முத்தமழை – 65
“இதோ வந்தாச்சுல்ல நாடக கோஸ்டி.. இனி அழுது நடிச்சு அவ காரியத்தை சாதிப்பா..” என வனிதா எல்லோருக்கும் கேட்கும்படியே முணுமுணுக்க, அதைக் கேட்டு கர்ணனின் உடல் இறுகிப் போனது.
“என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாரு..? அவளைப் பெத்தவங்க நாங்க இன்னும் உயிரோடதான் இருக்கோம். எங்ககிட்ட சொல்லனும்னு கூட உனக்குத் தோணல சரி.. ஆனா நீதான் உலகம்னு எங்களைத் தூக்கி எறிஞ்சானே உன் புருசன், அவன்கிட்ட கூடவா சொல்லக்கூடாது. என் மகனுக்கு இவதான் சரியான பொண்டாட்டின்னு எங்களை எல்லாம் மதிக்காம உன்னை இந்த வீட்டுக்கு கொண்டு வந்தாரே இந்த மனுசன் அவருக்கு கூட உண்மையா இல்லையே.. இது தான் உன்னை நம்பினவங்களுக்கு நீ கொடுக்குற பரிசு.. ரொம்ப நல்ல மருமக..” என ராஜி கத்த,
“போதும் நிறுத்துங்க ம்மா.. நீங்க பேச வேண்டியது என்னை மட்டும் தான். வல்லியை இல்ல. என்னை இந்த முடிவு எடுக்க வச்சது நீங்களும், இவளும் தான். நான் இப்போ வந்து கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். நீங்க கேட்கல. எனக்கு விருப்பமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ சொன்னீங்க. அது எனக்கு பிடிக்கல. என்னோட விருப்பத்துக்கு என் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்தேன், இதுல யாரும் என்னை வற்புறுத்தல. யாரும் எனக்கு தப்பா உபதேசமும் பண்ணல..” என்றாள் யாழி கோபமாக.
“போதும் நிறுத்துடி.. நீ கொடுக்குற இடம் தாங்க் இவளை இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு. ஆரம்பத்துலயே தகுதி தராதரம் பார்த்து பழகியிருந்தா, இன்னைக்கு இந்த நிலமை வந்திருக்காது..” என்ற ராஜலட்சுமியின் பேச்சில் வெற்றிக்கு கோபம், அவனை அடக்குவதே வந்தனாவிற்கு பெரிய வேலையாகிப் போனது.
அதுவரை இவர்கள் பேசுவதை கவனித்த கர்ணன் மீண்டும் தன் தந்தையைப் பார்த்து, “அப்பா.. அம்மாச்சியோட வீட்டை ரெனோவேஷன் பண்ண சொல்லிட்டேன். இனி நானும் வல்லியும் அங்கதான். உங்களுக்கு என்கூட இருக்கணும்னா வந்துடுங்க. முடிவு உங்க விருப்பம்தான்..” என்றதும் சொக்கலிங்கத்தின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
எது நடக்கக்கூடாது என அவர் பயந்தாரோ அதுவே, அதுவும் அவர் கண் முன் நடப்பதை அதிர்ச்சியாகப் பார்த்தார்.
“உங்களுக்காக மட்டும் இல்ல, எனக்காக கூட தனியா போகக்கூடாதுனு நினைச்சேன். நான் தனியா வளர்ந்த மாதிரி என் பிள்ளையும் தனியா வளர்ந்து, பாசமே என்னனு தெரியாம தவிச்சுப் போயிடக்கூடாதுனு நினைச்சேன். ஆனா இப்போ அதெல்லாம் முட்டாள்தனம்னு புரியுது. குழந்தை பிறந்ததும் நாங்க அங்க போயிடுவோம்..” என்றான் தீர்க்கமாக.
“அது எப்படி அந்த வீடு உனக்கு மட்டும் சொந்தமாக முடியும், அதுல எங்களுக்கும் பங்கு இருக்கு.. உன் இஷ்டத்துக்கு பேசுற..?” என்றதும்,
“பணம், சொத்து, நகை இதுல மட்டும் தான் உன்னோட அல்ப புத்தி போகுமா? அண்ணா தனியா போறேன்னு சொல்றார், அது உன் மரமண்டைக்கு ஏறலையா? நீயெல்லாம் என்ன ஜென்மம்.. த்தூ..” என யாழினி வனிதாவைப் பார்த்து கேட்க, அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது ராஜலட்சுமியின் கரங்கள். அனைவரும் அதிர்ச்சியில் அவரைப் பார்க்க,
“அவ கேட்டதுல என்ன தப்பு..?” என்றார் நிதானமாக. அனைவருக்கும் வெறுத்தே போனது.
கர்ணனுக்கு யாரிடமும் பேசவே விருப்பமில்லை. அங்கிருந்த சோபாவில் சரிந்து அமர்ந்தான்.
“என்ன.. என்னாச்சு?” என வல்லபி பதறி வர, அதற்குள் வெற்றி அவன் காலுக்கருகில் அமர்ந்து “ஏன் மாமா இப்படி?” என்றான் வருத்தமாக.
அவனுக்கு பதில் சொல்லாமல் அழுகையும் பதட்டமுமாக நின்றிருந்த மனைவியைப் பார்த்து தீர்க்காமாக “நான் என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிருக்க.?” என்றான் கோபமாக.
“நான் ஒன்னும் தப்பு செய்யல..”என்றாள் அவளும் அழுத்தமாக.
“நீ தப்பு செஞ்சன்னு எப்போ சொன்னேன். ஆனா இப்போ செய்ய வேண்டாம் பொறுமையா இரூ. நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல.. ஏன் இந்த அவசரம். யார் உன்னை இந்த வேலை பார்க்க சொன்னது?” என்றான் அதே அழுத்தத்துடன்.
“ஆமா எனக்கு அவசரம் தான். என் வெற்றி அண்ணா நாளைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி குஜராத் போறான். அவனை அனுப்பிட்டு உங்க அம்மாவும், தங்கச்சியும் சேர்ந்து யாழினிக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க. கல்யாணம் செய்ய சொல்லி மிரட்டுவாங்க. ஒன்னு யாழி அவங்களுக்கு பயந்து கல்யாணம் செஞ்சிப்பா.. இல்ல சூசைட் பண்ணிப்பா.. இது எதுவும் நடக்கக்கூடாதுனு தான் நான் அவங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சேன். இதுல என்ன தப்பு..” என ஆத்திரமாக கேட்ட மனைவியை அதே அளவு ஆத்திரத்துடன் எதிர் கொண்டான் கர்ணன்.
“அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல அப்படித்தான. நான் இருக்கும் போது அப்படி என்ன நடந்துடும். இல்ல நான் தான் நடக்க விட்டுடுவேனா? அதையெல்லாம் நீ யோசிக்கவே இல்ல அப்படித்தான..” என்றான் அழுத்தமாக.
“இதுல நம்பிக்கை என்ற வார்த்தை ஏன் வருது. ஆக்சுவலா இதை நீங்க செஞ்சிருக்கனும். நீங்க செய்யாம விட்ட தப்பை நான் சரி செஞ்சிருக்கேன்.” என்றாள் வல்லபியும் அழுத்தமாக.
“அப்போ என் பேச்சுக்கு என்ன மரியாதை. நான் பொறுமையா இருன்னு சொல்லியும் கேட்காம எதுக்கு இந்தளவுக்கு பிரச்சினையை கொண்டு வந்து விட்டிருக்க. இனி இவங்களை எப்படி சரி செஞ்சு கொண்டு வர முடியும்..” என்றான் தளர்ந்து சலிப்படைந்த குரலில்.
“நீங்க அவங்ககிட்ட ரொம்ப இறங்கி போயிட்டீங்க. அப்பவும் அவங்க சம்மதிக்கல. இதுக்கு பிறகு சம்மதிப்பாங்கன்னும் எனக்குத் தோனல. அதனாலத்தான் நான் இந்த முடிவு எடுத்தேன். இதுல நீங்க வருத்தப்பட என்ன இருக்கு?” என்றாள் தன் பிடியை விடாமல்.
ஓ.. அப்ப இதுல நான் வருத்தப்பட ஒன்னுமே இல்ல அப்படித்தான. அதுவும் சரிதான். என் மானம் மரியாதை உனக்கு முக்கியமா இருந்திருந்தா, என்னோட ஃபீலிங்க்ஸ் உனக்கு புரிஞ்சிருந்தா நீ இவ்ளோ பேசியிருக்க மாட்ட..” என்றான் ஏதோ போலான குரலில்.
“இப்போ என்ன சொல்ல வர்ரீங்க.. நான் உங்களை புரிஞ்சிக்கலன்னு சொல்றீங்களா?” என்றால் அவன் வார்த்தையை புரிந்து கொள்ளாமல்.
“உண்மை அதுதான்..” என்றான் ஆத்திரமாக.
“ஓ.. நீங்க சொன்னா சரிதான். அப்போ நான் என்ன செய்யனும்..? இல்ல செஞ்சிருக்கனும்..” என்றாள் கோபம் நிறைந்த குரலில்.
“என்னை மதிக்காம, என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்காத நீ இனி இங்க இருக்க வேண்டாம்.” என்றான் பட்டென..
அவன் கூறியது புரியாமல் “என்ன சொல்றீங்க?” என்றாள் பெண்.
“ஆமா.. இனி நீ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. பாண்டியன் கூட கிளம்பினாலும் சரி. இல்லை உன் அண்ணனை கூட கிளம்பினாலும் சரி. நான் வரும் போது நீ வீட்டுல இருக்கக்கூடாது..” என இறுகிய குரலில் கூறியவன், அவளின் ஒன்பது மாத மேடிட்ட வயிற்றை அழுத்தமாக பார்த்துவிட்டு, அங்கிருந்து வெளியேறி விட, இடிந்து போய் அமர்ந்துவிட்டாள் வல்லபி.
கர்ணனின் இந்த செய்கையை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் கர்ணனே இப்படி யோசிக்கவில்லை. ஆனால் ராஜலட்சுமி, வனிதாவின் பார்வைகள் அப்படியொன்றும் நல்லதாகப் படவில்லை அவனுக்கு.
இன்னும் இரண்டு வாரத்தில் பிரசவத்திற்கான நாள் வேறு குறிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் அவள் இங்கு இருந்தால் கோபத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம். அப்படி செய்பவர்களை அவன் சும்மா விடப்போவதில்லைதான். ஆனால் அதற்கு ஏன் காலத்தை அமைத்து தர வேண்டும். முதலில் அவள் இங்கிருந்து போகட்டும்.
பிறகு பொறுமையாக அவளிடம் பேசி புரியவைக்கலாம், என நினைத்து வெளியேறிவிட்டான்.
இங்கு “போலாம் பாப்பா..” என வெற்றி ஒரே பிடியாக நின்றான். ஆம் அவனும் கர்ணனை ஒட்டியே யோசித்தான், அதனாலே கர்ணனின் முடிவை அப்படியே ஏற்றுக் கொண்டான்.
சொக்கலிங்கத்தின் அருகில் சென்று அவர் கையைப் பிடித்தவன் “மாமா இதெல்லாம் பார்த்து நீங்க ரொம்ப பயந்துக்காதீங்க. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். பாப்பா பிறக்கும் போது இங்க இருக்குற எல்லாப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைச்சிருக்கும், கவலைப்படாம நீங்க உங்க உடம்பை பாருங்க. பேத்தியைத் தூக்கிக் கொஞ்ச வேண்டாமா?” என அவரிடம் பொறுமையாக கூற, அவர் கண்களில் நீர் வடிந்தது.
“கவலைப்படாதீங்க மாமா.. உங்க பேத்தி உங்கக்கிட்ட வரும் போது, நீங்க பழைய மாதிரி ஆகிடுவீங்க..” என்றான் நம்பிக்கை ஊட்டும் விதமாக.
மருமகனின் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தபடி அவரும் ‘ஆம்’ எனும் விதமாக தலையசைத்தார்.
“என் மேல கோபம் இல்லையே..” என்றான் இப்போது குற்றவுணர்ச்சியுடன்.
‘இல்லை’ எனும் விதமாக அவர் தலையாட,
“ரொம்ப நன்றி மாமா.. ரொம்ப சாரியும் கூட.. இனி எப்பவும் என்னை வச்சு எந்த பிரச்சினையும் இந்த குடும்பத்துல வராது மாமா. ப்ராமிஸ்..” என்றவன் எழுந்து வல்லபியைக் கை கொடுத்து தூக்க, பார்வதி பாட்டியும், தன்னுடைய பையோடு கிளம்பி நின்றிருந்தார்.
அதைப் பார்த்து வல்லியின் கண்கள் கசிய, “காரணமில்லாம என் பேரன் எந்த முடிவும் எடுக்கமாட்டான். எனக்கு அவன் மேல நம்பிக்கையிருக்கு. நீயும் நம்பு..” என்றார் சூசகமாக.
வல்லியும் புரிந்தது போல தலையை ஆட்ட, “என் பேரனுக்கு ஏத்த பேத்தி நீதாண்டா கண்ணம்மா..” என உடனே அவளுக்கு திருஷ்டி சுத்திப்போட, வந்தனா அந்த தாய்க்கிழவியை முறைத்து தள்ளியது.
பின் அவருக்கு அருகில் சென்று யாருக்கும் கேட்கா வண்ணம் “ஏய் மாமியாக்கிழவி.. நான் மட்டும் உனக்கு மருமகளா வந்திருந்தா இன்னேரம் உனக்கு பாயாசம் போட்டு, ஜோலியை முடிச்சிருப்பேன். எவ்ளோ கொழுப்பு என் வல்லியைத் துரத்தி விடுற.. ஒரு நாள் கண்டிப்பா உன் மண்டையை உடைப்பேன் பார்த்துட்டே இரு..” என முன்னே நடக்க,
“ஏய்.. ஏய்..” என்ற வனிதாவின் சத்தத்தை அங்கு யாரும் கண்டு கொள்ளவில்லை.
அதே நேரம் வேகமாக வீட்டுக்குள் வந்தான் அர்ஜூன். அவனைப் பார்த்ததும் ‘மூஞ்சப் பாரு’ என முனங்கிக் கொண்டே வந்தனா முகத்தைத் திருப்ப, அவனோ வல்லியிடம் சென்று ஒரு கவரைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
அனைவரும் வெளியேறும் நேரம் யாழி மட்டும் அசையாமல் நிற்க, “என்ன யாழி..?” என்ற வந்தனாவிடம்,
“நான் இனி இங்க தான் வந்து.. வல்லி எப்போ இந்த வீட்டுக்கு வருவாளோ அப்போதான், நான் அந்த வீட்டுக்கு வருவேன்..” என ராஜலட்சுமியைப் பார்த்தபடியே கூற, அவர் முகம் யோசனையில் சுருங்கியது.
‘உன் புருசன் உன்னை இங்க விட்டுட்டுதான் வேற வேலைப் பார்ப்பான்..’ என ராஜியும், வனிதாவும் ஒரு சேர நினைக்க,
மனைவியையே சில நொடிகள் கூர்மையாக பார்த்த வெற்றி “நைட் கால் பண்றேன் யாழிம்மா.. டேக் கேர்..” என முன்னே நடக்க, யாழி முகம் கிண்டலாக மாற, மற்ற இருவரின் முகமும் பேயறைந்ததைப் போல் ஆனது.
அவர்களின் அதிர்ச்சியை சந்தோசமாக உள்வாங்கிக்கொண்டு வல்லியை அழைத்துக்கொண்டு அவர்கள் கிளம்ப, யாழியும் தந்தையின் வீல் சேரைத் தள்ளியபடி அறைக்குள் சென்றுவிட்டாள்.
“ம்மா என்னம்மா இவ..?” என வனிதா கேட்க,
“எனக்கும் ஒன்னும் புரியலயே டி.. இனி கேட்குறவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது..” என புலம்ப,
காரில் சென்று கொண்டிருந்த வெற்றிக்கு இந்த ஆத்மாக்களை இப்படி புலம்பவிட்ட தன் மனைவியை நினைத்து சிரிப்புதான் வந்தது.
1 comment
கர்ணன் எடுத்த முடிவு நல்ல முடிவு தான். அதே மாதிரி யாழியும் சூப்பர் கேம் ப்ளே பண்றா.
😀😀😀
CRVS (or) CRVS 2797