் எதுவும் சொல்லாமல் வேகமாக காரை நோக்கி நடந்துவந்தாள்.

கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவள், ஆழமாக மூச்சை இழுத்துவிட்டாள்.

எதுவும் நடக்காதது போல, சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டாள்.

அர்ஜுன் காரை இயக்கவில்லை.

சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“யாருங்க அது?”

இலக்கியா ஜன்னல் பக்கம் திரும்பினாள்.

“யாரும் இல்லை.”

அந்தப் பதில் இயல்பாக இல்லை என்பதை அர்ஜுனும் புரிந்துகொண்டான்.

“ஓகே…” என்று மட்டும் சொல்லிவிட்டு, காரை இயக்கினான்.

அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

ஆனால், காரின் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த இலக்கியாவின் மனதிற்குள், பல வருடங்களுக்கு முன்பு கேட்ட சில வார்த்தைகள் திடீரென்று வந்து போயின.

“நீ இப்படிப் பண்ணுவன்னு நான் நினைக்கல…”

ஒரே ஒரு கணம்.

அடுத்த நொடியே, அந்த நினைவை வலுக்கட்டாயமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, கண்களை மூடிக்கொண்டாள்.

அர்ஜுனும் எதுவும் பேசவில்லை.

ஆனால், அவளுடைய முகத்தில் தெரிந்த அந்தக் கோபத்திற்குப் பின்னால், ஏதோ பெரிய கதை ஒன்று மறைந்திருப்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.

கார் மெதுவாகச் சாலையில் நகர்ந்து கொண்டிருந்தது. மாலை நேரப் போக்குவரத்து வழக்கம்போல நெரிசலாக இருந்தாலும், காருக்குள் மட்டும் ஒரு விதமான அமைதி நிலவியது. எப்போதுமே இலக்கியா அமைதியாக இருப்பாள். ஆனால், இப்போது இருந்த அமைதி வேறுபட்டதாக அர்ஜுனுக்குத் தோன்றியது. சில நிமிடங்களுக்கு முன்பு வங்கியின் வாசலில் அவள் கோபமாகப் பேசிய விதம், இன்னும் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்த இலக்கியா, எதிரே சென்றுகொண்டிருந்த வாகனங்களைக் கூட கவனிக்கவில்லை. அவளுடைய மனம் வேறெங்கோ சிக்கிக்கொண்டிருந்தது. காரின் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிரதிபலிப்பைப் பார்த்தவள், உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

அர்ஜுன் ஸ்டியரிங்கில் இருந்த கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். அவளிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அந்தக் கேள்வி அவளை இன்னும் காயப்படுத்திவிடுமோ என்ற எண்ணம் அவனை அமைதியாக இருக்க வைத்தது.

சிக்னலில் கார் நின்றபோது, அவனுடைய அலைபேசி ஒலித்தது. திரையில் தாமுவின் பெயர் தெரிந்ததும், ஸ்பீக்கரில் போடாமல் காதில் வைத்துப் பேச ஆரம்பித்தான்.

“சொல்லுடா.”

“மீட்டிங் என்ன ஆச்சு?”

“நல்லபடியா முடிஞ்சிடுச்சு.”

“அப்போ ட்ரீட் எப்போ?”

அர்ஜுன் சிரித்தான்.

“உனக்கு சாப்பிடுறதத் தவிர வேற எதுவுமே தோணாதா?”

“இல்ல. சரி, வீட்டுக்குப் போயிட்டியா?”

“இப்போதான் கிளம்பி இருக்கேன்.”

“சரி டா, வீட்டுக்குப் போனதும் கால் பண்ணு.”

“ம்.”

அழைப்பைத் துண்டித்துவிட்டு, மீண்டும் சாலையில் கவனத்தைத் திருப்பினான்.

“மீட்டிங் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று சில நிமிட அமைதிக்குப் பிறகு இலக்கியா கேட்டாள்.

அவள் தானாகப் பேசியதை எதிர்பார்க்காத அர்ஜுன், ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு, “ம்… எதிர்பார்த்ததைவிட நல்லாவே போச்சு.” என்றான்.

“அப்போ காலையிலிருந்த டென்ஷன் எல்லாம் வேஸ்ட்.”

“ஆமாம். நீங்க காலையில சொன்னது சரிதான் போல.”

“நான் எப்பவும் சரியாதான் சொல்லுவேன்.” அவளுடைய குரலில் இருந்த அந்தச் சிறிய குறும்பு, மாலை முழுவதும் இருந்த இறுக்கத்தை கொஞ்சம் குறைத்தது. அர்ஜுனும் அவளோடு இணைந்து சிரித்தான்.

“சரிங்க மேடம்.”

“அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கிட்டீங்களே?”

“வேற வழி?”

இலக்கியாவின் உதடுகளில் லேசான புன்னகை தோன்றியது. ஆனால், அடுத்த நொடியே வங்கியின் முன்பு நடந்த சம்பவம் அவள் மனதில் மீண்டும் வந்து போனது.

அதை உணர்ந்தது போல, அர்ஜுன் வேறு பேச்சுக்கு மாறினான்.

“இன்னைக்கு வீட்டுக்குப் போயிட்டு என்ன பண்ணப் போறீங்க?”

“பெருசா ஒன்னுமில்லை. சாப்பிட்டுட்டு தூங்கணும்.”

“அவ்வளவுதானா?”

“ஆமா. நாளைக்கு மறுபடியும் ஆபீஸ் போகணுமே.”

“சரிதான். ஏதாச்சும் டிபரன்டா யோசிங்க மேடம்..” என்று சிரிக்கவும், கார் அவர்கள் வீட்டின் அடுக்குமாடி வளாகத்துக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

அவனுக்கு பதிலேதும் சொல்லாமல், காரிலிருந்து இறங்கிய இலக்கியா, வழக்கம்போல லிஃப்டை நோக்கி நடந்தாள். ஆனால், இன்று அவளுடைய நடையில் இருந்த சோர்வு, அர்ஜுனின் கண்களுக்குத் தப்பவில்லை.

லிஃப்டுக்காக காத்திருந்தபோது, திடீரென்று அவன் கேட்டான்.

“எல்லாம் ஓகே தானே?” அந்தக் கேள்வியைக் கேட்ட இலக்கியா, சில நொடிகள் அமைதியாக நின்றாள்.

“ம்… ஓகேதான்.” பதிலில் தயக்கம் இருந்தாலும், அதற்கு மேல் எதுவும் கேட்காமல் தலையசைத்தான் அர்ஜுன்.

லிஃப்ட் கதவு திறக்க, இருவரும் உள்ளே சென்றார்கள். ஆனால், அந்தச் சிறிய அமைதிக்குள் கூட, இருவரின் மனதிலும் வெவ்வேறு கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. ஒருவரிடம் ஒருவர் கேட்க முடியாத கேள்விகள்.

லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்த பிறகும், இலக்கியா பெரிதாக எதுவும் பேசவில்லை. அர்ஜுனும் அவளை வற்புறுத்த விரும்பவில்லை. கதவைத் திறந்துவிட்டு உள்ளே சென்றவன், சாவியை மேசையின் மீது வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தான்.

இலக்கியா நேராக அறைக்குள் சென்று உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். முகத்தைக் கழுவியிருந்தாலும், அவளுடைய சோர்வு மட்டும் குறைந்திருந்ததாகத் தெரியவில்லை.

சமையலறைக்குள் சென்று ஃபிரிட்ஜைத் திறந்தவள், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தபடியே “காபி குடிக்கிறீங்களா?” என்று சத்தமாகக் கேட்டாள்.

லேப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன், நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“இப்போவா?”

“ம்… எனக்கும் குடிக்கணும் போல இருக்கு.”

“சரி.” அவள் மீண்டும் சமையலறைக்குள் சென்றுவிட்டாள். சில நிமிடங்களில், பாத்திரங்கள் உருளும் சத்தம் மட்டும் வீட்டில் கேட்டுக்கொண்டிருந்தது.

அந்தச் சத்தத்தைக் கேட்டபடி அமர்ந்திருந்த அர்ஜுனின் மனம், மீண்டும் மாலை நேரத்திற்கே சென்று நின்றது.

“நான் ஏற்கனவே சொன்னேன்ல… என்கிட்ட இதைப் பற்றிப் பேச வேண்டாம்னு…”

இலக்கியாவின் கோபமான குரல் இன்னும் காதுக்குள் ஒலித்தது.

“யாரா இருப்பான்?” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டவன், உடனே அந்த யோசனையை ஒதுக்கிவிட்டான்.

அந்த நேரத்தில், இலக்கியா இரண்டு காபி கப்புகளுடன் ஹாலுக்கு வந்தாள்.

“ம்ம எடுத்துக்கோங்க…”

“தேங்க்ஸ் ங்க.” என்றவனிடம் கோப்பையைக் கொடுத்துவிட்டு, எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் இருவரும் அமைதியாகவே காபியைக் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று, இலக்கியாவின் அலைபேசி ஒலித்தது.

திரையில் அம்மாவின் பெயர் தெரிந்ததும், ஒரு பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ அம்மா…”

“என்னடா, வீட்டுக்குப் போயிட்டியா?”

“ம்… இப்போதான் வந்தேன்.”

“சாப்பிட்டாச்சா?”

“இன்னும் இல்லம்மா.”

“வேலை எல்லாம் எப்படி போகுது?”

“நல்லாத்தான் போகுது.”

சில நொடிகள் அமைதியாக இருந்த மறுமுனையில், அவளுடைய அம்மா மெதுவாகக் கேட்டார்.

“என்னாச்சு இலக்கியா? குரலே சரியில்லையே.”

ஒரு நொடி அர்ஜுனைப் பார்த்தவள், “ஒண்ணுமில்லைம்மா. கொஞ்சம் டயர்டா இருக்கு.”

“உடம்பைப் பார்த்துக்கோ. வேலைன்னு ஓவரா யோசிக்காத.”

“சரிம்மா.” போனை வைத்துவிட்டு, அமைதியாக காபியைக் குடிக்க ஆரம்பித்தாள்.

அவள் முகத்தில் இருந்த அந்த மாற்றத்தை கவனித்த அர்ஜுன், “எல்லாம் ஓகே தானே?” என்று மீண்டும் கேட்டான்.

இந்த முறை, இலக்கியா உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

கோப்பையில் இருந்த காபியைப் பார்த்துக்கொண்டே, “சிலர்… நம்ம கடந்த காலத்துல நடந்த விஷயங்களை மறக்க விடாமாட்டாங்க.” என்று மெதுவாகச் சொன்னாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுன், சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“சில விஷயங்களை நாம நினைக்காம இருக்க நினைச்சாலும், மத்தவங்க நினைவுபடுத்திடுவாங்க.”

இலக்கியா சொன்ன அந்த வார்த்தைகளில் இருந்த வலியை, அவனால் தெளிவாக உணர முடிந்தது. அவனும் அந்த வலியில் இருப்பவன்தானே.

அதனால், அதற்கு மேல் எதையும் கேட்கவில்லை.

சில நொடிகள் கழித்து, “ஒருநாள் இதப்பத்தி பேசணும்னு தோணுச்சுன்னா பேசுங்க. இல்லன்னா பரவாயில்லை.” என்று மட்டும் சொன்னான்.

அந்தப் பதிலைக் கேட்ட இலக்கியா, அவனை நேராகப் பார்த்தாள்.

அவனுடைய முகத்தில் ஆர்வமோ, வற்புறுத்தலோ இல்லை. வெறும் புரிதல் மட்டும்தான் இருந்தது.

அந்த இரவு, இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஆனால், தங்கள் இருவருக்குள்ளும் மறைத்து வைத்திருந்த கடந்த காலத்தின் நிழல்கள், மெதுவாக ஒருவருக்கொருவர் தெரிய ஆரம்பித்திருந்தன.

You may also like

1 comment

M. Sarathi Rio August 6, 2026 - 6:32 pm

முதல்ல ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வாயைத் திறந்து தொலைங்கடா.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured