• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 33

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
IMG_20230216_203602.jpg


அத்தியாயம் 33



இரும்பு அளிகளினாலான கதவை திறந்தவுடனே, வாட்ச் மேனிடமிருந்து அலுவலகத்தின் சாவியை வாங்கி கொண்டு பாய்ந்து ஓடினான் செழியன். கதவை திறந்தவன்,



சந்தியா, சந்தியாஆ”, என்று சத்தமிட்டுக் கொண்டே ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்தான்.,



செழியா”, என்று தனக்குள் சொன்ன சந்தியா, எழுந்தாள்.



இங்க பாருங்க”, சுவாதி சேலையை தூக்கி காட்டியதும், துரை சுற்றும் முற்றும் பயத்தோடும் பதட்டத்தோடும் தேடினான்.



ஏலேய், அவன் அங்க இருக்கான் பாரு, புடிங்கல”, மாறன் சொல்ல, இளந்தாரி வாலிபர்கள் பாய்ந்து சென்று கோபாலை பிடித்தனர்.



நீங்க இங்க என்ன பண்றீங்க?”, தனா கேட்டான்.



என்ன சார் இந்த நாயிகிட்ட பேசிட்டுருக்கீக. புள்ளை எங்கல? இப்போ சொல்லல, ஒங்குடல உருவி மாலையா போட்டுக்கிருவேன்”, என்றபடியே கோபாலில் சட்டைக் காளரை பிடித்து, தன் கால் முட்டியை மடக்கி, கோபாலின் அடிவயிற்றில் அடித்தான் மாறன். வலியோடு முன்னால் குனிந்தான் கோபால்.



செழியன் அங்கிருந்த அறைகள் ஒவ்வொன்றாய் தேட, காதுகளை கூர்மையாக்கி வெளியே கேட்கும் சத்தத்தில் கவனம் கொண்ட சந்தியாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.



ஏதேதோ கலவரமான குழப்பமான சத்தங்களுக்கிடையே அவனது சத்தத்தை தேடினாள்.



சந்த்யா, சந்த்யா”, என்ற அவனது குரல், சத்தங்களுக்கிடையே கேட்டதும், ஓடி வந்து கதவை திறந்தாள்.



செழியா”, என்று அவள் அழைக்க செழியன் திரும்பினான். எல்லோரும் ஒரு நொடி அதிர்ந்து பார்க்க,



செழியா”, ஓடி வந்து செழியனை கட்டிக் கொண்டாள் சந்தியா. அவனும் அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.



தனாவின் சந்தேகம் மெய்ப்பட, சுவாதி அதிர்ந்து நிற்க, மாறனும் துரையும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



இதற்கிடையில் ஓட முயன்ற வெங்கையனை பிடித்துக் கொண்டான் சாரதி.



இளைஞர்கள் கோபாலை நையப்புடைத்தனர். வலி தாங்க மாட்டாமல் கத்தினான் கோபால்.



இவன போலிஸ்ல புடிச்சு குடுக்கணுண்ணே, போலிஸ்க்கு கால் பண்ணுங்க”, கூட்டத்துக்குள் ஒருவன் சொல்ல,



இல்லல, நம்மூர் புள்ள பேரும் சேந்துல்ல போலிஸ் ஸ்டேஷன் போவும். இப்டி ஒண்ணு நடந்ததுக்கான அடையாளமே இல்லாம, இந்த நாய இங்கயே கொன்னு பொதைச்சிரலாம்”, என்றான் மாறன்.



ஏல, விடுங்கல, அவனை அடிச்சே கொன்னுராதீக”, துரையரசன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றான்.



இல்லீங்க் சார், இவன உயிரோட விடக்கூடாது”, தர்மன் சொன்னான்.



ஆமா சார், எப்டியிருந்த புள்ளைய எப்டி நிக்க வச்சிருக்கான் பாருங்க. இவன அடிச்சே கொல்லணும்”, சொல்லும் போது சாரதியின் கண்கள் நெகிழ்ந்தது.



அவனை விடுங்க”, என்றான் செழியன்.



இல்லண்ணே,….”, மாறன் ஏதோ சொல்ல வர,



நா சொன்னா கேளு மாறா, அவன விடு”, சத்தமாக சொன்னான் செழியன்.



அந்த மலந்தின்னி பையல விடுங்கல”, மாறன் சொல்ல, வாலிபர்கள் விலகினர்.



வாயிலும் முகத்திலும் ரத்தம் ஒழுக நின்றிருந்தான் கோபால்.



தன் நெஞ்சுக்குள் புதையுண்டிருந்த சந்தியாவின் இரு புஜங்களையும் தன்னிரு கைகளால் அழுத்தி பிடித்து, அவளின் முகம் பார்த்தான் செழியன்,



அவனின் புஜங்களை இறுகப் பற்றியிருந்த சந்தியாவின் கைகள் நடுங்கியது. கால்களும் உடலும் நடுங்க நின்றவளிடம்,



அவனை அடிறி”, என்றான் செழியன்.



“முடியாது” என்பதாக தலையசைத்து, மீண்டும் அவனுக்குள் புதைந்து கொள்ள முயன்றவளை தன் கையின் பலம் கொண்டு தடுத்து நிறுத்தினான் செழியன்.



அடிறி, நாஞ்சொல்றேனல்ல! அவன அடி”, அவன் சத்தமாக சொல்ல, இல்லை என்பதாக தலையாட்டியவள் அழுதாள்.



அவளின் இந்த செய்கையை, பார்த்து கண்கள் சுருக்கினாள் சுவாதி. சாரதியும் அதிர்ச்சியோடு பார்த்தான்.



இன்னும் எம்புட்டு நாளைக்கு இப்டி பயந்துட்டுருக்க போற? அடிறி”, அவன் கத்தினான்.



இல்ல, முடியாது, என்னய இங்கருந்து கூட்டிட்டு போயிரு செழியா”, அழுகையினூடே அவள் சொல்ல, சற்றும் பொறுக்க மாட்டாதவனாக அவளை அணைத்துக் கொண்டான். அணைத்துக் கொண்டவனின் கண்களிலும் நீர் சுரந்தது.



தனா புரிந்து கொண்டான். சுவாதி உண்மையை ஏற்றுக் கொண்டாள். சாரதி தன் கண்ணீரை துடைத்தான்.













ஏனுங்க, எங்கியாது இருக்றாளுங்களா?”, கல்யாணி தன் அலைபேசியில் கேட்க,



இல்லடி, அவ ஃப்ரெண்டு வீடு, ஒண்ணு வுடாம தேடிபோட்டேன். எங்கியுமில்ல. பாக்றவங்கல்லாம், நம்ம புள்ள ஆரயாது காதலிக்குதான்னு விசாரிக்க சொல்றாக”, ரங்கா எதிர்முனையில் சொன்னான்.



சொல்றவிக ஆயிரம் சொல்வாக, நமக்கு நம்ம புள்ள உசுருதே முக்கியம். எங்கனயது தேடிப் புடிச்சி கூட்டிட்டு மாமா”, கல்யாணி கலங்கிய கண்களோடு சொன்னாள்.



சரிடி, வையி வாரேன்”, என்றவன் சோர்வாக பைக்கின் கிக்கரை உதைத்தான்.



என்னாச்சாம் கல்யாணி?”, காவேரி பரிதவிப்போடு கேட்க,



தெரில சித்தி, ஆரு வூட்டுக்கும் போகலியாமா”, கல்யாணி கல்க்கத்தோடு சொல்ல,



எனக்கு தெரியும், இதுக்குத்தே இந்த பொட்டக் கழுதைகள வூட்டோட அடக்கி போடணும்னு சொல்றது. நாசமா போச்சு! எங்கொலமே நாசமா போச்சு”, கதிரேசன் புலம்ப தொடங்கினார்.



சித்தப்பா, இப்போ எதுக்கு ஊரையே கூட்டுற? வாய பொத்து”, கல்யாணி அடக்க,



அதேன் விடிஞ்சா ஊரே நாறப் போகுதே எம்பொழப்பு! இன்னுமென்ன பாக்கியிருக்குது. எம்மானம் மருவாதி எல்லாம் போச்சு”,



இந்தா என்னத்துக்கு இப்போ கூப்பாடு போடுறீக? அவ வந்துருவா”, காவேரி கணவனை சமாதானம் செய்ய முயன்றாள்.



போடி, பொச கெட்ட சிறுக்கி, ஒத்த பொட்டப் புள்ளைய ஒழுக்கமா வளக்க துப்பில்ல, பேச வந்துட்டா”, கதிரேசன் சொல்ல, உள்ளுக்குள் உடைந்தாள் காவேரி.



ஆமா, இப்போ என்ன அர்த்தத்துல நீ இப்டியெல்லாம் பேசிட்டுருக்க?”, கல்யாணி சத்தமாக கேட்டாள்.



இன்னுமா ஒனக்கு புரியல. கல்யாணம் பேசி முடிச்ச கையோட காணாம போயிருக்றான்னா என்ன அர்த்தம்?. அவ எவங்கூடயோ பழகீட்டுருந்துருக்கா, அவங்கூட ஓடி போயிட்டா”,



யோவ்,….. வாய மூடுய்யா”, என்றாள் கல்யாணி. அழுகையை தாங்கி கோபமாக பார்த்தாள் காவேரி.



எதாது அசிங்கமா பேசிற போறேன். மனுஷனாய்யா நீயி? அவ நெதம் நெதம் எம்புட்டு கஸ்டப்பட்டு ஒனக்கு ஒழைச்சு போட்டு, உன் உசுர காப்பாத்துனாண்டு தெரியுமா ஒனக்கு?. அந்த புள்ளைய பத்தி பேசுனா, நாக்கழுகி போயிரும் பாத்துக்க. இதுக்குத்தாய்யா, இந்த புத்திக்குத்தா, இப்புடி சீக்கு வந்து கெடக்குற”, கல்யாணி ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து முடிக்கும் போது, அவளது அலைபேசி ஒலித்தது.



ஆருன்னு பாருடி”, சொல்லி அந்த தொடு அலைபேசியை கல்யாணியின் கையில் கொடுத்தாள் காவேரி.



செழியன் கூப்டுறான் சித்தி”, என்றவள் அலைபேசியை காதில் வைத்தாள்.



எதிர்முனை செய்தியை கேட்டவள் நிம்மதி சிரிப்பை உதிர்த்தாள். அவளது சிரிப்பை பார்த்ததும், காவேரியின் முகமும் மலர்ச்சி பெற்றது.



என்னடி, என்ன சொல்றான்?”,



நம்ம சந்த்யாவுக்கு ஒண்ணுமாகல சித்தி. அந்த பாழா போன வாட்ச்மேன், அவ உள்ள இருக்றது தெரியாம ஆஃபீஸ்ஸ பூட்டிட்டானாமா. செழியன் அவள எங்க வூட்டுக்கு கூட்டியாரேன்னு சொல்லிருக்றான். வா”, என்ற கல்யாணி, அவனது மகனை துக்கிக் கொண்டு வெளியேறி, செருப்பை காலில் மாட்டினாள்.



எச்சில் விழுங்கி, மனசாட்சிக்கு பலியான கதிரேசனை பார்த்தாள் காவேரி. அவளையே கூச்சத்தோடு பார்த்திருந்தார்.



நா எம்புள்ளைய நல்லாத்தாய்யா வளத்துருக்கேன். ஒனக்கு சோறு போட்டு வள்த்துட்டுருக்றேம்பாரு, அதுதே என்னைய புடிச்ச பாவம். த்தூ”,



வேகமாக வெளியேறி, செருப்பு கூட போட மறந்தவளாக கல்யாணியின் பின்னால் ஓடினாள் காவேரி.



தலை குனிந்தார், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெரிய மனிதர்.















ஏலேய், இண்ணு ராத்திரி நடந்தது, இந்த பௌர்ணமிக்குள்ளாரயே பொதைஞ்சு போவணும். ஒத்த வரி கூட வெளியில வரக்கூடாது”, மாறன் தன் சோட்டுக்காரர்களிடம் சொன்னான்.



எங்களையெல்லாம் என்ன நெனைச்சுகிட்டண்ணே! உசுரு போனாலும் ஒத்த வார்த்தை வெளியில வராது”, என்றான் ஒருவன்.



எங்களுக்கும் அக்கா, தங்கச்சி, பொண்டு புள்ளையயெல்லாம் இருக்குதுண்ணே!!”, என்றான் ஒருவன்.



இன்னும் என்னன்னாலும் சொல்லுண்ணே!! நீ சொன்னா உசுருக்கு துணிஞ்சு வருவோம்”, என்றான் ஒருவன்.



நெகிழ்ச்சியாக சிரித்தான் மாறன்.



சரில, எல்லாவனும், நேரா கருப்பசாமி கோயிலுக்கு போயிருங்க”, மாறன் சொல்ல, வாலிபர்கள் சென்றனர்.



வள்ளி தங்கச்சிக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிரு தர்மா. அவ சமயத்துக்கு சேதி சொல்லிருக்காட்டி நாம செழியன காப்பாத்திருக்க முடியாது”, மாறன் சொல்ல,



என்னண்ணே பேசுற? எம்பொஞ்சாதி ஒனக்கு தங்கச்சின்னா, சந்த்யா எனக்கு தங்கச்சியில்லியா? அப்போ செழியன் எனக்கு என்னா வேணும்?’, கேட்டான் தர்மன்.



சரிலே, வா, கருப்பசாமியண்ணே பயந்துட்டே இருப்பாக. போயி விசயத்த சொல்லிருவோம்”, மாறன் சொன்னதும், இருவரும் கோயில் நோக்கி சென்றனர்.







காரின் பின்னிருக்கையில், உள் பனியன் அணிந்திருந்தபடி அமர்ந்திருந்த, செழியனை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த சந்தியா, செழியனின் சட்டையை அணிந்திருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த சுவாதி, செழியன் மீதான காதல் தோல்வியை கூட மறந்திருந்தாள். சந்தியாவின் விநோதமான பயத்தினால் உருவாகியிருந்த குழப்பம் தான் சுவாதியை பெரிதும் ஆட்கொண்டிருந்தது.



முன்னிருக்கையிலிருந்த துரையரசன் மற்றும் தனசேகர், இருவரின் உள்ளமும் கனத்திருந்தது.



கல்யாணியின் வீட்டு வாசலில் தனாவின் கார் நின்றதும், ஓடி வந்தனர் கல்யாணியும் காவேரியும்.



காருக்குள் சந்தியாவின் நிலையை கண்டவுடன்,



ஆத்தீ, எம்புள்ளைக்கு என்னடியாச்சு?”, ஓலமிட துவங்கிய காவேரியின் வாயை, தன் கையால் மூடிய காவேரி,



சத்தம் போட்டு ஊர கூட்டுன, மென்னிய கடிச்சு துப்பிப்புடுவேன்”, என்று மிக மெல்லிய குரலில் சொல்லி கையை எடுக்க, தன் வாயை தானே பொத்திக் கொண்டாள் காவேரி.



கருப்பசாமி புண்ணியம், ஊருக்குள்ளார ஆருமில்ல, வூட்டுக்குள்ள கூட்டியா”, செழியனிடம் மெல்லிய குரலில் கல்யாணி சொல்ல, செழியன் இறங்கினான். வீட்டுக்குள் ஓர் அறைக்குள் தூங்கி கொண்டிருந்தான் பத்து வயது கவின்.



ஹாலில்,



சந்த்யா”, காவேரி தொட முயலும் போது, நடுக்குற்று விலகிய சந்தியா, செழியனின் பின்னால் தன்னை ஒளித்துக் கொண்டது தான் எல்லோருக்குமே ஆச்சர்யம். மகளின் நிலை கண்டு பயந்து பதறினாள் காவேரி.



ஏண்டி, எங்கிட்ட வர மாட்டேங்குற, நா உன் அம்மாடி”, காவேரி சொல்ல, சந்தியா செழியனுக்குள் தன்னை சுருக்கி கொண்டாள்.



சந்த்யா, எல்லா ப்ரச்னையும் சரியாயிருச்சு? ஏன் இப்டி பண்ற?”, சுவாதி சந்தியாவை தொட்டாள். அவளின் கையையும் தட்டி விட்டு, செழியனுக்குள் ஒளிந்த சந்தியாவை, எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.



கல்யாணி கலங்கிய கண்களுடன், செழியனை பார்க்க, நிலைமையை சரி செய்யும் வழி தெரியாது பரிதவித்தனர் இருவரும்.



தனா செழியனின் தோள் தொட்டான்.



சந்தியாவுக்கு நீ எவ்ளோ முக்கியம்னு என்னால புரிஞ்சிக்க முடியுது செழியா!”, தனா சொன்னான். அவளை அணைத்திருந்த படியே தனாவை கைகூப்பி வணங்கிய செழியனின் கண்களில் நீர் தேங்கி நின்றது.



கோபால பத்தி நீ யோசிக்காத. அவஞ்சோலிய நா முடிச்சி வுட்டுருவேன். இனிமே அவன் சந்தியா வழிக்கு வரமாட்டான்”, தனா சொல்ல,



நீங்க நல்லாருப்பீங்க் தம்பி! சாமி ஒங்களுக்கு ஒரு கொறையும் வைக்காது”, புரிந்து சொன்னாள் கல்யாணி. புரிந்து சிரித்தான் தனா. புரியாமல் மகளை மட்டுமே பார்த்து பரிதவித்து நின்றாள் காவேரி.



நா நாளைக்கு வந்து பாக்றேன். சந்த்யாவ பாத்துக்க”,

சொன்ன தனா, துரையரசனிடம் கை குலுக்கி விடைபெற்றான்.



கார் சென்றதும், வீட்டுக்குள் ஓடி வந்தாள் கொடி.



சந்த்யாக்கா, ஒனக்கு என்னாச்சுக்கா?’, அவளும் சந்த்யாவை தொட முயன்று தோற்றாள். அதிர்ந்தாள்.



வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் வந்த ரங்கா செழியனுக்குள் புதைந்திருந்த சந்தியாவை பார்த்து, பின் தன் தாரத்தின் முகம் பார்த்தான்.



கல்யாணி ஆமென்று தலையசைக்க, ரங்காவின் கண்களும் நீரால் நிறைந்தது.



கொடி, ஒரு நிமிஷம்”, கொடியின் காதுக்குள் மெலிதாக சொல்லி விட்டு வெளியே சென்றான் துரை. அவளும் பின்னால் சென்றாள்.



சந்த்யாக்காக்கு என்னங்க ஆச்சு?”,



துரை நடந்த சம்பவங்களை விவரித்தான். கொடியின் கண்களும் வியர்த்தது.



பெருசா, பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல, சந்த்யா ரொம்ப பயந்து போயிருக்காங்க். அவுக,.... செழியன் மச்சான் மேல,.... உசுரா இருக்றாப்ல தெரியுது”, துரை சொன்னான். கொடி, தன் முகத்தில் உணர்வெதையும் காட்டாமல் நிற்பதை கவனித்தவன்,



அப்போ, ஒனக்குந்தெரியுமா?”, கேட்டான்.



ஆமாங்க், செழியண்ணே சந்த்யாக்காவ லவ் பண்றாகண்டு தெரியும். ஆனா சந்த்யாக்கா”,



ஏண்டி பொச கெட்டவள!! செழியன் ஒனக்கு அண்ணன், சந்த்யா அக்காவா? சட்டென அவன் கேட்க,



இல்லீங்க், பழக்கதோசம்”,



இனி மாத்திக்க! அண்ணின்னு கூப்ட்டு பழகு”,



தப்பில்லீங்களா?”, துரையின் உள்ளம் அறியவே கேட்டாள் கொடி.



என்ன தப்பு?”,



இல்லீங்க், சாதி?!



செருப்பு”, என்றான் துரை. வீட்டுக்குள் நின்றிருந்த காவேரி திரும்பினாள்.



ஏண்டி, ஊர் மேயிற நாயி ஒருத்தன், பொட்டப்புள்ள பொடவைய உருவிருக்றான். அது அரண்டு போயிருக்குது. இம்புட்டு பேர் நிக்கிறோம், கண்ணாளத்துக்கு பேசி வச்சுருக்கிற மாப்ள நிக்கிறான், பெத்த அம்மா நிக்கிறாக. அம்புட்டு பேரையும் வுட்டுபோட்டு, செழியன் ,மச்சாங்கிட்ட இருக்றதுதே பாதுகாப்புன்னு அந்த புள்ள நம்புது. அந்த நம்பிக்கைய ஒன்ட்ர சாதி குடுக்குமாக்கு?”, துரை கேட்டான். காவேரி அதிர்ந்து உறைந்தாள்.



கொடியும் உறைந்தாள்.



நீ இங்க இவுககூட இரு. நாம்போயி பாண்டியன் மாமன பாத்துபோட்டு வாரேன். ஆருகிட்டயும் எத பத்தியும் பேசிக்க வேணாம், புரியுதல்ல?”, துரை சொல்ல, சரியென்பதாக தலையசைத்தாள் கொடி.



பாத்துக்க செழியா”, சொல்லி விட்டு வெளியேறிய, சாரதி பைக்கை ஸ்டார்ட் செய்ய பின்னால் ஏறிக் கொண்டான் துரை.



காலம், வினாடிகளாய், நிமிடங்களாய் கரைய, ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக கழிந்தது காவேரிக்கு. பலமுறை மகளை தொட்டுப் பார்க்க முயற்சி செய்து தோற்று விட்டாள். சந்த்யாவோ, நார்க்கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்த செழியனின் மடியில் கசங்கிய துணி போல் சுருண்டு கிடந்தாள். அவளின் கண்கள் எங்கோ நிலைக்குத்தி நின்றது.



நெடு நேரம் பொறுமை காத்த சுவாதி, எழுந்து சென்று



எழுந்துரு சந்த்யா, இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்டி ப்ரம்ம புடிச்சமாதிரி கெடக்குற”, , சந்தியாவின் கையை பிடித்து இழுத்தாள். சட்டென கையை உதறிக் கொண்டவள் அவனது மடிக்குள் முகத்தை புதைத்து கொள்ள, காவேரி,



அய்யோ, என்ட்ர புள்ளைக்கு நடக்கக்கூடாததென்னமோ நடந்து போச்சுடி. கல்யாணி பாருடி, இல்லன்னா, எம்புள்ள இப்டி கெடக்க மாட்டா. எங்கொலப்பெரும அழிஞ்சு போச்சா? பாருடி”, என்று புலம்பி கதற தொடங்கினாள். கல்யாணி அழுதாள். ரங்கன் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றான்.



எனக்கு பயமாருக்குதுடி, புள்ளைய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி பாக்கலாம்டி”, காவேரி பதறி சொன்னாள். சுவாதிக்கும் கொடிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.



அவளுக்கு ஒண்ணுமாகல சித்தி, நீ செத்த நேரம் பேசாமயிரு, அவ சரியாயிருவா”, கல்யாணி சொல்ல,



இல்ல, எம்புள்ளைக்கு எதோ தப்பா நடந்து போச்சு”,



வாய மூடு சித்தி, அவளுக்கு ஒண்ணுமில்லங்குறனல்ல?”, கல்யாணி அதட்டி சொல்லும் போது,



செழியா, இவுகள வெளிய போகச்சொல்லு”, சந்தியா அவன் மடிக்குள் புதைந்திருந்த படி சொன்னாள். எல்லோரும் சந்தியா மீது கவனம் கொள்ள, கல்யாணி பொங்கி அழுதாள்.



வெளிய போக சொல்லு செழியா, இந்த மாதிரி பேச்செல்லாம் எனக்கு கேக்க வேணாம். எனக்கு பயமாருக்குது, போக சொல்லு, இவுகள போக சொல்லு, இல்லாட்டி என்னய கொன்னு போட்டுரு”, அவன் சட்டைக் காளரை பற்றிப் பிடித்த படி, அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு, கை கால்கள் நடுக்கமுற்று, நடுங்கும் குரலில் பேசும் சந்தியா, எல்லோரையும் நடுக்குற செய்தாள்.



இத்தனை பலவீனமான சந்தியாவை இதுவரை பார்த்திராதவர்களுக்குள் பயமும், பல கேள்விகளும் எழுந்தது.



செழியன் கலங்கிய கண்களுடன் காவேரியை பார்த்தான். காவேரி பரிதவித்து பார்த்தாள்.



வா சித்தி”, கல்யாணி காவேரியை கைப்பிடித்து இழுக்க,



இல்ல, நா எம்புள்ளைய வுட்டு வரமாட்டேன்”,



சொன்னா கேளு சித்தி, வா”, சொல்லி இழுத்து சென்றாள் கல்யாணி. மகளை பார்த்த கண்களை விலக்காமல், பரிதவிப்போடு சென்ற காவேரியை கண்டு செழியன் பாரம் கொண்டான்.



ரங்கன் கண் காட்ட கொடியும், சுவாதியும் கூட கல்யாணியின் பின்னால் சென்றனர்.



வீட்டின் பின் வாசல் முற்றத்துக்கு எல்லோரும் வந்தனர்.



சில மணித்துளிகள் கலக்கமும், அதிர்ச்சியும் நிறைந்திருக்க, இருவர் புழக்கடை வாசலின் படிக்கட்டுகளில், ரங்கன் மரத்தடியில் அமர்ந்து கொள்ள, காவேரிக்கும் கல்யாணிக்கும் இருப்பு கூட கொள்ளவில்லை.



கல்யாணி”, திடீரென்று காவேரி அழைக்க, எல்லோருமே நிமிர்ந்தனர்.



ஏண்டி, சந்த்யா செழியன விரும்புறாளா?”, காவேரி கேட்டாள்.



கல்யாணி பேசவில்லை.



எம்புள்ளைக்கு என்னமோ ஆயிருக்குது. எனக்கு தெரியுது, அவளுக்கென்னன்னு ஒனக்கு தெரியும்ன்னு!. சொல்லீர்டி”, சொல்லி தன் முந்தானையை விரித்து யாசகமாய் கேட்டாள் காவேரி.



சித்தீ,... நம்ம புள்ள பாவஞ்சித்தி, பன்னெண்டு வருசமா செத்து செத்து பொழைச்சிட்டுருக்குது”, சொல்லி, அழுதாள் கல்யாணி.



ஏ, என்னடி பேசிட்டுருக்ற?”, ரங்கா அதட்ட,



முடீல மாமா”, சொல்லி வெடித்து அழுதாள் கல்யாணி..









தொடரும்,......
 
  • Like
Reactions: Maheswari

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
அப்பப்பாஆஆஆஆ....
ஆபத்தில் உற்றவன் துணை மட்டுமே நாடும் மனம்...
உற்றவன் உடனிருந்தும் கேசேர்க்க முடியா மனம்...
உற்றவன் தானில்லை என தன்னிலை உணர்ந்து விலகி செல்லும் மனம்....
இத்தனை நல்லுங்களுக்கும் நல்லவை நடக்க தவமிருந்து...
கண்ணீர் காண வேண்டிய துர்நிலை‌.‌...
போங்கடா .. நீங்களும் உங்க சாதியும்‌‌.....

அய்யோ... மீனா!!!!
என்ன இன்னைக்கு இப்படி உருக வச்சுட்ட...
துரை சொன்ன ஒற்றை வசனம் ...
மனதிற்கு இதம்....
❤️❤️❤️❤️🎂🎂
அடுத்த udக்கு waiting....
 

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
அப்பப்பாஆஆஆஆ....
ஆபத்தில் உற்றவன் துணை மட்டுமே நாடும் மனம்...
உற்றவன் உடனிருந்தும் கேசேர்க்க முடியா மனம்...
உற்றவன் தானில்லை என தன்னிலை உணர்ந்து விலகி செல்லும் மனம்....
இத்தனை நல்லுங்களுக்கும் நல்லவை நடக்க தவமிருந்து...
கண்ணீர் காண வேண்டிய துர்நிலை‌.‌...
போங்கடா .. நீங்களும் உங்க சாதியும்‌‌.....

அய்யோ... மீனா!!!!
என்ன இன்னைக்கு இப்படி உருக வச்சுட்ட...
துரை சொன்ன ஒற்றை வசனம் ...
மனதிற்கு இதம்....
❤️❤️❤️❤️🎂🎂
அடுத்த udக்கு waiting....
Thank you so much vino, இதை தவிர வேற எதுவும் சொல்ல தோணல. நன்றி🤝🏻