Home Love - Family - Romanceமுத்தமழை – 54

முத்தமழை – 54

by Vathani S

முத்தமழை – 54

“இப்போ என்ன தான் டீ உன்னோட பிரச்சினை? எதுக்கு இப்படி அழுதுட்டே இருக்க?” என கத்திக் கொண்டிருந்தான் கர்ணன்.

“நீங்க ஏன் இப்படி கத்துறீங்க?” என தன் மேடிட்ட வயிற்றில் கை வைத்து அவனை முறைக்க, 

உடனே “ஸாரி.. ஸாரி..” என் தன்னுடைய கரத்தையும், அவள் கரத்தின் மீது அனவாக வைத்துக் கொண்டு பாவமாக அவளைப் பார்த்தான்.

இது கர்ணனின் இயல்பு இல்லையே.. தன்னை மொத்தமாக மாற்றி தனக்காக செய்து கொண்ட பொம்மை போல் ஆக்கியிருந்தாள் அவன் மனைவி.

ஆனாலும் அவனுக்கு அதுதானே பிடித்திருந்தது. எப்போதும் தனிமை மட்டுமே அவனது வாழ்வாக இருந்தது. இன்பத்திலும், துன்பத்திலும் அவனுக்கு கிடைத்தது தனிமை மட்டுமே.

என்று வல்லியின் மீதான நேசத்தை உணர்ந்து, அவளைத் தனக்கானவள் என்று நினைக்கத் தொடங்கினானோ, அப்போதிருந்தே அவனின் தனிமைக்கு ஒரு விடிவுகாலம் கிடைத்திருந்தது.

நினைவுகளே அவனுக்குள் இத்தனை நேர்மறை எண்ணங்களைக் கொடுத்தால், அவளுடனான வாழ்க்கை எத்தனை நிறைவையும், நிம்மதியும் கொடுக்கும் என்று நினைத்த நொடி, அவள்தான் வேண்டும் என்று முடிவே செய்துவிட்டான்.

இதோ அதை செய்தும் காட்டிவிட்டான். என்ன அவன் எதிர்பார்க்காதது சொந்தங்களின் கசப்பான நிகழ்வுகள்.

“ம்ச்..” என வல்லி முகத்தை சுளித்த பிறகே நிகழ்வுக்கு வந்தவன், “வல்லி..” என்றான் கோபமாக..

திரும்பவில்லை பெண்..

மீண்டும் “வல்லிக்கண்ணு..” என்றான் கெஞ்சலாக.

அப்போதும் திரும்பவில்லை பெண்..

திரும்பவும் “வல்லி ம்மா..” என்றான் கொஞ்சலாக..

அழுகை கூடியதே தவிர, முகத்தைத் திருப்பவில்லை.

“ம்ச். அம்மு..” என்றான் தவிப்பாக.

“நீங்க.. நீங்க ஏன் பாவா இப்படி இருக்கீங்க..? ஏன் தகுதியே இல்லாத ஒரு அன்புக்கு ஏங்குறீங்க..? எனக்குப் புரியவே இல்ல.. நான் இருக்கேன். நமக்கு எல்லாமுமா குழந்தை இருக்கு.. இன்னும் என்னதான் உங்களுக்கு வேணும் பாவா.. உங்க முகத்துல வர்ர ஏக்கத்தையும், வேதனையும் பார்க்க என்னால முடியல பாவா..” என்றாள் கோபம் நிறைந்த குரலில்.

“ம்ச்.. அம்மு அது அப்போ டி.. எனக்கு தெரியல, நான் ஏன் அப்படி சட்டுனு ரியாக்ட் பண்ணேணு. அதுக்காக அப்படியே இருப்பேனா? என்னடி நீ?” என்றான் தளும்பி போன குரலில்.

“யாரும் இல்லாம இருக்குறதோட வலி எனக்கும் தெரியும் தான். அதுக்காக நம்ம மரியாதையை விட்டு இறங்கி போய் கெஞ்சனும்னு இல்ல பாவா..” என்றாள் பெண் ஆத்திரமாக.

“ம்ச் வல்லி… குடும்பத்துல என்னடி ஈகோ.. ஏதோ கோபத்துல இருக்காங்க.. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் அம்மு.. நீ ஏன் இந்த மாதிரி நேரத்துல இவ்ளோ கோபப்படுற, அப்புறம் என் பொண்ணும் உன்னை மாதிரி கோபக்காரியாதான் என்கிட்ட வருவா? உன்னையே என்னால சமாளிக்க முடியல, என் பொண்ணும் உன்னை மாதிரி வந்தா கண்டிப்பா என்னால சமாளிக்க முடியாது டீ..” என கோபமாக முடித்து பாவமாக முடிக்க, அதுவரை இருந்த கோபமெல்லாம் போய் பக்கென சிரித்துவிட்டாள் பெண்.

“ஹ்ம்ம்ம்.. என வல்லி இப்படி சிரிச்சிட்டே இருந்தாதானே எனக்கும் நிம்மதி. சந்தோசம் எல்லாம்..” என அவளின் நெற்றி முட்டிச் சிரிக்க,

“ம்ச்.. போங்க.. எனக்கு மறுபடியும் அதை பேச விருப்பமில்ல, ஆனா இன்னொரு முறை உங்க முகத்துல அந்த ஏக்கத்தைப் பார்த்தா, உங்க மனைவியா நான் தோத்துட்டேன்னு அர்த்தம் பாவா..” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“சரிடி சரிடி கோவக்காரி.. இனி இப்படி பண்ணமாட்டேன்..” என சமாதானத்திற்கு இறங்க,

“என்கிட்ட சொல்லாதீங்க. என்னை ஏமாத்திடுவீங்க. உங்க பொண்ணுக்கிட்ட சொல்லுங்க, அப்போதான் உங்களுக்கும் பயம் வரும்..” என மிரட்ட,

அதில் சிரித்தவன், மனைவியின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து, அவளின் வயிற்றில் தன் கரத்தை வைத்து “பொம்மு ம்மா… நீங்க அம்மா பேச்சைக் கேட்டு அப்பா கூட சண்டை போடக்கூடாது, என்ன செல்லம். நீங்க என்கிட்ட வர வரைக்கும் அப்பா இனி அம்மா சொல்ற மாதிரியே கேட்பேன், நீங்க வந்ததும் உங்க பேச்சை மட்டும் தான் கேட்பேன்.. ஓக்கே வா.. இப்போ இந்த பொம்மு ம்மாவோட என் அம்முவை அழ வச்சதுக்கு சாரி..” என கூறி வயிற்றில் முத்தமிட, வல்லபியின் இதழ்களில் கணவன் பேசியதைக் கேட்டு ரசனையான புன்னகை உண்டானது.

“என் பொண்ணுக்கிட்ட என்னைப்பத்தி நல்லவிதமா சொல்லி வைடி..” என்றான் வயிற்றில் நெற்றியைப் பதித்து..

“ம்ச் பாவா.. அதுக்கு நீங்க நல்லதாவும் செய்யனும்..” என சிரிக்க, கர்ணனின் போன் ஒலித்தது.

யாழினி தான் அழைத்துக் கொண்டிருந்தாள். 

“யாழி ம்மா… என்னடா?” என்றவனிடம்,

“அண்ணா.. நாளைக்கு விஷா கிளியரன்ஸ் இருக்கு.. உங்களுக்கு ரிமைன்ட் பண்ணதான் கால் பண்ணேன்..” என்றாள்.

“நியாபகம் இருக்கு டா.. மார்னிங்க் யேர்லியா கிளம்பிடலாம்.. அப்படியே டிக்கெட்ஸ் கன்ஃபார்ம் பண்ணிட்டு, உனக்கும் ஷாப்பிங்க் முடிச்சிடலாம்.” என்றான் கர்ணனும்.

“ஓக்கே அண்ணா.. வெற்றிக்கிட்ட சொல்லட்டுமா?” என்றாள் மெதுவான குரலில்.

“ஹ்ம்ம்..” என பெருமூச்சு விட்டவன் “சொல்லனுமா?” என்றான் அமைதியாக.

யாழினி பதில் சொல்லவில்லை. ஆனால் அந்த அமைதியிலேயே தங்கையின் மனம் புரிந்து விட்டது. 

“சொல்லுடா.. சொல்லித்தான் பாரு..” என்றான் வெற்றியின் கோபம் உணர்ந்து.

“ம்ம் சரி ண்ணா..” என்றவள் போனை வெறித்தபடியே அமர்ந்துவிட்டாள்.

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது, அவனிடம் பேசி. இப்போது என்ன பேச, எப்படி ஆரம்பிக்க என புரியவில்லை. அதோடு அவனின் கோபம் அதை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் நடுக்கம் எடுத்தது. அவன் பேசியதைக் கூட மறந்துவிட்டாள், மன்னித்தும் விட்டாள்தான். ஆனால் இனி பேசுவதைக் கேட்க தைரியம் தான் இல்லை.

இத்தனை நாட்களாக இன்று, நாளை என அவனிடம் சொல்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தாள். அனியத்திற்கும் ஒரு முடிவு உண்டே!. இதோ இன்று அவனிடம் சொல்லியே ஆகவேண்டும்.. என்ன சொல்வானோ என்ற பயம் அவளை நிலையில்லாமல் தவிக்க வைத்தது.

சில நொடி நன்றாக மூச்சை இழுத்துவிட்டு, தன்னை சமன் செய்துவிட்டு வெற்றிக்கு அழைத்தாள்.

முதல் முறை அழைப்பு ஏற்கப்படவில்லை. அதுவே பெண்ணுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. இன்னும் அவன் கோபம் போகவில்லையோ, என பயந்து கொண்டே மீண்டும் அழைக்க, கடைசி ரிங்கில் போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான் வெற்றி.

‘ஹலோ’ என்றவனின் வேகமான மூச்சு வாங்கிய குரலிலேயே ஏதோ வேலையில் இருக்கிறான் என்று புரிய, “பிசியா இருந்தா அப்புறம் பேசட்டுமா வெற்றி..” என்றாள் பதட்டமாக.

“ம்ச்… பிசிதான்.. ஆனா இனி ஃப்ரீதான். ஒர்கவுட் செஞ்சிட்டு இருந்தேன்.” என்றவன் தண்ணீர் குடிக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது.

“எப்படி இருக்கீங்க? ஒர்க் எப்படி போகுது?” என தயங்கி தயங்கி கேட்க,

“யா குட் ப்பா.. இப்போ இங்க செட்டாகிடுச்சு. நீ எப்படி இருக்க? எப்போ கிளம்பற?” என்றான் அவனாகவே.

அவனுடைய பேச்சில் நடந்த சண்டையோ, அதனால் ஏற்பட்ட பிரிவின் தாக்கமோ என்ற எந்த உணர்வுமே தென்படவில்லை. அவளால் அவனின் இந்த மிகச் சாதாரண அனுகுமுறையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நானானால் அவன் இல்லாமல் ஏங்கித் தவித்து, வேதனையில் துடித்துக் கொண்டிருக்க, அவன் மிகவும் சாதாரணமாக என்னிடம் பேசுகிறானே என்ற எண்ணம் அவளை  வெகுவாக வேதனையில் துடிக்க வைத்தது.

“ஹேய் யாழி… லைன்ல இருக்கியா ப்பா..” என்றான் வேகமாக.

“ஹான் வெற்றி இருக்கேன். நாளைக்கு விசா கிளியரண்ஸ் இருக்கு. நானும் அண்ணாவும் போறோம். அப்படியே டிக்கெட்ஸ் கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு அண்ணா சொன்னார். அதுதான் உங்ககிட்ட சொல்ல கால் பண்ணேன்..” என்றாள் வருத்தமான குரலில்.

“என்னப்பா நீ..? ரெண்டு வருசம் டைம் கொடுத்துருக்க.. அந்த ரெண்டு வருசத்துல நான் என்னை ப்ரூவ் பண்ணனும், நீயும் உன்னோட கோலை அச்சிவ் பண்ணனும், நமக்காக நமக்கு முன்னாடி கோல் செட் பண்ணி வச்சிருக்கார் உன் அண்ணா.. அதுவும் சரிதானே. இந்த டூ யேர் கேப்ல, உன்னைப்பத்தி எனக்கு நீ எதுவும் அப்டேட் பண்ண வேண்டிய அவசியமே இல்லப்பா.. உன்னோட லைஃப்.. உன்னோட ஆம்பிஷன். உன்னோட கோல்.. அதுமட்டும் தான் உனக்கு மூளையில பதியனும்..” என்று மூன்றாம் நபரிடம் பேசுவது போல பேச, அதற்கு மேல் யாழினியால் பேசவும் முடியவில்லை, அழுகையை அடக்கவும் முடியவில்லை.

“சாரி வெற்றி..” என்றவள் ஒரு கேவலோடு போனை வைத்துவிட, இறுகிப்போன முகத்துடன் அந்த போனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.

அன்றைய அவனின் பேச்சு தவறென்று அவனுக்கே புரிந்தது, என்ன கால கடந்த புரிதல். அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது தான். அவனின் வேலைப்பளு அவளை அழைக்க விடவில்லை. இருக்கும் மன அழுத்தத்தில் மீண்டும் தேவையில்லாமல் பேசி விடுவோமோ என்ற பயமும் ஒரு காரணம். ஆனால் அவளும் இதுவரை அழைக்கவில்லையே. வந்தனாவின் மூலம் நடந்ததைக் கேள்விப்பட்டு அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. உடனே அவளைப் பார்க்கவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது. ஆனால் அவளிடமிருந்து ஒரு அழைப்போ, செய்தியோ வரவில்லை. ஓய்ந்துவிட்டான் வெற்றி.

சரி இத்தனை நாள் கழித்து அழைக்கிறாளே என்று ஆசையாக எடுத்தால், அப்போதும் கூட நான் போகவில்லை என்று அவள் சொல்லவில்லையே என்ற கோபம் அவன் கண்ணை மறைக்க, மீண்டும் வாயை விட்டுவிட்டான்.

இப்போது அவளின் அழுகை அவனை இருக்கவிடாமல் பாடாய்படுத்தியது.

‘ஏன் இப்படி கோபப்படுற வெற்றி? அவ நிலையில இருந்து யோசிச்சுப்பாரு. அவங்க அம்மாவும், அக்காவும் அவளை போட்டு எவ்ளோ டார்ச்சர் பண்றாங்க. அதையெல்லாம் யாருக்காக பொறுத்து போறா.. உனக்காகத்தானே! அது ஏன் உனக்கு புரியல.. அவளை உன் பங்குக்கு நீயும் கஷ்டப்படுத்துவியா? எவ்ளோ ஜாலியான பொண்ணு, எப்பவும் சிரிச்சி சந்தோசமா இருக்குற பொண்ணு, இப்போ எல்லாம் அழுதுட்டே தான் இருக்கா.. அவளை உன்னால மட்டும் தான் வெற்றி ஹேப்பியா வச்சுக்க முடியும். இனி எப்பவும் இப்படி அழ வைக்காத வெற்றி.. அவளை சமாதானம் செய். அவளை உன்கிட்ட கொண்டுவந்துடு.. அப்போதான் அவளுக்கும் உனக்கும் சந்தோசமான ஒரு வாழ்க்கை கிடைக்கும்.’ என தன்னைத் தானே திட்டி, சமாதானம் செய்து கொண்டவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

இங்கு போனை வைத்த கர்ணனை யோசனையாக பார்த்தாள் வல்லி. பின் அவனை விட்டு யாழியின் அறைக்கு செல்ல, அவள் நினைத்தது போலவே, முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் யாழினி.

“யாழி.. யாழி.. என்னடி.. என்னம்மா ஆச்சு..?” என அவள் தோள் தொட, அப்படியே வல்லியின் இடையைக் கட்டிக்கொண்ட யாழினிக்கு அழுகை மட்டும் குறையவே இல்லை. 

மனைவியைப் பின் தொடர்ந்து வந்த கர்ணனுக்கு, தங்கையின் அழுகையைப் பார்த்து கோபம் கட்டுக்கடங்காமல் உண்டாக, தவிப்புடன் தன்னைப் பார்த்த மனைவியை பல்லைக் கடித்து முறைத்தான்.

You may also like

1 comment

M. Sarathi Rio July 29, 2026 - 6:04 pm

தொங்கச்சி அழுதா அதுக்கு ஏன்டா உன் பொண்டாட்டியை முறைக்கிற…?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured