முத்தமழை – 64
“வல்லி கொஞ்சம் யோசிக்கலாம்ல..” என்ற வந்தனாவை ஒரு பார்வை பார்த்தவள், அவள் கையிலிருந்த போனை வாங்கித் தன்னிடம் வைத்துக் கொண்டாள்.
வீட்டுப் பெரியவர்களிடம் கோவிலுக்கு போவதாக சொல்லி, நான்கு பேரும் ரிஜிஸ்டர் ஆஃபிஸ் வந்தாகிவிட்டது.
இப்படி அடிக்கடி அவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வு என்பதால், பெரியவர்களும் பெரிதாக எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் கிளம்பும் போது “ம்மா.. என்ன நடந்தாலும் நீங்க என்னை தப்பா நினைச்சிடக்கூடாது. நான் என்ன செஞ்சாலும், அது வெற்றி அண்ணாவுக்கும் யாழிக்கும் நல்லதாத்தான் முடியும்..” என பொதுவாக கூற, சீதா அமைதியாக தலையசைத்துக் கொண்டார் அவ்வளவே.
அவர் இன்னும் தன் பிள்ளைகளின் விபத்து நடந்த நிகழ்வில் இருந்தே வெளியில் வரவில்லை. சீதாவிற்கு நடந்த பிரச்சினைகளின் அழுத்தம் ஒருபக்கம், வல்லியின் நிலை கொடுத்த அழுத்தம் ஒருபக்கம் என இருக்க, அவரும் இதை கவனிக்க தவறிவிட்டார்.
இவர்களுக்கு முன்பே ஜோன்ஸ் சென்று, அனைத்து வேலைகளையும் முடித்து வைத்திருந்தான்.
ஜோன்ஸைப் பார்த்ததுமே “டேனி..” என அவனிடம் சென்ற வந்தனா, “மாமாவுக்கு சொல்லிட்டியா டா..” என்றாள் மெல்ல.
“இல்ல.. ஆனா வல்லியே சொல்லிட்டேன்னு சொன்னா. அவர் அங்க இருந்து வரதுக்குள்ள இங்க நம்ம வேலை முடிஞ்சிருக்கும்..” என்றான் டேனியல் ஜோன்ஸ்.
“மாமாவை நினைச்சா பயமா இருக்குடா.. வல்லி ஏன் இப்படி பிடிவாதமா இருக்காளோ தெரியல. நானும் எவ்ளவோ சொல்லிட்டேன் கேட்கல. இதனால வல்லிக்கும் மாமாவுக்கும் மறுபடியும் ஒரு சண்டை வரும்..”
“ஆனா வல்லியோட பயமும் சரிதானே. யாழியோட வீட்டுல எந்தளவுக்கு தரம் இறங்கிப் போவாங்கன்னு தான் உனக்கேத் தெரியுமே.. வல்லி என்ன செஞ்சாலும், நீ அமைதியா இரு. அவ செய்றது சரியாத்தான் இருக்கும்..” என்றபடியே இருவரும் பேசிக்கொண்டே உள்ளே சென்றனர்.
டேனியின் உபயத்தால் அனைத்தும் நல்லபடியாகவே முடிந்தது. வல்லி கொடுத்த திட்டத்தின்படி வந்தனாவின் யூ டியுப் சேனலில், இவர்களின் திருமணம் லைவ் போய்க்கொண்டிருந்தது. கமிசனரை டேக் செய்து தான் அந்த லைவ் ஓடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்து தான் பலருக்கும், இவர்களின் திருமணமே தெரிய வந்தது.
இவர்கள் திருமணம் முடிந்து வெளியில் வரவுமே வல்லியின் போன் அலறத் தொடங்க, சீதாவும், ராமசாமியும் மாறி மாறி அழைத்துக் கொண்டிருந்தனர்.
“ம்மா..” என சீதாவின் அழைப்பை எடுத்தவள் திணறியபடியே பேச, “ஏன் பாப்பா இப்படி?” என்றவருக்கு அடுத்த வார்த்தையே வரவில்லை.
“ம்மா.. நான் அண்ணாவுக்காகத்தான்..” என்றதும்,
“உடனே எல்லாரும் வீட்டுக்கு வாங்க..” என வைத்துவிட, அடுத்து ராமசாமிக்கு அவளாகவே அழைத்தாள்.
“ப்பா.. ப்ளீஸ் எதுவும் சொல்லிடாதீங்க.. எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு..” என அவரிடம் சொல்ல, அவரால் மகளைக் கண்டிக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.
“வீட்டுக்கு வாங்க பாப்பா..” என்று அவரும் வைத்துவிட்டார். இத்தனை நடந்தும், நேரம் போய்க்கொண்டிருந்தும் கர்ணன் வந்துவிடுவான் என்று அனைவரும் நினைக்க, அவர்களின் நினைப்பையே பொய்யாக்கியிருந்தான்.
நேரம் கடக்க கடக்க வல்லிக்குள் பயம் பெரிதளவில் வியாபிக்கத் தொடங்கியது.
அந்த பயமே அவளை கரூருக்கு கிளம்ப வைத்தது.
“அண்ணா.. அங்க எங்க வீட்டுக்கு முதல்ல போயிடலாம். பாவா வந்துடுவார்னு நினைச்சேன். இன்னும் வரல.. ரொம்ப கோபமா இருப்பார்ன்னு நினைக்கிறேன்..” என தயக்கமும், பயமுமாக கூற,
“நான் பேசுறேன் வல்லி.. அண்ணா பேசினா நான் பார்த்துக்கிறேன்..” என்றது யாழினி. வெற்றி அப்போதிருந்தே கர்ணனுக்கு அழைக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் வெற்றியில் ஒரு அழைப்பையும் எடுக்கவில்லை.
இப்போது வெற்றிக்கும் பயம் பிடித்துக் கொண்டது. கர்ணன் இப்படி கோபத்தை இழுத்துப் பிடிப்பவன் இல்லையே. நேருக்கு நேராக காட்டக்கூடியவன்.
இடையில் வந்தனாவும், டேனியுமே கர்ணனுக்கு அழைத்து தான் பார்த்து ஓய்ந்திருந்தனர்.
அனைவரின் முகத்தில் கலவரம் தெரிய, வல்லிக்கு உடலெல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.
அவனிடம் சொல்லியிருக்க வேண்டுமோ? இதை செய்து கொடு, இப்படித்தான் செய்ய வேண்டும் என மனைவி அதிகாரத்தில் கேட்டிருந்தால் செய்திருப்பானோ? இப்போது என்ன செய்ய? அவனிடம் எப்படி ஆரம்பிக்க? என யோசித்தபடியே காருக்கு செல்ல,
“வல்லி இப்படி நிலமையில நீ ட்ராவல் பண்ண வேண்டாம், நானும் யாழியும் போய்ட்டு வரோம்..” என வெற்றி சொல்ல,
“இல்ல.. வேண்டாம்.. அங்க என்ன வேணும்னாலும் நடக்கும், நானும் கூட வருவேன்.” என பிடிவாதமாக காரில் ஏறிட, மற்றவர்களுக்கும் வேறு வழியிருக்கவில்லை..
இப்போது வெற்றியின் கார் கரூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
இங்கு வெற்றியின் வீட்டில் சிவகுருவையும், சீதாவையும் ராமசாமியால் நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை.
தன் மகளின் பிடிவாதத்தால் எவ்வளவு பெரிய பிரச்சினையை இழுத்து வைத்திருக்கிறாள். வெற்றியின் வாழ்க்கை ஒரு பக்கம், அவள் வாழ்க்கையும் இங்கு சிக்கலாகிவிட்டதே.. மிகவும் ஓய்ந்து போனார் மனிதர்.
“சிவா.. இந்த பொண்ணு ஏன் இப்படியெல்லாம் பண்றான்னு எனக்கு ஒன்னுமே புரியலடா…” என்றார் தளர்வாய்.
“வெற்றிக்காக இது கூட செய்யலன்னா எப்படி ராமு? வல்லிக்கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும். நீயோ நானோ சொல்லி கேட்குற ஆள் இல்ல, அதுவும் வெற்றி விசயத்துல நாம என்ன சொன்னாலும் கேட்கமாட்டா.. எனக்கு பயமே அவ வாழ்க்கையை நினைச்சுதான். யாழி இங்க வந்துடும். ஆனா வல்லி அங்க போய் இருக்கனும். அந்த வீட்டுல எப்படி இவ்ளோ பிரச்சினையில இருக்க முடியும். அவங்களும் சும்மா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. மாப்பிள்ளை எவ்ளோ நாள்தான் அவளுக்கு பாதுகாப்பா இருக்க முடியும்..” என்றார் சிவகுருவும்.
இவர்களின் எந்த பேச்சிலும் சீதா கலந்து கொள்ளவில்லை. யாழினிதான் மருமகள் என முன்னமே மனதில் உறுதி செய்து கொண்டதால், அதை அவரால் சுலபமாக கடக்க முடிந்தது. ஆனால் இப்போது வல்லி வீட்டில் நடக்கும் பிரச்சினைகளும், அவர்கள் பேசும் பேச்சும் தான் சீதாவை யோசிக்க வைத்திருந்தது.
தங்களை சாதாரண மனிதர்களாக கூட மதிக்காத குடும்பத்தில் பெண்ணெடுத்து, பெண் கொடுத்துவிட்டோமே என வேதனைக் கொண்டார்.
அப்போது ராமசாமியின் போன் அடிக்க, மாப்பிள்ளைதான் கூப்பிடுறார் என்றபடியே போனை எடுத்து காதில் வைக்க, “மாமா நடந்ததை நினைச்சு நீங்க மூனு பேரும் வருந்த வேண்டாம். வல்லி என்ன செஞ்சாலும் எனக்குத் தெரியாம நடக்காது. என்கிட்ட சொல்லலையே தவிர, அது எனக்குத் தெரியாம நடக்கல. நீங்க மூனு பேரும் கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்குறேன்..” என அவர் பேச இடம் கொடுக்காமல் பேசி வைத்துவிட்டான்.
தன் அலுவலக அறையில் இறுகிப் போய் அமர்ந்திருந்தான் கர்ணன். அத்தனை தூரம் சொல்லியும் கேட்கவில்லையே மனைவி, தன் பேச்சுக்கு இவ்வளவுதான் மரியாதையா? அப்படியென்றால் அவளுக்கு வெற்றிதான் முக்கியமா, நான் இல்லையா? வீட்டில் இதை எப்படி சொல்ல? எப்படி சமாளிக்க? என யோசித்தபடியே அமர்ந்திருந்தவன், பாண்டியனின் தொடர் அழைப்பால் “வந்துட்டு இருக்கேன் பாண்டியன்.. அப்பாவை ஹாலுக்கு கூப்பிட்டு வராதீங்க.. நான் வந்த பிறகு பார்த்துக்கலாம்..” என்றபடியே கிளம்பிவிட்டான்.
இங்கு வனிதா பேயாட்டாம் போட்டுக் கொண்டிருந்தாள். ராஜியால் அவளை சமாளிக்கவே முடியவில்லை.
“எவ்ளோ திமிர்? எவ்ளோ கொழுப்பிருந்தா நம்ம பொண்ணு வாழ்க்கையை கெடுத்திருப்பா? ஊர் உலகமே அந்த வீடியோ பார்த்துட்டாங்க. இப்போ நம்மளால என்ன செய்ய முடியும்? அவளை நீங்க அப்படியே விட்டிருக்கக்கூடாது.” என வாய்க்கு வந்ததையெல்லாம் கத்தி, திட்டிக் கொண்டிருந்தாள் வனிதா.
ஏதேதோ பேசி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்த நேரம் வீட்டுக்குள் நுழைந்தான் கர்ணன்.
“இவனை நம்புனதுக்குத்தான் உங்க தலையில மிளகா அரைச்சிருக்கான்.. இவனுக்கு குடும்பத்தை பத்தி என்ன தெரியும். அநாதை மாதிரி எங்கையோ வளர்ந்தவனுங்க கூடப் பிறந்தவங்களை எப்படி பார்த்துக்கணும், அவங்களுக்கு என்ன செய்யனும்னு தெரியுமா? அங்கேயும் பொம்பளை பின்னாடி சுத்தினவன்தானே, ஒரு பொம்பள கூட குடும்பம் நடத்தினவன்தானே, அப்போ அதுமாதிரி தானே எங்களையும் பார்ப்பான்..” என ஆங்காரமாகக் கத்திக் கொண்டிருந்தவள், தூரமாய் போய் விழுந்த பிறகுதான், கர்ணன் அவளை அடித்திருக்கிறான் என்றே ராஜிக்கு புரிந்தது.
நொடியில் நடந்து முடிந்திருந்தது. “எவ்வளவு தைரியமிருந்தா என் பொண்ணு மேல கை வைப்ப..?” என ராஜி ஆத்திரமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, பாண்டியன் சொக்கலிங்கத்தை கூட்டி வந்திருந்தார்.
“இவ்வளவு நேரம் இவ பேசும் போது அமைதியாதானே இருந்தீங்க, இனியும் அப்படித்தான் இருக்கனும்..” என கண்டனமாகக் கூற,
அவன் குரலில் இருந்த இறுக்கமும், அழுத்தமும் ராஜியை அடுத்து பேசவிடவில்லை.
கர்ணனே வனிதாவைத் தூக்கி நிறுத்தி, தண்ணியைக் கொடுக்க “உன் கையால..” என ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே அந்த டம்ளர் தூரமாக பறந்து சென்று விழுந்தது.
அவன் செய்கையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.
எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன், வலி நிறைந்த பார்வையோடு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் அருகில் சென்று கீழே அமர்ந்தவன் “என்ன செய்யனும் ப்பா?” என்றான் வேதனையாக.
“நீ என்ன செய்யனுமோ செய்..?” என்றார் அவரும் வருத்தமாக.
“அப்பா.. வல்லி இப்படி அவசரப்பட்டு, யோசிக்காம செய்ற ஆளே கிடையாது, அன்னைக்கு வனி கூப்பிட்டு யாழியை ரொம்ப மோசமா பேசியிருக்கா.. அதுக்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்துருக்காங்க. ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு எப்படி இன்னொரு பொண்ணை, அதுவும் கூடப்பிறந்தவளை தப்பா பேச முடியும். அவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை யூஸ் பண்ணிருக்கா ப்பா. அதைக் கேட்டு யாழி எதாவது தப்பான முடிவை எடுத்திருந்தா என்னப்பா செஞ்சிருக்க முடியும். வல்லி செஞ்சதை சரின்னு சொல்லமாட்டேன்.. ஆனா தப்பும் கிடையாது. இவங்க கொடுத்த டார்ச்சர்லதான் இந்த முடிவை எடுத்துருக்கா. இவங்கதான் எடுக்கவே வச்சிருக்காங்க..” என்றான் கோபமாக.
“ஏய் பேச்சை மாத்தாத.. நான் பேசினதுல என்ன தப்பு இருக்கு.. நானும் அம்மாவும் பேசி அவளை இங்க வர வச்சிருப்போம், அவளும் வரேன்னுதான் சொன்னா.. ஆனா அதுக்குள்ள உன் பொண்டாட்டி என்ன செஞ்சாளோ தெரியாது. இப்படியொரு அசிங்கத்தை பண்ணிருக்கா.. இது எல்லாத்துக்கும் நீயும், உன் பொண்டாட்டியும் தான் காரணம்..” என மீண்டும் வனிதா கத்திக் கொண்டு வர,
“அம்மா.. அவளை அடக்கி வைங்க. இல்ல இவ அடிவாங்கி செத்துப்போனா நான் காரணம் இல்ல..” என கர்ணன் ஆக்ரோசமாக கத்த, அந்த சத்தத்தில் வனிதாவின் வாய் கப்பென்று மூடிக் கொண்டது.
“உங்களுக்கு உங்க பிள்ளைங்க மூனு பேர்ல வனிதா மேலதான் பாசம் அதிகம்னு தெரியும்.. நீங்க கொடுத்த அதிகப்படியான செல்லமும், சுதந்திரமும் தான் இவளை இந்தளவுக்கு தரம் இறங்கி பேச வச்சிருக்கு.. இனியும் இவ வாயை அடக்கி வைக்கலன்னா, புகுந்த வீட்டுலயும் பொழைக்க முடியாது, பிறந்த வீட்டுலயும் பொழைக்க முடியாது..” என்றான் அதே குரலில்.
“கர்ணா போதும்.. என்ன இருந்தாலும் அவ நம்ம வீட்டுப் பொண்ணு, இப்படி சாபம் கொடுக்குற மாதிரி எல்லாம் பேசாத..” என ராஜியும் கத்த,
“இதோ இதைத்தான் இப்போ சொன்னேன். அவ என்ன செஞ்சாலும் உங்களுக்குத் தப்பா தெரியாது. அவ செய்ற எல்லாத்துக்கும் சப்போர்ட் செஞ்சு, நீங்களும் உங்க தகுதியை இழந்துட்டு வரீங்க.. நீங்க எப்படியோ போங்க.. இனி உங்க பிரச்சினையில நான் தலையிடப் போறதுல. ஆனா எனக்கு ஒரு விசயம் சொல்லனும். இவளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கொஞ்சமாவது மத்த ரெண்டு பேருக்கும் கொடுங்க. அவங்களும் உங்க பிள்ளைங்கதான்..” என்றான் கசந்த குரலில்.
“கர்ணா என்னப்பா நீ..? நாய் வாலை நிமிர்த்த முடியாதுனு உனக்குத் தெரியாதா? உன் சித்தி இவளால இன்னும் அசிங்கப்பட நிறைய இருக்கு..” என்றார் பாட்டி.
பேரனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார் ஆறுதல் சொல்வது போல..
சில நிமிடங்கள் அந்த இடத்தை அமைதி சூழ்ந்திருந்தது. பின் ஒரு பெருமூச்சுவிட்டு தன்னை சமாளித்துக் கொண்டவன், மீண்டும் தந்தையின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“அப்பா.. நான் சொல்றதை நீங்க பொறுமையா கேட்கனும்..” என்று அவரின் கையை வருடினான்.
அவர் விரும்பாத ஒன்றை சொல்லப் போகிறான் என்று அவருக்குப் புரிய ‘வேண்டாம்’ என தலையசைத்தார்.
அதை கவனித்தாலும் பிடிவாதமாக தான் சொல்ல வந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
“அம்மாவோட ப்ராபர்ட்டீஸ், அவங்க நகை அப்புறம் பரம்பரை சொத்துல வர பங்கு மட்டும் எனக்குப் போதும்பா. வேற எதுவும் எனக்கு வேண்டாம். இதையும் கூட நான் வேண்டாம்னு தான் சொல்வேன். ஆனா என்னோட அம்மா நியாபகமா அது வேணும். அப்புறம் நான் இந்த வீட்டு பையன் தான்னு சொல்லிக்க பரம்பரை சொத்து வேணும். இதைத்தாண்டி நீங்க எனக்கு எதுவும் கொடுக்காதீங்க ப்பா. என் சம்பாத்தியமே எனக்கும் என் குடும்பத்துக்கும் போதும்..” என்றவனின் குரலில் ஒரு விலகல் தன்மை இருந்ததை பாட்டியும், சொக்கலிங்கமும் அறிந்து, புரிந்து கொண்டனர்.
அது அவர்களுக்கு வேதனையைக் கொடுக்க “ஏன் தம்பி இப்படியெல்லாம் பேசுற?” என பாட்டி கரகரத்தக் குரலில் கேட்க,
“நான் இந்த சொத்துக்காகத்தான் வந்ததா நினைக்கிறாங்க பாட்டி. இவ பேச்சும், செயலும் அப்படித்தான் இருக்கு. நான் இப்படி வந்து நிப்பேன்னு இவங்க எதிர்பார்க்கல போல. ஒருவேளை முன்னமே தெரிஞ்சிருந்தா என்னை கொன்னுருக்கக்கூட வாய்ப்பிருக்கு..” என்று கசப்பாக முடிக்க,
“என்ன பேசுறீங்க..?” என்று ஆத்திரமாக வந்து விழுந்தது வல்லியின் குரல்.
அப்படியே வாசலைத் திரும்பி உணர்ச்சியற்ற பார்வையில் மனைவியைப் பார்த்தான்.
அழுத விழிகளும், கசங்கிய முகமுமாக அவனைத்தான் கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் வல்லபி.
கர்ணனின் இத்தனைப் பேச்சுக்கும் வனிதாவோ, ராஜியோ ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று பேச்சுக்கு கூட சொல்லாமல் எரிச்சலாக வந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதில் பரிதாபமாக தன்னிலையை எண்ணி வேதனையுடன், புகைப்படத்தில் அவரைப் பார்த்து புன்னகைத்த மனைவியை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.
1 comment
எப்பா..! இந்த ராஜியும் வனிதாவும்
பிசாசசுங்கடாப்பா.
😀😀😀
CRVS (or) CRVS 2797