முத்தமழை – 63
அடுத்த நாள் காலையே தன் வேலையை ஆரம்பித்துவிட்டார் ராஜலட்சுமி. அவரிடமிருந்து போன் வரவுமே யாழினி சுதாரித்துவிட்டாள்.
மிகவும் பொறுமையாக பேசினார், குடும்பத்தை யோசி என்று அழுதார். நீ அங்கு நிம்மதியாக இருக்க முடியாது என்று கெஞ்சினார்.
எதற்கும் இறங்கி வரவில்லை யாழினி.
அவன் ஒரு போலிஸ்காரன், அவன் எப்படி ஒழுக்கமானவனா இருப்பான். உன் வாழ்க்கை பாழா போறதை ஒரு அம்மாவா என்னால பார்க்க முடியாது. தயவுசெய்து வீட்டுக்கு வந்துடு.. என ஏதேதோ பேசி யாழினியின் மனதைக் கரைக்க முயன்றார் ராஜி.
ஆனாலும் யாழினியின் மனதை மாற்ற முடியவில்லை.
‘அப்போ நீ இந்த அம்மாவை மறந்துடு..’ என அழுது காரியத்தை சாதிக்க நினைக்க, அப்போதும் தன் முடிவில் உறுதியாக இருந்தாள் பெண்.
“ம்மா.. நீங்க எல்லாரும் சம்மதிச்சு, அதுக்குப் பிறகுதான் வெற்றியோட என் கல்யாணம் நடக்கனும்னு அண்ணா ஆசைப்பட்டார். என்னோட ஆசையும் அதுதான். ஆனா எப்போ நீங்க வெற்றியை கொல்லனும்னு நினைச்சீங்களோ, அதுக்குப் பிறகு உங்களை நான் எப்படி யோசிப்பேன். உங்க மேல இருந்த என்னோட எல்லாம் நம்பிக்கையையும் நீங்க கொன்னுட்டீங்க ம்மா.. இப்போ கூட வனிக்கா ஏதோ திட்டம் போட்டு கொடுத்திருப்பா, அதுக்கு தகுந்த மாதிரி தான் நீங்க என்கிட்ட பேசுறீங்க..” என வேதனையாக கூற, ராஜிக்கு ஒரு நொடி குற்றவுணர்வு உண்டானது தான். ஆனால் அருகிலே இருந்து ‘பேசு, பேசு’ எனும் பெரிய மகள் அவரின் உணர்வுகளை உடனே மடைமாற்றி விட்டாள்.
“ம்மா.. நீ கோபமா பேசாத..” என எடுத்துக் கொடுக்க..
“யாழி அம்மா சொல்றதை கேளுடி..” என பேசிக் கொண்டிருக்கும் போதே போனை வைத்துவிட்டாள் யாழினி.
“ம்மா விடு.. உடனே எப்படி மனசு மாறும்.. அவளுக்கு கொஞ்சம் டைம் வேனுமில்ல..” என்ற வனிதாவிடம்,
“அது இல்ல வனி.. ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்க, அங்க ஏதும் தப்பு தண்டா நடந்திட்டா, அதனால குழந்தைன்னு ஏதும் வந்துட்டா..” என்றார் ராஜி.
“ம்மா எல்லாத்துக்கும் ஒரு ஐடியா கிடைக்கும். அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போ யாழி இங்க வந்தா போதும்..” என்ற வனிதாவின் திட்டம் பலிக்கும் என்ற நம்பிக்கை ராஜியிடம் குறைந்து தான் போயிருந்தது.
வனிதாவிற்காக தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரிடமும் பகையை வளர்த்துக் கொண்டார் ராஜலட்சுமி.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மீண்டும் யாழினியிடமிருந்து போன் வந்தது.
ராஜலட்சுமி யோசிக்கும் முன்னே போனை எடுத்து, தாயின் காதில் வைத்திருந்தாள் வனிதா.
“ம்மா..” என்ற வார்த்தைக்குப் பிறகு நீண்ட மௌனம் யாழினியிடம்.
“யாழிம்மா..” என்ற ராஜிக்கும் அதுவரை இருந்த நாடகத்தன்மை போய், தாய்மை குணம் தலை தூக்க,
“ம்மா… நீங்க நிஜமாவே என்னை பெத்தீங்களா? இல்ல அண்ணா மாதிரி..” என முடிக்கும் முன்னே அழுகை வெடிக்க,
“யாழி.. என்னடி பேச்சு..? உனக்காகத்தானே நான் இவ்ளோ போராடுறேன். கர்ணன் விசயத்துல என் மேல உனக்கு ஆயிரம் கோபம் இருக்கலாம். அது உண்மையாவும் இருக்கலாம். என்னைப் பொருத்தவரை அது தப்பும் இல்ல. ஆனா உன்னோட விசயத்துல அப்படி இல்லவே இல்லடி.. நீயும் வனி மாதிரி நல்லா இருக்கனும்னு நினைக்கிறேன்.. அது தப்பா..?” என்றார் கோபமும், அழுகையுமாக.
“வனி க்கா நல்லா இருக்கா தான். நான் எப்போ இல்லன்னு சொன்னேன். ஆனா அவ நல்லா இருக்க, அவ விருப்பப்பட்ட வாழ்க்கைதானே காரணம். அதையே நான் கேட்டா மட்டும் ஏன் இவ்ளோ பிரச்சினை பண்றீங்க? உங்களுக்கு வெற்றியோ, வல்லியோ காரணம் இல்ல. அந்த வீடுதான் பிரச்சினை. அப்பாவை உங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டதா நினைச்சு நீங்க அவங்களை எதிரியா பார்க்குறீங்க, அதுதான் பிரச்சினை..” என தாயின் உண்மை முகத்தை மகள் கூறிவிட, ராஜிக்கு சுருக்கென்று தைத்தது.
“நீ ஆயிரம் காரணம் சொல்லிக்கோ, எனக்கு அது தேவையில்ல. நான் கேட்டதை நீ கொஞ்சம் யோசிடி..” என மீண்டும் கெஞ்ச, யாழினியால் சமாளிக்கவே முடியவில்லை.
இப்போது இதை முடிக்காவிட்டால், மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை பண்ணுவார்கள் என்று புரிய, “சரிம்மா.. நான் வரேன். ஆனா உடனே முடியாது. நாளைக்கு மறுநாள் வரேன். நான் வரும் போது என்னை போன்னு நீங்க சொல்லிடக்கூடாது..” என்றாள் கோபமாக.
“இல்லடி.. இல்லடி அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். நீ வந்தாலே போதும்..” என நிம்மதி பெருமூச்சுவிட்டு போனை வைக்க, வனிதாவிற்கு முகமெல்லாம் ஜொலித்தது.
எதையோ சாதித்து விட்டது போல, இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டனர், நடக்கப் போவதை அறியாமல்.!
அன்று கர்ணனைப் பார்க்க ஆஃபிஸ் வந்திருந்தான் அர்ஜூன். அவன் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை எனத் தோன்ற “என்ன அர்ஜூன்?” என்றதும்,
“ஒன்னுமில்ல ண்ணா.. ஒரு மாதிரி தப்பு செஞ்சிட்ட ஃபீலாகுது..” என்றான்.
“என்ன சொல்ற? தெளிவா சொல்லு? என்ன தப்பு? அக்கா பிரச்சினையா?” என்றான் கர்ணனும்.
“அது இல்ல ண்ணா.. அண்ணியோட சிஸ்டர் இருக்காங்கள்ல..” என்றதும்,
“ஆமா வந்தனா, அவளுக்கு என்ன? உன்கிட்ட ஏதும் சேட்டை செஞ்சாளா?” என யோசனையாக கேட்க,
“அது இல்லண்ணா.. எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்குண்ணா..” என திக்கித் திணறி ஒரு வழியாக சொல்லிவிட்டான் அர்ஜுன்.
“என்ன சொல்ற அர்ஜூன்..? பிடிச்சிருக்குன்னா எப்படி? எப்போ இருந்து?” என்றவன் அதிர,
“அது உங்க மேரேஜ் அப்போ இருந்தே அவங்களை பார்க்குறேன். ஆனா அப்பா டெத் அப்போ இருந்துதான் அவங்களை கொஞ்சம் கவனிக்க ஆரம்பிச்சேன்.. என்கிட்ட ரொம்ப கேரிங்கா பேசினாங்க. அதுக்குப் பிறகுதான் அவங்களை விரும்ப ஆரம்பிச்சேன். அவங்க கேரக்டர் பிடிச்சது. ஆனாலும் சொல்ல கொஞ்சம் தயக்கமா இருந்தது. அவங்க கரூர் வரும் போதெல்லாம், யாருக்கும் தெரியாம ஃபாலோவ் பண்ணுவேன்..” என்று நிறுத்த,
“ஓ.. அப்படித்தான் அந்த ஆக்சிடென்ட் டைம் நீ உடனே அங்க போய்ட்டியா?” என்றான் கர்ணன்.
“ஹ்ம்ம் ஆமாண்ணா.. இப்பவும் என்னால அதை நினைச்சுக்கூட பார்க்க முடியல ண்ணா.. என் கண் முன்னால அந்த கார் தூரமா போய் விழவும் ரொம்ப பயந்துட்டேன். அவங்களுக்கு என்னாச்சோன்னு அந்த பயத்துல தான்..” என மீண்டும் நிறுத்த
“என்னடா.?” என கர்ணனும் கலவரமாக கேட்க,
“அவங்க என்னைப் பார்த்துட்டே தான் மயங்கினாங்க. அதைப் பார்த்த பயத்துல, நான் என்னையும் மீறி ப்ரோபோஸ் பண்ணிட்டேன்..” என வார்த்தைகளை மென்று விழுங்க,
“அர்ஜூன் ஒழுங்கா பேசு..”` என கர்ணன் அதட்ட,
“அது.. அதுண்ணா.. அவங்க மயங்கிட்டாங்களா? எப்படி மயக்கம் தெளிய வைக்கன்னு தெரியாம, கிஸ் பண்ணிட்டேன் ண்ணா..” என தயங்கி தயங்கி கூற, வெடித்து சிரித்தான் கர்ணன்.
கர்ணனின் சிரிப்பில் அர்ஜூனுக்கு வெட்கமே வந்துவிட்டது “அண்ணா..” என தலை கோதி, முகத்தை வேறுபக்கம் திருப்ப, அர்ஜூனின் வெட்கத்தில் மீண்டும் சிரிப்புத்தான் வந்தது.
“அண்ணா நான் போறேன்..” என அர்ஜூன் நகர, அவன் கையைப் பிடித்து அமர வைத்தவன், “எனக்குத் தெரியும்..” என கர்ணன் சிரிக்க,
“ஹ்ம்ம் உங்களுக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். அதனாலதான் நானே வந்து சொல்லிட்டேன். நீங்க என்னைத் தப்பா நினைக்கலதானே..” என இழுக்க
“நான் நினைக்கிறது இருக்கட்டும், நீ அவக்கிட்ட சொல்லிட்டியா? அதனாலத்தான் மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்காளா?” என மேலும் சிரிக்க
“அண்ணா அது அவங்க ரொம்ப பயந்துட்டாங்க போல, என்னைப் பார்த்தாலே பயந்து முகத்தை திருப்புறாங்க..” என அர்ஜூன் வருத்தமாக கூற,
“இது எப்போ?”
“அது அன்னைக்கு ஹாஸ்பிடல் வச்சுதான்.. என்னை தப்பா நினைச்சிருப்பாங்களோன்னு பயமா இருக்குண்ணா..” என்றான் வருத்தமாக.
“ஆனா வந்தனா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கனும் இல்லையா? வசந்த் அவக்கிட்ட ப்ரபோஸ் பண்ணான், அதுக்கே அவ ஓக்கே சொல்லல..” என்றதும்,
“அண்ணா.. அது.?” என்றதும், ‘இன்னும் என்ன?’ என்ற பார்வையைப் பார்க்க,
“வசந்த் மேல அவங்களுக்கு எந்த அபிப்ராயமும் இல்லைன்னு தெரிஞ்ச பிறகுதான், நான் விரும்புறதை சொன்னேன்.” என்றதும்,
“ம்ம்ம்.. அப்போ வசந்த்க்கு அந்த கோவா ப்ராஜெக்ட் கிடைக்க நீதான் காரணமா?” என கர்ணன் கேட்க,
“ம்ம் நம்ம லவ் சக்ஸஸ் ஆகனும்னா இந்த மாதிரி சில வேலைகள் செஞ்சுதானே ஆகனும். எல்லாம் உங்களைப் பார்த்து கத்துக்கிட்டது தான்..” என சிரித்தபடியே கூற,
“டேய் இப்படியெல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்காத, ஏற்கனவே எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு, இது மட்டும் தெரிஞ்சா என் பொண்டாட்டி சாமியாடிடுவா..” என்று சிரித்த கர்ணன், “தனா மனசுல வசந்த் மேல ஃப்ரண்ட் தாண்டி வேற எந்த எண்ணமும் இல்ல. அதை நீ புரிஞ்சிக்கணும் அர்ஜூன். நாளைக்கு இதை வச்சு உங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் வரக்கூடாது.” என்றான் சீரியசாக.
“அண்ணா.. எனக்கு எப்பவும் அப்படியொரு எண்ணம் வராது. ஆனா வசந்த் இங்க இருந்தா, அவர் மேல வந்தனாவுக்கு ஒரு சிம்பதி கிரியேட் ஆகிடுமோன்னு பயந்துதான், அவரை இங்க இருந்து மூவ் பண்ண வச்சேன்.. அது தப்புனு எனக்குத் தோணல ண்ணா..” என்றான் வார்த்தைகளில் அழுத்தமாக.
“அவன் ஒரு வேளை சீரியசா இருந்திருந்தா உன்னால என்ன பண்ணிருக்க முடியும். கொஞ்ச நாள் வெய்ட் பண்ணி பார்க்கலாம்னு கூட யோசிச்சிருக்கலாம். பட் இனி அதை பேசி பிரயோஜனம் இல்ல. வந்தனாகிட்ட உன்னைப்பத்தி இப்போ பேச முடியாது. வீட்டுல நடக்கிற பிரச்சினையெல்லாம் உனக்கேத் தெரியும். யாழியோட ப்ராப்ளம்ஸ் ஷார்ட் அவுட் ஆகி, அவளை ஆஸ்ட்ரேலியா அனுப்பின பிறகுதான், வந்தனா பத்தி வீட்டுல பேசவே முடியும். அதோட உனக்கும் இப்போ டைம் வேணும். இந்த டைம்ல உன்னோட ப்ரசர்ஸ் எல்லாம் கிளியர் பண்ணிடு.. அப்போதான் எல்லாமே சுமுகமா முடியும்..” என நீண்ட விளக்கம் போல் கர்ணன் அர்ஜுனுக்கு அறிவுரை வழங்க,
“அண்ணா அதெல்லாம் எனக்கு தெரியும்.. நான் உங்ககிட்ட இதை சொல்லியே ஆகணும்னு தான் வந்தேன். இப்போதைக்கு எனக்கு மேரேஜ் பண்ற ஐடியா இல்ல, எல்லாமே முடியட்டும், பார்க்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி அவங்களும் என்னை லவ் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்கணும்..” என்றான் தவிப்பாக..
“ஹ்ம்ம் இது கொஞ்சம் கஷ்டம் தான் அர்ஜூன்.. தனா அவ்ளோ சீக்கிரம் லவ் சொல்ற ஆள் இல்ல. அவளை யெஸ் சொல்ல வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.. இதுல நான் எதுவும் பண்ண முடியாது..” என சிரிக்க, அர்ஜுனுக்கும் சிரிப்புதான்.
உண்மையில் அவளிடமிருந்து ‘எஸ்’ என்ற வார்த்தையை வாங்குவது மிகக் கடினம் என இத்தனை நாட்களில் அவன் புரிந்து தான் வைத்திருந்தான்.
அவளிடமிருந்து ‘எஸ்’ என்ற வார்த்தையை வாங்கியே ஆகவேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான திட்டங்களை யொசிக்க ஆரம்பித்தான் அர்ஜூன்.
அர்ஜூனின் காதலுக்கு வந்தனா எஸ் சொல்வாளா?
1 comment
அடப்பாவி..! முத்தம் குடுத்து தான் அவளை மயங்கவே வைச்சிட்டியா..?
😀😀😀
CRVS (or) CRVS 2797