அந்த பெரிய வீட்டின் உணவு மேஜையில் காலை நேரத்திற்கான உணவு வேலை மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.
அனைவரும் உணவிற்காக மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தனர். அவன் இருக்கும் வரை அப்படித்தான்.! அவனுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது! அதற்காக தனிமை விரும்பியா என்றால் இல்லை!
அவன் முன் யாரும் பேசக்கூடாது! இது ஒரு வகையில் சர்வாதிகாரம்தான். ஆனால் அதுதான் அவன்.
அவன் உணவுண்டு முடிக்கும் வரைக்கும் அமைதியாக இருந்த அவனின் அம்மா ராஜலட்சுமி, அவன் சரியாக எழும் நேரம் “தம்பி..” என நிறுத்தி அவனைப் பார்த்தார்.
‘என்ன சொல்லனுமோ நீங்களே சொல்லுங்க..’ என்பது போல் பார்வையை அவரிடம் திருப்ப,
“அது தம்பி.. அந்த பொண்ணுக்கு குழந்தை பிறந்திடுச்சாம்..” என்றார் தயக்கமாக.
அந்த வார்த்தையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் ராஜலட்சுமியைப் பார்க்க, அவரோ மகனையே பார்த்தார்.
“எந்த பொண்ணுக்கு என்றான் யோசனையாக..? அவனின் பேச்சில் தான் அனைவரும் சற்று மூச்சு வாங்கி, மீண்டும் உணவில் கவனமாகினர்.
“அது.. அதுதான் தம்பி வல்லபி..” என்றபடியே மகனை தயக்கமாக பார்க்க,
“ஓ..” என்று இழுத்தவன் “உங்களுக்கு எப்போ சொன்னாங்க..?” என்றான் மிகவும் சாதாரணமாக.
“காலையில அஞ்சு மணிக்குதான் அந்த பொண்ணோட அப்பா கூப்பிட்டு சொன்னார்..”
“ம்ம்.. அதுக்கு முன்னாடி சொல்லலயா?” என்றான் பார்வையில் கூர்மையைத் தேக்கி..
“அது.. அது வந்து நேத்து நைட் பதினொரு மணிக்கு வலி வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம்னு சொன்னார்…” என்றார் திணறிப் போய்..
“ஹ்ம்ம்.. சரி..” என்றவன் நாற்காலியில் இருந்து எழப்போக,
“தம்பி.. தம்பி அந்த பொண்ணை நாம போய் பார்க்க வேண்டாமா.?” என அவசரமாக கேட்க,
“அந்த பொண்ணுன்னா அது யாரு.?” என்றான் கிண்டலாக,
“அது வல்லபி.. உன்னோட மனைவி.. வல்லபி கர்னன்.!” என பயத்துடன் கூற,
“ம்ம்ம்.” என்று இழுத்தவன் “இங்க இருந்து யாரும் போய் பார்க்க வேண்டாம்..” என கட்டளையாக கூறியவன், தன் வேக நடையுடன் வெளியில் சென்றுவிட, அதுவரை அமைதியாக இருந்த அந்த உணவு மேஜை நொடியில் சந்தைக் கடை போல் களைக்கட்டியது.
“ம்மா உங்களுக்கு என்ன பைத்தியமா? இப்போ எதுக்கு அந்த பிச்சைக்காரியைப் பத்தி அவர்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.. நீங்க என்ன சொன்னாலும் அவர் அவளை இங்க கூட்டிட்டு வரமாட்டார். அப்புறம் ஏன் இந்த வேண்டாத வேலை..” என ராஜ லட்சுமியின் மூத்த மகள் வனிதா கத்த,
“அண்ணி.. அத்தை காரணம் இல்லாம பேச மாட்டாங்க. நாளைக்கு இதை வச்சு அவ எந்த பிரச்சினையும் பண்ணிடக்கூடாதுல்ல, அதனாலத்தான் அத்தை அவர்கிட்ட சொல்லிருக்காங்க. நீங்களே யோசிச்சு பாருங்க, குழந்தை பிறந்து யாரும் வந்து பார்க்கலன்னு சொன்னா, சொன்னாலும் நாம போகப்போறது இல்ல. ஆனா அவங்க சொல்லியும் நாம போகலன்னு ஒரு பிரச்சினை வந்தா அதுக்கு ‘அவர்தான் இந்த வீட்டிலிருந்து யாரும் போகக்கூடாதுனு’ சொன்னார் என்று நாமளும் பேச்சை முடிச்சு சமாளிச்சிக்கலாம்.” என்றார் அந்த வீட்டின் இளைய மருமகள் சுமித்ரா.
“சுமி சொல்றது தான் சரி. அத்தை அதைத்தான் யோசிச்சு செஞ்சிருப்பாங்க..” என்றான் வனிதாவின் கணவன் ரமேஷ்..
“ம்ம்.. ஆனாலும் அம்மா இதை சொல்லாம இருந்திருந்தா, அவருக்கு வல்லபியைப் பத்தின எண்ணமே இல்லாம இருந்திருக்கும். இப்போ குழந்தையைப் பத்தி சொல்லி தேவையில்லாம அந்தப் பொண்ணைபத்தி யோசிக்க வச்சிட்டாங்களோன்னு தோனுது.” என்றான் சுமித்ராவின் கணவன் சுந்தர்.
ஆனால் இது எதிலும் தலையிடாமல் உணவில் கவனமாக இருந்த இளைய மகள் யாழினியின் மேல் கவனமாக இருந்தார் ராஜலட்சுமி.
ராஜலட்சுமியின் அமைதியையும், பார்வையையும் உணர்ந்து அனைவரும் யாழினியைப் பார்க்க, அவளோ எதையும் கண்டுகொள்ளாமல் உணவை முடித்துவிட்டு எழுந்துவிட்டாள்.
“எல்லாம் இவ செஞ்சு வச்ச வேலைதானே.. அந்த பரதேசி இந்த வீட்டுக்குள்ள வர இவதானே காரணம்..” என வனிதா, வழக்கம்போல கத்த,
அதை காதில் வாங்காமல் சமையல் அறைக்குள் நுழைந்து “குழந்தை பெத்தவங்க சாப்பிடுற பைத்திய சாப்பாடு செஞ்சுட்டு எனக்கு சொல்லுங்க. பத்து மணிக்கு எல்லாம் ரெடி செஞ்சி பேக் பண்ணிட்டு என்னை கூப்பிடுங்க..” என ஹாலுக்கு வர, அங்கிருந்த அனைவரும் அவளை முறைத்து தள்ள, ராஜலட்சுமி மட்டும் “இங்க இருந்து எதுவும் அங்க போகக்கூடாது..” என்றார் கட்டளையாக.
Last edited: