• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 2

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
அத்தியாயம்: 2

முல்லை பெரியாறு வெள்ளி மேனியுடன் துள்ளி குதித்து ஓடி கொண்டிருந்தாள். ஆற்றங்கரையை கடந்ததும், ஊருக்கு சற்றே வெளிப்புறமாக இருந்தது ஓர் பெரிய அரிசி ஆலை. அந்த விஸ்தாரமான இடத்தில், சில பெரிய பழுதடைந்த இயந்திரங்கள் இருந்தன. தகர சீட்டால் கூரை வேயப்பட்ட அந்த பெரிய குடோனை சுற்றிலும் வேறு கட்டிடங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அந்த குடோன் வாசலில் ஜீப் நின்றது.

ஜீப்பில் இருந்து இறங்கி குடோனுக்குள் சென்றார் பாண்டியன். பின்னால் சென்றனர் சரவணனும் அவன் கூட்டாளிகளும். அங்கு ஒரு இரும்பு தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் தினேஷ். அருகில் கையில் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர் சிலர். பாண்டியன் கண் காட்டியதும் தினேஷ் முகத்தில் தண்ணீரை ஊற்றினான் ஒருவன். திடுக்கிட்டு மயக்கத்தில் இருந்து விழித்து கொண்ட தினேஷின் முகம் வீங்கி போயிருந்தது.

அவனுக்கு முன்னால் தன் ஆப்பிள் அலைபேசியில் கொடியழகியின் திருமண வைபவத்தின் காணொளியை ஓட விட்டார் பாண்டியன். தினேஷின் கண்களில் நீர்க்கோடுகள் வழிந்தது.

கொடியழகி இப்போ துரையரசனோட பொண்டாட்டி”, என்றான் சரவணன். தினேஷ் உணர்வின்றி நின்றான். அவன் எதிர் பார்த்தது தான்!! என்றாலும் ஏற்றுக் கொள்ள வலித்தது.

இந்தேரு தினேஷு, உங்கப்பனும் நானும் சின்னதுலருந்தே ஒண்ணும் மண்ணுமா கிடந்து வளந்தோம்.. சாதி விட்டு சாதி நட்பு வச்சிக்கலாமுயா.. சம்மந்தம் பண்ணிக்க கூடாதல்ல.”, என்று பாண்டியன் சொல்ல, தினேஷுக்கு பேச எதுவுமில்லை.

முந்தா நேத்து ராத்திரிலருந்து ஒன்னய காணாம, உன் ஆத்தா சோறு தண்ணி உண்ணாம கெடையா கெடக்றா. ஒங்கப்பன் உன்னய கண்டு பிடிச்சி தர சொல்லி போலிஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் நடையா நடக்றான். அவுகளை நினைச்சி பாருல. தங்கச்சி ஒருத்தி இருக்கால்ல. அவளுக்கு ஒரு நல்லது கெட்டது பாக்காவது நீ உசுரோட இருக்க வேணாமா?!”, கேட்டு பாண்டியன் புருவம் உயர்த்தினார். உள்ளமும் கண்ணீரும் இறுக ஆரம்பித்தது தினேஷுக்கு.

இந்த காதலெல்லாம் சும்மாய்யா, அஞ்சாறு நாள்ல காணாம போயிரும். நாளைக்கே வெள்ளை தோலா இன்னொருத்திய பாத்தா இதெல்லாம் காத்துல சூடம் கரைஞ்சா போல கரைஞ்சிரும்", தொடர்ந்து பாண்டியன் சொல்லும் போது, தினேஷின் கை கட்டை அவிழ்த்து விட்டான் சரவணன்.

இதுல நீ படிச்ச படிப்புக்கு ஏத்த, வேலையில் சேர்றதுக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் இருக்கு. வேலை டெல்லியில. நாளைக்கே டிரெயின்”, என்று கூறி அந்த கவரை தினேஷ் முன் நீட்டினார் பாண்டியன்.


என்னல பாக்குற?! சும்மாலாம் இல்லல,, மாசம் ஒன்டரை லட்ச ருவா சம்பளம்", என்றான் சரவணன்.

இந்தேரு தினேசு, ராஜவேலய்யா ஒன்னைய கொல்லத்தே எங்கள ஏற்பாடு பண்ணாக. பாண்டியண்ணேந்தா தினேசு நம்ம பையதா, சொன்னா கேப்பான்னு சொல்லி, ஒ உசுர காப்பாத்துனாக. இனியாவது சூதானமா பொழைச்சிக்கல", சரவணன் சொன்னான்.

உன் தங்கச்சிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பாரு, ஒ சாதியிலயே", என்று அழுத்தி சொன்னார் பாண்டியன். தினேஷ் விரக்தியாக சிரித்தான்.

தங்கச்சிக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்கணும்", கட்டளையாக பாண்டியன் சொல்ல, கண்கள் சுருக்கினான் தினேஷ்.

அவ கல்யாணம் முடிஞ்ச அடுத்த மாசம் ஒ கல்யாணம் நடக்கணும், பொண்ணு ஒன் சாதி பொண்ணாத்தா இருக்கணும்", என்று திட்டவட்டமான குரலில் சொன்னார் பாண்டியன்..

சாதி,.............”, சொல்லி வலி மிகுந்த வாயால் ஏளனமாக சிரித்தான் தினேஷ்.

எங்கல்யாணம்,...... அது என் பர்சனல். நான் என் சாதி பொண்ணை கட்டிக்கிறதும், வேற சாதி பொண்ணை கட்டிக்கிறதும் கூட என் பர்சனல். அதுல எப்படி நீங்க வர்றீங்கன்னு எனக்கு புரியலய்யா. உங்களுக்கு சாதி கலப்பு புடிக்கலன்னா பண்ணாதீக. ஒங்க வூட்ல சாதி கலப்பு கல்யாணம் பண்ணாதீக. எனக்கு சாதி கலப்புல பிரச்சினை இல்ல. நான் பண்ணிட்டு போறேன். அதுல ஏய்யா இப்படி அநாகரீகமா தலையிடுறீங்க??. அடுத்தவன் பர்சனல் விஷயத்துல மூக்கை நுழைச்சி சாதீயம் பேசுறதுதானா உங்க கேடு கெட்ட சாதி அரசியல்?”, சாட்டையால் அடித்ததை போல தினேஷ் கேட்டு விட,

ஏலேய் யாருகிட்ட என்னல பேசுற?”, சீறினான் சரவணன். அவனை கை காட்டி தடுத்தார் பாண்டியன்.

எனக்கு நீங்க சொல்ற சாதியும் வேணாம். நீங்க வாங்கி த்ர்ற வேலையும் வேணாம்", என்றவன் அவர் நீட்டிய காகிதத்தை தொடவும் இல்லை.

நாளைக்கே நான் ஊரை விட்டு போயிடுறேன். உங்களுக்கு பயந்துட்டு இல்ல. நா எங்கே போறேங்குறதும் உங்களுக்கு தேவையில்ல. கொடி எங்கயிருந்தாலும் நல்லா இருக்கணும். அவ வாழ்க்கைக்கு இடைஞ்சலா நான் ஒரு நாளும் வர மாட்டேன். அவளுக்காக போறேன். ஆனா போறதுக்கு முன்னாடி ஒண்ணு மட்டும் சொல்றேன். நீங்க தலை கீழா நின்னாலும் அடுத்த தலைமுறை சாதியில்லாத தலைமுறையா மாறுறத உங்களால தடுக்க முடியாது. அதுவும் உங்க கண்ணு முன்னாடியே மாறும்”, பாண்டியன் முன் கைவிரல் நீட்டி சொல்லி விட்டு மிகவும் சிரமப்பட்டு குடோனை விட்டு வெளியேறி, நடந்தான் தினேஷ்.

என்ன பாண்டியண்ணே! அவனை அப்படியே விட்டுட்டீக! வெளியே போயி ஏதாவது ஒளறி தொலைக்க போறா, பொச கெட்ட பைய!!", என்று சரவணன் சொல்ல,

அந்த அளவுக்கெல்லாம் இவனுக்கும் தெம்பு கிடையாதுல.. போல, போய் சோலியை பாரு", என்றார் பாண்டியன். சென்றான் சரவணன்.

சில கிலோ மீட்டர் தூரம் நடந்த, தினேஷின் பார்வையில் முல்லையவள் நிறைந்தாள்.

முல்லை பெரியாறு ஆற்றங்கரைக்கு சென்றவன் கைகளில் வைகை ஆற்றின் தண்ணீரை அள்ளி தன் முகம் முழுதும் நனைத்து கொண்டான். தன் தாகம் தீரும் மட்டும் நீர் அருந்தினான்.

இனி உன்னை எப்போ பார்ப்பேன்னு தெரியல. நான் போறேன். உன்னை விட்டு, உன் ஈரத்தை விட்டு போறேன். இந்த ஊர்க்காரங்க மனசுல உன் ஈரம் ஒட்டும் போதுதான் திரும்பி வருவேன். இந்த ஊர் மக்கள் பசியை ஆத்துறவ நீ. என் கொடியையும் உன்ன நம்பி தான் விட்டுட்டு போறேன். அவ என்னை மறந்துட்டு சந்தோஷமா வாழணும். அவ புருஷன் மனசுல உன் ஈரத்தை குடுக்க மறந்துறாத. பார்த்துக்க”, என்று உத்தம பாளையத்தின் எல்லைக்குள் ஓடும் முல்லை நதியை பார்த்து கூறிய தினேஷ், நதிக்கரை ஓரமாக மன பாரத்துடன் செல்வதை, கண்ணீருடன் பார்த்துக் கொண்டே தன் வழித்தடம் மாறாமல் ஓடினாள் முல்லை.


இரவு வேளை,.....

அந்த ஈனப்பைய என்ன மாப்ள சொன்னான்?", தன் வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி பாண்டியனிடம் கேட்டார் மதிவாணன்.



இனி அவனை பத்தி யோசிக்க வேண்டியதில்ல மச்சான். இனிமேல் நம்ம புள்ளை கொடி வழியில அவன் வர மாட்டான். நம்ம ஆளுங்க பவரென்னன்னு தெரிஞ்சிட்டுருப்பானல்ல", என்றார் மதிவாணனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பாண்டியன். நிம்மதி பெருமூச்சு விட்டார் கொடியின் தகப்பனார் ராஜவேலு.



நிசப்தத்தை தத்தெடுத்து கொண்ட நள்ளிரவு வேளையில் கடிகார முள் சுற்றும் சப்தம் துல்லியமாக கேட்டுக் கொண்டிருந்தது. வாசலில் நின்ற வேப்பமரம் இரவுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த ஓசை, வாகனங்கள் பேரிறைச்சலின் தொந்தரவின்றி தெளிவாக கேட்டது.



ஒருவன் அந்த சிறிதும் இல்லாத பெரிதும் இல்லாத, வீட்டின் கதவை திறந்து கொண்டு இயல்பாக உள்ளே வந்தான். ஆறடி உயரம் இருக்கலாம். பீமனின் தேகம், முகத்தில் வில்லன்களுக்கு உரித்தான மருவோ, மச்சமோ இல்லை. அகோரமான தோற்றம் இல்லை. ஆனால் அவனின் சிரிப்பு அழகாய் தெரியவில்லை.



ஹாலில் படுத்திருந்த அம்மாவையும் அப்பாவையும் தாண்டி அவளது படுக்கை அறை வாசல் அருகில் வந்தான். அவன் தொட்டதும் கதவு தானாகவே திறந்து கொண்டது. முகத்தில் கொண்ட அழகில்லாத புன்னகையை மாற்றி கொள்ளாமல், படுக்கை அறைக்குள் நுழைந்தான்.



கனவில் அவளுக்கு பிடித்த உலகில், அவளுக்கு பிடித்த தன் கற்பனை நாயகனுடன், சந்தோஷமாக சிறகடித்து விளையாடி கொண்டே, கண்கள் மூடி தூங்கி கொண்டிருந்தாள் சந்தியா.



அவளது கனவுலகை பற்றி கவலையில்லாத அந்த ஆறடி ஆஜானுபாகுவான மனிதன், அவளது படுக்கையில், அவளுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தான். அவனின் சொர சொரப்பான அருவருப்பான கை, நைட்டி மறைக்காத அவளது காலை உரசியது. பூரான் ஒன்று தன் மீது ஊர்வது போன்ற உணர்வு அவளுக்குள். லேசான வேகத்தோடு எழுந்து அவனது கையை தட்டி விட்டு மீண்டும் கனவுலகில் சஞ்சரித்தாள்.

அங்கே அவளது நாயகன் அவளுக்காக காத்திருந்தான். அவனது சிரிப்பில் தன்னை மறந்து, பயம், துக்கம், நிர்பந்தம் என்று எதுவும் இல்லாத உலகிற்குள் அவனோடு ஆடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள் சந்தியா.



அதே அருவருப்பான கை, நைட்டியின் மீது, வயிற்றை நீவி, அதன் எல்லையை தாண்டி உயரத்திற்கு ஊர்ந்தது. அவளது அருவருப்பு உணர்வு எல்லையை தாண்டியது. மீண்டும் வேகமாக கையை தட்டி விட்டாள். தன் கனவுலகத்துக்குள் செல்ல எத்தனித்தாள். சட்டென்று பின்னால் இருந்து அவளது கைகளை பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக அணைத்து தன் அசுரத்தனமான அருவருப்பான புன்னகையை அவளது முகத்துக்கு நேராக காட்டினான் அவன்.



அம்மா", என்று அலறியபடி திடுக்கிட்டு எழுந்தாள் சந்தியா. முகமெல்லாம் வியர்த்து வடிந்தது. இதயம் நெஞ்சு கூட்டின் எலும்புகளை அதிர செய்து துடித்து கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த மிகச்சிறு மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கனவில் வந்த அகோரனை சுற்றி பார்த்து தேடினாள்.



கனவுக்குள் வந்த கனவையும், அங்கு வந்த தன் நாயகனையும் மறந்தே போனாள். அறைக்கதவை தட்டும் ஓசை கேட்டது.



சந்தியா, சந்தியா, என்னடி ஆச்சி?!! கதவை திற", சந்தியா ஆபத்தில் அழைத்த அம்மாதான் கதவை தட்டி கொண்டிருந்தாள். தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் வந்து கதவை திறந்தாள்.



என்னடி ஆச்சு? ஏன் சத்தம் போட்ட?!!", தாய் காவேரி கேட்டாள்.



எச்சில் விழுங்கினாள் சந்தியா.



காவேரி...., புள்ளை கனவு கண்டு பயந்து போயிருப்பா போலிருக்கு. போய் அவளுக்கு குடிக்க தண்ணி கொண்டு வா", என்று மெலிந்த குரலில் சொன்னார் சந்தியாவின் தகப்பனார் கதிரேசன்.



உடனே தண்ணீர் எடுக்க சென்றாள் காவேரி.



என்னல ஆச்சு?! கேட்டு மகளின் தலை வருடி தந்தார் கதிரேசன்.

மெல்லியான தேகம், குழி விழுந்த கன்னங்களுடன் வாடி போன முகம், இதுதான் கத்ரேசனின் அடையாளம்.



ஒண்ணு இல்லப்பா, ஏதோ கெட்ட கனவு தான்", பயம் கலந்த குரலில் சொன்னாள் சந்தியா. மகளை அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தார் கதிரேசன். அதற்குள் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் காவேரி. தன்னிச்சையாக வாங்கி குடித்தாள் சந்தியா.



ஏண்டி, அப்படி கத்துன?? நான் பயந்தே போயிட்டேன்", காவேரி சொல்ல,



அவளே பயந்து போயிருக்கா. அவகிட்ட ஏன் இப்படி சத்தம் போடுற. அதுல உட்காரு", என்று அவர் சொல்லவே காவேரியும் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். சந்தியா தன்னை நிலைப்படுத்தி கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டது தான்.



எல்லாம் அந்த சனீஸ்வரர் செய்ற சோதனை. நாளைக்கு விடிஞ்சதும் நவக்கிரகத்துக்கு எலுமிச்சம் பழ தீபம் ஏத்தணும்", என்றாள் காவேரி.



சரில, பயப்படாத, இன்னிக்கு அம்மா பக்கத்துல படுத்துக்க", என்றார் கதிரேசன். தாய் அருகே படுத்து கொண்டாள் சந்தியா. கண்கள் மூடினாள் காவேரி. கண்கள் மூட மறுத்தது சந்தியாவுக்கு. மீண்டும் மீண்டும் அதே உருவம், கண்கள் முன்னால் நிழலாடியது. பயத்தில் தாயை அணைத்து, தாயின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் சந்தியா.

அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் அலைபேசியில் பெருவிரல் தேய்த்தபடி துரையரசன் அமர்ந்திருந்தான். அறைக்குள் வந்த கொடியழகி கையில் இருந்த பால் டம்ளர் நடுங்கியது.




காதலில்லா கல்யாண வாழ்வு
கசக்குமா கை சேருமா?!!
காலம் காத்திருக்குமா?!









தொடரும்.....



சக்தி மீனா.....
 
  • Love
Reactions: Vimala Ashokan