• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்தமழை - 14

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
முத்தமழை - 14

ராஜலட்சுமியை பார்த்தபடியே நின்றிருந்தான் கர்ணன். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவர். சுந்தரும் வனிதாவும் ராஜலட்சுமியின் இருபுறமும் நிற்க. அவர்கள் மூவரையும் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

திருப்பூரில் இருந்து நேராக யாழினியோடு மருத்துவமனைக்கே வந்திருந்தான் கர்ணன். அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என்ற பிறகு தான் அனைவருக்குமே மூச்சு சீரானது.

கர்ணன் வருவதற்குள் வீட்டுக்கு போய்விடலாம் என்று சுந்தர் சொல்ல, வனிதாவோ “சுந்தர் இந்த யாழினியை நம்ம பக்கம் இழுக்க இப்போதான் சரியான நேரம். இவன் வந்ததுனாலத்தான் அம்மாவுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு சொல்லி, அவளை ப்ரைன் வாஷ் பண்ணலாம். கண்டிப்பா நம்ம பக்கம் வந்துடுவா..” என கூற,

சுந்தருக்கு இந்த திட்டம் ஒப்பவில்லை. ஆனால் ராஜலட்சுமியின் முகத்தில் தெரிந்த ஒளியில் அமைதியாக்விட்டான்.

மருத்துவமனையைப் பார்த்ததுமே யாழினி தந்தைக்குத் தான் மீண்டும் உடம்பு சரியில்லையோ என்று பயந்து போனாள்.

“ண்ணா.. அப்பாவுக்கா.?” என்றாள் பதட்டமாக.

“ம்ச் இல்ல.. அம்மாவுக்கு தான். பிபி ஹையாகி விழுந்துட்டாங்களாம்..” என்றான் ஆத்திரமாக.

அண்ணனின் கோபத்தில் யோசனையாகத்தான் அவன் பின்னே சென்றாள் பெண். அங்கு பெட்டில் இருந்த தாயைப் பார்த்ததும் தன்னைப் போலவே யாழினிக்கு அழுகை வந்துவிட்டது.

“ம்மா என்னாச்சு..?” என்றதும் அதற்கு பதில் கூட சொல்ல விடவில்லை வனிதா. கர்ணனைப் பார்த்து கத்த ஆரம்பித்து விட்டாள்.

“நாங்க இங்க நிம்மதியா இருந்தோம். நீ வந்து தான் எங்க எல்லாருக்கும் பிரச்சினை. முன்னாடி அப்பா விழுந்தார். இப்போ அம்மா.. எங்களையும் உன்ன மாதிரி அம்மா இல்லாம ஆக்க போறியா? உன் ராசிதான் உன் அம்மா போனாங்க. இப்போ எங்க அம்மாவும் போகனுமா? அதுதான் உனக்கு வேணுமா?” என ஆத்திரமாக கத்த, அதைக் கேட்டு யாழினிக்கு ஆத்திரமாக வந்தது.

“போதும் நிறுத்து. யாரை என்ன பேசுற?” என யாழி பதிலுக்கு பேச,

“ச்சீ.. நீயெல்லாம் என்ன பொண்ணுடி. அவங்க உனக்கும் அம்மாதான். அவங்களுக்கு உடம்பு முடியல அதை யோசிக்காம அவனுக்கு சப்போர்ட் பண்ற..” என அவளிடமும் பாய,

“ஆமா எனக்கும் அம்மாதான். யார் இப்போ இல்லைன்னு சொன்னது. அவருக்கும் அவங்க அம்மாதான். அதுக்காக அண்ணனை நீ என்னமும் பேசுவியா? அவங்க கண்டதையும் யோசிச்சு உடம்பை கெடுத்து வச்சா, அதுக்கு அண்ணா பொறுப்பாக முடியுமா? உன்னை மாதிரி சுநலவாதிக்கிட்ட நான் வேற என்ன எதிர்பார்க்க முடியும்..” என்ற நேரம்,

“என்ன டீ சொன்ன.?” என யாழினியை வனிதா அடிக்க வர, அதை உணர்ந்த கர்ணன் யாழினியை தனக்கு பின்னே இழுத்துக் கொள்ள, அந்த அடி கர்ணனின் நெஞ்சில் விழுந்தது.

ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அந்த இடம் நொடியில் அமைதியாகி விட, யாழினிதான் அண்ணனைக் கட்டிக் கொண்டு அப்படியொரு அழுகை.

இத்தனை பேச்சுக்கும் ராஜலட்சுமியோ, சுந்தரோ ஒரு வார்த்தை இடையில் பேசவில்லை. வனிதாவை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று அவனுக்கு புரிந்து விட்டது. அதோடு இவர்களது டார்கெட் யாழினி என்பதும் புரிந்து விட்டது. அதனால் யாழினி முன் இவர்களிடம் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தவன் “யாழி..” என்று தங்கையை சமாதானம் செய்து “வீட்டுக்கு கிளம்பலாம். அப்பா தனியா இருப்பார்..” என்றதும் அனைவரும் அவனையேதான் அதிர்ந்து பார்த்தனர்.

“கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஜென்மம் நீ. சொந்தங்க கூட வளர்ந்திருந்தா உனக்கு அவங்க அருமை தெரியும். நீதான் யாருமில்லாம அநாதையா வளர்ந்தவன் தான.. உங்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்…” என வார்த்தைகளை வரைமுறையின்றி விட்டுக் கொண்டிருக்க, அதை சுந்தரோ, ராஜலட்சுமியோ தடுக்கவே இல்லை.

யாழினிதான் “போதும் இதோட நிறுத்திக்கோ.. இதுக்கு மேல ஒரு வார்த்தை அண்ணனை பத்தி பேசினா, உன்னை கொன்னுடுவேன்..” என கர்ணனிடமிருந்து வேகமாக வனிதாவிடம் சென்றவள், யாரும் என்ன என யோசிக்கும் முன்னே இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்திருந்தாள்.

‘ஏய் என்ன பண்ற விடு.. விடு யாழி..’ என சுந்தர் வந்து யாழினியைத் தள்ளிவிட்டு, வனிதாவைப் பிடித்துக் கொள்ள, தள்ளியதில் கீழ விழ இருந்த யாழினியை கர்ணன் பிடித்துக் கொண்டான்.

“ண்ணா.. எப்படி பேசுறா பாருங்க.. இவளை.. இவங்க யாரையும் சும்மா விடக்கூடாது. நீங்க வாங்க நாம போகலாம். இங்க நடந்த எல்லாத்தையும் நான் அப்பாக்கிட்ட சொல்லுவேன். அவர்கிட்ட இவங்க பேசட்டும்..” என்று அழுகையோடு பேச,

“யாழி..” என சத்தமாக அதட்டியவன் “நீ போ.. போய் காரில் இரு.. நான் வரேன்..” என இறுக்கமாக கூற,

“இல்ல.. இல்ல நீங்க வாங்க.. இவ இன்னும் பேசுவா… வாங்க போகலாம். அப்பாக்கிட்ட சொல்லனும்..” என அழுது கொண்டே சொல்ல,

“யாழி..” என மீண்டும் அதட்ட, யாழினியின் கண்ணீரும் நின்றது, அவளது அழுகையும் நின்றது.

“உன்னை போக சொன்னேன். நீ போய் காரில் இரு..” என கண்டிப்புடன் கூற, மூவரையும் முறைத்தபடியே வெளியில் சென்றாள் யாழினி.

தங்கை வெளியேறும் வரை பொறுமையாக இருந்தவன், கதவு சாத்தப்படும் சத்தம் கேட்ட பிறகே அவர்களைப் பார்த்து தன் ஆறடிக்கும் நிமிர்ந்து நின்று அவர்களை கூர்மையாக பார்த்தான்.

இப்போதுதான் ராஜலட்சுமிக்கு தான் அவசரப்பட்டது புரிந்து போனது. கர்ணன் ஏதோ அவர் விரும்பாத ஒன்றை பேசப் போகிறான் என்றும் புரிந்தது.

இந்த பிள்ளைகள் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு விட்டோமே, என தன்னையே திட்டிக்கொண்டு கர்ணன் என்ன பேசுவானோ என்ற பயத்தில் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

“டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொன்னார்.. பில் செட்டில் பண்ணியாச்சு. கிளம்பலாமா? இல்ல இன்னும் இங்கதான் இருக்கனுமா?” என்றான் மூவரையும் பார்த்து.

“கிளம்பலாம் ப்பா..” என ராஜலட்சுமி எழ முயற்சிக்க, அவரை வந்து பிடித்துக் கொண்டவன் மெதுவாக நடத்தி காருக்கு அழைத்து வந்தான்.

கர்ணனின் இந்த செய்கையில் வனிதாவும், சுந்தரும் தான் குழம்பி போயினர். அதோடு அவன் அழைத்ததும் தங்களைப் பார்க்கக்கூட இல்லாமல் சென்ற தாய் மீது கோபம் தான் வந்தது.

“வனி..” என தங்கையை அழைக்க,

“ஏன் சுந்தர் இவன் ஒன்னும் சொல்லாம போறான்..?” என குழப்பமாக கேட்க,

“நான் தான் சொன்னேன்ல.. இப்படியெல்லாம் பண்ண வேண்டாம்னு.. இனி அவன் என்ன செய்வானோன்னு பயந்து பயந்து தான் நாம இருக்கனும். நீ எப்பவும் இப்படித்தான். அவசரப்பட்டு வாயை விட்டுடறது. பின்னாடி வருத்தப்படுறது..” என புலம்பிக் கொண்டே செல்ல, குழப்பம் தீராமலே வனிதாவும் சுந்தர் பின்னால் சென்றாள்.

இங்கு யாழினி காருக்கு வந்த நேரம் சரியாக வல்லபி அழைக்க, முதல் அழைப்பில் அவள் போனை எடுக்கவில்லை. விடாமல் மீண்டும் அழைக்கவும் எடுத்தவள், வல்லபி கேட்கும் முன்னே அழுது கொண்டே அனைத்தையும் சொல்லிவிட, சிலையாகிவிட்டாள் வல்லபி.

‘இப்போது கர்ணன் எப்படி இருப்பான்? எதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பான். இன்று கூட எனக்கு தனியா இருக்கனும்னு விதிச்சிருக்கு போலன்னு கூட சொன்னானே, கடவுளே.. அந்த வார்த்தை பலிச்சிடக்கூடாது..’ என இன்னும் ஏதேதோ நினைத்தவளுக்கு அடுத்து உடனே அவனை பார்க்க வேண்டும் போல் ஒரு வெறி வந்துவிட்டது.

உடனே சீதாவிடம் சொல்லி கிளம்ப வேண்டும் என நினைத்தவள், அப்போது தான் யாழினி இன்னும் அழுது கொண்டிருப்பது தெரிய, “யாழி நீ இப்படி அழாத. நீ தான் அவரை பார்த்துக்கனும். அவரைத் தனியா விடாத யாழி..” என கெஞ்சுவது போல் பேச,

“ம்ச் எனக்குத் தெரியும். அவர் என்னோட அண்ணா. அவர் எப்படி இருந்தாலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட, யாழினியின் பேச்சு வல்லபிக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், இப்போது அது முக்கியமல்ல என புரிந்து சீதாவிடம் சென்றாள்.

அவரிடம் இன்று கர்ணன் பேசிய அனைத்தையும் கூறியவள், யாழினி சொன்னதையும் சொல்ல “ச்சீ என்ன ஜென்மங்க இதுங்க.. பணம் இருந்தா போதுமா? லிங்கா அண்ணா ஏன் கர்ணனை இங்க விடாம வளர்த்துருக்கார்னு இப்போதான் புரியுது. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நான் அப்பாக்கிட்ட சொல்லி உடனே வர சொல்றேன்..” என்றவர், சிவகுருவுக்கு அழைத்து சொல்ல, அவரும் ராமசாமியும் உடனே வீட்டிற்கு வந்துவிட்டனர்.

‘நாளைக்கு சென்னை போகனும், இன்னைக்கு அங்க போறேன் சொல்றது சரியா வல்லி?” என ராமசாமி கேட்க, பெண்ணுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் போவதில் தீர்மானமாக இருந்தாள்.

அதை புரிந்து கொண்டவர் சிவகுருவைப் பார்த்து தலையசைக்க, ஐவரும் கரூர் நோக்கி கிளம்பினர். அப்போதே நேரம் மாலை ஆறுக்கு மேல் ஆகிவிட்டது. இனி போய் எப்படி திரும்ப என யோசித்தாலும் மகளுக்காக அமைதியாகிவிட்டனர் அனைவரும்.

வந்தனா தான் ஏதோ படம் பார்க்க போவது போல் மிகவும் ஜாலியாக பாப்கார்னை தின்று கொண்டு வந்தாள். அப்போது வெற்றி சிவகுருவிற்கு அழைக்க, அவனிடம் விசயத்தை சொல்ல, ‘இப்போ ஏன்ப்பா..?” என்றான் சலிப்பாக.

வாய்ப்பிற்காகத்தான் கர்ணன் காத்துக் கொனண்டிருக்கிறான் என்று வெற்றிக்கு ஏற்கனவே தெரியும். இப்போது வல்லியே அதை சுலபமாக உருவாக்கிக் கொடுப்பது போல் தோன்றியது வெற்றிக்கு.

‘யாழி அழதுட்டே பேசவும் வல்லிக்கு இங்க இருக்க முடியல தம்பி. அதோட கர்ணாவும் கேட்டுருக்கார். போய்ட்டு வரோம். நீ கவலைப்படாத..” என்று மகனை சமாதானம் செய்தார் சிவகுரு.

“சரி ப்பா.. வந்ததும் எனக்கு மறக்காம கூப்பிடுங்க..” என்று வைத்துவிட்டான். அவன் மனம் அடித்து சொன்னது. இன்று கர்ணன் ஒரு முடிவோடு இருக்கிறான் என்று.

காரில் நடந்த சம்பாஷனைகள் வல்லிக்கு கேட்டாலும், மூளைக்கு சென்று அடையவில்லை.

அவளது எண்ணமெல்லாம் ‘கர்ணன் என்ன செய்து கொண்டிருப்பான். தனியாக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பானே, அவன் தனிமையை என்னால் தான் போக்க முடியும். அவனோடு நான் இருக்க வேண்டும்.. இனி அவனுக்கு நான் இருக்கிறேன்.. அவனை தனியாக விடமாட்டேன்..’ என கர்ணனைச் சுற்றியே இருந்தது.

அவர்கள் சொக்கலிங்கத்தின் வீடு போய் சேர, இரவு எட்டைத் தொட்டு விட்டது.

செகியூரிடி இவர்களை உள்ளே விட, அனைவருக்கும் முன்னே வேகமாக சென்றாள் வல்லபி.

வல்லபி வீட்டுக்குள் நுழையும் போது ஹாலில் இருந்தனர் வனிதாவும், சுமித்ராவும்.

கர்ணனும் யாழினியும் தந்தையின் அறையில் இருந்தனர்.

வல்லபியைப் பார்த்ததுமே அப்போதுதான் அறைக்குள் இருந்து வெளியில் வந்த ராஜலட்சுமி “ஹேய் நீ இங்க என்ன பண்ற? எதுக்கு இங்க வந்திருக்க..?” என்று ராஜலட்சுமி கத்த, அவரின் சத்தத்தில் தான் சுமித்ராவும் வனிதாவும் வல்லபியை பார்த்தனர்.

அவருக்கு பதில் சொல்லாமல் அவரையே வல்லபி வெறித்துப் பார்க்க, “என்ன கேட்குறது காதில் விழலையா? இங்க என்ன பண்ற? முதல்ல நீ எதுக்கு இங்க வந்த.?” என வனிதா கேட்க,

“வீடு திறந்திருந்தா நேரா உள்ள வந்துடுவியா? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா?” என சுமிதரா கேட்க, அப்போதுதான் வல்லபியின் குடும்பம் உள்ளே வந்தது.

அனைவரையும் பார்த்து மூவரும் அதிர்ந்து போக, இவர்கள் சத்தத்தில் அறைக்குள் இருந்த கர்ணனும், யாழினியும் வெளியே வர, அவனையே விழியெடுக்காமல் பார்த்திருந்தவள் “இவங்க கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்களா? நான் சொல்லட்டுமா?” என்றாள் தீர்க்கமாக.

அவளின் ஒற்றைப் பார்வையில் கர்ணனிம் உலகமே அழகாய் மாறிவிட, அதுவரி இறுக்கமாய் இருந்த இதழ்களில் கூட சன்னமாய் ஒரு புன்னகை முளைத்து விட்டது.

“நீயே சொல்லு?” என்றவன் வந்தனாவைப் பார்த்து கண்ணைச் சிமிட்ட, அவளோ அதிர்ச்சியில் வாயிலிருந்த பாப்கார்ன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பேய் முழி முழித்தாள்.

வல்லபியோ யாரையும் பார்க்கவில்லை. நேராக ராஜலட்சுமியின் முன் நின்றவள் “இந்த வீட்டோட மூத்த மருமககிட்ட இப்படித்தான் பேசுவீங்களா? உங்க அம்மாவும், உங்க மாமியாரும் இப்படித்தான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்களா?” என்றாள் நிதானமாக.

அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் என்று சொன்னால் மிகையாகது.

ஆனால் கர்ணனோ தன்னவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு அருகில் வந்த வந்தனா அவனுக்கு மட்டும் கேட்கும் படி குனிந்து “வல்லிக்கண்ணு இப்போ ப்ரபோஸ் பண்றாளா?” என்றாள் அதிர்ந்து.

அந்த கேள்வியில் கர்ணனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இன்று முழுவதும் இருந்த அழுத்தங்களும், வலிகளும் அந்த சிரிப்பில் கரைவதை அவனே உணர்ந்தான்.

“ம்ச்.. சிரிக்காதீங்க மாமா.. அப்போ எனக்கு வாய்ப்பில்லையா?” என தன் பாப்கார்னை வாயில் போட,

“நிச்சயமா இல்ல.. ஆனா அதுக்கு பதிலா உனக்கு ஒரு ஹோட்டல் ஓபன் பண்ணி தரவா..” என சீரியசா கேட்க,

“நிஜமாவா? இந்த டீல் ஓகே..” என இவர்கள் குசுகுசுவென பேசவும் இருவரையும் பார்த்து முறைத்தாள் வல்லபி.

“ஆளும் மண்டையும் பார்..” என புலம்பிக்கொண்டே யாழினியின் அருகில் நின்றாள் வந்தனா. இப்போதும் கர்ணனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவனின் அந்த புன்னகை முகத்தைப் பார்த்த பிறகே வல்லபிக்கு மனம் இலகுவானது. தான் பேசிய பேச்சின் வீரியமும் புரிந்தது. தன் தந்தையின் நினைவும் வந்தது. வேகமாக அவரைத் திரும்பி பார்க்க, அவரோ மகளையே ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்ற பார்வையோடு பார்க்க, வல்லபியின் தைரியமெல்லாம் வடிந்து போக, கர்ணனை திரும்பி ‘இனி நீதான் பேச வேண்டும்’ என்பது போல் பார்க்க,

அதை உணர்ந்த் கர்ணனும், தன் விளையாட்டுத் தனத்தை விட்டுவிட்டு “யாழி என்ன அப்படியே நின்னுட்டு இருக்க.. மாமா ரெண்டு பேரையும் அப்பா ரூம்க்கு கூட்டிட்டு போ.. இங்க நான் பார்த்துக்கிறேன்..” என்றான்.

அப்போதுதான் அதிர்ச்சியில் இருந்து வெளியில் வந்தார் ராஜலட்சுமி.

“என்ன குடும்பமே சேர்ந்து என் பையனை வளைச்சு போட பார்க்கிறீங்களா? இது நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்காது..” என ஆங்காரமாக கத்த,

கர்ணனோ சற்றும் யோசிக்கவில்லை. தன் பர்சில் எப்போதும் வைத்திருக்கும் தன் தாயின் தாலிச் செயினை எடுத்து யாரும் என்னவென்று யோசிக்கும் முன்னே வல்லபியின் கழுத்தில் போட்டு மிஸ் வல்லபி ராமசாமி என்றிருந்தவளை மிசஸ் வல்லபி கர்ணனாக மாற்றியிருந்தான்.

 
Last edited:

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
964
79
63
Coimbatore
,கர்ணா எதிர்பார்த்திருந்த தருணம் இது தானே.