• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
காலை நேர இளங்காற்று அவசரம் இல்லாமல், சாமரம் வீசுவது போல வீசிக் கொண்டிருக்க, காலைச் சூரியனும் தன் சேவைக்கு வந்திருந்தான்.

அந்தப் பெரிய வீட்டின் ஒரு பக்கமாகத் தனியாக இருந்த அறையின்,
சாளரக் கம்பிகளின் ஊடாக உள்ளே நுழைந்த சூரியக் கதிர்கள், கீழே படுத்துக் கிடந்த பூங்கோதை மீது, தம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்ச, அவளோ போர்த்தியிருந்த சேலையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

அவள் காலை நேரத்தில் நிம்மதியாகத் தூங்கிப் பல வருடங்கள் என்பதால், இப்போது கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

பூங்கோதையைத் தன் வீட்டில் விட்டுப் போன தில்லையம்பலம் இது வரை வந்து அவளைப் பார்க்கவேயில்லை. அவரின் மனைவி நீலரூபி தான் அவளை அழைத்துப் போய், உணவு பரிமாறி அவளுக்கென்று தனியறையும் கொடுத்திருந்தார்.

அந்தக் குடும்பத்தில் பூங்கோதையின் மீது பரிவு கொண்ட ஒரே ஜீவன் நீலரூபி மட்டும் தான். பூங்கோதையின் வாழ்வு பட்டமரமாகிப் போனதைக் கேட்டு, கண்ணீர் வடித்த ஒரேயொரு ஜீவனும் நீலரூபி தான். பதினைந்து வருடங்கள் வளர்த்த பாசம் அவருள் அப்படியே தான் இருந்தது.

கணவர் முன்னால் வாயைத் திறக்கப் பயங் கொள்ளும் அவர், பூங்கோதைக்காக இறங்கி வந்து தன் கணவரிடம் அந்தப் பிள்ளையை இங்கே அழைத்து வாருங்கள், சில வருடங்களுக்குப் பிறகு வேறு திருமணம் செய்து கொடுக்கலாம் என மன்றாடியும் பார்த்திருக்கிறார். ஆனால் பலன் பூச்சியம் தான், வாயை மூடிக் கொண்டு போய் ஓரமாக இரு நீ, அவளுக்குப் பரிந்து வந்தால் நீயும் போய் அவளோடு வெளியே பிச்சையெடு எனத் தில்லையம்பலம் முடித்து விட, அதோடு அமைதியாகிப் போனார் நீலரூபி.

ஆனாலும் தன் வளர்ப்பு மகளை யாருக்கும் தெரியாமல், மாதத்தில் மூன்று தடவையாவது எங்காவது வைத்துப் பார்த்து விடுவார் ரூபி. அந்த நேரத்தில் பேசிக் கொள்ளக் கூட நேரங் கிடைக்காது போனாலும் அணைப்பையும் முத்தங்களையும் தாயும் மகளும் பரிமாறிக் கொள்ளத் தவறுவதில்லை. அந்தச் சந்திப்புக்காக இருவருமே அவரவர் வீட்டில் தலையால் தண்ணீர் குடித்துத் தான் அனுமதியே வாங்க வேண்டியிருக்கும்.


காலை நேரம் எட்டான போது, பூங்கோதையைத் தேடி அவளது அறைக்கு வந்தார் நீலரூபி. ஆனால் கோதையோ தான் திருப்பள்ளியெழுச்சி பாடினால் தான் எழுந்து கொள்வேன் என்பது போல, அப்படி ஒரு தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

கள்ளங் கபடமற்ற அவளது முகத்தையே பார்த்திருந்த நீலரூபி
"நீ மட்டும் ஏன்டி என்ரை வயித்துல பிறக்காமப் போனனீ.. பிறந்திருந்தா உனக்கு உந்த நிலமை வந்திருக்குமா.."
என்று முணுமுணுத்துக் கொண்டே பெருமூச்சு விட்டபடி,
"கோதை.. எடி பிள்ளை.. எழும்பு எழும்பி நேரத்தைப் பார்.. நேரம் எட்டைத் தாண்டிக் கொண்டிருக்குது.. எழும்பிக் குளிச்சிட்டு சாப்பிடவா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வெளியால போன மனுஷன் திரும்பி வந்திடுவர்.. பிறகு நான் இப்பிடியெல்லாம் வந்து நிண்டு உன்னோட கொஞ்சிக் கொண்டு நிக்கேலாது.. எழும்படி வெள்ளன.."
எனப் பூங்கோதையை எழுப்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.

பூங்கோதை தன்னை உலுக்கிய ரூபியின் ஒரு கையைப் பிடித்து, கன்னத்துக்குக் கீழே வைத்துக் கொள்ள, பொறுமையிழந்த ரூபி அவளின் கையை நறுக்கென்று கிள்ள,
"ஐயோ மாமி.. சம்பல் அரைச்சு எடுத்து வைச்சிட்டன்.."
என்றபடி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தாள் கோதை.

கண்விழித்து அமர்ந்து கொண்டு, சுற்றிச் சுற்றிப் பார்த்துத் தலையைச் சொறிந்தவளைப் பார்த்து
"என்னடியம்மா.. இப்பவும் உன்ரை மாமி தான் கனவுல வாராவோ.. நீ இப்ப இங்கினை இருக்கிறாய்.. முதல் அந்தக் கனவுல இருந்து வெளியில வா.."
என அவளின் தலையில் வலிக்காமல் கொட்டினார்.

அப்போது தான் கோதைக்குத் தான் எங்கே இருக்கிறேன் என்பதே புரிந்தது. லேசாக அசடு வழிந்து கொண்டே
"நான் நினைச்சன்.. அங்க அந்த வீட்டுல இருக்கிறன் எண்டு.. அது தான் நீங்கள் நுள்ளினதும் மாமி தான் நுள்ளுறாவோண்டு நினைச்சிட்டன்.."
என்று சொன்னவளின் கன்னத்தை லேசாக வருடிக் கொடுத்தபடி
"உன்னை நுள்ள எல்லாஞ் செய்வாங்களோடி.."
எனக் கேட்டவரைப் பார்த்துச் சிரித்தாள் கோதை.

"என்னடி கேள்வி கேட்டால் சிரிக்கிறாய்.."

"இல்லை நுள்ளுறதைக் கேட்டுட்டே உப்புடிப் பதறுறியளே.. அங்க எனக்கு வேறை வேறை டிசைன் டிசைனாக் கொடுமையெல்லாம் நடந்தது.. இப்பவும் நடக்கிறது.."

"என்னடி சிம்பிளாச் சொல்லுறாய்.. நாங்க சந்திக்கிற நாளிலயெல்லாம் நீ உதெல்லாம் சொல்லுறதேயில்லை என்ன.."

"சிம்பிளாச் சொன்னாலும் சீரியஸாச் சொன்னாலும்.. அனுபவிச்ச உடம்பு வேதினையும் மனசு வேதினையும் இல்லையெண்டு ஆயிடாது தானே.. நாங்கள் சந்திக்கிறதே அபூர்வம் அந்த நேரத்தை சந்தோஷமாக் கொண்டு போகோணுமெண்டு தான் நான் வாயைத் திறக்கேல்லை.."

"கோதைம்மா.. ரொம்பக் கஷ்டப் பட்டியாடி.."

"இல்லையெண்டு சொல்ல மாட்டன்.. ஆனா உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினான்.. அதிலயும் கால், கை தொடை, முதுகெண்டு சூட்டுக் கம்பியால மாமி சூடு வைச்ச நேரமெல்லாம் உங்களை நினைச்சு தான் அழுவன்.. அதுவே போகப் போகப் பழகீட்டுது.. இப்ப என்ரை உடம்புல நெருப்பை ஊத்தினாக் கூடச் சுரணை இருக்காது.."
என மெல்லிய சிரிப்போடு சொன்னவளை, தாவி அணைத்துக் கொண்டார் நீலரூபி.

"எனக்கு உன்னைப் புடிக்கும்டி தங்கம்.. மற்றவை என்ன நினைக்கினமோ தெரியாது.. நான் உன்னை என்ரை மகளாத் தான்டி இப்ப வரை பாக்கிறன்.. ஆனா என்ன என்ரை பாசத்தை உம்மேல வெளிப்படையாக் காட்ட முடியேலையடி.. உனக்கு பத்து வயசு இருக்கும் போது ஒரு தடவை உன்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சியிட்டன் எண்டதுக்காக.. என்ன பெல்ட்டால விளாசிட்டாருடி எம் புருஷன்.. அதைக் கூட நான் தாங்கிக் கொண்டன்.. ஆனா என் கண் முன்னாடியே உன்னைப் பிடிச்சு மாடியில இருந்து தள்ளி விட்டிட்டு.. வேலைக்காரங்களிட்டை நீயா கால் தடக்கி விழுந்திட்டாய் எண்டு எப்புடிக் கூசாமல் பொய் சொன்னவர் தெரியுமோ.. உன்னை நான் அரவணைச்சா உன்னைக் காயப்படுத்துறதை என்னால தாங்கிக் கொள்ளவே முடியேல்லையடி.. அதனால உன்னட்டை இருந்து நானே ஒதுங்க வெளுக்கிட்டன்.. உன்னைப் புறக்கணிக்கவும் தொடங்கீட்டன்.. அப்பெல்லாம் நீ என்னை ஒரு பார்வை பாப்பாய்.. அப்புடியே செத்திடலாம் போல இருக்கும்டி.. உன் விசியத்துல மட்டும் இல்லையடி என் விசியத்துலயும் நான் வாயில்லாத பூச்சி தான்.. நீ மட்டுமில்லையடி அந்தப் பாவப் பட்ட மனிஷனுக்கு வாக்கைப் பட்டு வந்து நானும் தாண்டி நரகத்தை அனுபவிக்கிறன்.. நான் வாக்கப்பட்ட மனுஷனும் சரியில்லை.. என்ரை வயித்துல பிறந்ததும் சரியில்லை.. உந்தச் சூட்டுக் காயம் எல்லாம் எனக்கும் அத்துப்படி தான்டி தங்கம்.."
என்று அழுதவர், தன் முதுகுப்புற புடவையை மெதுவாக இறக்கிக் காட்ட, நீள நீளமாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக நிறையச் சூட்டுத் தழும்புகள் கிடந்தன.

தன் கை நடுங்க அந்தத் தழும்பை மெல்ல வருடிய கோதை, ரூபியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி
"ஒருவேளை நான் சொந்தக்கால்ல நிக்கிற மாதிரி ஏதும் நிலை வந்தால்.. நீ எங்கூட வந்துடுவியாம்மா.."
என அவரின் விழிகளையே பார்த்தபடி கேட்க அதற்கு உடனேயே
"என்னைக் கூட்டிட்டுப் போயிடுடினு உங் காலுல வந்து விழுவன்டி.."
என்று சொன்ன ரூபியையே இமை கொட்டாமல் பார்த்திருந்தாள் கோதை.

"என்னடி அப்புடிப் பாக்கிறாய்.. நான் சொல்லுறதைப் பொய்யெண்டு நினைக்கிறியோ.."

"எங்கம்மா பொய் சொல்லாதெண்டு எனக்கு தெரியாதோ.."

"பிறகு ஏனடி அப்புடிப் பாத்தனீ.."

"நான் ஏனம்மா உன்ரை வயித்துல பிறக்கேலை.. நான் மட்டும் உன்ரை வயித்துல பிறந்திருந்தா.. நீ உப்பிடி ஒளிஞ்சு மறைஞ்சு என்னைப் பாக்க வந்திருக்கத் தேவையில்லை தான.."

"நல்ல காலம்டி நீ என்ரை வயித்தில பிறக்கேல்லை.."

"என்னம்மா.."

"பின்ன என்னடி நீ எனக்குப் பிறந்திருந்தா உன்ரை உடம்புல அந்த மனுஷனிந்த கேவலமான ரத்தம் தான் ஓடியிருக்கும்.. பிறகு நீயும் நான் பெத்த கழிசடை மாதிரி தான் என்னைக் கேவலமா நடத்துவாய்.. என்னால ஒரு ரூபவர்ஷியையே தாங்க முடியேல்லை அதுக்குள்ள இன்னுமொண்டா.. எனக்கு இந்தப் பூங்கோதையே காணும்.."

"என்னவோம்மா.. சில நேரங்களில என்னடா வாழ்க்கை இது.. வளந்த வீட்டுலயும் பாசம் இல்லை.. போன வீட்டுலயும் மரியாதை இல்லை.. இந்த சமுதாயத்துல சொந்தமா வேலையோ ஆதரவோ இல்லாம வெளியில போய் வாழப் பயம்.. அதோட கஷ்டப் பட்டு அடியும் உதையும் கேவலமான சொல்லும் கேட்டு வாழுறதை விட விஷம் குடிச்சுச் செத்துப் போயிடலாம் எண்டு நினைப்பன்.. ஆனாக் கோதாரி விழுந்தது சாகுறதை நினைச்சாலே கைகாலெல்லாம் நடுங்குது.. அந்தப் பயத்தால தான் எப்புடியாவது வாழுவம் எண்டே இருந்தன்.."

"நீ ஏண்டி சாகோணும்.. கண்ட கண்ட வேலை பாத்து மற்றவையிந்த வாழ்க்கையைச் சீரழிக்கிறதுகள் எல்லாம் ஆஹா ஓஹோண்டு வாழ நினைக்கேக்குள்ள நீ ஏன் சாகோணும் எண்டு கேக்குறன்.."

"இல்லையம்மா இப்ப உந்த சாகுற எண்ணம் வாரதில்லை.. இப்ப நானும் வாழோணும் எண்டுற ஆசை தான் வருது தெரியுமோ.. ஏதாவது சாதிக்கோணும்.."

"ஓமடி நீ தான் நல்லாப் பாடுவியேடி.."

"பாடுவன் சரி.. எங்க பாட அந்த வீட்டு அடுப்பங்கரையிலயோ.."

"நமக்கு விடிவே இல்லையோடி.."

"தெரியல்லையேம்மா.. அறுபது வருஷத்தை நீங்களும் இருபத்தைந்து வருஷத்தை நானும் ஓட்டியாச்சு.. எப்ப விடியும் ஆருக்குத் தெரியும்.."

"சரி அந்தக் கதையை விடு.. இப்ப உதைக் கதைச்சு என்ன ஆகப் போகுது.. நீ இங்க இருக்கிற இந்த அஞ்சு மாசத்துக்குள்ள ஏதாவது ஐடியா போடுவம்.. இப்ப ஒரு பாட்டுப் பாடிக் காட்டன்.."

"இப்பவோ..."

"ஓமடி அந்த மனுஷன் வாரதுக்குள்ள பாடு பாடு.. உன்ரை குரல் கேட்டு எத்தினை நாளாச்சு.."
என்றபடி பூங்கோதையைப் பார்த்தபடி ரூபி திரும்பி அமர, அவர் அறியாமல் அவர் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டவள் அந்த வரிகளைப் பாடத் தொடங்கினாள்.

"பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணி வைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா.. ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத் தாங்காத போதும் எனக்காக நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா..
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா.. உன்னாலே வளந்தேனே.."
பூங்கோதையின் குரலின் இனிமையோடு, அவளது மனதில் ரூபி மீது இருந்த அளவு கடந்த பாசம் தவிப்பு போன்ற உணர்வுகளும் சேர்ந்து கொள்ள, அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரூபிக்குக் கண்கள் கசிந்தன.

இருவரும் தங்களை மறந்து பாடலில் இலயித்திருந்த வேளை, வெளியே காரின் கோர்ன் சத்தங் கேட்கவே பதறியடித்துக் கொண்டு எழுந்த நீலரூபி
"அடி அந்தாள் வந்திட்டு போல.. நான் போறன் நீ எழும்பிக் குளி.. சாப்பாட்டை ஆரிட்டையும் குடுத்து விடுறன்.."
என்று கொண்டு, கோதையின் கன்னத்தைத் தட்டி விட்டு வேகமாகப் போய் விட்டார்.

ரூபி போன திக்கைப் பார்த்துக் கொண்டு அவரின் உருவம் மறையும் வரை அப்படியே அமர்ந்திருந்த கோதை அதன் பின்னரே குளிக்கச் சென்றாள்.

அங்கே வெளியே நீலரூபியிடம் தில்லையம்பலம் கத்திக் கொண்டிருந்தார்.

"எங்கேடி அவள்.."

"அங்க அறையில.."

"வெளுக்கிட்டு வரச் சொல்லு.."

"எங்கேங்கோ.."

"அதேண்டி உனக்கு.. உன்ரை வேலையைப் பாரடி.."

"இல்லையுங்கே வந்து ஒரு நாள் தான்.."

"என்னடி கேள்வியெல்லாம் கேட்டுக் கொண்டு நிக்கிறாய்.. வாயை மூடிக் கொண்டு போய் கூட்டிக் கொண்டு வா.."

"இல்லையுங்கோ.."

"இனி வாயைத் திறந்தாயெண்டால் மண்டையைப் பிளந்திடுவன்.. உன்ரை மண்டையை இல்லை அவளிந்தையை.."
எனத் தில்லையம்பலம் சொல்ல, பதறிய நெஞ்சை அழுத்திக் கொண்டு, கோதையின் அறையை நோக்கிப் போனார் அந்தத் தாய்.

"என்னம்மா வெளியில ஒரே சத்தமாக் கிடக்குது.. என்னவாம் உங்கடை மனுஷன்.."

"அந்தாள் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னாருடி.. நீ இப்ப தான் உடுப்பு மாத்தியிருக்கிறாய்.. இன்னும் சாப்பிடக் கூட இல்லையேடி.. எரும எரும நேரத்துக்கு சாப்பிடாம.. இப்ப பார் அந்த மனுஷன் இனி எப்ப உனக்கு சாப்பாடு தர விடப் போகுதோ.."

"அட இதெல்லாம் ஒரு விசியமே இல்லை நீலூ.. நானெல்லாம் ஒரு நாள் முழுக்கவே பட்டினி கிடந்திருக்கிறன்.. உன்ரை மகளுக்கு ஸ்ரோங் பாடி எண்டுறத மறந்திட்டு இப்புடிப் புலம்பாத செல்லம்.."
என்று கன்னம் தட்டியவளின் கையைத் தட்டி விட்டார் நீலரூபி.

"போடி உன்னால எப்புடி தான் உப்புடிக் கதைக்க முடியுதோ.."
என்றவரின் கன்னத்தை கிள்ளி
"வாங்கோ நீலூ.. ஒரு நேரம் சாப்பிடாட்டி என்ன வந்தது இப்ப.."
என்று விட்டு முன்னால் நடந்தவளை, என்ன பெண்ணிவள் என்பது போல விழி விரியப் பார்த்தபடி தானும் பின் தொடர்ந்தார் ரூபி.
 
Last edited:
Top