• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
வெள்ளை நிறத் தாமரை மலர்களும் மொட்டுகளும் என நிரம்பி வழிந்த தாமரைத் தடாகத்தின், கரையோரமாக விரிந்து கிடந்த புல்வெளியில் நின்று பார்க்கையில், வட திசையில் பெரிய அரசமரத்துக்குக் கீழே கருங்கல்லால் செதுக்கப் பட்டிருந்த, அமர்ந்த நிலை புத்த பகவானின் சிலை மனதுக்கு அமைதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அந்தப் புத்த பகவானின் சிலையையே பார்த்தபடி நின்றிருந்தார் வியாகேசு. அவர் நின்றிருந்த இடத்தில் இருந்து, பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருந்த கோல்ட் ஸ்டார் ரெஸ்ரோரன்டில், ஜேம்ஸ் பீட்டருக்கும், இன்னொரு பிஸினஸ்மேனுக்குமான தொழில்முறை ஒப்பந்தம் ஒன்று லஞ்ச் போல நடந்து கொண்டிருந்தது.

கண்டி மாநகரத்தில் குறிப்பிட்டளவு பரப்பு உள்ள இடத்தை வாங்கி, அதிலே பதினேழு வகையான பழக் கன்றுகளை வைத்து, அதிலிருந்து விளையும் பழங்களில் பாதியை வெளிநாடுகளுக்கும், மீதியைப் பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்ப, ஜேம்ஸ்பீட்டரின் செகரட்டரியான வஞ்சிமாறன் முடிவு செய்திருந்ததால், இந்த ஒப்பந்தம் பற்றிய சந்திப்பு இன்று நடந்து கொண்டிருந்தது.

ஜேம்ஸ்ஸின் இடக்கை வியாகேசு என்றால், வலக்கை வஞ்சிமாறன். எந்தத் தொழில்முறை ஒப்பந்தமானாலும் இருவரில் ஒருவர் தான் அதை முன்னெடுத்து நடத்துவார்கள். ஜேம்ஸ் அதிலெல்லாம் தலையிட மாட்டான். ஒப்பந்தங்கள் சாதகமானால் ஒரு தோள் குலுக்கல், ரத்தாகிப் போனால் பூச்சாடியோ தேநீர்க் கோப்பையோ மாறி மாறிப் பறக்கும், இவ்வளவு தான் அவனின் வெளிப்பாடாக இருக்கும். இந்த இருவராலும் மாத்திரம் தான் ஜேம்ஸ்ஸின் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியும். அதுவும் ஓரளவுக்குத் தான் கட்டுப் படுத்த முடியும்.

வஞ்சியும் சில சமயங்களில் ஜேம்ஸ்ஸிடம் தேநீர் கோப்பையால் எறி வாங்கியிருக்கிறான். ஜேம்ஸ்ஸின் கைங்கரியத்தால் அவனின் வலப் பக்க நெற்றியில் ஒரு நீளமான தழும்பே இருக்கிறது. ஆனாலும் வஞ்சிமாறனுக்கு ஜேம்ஸ் என்றாலே ஒரு தனி மரியாதை மற்றும் பாசம், அவன் எள் எனும் முன் இவன் எண்ணெய்ப் போத்தலாகவே மாறி விடுவான், அவன் கேளாமலேயே உயிரைக் கூடக் கொடுப்பான்.

வியாகேசு வீட்டு நிர்வாகத்தைக் கவனித்தாரென்றால், வஞ்சிமாறன் வெளி நிர்வாகத்தைக் கவனித்தான். இவர்களின் தலைவன் ஜேம்ஸ்ஸின் கவனம் முழுவதும் அண்டகிரவுண்ட் போதைகடத்தலிலேயே சுற்றியிருக்கும். அது தப்பென்று வியாகேசுக்கு அடிக்கடி தோன்றும். ஆனால் அதை உரியவனிடம் சொன்னால் தன்னைத் தானே காயப் படுத்துவான். வியாகேசு விசயத்தில் மட்டும் என்றுமே அவன் நிதானம் தவறுவதேயில்லை என்றாலும், இந்தச் சரக்கு விடயத்தில் அவன் அவரின் பேச்சைக் கேட்கவே மாட்டான்.

ஒரு முறை ஏதோவொரு தொழில்முறை ஒப்பந்தத்தை வியாகேசின் பொறுப்பில் கொடுத்து விட்டு, பீட்டர் மலேசியா போய் விட்டான்.

வியாகேசின் கவனக் குறைவினால், எப்போதும் எதிலும் ஜேம்ஸோடு போட்டி போடும் அவனின் ஜென்ம விரோதி 'லாரன்ஸ்ரோமியோ' அந்த ஒப்பந்தத்தை எப்படியோ தன் வசமாக்கி விட்டான். திருகோணமலை வந்த ஜேம்ஸ்ஸிடம் வியாகேசு இதைத் தயங்கித் தயங்கிச் சொல்லவே, அவன் கையிலிருந்த தேநீர்க் கோப்பை சற்றுத் தள்ளி நின்றிருந்த வஞ்சிமாறனை நோக்கி வேகமாகப் பறந்து போனது, அவன் இதை எதிர்பார்த்திருந்ததால் சட்டென்று கோப்பையைப் பிடித்து, பிடித்த வேகத்தில் கீழே போட்டு உடைத்தான். கோப்பை உடையாமல் பத்திரமாக இருக்கிறது என்று தெரிந்தால், அடுத்து கோப்பையை விடப் பெரிய பொருளாக வரும் எதற்கு வம்பு என்று தான் வஞ்சி அவ்விதம் செய்தான்.

வேகமாக எழுந்த ஜேம்ஸ் போன வேகத்தில் மாடிச் சுவற்றில் தன் வலது கை முஷ்டியால் நச்சு நச்சென்று இரண்டு மூன்று முறை குத்தி விட்டே போனான். நியாயமாகப் பார்த்தால் அந்தக் குத்தும், அவன் வீசி விட்டுப் போன தேநீர்க் கோப்பையும் வியாகேசின் மேல் விழ வேண்டியவை.

ஓரமாகக் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த வியாகேசின் பக்கமாக மெல்லப் போன வஞ்சிமாறன்
"என்ன பெரிசு உனக்கு இப்ப குளுகுளுண்டு இருக்குமே.."
எனக் கேட்க, அவனை முறைத்துக் கொண்டு
"ஏண்டா ஏன்.. என்னைப் பாக்க உனக்கு அப்புடியோ தெரியுது.. இங்க என்ரை காலைப் பாரன்.."
என்று தன் காலைக் காண்பிக்க அது கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததுமே வாயை மூடிக் கொண்டு பக்கென்று சிரித்து விட்டான் வஞ்சிமாறன்.

"என்ரை நிலமை உனக்குச் சிரிப்பா இருக்கோடா வெண்ணெய்.."

"ஆ.. ஞாயமாப் பாக்கப் போனா நான் தான் நடுங்கிக் கொண்டு நிக்கோணும்.. யோவ் பெரிசு.. உம்மேல எறிய வேண்டிய கிளாஸை பாஸ் என் மேல எறிஞ்சிட்டுப் போறாரு.. சும்மா சொல்லக் கூடாதய்யா உனக்கு எங்கையோ மச்சம் இருக்கு.. அது தான் பாஸ் நீ என்ன செஞ்சாலும் உம்மேல மட்டும் ஒண்டையும் எடுத்து வீசுறதேயில்லை.."

"அட ஆமால்ல.."

"என்ன நோமால்ல.."

"எம் மேல கோபமாருக்கியோ.."

"ஆ கொலைவெறியில இருக்கன்.."

"சரி சரி வா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தாரன்.."

"போய்யா.."
என்று கொண்டு வஞ்சி திரும்பவும், மாடியில் இருந்து ஒரு பூச்சாடி பறந்து வந்து, அவன் முன்னால் விழுந்து சிதறியது.

அதைப் பார்த்ததும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு
"யோவ் பெரிசு.. வாயா ஓடிரலாம்.. இன்னும் இங்கனையே நிண்டமெண்டு வையன்.. அடுத்த கட்டம் பூத் தொட்டி தான் வரும்.. பாஸ் இன்னுமா மலையிறங்கேல்லை.."
என்றபடி வியாகேசை இழுத்துக் கொண்டு வெளியே ஓடி விட்டான்.

இப்படி ஜேம்ஸ்ஸிடம் இருவரும் மாட்டிக் கொண்டு முழிப்பதும், அவனைக் கண்டதும் ஓட்டமெடுப்பதும் என அதெல்லாம் அவர்களுக்குப் பழகிப் போய் விட்டது.

இன்று நடக்கும் ஒப்பந்தம் எந்தத் தடங்கலும் இல்லாமல் சரியாக நிறைவேற வேண்டும் என்று தான் வியாகேசு இதோ இப்போது வரை மனதாற வேண்டிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஏசி ஒத்துக் கொள்ளாது, அதனால் வஞ்சிக்கு அங்கே அதற்கான அறைகளை ஆயத்தம் செய்து கொடுத்து விட்டு, வியாகேசு வெளியே வந்து விட்டார்.

ஜேம்ஸ் பீட்டர் எதற்குமே நேரடியாகப் போக மாட்டான். ஒன்று வியாகேசை அனுப்புவான், அல்லது வஞ்சிமாறனை அனுப்புவான்.

இன்றும் அப்படித் தான் நடந்திருந்தது. இவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு, அவன் பங்களாவிலேயே அமர்ந்து கொண்டு விட்டான். வியாகேசுக்குத் தான் அவனை அங்கே தனியாக விட்டு வந்தது உள்ளூறப் பதட்டமாக இருந்தது. அவனை யாரேனும் டென்ஷன் ஆக்கி விடாமல் இருந்தால் போதும் என்று அவருக்கு உள்ளூர பெரும் யோசனையாகவும் இருந்தது.

அதோடு இரண்டு நாட்களுக்கு முன்னால், தில்லையம்பலத்தின் கையாளை துப்பாக்கியால் சுட்டு விட்டு, தொலைபேசியில் பேசிய தில்லையம்பலத்தின் வார்த்தைகளில் கோபமாகி வெளியே போனவன், என்ன செய்து விட்டு வந்தான் என்று இதுவரை தெரியவில்லை.

வஞ்சியிடம் தான் என்ன ஏதென்று கேட்க வேண்டும், அது கூட இன்று தான் அவனும் பீட்டர் இல்லாமல் தனியே வந்திருக்கிறான் அதனால் இன்றே வேலை முடிந்து போகும் வழியில் கேட்டு விட வேண்டும் என யோசனை செய்து கொண்டு, அந்தப் புல்வெளியில் நின்றிருந்த ஒரு மரத்தோடு சாய்ந்து அமர்ந்து விட்டார் வியாகேசு.

அவர் அமர்ந்து கொண்டதும் அடுத்த ஐந்தாவது நிமிடம், அவரை நோக்கி வேகமாக வந்தான் வஞ்சிமாறன். அவனுடைய முகத்தை வைத்து வியாகேசால் சட்டென்று எதையும் கணிக்க முடியவில்லை.

பக்கத்தில் வந்தவன் தொப்பென்று கீழே இருந்தான்.

"என்னடா வஞ்சீ.."

"ஆ.."

"முகமெல்லாம் ஏன் ஒரு மாதிரி கிடக்கு.. உள்ள ஏதும் பிரச்சினையோ.."

"ஓம் பெரிசு.. பாஸிட்டை என்ன சொல்லுறது நினைக்கவே பயமாக் கிடக்கு.."

"உள்ள என்ன நடந்தது எண்டு சொல்லு.. பிறகு பீட்டரிட்டை சொல்லுறதைப் பத்தி யோசிப்பம்.."

"அந்த விசரன் லாரன்ஸ் ஏதவோ உள்ளால வேலை பாத்திட்டான் எண்டு நினைக்கிறன்.."

"என்னடா சொல்லுறாய்.."

"ஓம் பெரிசு.. கண்டியில இருக்கிற அந்த இடம் நல்ல சூப்பரான இடம்.. நல்ல இயற்கையான காத்தும்.. நாங்கள் பயிரிடப் போற பழமரத்துக்குத் தோதான காலநிலையும் இருக்கிற இடம்.. அது தான் நான் அந்த இடத்தை வாங்க முன்னுக்கு நிண்டனான்.. அதுக்குத் தோதா அந்த ஜீவராஜ்ஜிட்டை அந்த இடத்தை தாங்கோ எவ்வளவு காசு போனாலும் பரவாயில்லை எண்டு சொல்ல.. பாஸிந்தை பேரைக் கேட்டதுமே சரி சொல்லீட்டான்.. அதுக்கு தான் அந்த இடத்தை பாஸிந்த பேருக்கு இண்டைக்கு ரிஜிட்டர் செய்துக்கலாமெண்டு அவனை இங்கை வரச் சொன்னான்.."

"டேய் அதெல்லாம் ஏற்கனவே நடந்த கதை தானேடா.. நான் கேக்குறது உள்ள என்ன நடந்தது எண்டு.."

"இருங்கோ அதைத் தான சொல்ல வாரன்.."

"இவனொருத்தன் கேட்ட கேள்விக்கு பக்கம் பக்கமா பதில் சொல்லிக் கொண்டிருப்பான்.."

"இப்ப சொல்லவோ வேண்டாமோ.."

"சொல்லித் தொலை.. சொல்லாட்டிக்குப் பூச்சட்டியால அடி வாங்க ரெடியாகு எனக்கென்ன.."

"ஐயோ நாஞ் சொல்லுறன் சொல்லுறன்.."

"ஆ அப்புடி வா வழிக்கு.. டக்கெண்டு சொல்லடா அப்ப தான்டா ஏதாவது செய்யலாமோ எண்டு பாக்கலாம்.."

"ஓமோம்.. உள்ள எல்லாம் சரியாத் தான் போய்க் கொண்டிருந்தது.. அப்ப ஜீவராஜ்ஜுக்கு ஏதவோ ஒரு ஃபோன் ஹோல் வந்தது.. அப்ப அவன் வெளியால போட்டு ஒரு ஏழு நிமிஷம் கழிச்சு வந்தான்.. வந்த உடன சொல்லுறான் அந்த இடத்தை உங்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய முதல் தான் உங்களோட இன்னொரு அக்கிரிமென்ட் போடோணுமாம்.. நான் என்னெண்டு கேக்க.. அந்த இடத்துல நாங்க பயிரிடுற பழ மரத்தால வார லாபத்துல பத்து சதவீதத்தைத் தனக்குத் தரோணுமாம்.."

"என்னடா விசர்க்கதை கதைச்சுக் கொண்டு நிக்கிறான்.. இடத்தை எங்கடை பக்கம் எழுதிக் குடுத்தாப் பிறகு அந்த இடத்துக்கே எங்கடை அனுமதி இல்லாம அவன் வர ஏலாது.. இதுக்குள்ள அதுல வார லாபம் வேணுமாமோ.. அவனுக்கு மறை ஏதும் கழண்டிட்டோ.. எங்கையாவது இப்புடி நடக்குதோ.."

"நானும் அதைத் தான் கேட்டன்.."

"அதுக்கு அந்தப் பன்னாடை என்ன சொன்னது.."

"ஆ.. அதுல வார இலாபத்துல லாரன்ஸ் சாரு முப்பது சதவீத லாபத்தைக் குடுக்க முன்னுக்கு வாராராம்.. நீங்கள் சம்மதம் சொன்னா மேற் கொண்டு பேசலாமாம்.. இல்லாட்டிக்கு தான் லாரன்ஸ் முண்டத்தோட பேசுறனாம்.."

"முண்டமெண்டு அவன் சொன்னவனோடா.."

"நான் தான் சொல்லுறன்.. அவன் வாத்தைக்கு வாத்தை சாரு மோரு எண்டு வழியிறான்.."

"சரி அந்த ஜீவராஜ் பாக்க எப்புடியிருப்பான்.."

"ஏம் பெரிசு பாக்காத மாதிரி கதைக்கிறியள்.."

"ஓமடா பாக்கேல்லை சொல்லு.."

"அந்த மனுஷன் சும்மா கும்முண்ணு இருப்பாரு.."

"என்னாது கும்முண்ணா.."

"ஓம் கும்மெண்டு இருப்பாரு.."

"குண்டா இருப்பானோடா.."

"அப்புடியும் சொல்லலாம்.."

"அப்ப அவனை மாடியில இருந்து தூக்கிப் போடத் தேவையில்லை.. படியில இருந்து உருட்டி விட்டாலே சிதறிடுவான்.. அவனை இனி பீட்டரிட்டை இருந்து அந்த ஆண்டவனால கூட காப்பாத்த ஏலாது.."

"அவன் சிதறுறது இருக்கட்டும்.. என்னைச் சிதற விட்ருவாரே பாஸ்.. அதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்கோ பெரிசு.."

"ஒரே வழி.. நீ வீட்டுக்குள்ள வராம வெளியில ஹெஸ்ட்ஹவுஸுல போய்ப்படு.."

"உண்மையாவோ.."

"உண்மையாத் தான்டா வெண்ணெய்.. நான் சமாளிச்சுக் கொள்ளுறன்.."

"அப்ப நீங்கள் தனியச் சமாளிப்பியளோ.."

"இல்லை எண்டு சொன்னா மட்டும்.. கூடவே வரப் போறியோ.. வந்தியெண்டால் என்ன பறந்து வரும் எண்டு தெரியும் தானே.."

"யோவ் பெரிசு.. நீ ரொம்ப மோசம்யா.."

"இப்ப உன்னை உன்ரை பாஸுந்தை கோபத்துல இருந்து காப்பாத்த வேணுமா வேண்டாமா.."

"காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ.."

"அப்ப உன்ரை லொட லொட வாயை மூடிட்டு வா.."

"வேறை வழி.. என்ரை பாஸ் நான் பிழை செஞ்சாலும் என்னை தான் அடிப்பாரு.. உந்தப் பெரிசு பிழை செஞ்சாலும் என்னை தான் அடிப்பாரு.. எல்லாம் என்ரை நேரம்.."
என்று புலம்பிக் கொண்டு வியாகேசின் பின்னால் நடக்கத் தொடங்கினான் வஞ்சிமாறன்.

எதற்கும் போகும் போதே நன்றாக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு போவோம். அப்போது தான் பாஸ் ரொம்பக் கோபமாகி, கீழே தன்னைத் தேடி வந்து உதைக்கும் போது, கொஞ்சம் தைரியமாக இருக்கும் என வஞ்சிமாறனின் மனம் நினைத்துக் கொண்டது.
 

Attachments

  • eiN5UR626060.jpg
    eiN5UR626060.jpg
    64.7 KB · Views: 17
Last edited:
Top